Wednesday, October 21, 2009

தன் முயற்சியில் என்றுமே மனம் தளராத...

recession ஐயா recession- சிறுகதை


சர்வேசன்500- "நச்"னு ஒரு கதை- 2009 -போட்டிக்கு

காலை ஆறுமணியானால் லோடு இறக்க ஓடும் மாணிக்கம், வேலைக்குப் போகாமல் யோசனையுடன் உட்கார்ந்திருப்பதை கவலையுடன் பார்த்தாள், அவன் மனைவி செல்வி. நாலைந்து நாளாகவே முகமே சரியில்லை. என்ன ஏது என்றுக் கேட்டதற்கும் பதில் சரியாய் சொல்லவில்லை.

அவன் மனதை குளிர்விக்க ஓரே ஒரு மருந்து, விஜய்!

"விஜேஜ், டாடிக்கு நேத்து எளுதினத காட்டு" என்றதும், மூன்று வயது விஜய், தன் புத்தக பையை தூக்கிக் கொண்டு வந்து, நோட்டுபுத்தகத்தை எடுக்கும்பொழுது, மாணிக்கம் சட்டென்று எழுந்து சட்டையை எடுத்துப் போட போனான். அதற்கு மேல் தாங்காமல் செல்வி, "இன்னாங்க! நானும் நாலு நாளா பாக்குரேன். மொவமேசரியில்லே. வேல செய்யுர இடத்துல ஏதுனாச்சும் பிரச்சனையா?'' என்று ஆரம்பித்தாள்.

"ப்சு... என்றவன், எடுத்த சட்டையை தூர கடாசிவிட்டு, அப்படியே உட்கார்ந்துவிட்டான். செல்வி பயந்துப் போய், '' ஒடம்புக்கு ஏதாவது..." என்று இழுக்க, "வேல போயிடுச்சு. பாய் நேத்து வேலைல இருந்து நின்னுக்க சொல்லிட்டாரு. வேற எடத்துலையும் கேட்டுப் பார்த்தேன், எங்கியும் கிடைக்கிறா மாதிரி தெரியலே"

செல்வி அப்படியே நின்றுவிட்டாள், "இன்னாய்யா சொல்றே... புள்ளய கான்வெட்டுல சேக்கணும், புக்கு யூனிபார்ம்முன்னு செலவு இருக்கு. இப்ப இப்படி சொன்னா எப்படி" அழுகையாய் கேட்டாள்.

." முப்பத்திரெண்டு பேரு லோடு ஏத்துறோம், எறக்குறோம். இருபது பேர நிக்க சொல்லிட்டாரு. பிசினசு டல்லு. பாவம் பாய்! பொண்ணுக்கு கண்ணாலம் வேற வெச்சியிருக்காரு. நேத்து ஆளுக்கு பத்தாயிரம் எடுத்து தந்தப்போது அளுதுட்டாரு. இப்ப எல்லா எடத்துலையும் கஸ்டம்தான். லைசன்சு இருக்கே, டைவரு வேலை கெடைக்குதான்னு பார்த்தா, மாசம் ரெண்டாயிரம் கெடச்சா அதிகம். இந்த துட்டுல பட்டணத்துல சமாளிக்க முடியாது. ஊருக்கே போயிடலாம்" என்றான்.

"அங்க நாட்டுபுறத்துக்கு போயி....இஸ்கூலு ஒண்ணும் சரியில்ல. புள்ளைய வேற கான்வெட்டுல படிக்க வைக்கணும்..." செல்வி இழுக்க, " நமக்குன்னு வூடு இருக்கு, அண்ணன ரிப்பேரு செய்ய சொல்லிடரேன். காட்டுல மல்லா கொட்ட, சோளம்ன்னு போட்டு, ரெண்டு வருசம் ஓட்டிடலாம். அப்பாலிக்கா நெலம சரியாயிடும்ன்னு சொல்லுராங்க. நீ மூட்ட கட்ட ஆரம்பி, ஞாயித்துகிழம அமாவாச கெளம்பிடலாம்" என்றான் முடிவாக!


சலீம் பாய், கணக்கு புத்தகத்தைத் திரும்ப திரும்ப புரட்டிக் கொண்டு இருந்தார். சைமூனிசா டீ கிளாசை நீட்டியப்படி "ஆலுகாஸ்ல புது மாடல் நெக்லேசு பாத்திமா பாத்துச்சாம். ரொம்ப அளகா இருக்குமான்னு சொல்லிச்சா. அதுக்கு என்ன வாங்கிக்க, நீ கேட்ட உங்க வாப்பா வேணான்னா சொல்லப்போறாருன்னேன்". என்று உல்லாசமாய் பேச்சை ஆரம்பித்தாள்.

