Tuesday, November 07, 2006

மனிதரில் எத்தனை பிரிவுகள்?

ஜோவின் பதிவைப் பார்த்து சில நினைவலைகள்

இது மரத்தடியில் முன்பு எழுதியதுசில வருடங்களுக்கு முன்பு நாங்கள், அதாவது சில குடும்பங்கள் சென்னையில் இருந்து உ.பியில் ஒரு மூலை பவர்பிளாண்டுக்கு டெபுடேஷனில் அனுப்பப்பட்டோம். என் எதிர் வீட்டில் ஒரு ஆசாரமான கிறிஸ்துவ குடும்பம்.(பெந்தகோஸ்தே சபை என்ற தீவிர கிருஸ்தவத்தினரைப் பற்றி அப்பொழுதுதான் தெரிந்துக் கொண்டேன்) இதில் ஆசாரம் என்னவென்றால், பண்டிகை நாட்களில் கொடுக்கப்படும் பலகாரங்களை வாங்க மறுத்துவிட்டாள் அந்தவீட்டு குடும்பத்தலைவி. குழந்தைகளும் ஏதாவது கொடுத்தால், சாமிக்குப் படைத்தது இல்லையே என்றுக் கேட்டுவிட்டுதான் சாப்பிடும்.

இப்படி இருக்க, அவர்கள் ஞாயிற்றுக்கிழமை சர்ச்சுக்குப்போகும் பழக்கத்தால், அங்கு ஏதாவது சர்ச் இருக்கா என்று என்னைக் கேட்டாள். அந்த கும்பலில் ஹிந்தி தெரிந்த, அதாவது ஹிந்தி என்று நான் நினைத்துப் பேசுவதை அவர்கள் பிரமிப்புடன் பார்ப்பார்கள். ஆனால் ஹிந்திகாரர்கள், இது என்ன பாஷை என்று முழிப்பார்கள். அதிலும் அவளுக்கு நஹி என்ற ஒரு வார்த்தை மட்டும்தான் ஹிந்தியில் தெரியும். தென் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். நானும், அந்த அம்மாளும் அந்த சின்ன ஊரின் தெருவில் வலம் வந்தோம். பிறகு ஒரு பால்காரன் புண்ணியத்தில் ஒரு வீட்டில் பிராத்தனை செய்கிறார்கள் என்ற விஷயம் தெரிந்து ஞாயிற்றுக்கிழமை இந்தக் குடும்பமும் அங்கு போகத் தொடங்கியது.

இரண்டு வாரம் கழித்து, ஒருநாள் காலை நான் மெதுவாய் எட்டுமணிக்கு எழும்போது, அவளும் எழுந்து வருவதைப் பார்த்தேன்.

"என்னங்க! சர்ச்சுக்குப் போகலையா?" என்று விசாரித்தேன்.

அவள் முகத்தை சோகமாக்கிக்கொண்டு "இல்லைங்க! சரிபடலை" என்றாள்.

"ஓஹோ! உங்களுக்குள்ளே நிறைய பிரிவு இருக்கே, இது உங்களுடையது இல்லையா?" என்றேன்.

"இல்லைங்க!எங்குள்ளுதுதான். ஆனா..." என்று இழுத்து சிறிது கிசுகிசுப்பான குரலில்," அவுங்க, உங்கசாமி பாட்டும் பாடுராங்க" என்றாள்.

எனக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. ஆஹா! இதுவல்லவா மத நல்லிணக்கம். இந்தியாவின் எதிர்காலம் என் கண்ணில் ஒளிமயமாகத் தோன்றியது. சந்தோஷத்தைக் கஷ்டப்பட்டு அடக்கிக்கொண்டு, "இந்து சாமி மட்டுமா, இல்ல அல்லா, சீக்கிய பஜனும் உண்டா?"

"இல்லைங்க! உங்க சாமிமட்டும்தான்".

