Thursday, November 02, 2006

வானம் பார்க்கும் மூக்குகள்- இலவசம் போட்டிக்கு

இலவசம் என்ற வார்த்தை தரும் கிளுகிளுப்புக்கு இணையே இல்லை. ஆனால் இலவச இணைப்புகள் பொதுவாய் திராபையாகத்தான் இருக்கும். ஆனால் கொடுக்கும்பொழுது பளபளப்பாய் இருப்பதைப் பார்த்து மனம் மயங்கிதான் போகிறது. முன்பெல்லாம் சிட்டு கம்பனிகளில் சீட்டு சேர சொல்லி வரும் விளம்பரங்களில் இத்தகைய இலவசங்களின் படங்களே பிரதானமாய் இருக்கும். கவர்ச்சிகரமான பரிசு பொருட்கள் என்றுப் போட்டிருப்பார்கள்.

சுவர் விளம்பர்ங்களின் போஸ்டர்களில் " ஜெயமாலினி/ அனுராதாவின் கவர்ச்சிகரமான நடனங்கள்" என்று விளம்பரப்படுத்தியிருப்பார்கள். நானும் சில சாமி படங்களில் தேவ லோக சபை/ அரசர் சபை/ அரக்கர் சபையில் ஆடும் ஜெயமாலினி அல்லது அனுராதாவின் நடனங்களைப் பார்த்திருக்கிறேன். அதில் என்ன கவர்ச்சி என்றே புரியந்ததில்லை. தொப்பையும் தொந்தியுமாய் அவர்கள் ஆடுவதைப் பார்க்க பாவமாய் இருக்கும். ஆனால் விசில் தூள் கிளப்பும். ஆனால் இலவசமாய் தரப்படும் மகா லஷ்மி பொறித்த வெள்ளிகாசு, வாட்டர் பாட்டில், மில்க் குக்கரில் என்ன "கவர்ச்சி" இருக்கிறது என்று ஆழ்ந்து யோசித்து விடை கிடைக்காமல் அல்லுற்றிருக்கிறேன்.

ஒரு சமயம் மளிகை கடையில் சாமான் வாங்கும்பொழுது, ஒரு நடு வயது அம்மாள் பற்பசை கேட்டு வாங்கினார். அவர் வாங்கியது கோல்கேட் பேஸ்ட். கடைக்காரர் கொடுத்ததும், "இன்னாமோ ப்ரீன்னு ரேடியோல சொன்னாங்களே" என்று ஆரம்பித்தார். கடைக்காரர் பாக்கெட்டை வாங்கிப் பார்த்து, "ஒண்ணும் போடலையே" என்றார். "அப்ப பழைய சரக்காய் இருக்கும். புதுசுல இருக்கும் பாரு" என்று சொல்லும் பொழுது, ரேடியோ " கோல்கேட் டெண்டல் க்ரீம்" என்று பாட ஆரம்பித்தது. விளம்பரத்தின் முடிவில் "பெற்றடூவீர் ஒரு
பாதுகாப்பு வளையம்" என்றது வானொலி.

"ஆங், இத்ததான்யா சொன்னேன். பாதுகாப்பு வளையமாமே, அத்த குடு" என்றார் அந்த அம்மையார். அடுத்த கணம், அங்கு நின்றிருந்த அனைவரும் சிரிக்க ஆரம்பிக்க, அந்த அம்மாள் புரியாமல் முணுமுணுத்துக் கொண்டுப் போனார். பாவம், அவர் பேஸ்ட்
வாங்கியதற்கு இலவசமாய் "ஒரு பாதுகாப்பு வளையம்" கிடைக்கவில்லை.

