Thursday, October 05, 2006

இரவின் காதலி

இன்று காலையில் காப்பியை உறிஞ்சிக் கொண்டே பால்கனியில் நிற்கும் பொழுது மணி ஆறரைத்தான் ஆகியிருந்தது. இங்கு வெள்ளிக்கிழமை விடுமுறையானதால் வீடு நிசப்தமாய் இருந்தது. எங்கள் பால்கனி கொஞ்சம் பெரியது. அந்த முனையில் ஒரு தவிட்டு குருவி, புறா சைஸ்சில் உட்கார்ந்திருந்தது. நல்ல குளிர். இன்னும் விடியவில்லை. வானம் வெளுத்துக் கொண்டிருந்தது. அந்த குருவி ஒரு மாதிரி ட்விட் என்று சத்தமிட்டது.

நானும் மெதுவாய் அப்படியே சொன்னேன். ஒரு விநாடிக்குப் பிறகு என்னைப் பார்த்து ட்விட் என்று நன்றாக கத்திவிட்டு பறந்தோடியது. என்ன சொல்லியிருக்கும் என்று யோசித்துக் கொண்டிருக்கும்பொழுது, வானம் அழகாய் சிவப்பு வர்ணம் கொண்டது. "வானம் எனக்கொரு போதிமரம்" என்று வைர வரிகளைச் சொல்லிக் கொண்டிருந்தேன்.

ஆனால் வானின் அழகு பரிபூர்ணமாய் தெரியாமல், சோடியம் வேப்பர் விளக்குகளின் போலி வெளிச்சம் தடைப் போட்டுக் கொண்டிருந்தது. இந்த சோடியம் வேப்பர் விளக்கு வந்ததுமே, இருட்டின் அழகே போய்விட்டது. வானின் நட்சத்திரங்கள் கண்ணில் விழுவதேயில்லை.

சிறு வயதில் இருந்தே, இருட்டின் காதலி நான். வானின் நட்சத்திரங்களைப் பார்த்துக் கொண்டு நிச்சிலமான மனதுடன், ஒருவகையான மோனை நிலையில் இருப்பது சுகமானது. அப்புறம் கல்யாணம் ஆனதும், வாழ்க்கை அப்பார்ட்மெண்ட்டின் நாலு சுவர்களுக்குள்! பால்கனியில் நின்றுக் கொண்டு பார்க்கும் வானம் எனக்கு பிடிக்கவில்லை.

நாங்கள் இருக்கும் ஊரில் இருந்து துபாய் நூத்திஎண்பதுகிலோ மீட்டர். பத்துநாட்களுக்கு ஒரு முறை ஏதாவது வேலை வந்துவிடும். திரும்பும்பொழுது, எப்படியும் பத்து, பதினென்று ஆகிவிடும். ஷார்ஜா வழியாய் வராமல், அவுட்டரில் புதியதாய் போட்டுக் கொண்டு இருக்கும் வழியில்தான் வரவேண்டும் என்று சொல்லிவிடுவேன்.

இன்னும் சில கிலோ மீட்டருக்கு தெருவிளக்குகள் போடவில்லை. அசல் பாலைவனமாய் சந்தடி குறைந்த சாலை. வெகு தூரத்தில் துபாய் நகரத்து விளக்குகள் கண் சிமிட்ட, வானத்து நட்சத்திரங்களும், நிலாவும் கூட வர மனம் எங்கும் ஒருவகையான நிசப்தம் எழும். ஏனோ இத்தகைய இருட்டுகளில் வாய் ஊமையாகி விடுகிறது. சில் வண்டுகளின் ரீங்காரமும், பெயர் தெரியாத பூச்சிகளின் சத்தமும், காற்றில் அசையும் இலைகளின் ஓலியும் அப்படியே இருந்து விடலாம் என்று இருக்கும்.

மாயவரம் போனால், அங்கிருக்கும் மொட்டை மாடிக்கு இருட்டியதும் போய் விடுவேன். நூறு வயதினை தாண்டிய தென்னை மரங்கள், மரம் செடி கொடிகளின் பச்சை வாசம், கும்மிருட்டு, எங்கோ ஒலிக்கும் வானொலியில் பழைய பாட்டு. அதுவும் காற்று அடிக்கும் பொழுது மட்டுமே விட்டு விட்டு பாடல் வரிகள் காதில் விழும்.

