Sunday, January 07, 2007

தமிழ்ப் புத்தகங்களுக்கு ஒரு தகவல் தளம்!

விருபா என்ற பெயரில் புத்தகங்களுக்காக மட்டுமே ஒரு பதிவு நடத்துபவரைப் பற்றி எவ்வளவு பேருக்கு தெரியும் என்பது எனக்கு தெரியாது :-) இவரின் பேட்டி தினமணியில் வெளியாகியுள்ளது. தினமணியின் பக்கங்கள் திறக்க முடியாமல் பாஃண்ட் பலமுறை வயிற்றெரிச்சலை கிளப்பும் என்பதால் பேட்டி முழுவதையும் எடுத்துப் போட்டுள்ளேன்.புத்தகசந்தை நடக்கும் இந்த சமயத்தில் புத்தங்கள் மற்றும் எழுத்தாளர்கள் பற்றிய பலவிவரங்கள் விருபாவில் உண்டு.

நன்றி தினமணி

இது புதுசு: தமிழ்ப் புத்தகங்களுக்கு ஒரு தகவல் தளம்!

"புத்தகப் புழு', "புத்தகப்பூச்சி', "புத்தகப் பாம்பு' என்று எப்படி அழைத்தாலும் ஒருவர் கோபப்படாமல் புத்தகம் படிப்பதில் மிகுந்த ஆர்வம் உடையவராக இருக்கிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள். அவர் உண்மையிலேயே நல்ல புத்தக ஆர்வலர்தான். அல்லது புத்தகப் பைத்தியம்தான். இப்போதெல்லாம் தமிழ்நாட்டில் ஆண்டு முழுக்க அங்கங்கே புத்தகக் கண்காட்சிகள் அதிகம் நடைபெறுகின்றன. திருவிழாவுக்குப் போவதைப் போல மக்கள் அலைஅலையாகப் புத்தகக் கண்காட்சிக்குப் போகிறார்கள். புத்தகத்தின் மீது கரைகடந்த ஆர்வம் பெருகிவரும் வேளையில் அது தொடர்பான தகவல்களும் கரையைக் கடக்க வேண்டியதுதானே? ஆம். கரையைக் கடக்க வைத்திருக்கிறார் தமிழ்ப் புத்தகங்கள் பற்றிய தகவலுக்காகவே ஓர் இணையதளத்தை - விருபா.காம் என்ற பெயரில் - ஆரம்பித்து நடத்திவரும் து.குமரேசன். அவரிடம் பேசிய போது....


இந்த இணையதளத்தை ஆரம்பிக்க வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு எப்படி ஏற்பட்டது?

எனக்கு வெளிநாடுகளில் நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்குத் தமிழ்ப் புத்தகங்களைக் கண்ணால் பார்ப்பதே மிகவும் சந்தோஷம். அவர்கள் சென்னையிலிருக்கும் என்னிடம் தமிழ்ப் புத்தகங்களை வாங்கி அனுப்பச் சொல்வார்கள். நானும் வாங்கி அனுப்புவேன். பல சமயங்களில் என்ன புத்தகம் என்று தெரியும். யார் ஆசிரியர்? எந்தப் பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது? எங்கே கிடைக்கும்? போன்ற தகவல்கள் தெரியாமல் திண்டாடியிருக்கிறேன். இதுவே புத்தகங்களுக்காக தகவல் தரும் ஓர் இணையதளத்தை ஆரம்பிக்கத் தூண்டுகோலாக இருந்தது.


அதற்கேன் இணையதளம்? வேறு முயற்சிகளில் ஈடுபட்டிருக்கலாமே?

