Wednesday, December 06, 2006

அமீரகம்- ஓராயிரம் கதைகளில் மூன்று

நான் இருக்கும் ஊரின் விமானநிலயம் மிக சிறியது. ஒருமுறை சென்னைக்குப் பயணிக்க காத்திருந்தபொழுது, அதே நேரம் கொழும்பு செல்லும் விமானம் வந்தது. 99.9 % சதவீதம் பணிப்பெண்கள். இந்த ஊரிலேயே இவ்வளவு மெயிடுகளா என்ற வியப்பு, அருகில் அமர்ந்திருந்தவரிடம் வார்த்தைகளாய் கொட்டும்பொழுது, "எல்லாம் சிறு வயசு. அபார்ஷன் செய்ய ஊருக்கு போறாங்க. இங்க சட்டப்படி தவறில்லையா?" என்ற வரிகள், நடப்பவைகளை அதிகப்படி பேசுவது நம்மவர்களுக்கு சாதாரணம் என்றாலும் செய்தி சொன்ன அதிர்ச்சியை பத்திரிக்கைகளில் அவ்வப்பொழுது வந்துக் கொண்டிருக்கும், மெயிட்டுகள் மீதான வன்கொடுமைகளைப் பற்றிய செய்திகள் ஊர்ஜிதமாக்குகின்றன. அதுமட்டுமல்லாமல் தனிமையின் கொடுமையை சமாளிக்க துணையைத் தேடுவதும், சிரித்துப்பேசும் தன் ஊர் காரர்
என்று நம்பி வலையில் வீழ்வதும், செய்வது என்னவென்று நன்கு தெரிந்தே செய்வதும் காரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம் இல்லையா?

இங்கு கதை என்று சொல்லக்காரணம், அனைத்துமே பிறர் சொல்ல கேட்டது, அதில் சில மசாலாக்கள் சேர்த்திருக்கலாம்.

உமா திருச்சூரை சேர்ந்தவர். அவருடன் ஷாப்பிங் காப்பிளக்சை வலம் வரும் வந்துக் கொண்டிருந்தப்போது, எங்களை தாண்டி சென்றது கருப்பு புர்க்கா அணிந்த பெண்கள் கூட்டம். தோரணையைப் பார்க்கும்போதே, பெரிய ஷேக் குடும்பம் என்றும் தெரிந்தது. அதில் இருந்து
ஒரு பெண் வேகமாய் வந்து, உமாவுடன் சில வார்த்தைகள் மலையாளத்தில் கதைத்துவிட்டுப் போனார்.

"கோடிஸ்வர ஷேக்கு மனைவிக்கு ஆயாமாதிரி இந்தம்மா. அந்த பொம்பளைங்க மாதாமாதம் நகை வாங்குபோது, இவரையும் ஏதாவது வாங்கிக் கொள்ளும்படி சொல்வாங்களாம். இங்க வந்து பதினஞ்சு, இருபது வருஷம் ஆச்சு. ஐநூறு பவுனு நகை, ஊர்ல வீடு, நிலம்னு நல்லா சேர்த்துட்டாங்க. ஆனா பாவம், இதெல்லாம் ஊர்ல சொன்னா யாரும் நம்ப மாட்டேங்கீராங்க. பாவம் இந்தம்மா, தப்பான முறையி சம்பாதித்த காசு என்று சொந்தக்காரங்களே பேசுராங்கன்னு வருத்தம் அவுங்களுக்கு"- கிடைத்தாள் என் நாயகி.

என் வீட்டில் சில வருடங்கள் வேலை செய்த, சொந்த மக்களாலும், கணவனாலும் வஞ்சிக்கப்பட்ட சோமா என்ற ஐம்பது வயதைக் கடந்த பெண்ணின் துயரக்கதை, திருமணமே வேண்டாம் என்று அதே சமயம் ஒழுக்கம் தவறாமல், ஊரில் நிலம், வீடு வாங்கி, சொந்த சகோதரிகள் உதவியுடன் வாழ்க்கையை சரியாய் திட்டமிட்ட காந்தி என்ற பெண், சிங்கள பெண்களை வேலைக்கு அமர்த்தும் ஏஜன்சி நடத்தும் பெண் போன்றோர் மற்றும் அவ்வப்பொழுது பத்திரிக்கையில் வரும் செய்திகள்.

