Tuesday, July 10, 2007

மோகன் தாஸ்க்கு அர்பணம்

மோகன் தாஸ்க்கு அர்பணம் ( தலைப்பு ஏற மறுக்கிறதே????
ரொம்ப நாளாய் ஒரு ஆசை, எல்லாரும் மீள் பதிவுப் போடுகிறார்களே, நாமும் நம் அற்புத காவியங்களை, புதுசா வந்தவங்களுக்கு போட்டு காட்டலாமே என்று தோன்றும். இன்று மோகன் தாஸ் மற்றும் லஷ்மீயும் போடு போடு என்றுப் போடும் போது,
பழைய படம், புதிய காப்பியாய் சற்றேரக்குறைய அதே மேட்டர் என்று நினைத்து, இதைப் போட்டு உள்ளேன். படித்து இன்புறுக :-)


கழுதைகள் மற்றும் எருமை மாடுகள்


காலக்காலமாய் கழுதைகளுக்கு கல்யாண மார்கெட்டில் மவுசு அதிகம். ஆனால் இன்றைய தேதியில் பெண்களுக்கும் விழிப்புணர்வு அதிகமாகி வருவதால் அவர்களும் கழுதைகளுக்கே கழுத்தை நீட்ட பிரியப்படுகிறார்கள். காதலிக்கவும், கனவு காணவும் அழகிகளை நாடுபவர்கள் கல்யாணம் என்று வரும்பொழுது கழுதைகே முதலிடம் கொடுக்கிறார்கள். ஆனால் கழுதைகளைப் பற்றி சில உண்மைகளை எடுத்து சொல்ல விரும்புகிறேன். நீங்கள் ஒரு மேதை (இலக்கிய), அல்லது அறிவுஜீவியாய் இருந்தால், வாழ்க்கை சுமுகமாய் போக ஒரு கழுதையை வாழ்க்கை துணையாய் கொள்ள முடிவெடுக்கலாம். கழுதை என்றால் என்ன சொன்னாலும் கேட்டுக் கொள்ளும் என்பது உங்கள் எண்ணமாய் இருந்தால், அய்யகோ தவறு செய்கிறீர்கள் ஐயா!

கழுதையின் உலகம் அமைதியானது. தன் வேலையை, தனக்குக் கொடுத்த வேலையை மட்டுமே பார்க்கும். அனாவசியமாய் இன்னொருவர் விஷயத்தில் மூக்கை நுழைத்து சண்டை, சச்சரவு அல்லது உங்கள் மொழியில் சொன்னால், கருத்து மோதல் போன்றவைகளுக்குப் போகாது. இதுப்போன்ற பிரச்சனையால் மன உளச்சலில், அழுத்ததில், தலைவலியில் நீங்கள் தவிக்கும்பொழுது, பக்கத்தில் நிம்மதியாய் உறங்கும் கழுதையைப் பார்த்து உங்கள் எரிச்சல் அல்லது ரத்த அழுத்தம் கூடும் சாத்தியங்கள் உண்டு. இத்தகைய அறிவுஜீவித்தனமான விஷயங்களை அதற்கு நீங்கள் எவ்வளவு எடுத்துக் கூறினாலும், அது முகத்தில் எந்த உணர்வும் காட்டாமல் கடனே என்றுக் கேட்டுக் கொண்டிருக்கும்பொழுது, க... தெரியுமா க... வாசனை என்ற பழமொழியை நினைவுக்கூர்ந்து நீங்கள் அவ்விடத்தை விட்டு விலகிவிடுதல் உங்கள் உடம்புக்கு நல்லது.

கழுதை தன்னுடைய உலகில் சஞ்சாரித்துக் கொண்டு, சும்மா இருக்கும். சும்மா என்றால் வாய் வார்த்தை பேசாமல், மண்டைக்குள் குடைச்சல் பட்டுக்கொண்டு இருப்பது ஆகாது. தான் உண்டு தன் வேலை உண்டு என்று அமைதியாய் இருப்பது. நீங்கள் திட்டினாலும், உதைத்தாலும் அதற்கு ஒன்றும் ஏறாது. திட்டு என்பது நேரடியாய் திட்டினாலே பேசாமல் இருக்கும் நீங்கள் அறிவுஜீவித்தனமாய் இரட்டை அர்த்ததில், ஜாடையாய் திட்டினால் எந்த உணர்வும் காட்டாது.