எனக்கு கொஞ்சம் குழப்பமாய் இருந்தது. அது எப்படி என்று கேட்டேன். அந்த அம்மாள்,"ஆமாங்க! ஈஸ்வர் ஈஸ்வர்'ன்னு உங்க லிங்கத்தப் பாடறாங்க! நாங்க இனி மேல போக மாட்டோம்" என்றாள்.

என்னால் சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்துவிட்டேன். "அம்மா! தாயே! இந்தில ஈஸ்வர்னா, கடவுள்னு அதாவது காட்னு அர்த்தம்" என்று எடுத்து சொன்னேன். ஆனால் அவளால் அதை ஒத்துக்கொள்ள முடியவில்லை. ஜீசஸ் என்று கண்ணை மூடிக்கொண்டு பிராத்தனையில் உருகும்போது, இவர்கள் ஈஸ்வர் என்றவுடன் மனக் கண்ணில் லிங்கம் அல்லவா வருகிறது.

இது எப்படி இருக்கு?


பிறகு இந்த அம்மாள், டிசம்பரில் சென்னைக்கு நாங்கள் போவதைப் பார்த்து தின காலண்டர் வாங்கி வர சொன்னார். அப்பொழுது நாங்கள் இருந்தது சென்னை லாசரஸ் சர்ச் ஏரியா. முழுக்க முழுக்க கிருஸ்தவர்கள் வாழும் இடம். ரொம்ப நல்லது செய்கிறேன் என்று நினைத்து, குழந்தை ஏசுவை கையில் தாங்கியிருக்கும் மேரி மாதா படம் இருக்கும் காலண்டரை தேடி பிடித்து வாங்கி
வந்து அவர் கையில் தந்ததும், அந்த அம்மாள் தேள் கொட்டியதைப் போல கையை உதறினார். இதெல்லாம் நாங்க வீட்டூல மாட்ட மாட்டோம் என்று நாற்காலியில் போட்டுவிட்டுப் போய் விட்டார். அப்புறம் என்ன மேரி மாதா, ஒரு வருடத்திற்கு எங்கள் வீட்டு சுவரில் அருள்
பாலித்துக் கொண்டு இருந்தார்.

அடுத்து கீழ் தளத்தில் புதியதாய் ஒரு கிருஸ்தவர் வந்துள்ளார் என்ற செய்தியை சொல்லி இவரை அவர் வீட்டுக்கு அழைத்துக் கொண்டு நானும், இன்னொரு தோழியும் போனேன். நாகர்கோவிலை சார்ந்த அவர் கத்தோலிக்கராம். இவரைப் பற்றி தெரிந்ததும், "உங்களை சொல்லவில்லை" என்று சொல்லிவிட்டு, பெந்தகோஸ்தே சபையினரால் ஊரில் எவ்வளவு சண்டை சச்சரவு என்று தாளித்துவிட்டார். முதல் முறையாய் ஒருவர் வீட்டுக்கு அழைத்து சென்றதற்க்கு கிடைத்த மரியாதையைப் பார்த்து உடன் சென்ற நானும், இன்னொருவரும் பேயரைந்தது போல ஆனோம்.

சாதி, அதன் உட்பிரிவுகள் என்று இந்துமதத்தில் ஆயிரம் வகைகளைக் கண்ட எனக்கு, இவர்கள் இந்த சண்டைகள் எங்கும் மனிதர்கள் ஒன்றே என்ற புரிதலை தந்தது. இதில் இன்னொரு விசேஷம் என்னவென்றால் உட்பிரிவுகளில் காட்டப்படும் துவேஷம், மற்றவர்களிடம்
காட்டுவதை விட பல்மடங்கு அதிகம். என்ன ஒன்று வெளியில் இருப்பவர்களுக்கு தெரியாது, புரியாது

பார்க்க ஜோவின் இந்த பதிவு

25 பின்னூட்டங்கள்:

At Tuesday, 07 November, 2006, சொல்வது...