நாம் திரட்டித் தரும் தகவல்கள் உலகம் முழுதும் உள்ள தமிழர்களுக்குக் கிடைக்க வேண்டும் என்றால் இணையதளமே சிறந்த வழி. 2000 - 2001 இல் ஓர் இணையதளக் கனெக்ஷன் கொடுக்க வேண்டுமானால் 32 ஆயிரம் ரூபாய் வரை செலவாகும். இப்போது வெறும் 250 ரூபாய்க்கு பிராட் பேன்ட் கிடைக்கிறது. பல சிறு நகரங்களில் கூட ப்ரெüசிங் சென்டர்கள் வந்துவிட்டன. எல்லாரும் தகவல்களுக்காக இணையதளத்தை நாடும் பழக்கம் வந்துவிட்டது. எனவே எதிர்காலம் இணையதளத்திற்குத்தான் என்பதால் இணையதளம் ஆரம்பித்தேன்.


புத்தகங்களுக்காக இணையதளம் ஆரம்பிக்கும் அளவுக்குத் தமிழ்ப் புத்தகங்கள் அதிக அளவில் வெளிவருகின்றனவா? என்ன?

இப்போது தமிழில் ஆண்டுக்கு ஆறாயிரம் புத்தகங்கள் வருகின்றன. சில பதிப்பகங்கள் பத்து, இருபது புத்தகங்கள் என்று மொத்தமாக வெளியிடுகிறார்கள். இன்னும் சொல்லப் போனால் 5 நட்சத்திர ஹோட்டல்களில் புத்தக வெளியீட்டு விழாவை நடத்துகிறார்கள். இதற்குக் காரணம் தமிழ்ப் புத்தகச் சந்தை உலக அளவில் பரந்து விட்டதுதான் காரணம். இலங்கைப் பிரச்சினை காரணமாகப் புலம்பெயர்ந்த தமிழர்கள் உலகமெங்கும் வாழ்கிறார்கள். வெளிநாட்டில் சம்பாதிக்கும் அவர்களுக்கு 1டாலர், 2 டாலர் கொடுத்துப் புத்தகங்கள் வாங்குவது பெரிய விஷயமே கிடையாது. மேலும் தமிழ்நாட்டிலும் தமிழ்ப் புத்தகங்களுக்கான வாசகர்கள் பெருகிவிட்டார்கள். அறிவு பலதுறைகளிலும் வளர்ந்து வருகிறது. எனவே அது தொடர்பான பல புத்தகங்களின் தேவையும் வரவும் அதிகரித்துவிட்டன.


அப்படியானால் நீங்கள் புத்தக விற்பனையைச் செய்திருக்கலாமே?

எங்கள் நோக்கம் வியாபாரம் செய்வது அல்ல. புத்தகங்களைப் பற்றித் தகவல் கொடுப்பதே.


உங்களின் இணையதளத்தில் புத்தகங்கள் பற்றிய தகவல்கள் எவ்வாறு தரப்பட்டு உள்ளன?

எங்களுடைய இணைய தளத்தில் புத்தகங்களை வாசகர்களின் தேவையொட்டி தேடுவதற்கு வசதியாக அமைத்திருக்கிறோம். உங்களுக்கு எழுத்தாளர் பெயர்தான் தெரியும். அவர் எழுதிய புத்தகங்களின் பெயர்கள் தெரியவில்லை என்றால் அதற்காக நீங்கள் கவலைப்படத் தேவையில்லை. எழுத்தாளரின் பெயரை நீங்கள் செலக்ட் செய்தால் போதும். அந்த எழுத்தாளர் பெயர், முகவரி, அவர் எழுதிய புத்தகங்கள், அவர் வசிக்கும் நாடு, அவருடைய புத்தகங்களின் விலை, அவற்றை வெளியிட்ட பதிப்பகம், புத்தகங்கள் கிடைக்குமிடம் போன்ற எல்லாத் தகவல்களும் இருக்கும். எழுத்தாளரின் தொலைபேசி எண் கொடுக்கப்பட்டிருப்பதால் வாசகருக்கும் எழுத்தாளருக்கும் இடையேயான தொடர்பு அதிகரிக்க வாய்ப்புண்டு.