வேலை வாங்கித் தருவதாய் அமீரகத்திற்கு அழைத்து வந்து தவறான பாதையில்
வலுக்கட்டாயமாய் நுழைத்தவளிடமிருந்து வந்து சேர்ந்த நாளே, ஷார்ஜாவில் தப்பித்த பெண், தன்னிடம் வந்த நல்ல மனம் படைத்தவர் உதவியுடன் இந்திய தூதரகத்தில் அடைக்கலம் ஆனவள், கிழவனை மணந்து, பிள்ளைகளையும் பெற்று, கடைசியில் கணவனை கொன்றுவிட்டாள் என்ற பழியை ஏற்று, பல நல்ல உள்ளங்களின் உதவியுடன் ஜெயில் வாசத்தில் இருந்து தப்பித்து தன் நாடு போய் சேர்ந்தவளின் பரிதாபக்கதை போன்று பல உண்மையான சம்பவங்கள், செய்திகள். அனைத்தில் இருந்து மூன்று பெண்களின் உண்மை சம்பவங்களை எடுத்து, கதைக்கு என்று சிலவற்றை சேர்த்தும் நல்ல முடிவு என்று கொஞ்சம் நாடக தன்மையுடன்
(வேறு வழியில்லாமல்) நாவல் ஆக்கியதுதான் "கரையைத் தேடும் ஓடங்கள்".

கலைமகள் தரப்போகும் பரிசு தொகையான ரூபாய் இருபத்தி ஐந்தாயிரம் முழுவதையும் என் சொந்த உபயோகத்திற்குப் பயன்படுத்தப்போவதில்லை என்பதே நான் இவர்களுக்கு தரும் பதில் மரியாதையாய்நினைக்கிறேன்.

19 பின்னூட்டங்கள்:

At Wednesday, 06 December, 2006, சொல்வது...

வாழ்த்துக்கள்...

 
At Wednesday, 06 December, 2006, சொல்வது...

//கலைமகள் தரப்போகும் பரிசு தொகையான ரூபாய் இருபத்தி ஐந்தாயிரம் முழுவதையும் என் சொந்த உபயோகத்திற்குப் பயன்படுத்தப்போவதில்லை என்பதே நான் இவர்களுக்கு தரும் பதில் மரியாதையாய்நினைக்கிறேன்.//

அவர்கள் பரிதாபநிலையை பெரும்பாலோருக்கு எட்டவைத்ததே பெரும் சேவைதான். உங்கள் மனிதாபமான செயலுக்கு தலை வணங்குகிறேன். வாழ்த்துக்கள்!

 
At Thursday, 07 December, 2006, சொல்வது...

இந்தப் பரிதாபக் கதைகள் பற்றி நிறையவே கேள்விப்பட்டிருக்கிறேன், உங்கள் எழுத்து இந்தப் பிரச்சனையைக் காட்டி பரிகாரமாகச் செய்யும் உதவி சிறிதாயினும் ஞாலத்தில் சாலப் பெரிது.

 
At Thursday, 07 December, 2006, சொல்வது...

வாழ்த்துக்கு நன்றி.

மணியன், கானாபிரபா! இந்தியாவில் இருந்து, தமிழகத்தில் இருந்து வீட்டு வேலை செய்ய வரும் பெண்கள் மிகக்குறைவு. ஆனால் இலங்கை, பங்களாதேஷ் மற்றும் இந்தோனேஷியாவில் இருந்து வரும் பெண்களே அதிகம். இலங்கையை சேர்ந்த சிங்களப்பெண்கள் பெரும்பாலும் நன்றாக தமிழ் பேசுவார்கள். அது எப்படி? நான் குறிப்பிட்ட வயதான பெண்மணி, இங்கிருக்கும் சிங்கள பெண்களுக்கு தலைவி மாதிரி. எங்கு பிரச்சனை என்றாலும் ஓடி சென்று உதவுவார். இப்பொழுது எங்கு இருக்கிறாரோ?