ஜோவின் பதிவுக்கு லிங்க் கொடுத்தால் ஏற மறுக்கிறது. இதோ அந்த லிங்க்
http://cdjm.blogspot.com/2006/11/blog-post.html

 
At Tuesday, 07 November, 2006, சொல்வது...

எந்த மதத்தைச் சார்ந்தவர்களாயினும் மனிதர்கள் மனிதர்கள்தானே உஷா..

இதில் கிறிஸ்த்துவர்கள் விதிவிலக்கா என்ன?

தேவையில்லாத, காலங்கடந்துபோன சடங்கு சம்பிரதாயங்களை அப்படியே பிடித்துக்கொண்டு மனித மனங்களை புரிந்துக்கொள்ளாமல் பேருக்கு கடவுளை வழிபட்டுக்கொண்டு இருப்பவர்களுள் கிறிஸ்த்துவர்களும் நிறையவே இருக்கிறார்கள்..

 
At Tuesday, 07 November, 2006, சொல்வது...

மனிதர்கள் எல்லாருமே ஒண்ணுதான்னு இப்ப நல்லாப் புரிஞ்சுருச்சு:-)

 
At Tuesday, 07 November, 2006, சொல்வது...

//சாதி, அதன் உட்பிரிவுகள் என்று இந்துமதத்தில் ஆயிரம் வகைகளைக் கண்ட எனக்கு, இவர்கள் இந்த சண்டைகள் எங்கும் மனிதர்கள் ஒன்றே என்ற புரிதலை தந்தது.//

//மனிதர்கள் எல்லாருமே ஒண்ணுதான்னு இப்ப நல்லாப் புரிஞ்சுருச்சு:-) //

ஆமா துவேசம் எல்லா மதத்திலும் இருக்குது, மனுசங்க எல்லோரும் ஒரே மாதிரிதான், அதனால சும்மா இந்து மதத்தில் சாதியிருக்கே, ஆனால் எப்போ பாரு இந்து மதத்தில் சாதியிருக்கே சாதியிருக்கேனு அலட்டிக்கிறாங்க ரொம்பத்தான், என்னங்க உஷா மற்றும் துளசியக்கா நான் சொன்னது சரிதானுங்களே...

என்ன எழவு பெந்தகோஸ்தே நாளைக்கே மனசு மாறினா கத்தோலிக்கரா மாறிடலாம், கத்தோலிக்கர் மனசு மாறினா ஏழாவது சர்சு, எட்டாவது சர்ச்சுனு மாறிக்கலாம், ஆனா மனசு மாறி மதம் மாறினாலும் எழவு பொறக்கும்போது ஒட்டிக்கிட்டு வந்த சாதி மட்டும் மாறாது ஆனா இதுக்கெல்லாம் அலட்டிக்க கூடாது மனுசங்க எல்லா இடத்திலேயும் ஒரே மாதிரிதான்னு எனக்கு புரிஞ்சிடுச்சி

எதுக்கு வம்பு நானும் போட்டுடறேன் :-)))))

நன்றி

 
At Tuesday, 07 November, 2006, சொல்வது...

///உட்பிரிவுகளில் காட்டப்படும் துவேஷம், மற்றவர்களிடம்
காட்டுவதை விட பல்மடங்கு அதிகம்//

ரொம்ப சரியா சொன்னீங்க. வேற்று மதத்தினரிடம் கூட சுமூகமாய் சென்றுவிடும் பலர் உட்பிரிவுகளில் மட்டும் பேதம் பாராட்டுகிறார்கள். இது எல்லா மத்திலும் பொருந்தி வருகிறது.

 
At Wednesday, 08 November, 2006, சொல்வது...

