Tuesday, December 22, 2009

ராஜ் கெளதமன், வல்லிக்கண்ணன், கோவை ஞானி மற்றும் தஸ்லீமாநஸ் ரீன்

வாசிப்பு என்ற போதை என்ற தலைப்பு வைக்கலாம் என்று முதலில் நினைத்தேன்.
ஆனால் போதை என்பது நம்மை அடிமைப்படுத்துவது. ஏதுவானாலும் பரவாயில்லை
என்று என்னால் கண்டதையும் வாசிக்க இயலாது. ஆகையால் இதை விட முடியாத பழக்கம் என்றே சொல்லலாம் என்று நினைக்கிறேன்.

இங்கு என்வீட்டுக்கு அருகில் திரு. கோவை ஞானி அவர்கள் வீடு இருக்கிறது. அவர் வீடு முழுக்க புத்தகங்கள். பத்து புத்தகங்கள் அள்ளிக்கொண்டு வந்தேன்.

அதில் ராஜ் கெளதமன் எழுதிய சிலுவைராஜ் சரித்திரம், சண்முகம் எழுதிய சயாம் மரணரயில், தஸ்லிமாநஸ்ரீனின் சுயசரிதம்- என் இளமைக் காலம், கோவை ஞானியின் நானும் கடவுளும் நாற்பது ஆண்டுகளும், இவை நான்கும் நன்றாக இருந்தன.

சிலுவைராஜ் சரித்திரம்,, மதம் மாறினாலும் சாதியை மாற்றமுடியாது என்ற உண்மையை முகத்தில் அறைந்தாற்ப்போல சொல்கிறது.

வேலை வாய்ப்பு அலுவலகத்தில் சாதி என்ற இடத்தில் எஸ்ஸி எஸ்டி என்று எழுதுகிறார். எஸ்ஸி எஸ்டி என்று பொதுவாய் எழுதினால் எப்படி என்ற கேள்விக்கு, பறையன் என்று அவர் அலரும்பொழுது, எழுத்தில் தொனிக்கும் அவலம் தொண்டையை அடைக்க செய்கிறது.

கத்தோலிக்க கிறிஸ்துவ பாதிரியார், தன் சாதியை சார்ந்த அதாவது சைவ வேளாளருக்கு (இந்து) வேலை தருகிறார். இவருக்கு தராமல்.

தலித் கிறிஸ்துவர், இட ஒதுக்கீடு பெற முடியாது என்பதால் இந்துவாய் கன்வர்ட் ஆகும் இடத்தில் இப்புத்தகம் முடிகிறது. இன்னும் இரண்டு பாகம் இருக்கிறது என்கிறது கூகுள் தேடு பொறி.

தஸ்லீமாநஸ் ரீன் அவர்களின் இளமைக்காலம்- மிக சாதாரணமாய் இருக்கிறது. அவரின் அல்லா, குரான் குறித்த கேள்விகள், நூலை பிரபலமாக்கியிருக்க வேண்டும்.

சயாம் மரண ரயில்- நாவல் வடிவில் ஒரு வரலாற்று ஆவணம். புகைப்படங்களும் உள்ளன.

கோவை ஞானி அவர்களின் “நானும் கடவுளும் நாற்பது ஆண்டுகளும்- ஞானி அவர்களின் கடவுள் குறித்த தேடல், அவரின் பரிசோதனைகள், வாழ்க்கையில் அவர் செய்துக் கொண்ட சமரசங்கள் இவைகளை ஒளிவு மறைவு இல்லாமல் பகிர்ந்துக் கொள்கிறார்.

சமய அறிவு இல்லாமல், கடவுள் இல்லை என்றுச் சொல்பவர்கள் காலவெள்ளத்தில் அவர்களின் கடவுள் மறுப்பு கொள்கை நீர்த்துப் போய்விடுகின்றன. அவர்களால் வெகு சுலபமாய் கோவில், வேண்டுதல், யாகம், சோதிடம் என கொள்கைக்கு நேர் எதிராய் தங்களை மாற்றிக் கொள்ள இயலுகிறது. திராவிட இயக்க கொள்கை காலாவதி ஆனதன் காரணம் இப்பொழுது புரிகிறது.