 
At Thursday, 07 December, 2006, சொல்வது...

உஷா,

மறுபடியும் வாழ்த்துக்கள்.
துபாயிலும் இந்த மாதிரி பார்த்ததுண்டு.
மகன் வீட்டு மெயிடும் சிங்களப் பெண்தான்.
முகத்தில் சிரிப்பே பார்க்கமுடியாது.
அதுவும் நவம்பர் மாதம் அவர்கள் விசா ரெயிடுக்குப் பயந்து வீடு வீடாகப் போய் ஒளிவது பார்க்கக் கஷ்டமாக இருக்கும்.
ஊருக்குப் போனதும் உங்க
நாவலைப் படிக்கிறேன்.

 
At Friday, 08 December, 2006, சொல்வது...

வல்லி,
இத்தகைய வீட்டு வேலைப்பணிக்கு வரும் பெண்கள், தங்கள் ஸ்பான்சர் அல்லாமல் மற்ற வீடுகளில்
வேலை செய்வது சட்டப்படி குற்றம். ஆனால் பெரும்பாலும் அனைத்து பெண்களும் அஞ்சி அஞ்சி பிற
வீடுகளில் வேலை செய்து நாலு காசு பார்க்கிறார்கள். இவர்களின் கதையைப் பேச ஆரம்பித்தால் போய் கொண்டே இருக்கும். ஹூம், வயிற்று பிழைப்பு, பரிதாபத்தின் உச்சத்தில் வாழ்கிறார்கள்.

இவர்களும் லேபர்ஸ்களுக்கும் ஹார்ட் அட்டாக் சகஜம். சரியான சாப்பாடு இல்லாமை, ஓய்வு இல்லாமல் அதீத உழைப்பு, பல வித வியாதிகள், அதற்கு தகுந்த சிகிச்சை செய்துக் கொள்ளாமை, ஊரில் சொந்த
பந்தங்களால் உருவாகும் பிரச்சனைகள் அதனால் தற்கொலைகளும் அதிகம்.
ஹார்ட் அட்டாக்குகளும், தற்கொலைகளும் என் காதில் விழுந்ததே ஏழு எட்டு இருக்கும் :-(

 
At Friday, 08 December, 2006, சொல்வது...

//At 3:56 AM, ramachandranusha சொல்வது...
ஆனால் இலங்கை, பங்களாதேஷ் மற்றும் இந்தோனேஷியாவில் இருந்து வரும் பெண்களே அதிகம். இலங்கையை சேர்ந்த சிங்களப்பெண்கள் பெரும்பாலும் நன்றாக தமிழ் பேசுவார்கள். அது எப்படி? //

வணக்கம் உஷா

பொதுவாக வடக்கு கிழக்கு பிரதேசங்கள் தவிர்ந்த பிற பிரதேசமான இலங்கையின் மலையகம் என்று அழைக்கப்படும் பிரதேச வாழ் தமிழ்ப் பெண்கள் தான் தான் ஆரம்பத்திலும் இன்றும் அதிகம் இப்படி வளைகுடா நாடுகளுக்குப் பணிப்பெண்களாகப் போகின்றார்கள். மலையகம் மேல் மாகாணம் வாழ் மக்களோடு சிங்கள மக்களின் தொடர்பாடலும் இருப்பது தான் ஒரு காரணம். அதே போல் அந்தப் பிரதேசங்களில் இருந்து வரும் சிங்களப் பெண்மணிகளும் தமிழை ஓரளவு புரிந்திருப்பார்கள். 2 வருஷத்துக்கு முன் கட்டாரில் ஒரு ஆங்கிலச் செய்தி ஊடகத்தில் பணிபுரியும் அன்பர் ஒருவருடன் இந்தப் பணிப்பெண்களின் நிலை தொடர்பில் ஒரு தொலைபேசி உரையாடலை எம் வானொலிக்காகச் செய்திருந்தேன்.

