பிள்ளை பருவத்திலே.....
தினமும் ஸ்கூல் முடிந்ததும் பஸ் பிடித்து, வீடு வந்து சேரும்பொழுது, பசியில் மயக்கமே வந்துவிடும். மதியம் கொண்டு சென்ற தயிர்சாதம், எப்போதோ ஜீரணம் ஆகியிருக்கும். தயிர்சாதம் என்று தோழிகள் கேலி செய்வதைக் காதிலேயே போட்டுக் கொள்ள மாட்டேன். வேறு ஏதாவது கொண்டுப் போனால் எல்லாம் பிடுங்கி தின்றுவிடும். அன்றும் அதே அசுர பசியோடு வீட்டுக்கு திரும்பியப் பொழுது அம்மா ரவா உப்புமாவை நீட்டினாள்.
"ஏம்மா.. உனக்கு இந்த உப்புமா தவிர வேற ஒண்ணும் செய்ய தெரியாதா? நேத்து அரிசி உப்புமா, முந்தாநாள் மோர்கிளி. சே! இட்லி, தோசை, பூரின்னு ஏதாவது செய்யகூடாதா?" என்று அழுகையுடன் கேட்டேன்.
"கிளி இல்லேடி, மோர்களி " என்றாள் பாட்டி.
"இதோ பாரு! என்னால ஆட்டுகல்லுல அரைக்க முடியாது. இங்க எல்லாரும் மிக்சி, கிரைண்டர் வாங்கியாச்சு. உங்க அப்பாகிட்ட கேட்டு அலுத்துப் போச்சு. இஷ்டமிருந்தா தின்னு, இல்லாட்டி எழுந்து போ!" என்றாள்.
"தொட்டுக்க சட்னியாவது அரைச்சியா?" என்றுக் கேட்டதும், சர்க்கரைதான் என்றாள்.
"போட்டு தொலை" வேறு வழியில்லாமல் பசியில் அதை எடுத்து வாயில் போட்டுக் கொண்டேன்.
"சொவத்து கீரையை வழிச்சி போடடி சொரணை கெட்டவளே"
இந்த பாட்டி ஒண்ணு. எப்ப பார்த்தாலும் பழமொழிதான். பாட்டியை முறைத்ததும், "அந்த காலத்துல ஆட்டுகல், ஒரல், அம்மி, மாவு திரிக்கிற எந்திரம்னு மாங்கு மாங்குன்னு கையாலதான் அத்தனையும் அரைப்போம். " பாட்டிக்கு சமயம் கிடைத்தால் போதும் மலரும் நினைவுகளை ஆரம்பித்துவிடுவாள்.
"நாளைக்கே ஒரு படி அரிசி ஊறப் போடரேன். அரைச்சிக் கொடுங்கோ" அம்மா பதில் கொடுத்ததும், அடுத்து ஆரம்பிக்கப் போகும் அவர்களின் வாக்குவாதத்தைப் பார்க்க விருப்பம் இல்லாமல் விளையாட ஓடினேன்.
இரவு அப்பா படுக்கையில் படுத்துக் கொண்டு வீக்லி படித்துக் கொண்டு இருக்கும்பொழுது, "அப்பா! நான் என்.சி. சில சேரட்டுமாபா?" என்று மிகுந்த பணிவை வரவழைத்துக் கொண்டுக் கேட்டேன்.
அப்பா ஒரு நிமிடம் பதில் சொல்லாமல் பேசாமல் இருந்தவர், " அம்மாவைக் கேட்டியா? ஸ்கூல் முடியஞ்ச பெறகுதானே பிராக்டீஸ் இருக்கும். நீ பஸ் பிடிச்சி வரதுக்குள்ள இருட்டிடாது. ஹை ஸ்கூல் வந்தாச்சு. உன்ன டாக்டர் ஆக்கணும்னு நெனச்சிக்கிட்டு இருக்கேன். நம்ம பேமிலில லேடி டாக்டருக்கு யாருமே படிக்கலை! இனி மேல இந்த வெளையாட்டுதனத்த எல்லாம் மூட்டைக் கட்டி வெச்சிட்டு, ஒழுங்கா படிக்கிற வழிய பாரு" என்றார்.