சமீபத்தில் எனக்கும் இது போல ஒரு அனுபவம் நடந்துச்சு..கிறிஸ்தவ உட்பிரிவை சேர்ந்த ஒரு பேராசிரியர் (?), என்னுடன் வந்த மற்றொரு கிருஸ்தவரை புறக்கணித்து என்னை தர்மசங்கடத்தில் ஆழ்த்திவிட்டார். அதுவும் கருத்தரங்கில் கலந்து கொள்ள வந்தவரை.. இது பற்றி பதிவு போடலாமா வேண்டாமானு யோசனையில இருந்தேன்.. இப்ப நீங்க போட்டுட்டீங்க.. நானும் போடறேன்

 
At Wednesday, 08 November, 2006, சொல்வது...

குழலி,
பிரிவினையும் துவேஷமும் எல்லா மனிதர்களிடமும் ஒன்று போலத்தான் இருக்கிறது என்பது நான் சொல்ல வந்தது. உட்பிரிவுகளிலும்
பிறருக்கு புரியாத தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் என்பது எல்லா இடங்களிலேயும் இருக்கிறது என்பதை மறுப்பீர்களா? ஆம் என்றால் நான் சொல்ல ஒன்றுமில்லை :-)

இது வருத்தமே தவிர இதுக்கெல்லாம் அலட்டிக்கக்கூடாது என்ற தொனி என் பதிவிலேயோ, துளசியின் பதிலிலேயோ எங்கும் என் ஊனக்கண்களுக்குப் படவில்லை.

 
At Wednesday, 08 November, 2006, சொல்வது...

ஜோசப் சார்! உலகம் இருக்கும் வரையில் அவனைவிட நான் உயர்ந்தவன் என்பதை நிரூபிக்க மனுஷ புத்தி எதையாவது சொல்லிக் கொண்டுதான் இருக்கும் இல்லையா :-)

துளசி, உழக்கில் கிழக்கு மேற்கு பார்க்கும் சமாச்சாரம்தான் இது :-)

 
At Wednesday, 08 November, 2006, சொல்வது...

ம்ம்ம்...ஜோசப் சாரின் கருத்திற்கு நான் வழிமொழிகிறேன்.

மனிதர்கள் எத்தனை ஒற்றுமை பாராட்டினாலும் பிரிவினைகள் இருந்து கொண்டேயிருக்கும். உலகமெல்லாம் ஒரே மதமாகிறது என்றே வைத்துக் கொள்வோம். அப்பொழுதும் பிரிவினைகள் இருக்கும். இதை மாற்றுவது என்பது முடியாது. எத்தனை மனங்களுண்டோ அத்தனை குணங்களுண்டு.

 
At Wednesday, 08 November, 2006, சொல்வது...

//இது வருத்தமே தவிர இதுக்கெல்லாம் அலட்டிக்கக்கூடாது என்ற தொனி என் பதிவிலேயோ, துளசியின் பதிலிலேயோ எங்கும் என் ஊனக்கண்களுக்குப் படவில்லை.
//
ஹி ஹி நான் என்ன செய்றது அதுக்கு, நானும் கூட நீங்க அப்படி சொன்னதா சொல்லலையே, நானே தானே சொன்னேன்

//சாதி, அதன் உட்பிரிவுகள் என்று இந்துமதத்தில் ஆயிரம் வகைகளைக் கண்ட எனக்கு, இவர்கள் இந்த சண்டைகள் எங்கும் மனிதர்கள் ஒன்றே என்ற புரிதலை தந்தது.//
//குழலி,
பிரிவினையும் துவேஷமும் எல்லா மனிதர்களிடமும் ஒன்று போலத்தான் இருக்கிறது என்பது நான் சொல்ல வந்தது.//
அட விடுங்க இதில் என்ன இருக்கு அலட்டிக்க, இப்போ ஜெயலலிதாவும் கருணாநிதியும் ஒன்னுதான்னு பொதுமைபடுத்தி சொல்லும்போதே வளர்ப்புமகன் திருமணமும் கருணாநிதி குடும்பத்தின் திருமணம் ஒன்றாகிவிடுகிறதல்லவா? ஜெயலலிதாவின் ஊழலும், கருணாநிதியின் ஊழலும் ஒன்றாகிவிடுகிறதல்லவா? தர்மபுரி பஸ் எரிப்பும் கருணாநிதியின் அட யாராவது எடுத்து குடுங்கப்பா.... அதுமாதிரிதான் விட்டு தள்ளுங்க....