 
At Friday, 08 December, 2006, சொல்வது...

//கலைமகள் தரப்போகும் பரிசு தொகையான ரூபாய் இருபத்தி ஐந்தாயிரம் முழுவதையும் என் சொந்த உபயோகத்திற்குப் பயன்படுத்தப்போவதில்லை என்பதே நான் இவர்களுக்கு தரும் பதில் மரியாதையாய்நினைக்கிறேன்.//

அப்ப எங்களுக்குத்தான் ட்ரீட்டா?!!

சும்மா விளையாட்டுக்கு கேட்டேன். மீண்டும் வாழ்த்துக்கள் உஷாக்கா.

 
At Friday, 08 December, 2006, சொல்வது...

//கலைமகள் தரப்போகும் பரிசு தொகையான ரூபாய் இருபத்தி ஐந்தாயிரம் முழுவதையும் என் சொந்த உபயோகத்திற்குப் பயன்படுத்தப்போவதில்லை என்பதே நான் இவர்களுக்கு தரும் பதில் மரியாதையாய்நினைக்கிறேன்//

That's very thoughtful!

 
At Saturday, 09 December, 2006, சொல்வது...

கானாபிரபா,
இலங்கையைச் சேர்ந்த பெண்கள் என்றாலும் பெருமளவு சிங்களத்தவர்களே வேலைக்கு வருகிறார்கள்.
விரிவான விளக்கத்துக்கு நன்றி.

கொத்ஸ், கல்பனாபரி, வருகைக்கு நன்றி

 
At Saturday, 09 December, 2006, சொல்வது...

இது போன்ற வேலைக்காரிகளின் சங்கிலி (Nanny's chain) என்று மூன்றூ தொடராக எழுதிய நினைவு. தேடி சுட்டி தருகிறேன். இது உலகளாவிய பிரச்சினை.

 
At Saturday, 09 December, 2006, சொல்வது...

கதைக்கு ஒரு Curtain raiser இங்கே

 
At Saturday, 09 December, 2006, சொல்வது...

அங்க அப்பிடியென்றால்,இங்கு கொஞ்சம் வேற மாதிரி.
சட்டம் இங்கு கடுமை அப்படியிருந்தும் மீறுபவர்கள்,தண்டனை பெருபவர்கள் என்று ஒரு கூட்டம் இருந்துகொண்டுதான் இருக்கிறது.
சமயம் வரும் போது எழுதுகிறேன்.

 
At Sunday, 10 December, 2006, சொல்வது...

பத்மா, அரபு நாடுகளில் திடீரென்று உயர்ந்த எண்ணை வருமானத்தால், இங்கு இருக்கும்வீட்டு வேலை செய்பவர்கள், மரபுசாரா பணியாளர்கள் மிக மிக அதிகம். வருவது சுலபம் என்பதால் நாளும் வந்து குவிகிறார்கள். இந்தளவு வேறு நாடுகளில் இருக்குமா என்பது சந்தேகமே

வடூவூர்குமார், நானும் சில காலங்கள் சிங்கையில் இருந்திருக்கிறேன். ஞாயிறு விடுமுறையில் செராங்கூன் தெரு, கோவில்வாசல்களில் குவிந்திருந்த தொழிலாளர்கள் கூட்டம் நினைவிருக்கிறது.
விசா முடிந்து தங்குபவர்கள், வாழ்வும், பிடிப்பட்டால் கிடைக்கும் கசையடிகளும்... அதே வார்த்தைகள்
வயிற்றுப்பாட்டிற்க்கு படும் அவலங்கள்.

சுரேஷ் விளம்பரத்துக்கு நன்றி

 
At Wednesday, 27 December, 2006, சொல்வது...