அதுபோல புத்தகத்தின் பெயர் தெரிந்தால் இதர தகவல்களைத் தெரிந்து கொள்ளலாம். அது மட்டுல்லாமல் ஒரு துறைசார்ந்த புத்தகம் தேவையென்றால் அது தொடர்பாக வெளிவந்துள்ள புத்தகங்களின் பட்டியல் மூலம் எல்லா விவரங்களும் தெரியவரும். உதாரணமாக ஓவியம் என்ற தலைப்பில் தேடினீர்கள் என்றால் ஓவியம் தொடர்பான புத்தகங்களின் பட்டியல் வரும். அதுபோல 1968 ம் ஆண்டு வெளியான புத்தகத்தைப் பற்றிய தகவல் அறிய 1968 என்ற ஆண்டை செலக்ட் செய்து பார்த்தால் அந்த ஆண்டில் வெளியான புத்தகங்களின் பட்டியல் தெரியவரும்.

புத்தகங்கள் மட்டுமில்லை, சிற்றிதழ்கள் பற்றிய தகவல்களும் எங்கள் இணையதளத்தில் உண்டு. சிற்றிதழ்களின் பெயர், அவற்றின் முகவரி, சந்தா, தொலைபேசி எண், அந்த இதழ்களின் உள்ளடக்கம் போன்ற எல்லாத் தகவல்களும் இருக்கும்.

பதிப்பகங்கள் பற்றிய தகவல்களும் உள்ளன. பெரிய நகரங்களில் உள்ள பதிப்பகங்களைப் பற்றி மட்டுமல்ல, சிறிய நகரங்களில் உள்ள பதிப்பகங்களைப் பற்றிய தகவல்களும் உள்ளன. உதாரணமாக கனடாவில் உள்ள திருச்செந்தூர் முருகன் பதிப்பகம் பற்றிய தகவல் உள்ளது. அந்தப் பதிப்பகத்தை யார் நடத்துகிறார்கள்? பதிப்பகத்தின் முகவரி என்ன? போன்ற தகவல்களை உடனுக்குடன் பெற முடியும்.

புத்தகங்களைப் பற்றி ஊடகங்களில் வந்துள்ள மதிப்புரைகளைத் தொகுத்துக் கொடுத்துள்ளோம். வாசகர்கள் எல்லா ஊடகங்களிலும் வந்துள்ள மதிப்புரைகளை ஒரே நேரத்தில் பார்க்க முடிவதால் புத்தகங்களைப் பற்றிய சரியான மதிப்பீடு செய்ய உதவும்.

அது போல புத்தக வெளியீட்டு விழாக்களைப் பற்றிய தகவல்களும் உள்ளன. ஆஸ்திரேலியாவில் ஒரு புத்தகம் வெளியிட்டார்கள் என்றால் அதைப் பற்றி நீங்கள் திருநெல்வேலியில் இருந்து தெரிந்து கொள்ள முடியும். மேலும் இந்தத் தகவல்களை யார் வேண்டுமானாலும் இந்த இணையதளத்தில் சேர்க்க முடியும். தகவல்களைச் சரி பார்ப்பது மட்டும்தான் எங்கள் வேலை.


தமிழ்ப் புத்தகங்கள் என்றால் எல்லாப் புத்தகங்களைப் பற்றியும் தகவல் கொடுப்பீர்களா? ஏதேனும் சில தலைப்புகளைத் தவிர்த்துவிடுவீர்களா?