//உட்பிரிவுகளிலும்
பிறருக்கு புரியாத தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் என்பது எல்லா இடங்களிலேயும் இருக்கிறது என்பதை மறுப்பீர்களா? //
அட விடுங்க உட்பிரிவுகளிலேயே தாழ்ச்சி உயர்ச்சி இருக்கும்போது வேற்று சாதிகளுக்கிடையே இல்லாமலா இருக்கும், இதெல்லாம் மனித இயல்பு, என்னங்க சரிதானா?

சரி ஏன் சீரியஸ் ஆயிட்டிங்க? நான் தான் ஸ்மைலி போட்டிருந்தேனே கவனிக்கலையா? :-)))

 
At Wednesday, 08 November, 2006, சொல்வது...

//துளசி, உழக்கில் கிழக்கு மேற்கு பார்க்கும் சமாச்சாரம்தான் இது :-) //
அடடே நான் ஏதோ ஒரே கல்லுல ரெண்டுமாங்கா, வாழைப்பழத்தில ஊசி கதையோனு நினைச்சேன் :-)

 
At Wednesday, 08 November, 2006, சொல்வது...

சரிங்க யாரும் தூங்கி எந்திரிச்சி வர்றதுக்கு முன்னாடி நான் அப்பீட் ஆயிடறேன், வேறொரு நாள் சந்திப்போம்...

நன்றி

 
At Wednesday, 08 November, 2006, சொல்வது...

அனுசுயா, நீங்களாவது கரக்டா பாயிண்ட பிடிச்சீங்களே, இன்னும் ஒரு சம்பவம்- ஓரே மதம், ஓரே சாதி, அதன் உட்பிரிவு ஆனால் அந்த இரண்டு பெண்களுக்கும் அவ்வளவாய் ஒத்துக்காது. நேரம் பார்த்து ஒருத்தி, எல்லார் முன்னிலையும்"அவங்க ... ஊருக்காரங்க. அந்த ஊருக்குக்காரங்க கூட நாங்க சம்மந்தமே செஞ்சிக்க மாட்டோம்" என்றவர் சொன்ன
காரணம், அந்த ஊர் காரர்கள் மிக மோசமானவர்களாம். ஏதாவது ஒருவகையில் இன்னொருவரை நேரம் பார்த்து மட்டம் தட்ட வேண்டும். ஏதோ ஒருவகை பொறாமை, அதன் தாக்கமே இந்த வகையான பேச்சுக்கள்.

மங்கை நீங்களும் எழுதுங்க, படிக்க ஆளா இல்லை! உங்க சமீபத்து தலித் பதிவைப் பார்த்துவிட்டு பின்னுட்டம் போட வேண்டும் என்று இருந்தேன். எந்தூரு நீங்க? சென்னைக்கு
வந்தா வீட்டாண்ட வாங்க. அவங்க வசிக்கும் இடம் இருக்கும் அழகைக் காட்டுகிறேன். ஏழைகள் வாழும் பகுதியில் இவர்களுக்கு
தனி இடம், குப்பையும் கூளமான இடத்தில் கால்கூட வைக்க முடியாதவாறு!


ராகவா, அப்படி எல்லார் மனமும் மாறி உலகம் அமைதி பூங்காவாய் மாறினால், அன்று உலகின் கடைசி தினமாய் இருக்கும் :-)

 
At Wednesday, 08 November, 2006, சொல்வது...

ஓ படிச்சீங்களா..பெருசா ஒன்னும் சொல்லலையோன்னு நினச்சேன். ம்ம்ம்ம்..படிச்சீங்க இல்ல, அது வரைக்கும் சந்தோஷம்..