//"எல்லாம் சிறு வயசு. அபார்ஷன் செய்ய ஊருக்கு போறாங்க. இங்க சட்டப்படி தவறில்லையா?" என்ற வரிகள், நடப்பவைகளை அதிகப்படி பேசுவது நம்மவர்களுக்கு சாதாரணம் என்றாலும் செய்தி சொன்ன அதிர்ச்சியை பத்திரிக்கைகளில் அவ்வப்பொழுது வந்துக் கொண்டிருக்கும், மெயிட்டுகள் மீதான வன்கொடுமைகளைப் பற்றிய செய்திகள் ஊர்ஜிதமாக்குகின்றன.//

உஷா, படிக்க அதிர்ச்சியாக இருக்கிறது. அந்த நாட்டிலேயே வசிப்பதால் நீங்கள் இதுகுறித்த விவரம் அறிந்தவர் என்பதால் எனக்குத் தோன்றிய சில கேள்விகள்.

1. இவர்களைக் கர்ப்பிணியாக்குவது யார்? அவர்கள் வேலை செய்யும் இடத்து எஜமானர்களா, அல்லது அங்கே வேலை செய்யச் சென்றிருக்கும் பிறரா? இரண்டும் இருக்கும். எது அதிகபட்சம்? சொல்ல முடியுமா? எஜமானர்கள் மோசமானவர்கள் என்றால், அது தெரிந்தும் பெண்கள் ஏன் இப்படி மாட்டிக் கொள்கிறார்கள். அவர்களை அதிலிருந்து வெளியேறவிடாமல் தடுக்கிற சக்தி எது?

2. வளைகுடா நாடுகளின் மெய்டுகள் மீதான வன்கொடுமை பற்றி இதுவரை இணையத்தில் நம் தமிழ் நண்பர்கள் யாரேனும் எழுதியிருக்கிறார்களா. அவர்கள் எழுதி நான் படிக்காமல் தவறவிட்டிருக்கலாம். அதனால் யாரும் எழுதியிருந்தால் தயவுசெய்து அதற்கான சுட்டிகள் தந்து உதவ முடியுமா?

3. வன்கொடுமை பற்றி வருகிற செய்திகளைச் சொன்னீர்கள். குற்றவாளிகள் - அவர்கள் எவ்வளவு வசதி படைத்தவர்களாகவும், அந்நாட்டுக் குடிமகன்களாகவும் இருக்கிற சாத்தியம் இருக்குமானாலும் - அவர்களுக்கும் கடுமையான தண்டனைகள் தரப்படுமா?

4. தவறான பாதையில் இவர்களை நுழைப்பது யார்? அப்படி அந்தக் காரியத்தைச் செய்பவர்கள் வெளியிலிருந்து சென்றவர்களா, அங்கேயே இருப்பவர்களா? யாரைத் திருப்திபடுத்த இந்தக் கொடுமையான தொழிலைச் செய்கிறார்கள். சட்டம் அவர்கள்பால் என்ன நடவடிக்கை எடுக்கிறது.

5. அங்கிருக்கிற பணியாட்களின் நாடுகளைத் தேர்ந்த தூதரங்கள், இக்கொடுமைக்கு எதிராக என்னென்ன செய்து வருகின்றன. அவை போதுமா? இன்னும் செய்ய வேண்டியவை உள்ளனவா?

6. இந்த வன்கொடுமைக்கு எதிராக நம் இணைய நண்பர்கள் யாரும் அங்கே போராடுகிறார்களா, குரல் கொடுக்கிறார்களா.. அல்லது தங்களால் இயன்றதை அமைதியாகச் செய்கிறார்களா. இல்லையெனில் அவர்களைக் குற்றம் சொல்வது என் நோக்கம் இல்லை. ஆமெனில், அவர்களைக் கட்டாயம் பாராட்ட வேண்டும். அதற்காகத்தான் கேட்கிறேன்.