நாங்கள் தமிழில் வெளிவந்த எந்தப் புத்தகத்தைப் பற்றியும் தகவல் தருவோம். எங்களைப் பொறுத்தளவில் தமிழில் புத்தகம் வெளிவரவேண்டும். அவ்வளவுதான். வேண்டியவர், வேண்டாதவர், பிடித்த கொள்கை, பிடிக்காத கொள்கை என்பதெல்லாம் கிடையாது. எந்த வித அரசியல் சார்பும் கிடையாது. இன்னுமொன்று புத்தகம் என்றால் பெரிய அளவு புத்தகமாக இருக்க வேண்டும் என்றுகூட அவசியம் இல்லை. பதினாறு பக்க அளவில் ஒரு புத்தகம் இருந்தாலும் அதைப் பற்றியும் தகவல் தருவோம். அதுபோலத் தனிப்பட்ட முறையில் எந்த எழுத்தாளரையோ, பதிப்பகத்தையோ முன்னிலைப்படுத்தவும் மாட்டோம்.

இந்த இணையதளம் மூலம் வேறு என்ன செய்யலாம் என்று நினைக்கிறீர்கள்?

உலகெங்கிலும் உள்ள நூலகங்களில் உள்ள தமிழ்ப் புத்தகங்களைப் பற்றிய தகவல்களை இணைக்க முடிந்தால் நல்லது. நிறைய ஆராய்ச்சி மாணவர்கள் எந்த புத்தகம் எங்கே கிடைக்கும் என்ற தகவல் தெரியாமல் சிரமப்படுகிறார்கள். மேலும் ஒரு துறைசார்ந்த ஆய்வின் போது அந்தத் துறை தொடர்பாக வெளிவந்துள்ள புத்தகங்களைப் பற்றித் தெரிந்து கொள்ள இத்தகைய நூலகத் தகவல்கள் உதவும். புதுக்கோட்டையருகே உள்ள ஒரு சிறிய நூலகத்தில் எங்கும் கிடைக்காத பல அரிய நூல்கள் இருப்பதாகக் கேள்விப்படுகிறேன். அவற்றைப் பற்றிய தகவல்கள் எல்லாருக்கும் போய்ச் சேர்வது நல்லதுதானே? இந்தியாவில் உள்ள நூலகம் மட்டுமல்லாமல் மலேசியாவில் உள்ள, உலகின் பிற பாகங்களில் உள்ள நூலகங்களில் உள்ள தமிழ்ப் புத்தகங்களைப் பற்றிய தகவல்களைத் தெரிந்து கொள்ளமுடியும்.


புத்தகம் பற்றிய தகவல் தருவதற்கு ஏதேனும் கட்டணம் வசூலிக்கிறீர்களா?

ஒரு புத்தகத்திற்கு ஐம்பது ரூபாய் கட்டணம் வசூலிக்கிறோம். புத்தகம் ஒன்றும் தரவேண்டும். அது புத்தகம் பற்றிய தகவல்களைச் சரிபார்ப்பதற்காக. புத்தகத்தின் மேலட்டை, ஆசிரியரின் புகைப்படம், பதிப்பக முகவரி போன்ற எல்லாத் தகவல்களையும் தருகிறோம்.


உங்கள் இணையதளத்திற்கு எந்த அளவு ஆதரவு உள்ளது?

எங்கள் இணையதளத்தை தினம்தோறும் மூவாயிரம் பேர் பார்க்கிறார்கள். உலகத்தில் உள்ள இணையதளங்களைப் பார்க்கிறவர்களின் எண்ணிக்கையை வைத்து அதற்கு ரேங்க் கொடுக்கிற நிறுவனம் (அகஉலஅ)தமிழில் உள்ள இணைய தளங்களில் 42 இடத்தை எங்கள் இணையதளத்திற்குக் கொடுத்திருக்கிறது.

மேலும் எங்களுடைய ஃபான்ட் யுனிகோடில் இருப்பதால் யாகூ, கூகிள் போன்ற தேடுதளங்களில் தேடுகிறவர்களுக்கு எங்கள் இணையதளம் உடனே கிடைத்துவிடும்.

10 பின்னூட்டங்கள்:

At Sunday, 07 January, 2007, சொல்வது...

நல்ல தகவல்!
நன்றிங்க உஷாக்கா!

 
At Sunday, 07 January, 2007, சொல்வது...