ஆனால் இவைகளை ஓரளவு பொறுத்து போகுமே தவிர, பொறுமைக்கு பூஷணமான கழுதையும் சட்டென்று முரண்டு பிடிக்க ஆரம்பித்துவிடும். எந்த சாம, தான பேதங்களுக்கும் அசையாது. கடைசியில் நீங்கள் காலில் விழுந்து அதன் வழிக்குப் போக வேண்டியும் இருக்கும். அதைவிட, சில சமயம் கோபித்துக் கொண்டு பின்னங்காலால் ஒரு உதை விட்டு விட்டு, எங்காவது ஓடிப் போய் விடும். அப்பொழுதும் நீங்கள்தான் அதனை சமாதானப் படுத்தி அழைத்து வரவேண்டும். கழுதை ஒரு பொழுதும், சண்டைக்கும் வராது, அதே சமயம் அதுவே, சமாதானத்துக்கும் வெள்ளை கொடியும் காட்டாது என்பதை நினைவில் கொள்க.

கடைசியாய், கழுதையின் வாழ்க்கை சுகமானது. எதுவுமே அதை பாதிக்காது. தன்னால் முடிந்ததை முகம் கோணாமல் செய்யுமே தவிர, நீங்களாய் அறிவுஜீவிதனமாய், ஏதாவது பிரச்சனை செய்யாமல் இருந்தால், அதனுடன் வாழ்வது சுகமானதுதான்.

கழுதைக்களுக்கும் சிலசமயம் வாழ்க்கை அலுத்துவிடும். வேலை செய்வது, சாப்பிடுவது, தூங்குவது மீண்டும், மீண்டும் வே..., சா..., தூ.... வா? என்று யோசிக்க ஆரம்பிக்கும். எப்பொழுதுமே அத்தனை பிரச்சனைக்கும் காரணமே இந்த யோசனை தானே? பரீணாம வளர்ச்சி சிந்தாந்தப்படியும் ஏன் அடுத்தக்கட்டமான எருமை மாடாய் மாறக்கூடாது என்று நினைத்து யாரிடமும் யோசனை எதுவும் கேட்காமல். ஒரு நாள் எருமைகளாக மாறிவிட்டும். ஆனால் இதனால் ஊரும், உலகமும் அல்லோகல்லப்படும். கழுதையால் இவ்வளவு நாளும், சந்தோஷமாய் இருந்தவர்களுக்கு அஸ்தியில் ஜூரமே வந்துவிட்டது. சிலரோ எருமை மாட்டால் கிடைக்கும் நல்லது, கெட்டதை பட்டியல் இட்டுப் பார்த்ததில், அவர்களுக்கு பெரிய வித்தியாசம் ஒன்றும் கிடைக்கவில்லையாததால், பேசாமல் இருந்து விட்டார்கள்.

ஆனால் வித்தியாசம் அதிலும் மிகப் பெரிய வித்தியாசம் இருக்கத்தான் செய்தது. கழுதையின் அருகில் போய் நின்றால் போதும். அது மெதுவாய் தலையைத் தூக்கி, உலகில் உள்ள துக்கத்தை எல்லாம் தன் கண்களில் தேக்கி, உங்களை பரிதாபமாய் பார்க்கும். அதே சமயம்,எருமை மாட்டுக்கு அருகில் போங்களேன். முதலில் அது உங்களை கண்டுக்கவே கண்டுக்காது. திரும்ப, திரும்ப கவன ஈர்ப்பு தீர்மானம் போட்டால், போனால் போகிறது என்று தலையை திருப்பி, உங்களை ஒரு பார்வைப் பார்த்துவிட்டு திரும்ப தலையை திருப்பிக் கொள்ளும். அந்த பார்வையில் எந்த உணர்வும் இருக்காது. அது உங்களை அலட்சியப் படுத்துகிறது என்று உண்மை உங்களுக்கு புலனாகி, உங்கள் தன்மானத்தில் முதல் அடி விழும்.