ஆனால் உலகத்துலே நீங்க வேண்டாம் வேண்டாம் என்று ஓடினாலும் இலவசமாய் கிடைப்பது என்ன தெரியுமா? அதுதாங்க "அறிவுரை" கொஞ்சம் அறிவாளியாய் தன்னை தானே நினைத்துக் கொள்பவர்கள் நீங்கள் வேண்டாம் வேண்டாம் என்று ஓடினாலும் அறிவுரைகளால் உங்கள் காதுகளை நிரப்பி விடுவார்கள். ஆரம்பத்தில் சிலர் கொடுக்கும் ஏற்றமே இதற்கு காரணம். அதே போல கொஞ்சம் வயதானவர்கள், ஆன்மீக அறிவுரைகள் சொல்லி ஏறக்குறைய நீங்கள் கும்பிடும் கடவுள்களுக்கு இணையாய் தங்களையே நினைத்துக் கொள்ள ஆரம்பித்து விடுவார்கள்.

சாஸ்திரங்கள், சம்பிரதாயங்கள் என்று சொல்ல ஆரம்பித்து, ஆ வென்று வாயை திறந்துக் கொண்டு இரண்டு பேர் கேட்டுக் கொண்டும், சொல்லும் விஷயத்துக்கு சம்மந்தாய் அல்லது சம்மந்தமில்லாமலோ கேள்விகளையும் கேட்க ஆரம்பித்தால் அவர்கள் மூக்கு வானம் பார்க்க ஆரம்பிக்கும். டைட்டில் புரிகிறதா? அறிவுரை சொல்பவர்கள் அனைவருக்கும் லேசாய் முகம் மேல் நோக்கி இருக்கும், எதிராளியைப் பார்க்க வேண்டும் என்றால் கண்களை மட்டும் தாழ்த்திப் பார்பபர்கள். முகம் மேல் நோக்கி இருந்தால் அதில் இருக்கும் மூக்கும் வானம் பார்த்துக் கொண்டுதானே இருக்கும்?

ஒருமுறை சன் டீவியில் ஒரு தொடர். பிரபலமான எழுத்தாளர் எழுதிய கதை என்பதால் பார்க்க ஆரம்பித்தேன். ஒவ்வொரு எபிசோட்டிலும் நாயகன் விதவிதமாய் அறிவுரைகள் சொல்லுவார். ஒருமுறை ஒரு காரெக்டர், நான் போயிட்டு வரேங்க. உங்க அறிவுரை வேண்டும் என்பான் - இப்படி ஒரு கேனையன் கேட்பானா என்று நினைக்காதீர்கள், சத்தியமாய் சொல்லப்பட்ட வசனம்தான்.

காத்திருந்த நாயகன் ," நீ நீயாகவே இரு. எதற்கும் வளைந்துக் கொடுக்காதே" என்றான். அடுத்து, சில எபிசோடுகள் கழித்து, அதே கேரக்டர் வீட்டில் பிரச்சனை என்றதும், நம்ம ஆளு - " வீட்டு கொடுப்பதில் உள்ள சுகம் வேறு எதில் உள்ளது? விட்டுக் கொடுப்பதால் நீ இழக்க போவது எதுவும் இல்லை" என்பார். பிறகு என்ன என்கிறீர்களா? அதற்கு பிறகு அந்த சீரியலைப் பார்ப்பதை நிறுத்திவிட்டேன். எழுத்தாளர் யார் என்று கேட்டாலும் சொல்ல மாட்டேன்.

அறிவுரை சொல்வது என்பது அதிக கஷ்டமான விஷயம் இல்லை. முதலில் இரண்டொரு அபிமானிகளை தேற்றிவிட்டால் கூட்டம் சேர ஆரம்பிக்கும். பிரச்சனை இல்லாத வாழ்க்கை இல்லை, அதை ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும். உன்னை சுற்றிப்பார் இறைவன் எத்தனை இன்பங்களை வைத்துள்ளான், அதை பார்க்க தவறிவிட்டு, உன் சொந்த கவலைகளை நினைத்து அழாதே! உன்னைவிட கஷ்டபடுபவன் எவ்வளவு பேர்கள் என்று நினைத்து பார்- இவ்வளவுதாங்க, இப்படி பத்து பதினைந்தை மனப்பாடம் செய்து இந்த வரிகளையே மாற்றிப் போட்டு சொல்லிக் கொண்டேஇருக்கலாம்.