காணி நிலம் வேண்டும் பராசக்தி என்று பாரதி பாடியது இதைதானா? என்ன ரசனை என்று நினைக்கும்பொழுது, அங்க இருட்டுல ஒக்காந்து என்ன செய்யரே? வந்து வேலைய பாரு என்று கீழ் இருந்து குரல் கேட்கும். பாரதிக்கு வேண்டுமானாலும் கூட பத்தினி பெண் இருக்க வேண்டும் . நமக்கு !!!!!!!!!

- தோழியர் வலைப்பதிவு

23 பின்னூட்டங்கள்:

At Thursday, 05 October, 2006, சொல்வது...

வாசிக்க சுகமா இருக்கு உங்க எழுத்துக்கள்!

 
At Thursday, 05 October, 2006, சொல்வது...

வெள்ளி காலை 6.30 மணி நான் பார்த்ததே இல்லை அரேபியாவில் இருக்கும் வரையில். வெள்ளி என்றால் நேராக மதிய உணவுதான்.

அரேபியாவில் இயற்கையுடன் வாழவேண்டுமென்றால் அபுதாபிற்கு வடமேற்கே உள்ள நான் இருந்த ரூவைஸ் என்ற ஊருக்கு போய் பாருங்கள். சுமார் 100 தமிழ் குடுமபங்கள் உண்டு.
தோட்டம், கொண்டாடங்கள் என பெண்களின் வாழ்கை நன்றாக இருக்கும்

 
At Thursday, 05 October, 2006, சொல்வது...

இந்த அவசர உலகத்தில், வெளிச்ச மாசுபடலில், நட்சத்திரங்களைப் பார்த்து ரசித்து எத்தனை ஆண்டுகள் ஆகிவிட்டன!!

வைசா

 
At Thursday, 05 October, 2006, சொல்வது...

தம்பி, நன்றி

சிவா, நீங்கள் சொல்வது Liwa என்று நினைக்கிறேன். நான் இருக்கும் இடமும் பாலைவனம் இல்லை.இதுவும் சின்ன கிராமம்தான்

//தோட்டம், கொண்டாடங்கள் என பெண்களின் வாழ்கை நன்றாக இருக்கும் //
.
ஒரு சந்தேகம் அது என்ன பெண்கள் வாழ்க்கை :-) பொதுவா வாழ்கை நல்லா போகும் என்று சொல்லக்கூடாதா :-))))

வைசா, ஒரு முறையில் பாலைவன கும் இருட்டில் வானத்தைப் பார்த்து அசந்துவிட்டேன். நட்சத்திரங்கள் கொட்டி கிடந்தன.
கோடிக்கணக்கில்! இந்த பகட்டு செய்ற்கை வெளிச்சம் அவைகளை மறைத்துவிட்டன இல்லையா?

 
At Friday, 06 October, 2006, சொல்வது...

மென்மையான வரிகளை கொண்ட நல்ல பதிவு...

 
At Friday, 06 October, 2006, சொல்வது...

//மாயவரம் போனால், அங்கிருக்கும் மொட்டை மாடிக்கு இருட்டியதும் போய் விடுவேன். நூறு வயதினை தாண்டிய தென்னை மரங்கள், மரம் செடி கொடிகளின் பச்சை வாசம், கும்மிருட்டு, எங்கோ ஒலிக்கும் வானொலியில் பழைய பாட்டு. அதுவும் காற்று அடிக்கும் பொழுது மட்டுமே விட்டு விட்டு பாடல் வரிகள் காதில் விழும்.//
ஊர் ஞாபகம் வந்துடுச்சுங்க. மற்றபடி பதிவு ரொம்ப அருமையாக இருக்குங்க.
நன்றி...

 
At Friday, 06 October, 2006, சொல்வது...