பக்கத்தில் நின்றிருந்த அண்ணா, " சயின்ஸ்ல பதினெட்டு மார்க்கு, பிரோக்ரஸ் ரிப்போர்ட்ல மொத்தம் மூணு ரெட் லைன். இவ எம்.பி.பி.எஸ் படிக்கப் போறாளா?" என்றதும் அவனைப் பார்த்து முறைத்தவாறு, அப்பா சரி என்று சொல்கிறாரா, வேண்டாம் என்கிறாரா என்று புரியாமல் "இனிமே ஒழுங்கா படிக்கிறேம்பா" என்று சிணுங்கிக்கொண்டே, " போப்பா! நா பெரியவவள் ஆனதும் லைப்ரரியன் இல்லாட்டி ஏர்ஹோஸ்டஸ்தான் ஆவேன்" என்றேன்.
"அப்பா! இவ என்.சி. சி டேக்கு ராஜரத்தினம் ஸ்டேடியத்துல, இவ கிளாஸ் பொண்ணுங்க கூட பாரதியார் பாட்டுக்கு டான்ஸ் ஆடினாளே, அன்னில இருந்து என். சி. சில சேரப் போறேன்னும் எல்லார்கிட்டையும் சொல்லிக்கிட்டு இருக்கா..." என்றான்.
சமையலறை வேலை எல்லாம் முடித்துவிட்டு வந்த அம்மா, " என்ன இங்க மகாநாடு? இன்னும் படுக்கலை? மணி ஒம்பது ஆச்சு. காலைல ஒங்கள் எழுப்பறதுக்குள்ள உயிர் போறது" என்றாள்.
நான் பேசாமல் நின்றிருந்தேன். அப்பா, " இவளுக்கு என். சி. சில சேரணுமாம். ஒன்னக் கேக்க சொன்னேன்" என்றார்.
"நானே சொல்லணும்னு இருந்தேன். டான்ஸ் டீச்சர் ஒருத்தி, சாயிபாபா கோவிலாண்ட குடி வந்திருக்காளாம். ரொம்ப நல்லா சொல்லி தராளாம். புஷ்பா மாமி பொண்ணுகூட சேர்ந்திருக்காளாம். நாலே வருஷத்துல அரங்கேற்றத்துக்கு தயார் பண்ணிடராளாம். இவளயும் சேர்க்கலாம்னு பார்க்கிறேன்" என்றாள் பரபரப்பாய்.
"எவ்வளவு பீஸ்?" அப்பா கேட்கும்பொழுதே, "போம்மா! எனக்கு டான்ஸ் வேண்டாம். என். சி. சில தான் சேரப்போறேன்" என்றுக் கொஞ்சம் வேகமாய் சொன்னேன்.
"அந்த காலத்துல நான் டான்ஸ் கத்துகணும்னு ரொம்ப ஆசைப் பட்டேன். எங்கம்மா விடலை.. எம் பொண்ணாவது பத்மா சுப்ரமணியன், சுதாராணி மாதிரி வரட்டும்னு பாக்கறேன். வாரம் மூணு கிளாஸ் கிளாஸ்தான்." அம்மா சொன்னதும் அப்பா, " என்னமோ பண்ணு" என்றார்.
கால் நீட்டிக் கொண்டு அறை வாசலில் அமர்ந்திருந்த பாட்டி, "ரொம்ப நன்னா இருக்கு, டான்சுனு பொண் கொழந்தை நாலு பேரு முன்னாடி தையதக்கான்னு ஆடினா நன்னாவா இருக்கும்?" என்றாள்.
சமயத்தில் ரட்சிக்க வந்த பாட்டியை நன்றியுடன் பார்க்கும்பொழுது, "வாய்பாட்டு எதாவது சொல்லிண்டா, நாளைக்கு பொண் பார்க்கும்போது, ரெண்டு கீர்த்தனையாவது பாடலாம் " என்றதும், எரிச்சலுடன், "போ பாட்டி, நான் கல்யாணமே பண்ணிக்க போறதில்லை" என்றேன்.
"எனக்குதான் கொடுப்பினையில்லை. என் பொண்ணு டான்ஸ் கத்துக்கதான் போறா" என்று அம்மா தீர்மானமாய் சொன்னாள். நான் பாட்டியை பரிதாபமாய் பார்த்தேன்.
"கொழந்தைக்கு விருப்பம் இல்லைனா விடேன். அப்படி ஒனக்கு அவ்வளவு சைன்னா, இப்பதான் என்ன கொறஞ்சிப் போச்சு? நீயே டான்ஸ் கத்துக் கோயேன்" என்றாள்.