ஆனால் ஒண்ணுங்க, இப்படி இலவச அறிவுரைகளுக்கு அதிக மதிப்பு இல்லை. இதையே நீங்கள் ஒரு ஆனந்தாவாய் மாறி சொன்னால், சில்லரையும் தேறும்.

சுனாமி வந்த சமயம், பிரபல ஹைடெக் சாமியார், சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களைப் பார்த்து ஆறுதல் சொல்லிக் கொண்டே வந்தார். அப்பொழுது அவருடைய செல்போனில் ஒரு மேசேஜ் வந்ததாம். திரும்ப பெரும் அலை அங்கு அடிக்க வாய்ப்புண்டு என்று. உடனே பயந்து நடுங்கி அங்கிருந்து ஓடுவிட்டாராம். வண்டி வருவதற்குள் டென்ஷனில் அவர் கலங்கியதை பத்திரிக்கையில் விவரமாய் போட்டிருந்தார்கள். சாமியாருக்கு ஏன் செல்போன், அவரே ஏன் டென்ஷன் ஆனார் போன்ற கேள்விகளை எழுப்ப வேண்டாம்.

அறிவுரை சொல்வது மிக எளிது. ஆனால் கடைப்பிடிப்பது மிக கடினம். ராமகிருஷ்ணரிடம் மகன் அதிகம் இனிப்பு தின்கிறான் கொஞ்சம் அறிவுரை சொல்லுங்களேன் என்றுக் கேட்டுக் கொண்டாளாம் ஒரு தாய். நாளை வா என்று நாட்களை கடத்திக் கொண்டு இருந்தாராம் ராமகிருஷ்ணர். கடைசியில் பத்து நாட்களுக்கு பிறகு அந்த பிள்ளைக்கு இனிப்பு அதிகம் திங்காதே என்று அறிவுறுத்தினாராம். தாய் முழிக்க, நானே இவ்வளவு நாள் இனிப்பு தின்றுக் கொண்டு இருந்தேன், அப்படி இருக்க, நான் எப்படி அறிவுரை சொல்வது என்றாராம்.

இன்று கேள்வி - பதில் என்று பத்திரிக்கைகளில் பிரபலம் என்று பெயர் வாங்கியவர்கள் இஷ்டத்திற்கு இலவச அறிவுரை வழங்கிக் கொண்டு இருக்கிறார்கள். உங்களுக்கு என்றாவது நகைச்சுவையாய் எதாவது படிக்க வேண்டும் என்று தோன்றினால், இந்த இலவச
அறிவுரையைப் படியுங்கள். என்னத்தான் கேள்வியும் நானே பதிலும் நானே என்றாலும் அவ்வப்பொழுது ஈடு இணையற்ற தொண்டினைப் பாராட்டி வருபவைகளையும் அவர்களேவா எழுதிக் கொள்வார்கள்? இப்படி எழுதினால் பத்திரிக்கையில் கட்டாயம் போடுவார்கள்
என்ற எண்ணமாய் இருக்கலாம்.

17 பின்னூட்டங்கள்:

At Thursday, 02 November, 2006, சொல்வது...