நான்..கோவை..இப்ப தில்லி...

 
At Wednesday, 08 November, 2006, சொல்வது...

குழலி! இதெல்லவா பின்னுட்ட மழை :-)
அப்புறம் இங்க கருணாநிதி, ஜெயலலிதா உதாரணமும் ஓ.கே தாங்க. என்னைப் பொறுத்தவரையில் எல்லா அரசியல்வாதிகளும்
ஓரே குட்டையில் ஊறிய மட்டைகள்தாங்க. பிளட் இஸ் திக்கர்தன் வாட்டர் எல்லாம் கிடையாதுங்க

 
At Wednesday, 08 November, 2006, சொல்வது...

மங்கை, பின்னுட்டம் விவர்மாய் எழுதலாம் என்று நினைத்து விட்டுப் போச்சு. கோவையா? ஆஹா... எப்ப வருவீங்க? மீட்டிங் போட்டுடலாம்

 
At Wednesday, 08 November, 2006, சொல்வது...

கிறிஸ்தவத்தில் உள்ள இந்த மாதிரியான கத்தோலிக், பெந்தகொஸ்தே என்பவையெல்லாம் அவர்கள் பின்பற்றும் கொள்கையில் உள்ள வேறுபாடுகளே! குழலி சொன்னது போல எப்போது வேண்டுமானாலும் கொள்கையில் தெளிவுபெறும்போது மாறி விடலாம். ஆனால், சாதிகள் அப்படி இல்லையே!!

அவை பிறப்பினடிப்படையில் பிரிக்கப்படும்போதுதான் பிரசினையே....

 
At Wednesday, 08 November, 2006, சொல்வது...

நீங்க கோவையிலா இருக்கீங்க..

இப்பதான் தீபாவளிக்கு வந்துட்டு வந்தேன்..

 
At Wednesday, 08 November, 2006, சொல்வது...

உஷா!
சொந்த அண்ணனை மற்றப்பிரிவைச் சேர்ந்தவர், " சாத்தான் எனக் கூறி" அவர் மகள் திருமணத்துக்குக் கூடப் போகவில்லை. இது என்ன??பக்தி எனப் புரியக் கஸ்டமாக இருக்கிறது. அந்த ஆண்டன் கூறிணாலும் இவர்கள் திருந்தார்கள்.
யோகன் பாரிஸ்

 
At Wednesday, 08 November, 2006, சொல்வது...

அஞ்சாநெஞ்சன் ஐயா, குழலியின் பின்னுட்டத்தைப் படித்தவர் அப்படியே அனுசுயா அவர்களின் பினுட்டத்தையும் படிச்சிடுங்க, நான் சொல்ல வந்தது உட்பிரிவுகளைப் பற்றி மட்டுமே!

மங்கை, ஏப்ரலில் செல்லுவேன், அப்ப வந்தா சொல்லுங்க

யோகன், நானும் என் கண்வரும் இந்த உட்பிரிவில் வேறு, வேறு. அதனால இரண்டு பக்கத்தில் சின்னதா ஒரு கேலி, நக்கல் கிடைக்கும்.ஊர் வழக்கம் என்று சில வேறுபாடுகள், அதையே ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்கள். அப்பதான் நினைச்சிப்பேன், இந்த சின்ன வித்தியாசத்திலேயே இவ்வளவு வெறுப்பு இருக்கே என்று! வரும் தலைமுறைகள் இந்த அபத்தங்களை களைவார்கள் என்று நம்புவோம்

 
At Wednesday, 08 November, 2006, சொல்வது...

உஷா, எனக்கு தெரிந்த பெரிய வித்யாசம், இந்துக்களில் இருக்கும் பிரிவு, தொழில் சம்பந்தப்பட்டது.

க்ரிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் உள் இருக்கும் பிரிவு நம்பிக்கை சம்பந்தப்பட்டது.