அம்மா, என் மனக்கண்ணில் நெத்திசூட்டி, ஒட்டியாணம், டான்ஸ் டிரஸ் போட்டுக்கிட்டு வந்ததும் என்னால் சிரிப்பை கட்டுப் படுத்த முடியவில்லை.
என்னைப் பார்த்து முறைத்துக் கொண்டே, "பாத்தேளே ஒங்க அம்மாவ..? அத்தனையும் கும்மோணம் திரிசமன்" என்றதும், அப்பா, "அம்மா! கொஞ்சம் பேசாமல் இரேன் " என்று அலுத்துக் கொண்டார்.
பாட்டி, " அவ டான்ஸ் ஆடரது இருக்கட்டும். நீ எதுக்கு அவ தட்டற நட்டுவாங்கத்துக்கு இப்படி ஆடரே?" என்றுக் கேட்டாள்.
அப்பா டான்ஸ் ஆடுகிறாரா, நான் பார்த்ததில்லையே என்று ஆச்சரியத்துடன் அப்பாவைப் பார்த்தேன்.
அம்மா கோபமாய், "போய் படுடி" என்றாள். "அப்பா" என்று அப்பாவின் தோளைப் பிடித்துக் குலுக்கினேன். அப்பாவும், "நேரமாச்சு, போய் படு" என்றார். என். சி. சி யில் சேர நாளைக்கு பெயர் கொடுக்கலாம் என்ற ஆசையில் மண் விழுந்தது.
ஆனால் அம்மா, மறுநாள் ஸ்கூலில் இருந்து வந்ததும், பூ, பழம், வெற்றிலைப்பாக்கு வாங்கிக் கொண்டு டான்ஸ் கிளாசில் சேர்த்துவிட்டு விட்டாள்.
ஸ்கூல் விட்டதும், நேராய் டான்ஸ்கிளாஸ்க்குப் போய் விட வேண்டும். அம்மா டிபனும் பிளாஸ்கில் பூஸ்டும் கொண்டு வந்திருப்பாள். வேறு என்ன அதே உப்புமாதான்! அதை தின்றுவிட்டு பயிற்சி ஆரம்பிக்கும். அம்மா கண்ணைக் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருப்பாள்.
பிறகு அம்மாவுடன் வீட்டுக்கு திரும்புவேன். வழியெல்லாம் பிரபல நடனமணிகள் பற்றி சொல்லிக் கொண்டும். நானும் அப்படி ஆக வேண்டும் என்றும் ஓரே போதனையாய் இருக்கும். அம்மாவைப் பார்த்தால் பாவமாய் இருந்தது, அதனால் ஓரளவு ஒழுங்காய் நடனம் கற்றுக் கொள்ள ஆரம்பித்தேன்.
வீட்டுக்கு யார் வந்தாலும் ஆடிக் காட்ட சொல்லுவாள். ஆனால் நான் ஆடுவதைப் பார்த்தே அண்ணாவும், தம்பியும் ஆடத் தொடங்கினர். ஒரு கட்டத்தில் விருந்தினர்கள் என் ஆட்டத்தைவிட அவர்கள் ஆட்டம் நன்றாக இருப்பதாக நற்சான்றிதழ் வழங்கத் தொடங்கினர்.
அந்தோ அம்மாவின் கனவு இரண்டே மாதத்தில் கலைந்தது! டான்ஸ் டீச்சருக்கு திடீரென்று கல்யாணம் நிச்சயமாகிவிட்டது. மாப்பிள்ளை கல்யாணத்திற்கு பிறகு நடனம் ஆடக் கூடாது என்று கண்டிஷன் போட்டு விட்டானாம். அம்மா வேறு டீச்சர் தேடியும் யாரும் சரியாய் கிடைக்கவில்லை.
திரும்ப என். சி. சியில் சேரும் ஆசையை வெளியிட்டேன். இந்த தடவை பாட்டி தீர்மானமாய் என்னை பாட்டு கிளாசில் சேர வேண்டும் என்று சொல்லிவிட்டாள். எங்கள் வீட்டுப் பக்கத்திலேயே ஒரு மாமி பாட்டு சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தாள். ஸ, ரீ, க. ,ம என்று பாடவேண்டும் என்றாலே எனக்கு அழுகையாய் வந்தது. எவ்வளவு மறுத்தும் வலுக்கட்டாயமாய், விஜயதசமி அன்று சேர்த்துவிட்டார்கள்.