//சுவர் விளம்பர்ங்களின் போஸ்டர்களில் " ஜெயமாலினி/ அனுராதாவின் கவர்ச்சிகரமான நடனங்கள்" என்று விளம்பரப்படுத்தியிருப்பார்கள். நானும் சில சாமி படங்களில் தேவ லோக சபை/ அரசர் சபை/ அரக்கர் சபையில் ஆடும் ஜெயமாலினி அல்லது அனுராதாவின் நடனங்களைப் பார்த்திருக்கிறேன். அதில் என்ன கவர்ச்சி என்றே புரியந்ததில்லை. தொப்பையும் தொந்தியுமாய் அவர்கள் ஆடுவதைப் பார்க்க பாவமாய் இருக்கும். ஆனால் விசில் தூள் கிளப்பும். ஆனால் இலவசமாய் தரப்படும் மகா லஷ்மி பொறித்த வெள்ளிகாசு, வாட்டர் பாட்டில், மில்க் குக்கரில் என்ன "கவர்ச்சி" இருக்கிறது என்று ஆழ்ந்து யோசித்து விடை கிடைக்காமல் அல்லுற்றிருக்கிறேன்.//

அதில் என்ன கவர்ச்சி என்று தெரிந்துகொள்ள நீங்கள் ஆணாக பிறந்திருக்க வேண்டும் :-)

வெற்றி பெற வாழ்த்துக்கள்!

நீங்க சொன்ன ஹைடெக் சாமியார் Living art தானே?

 
At Thursday, 02 November, 2006, சொல்வது...

அதிருஷ்டம், முதல் பரிசு வாங்கியதற்கு இப்படி ஒரு தண்டனை இருக்கிறதா :-)

 
At Thursday, 02 November, 2006, சொல்வது...

கோல்கேட் காமெடி அருமை.

 
At Thursday, 02 November, 2006, சொல்வது...

//அதிருஷ்டம், முதல் பரிசு வாங்கியதற்கு இப்படி ஒரு தண்டனை இருக்கிறதா :-)//

:-)))

ம்ம்.... சுகமான சுமை!

அது சரி அக்கா... இன்னமும் போட்டிக்கு இந்த படைப்பை சேர்க்கவில்லை மாதிரி இருக்கே? சீக்கிரமா சேத்துடுங்க....

 
At Thursday, 02 November, 2006, சொல்வது...

கோல்கேட் பாதுகாப்புவளையம் மாதிரி
கொலஸ்ட்ரால் ஃப்ரீன்னு விளம்பரப்படுத்தப்பட்ட ஒரு எண்ணைய வாங்க வந்த அம்மா,இலவசக் கொழுப்பை வாங்காம வீடு போகமாட்டேன்னு அடம் புடிச்சது நினைவுக்கு வருது.

போட்டிக்கான படைப்புகளில் நகைச்சுவை என்னும் களத்தை இங்கே யாருமே தொடுவதில்லை.உங்களுடைய புதுமையான முயற்சிக்கு பாராட்டுகளும்,வாழ்த்துகளும்.

கட்டுரைக்கும் தலைப்புக்கும் என்ன சம்பந்தம்னு கேளுன்னு என்னோட மனசாட்சி கூவிக்கிட்டே இருக்கு, உஷாஜீ. பதில் கிடைக்குமா???

 
At Thursday, 02 November, 2006, சொல்வது...

இலவசமான அறிவுரைகள் வழங்குபவர்களைப் பற்றி கவனமாக இருக்க இலவசமாக அறிவுரை வழங்கியிருக்கிறீர்கள் ;))

//நானும் சில சாமி படங்களில் தேவ லோக சபை/ அரசர் சபை/ அரக்கர் சபையில் ஆடும் ஜெயமாலினி அல்லது அனுராதாவின் நடனங்களைப் பார்த்திருக்கிறேன்//
நீங்கள் சாமிபடம் மட்டும்தான் பார்ப்பதுண்டோ ? கிளப் டான்ஸ்கள் 60/70 படங்களில் பார்த்ததில்லையா ? இரண்டாவதாக அவை இலவசம் இல்லை, காசு கொடுப்பதே அதற்குத் தான். சாமிகதை வேண்டுமானால் இலவசம்.

தமிழோவியத்தில் மீண்டும் வலம் வர வாழ்த்துக்கள்!!

 
At Thursday, 02 November, 2006, சொல்வது...