எருமை மாடுகள் சந்தோஷமாய் தான் நினைத்ததை சாதிக்க புறப்பட்டு விட்டன. யாரையும் குறித்து எந்த அச்சமோ, நினைப்போ இல்லாமல் தங்கள் வேலையைப் பார்க்கத் தொடங்கின. ஆரம்பத்தில் அமைதிக்காட்டியவர்கள், நடப்பதைப் பார்த்து பீதிக் கொள்ள தொடங்கினர். தாங்கள் கொண்ட பீதியை மற்றவர்களுக்கு சொல்லி, சொல்லி எல்லாருக்கும் பயம் காட்ட தொடங்கினர். வேகமாய் வந்தவர்கள், அவைகளின் மேல் இடித்தும் இடிக்காமலும் நின்றுவிட்டு, வாய்க்கு வந்தப்படி திட்டி விட்டு நகர்ந்தனர். ஆனால் எருமை மாடுகளுக்கு மேல்தோல் கடினமானது. அதனால் வெய்யிலும் மழையும் அவைகளை எந்த வகையிலும் பாதிக்கவேயில்லை. பாவம்! அவர்கள் கோபம் அவர்களுக்கு! ஆனால் கருமமே கண்ணான எருமை மாடுகள் அசைந்தும் கொடுக்கவில்லை. ஒன்றிரண்டு பேர்கள் அவைகளின் பொறுமையைப் போற்றினாலும் எருமைமாடுகள் அதற்கும் ஒன்றுமே பதில் சொல்வதில்லை. மெதுவாய் ஊர்ந்து போய் கொண்டேயிருந்தன.

இன்றைய பதில் இல்லாத கேள்வி எல்லார் மனங்களிலும், சிலரின் வாய் வார்த்தையாலும் வெளியே வரத் தொடங்கி விட்டது. இது எங்குப் போய் முடியும்? இன்று கழுதை எருமை மாடானது, நாளை குலைத்து பின்பு கடிக்க தொடங்கும் நாய் ஆகலாம்! அதற்கு பிறகு.... நினைக்கவே முடியாமல் எல்லாரும் பயத்தில் வாழ்ந்துக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால் சில பெருசுகள் "காலம் கலிக் காலம்" என்று சொல்லி பெருமூச்சு விட்டுக் கொண்டு, கழுதையுடன் தாங்கள் வாழ்ந்த இனிய வாழ்க்கையை சொல்லி பெருமூச்சு விட்டுக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால் இனியும் அந்த சுகமான வாழ்க்கை யாருக்குமே அமையாது என்ற கசப்பான உண்மை மட்டும் எல்லாருக்கும் தெள்ள தெளிவாய் புரிந்துவிட்டது. ஆனால் ஏற்றுக் கொள்ளத்தான் மனம் வரவில்லை.

19 பின்னூட்டங்கள்:

At Tuesday, 10 July, 2007, சொல்வது...

இதை நான் ஏற்கனவே படிச்சிருக்கேனே.... இது கீற்றிலோ அல்லது வேறு ஏதோ ஒரு இணைய தளத்தில் வந்ததாய் நினைவு. இத்தோடு இன்னொரு கவிதையிருக்குமே உங்களுது - முதல் முதலாய் பேசும் ஒரு கூட்டத்தின் சப்தம் பற்றியது. அதுகூட இந்த டாபிக்கோடு பொருந்துமே... அந்த இறவாக் கவிதையையும் நீங்கள் தூசு தட்டலாமே? :)

 
At Tuesday, 10 July, 2007, சொல்வது...

யப்பா.. தலை சுத்துது... கொஞ்சம் கழுதைகளுக்கும் புரிய மாதிரி சொல்லக் கூடாதா??

என்னை பொறுத்தவரை கழுதைகளே கிடையாது.. எல்லாம் நடிப்புதான். சிச்சுவேஷன்'க்கு ஏத்த மாதிரி கழுதையாகவோ, எருமையாகவோ மாறுவதில் கை தேர்ந்தவர்கள் அந்த so called கழுதைகள்

:)))))))))

 
At Tuesday, 10 July, 2007, சொல்வது...

:)

மிகவும் ரசித்துப் படித்தேன் உஷாக்கா!

வெல்டன்!

 
At Tuesday, 10 July, 2007, சொல்வது...

உங்களுக்கும் டைட்டில் பிரச்சினையா?