தினமும் வீட்டுக்கு வந்ததும், என் பிரண்ட்ஸ் எல்லாம் விளையாடும்பொழுது நான் மட்டும் பாட்டு நோட்டை எடுத்துக் கொண்டு அடுத்த தெருவில் இருக்கும் பாட்டு கிளாஸ்க்கு போவேன்.
பாட்டுமாமி, ஸ, ரீ, க, ம என்று சொன்னதும் நானும் அதையே திருப்பி சொன்னேன். அந்த மாமியும் தலை கீழாய் நின்று தண்ணீர் குடித்துப் பார்த்தும், கர்நாடக சங்கீதத்தில் வரும் 'க' வும், 'த' வும் என் வாயில் நுழையவேய்¢ல்லை. சில நாள் பார்த்துவிட்டு பாட்டுமாமி, அம்மாவைக் கூப்பிட்டு தன்னால் எனக்கு பாட்டு சொல்லிக் கொடுக்க இயலவில்லை என்றுச் சொல்லிவிட்டாள்.
அந்த மாமி வீணைகிளாசும் எடுத்துக் கொண்டு இருந்ததால், அப்பா இன்ஸ்ரூமெண்ட் கத்துக்கிட்டா நல்லது என்று வீணைக் கற்றுக் கொள்ள சொன்னார். அடுத்து வீணை கிளாஸ் ஆரம்பித்தது.
எங்கள் தெருவில், ஞாயிற்றுகிழமை காலையானால், ஒரு பூம்பூம் மாட்டுக்காரன் நாகஸ்வரத்தில் அன்னக்கிளி ஒன்ன தேடுதே, மச்சானை பாத்தீங்களா வாசித்துக் கொண்டே வருவான். பீபீயில் பாட்டு வருவது எனக்கு ஆச்சரியமாய் இருந்தது.
ரயில்வே ஸ்டேஷனில் ஒரு முறை கண்ணில்லாத ஒருவன், எம்ஜிர் சினிமா பாட்டு, அன்றொரு நாள் இதே நிலவில் பாட்டை ஹார்மோனியத்தில் வாசித்ததைக் கேட்டு எனக்கும் அதே மாதிரி வாசிக்க வேண்டும் என்ற கனவு இருந்தது. நானும் சிப்பியிருக்கு முத்து இருக்கு பாட்டை வீணையில் வாசிக்கலாம் என்ற கற்பனையில் ஆர்வமாய் வகுப்பில் கலந்துக் கொண்டேன். டீச்சரிடம் ச., ரி, க, ம எல்லாம் வேண்டாம், நேராய் சினிமா பாட்டு வாசிக்க சொல்லிக் கொடுங்கள் என்றுக் கேட்டதற்கு அதற்கு இன்னும் நிறைய வருடங்கள் ஆகும் என்றுச் சொல்லிவிட்டாள். நான் சுவாரசியம் இழந்தேன்.
டீச்சரிடம் ஒரே ஒரு வீணைதான் இருந்தது. அந்த நேரத்தில் மொத்தம் ஐந்து குட்டிகளுக்கு வகுப்பு. எல்லாரும் வீணைக்குப் போட்டி போடும்பொழுது, நான் சுவாரசியமாய் அங்கிருந்த பத்திரிக்கைகளை படித்துக் கொண்டிருப்பேன். இரண்டு நாளில் அந்த பத்திரிக்கையெல்லாம் படித்து முடித்ததும், என்னைப் போல கடனே என்று கிளாஸ்க்கு வந்த குட்டிகளுடன் வாசலில் நொண்டி, கல்லா மண்ணா எல்லாம் விளையாடிவிட்டு வீட்டிற்கு கிளம்பிவிடுவேன். என் பழைய பிரண்ட்ஸ்சும் அங்கே வந்து சேர்ந்துக் கொள்ள ஆட்டம் நன்றாக நடந்தது. என்னால் மற்ற குட்டிகளும் கெடுகின்றன என்று டீச்சரும் என்னைப் பார்க்கும்பொழுது எல்லாம் கரித்துக் கொட்ட ஆரம்பித்தாள்.