செய்திக்கு மிக்க நன்றி உஷா.
விருபா.காம் திரு.குமரேசனின் தமிழ்ப் பணி மிகவும்
பாராட்டுதலுக்கு உரியது.

வாழ்த்துக்கள் குமரேசன்.

 
At Sunday, 07 January, 2007, சொல்வது...

பயனுள்ள தகவலுக்கு நன்றி உஷா

 
At Sunday, 07 January, 2007, சொல்வது...

உஷா உங்கள் பதிவிற்கு நன்றிகள்,

//உலகத்தில் உள்ள இணையதளங்களைப் பார்க்கிறவர்களின் எண்ணிக்கையை வைத்து அதற்கு ரேங்க் கொடுக்கிற நிறுவனம் (அகஉலஅ)தமிழில் உள்ள இணைய தளங்களில் 42 இடத்தை எங்கள் இணையதளத்திற்குக் கொடுத்திருக்கிறது. //

தமிழில் உள்ளதை ஆங்கிலப்படுத்தி உரிய இணைப்பைக் கொடுத்துள்ளேன்.

//உலகத்தில் உள்ள இணையதளங்களைப் பார்க்கிறவர்களின் எண்ணிக்கையை வைத்து அதற்கு ரேங்க் கொடுக்கிற நிறுவனம் (www.alexa.com) தமிழில் உள்ள இணைய தளங்களில் 42வது இடத்தை எங்கள் இணையதளத்திற்குக் கொடுத்திருக்கிறது. //

 
At Sunday, 07 January, 2007, சொல்வது...

திரு குமரேசன் கவனத்திற்கு:

viruba.com தளத்தில் வார்ப்புரு பிரச்சினை உள்ளதோ? Arial Unicode வார்ப்புருவில் தமிழ் எழுத்துக்கள் தெரிந்தாலும் தெளிவில்லாமல் உள்ளது.

 
At Sunday, 07 January, 2007, சொல்வது...

நல்ல தகவல், மிகவும் பயனுள்ள சேவை. வளரட்டும் விருபாவின் புத்தகப்பணி.

 
At Sunday, 07 January, 2007, சொல்வது...

வணக்கம் பெத்த ராயுடு,

நீங்கள் வார்ப்புருவை நேரடியாக Fonts Folder இற்குள் (ctrl + c & ctrl +v முறையில்) சேர்த்திருந்தால் சிலவேளைகளில் பிரச்சனை வரும், எனவே நீங்கள் ஒரு முறை ஏற்கனவே உங்கள் கணனியில் உள்ள வார்ப்புருவை நீக்கிவிட்டு Fonts Folder இற்குள் போய் Install a new font முறையில் வார்ப்புருவை சேர்க்கவும், கூடவே Control Panel >>> Regional Settings போய் சரியான முறையில் செய்யவும்

 
At Sunday, 07 January, 2007, சொல்வது...

தக்க சமயத்தில் உருப்படியான தகவல். ஆனால், சில பதிப்பகங்கள் ஒன்றிரண்டு புத்தகங்களைத்தான் விவரத்துக்குத் தந்துள்ளன. விருபாவின் முயற்சி மென்மேலும் தொடர வாழ்த்துகள்.

சைதை முரளி

 
At Monday, 08 January, 2007, சொல்வது...

Useful Informations. Thanx!

 
At Monday, 08 January, 2007, சொல்வது...

//தினமணியின் பக்கங்கள் திறக்க முடியாமல் பாஃண்ட் பலமுறை வயிற்றெரிச்சலை கிளப்பும் என்பதால்//
நீங்க இத செஞ்சீங்களா?

Settings / Control Panel / Regional and Language Settings

<IMG SRC="http://www.geocities.com/haiseenu2000/Blogspot/Unicode.JPG">

You may need a folder I386 in your machine. You need to point this, if not you need Win XP CD.

 

Post a Comment

<< இல்லம்