அதிருஷ்டம், நான் ஜெயமாலினி வகையறா கவர்ச்சியைப் பற்றி கேள்வி எதுவும் கேட்கவில்லை. அதுக்கு ஆணாக பிறக்காமலே
புரியும். ஆனால் அதே கவர்ச்சி என்ற பதம், சாமி பட டாலருக்கும், வாட்டர் பாட்டிலுக்கு ஏன் பிரயோகப்பட்டது என்று பத்துவயதில் புரியவில்லை :-)
அப்புறம் இவரா அவரா என்று கேள்வி கேட்க கூடாது

அருண்மொழி நன்றி

சுதர்சன், அதுதான் அறிவுரை வழங்குபவர்கள் முகம் லேசாய் வானத்தைப் பார்த்து இருக்கும், ஆக மூக்கும் வானம் பார்க்கும்
என்று குறிப்பிட்டுள்ளேனே!

மணியன், ஆக நானும் அறிவுரை வழங்குகிறேன் என்கிறீர்களா? என்னுடைய ஒரு நல்ல குணம் யாருக்கும் அறிவுரை சொல்ல மாட்டேன். கெட்ட குணம் யார் அறிவுரையும் கேட்க மாட்டேன் :-)
சின்ன வயதில் பாட்டியுடன் நிறைய சாமி சினிமா பார்த்திருக்கிறேன். அதன் காரணமாய்தான் நாத்திகவாதி ஆகிவிட்டேனோ என்று சம்சயம் :-))

 
At Thursday, 02 November, 2006, சொல்வது...

அருமையான டைட்டில் உஷா.
உங்க நகைச்சுவை உணர்வுக்கு அளவே இல்லைதான்.

/// சாமியாருக்கு ஏன் செல்போன், அவரே ஏன் டென்ஷன் ஆனார் போன்ற கேள்விகளை எழுப்ப வேண்டாம்.///

உஷா பஞ்ச் இது
உங்களைத் தவிர யாராவது இப்படி கேட்க முடியுமா என்ன

 
At Thursday, 02 November, 2006, சொல்வது...

நம்மளைப் பத்தி ஏதோ சொல்லி இருக்கீங்க போல இருக்கே!

சிரித்துப் பழகு
நாளும் நீ
சிரித்துப் பழகு!

 
At Thursday, 02 November, 2006, சொல்வது...

வைசா, நன்றி

//உஷா பஞ்ச் இது//

மது,கொஞ்ச பேரூ கேட்டு பயனில்லை. அனைவரும் யோசிக்க வேண்டும். கடவுளுக்கும் உங்களுக்கும் நடுவில் ஏன் இந்த இடை தரகர்கள் என்று!

பித்து, நீரூ யாரூ என்ன என்று தெரியாமல், லிங்கை அனுமதித்துவிட்டேன். போய் பார்க்கவும் பயமாய் இருக்கு :-(((

 
At Thursday, 02 November, 2006, சொல்வது...

:)

//பித்து, நீரூ யாரூ என்ன என்று தெரியாமல், லிங்கை அனுமதித்துவிட்டேன்//

பிதற்றுபவன்தானே பின்னாளில் பித்தனாக முடியும்.

நான் நானேதான்

 
At Friday, 03 November, 2006, சொல்வது...

---பாதுகாப்பு வளையமாமே, அத்த குடு---

: )))

---நீ நீயாகவே இரு. எதற்கும் வளைந்துக் கொடுக்காதே
விட்டு கொடுப்பதில் உள்ள சுகம் வேறு எதில் உள்ளது---

பழமொழி, quotable quotes, திருக்குறள், மேற்கோள் என்று பலதுக்கும் இதை நீட்டிக்கலாம்.

சிதறலாக வந்திருக்கிறது. சிரிப்பை விட சிந்தனையை உசுப்புகிறது.

 
At Friday, 03 November, 2006, சொல்வது...

//Boston Bala
said...