ஒரு நாள் சாயந்தரம் ஸ்கூல் முடிந்ததும் என் வகுப்பில் பிரேமலதா, உமா, சாந்தி எல்லாரும் காக்கி சட்டை, பேண்டு, "¥ , தொப்பிப் போட்டுக் கொண்டு என். சி. சி வகுப்பிற்குப் போவதைப் பார்த்தப் பொழுது மனதில் தீர்மானமாய் முடிவெடுத்தேன். அன்றிரவே இந்த டான்ஸ்கிளாஸ், வீணை எல்லாம் கற்றுக் கொள்ள விருப்பம் இல்லை என்றும், என். சி. சி வகுப்பில் சேர்ந்தே ஆக வேண்டும் என்று அறிவித்துவிட்டேன்.
அம்மாவும், பாட்டியும் ஏதோ சொல்ல வந்தப் பொழுது அப்பா, அவள் ஆர்வத்தை தடைப் போட வேண்டாம் என்று சொல்லிவிட்டார். மறு நாளே என். சி. சி வகுப்பில் சேர்ந்துவிட்டேன். பி. டி சார் காட்டிய பெட்டியில் இருந்து ஓரளவு அளவு சரியான உடைகள், ஷ¥, தொப்பி எடுத்துக் கொண்டேன். இரட்டை சடையை எஸ் கட்டுகட்ட சொல்லி தந்தார்கள்.
எல்லாவற்றையும் அணிந்துக் கொண்டு ஸ்டாண்டடிஸ், அட்டெங்ஷன், மார்ச் பாஸ்ட் என்று ஒரு மணி நேரம் பயிற்சி நடந்தது.
"இன்னைக்கு பொங்கல், வடை" என்று யாரோ கத்தினார்கள். என் கையில் தரப்பட்ட பொட்டலத்தைப் பிரித்ததும், நெய் மணக்க, மிளகும், முந்திரி பருப்புகள் என்னைப் பார்த்து கண் சிமிட்ட, தையல் இலை வாசனையும் சேர சுடசுட ஸ்கூலுக்கு அருகில் இருந்த உடுப்பி துர்காபவன் வெண்பொங்கல் கமகமத்தது. மேலே வடை, கீழே தேங்காய் சட்னி வேறு!
"பொங்கல் வடை, பூரிக்கிழங்கு செட், கிச்சடி, மசால் தோசை இல்லாட்டி இட்லி வடைனு மாறி மாறி வரும்" என்றுப் பக்கத்தில் இருந்த பிரேமலதா சொன்னாள்.
மடமடவென்று சாப்பிட்டுவிட்டு, புத்தக பையை தூக்கிக் கொண்டு பஸ் ஸ்டாப்பை நோக்கி நடந்தேன். மனம் முழுக்க பொங்கலின் நறுமணம். கையை முகர்ந்துக் கொண்டே, கூட வந்த பிரேமலதாவிடம் " ஒரு சீக்ரெட் சொல்லறேன்பா.. யாருக்கிட்டையும் சொல்ல மாட்டியே?" என்றுக் கேட்டேன்.
பிரேமலதா "காட் பிராமிசா சொல்ல மாட்டேன்பா.. னா நீ என்ன சொல்லப் போறேன்னு எனக்கு தெரியுமே.. நீ மட்டும் இல்லே, நாங்க எல்லாருமே இந்த டிபனுக்காகதான் என். சி. சி லையே சேர்தோம்பா. என்ன வாசனையில்லே?" என்று தன் கை வாசனையை உள்ளிழுத்தப்படி!
மீண்டும் என்கையை முகர்ந்துப் பார்த்தேன். பொங்கல், வடை, சட்னியின் வாசனை கலந்து அடித்தது. நானும் நன்றாக வாசனையை உள்ளிழுத்தப்படி, வீட்டுக்குப் போய் எல்லாரிடமும் காட்டணும் என்று நினைத்தவாறு பஸ் பிடிக்க வேகமாய் நடந்தேன்.
- தமிழோவியம் இணைய இதழ்
29 பின்னூட்டங்கள்:
நிறைய வகை வகையாய் டிஃபன் கிடைத்ததா/
அம்மாவுக்கு உப்புமா கவலை விட்டது:-)
அண்ணாவும் என்.சி.சியில் சேர்ந்தாரோ?
வல்லி, ஸ்ரீதர்! வசனங்களை தவிர்த்து சம்பவங்கள் அனைத்தும் உண்மை கதை :-)
பொங்கல் வடை, இட்லி வடை, மசால் தோசை, பூரிகிழங்கு இவைதான் மாறி மாறி வரும். ஆஹா! நினைத்தாலே இனிக்கிறதே... ஹூம் :-(
சூப்பரா கதை போய்க்கிட்டிருக்கு.