இருண்ட வானில் மதியும் நட்சத்திரங்களும் படுத்தும் பாடு எத்தனை கவிஞர்களை (இப்போது உங்களை) உசுப்பி விட்டிருக்கிறது ! ஆனால் நீங்கள் ஆரம்பித்த வைகறைப் போது இன்னும் சிறப்பானது.. உங்களுக்குச் சொந்தமானதில்லையா :)) குயில் கூவி துயில் எழுப்பும் அந்தநேரம் அத்தனை அழகாய் இருப்பதால் கண்ணன் கூட "my fovourite things" ஆக தேர்வு செய்துள்ளான்.

நடுக்கடலில் இரவைக் கழிப்பதும் மிக இனிமையாக இருக்கும். நான் பணிநிமித்தமாக இலட்சதீவுகள் பயணித்தபொழுது இயற்கையை அதன் தூய்மையோடு தரிசித்து இரசித்திருக்கிறேன்.

 
At Friday, 06 October, 2006, சொல்வது...

ஆப்பு அவர்களே. நன்றாக எழுதியிருக்கிறேன் என்றதற்கு நன்றி. பதிவுக்கு சம்மந்தமில்லாத லிங்கு அனுப்புயுள்ளீர்கள். அதனால் பிரசுரிக்கவில்லை. மன்னிக்கவும்.

 
At Friday, 06 October, 2006, சொல்வது...

மாயூரம் சரவணன், ஊர் நினைவு வந்துவிட்டதா? இப்பொழுது எங்கு வாசம்? மாயவரத்துல எங்கே?

மணியன், நல்லவேளையாய் நான் நட்சத்திரங்களைப் பார்த்து கவிதை எழுதவில்லை :-), நீங்க எழுதியதைப் பார்த்ததும் பூங்குழலி
நினைவு வருகிறது. பொன்னியின் செல்வனில் படகு ஓட்டிக்கொண்டு போவாளே! தலைக்கு மேல் ஆயிரக்கணக்கான
நட்சத்திரங்களைப் பார்த்து பொன்னியின் செல்வன் பிரமிப்பானே!
க்ரூயீஸ் கப்பலில் போக வேண்டும் என்று திட்டம் உண்டு. பார்க்கலாம் ;-)

 
At Friday, 06 October, 2006, சொல்வது...

நல்ல ரசனையோடு பதிவை எழுதியிருக்கீங்க..... வாசிப்பதற்கு இனிமையாக இருந்தது.

 
At Friday, 06 October, 2006, சொல்வது...

உங்க எழுத்து ராமகிருஷ்ணனுடையது போல உள்ளது :) நல்ல ரசனை உங்களுக்கு! கீழ "தோழியர் வலைப்பதிவு"னா என்னனு புரியலியே :(

 
At Friday, 06 October, 2006, சொல்வது...

இது போன்று வெளிச்சமில்லாத இருட்டினையும், வெள்ளையற்ற கறுப்பு நிறங்களையும் காதலிக்கும் சில பேர்களில் நானும் ஒருவன்!

 
At Friday, 06 October, 2006, சொல்வது...

//ஒரு சந்தேகம் அது என்ன பெண்கள் வாழ்க்கை :-) பொதுவா வாழ்கை நல்லா போகும் என்று சொல்லக்கூடாதா :-))))//

உஷா அவர்களே, அங்கே அலுவலகத்தில் ஆண்கள் படும் அவமானங்களின் தன்மைகள் அறியாது பெண்கள் ஆனந்தமாக இருப்பார்கள். அந்த வைகையில் தான் நான் சொன்னது.

நான் இருந்தது Ruwais, Liwa விலிருந்து 100 கி.மீ செல்ல வேண்டும்

 
At Friday, 06 October, 2006, சொல்வது...

தேவ் நன்றீ

கொடி, ராமகிருஷ்ணாவைப்போலவா? சரி சரி :-)))
தோழியர் கூட்டு வலைப்பதிவு என்பது சில தோழிகளால் நடத்தப்பட்டது. இப்பொழுது எல்லாரும்தனிக்குடித்தனம்.