இதை தவிர, கோவையில் நடைப் பெற்ற ஒரு புத்தக வெளீயிட்டு விழா.வாங்கிய புத்தகம் "ஆட்சி பொறுப்பில் எலிகள்"

மறைந்த எழுத்தாளர் திரு.வல்லிக்கண்ணன் அவர்கள், சரஸ்வதி இதழின் ஆசிரியர் திரு. வ. விஜயபாஸ்கரன் அவர்கள் நடத்திய வாராந்திர இதழான “சமரன்” என்ற இதழில், “பிள்ளையார்” என்ற புனைப்பெயரில் வல்லிக்கண்ணன் அடித்து தூள் பரப்பியிருக்கிறார். அரசியல், சமூகம்,
எழுத்தாளர்கள், திரைப்பட துறையினர் உட்பட திருப்பதி பெருமாளையும் விட்டு வைக்கவில்லை.

இன்றும் துக்ளக்கில் எழுதும் துர்வாசர் நினைவு வந்தாலும், அதில் இருக்கும் டிரைனஸ் இதில் இல்லை (என் பார்வையில்) அங்கதம் துள்ளி விளையாடுகிறது. அறிஞர் அண்ணாதுரை அறப்பரை அண்ணாதுரையாகிறார். நடிகர் திலகம் சிவாஜிகணேசன் எல்லாபடங்களிலும் சிவாஜி கணேசனாகவே காட்சியளிக்கிறார் என்கிறார்.

காஞ்சி தலைவன் பட வாசனங்களைக் குறித்து பிள்ளையார் சொல்வது- பணம் பண்ணுவதற்கு சினிமாவை ஒரு நல்ல சாதனமாக ஏற்றுக் கொண்டு விட்ட நடிகரும், கலைஞரும் படாதிபதிகளும் மக்களின் ஆசைகளையும் பண்புகளையும் ஏமாளிதனத்தையும் தங்களுக்கு லாபம் தரக்கூடிய துணைப் பொருளாய் மாற்றக் கூசுவதேயில்லை.

நிறைய வரிகளை ஹைலைட் செய்து இங்கு போட வேண்டும் என்று நினைத்தாலும், வாங்கிப்படித்துப் பாருங்கள். வாசிக்கும்பொழுது பல இடங்களில் முகத்தில் புன்னகை அரும்பினாலும், வாசித்து முடித்தவுடன் நீண்ட பெருமூச்சே வருகிறது. நாற்பத்தி ஆண்டுகளுக்கு பிறகும் ஆட்சி, தலைமை, சினிமா, சமூகம் எழுத்தாளர்கள் யாரும் மாறவேயில்லையே?

மேலே குறிப்பிட்ட ஐந்து புத்தகங்களில் சாயம் மரண ரயில் நீங்கலாய் சிலுவைராஜ், கோவை ஞானி, வல்லிக்கண்ணன் மற்றும் தஸ்லீமா நஸ் ரீன் ஆகிய நால்வரும் தாங்கள் சார்ந்த சமயத்தின் , முரண்பாடுகளைக் குறித்து கேள்வி எழுப்புகிறார்கள்.

பிற மதங்களை எள்ளி நகையாடுவது தவறு. பிற மதம் என்னும் பொழுது மத நம்பிக்கை இருந்தாலும் மற்ற மதத்தினர் பார்வையில் நாத்திகராகி விடுகிறோம். ஆனால் தஸ்லீமா
நஸ் ரீன் போல தன் மத முரண்பாடுகளை விமர்சிப்பது என்ன தவறு? இன்று இந்தியாவிலும்
பாதுக்காப்பு சரியாய் கிடைக்காமல் லண்டனுக்கு சென்று விட்ட அவர் நிலைமை பரிதாபத்துக்குரியது.

8 பின்னூட்டங்கள்:

At Tuesday, 22 December, 2009, சொல்வது...

//துக்ளக்கில் எழுதும் துர்வாசர் நினைவு //

வண்ணநிலவன்தான் துர்வாசர். :)

 
At Tuesday, 22 December, 2009, சொல்வது...

//சமய அறிவு இல்லாமல், கடவுள் இல்லை என்றுச் சொல்பவர்கள் காலவெள்ளத்தில் அவர்களின் கடவுள் மறுப்பு கொள்கை நீர்த்துப் போய்விடுகின்றன. அவர்களால் வெகு சுலபமாய் கோவில், வேண்டுதல், யாகம், சோதிடம் என கொள்கைக்கு நேர் எதிராய் தங்களை மாற்றிக் கொள்ள இயலுகிறது. திராவிட இயக்க கொள்கை காலாவதி ஆனதன் காரணம் இப்பொழுது புரிகிறது.//

உஷா,
சமய அறிவு என்பதை நான் மதங்களைப்பற்றிய புரிதல் என்று எடுத்துக் கொள்கிறேன்.

