Wednesday, September 16, 2009

KK nagar RTO ஆபிசும், மரத்தடி மருத்துவர்களும்

காலாவதி ஆகிவிட்ட ஓட்டுனர் உரிமத்தை புதுப்பிக்க கேகே நகர் ஆர்டிவோ அலுவலகத்துக்கு சென்றிருந்தோம். அது இது என்று நாலைந்து தாள்களில் எல்லா விவரங்களையும் நிரப்பிவிட்டு, புகைப்படம், கையெழுத்து, போட்டோ காப்பி என்று என் கணவர் இங்கும் அங்கும் அலைந்துக் கொண்டிருந்தார்.

கூட்டம் அதிகமிருந்ததால், சாலையோர மரத்தடி நிழலில் நான் நின்றிருந்தேன். அங்கு வந்த என் கணவர், கையில் இருந்த தாள்களை மரத்தடியில் அமர்ந்திருந்தவரிடம் தர, சக் சக் என்று
முத்திரை இட்டு, முப்பது ரூபாய் வாங்கி பையில் போட்டுக் கொண்டார்.

யாரு ஏஜண்டா என்றுக் கேட்டதற்கு இல்லை கண் டாக்டர், என் பார்வை தெளிவாய் இருப்பதற்கு சான்று தந்துள்ளார் என்றார்.

அந்த பிளாட்பாரத்தில் அமர்ந்திருந்த “கண் டாக்டர்” கையில் பேனா மற்றும் முத்திரையும்,
மையும் மட்டுமே இருந்தது. நான் பார்த்துக் கொண்டே இருந்தேன். முகத்தில் கண் என்ற உறுப்பு இருக்கிறதா என்றுக்கூட நிமிர்ந்தும் பார்க்காமல், முப்பது ரூபாய்க்கு தன் கடமையை செய்து முடித்தார்.

வண்டி ஓட்டுபவர்களுக்கு பார்வை சரியாய் இருக்க வேண்டும் என்பது ஒரு அடிப்படை தகுதி. ஒரு அரசாங்க அலுவலத்தில் இவரைப் போல நாலு பேர் பிளாட்பாரத்தில், எந்த வித பரிசோதனையும் செய்ய இயலாத இடத்தில் சான்றிதழ் தர யார் அனுமதிக்கிறார்கள்? அரசு அதிகாரிகளுக்கு தெரியாமல் இது நடக்கிறது என்றால் அது வடிக்கட்டிய பொய்யாக இருக்கும் என்பதில் எந்த வித சந்தேகமும் யாருக்கும் வராது.

நான் பார்த்தவரையில் ஆட்கள் வந்துக் கொண்டே இருந்தார்கள். சராசரியாய் ஒரு ஐம்பது/ நூறு பேருக்கு இந்த சான்றிதழ் தந்தால், மாதம் அவருக்கு கிடைக்கும் தொகை எவ்வளவு? கமிஷன், அது இது போக கையில் காசு தாராளமாய் மிச்சும் RTO அலுவலகம் அருகிலேயே, ஒழுங்காய் கண் பரிசோதனை செய்ய, சிறிய கிளினிக் வைக்கலாம். அல்லது அரசாங்கமே, அவர்களுக்கு சிறிய அறைகள், அலுவலகத்திலேயே ஒதுக்கலாம்.

இப்படி ஒரு சாதாரண விதியைக் கூட பின்பற்ற வழிமுறையில்லாத ஊரில்
நிமிடத்துக்கு நாலு விபத்து ஏன் நடக்காது?

Labels:

13 பின்னூட்டங்கள்:

At Wednesday, 16 September, 2009, சொல்வது...

பாருக்குள்ளே நல்ல நாடு

 
At Wednesday, 16 September, 2009, சொல்வது...

உஷா
இங்கே கண் பார்வை நற்சான்றிதழ் தேவையில்லை. நாமாக படிவத்தில் சொல்வதுதான். அது தவறாக இருந்து, விபத்து நேரிட்டால் நாம்தான் பொறுப்பு, மற்றும் படிவத்தில் பொய் சொல்வது மத்திய அரசு குற்றமாகும் என்பதால் தண்டனை மிக அதிகம்.

65 வயதுக்கு மேல் மீண்டும் உரிமையை புதுப்பிக்கும் போது கண்மருத்துவரின் சான்றிதழ் வேண்டும்.

 
At Wednesday, 16 September, 2009, சொல்வது...