இந்துக்களிலும் சில பிரிவுகளில், உள் பிரிவுகள் இருக்கு. இவை நம்பிக்கை அடிப்படையில் தானோ ( உ.ம். சிவன் கடவுள் இல்ல, திருமால் கடவுள் இல்ல) ?

என்னமோ போங்க.

மனிதர்கள் பலவிதம், ஒவ்வொன்றும் ஒருவிதம்!

பி.கு: நான் கேள்விப்பட்ட இன்னொரு விஷயம். ஒரு மனுஷன், வளந்து என்ன ஆகப்போறான் ( தலைவனா, தொண்டனா, சோம்பேறியா, சுறு சுறுவா) என்ற விஷயம், அவன் பிறப்பிலேயே முடிவாயிடுதாம் - ப்ளூ பிரிண்ட் மாதிரி. என்ன படிச்சாலும், எங்கு வளந்தாலும், எதை நம்பினாலும் - இந்த ப்ளூ பிரிண்ட் அடிப்படையில்தான் அவன் எதிர்காலமாம்.
சேரியில் தலைவர்களும்; அரசனுக்கு மடையனும்; - மாறு பட்டு மனிதர்கள் உருவாக இதுதான் காரணமாம்.

 
At Friday, 10 November, 2006, சொல்வது...

உஷா. உங்கள் மேல் நன்றாக முத்திரை குத்தப்பட்டுவிட்டது போலிருக்கே. நீங்க எது சொன்னாலும் 'ஆகா ஆகா நீங்க இதைத் தானே சொல்றீங்க'ன்னு வந்து சொல்றாங்களே. உங்கள் ஊனக்கண்கள் என்ற சொல்லாடலை இரசித்தேன். ஆனால் நல்ல வேளை ஏன் சிலருக்கு மட்டும் தான் ஞானக்கண்கள் இருக்கலாமா? எங்களுக்கு இருக்கக் கூடாதா? இது வருணாசிரமச் சிந்தனைன்னு யாரும் சண்டைக்கு வரலை. இப்படி போனா அப்படி; அப்படி போனா இப்படி முட்ட வருகிறவர்களுக்கு என்ன தான் சொல்வது? :-)

 
At Friday, 10 November, 2006, சொல்வது...

//என்ன எழவு பெந்தகோஸ்தே நாளைக்கே மனசு மாறினா கத்தோலிக்கரா மாறிடலாம், கத்தோலிக்கர் மனசு மாறினா ஏழாவது சர்சு, எட்டாவது சர்ச்சுனு மாறிக்கலாம், ஆனா மனசு மாறி மதம் மாறினாலும் எழவு பொறக்கும்போது ஒட்டிக்கிட்டு வந்த சாதி மட்டும் மாறாது ஆனா இதுக்கெல்லாம் அலட்டிக்க கூடாது மனுசங்க எல்லா இடத்திலேயும் ஒரே மாதிரிதான்னு எனக்கு புரிஞ்சிடுச்சி//

நானும் ஐயிரா மாறிடுவேன் என்ன எழவு இது இந்த இடஒடுக்கீதுதான் தடுக்குது

 
At Friday, 10 November, 2006, சொல்வது...

வாய் சொல் வீரரே! இந்த முத்திரை குத்தலில் இருந்து யாருமே தப்பிக்க முடியாது. அதுக்கு கவலைப்பட்ட முடியுமா?

கா.சி! ஜோக் அடிக்கவும் ஒரு எல்லை இருக்கு : )))))))))))))))))))))))))))))

 
At Friday, 10 November, 2006, சொல்வது...

//கா.சி! ஜோக் அடிக்கவும் ஒரு எல்லை இருக்கு : )))))))))))))))))))))))))))))//

ஜோக் இல்லை சீரியசாவே சொல்றேன். நான் ஐயராக ஜாதி மாற முடிவெடுத்ததை அரசாங்கம், பள்ளி, கல்லூரி யாருமே ஒத்துக்கொள்ளவில்லை.

 

Post a Comment

<< இல்லம்