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அவர்கள் விருப்பத்துக்கு வளர விடாமல் தங்களால் செய்ய இயலாததையெல்லாம் பிள்ளைகள் மேல் திணித்து ...... என்றெல்லாம் முடிக்கப் போகிறீர்கள் என்று பார்த்தால்......
பொங்கல், வடை, சட்னி யென்று முடித்து விட்டீர்களே!!! இருந்தாலும் வாசனைதான்.....
மலரும் நினைவுகள் எனக்கும்..... நாங்களும் என்.சி.சி தான். பரோட்டா, சால்னா தான். ஆனால் அதுக்காகவேவா.... ரொம்ப ஓவராத் தெரியிலே......
நல்லா எழுதி இருக்கீங்க..அப்பாக்கு டாக்டராக்க ஆசை, அம்மாக்கு டான்ஸ் சொல்லித்தர, பாட்டிக்கு பாட்டு சொல்லித்தர - எல்லா குடுப்பத்துலயும் குழந்தைகள் மேல் திணிக்கப்படும் பெரியவர்களின் நிறைவேறாத கனவுகள். முடிவு எரிர்ப்பாராத மாதிரி இருந்தது.
ஆஹா
N.C.C கதையா!நல்லாத்தான் இருக்குது.
N.C.C லே சேர முடியாத போது N.S.S. க்கு
பேர் குடுத்துட்டு, N.C.C மக்கள்ஸ நேஷனல்
கக்கூஸ் கிளீனர் அப்படின்னு ரவுசு பண்ணிட்டு
N.S.S லே கடைசிலே எல்லா கேம்புமே சுத்தம்
பண்றதுக்காதான் போனது.
ம்ம்ம்ம்ம்ம்ம்மலரும் நினைவுகள்.
நல்ல சம்பவக்கோர்வை..
அன்புடன்...ச.சங்கர்
சூப்பர் :) எல்லாரயும் N.C.C சேரணும்னு தூண்டி விட்டுட்டீங்களே ;) எனக்கு எங்க ஸ்கூல் மார்ச் பாஸ்ட் நினைவுக்கு வருது..
சுல்தான், அதுதான் உண்மை சம்பவம் என்று சொல்லிட்டேனே :-)
பெருசு, அந்த கொடுமையை ஏன் கேட்குறீங்க :-)
வருடா வருடம், "தொன்று நிகழ்ந்தத்னைத்தும்" பாடலுக்கு நடனம் (ஓரே பாடல்வருஷாவருஷம்) நடனம் ஆடணும் !!!!
ப்ரியா, பொற்கொடி, சங்கர் நன்றி
அடடே! இதானா....என்.சி.சி ரகசியம்...இட்லி வடை பூரி கிழங்கு...அடடா!
கதையாக எழுதியிருந்த விதம் அருமையாக இருந்தது.
//"சொவத்து கீரையை வழிச்சி போடடி சொரணை கெட்டவளே" //
இங்கு முகத்தில் ஒட்டிக் கொண்ட புன்னகை போகப் போக விரிந்து கொண்டே போய்க் கடைசி வரிகளில் முழுமை பெற்று விட்டது. நான் கூட என்சிசியில் சேர்ந்து டிபன் சாப்பிட்டேன்.
அன்புடன்,
மா சிவகுமார்.
///பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அவர்கள் விருப்பத்துக்கு வளர விடாமல் தங்களால் செய்ய இயலாததையெல்லாம் பிள்ளைகள் மேல் திணித்து ...... என்றெல்லாம் முடிக்கப் போகிறீர்கள் என்று பார்த்தால்......
பொங்கல், வடை, சட்னி யென்று முடித்து விட்டீர்களே!!! இருந்தாலும் வாசனைதான்.....///
ஆங் ! அதுதான் உஷா !
வசனங்கள் பிரமாதம்..நடையும் தான்
நல்லா சாப்பிட்டிருக்கீங்க போல.. எங்க ஸ்கூல்ல என்.சி.சி. இல்லியேன்னு இப்போ ஏக்கமா இருக்கு!
உஷா..
கல்லூரியில படிக்கிறப்போ, History ancillary பாடம். அந்த வகுப்ப தவிர்கறதுக்கே N.C.C. ல சேர்ந்தோம்.