வெ.நா! நிறைய பேர்கள் இது என்ன ரசனை என்று கேட்டு இருக்கிறார்கள். மேனநிலை என்பது மொட்டை மாடியில்
இருட்டு வானைப் பார்த்திருப்பது. எங்கம்மாவுக்கு இப்படி இருப்பது ரொம்ப பிடிக்கும்.

 
At Saturday, 07 October, 2006, சொல்வது...

Dear Usha
Mayavaram ( now Mayiladuthurai??) is my native place, but i hv visited it barely once or twice. U hv brought Mayavaram right in front of the readers with yr literacy prowess. Nalla vaarthai prayogam. Welldone, keep it up
Sridhar(latha)

 
At Saturday, 07 October, 2006, சொல்வது...

மேடம்,

அற்புதமான நடையிலே அழகான அனுபவம் எழுதிருக்கீங்க.... ரொம்ப நல்லா இருக்கு...!!!

 
At Saturday, 07 October, 2006, சொல்வது...

ரொம்ப இயல்பா அருமையா எழுதி இருக்கீங்க உஷா!
ஷைலஜா

 
At Saturday, 07 October, 2006, சொல்வது...

//ஏனோ இத்தகைய இருட்டுகளில் வாய் ஊமையாகி விடுகிறது. சில் வண்டுகளின் ரீங்காரமும், பெயர் தெரியாத பூச்சிகளின் சத்தமும், காற்றில் அசையும் இலைகளின் ஓலியும் அப்படியே இருந்து விடலாம் என்று இருக்கும்//

ரொம்ப அருமையா அழகா சொல்லுயிருக்கீங்க...

//இந்த சோடியம் வேப்பர் விளக்கு வந்ததுமே, இருட்டின் அழகே போய்விட்டது. வானின் நட்சத்திரங்கள் கண்ணில் விழுவதேயில்லை. //

உண்மை உஷா ...

மங்கை

 
At Sunday, 08 October, 2006, சொல்வது...

ஸ்ரீதர் சார், ராம், மங்கை, ஷைலஜா, பாராட்டுக்கு நன்றி.

கால்கரி சிவா சார்! மீண்டும் ஒரு சந்தேகம். ஆண்கள் அலுவலகத்தில் நாளும் அவமானப்பட்டு கூனி குறுகி பொருளாக்காக வாழ்க்கையை நடத்த, ஏதும் அறியாத கூ முட்டைகளாய் பெண்கள் வீட்டில் ஆடிபாடிக் கொண்டு வாழ்க்கையை அனுபவித்துக்
கொண்டு இருக்கிறார்களா? அல்லது தங்கள் துயரத்தை வெளியே சொல்லாமல் ஆண்கள், பெண்களாவது சந்தோஷமாய் இருக்கட்டும் என்று இருக்கிறார்களா? புரியலைங்க :-)

 
At Sunday, 08 October, 2006, சொல்வது...

நான் இரவின் காதலன் உஷா. ஆனால் இருட்டின் காதலன் இல்லை. ஏன் என்று தெரியவில்லை. :-)

நிலவையும் விண்மீன்களையும் பார்க்க மிகவும் பிடிக்கும். ஆனால் வெறும் இருட்டைப் பார்க்கப் பிடிப்பதில்லை.

 
At Sunday, 08 October, 2006, சொல்வது...

குமரன் அதே அதே! கும்மிருட்டில் பயணங்களும், இரவு நேர கடற்கரையும் .. இன்னப்பிற இருள் பிடித்தளவு நான்கு சுவருக்குள் இருக்கும்பொழுது இருட்டு பிடிப்பதில்லை/ பயத்தையும் தருகின்றன.

 
At Sunday, 08 October, 2006, சொல்வது...

முந்தியே படிச்சமாதிரி இருக்கேன்னு நினைச்சுக்கிட்டே படிச்சு,முடிக்கும்போது தெரிஞ்சிருச்சு.

முந்தி எதாவது சொன்னேனா? அப்படி இருந்தா அதுவே தான் இதுக்கும்:-)

 
At Tuesday, 10 October, 2006, சொல்வது...

துளசி முந்தி சொல்லைலை, இப்ப சொல்லிட்டீங்க நன்றி :-)

 

Post a Comment

<< இல்லம்