பழமொழி, quotable quotes, திருக்குறள், மேற்கோள் என்று பலதுக்கும் இதை நீட்டிக்கலாம்.//


Boston Bala போன்றவர்களையே அறிவுரைகளையும் அறவுரைகளையும் குழப்பிக்கொள்ள வைத்து விட்டது உங்கள் பதிவு.

அது சரி நான் ஏதாவது சொல்லி அதுவும் அறிவுரை என்றாகிவிடப்போகிறது.

நீங்கள் கூறும் அந்த தொலைக்காட்சி அறிவுரைக்கு 'உடைய' எழுத்தாளார் அவர் தான் என்று நினைக்கிறேன்.
அப்படியாயின் ஒன்றே ஒன்று சொல்ல விழைக்கிறேன்.
இள வயது ஆட வைக்கும்.
நடு வயது ஆட்டிவைக்க நினைக்கும்
முது வயது ஆண்டவனை நினைக்கும். ஒரு எழுத்தாளன் என்ன சொல்ல வேண்டும் என்பதை அவனது வயதும் அனுபவமும் சொல்கிறதே அன்றி படிப்பவரும் கேட்பவரும் அல்ல.

நன்றி.

ஆயினும் நல்லக்கருத்துகள்.

 
At Tuesday, 07 November, 2006, சொல்வது...

இலவசமா அறிவுரையாவது கெடைக்குதேனு சந்தோஷப்படாம, ஏங்க இப்படி?

சில பேரு உத்தமனா இல்லண்ணாலும் சொல்ற அறிவுரை ரொம்ப நல்லா பிரயோஜனமா இருக்கும்.

யாரோ ஜக்கி some தேவ் னு ஒருத்தர் - ரொம்ப அழகா அறிவுரை சொல்லுவார்.

//ஜெயமாலினி அனுராதா//

well, கவர்ச்சி is in the eye of the beholder. வேறென்ன சொல்ல.

 
At Wednesday, 08 November, 2006, சொல்வது...

பித்து அறிந்தேன், தெளிந்தேன்

பாபா,

அடடா :-)

தமிழி,ஆம் அறவுரை வேறு அறிவுரை வேறு. பிறகு அவர் அவரேதான் :-)

பேட் நியூஸ், ஆசைப்பட்டு கேட்கிறீங்க, பார்த்து தினத்து நாலு அறிவுரை மெயில வரப் போகுது. யாரோ ஜக்கி வாசுதேவா?
ஐயா, நீங்க எங்க இருக்கீங்க? தமிழ் நாட்டுல அவருக்கு தாங்க முதல் இடம், ஆனா உலக அளவில் ஸ்ரீ ஸ்ரீ யை பீட் அடிக்க முடியலை

 
At Wednesday, 08 November, 2006, சொல்வது...

//காத்திருந்த நாயகன் ," நீ நீயாகவே இரு. எதற்கும் வளைந்துக் கொடுக்காதே" என்றான். அடுத்து, சில எபிசோடுகள் கழித்து, அதே கேரக்டர் வீட்டில் பிரச்சனை என்றதும், நம்ம ஆளு - " வீட்டு கொடுப்பதில் உள்ள சுகம் வேறு எதில் உள்ளது? விட்டுக் கொடுப்பதால் நீ இழக்க போவது எதுவும் இல்லை" என்பார். //

பழைய எபிசோடுகளில் வந்த வசனத்தையெல்லாம் ஞாபகம் வைத்துக்கொண்டு சீரியல் பார்க்கக்கூடாது :))

கட்டுரை, போட்டியில் வெல்ல (இலவசமாய்) என் வாழ்த்துக்கள்!!!

 
At Thursday, 09 November, 2006, சொல்வது...

நடப்புகளை எதார்த்தமாக சொல்லியிருக்கிறீர்கள்.பாராட்டுக்கள்

 

Post a Comment

<< இல்லம்