மதம் என்பதும் கடவுள் என்பதும் வேறு வேறு.
மதம் என்ற ஒன்று இல்லாமலேயே(அல்லது அதை ஒதுக்கிவிட்டு அல்லது அது பற்றிய புரிதல் இல்லாமலேயே) கடவுளின் இருப்பு பற்றிச் சிந்திக்கலாம். பல புதிய மதங்கள் அப்படி வந்ததுதான்.

***

//சமய அறிவு இல்லாமல், கடவுள் இல்லை என்றுச் சொல்பவர்கள் //

எந்தச் சமய அறிவு வேண்டும்?

உலகில் உள்ள அனைத்து மதப்புத்தகங்களையும் படித்தபின்னரா?
அல்லது
ஒவ்வொரு மதத்திலும் சிலகாலம் வாழ்ந்து பார்த்தபின்னரா?

மதம் வேறு கடவுள் வேறு. ஆனால் இரண்டும் இரட்டைக்கிளவி போல இணைந்து இருப்பது.

****

//திராவிட இயக்க கொள்கை காலாவதி ஆனதன் காரணம் இப்பொழுது புரிகிறது.//

திராவிட இயக்கக் கொள்கைகள் என்ன‌ என்ன உஷா?

திராவிட இயக்கம் என்றாலே அது ஏதோ "கடவுள் மறுப்பு மட்டுமே" என்றே நீங்களும் நினைக்கிறீர்கள் என்று எடுத்துக் கொள்ளலாமா?

திராவிட இயக்கம் என்பது ஒரு குறியீடு மட்டுமே. அது ஆரியம் என்ற ஒரு கோட்பாட்டிற்கு எதிராக வைக்கப்பட்ட குறியீடு. ஆரியம் கடவுளையும் மதத்தையும் கொண்டாடும்போது திராவிடம் அதைக் கேலி செய்தது.

ஆனால் கடவுள் மறுப்பு (நாத்திகம்) மட்டுமே திராவிடக் கொள்கை கிடையாது என்பதை மட்டும் இங்கே சொல்லிக் கொள்கிறேன்.

ஜோடா ப்ளீஸ்!


***

//பிற மதங்களை எள்ளி நகையாடுவது தவறு. பிற மதம் என்னும் பொழுது மத நம்பிக்கை இருந்தாலும் மற்ற மதத்தினர் பார்வையில் நாத்திகராகி விடுகிறோம்.//

எந்த‌ மதமும் நமது வாழ்வில் குறுக்கிடும்போது அதை விமர்சிக்கலாம்.

1. பாவிகளாகிய உங்களை இரட்சிக்க வந்த மகான் அழைக்கிறார். அவரை ஏற்காதவன் பாவி. .....

என்று பொத்தாம் பொதுவாக விளம்பரம் செய்யும் போது அவர்களை என்ன செய்வது? அவர்கள் அவர்களுக்குள்ளாகவே அல்லவா பேசிக்கொள்ளவேண்டும்? என்னையும் சேர்த்து பாவி என்று சொல்லும் அதிகாரத்தை இவர்களுக்கு யார் கொடுத்தது?

2."கூடையிலே குஸ்பூ மருத மலையிலே மல்லிகைப்பூ" என்று காலையில் ஸ்பீக்கரில் கத்தி ஊரையே எழுப்பும் ( கடவுள் நம்பிக்கை இல்லாதவனையும் சேர்த்து) இவர்களை என்ன செய்வது? எனது அன்றாட வாழ்வில் இவர்களின் நம்பிக்கை குறுக்கிடுகிறதே?
.......

இதுபோல நிறையச் சொல்லலாம்.

எனவே , உங்கள் வாழ்க்கையில் பிறரின் நம்பிக்கைகள் குறுக்கிடும்போது அவற்றை பார்க்காதமாதிரி (நமக்கேன் வம்பு) செல்லலாம் அல்லது எதிர்த்து கேள்வி கேட்கலாம்.