நான் என்னோட பொட்டிலதான் ஏதோ கோளாறுன்னு நினைச்சேன்!

 
At Tuesday, 10 July, 2007, சொல்வது...

ஒரு 3 வருஷம் இருக்குமா இத எழுதி? காலாகாலத்துக்கும் ஸ்ட்ராங்கா நமுட்டு சிரிப்போட நிக்கும்போலருக்கு. :)

-மதி

 
At Tuesday, 10 July, 2007, சொல்வது...

:))

 
At Tuesday, 10 July, 2007, சொல்வது...

இது மீள் பதிவா... உள்குத்துப்பதிவா???

ஆனால் நல்லப்பதிவு.

 
At Tuesday, 10 July, 2007, சொல்வது...

கயிதே, எருமைன்னு சென்னை ரோட்டில் திட்டு வாங்கினது எல்லாம் ஏன்னு இப்போ புரியுது. நல்லாயிருங்கக்கா!! :))

அப்புறம் இந்த டைட்டில் பிரச்சனை எனக்கும் இருக்கு. முதலில் ட்ராப்டா சேமிச்சுக்கணும். அப்புறம் அதை எடிட் செஞ்சா அப்போ டைட்டில் போட முடியும். அதுக்கு அப்புறம் பப்ளிஷ் செய்யலாம் அப்படின்னு நம்ம நண்பர்கள் தந்த சமையல் குறிப்புதான் உதவுது!

 
At Tuesday, 10 July, 2007, சொல்வது...

சூப்பர்ப் :-)

 
At Tuesday, 10 July, 2007, சொல்வது...

உங்களால மட்டும் எப்படிங்க இப்படியெல்லாம் முடியுது.

(எங்கயோ கேட்ட மாதிரி இருக்கா! எல்லாம் இதே பதிவில் முன்ன போட்ட பின்னூட்டம் தான் ;))

 
At Tuesday, 10 July, 2007, சொல்வது...

ஒரே சிரிப்பு தான் போங்க ...நீங்க போட்டதும் நல்லதா போச்சு புதுசா வந்த எனக்கு இது தெரியாது இல்ல..
படிச்சிட்டேன்..நன்றி..:)

ஆனா காலத்துக்கும் இது இப்படியே மீள்பதிவா வந்துகிட்டே இருக்குமா நிலமை மாறாதா?:(

 
At Tuesday, 10 July, 2007, சொல்வது...

:-))

 
At Tuesday, 10 July, 2007, சொல்வது...

லஷ்மீ, ஆமாம் கீற்று இணையத்தளத்தில் வந்தது இது. கவிதைதானே விரைவில் போட்டு விடுகிறேன். நினைவு வைத்திருந்ததும்
மகிழ்ச்சியாய் இருக்கிறது.

பிபட்டியன், வீட்டில், அக்கம்பக்கம் ஏதாவது பெரிசு இருந்தால் கேட்டுப்பாரூங்கள். கழுதைக்கு வாழ்க்கைப்பட்டு வாழ்ந்த
சுக வாழ்வை பெரூமூச்சுடன் சொல்வார்கள். ஆனால் அந்த கழுதையும் இன்று எருமையாய், நாயாய் மாறியிருக்கலாம் :-)

லஷ்மி, இலவசம், சிபி! மோகன் தாஸ் சொல்லியப்படி, முடிந்தளவு ஓரமாய் டைட் கிளிக் செய்தால், பிரச்சனை சரியாகிறது

மதி, "அந்த நாள் நினைவுகள்" என் மனதிலும் நிழலாடியது :-)

தெ.கா, மாயன், தம்பி புன்னகைத்ததற்கு நன்றி.

தாசு, இதென்ன கேள்வி, பட்டறிவுதான் :-)

முத்துலட்சுமி கேட்டீங்களே ஒரு கேள்வி. அதுக்கு பதில் அந்த படைச்சவனைத்தான் கேட்க வேண்டும்

நந்தா, இது என்ன உள்குத்து இருக்கு? அதுதான் தெளிவா மோகன் தாஸ்க்கு அர்பணம் என்று போர்ட் வைத்தாகிவிட்டதே:-))

 
At Wednesday, 11 July, 2007, சொல்வது...