7. இத்தகைய வன்கொடுமைகள் பற்றிய புள்ளிவிவரங்கள் எங்கு கிடைக்கும். வருடத்திற்கு எத்தனை பெண்கள் அந்நாடுகளில் இப்படி பாதிக்கப்படுகிறார்கள், எத்தனை ஆண்கள் அதற்காக தண்டிக்கப்படுகிறார்கள், தண்டிக்கப்படுகிறவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள், சட்டம் எத்தனை பேர் விஷயத்தில் சரியாகச் செயல்பட்டிருக்கிறது போன்ற விவரங்களை நான் எங்கு பெற முடியும்?

இக்கேள்விகளுக்கு விடையளிக்கும் வண்ணம் விவரமாக எழுதினீர்கள் என்றால் மிகவும் நன்றியுடையவனாக இருப்பேன். எனக்கும் பல விஷயங்களை அறிந்த மாதிரி இருக்கும்.

அன்புடன்,
பி.கே.சிவகுமார்

 
At Wednesday, 27 December, 2006, சொல்வது...

பி. கே. எஸ்ஜி, இந்தியாவில் இருந்து பெண்மெயிட்டுகள் வேலைக்கு வருவது மிக குறைவு. காரணம் வேலைக்கான வயது வரம்பு முப்பது வயது. ஆனால் என் கதாநாயகி ஆரம்பக்கால கல்ப் வேலைக்காரி. அவளுக்கு வேலையிடத்தில் பிரச்சனை ஏதுவுமில்லை. நாவலில் இன்னொருத்தி வேலைக்கு என்று அழைத்து வந்து பிராஸ்ட்டூயுஷன் ராக்கெட்டில் சிக்கும் பெண் . மற்றவள் பணக்கார கிழஷேக்கை மணந்து அவன் இறப்புக்கு காரணம் என்று குற்றம் சாட்டப்பட்ட இளம் பெண்.
இவை எல்லாம் செய்தித்தாள்களில் வெளியான செய்திகளின் அடிப்படையில் எழுதப்பட்டவை.

சட்டங்கள் கடுமையானவை. யார் என்ன பார்க்காமல் பாய்கின்றன. எந்த நாட்டு குடி மகனானாலும் தண்டனை ஒன்றுதான்.இஸ்லாமிய சட்டமான ஷாரியா லா. வன் கொடுமை என்றால் மிக கடுமையான தண்டனை. அடுத்த முறை, பத்திரிக்கை செய்தியின் லிங்க் கண்ணில் பட்டால் அனுப்பி வைக்கிறேன்.

ஏன் வருகிறார்கள் என்றால் ஓரே பதில் வறுமை, போர் சிங்கள பெண்கள் மிக அதிகமாய் வருகிறார்கள். அந்தளவு. தமிழ் பேசும் இலங்கை பெண்கள் கண்ணில் விழுந்ததில்லை. காரணம்
எனக்கு தெரியவில்லை.

மிகப்பெரிய பிரச்சனை மொழி.தூதரகங்கள் ஓரளவு உதவுகின்றன.பில்ப்பைன்ஸ் தொழிலாளர்களிடம் மிகஅருமையான கூட்டுறவு உள்ளது.

யாராவது எழுதியிருக்கிறார்களா என்றால் தெரியவில்லை. புள்ளிவிவரங்கள் கேட்டு இருக்கிறீர்கள். அவை எல்லாம் கிடைக்குமா
என்று சந்தேகமாய் இருக்கிறது. ஆனால் இப்பொழுது பத்திரிக்கையில் இத்தகைய செய்திகள் வர ஆரம்பித்தது ஆரோக்கியமான முன்னெற்றம். கண்ணில் கண்டால் சொல்லுகிறேன்.

 
At Friday, 12 January, 2007, சொல்வது...