****


// ஆனால் தஸ்லீமா நஸ் ரீன் போல தன் மத முரண்பாடுகளை விமர்சிப்பது என்ன தவறு? //

இஸ்லாத்தைல் குரானை விமர்சிக்க நினைத்த மாத்திரத்திலேயே அவர் இஸ்லாமியர் இல்லை என்று ஆகிவிடுவார்கள். தஸ்லீமா முஸ்லீம் என்ற தகுதியை இழந்துவிடுகிறார். அப்படி இருக்கையில் உங்கள் கூற்றுப்படியே (பிற மதங்களை எள்ளி நகையாடுவது தவறு.) அவர் செய்வது தவறு என்றல்லா பொருள் வரும்?

**

கோவையில் என்ன என்னமோ நடக்குது அதில் நீங்கள் கலந்து கொள்வது இல்லையா? கோவை வந்தால் சந்திக்க விருப்பம். பார்ப்போம் இறைவனின் சித்தம் என்ன என்று

 
At Tuesday, 22 December, 2009, சொல்வது...

ஸ்ரீதர் நாராயணன்! தெரியும் :-)

 
At Tuesday, 22 December, 2009, சொல்வது...

கல்வெட்டு,
நான் சொல்ல வந்தது, பொத்தாம் போக்கில் கடவுளை நம்புகிறவன் முட்டாள் என்றுச் சொல்லிய
திராவிட இயத்தினரின் கொள்கை நீர்த்து விட்டது. இன்று கோவில்களில் குமியும் கூட்டமே சாட்சி.
ராமாயணம், மகாபாரதம் மற்றும் பைந்தமிழ் இலக்கிய சமய நூல்களை படித்து கடவுளின் இருப்பை
கேள்வியாக்கும்பொழுது ஒரு புரிதல் இருக்கும்.
பகுத்தறிவு என்ற பெயரில் ராமர் படத்துக்கு செருப்பு மாலை போடுவது என்னைப் பொறுத்தவரையில்
அராஜகம்.

கடவுள் வேறு மதம் வேறு என்று என்னால் பிரிக்க இயலவில்லை. பிரிக்க முயற்சி செய்தால் நீங்கள்
சொல்வதைப் போல புதிய கடவுள்கள் தோன்றுவார்கள்.

திராவிட இயக்கத்தின் மிக முக்கிய கொள்கை கடவுள் மறுப்பு. சரி அது நீர்த்துப் போய்விட்டது
என்று ஒத்துக் கொள்கிறீர்கள். ஆரிய மாயை அதில் இருந்து திராவிடர்கள்- மன்னிக்க தமிழர்கள்
மீண்டு விட்டார்களா :-))))))))))

எள்ளி நகையாடுவதற்கும், சமயங்களை கேள்வி கேட்பதற்கும் வித்தியாசமுண்டு இல்லையா?

கோவையில் என்ன நடக்கிறது? நான் காடாறு மாதம் நாடாறு மாதமாய் ஊர் சுற்றிக் கொண்டு இருக்கிறேன். விரைவில் சந்திப்போம்

 
At Tuesday, 22 December, 2009, சொல்வது...

>>ராஜ் கெளதமன் எழுதிய சிலுவைராஜ் சரித்திரம்...

When you get a chance, read his "Kaalachumai" (2nd part of Siluvairaj's life) too.

 
At Tuesday, 22 December, 2009, சொல்வது...

//வண்ணநிலவன்தான் துர்வாசர்//

அப்படியா? சீறிப் புறப்படட்டும் ஆட்டோக்கள். ;))

இப்ப திருப்தியா ஸ்ரீதர் அண்ணாச்சி..? :p

//பார்ப்போம் இறைவனின் சித்தம் என்ன என்று//

:))))

 
At Friday, 01 January, 2010, சொல்வது...

கோவை வந்தால் சந்திக்க விருப்பம்!

There is email address in my blog profile, if you want to communicate.

 
At Friday, 12 February, 2010, சொல்வது...

இன்றும் துக்ளக்கில் எழுதும் துர்வாசர் நினைவு வந்தாலும், அதில் இருக்கும் டிரைனஸ் இதில் இல்லை (என் பார்வையில்) அங்கதம் துள்ளி விளையாடுகிறது.//

வக்கீல் சுமதி தான் துர்வாசர்ங்கற பேரிலே எழுதறதாச் சொன்ன நினைவு!

 

Post a Comment

<< இல்லம்