எந்த ஒரு கழுதையோ , எறுமையோ இப்படி வலைப்பதிவு அல்லது மீள் பதிவு போட்டு தங்கள் புத்திசாலித்தனத்தை காட்டிக்கொள்வது இல்லை, இதை நினைத்தால் தான் ஆற்றாமையாக இருக்கிறது!(பரவயில்லை அதான் நீங்கள் இருக்க்கிங்களே அது போறாதா!!)

 
At Wednesday, 11 July, 2007, சொல்வது...

உஷா,
இங்க நடக்கற மேட்டர் ஒண்ணும் புரியலே ! ஆனா, ஒங்க மீள்பதிவு நல்லாவே இருக்கு!

//முத்துலட்சுமி கேட்டீங்களே ஒரு கேள்வி. அதுக்கு பதில் அந்த படைச்சவனைத்தான் கேட்க வேண்டும்
//
படைச்சவன் இருக்கான்னு நீங்க ஒத்துக்கறது சந்தோஷமா இருக்கு ;-)

எ.அ.பாலா

 
At Wednesday, 11 July, 2007, சொல்வது...

அன்புள்ள வவ்வால்,
இந்த கட்டுரை எழுத வேண்டிய சூழ்நிலை ஒன்று ஏற்பட்டது. இங்கே அப்பொழுது எழுதிய முன்னுரையைத் தந்துள்ளேன் படித்துப்பாருங்கள். இந்த மேட்டர் புரிந்த ஓரே ஆள்- மதி- நமுட்டு சிரிப்பு சிரிக்கிறாங்க
பாருங்க :-)
பிறகு இயற்கையாய் புத்திசாலியாய் இருப்பது ஒன்று, தன்னை புத்திசாலியாய் நினைத்துக் கொண்டு பிறருக்கு டார்சர் தருவதை நான் என்றும் செய்ய மாட்டேன் என்று மட்டும் உறுதியளிக்கிறேன் :-))


//நகைச்சுவை வேறு, அங்கதம் வேறு. அங்கதம் என்பதை இன்றைய தமிழில் சொல்வது என்றால் நக்கல். நக்கல்கள் பொதுவாய் சிரிப்பூட்டினாலும், சிலருக்கு கோபத்தைத் தரும். காரணம் நக்கல் என்பது ஏதோ ஒரு விஷயத்தில் உண்டான கோபத்தை, சிரிப்பு என்ற மேற்பூச்சில் வெளிப்படும் கோபமே!

ஒற்றை வார்த்தை- கழுதை என்ற சொல் எழுப்பிய தாக்கத்தை, பத்து நிமிடங்களில் இதை எழுதினேன். முன்பு தோழியரில் போட்டது. கொஞ்சம் சரி செய்து keetru.com ற்க்கு அனுப்பி வைத்தேன்//


பாலா, (கடவுளே கடவுளே- அண்ணாமலையார் ஸ்டைலில் படிக்கவும் )
ஒரு விஷயம் இல்லை என்பதால் நடக்காது, மாறாது என்பதற்கு உதாரணமாய் இழுத்தேன், அஷ்டே :-)

 
At Wednesday, 11 July, 2007, சொல்வது...

உஷா

:))

 
At Friday, 13 July, 2007, சொல்வது...

கழுதை, எருமை, வளர்ந்து நாய் ஆனதெல்லாம் சரிதான். இப்ப எனக்கு மேட்சிங் ப்ராப்ளம் கழுதைக்கு கழுதையா, கழுதைக்கு எருமையா... இப்படி எதுக்கு எது ஒத்து வருமுன்னு செல்லிருந்தீங்கன்ன கொஞ்சம் நல்லா இருக்கும்!

 
At Friday, 13 July, 2007, சொல்வது...

பத்மா :-)))))))))))))))))

ஐயா பாரி அரசு, யாரூக்கிட்ட என்ன கேள்விக்கிறதுன்னு இல்லையா :-) பாரூங்க, யாரூக்கு பதிவை சமர்பணம்
செஞ்சிருக்கேன், அவுக, அவுஹ குரு எல்லாம் இருக்காஹ, அங்கிட்டு போயி கேட்டா எருமையின் நிறம் கருமைன்னு சரியா கண்டுப் பிடிச்சி சொல்வாங்க :-))))

 

Post a Comment

<< இல்லம்