பாய் பதில் சொல்லவில்லை.

"சயீரா வூட்டுல வெள்ளி டின்னர் செட் பார்த்தேன். மறுவிருந்துக்கு கூப்பிடும்போது அதுல சாப்பாடு வெச்சா அந்தஸ்தா இருக்கும். ஆறு செட்டு ஒன்னு ஒண்ணரை ஆயிடும்.மருமவனுக்கு காரு புக் செஞ்சிட்டீயளா" மகளின் கல்யாணம் ஏற்பாடுகளை உற்சாகமாய் சொல்லிக் கொண்டு இருந்தவளை, கை காட்டி நிறுத்த சொன்னார் சலீம்.

"சைமு, புதுசா ஒண்ணும் இழுத்து விடாதே! இப்ப நெலம சரியில்லே. நாலு காண்டிராக்ட் கைய வுட்டு போயிடுச்சு. வூடு, நெலம்ன்னு ஏதுனாச்சும் விக்கலாம்ன்னா நிக்கா சமயத்துல சேதி நாலு பேரு காதுல போச்சுன்னு, ஆளுக்கு ஆளு தப்பா பேச ஆரம்பிச்சிடுவாங்க. இருக்கிறத வெச்சி நிக்கா முடிச்சிடலாம். புள்ளைய கூப்பிடு. நா எடுத்து சொன்னா புரிஞ்சிக்கும்" என்றார் சலீம்.

"யா அல்லா! நாலு வருஷமா பிசினசு நல்லாதானே போய்கிட்டு இருந்துச்சு. ரெண்டு லாரி வாங்குனீஹ. கோயம்பேடுல ஆபிசு போட்டீங்ஹ, இப்ப நஸ்டம்ன்னா? எங்கையில மறைக்காதீங்க, உங்க வாப்பாபோல, எதுசாச்சும் தொடுப்பா... "கண்ணிர் பெருக அழ ஆரம்பித்தாள் சைமுனிசா.

"அட சீ வாய களுவு. போதாக்காலம் ஒலகத்தையே ஆட்டி வைக்குது. படிக்காத முண்டம் ஒனக்கு சொன்னா புரியாது. மூஞ்சிய களுவிக்கிட்டு, ஆவுர ஜோலிய பாரு. இருக்கிற காசுல, நிக்காஹ் முடிச்சிடலாம். ஆத்தாளும், மவளும் புதிசா எதையும் இளுத்து வுடாதீங்க, நா அவ்வளவுதான் சொல்லுவேன். நமக்காவது பிசினசு பளக்கமானது. வூடு, நெலம்ன்னு இருக்கு. ஆனா நம்ம கஸ்டமர், சமையல் காண்டிடாக்ட் எடுத்து செய்யராரே விநாயகம், கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்துக்கிட்டு இருந்தவரு, நேத்து திரும்ப சமையல் வேலைக்குதான் போவணும் பாய்ன்னு மன்சு ஒடிஞ்சி பேசினாரு. இன்ஷா அல்லா! எல்லாம் சரியாயிடும், மனச தளரவிடாதீங்கன்னு ஆறுதலா நாலு வார்த்த சொல்லிட்டு வந்தேன்"


சமையல் காண்டிராக்டர் விநாயகம், மகனின் பெயரை அழைத்துக் கொண்டே உள்ளே நுழைந்தார். 'இப்பதாங்க வந்தான். உங்களுக்கு காபி தரட்டா?" என்று மனைவி கேட்கும்பொழுதே, நாமக்கலில் பிரபல பள்ளியில் படிக்கும் மகன் உள்ளே இருந்து வந்தான்.

"நைனா! போன்ல சொன்னேனே, எக்சாம் செஞ்சிருக்கேன். எப்படியும் கட் ஆப் மார்க் 195க்கு கம்மியில்லாம வந்துடும். டிரிபிள் ஈ கெடைச்சிடும்ன்னு
எங்க சார் சொன்னார்" மகன் உற்சாகமாய் சொல்லிக் கொண்டு இருக்க, விநாயகம், "தோ பாரு, இப்ப இருக்கிற நெலைமைல கம்ப்யூட்டர் படிப்பு பிரேஜினப்படாதுன்னு எல்லாரும் சொல்றாங்க. பி ஈ மெக்கானிக்கல் கெடைக்குமான்னு பாரு. நாளைக்கு படிச்சி முடிச்சதும் வேல கெடைக்க வேணாமா" என்றதும், பையன் , " என்னாப்பா" என்று அழுகையாய் கேட்க, மனைவி நடுவில் பூந்து பிள்ளைக்கு பரிந்து வர, விநாயகம் "அப்புறம் இன்னொரு விஷயம், கவுருமெண்டு காலேஜூ சென்னையிலேயே என்னா சப்ஜெட் கிடைக்குதோ படி. பிரைவேட் காலேஜ்க்கு எல்லாம் பீசு, ஹாஸ்டல் செலவு எல்லாம் இப்ப முடியாது"