கதை என்பது பல கேட்ட, படித்த சமபவங்களை கற்பனையுடன் கலந்து அமைக்கப்படும். ஆனால் இம்முறை 90% சதவீதம் கதையுடன்
ஒத்துப் போகும் உண்மை நடந்துள்ளது என்பது கொஞ்சம் விசித்திரமாய் உள்ளது. பார்க்க இன்றைய செய்தியையும், லிங்கையும் தந்துள்ளேன்.
என்னிடம் நாவலை படிக்க வாங்கி சென்றவ்ரகளின் அபிப்ராயத்தையும் சொன்னால் சந்தோஷப்படுவேன்.

http://gulfnews.com/nation/Police_and_The_Courts/10096554.html

Published: 13/01/2007 12:00 AM (UAE)

Woman who escaped prostitution repatriated
By Sunita Menon, Staff ReporterDubai: The Indian Consulate recently repatriated a woman from Kerala who had escaped from the clutches of pimps.

Consulate officials said the 36-year-old woman did not wish to take legal action against her perpetrators as she feared retribution from them against her family in India.

"Every night I used go to bed holding the photograph of my five-year-old son close to me," she told Gulf News.

She was found wandering the streets of Bur Dubai asking passersby to help her contact Sevanam, an Indian organisation.

"I had read about the organisation in one of the Malayalam tabloids," she said when she was found. She had come to the UAE to work as a nurse in a home.

She was promised a Dh1,500 salary. She was taken to a flat after she landed in Abu Dhabi.

The visa was provided to her by an agent who operates in her district in Kerala for Rs50,000 (Dh 4,414).

"There were other Indian women staying in the flat. I was told that I was to report to work the next day. But when that did not happen and I enquired about it. I was told that I can join after a week.

"One of the women staying there told me that I would be forced into prostitution and that I should escape," she said.

She said that an opportunity came her way when the 'madam' went out of the the flat.

"I picked up my handbag and ran. I had some money with me so I asked a taxi driver to take me to Sharjah. There I got in touch with a woman whose contact number was given to me by one of the women in the flat.

"It was there that I came across news about the Sevanam organisation. I was told that they are Dubai-based. So I decided to go and seek them out,"she said

 
At Friday, 12 January, 2007, சொல்வது...

கால்கரி சிவா, உங்களுக்கு பி.கே.எஸின் மெயில் ஐடி வேண்டும் என்றால் சொல்லுங்கள் அனுப்பி வைக்கிறேன். உங்கள் அமீரக
சோகக் கதைகள் அல்லது அரேபியர்களின் அட்டீழிய கதைகளை அவருக்கே அனுப்பி வையுங்கள். உங்கள் அனுபவங்கள் பொய் என்று சொல்லவில்லை, ஆனால் நீங்கள் சொல்வது எப்படி இருக்கிறது தெரியுமா?
நம் ஊரில் பிரபல உணவு கடை அதிபரின் தனிப்பட்ட விவகாரம் ஊரறிந்த ரகசியம். அதற்காக சென்னையில் இருக்கும் அனைத்து ஹோட்டல் முதலாளிகளும் தங்கள் ஊழியர்களின் வீட்டு பெண்களின் கையைப் பிடித்து இழுப்பார்கள் என்றால் நியாயமா ஐயா :-)

 
At Friday, 12 January, 2007, சொல்வது...

கால்கரி சிவா,
அமீரகத்தில் வெளி நாட்டு மக்கள் கூட்டம் மிக மிக அதிகம் இதில் நம் இந்திய மக்கள் தொகை
என்று தெரியும் அல்லவா? அப்படி இருக்க, அவர்களில் பெரும்பாலோர் தனியாய் இருப்பவர்கள். நீங்கள் எழுப்பிய கேள்விகள் விவாதத்துக்குறியவை என்றாலும் இப்பொழுது நான் இருக்கும் சூழ்நிலையில் என்னால் விவாதங்களில் ஈடுப்பட இயலாது. உங்கள் மெயில் ஐடி தந்தால் காரணத்தை சொல்கிறேன். பொதுவில் சொல்ல முடியாததற்கு வருந்துகிறேன்.புரிந்துக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.
இப்படிக்கு,
உஷா

 

Post a Comment

<< இல்லம்