அரசாங்கம் மட்டும் காரணமில்லைங்க நாமளும் தான். யாரும் இவர்களிடம் தான் சென்று மருத்துவச் சான்றிதழ் பெறவேண்டும் என்று கட்டாயப்படுத்தப்படுவதில்லை. நமது அவசரம் அருகில் கிடைப்பதைப் பயன்படுத்திக்கொள்கிறோம். நாம் நினைத்தால் உண்மையாகவே ஒரு கண்மருத்துவரிடம் சென்று நம்மை சோதனைசெய்து மருத்துவரின் கையொப்பம் பெற்றுத் தரலாமே. ஆனால் யாருமே அப்படிச்செய்வதில்லை. காரணம் அவசரம். கொஞ்சம் பொறுமைக் காத்தால் இலஞ்சம் இன்றி காரியம் நடைபெறச் செய்யலாம். அவசரமா....கொஞ்சம் தைரியம் வேணும்.....இலஞ்ச ஊழல் காவல்துறையில் புகார் செய்தால் கச்சிதமாய் முடியும்.

 
At Wednesday, 16 September, 2009, சொல்வது...

//யாரு ஏஜண்டா என்றுக் கேட்டதற்கு இல்லை கண் டாக்டர், என் பார்வை தெளிவாய் இருப்பதற்கு சான்று தந்துள்ளார் என்றார்.//
இவர் கண்டாக்டரின் ஏஜென்ட்டாக இருப்பார். டாக்டர் இவரிடம் தன்னுடைய கையொப்பத்தை ரப்பர் ஸ்டேம்ப்பாக கொடுத்திருப்பார். இப்பணிக்கென டாக்டர் முறையான அனுமதி துறையிடம் பெற்றிருப்பார் என நினைக்கிறேன்.

இதேப்போல மின்துறையில் ISI சான்றிதழ் பெற்ற சாதனங்களைதான் பயன்படுத்த வலியுறுத்துவார்கள். மீட்டர் புதியதாக பொருத்தல் போன்ற பணிகளுக்கு நீங்கள் ISI சான்றிதழ் பெற்ற மீட்டரைதான் உபயோகப்படுத்திகிறீர்கள் என்ற சான்றை பெறவேண்டும். இதற்காக இத்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஊழியர்கள் இப்பணியை முறையான அனுமதியை பெற்று சான்றிதழை வழங்குவார்கள்(ரூ.30, ரூ.50 என்று சார்ஜ் செய்வார்கள்).

 
At Wednesday, 16 September, 2009, சொல்வது...

//ஒழுங்காய் கண் பரிசோதனை செய்ய, சிறிய கிளினிக் வைக்கலாம். அல்லது அரசாங்கமே, அவர்களுக்கு சிறிய அறைகள், அலுவலகத்திலேயே ஒதுக்கலாம். ///

:(

அந்த கண் பரிசோதிக்கும் நபரின் பெயரும்,முத்திரையும் மட்டும் தந்துவிட்டு பரிசோதகர் எங்காவது ஓரிடத்தில் கிளினிக் வைத்து சம்பாதித்து கொண்டுதான் இருப்பார் அவருக்கு இந்த நபர் ஏஜெண்டாய் இருந்து கையெழுத்து போட்டு காசு கொடுக்கும் ஆளாக இருக்ககூடும்!

அரசு அலுவலகங்களுக்காக எத்தனை எத்தனை RTI போட்டாலும் RTO ஆபிஸ் மட்டுமல்ல மற்ற எல்லா அலுவலகங்களிலும் தவறுகள் சரியாக நடந்துக்கொண்டுதான் இருக்கும்!

 
At Wednesday, 16 September, 2009, சொல்வது...

என்ன கொடுமையா இருக்கு.. :(( ஆமா, உங்க வீட்டுக்காரர் ஏன் அங்கே வாங்கினார்?!

 
At Wednesday, 16 September, 2009, சொல்வது...

பத்மா,

---இங்கே கண் பார்வை நற்சான்றிதழ் தேவையில்லை. நாமாக படிவத்தில் சொல்வதுதான். ---

அப்படியா? நான் பார்த்தவரை மூன்று சோதனைகள் நடத்துகிறார்கள்.

1. சுழலும் விளக்கு எங்கிருந்து வருகிறது? அவசர வண்டிகள் (காவல்துறை, மருத்துவம், தீயணைப்பு) எங்கிருந்து வருகிறது என்று சொல்ல வேண்டும் - இடதா? வலதா?

2. எழுத்துகளையும் எண்களையும் வாசிக்க வேண்டும். 20/20 பார்வை

3. கேட்கும் திறன்

சிகாகோ, நியு யார்க், எல்லாவிடத்திலும் இந்த பரிசோதனைகளை அலுவலரே செய்து விடுவார். டென்ஷனில் பார்வைக் குறைப்பாட்டில் தவறு செய்தால் ஓரிரு எழுத்து வேண்டுமானால் எடுத்துக் கொடுப்பார் (அ) சரி செய்து தருவார்.