பையன் முகம் மாறிப் போக, "என்னாங்க சொல்றீங்க?" மனைவி புரியாமல் கேட்க, " நா கேடரிங் காண்டிராக்ட் எடுத்து நடத்துகிற ரெண்டு ஐடி கம்பனிலையும் எல்லாத்தையும் குறைச்சிட்டாங்க. நாலு தினுசு பிரேக் பாஸ்ட், மதியம் வகைவகையா சாப்பாடு , சாயந்தர ஸ்னாக்ஸ்ன்னு மாசம் அறு எழுவதுன்னு இந்த நாலைஞ்சு வருஷமா நல்ல காசு. இப்ப பிரேக் பாஸ்ட்ன்னா ஓரே ஒரு டிபன், ஸ்நாக்ஸ் வேணாமாம், மதிய சாப்பாடும் அளவு சாப்பாடா ஆயிடுச்சு. கையில காசு புழங்குற ஜோர்ல, உங்கம்மா புடுங்கல் தாங்காம த்ரி பெட் ரூம் பிளாட் வேற புக் செஞ்சதுல, அதுக்கு வேற பணம் பாக்கியிருக்கு. நா என்ன செய்வேன்? நம்ம நெலைமையையும் புரிஞ்சிக்க அம்மாவும் புள்ளையும் முயற்சி செய்யுங்க" என்றுச் சொல்லி
விட்டு, துண்டை உதறிப் போட்டுக் கொண்டு வெளியேறினார்.


"அண்ணே! விஜய்!செல்வியையும் இட்டுக்கினு நம் ஊருக்கே வந்துடலாம்ன்னு இருக்கேன்" என்று போனில் தம்பி மாணிக்கம் சொல்வதற்கு உம் கொட்டி விட்டு போனை வைத்தான் அவன் அண்ணன்.

"இன்னாங்க விஸ்யம்?" என்றுக் கேட்ட மனைவியிடம், "கேப்பவன் கேணப்பயலா இருந்தா கேப்பையில நெய்யி ஒளுகுதுன்னுவாரு ஒன் கொழுந்தன். அமேரிக்கால பணங்கஸ்டமாம், இங்க சென்னையில இவருக்கு மூட்ட தூக்குற ஜோலி பூட்சாம். பொண்டாட்டி புள்ளையோட கிராமத்துக்கு வந்துட போறாராம். தோட்டத்து ஓட்டு வீட்ட, ரிப்பேர் செஞ்சி வைக்க சொல்லுராரு. அடுத்த ஞாயித்துகிழம வாராங்களாம்" என்றான் மாணிக்கத்தின் அண்ணன்.


அந்த மல்டி நேஷனல் கம்பனியின் மீட்டிங் அறை. பத்து பதினைந்து பேர்கள் நாற்காலியில் அமர்ந்திருக்க, தலைமை மேலாளர் பேச்சை ஆரம்பித்தார்.

'காஸ்ட் கட் உலகம் முழுக்க ஆரம்பித்தாகிவிட்டது. நம்ம பிராஞ்சுக்கு காண்ட்டீன் செலவை குறைச்சதுல, ஹெட் ஆபிசுக்கு ரொம்ப சந்தோஷம். இதுல பார்த்தா பெருசா எந்த இழப்பும் இல்லை. எங்கப்பார்த்தாலும் டயட் டயட்டுன்னு சொல்லிக்கிட்டு இருக்கோம். காலைல வீட்டுல சாப்பிடுகிறாமாதிரி ரெண்டு ஐட்டம் போதும். அதே போல ஸ்நாக்ஸ், ஆயில். கொலஸ்ட் ரால் வேணவே வேணாம். மதியமும் சாம்பார், பொரியல்,
ரசம் மோரூன்னு லிமிட்டா சாப்பிட்டா நம்ம உடம்புக்கும் நல்லது. நாம செஞ்ச சின்ன மாற்றத்துல நன்மையே அதிகம். வேற எப்படி காஸ்ட் கட் செய்யலாம்? பர்சனல் கார் வேண்டாம். பூல் கார் மேனேஜ்மெண்ட் லெவல்லலயும். எரி பொருள் சிக்கனம், செலவும் கம்மியாகும், சுற்றுபுற சூழ்நிலைக்கும் நம்மால் ஆனது. என்ன சொல்றீங்க? காரிடர்ல லைட் குறைச்சது, டாய்லட் டிஷ்யூ குறைவா வைக்கிறது. இப்படி சின்ன சின்ன விஷயத்துலையும் சிக்கனம் செய்யலாம்ன்னு நெட்டுல படிச்சேன். உங்க ஐடியாசும் சொல்லுங்க" என்று உற்சாகமாய் தொடர்ந்தார்