தோழிகள் எல்லாம் செலக்சன் ல அவுட்.. உயரம் பத்தாம.. அடுத்த ரவுண்டல நான் செலக் ஆயிட்டேன்.. அவங்க செலக்ட் ஆகலைன்னு தெரிஞ்சதும் நானும் சேரலைன்னு சொன்னேன்.. அடி பின்னிப் போடுவேன்னு அந்த 'பின் லேடி" officer, சொல்ல வேற வழி இல்லாம ஒவ்வொறு வெள்ளிக்கிழமையும் parade.. எரிச்சலா வரும். ஆனா கோவை ல இருந்து அமராவதி வரைக்கும் cycle expedition போனது நல்ல அனுபவம்...
அருமையாக இருக்கு
மங்கை
ஜிரா, சிவகுமார், ரவியா (ஊர்லதான் இருக்கீங்களா), பொன்ஸ், மங்கை! நன்றி அனைவருக்கும். இளம் பருவ நினைவுகள் அனைவருக்கும் சந்தோஷத்தையும், நினைத்துப்பார்க்க பார்க்க ஒரு ஏக்கத்தையும் சேர்ந்து தருகிறது இல்லையா?
ஆனா அது ஏன் எல்லாருக்குமே கடந்த காலம் நினைச்சு ஏக்கமாவே இருக்கு..? யாருக்குமே அப்போ விட இப்போ தான் சந்தோஷமா இருக்கேன்னு தோணவே தோணாதா?!
ஆகா. நீங்க சொல்றப்பவே வாயில தண்ணி ஊறுதே. இன்னைக்கு இரவு சாப்பாடு பொங்கல் வடை தான். இதோ வீட்டம்மாவுக்குத் தொலைபேசிச் சொல்லிடறேன்.
தொலைபேசிய பிறகு....
இன்று பொங்கல் வடை உண்டு. ஆனால் நான் தான் சமைக்க வேண்டுமாம். :-(
எப்படியோ பொங்கல் வடை கிடைத்தால் போதும் :-)
கடந்த கால நினைவுகளாக இருந்தாலும் நல்லா எழுதி இருக்கீங்க.
அழகான எழுத்து. நகைச்சுவை இழையோடிய யதார்த்தமான நடை. வெகுவாக ரசித்தேன். அதென்னமோ, வெளி சாப்பாட்டுக்கு பறந்தது ஒரு காலம். இப்போதும் சில சமயம் வெளிய வாங்கின பொங்கலும், வடையும் இன்னும் ருசியாக தோண வீட்டிலிருப்பவர்களுக்கு வருத்தம் வருகிறது. சின்ன சின்ன காரணமில்லாத ஆசைகளால் பெரிய காரியங்கள் கூட முடிவாகின்றன என்ற வாழ்க்கை உண்மையையும் புரிந்துகொண்டேன்.
நன்றி
கொடி, சாதாரண குடும்பத்தில் பிறந்தவர்களுக்கு சிறுவயது நினைவுகள் சுகமானவையே! ஆனால் சிறுவயதில் பட்ட கஷ்டங்கள் பல்வேறு கொடுமைகளுக்கு ஆளானவர்கள் இளமை பருவத்தை நினைத்தும் பார்ப்பதில்லை. ஆனால் புரையோடிய ஆழ்மன புண்ணின் தாக்கம் அவர்கள் செயலில் இருக்கும். இது இப்படி என்றால் ஏழ்மை நிலையிலும் படித்து முன்னேறியவர்கள்,
கடந்து வந்த பாதையை மறப்பதில்லை.
குமரன், பொங்கல் வடை சட்னியின் மணத்திற்கு காரணம், அது சுற்றி வரும் இலைகளின் மணமே என்கிறேன். நீங்கள் படாதபாடு பட்டு , வடையும் பொங்கலும் செய்துப் போட்டாலும் வீட்டுக்காரம்மா சுமார் என்ற சான்றிதழையே வழங்குவார் :-)
ராதா ராகவன் நன்றி
ஜெயராமன் சார், பத்துவயதில் அப்பா வாங்கி வந்த கீரை வடையில் சுவை இன்னும் நாக்கில் இருக்கிறது. அதற்கு பிறகு பலமுறை சாப்பிட்டாலும்..... ஹூ ஹூம் அந்த சுவையை மறக்க முடியவில்லை.