 
At Wednesday, 16 September, 2009, சொல்வது...

கண்பார்வை சரியாக இருக்கிறது என்பதை நாம் சொல்வதை நோடரைஸ் செய்பவராக இருந்தாலும் இருக்கும். சொன்னது இவர்தான் என்று கையொப்பமும் முத்திரையும் இடுபவராக இருக்கலாம் என்று தோன்றியது.

 
At Wednesday, 16 September, 2009, சொல்வது...

நியூஸியிலேயும் லைசன்ஸ் புதுப்பிக்கும் இடத்தில் உள்ள சின்ன மெஷீனில் ( மைக்ரோஸ்கோப் போல ஒரு கருவி) நாம் தலையைக் குனிஞ்சு ரெண்டு கண்ணையும் அந்த லென்ஸ்களில் வச்சுக்கிட்டு அலுவலர் மாற்றிமாற்றிப்போடும் ஸ்லைடுகளிலுள்ளதைப் படிச்சுக் காமிக்கணும். அவுங்களுக்கு ஏதேனும் சந்தேகம் வந்தால் கண்மருத்துவர்கிட்டே போகச் சொல்லுவாங்க.

கார் ஓட்டிக் காமிக்காமலேயே, ஸ்டியரிங் பிடிக்காமலேயே லைசன்ஸ் வாங்குறதெல்லாம் இங்கே இந்தியாவில்தான்(-:

 
At Thursday, 17 September, 2009, சொல்வது...

எல்லா கண் டெஸ்டும் சரிய பண்ணி அப்புறம் உரிமம் வாங்கின பிறகு கண் பார்வைக் குறை பாடு வந்தா என்ன பண்ண முடியும் :)அதுனாலதான் ஒரு நம்பிக்கைல கைநாட்டு வக்கிறாங்க.உங்களுக்கும் வேலை வேகமா முடிஞ்சுருதுல்ல?

அவனவன் வண்டியே ஓட்டத் தெரியாம இன்டர்னேஷனல் உரிமம் எடுக்கிறான் ..நீங்க இந்த சுசுசுமால் மேட்டருக்கு ஏன் இம்புட்டு டென்சனாவுரீங்க:)

இந்தியாவின் எழுதப்படாத சட்டப் படி ரோட்ல மக்களோட சேஃப்டி வண்டி ஓட்டுறவங்க பொறுப்பு கிடையாது ..நடந்து போறவங்க பொறுப்பாக்கும் :)

பி.கு : எனக்கு ஒரு சந்தேகம்...சட்டப்படி திருதராஷ்டிரனுக்கு ஓட்டுனர் உரிமம் தரமாட்டாங்க. காந்தாரிக்கு தருவாங்களா? மாட்டாங்களா?

 
At Thursday, 17 September, 2009, சொல்வது...

அன்புள்ள உஷா
உங்கள் புலம்பல் புரிகிறது.
இந்த சுப்ஜெக்டெய் ரொம்ப கிளப்பினால் கண் மருத்துவரே வந்து (ஆனால் அதே மாதிரி டெஸ்ட் செய்யாமல்) இருநூறு ரூபாய் கறந்து விடுவார்!! எல்லாவற்றையும் கண்ணை மூடிக்கொண்டு(!!!) வாயை மூடிக்கொண்டு ஏற்று கொள்ள வேண்டியது தான். வேறு வழி?
லதா sridhar

 
At Thursday, 17 September, 2009, சொல்வது...

நாம தானே அரசாங்கம்.. நாம் ஏன் அந்த மாதிரி செயலை ஊக்குவிக்கனும். நம்ம யாருமே அந்த சான்றிதழை வாங்க தயாரில்லை என்றால், அந்த ஆள் துண்ட காணோம்.. துணிய காணோம்னு ஓடி போக மாட்டானா என்ன?

என்ன ஒன்னு அந்த செயலை நம்ம மட்டும் செஞ்சா நம்ம “பொழைக்க தெரியாத” மனுசர் லிஸ்ட்ல சேத்துடுவாங்க :)

 
At Thursday, 17 September, 2009, சொல்வது...

தவிர்க்க இயலாத அழிவிற்கு சென்றுக் கொண்டிருக்கிறோம் என்பதற்கு உங்கள் பதிவும் ஓர் சாட்சி.

 

Post a Comment

<< இல்லம்