இதையெல்லாம் கருத்தில் கொண்டுதான் சத்துணவு போடுராங்களா???அனுபவத்தை நன்றாகவும் சுவையாகவும் எழுதியுள்ளீர்கள். பெற்றோர் தங்கள் நிறைவேறா ஆசைகளைத் திணிப்பது,உண்மை இதில் சிலர் வெற்றியும், பெற்றுள்ளார்கள். குறிப்பாக பம்பாய் ஜெயசிரியின் தாயார்; மேடைப்பாடகியாகும் தன் நிறைவேறா ஆசையை மகள் மூலம் நிறைவேற்றி,நமக்கு ஓர் உன்னத பாடகியைத் தந்தவர்.எனக்கும் உஷா எனும் உன்னத நடனமணியை இழந்து விட்டோமா?, என்ற வருத்தமிருக்கு!!
யோகன் பாரிஸ்
அம்மா அப்பா பாட்டி எல்லோருக்கும் ஒரு ஆசை இருந்தாலும் கடைசில ஜெயிச்சது டிபன் தான்...ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க :-)
கல்லூரி காலத்தில் NCC assembly பற்றி தகவல் பலகையில் ஒட்டி இருப்பார்கள். நாங்கள் அதில் "பூரி சாப்பிடும் நேரம்" என்று பெரிய எழுத்தில் எழுதுவோம்.
யோகன் "குதிரைக்கு கொள்ளுதான் வைக்க முடியும் திங்க வைக்க முடியுமா?" என்று ஒரு பழமொழியுண்டு. நாங்க "ஒளரங்கசீப்" பரம்பரையில்லையா :-)
சியாம் நன்றி
அருண்மொழி பாயிண்ட பிடிச்சீட்டீங்களே ;-)))
எங்களுடைய பள்ளிக்கூடத்தில் பன், பட்டர் தான் கொடுத்தாங்க. அதுக்காகவே நானும் ncc யில் இணைந்தேன்.
ம்ம் அது ஒரு காலம்.
உஷா பழைய மலரும் நினைவுகளை ஞாபகப்படுத்திவிட்டீர்கள். ஒரு நாள் பாலீஷ் போடாததற்காக ஐந்து முறை பள்ளியை சுற்றி ஓடவிட்டார்கள்....ம்ம்
நன்றி.
மஞ்சூர் ராசா, ஆறுமாதத்துக்கு ஒரு தடவை வாஷிங் அலவன்ஸ் என்று நாலைந்து ரூபாய் கிடைக்குமே? அது இன்றுதான் ஞாபகம் வந்தது. ஆஹா, அந்த காலத்தில் ரூபாய் நோட்டாய் கையில் கிடைத்ததை நினைத்தால், லாட்டரியில் இன்று கோடி ரூபாய் விழுந்தால் கூட அதற்கு ஈடாகுமா :-)
இக்கதை, இரண்டு வருடத்திற்கு முன்பு அமுதசுரபி பத்திரிக்கை நடத்திய நகைச்சுவை கதைப் போட்டிக்கு எழுதப்பட்டது. பரிசு கிடைக்காத வருத்தத்தை, உங்கள் அனைவரின் பின்னுட்டம் நீக்கிவிட்டது. மீண்டும் நன்றியுடன்,
உஷா
பள்ளி வாழ்க்கை போல் சுகம் வேறேங்கும் வராது.
அது சரி, நீங்க என்னவா தான் இருக்கீங்க இப்ப? டாக்டர், டான்ஸர், வித்வான்?
உஷா மேடம்! உங்க எழுத்துநடை மிகவும் அருமை! என் பதிவின் 2ம்பாகம் இன்று எழுதுவேன்.கிட்டதட்ட உங்க கதை மாதிரிதான் இருக்கும்.நாளை எனக்கு லீவ். உக்காந்து உங்க பதிவு எல்லாம் படித்துவிட்டுதான் அடுத்த வேளை.(நான் கூட காளியாகுடி பொங்கலுக்காகவே NCCல் சேர்ந்தேன்:-))
பேட் நியூஸ், நான் இப்ப ரைட்டராய் இருக்கேன் :-)
அபி அப்பா,எனக்கு இணையத்தில் ஒரு பேரூ இருக்கு, என்ன தெரியுமா மாயவத்து மருமகள் என்று! தல, மாயவரத்தாளு.
ஆமா நானும் கேள்விபட்டேன்! உங்க சரிபாதி மாயவரமா? ஆஹா! எங்க ஊர் பேர சொல்லும்போதே என்ன ஒரு சந்தோஷம்!-)))
Post a Comment
<< இல்லம்