"இவ்வளவு காஸ்ட் குறைச்சியிருக்கோமே, இந்த வருஷ சாலரி, வேரியபிள் பேயில் நல்லா ஹை இருக்குமில்லையா?" வெங்கட் சரியான பாயிண்ண்டை பிடித்தார்.

"சந்தேகம் என்ன?" புன்னகை பொங்க தலைமை நிர்வாகி சொன்னதும், கைதட்டல், மேஜை தட்டலில் அறை அதிர்ந்தது.

********

20 பின்னூட்டங்கள்:

At Wednesday, 21 October, 2009, சொல்வது...

தன் முயற்சியில் மனம் தளராத விக்கிரமாதித்தனாய் மூன்றாம் முறையாய் போராடி இந்த சிறுகதையை
தமிழ்மணத்தில் நுழைத்துள்ளேன். test

 
At Wednesday, 21 October, 2009, சொல்வது...

விஷயம் அதுதான் மேடம்..

கொட்டேஷன் ஸிம்பள்களை தமிழ்மணம் ஏற்றுக் கொள்வதில்லை..

நாங்களும் இதுபோல் ஏற்கெனவே பட்ட பின்புதான் புரிந்து கொண்டோம்..!

 
At Wednesday, 21 October, 2009, சொல்வது...

நாட்டுநடப்பை ரொம்ப அழகா சொல்லியிருக்கீங்க...

மேல்தட்டு என்னிக்கும் மேல்தட்டுதான்.கஷ்டமெல்லாம் நடுத்தர வர்க்கத்துக்கும் அடித்தட்டு மக்களுக்கும்தான்...

 
At Wednesday, 21 October, 2009, சொல்வது...

வாழ்க்கை வட்டம்

சுத்தி வந்துட்டீங்க!

வாழ்த்துக்கள்! :)

 
At Wednesday, 21 October, 2009, சொல்வது...

விளக்கத்துக்கு நன்றி உண்மை!

சுந்தரா,ஆயில்யன்! நன்றி

 
At Wednesday, 21 October, 2009, சொல்வது...

மீண்டும் ஒரு அருமையான topical கதை ! சுற்றி நடப்பதை அழகாக படம் பிடிக்கும் முதன்மையான எழுத்தாளர் தான் !!

 
At Thursday, 22 October, 2009, சொல்வது...

நன்றாக இருக்கிறது உஷா. வாழ்த்துக்கள்!

//தன் முயற்சியில் மனம் தளராத விக்கிரமாதித்தனாய் மூன்றாம் முறையாய் போராடி..//

இதையும் ரசித்தேன்:)!

 
At Thursday, 22 October, 2009, சொல்வது...

என்ன ஒரு கேயாஸ் தியரி! நடத்துங்க!

 
At Thursday, 22 October, 2009, சொல்வது...

நன்றி பப்பு, ராமலஷ்மி, மணியன்

 
At Thursday, 22 October, 2009, சொல்வது...

ஹே... சூப்பருங்க... பிரமாதமா இருக்கு கதை... வாழ்த்துக்கள்....

 
At Thursday, 22 October, 2009, சொல்வது...

வாழ்த்துகள்

நன்றாக இருக்கிறது

 
At Thursday, 22 October, 2009, சொல்வது...

உஷா.. கதை நன்றாக இருந்தாலும் ரியாலிட்டி இதுவல்ல என்பது ஐ.டி.யில் இருப்பவர்களுக்குத்தான் தெரியும். காஸ்ட் கட்டிங்கில் முதலில் அவர்கள் கை வைப்பது எம்ப்ளாயீஸ் சாலரிதான். :(

சொல்லப்போனால் மற்ற தொழில் செய்பவர்கள் ஐ டி கம்பெனியின் நேரடியான‌ காஸ்ட் கட்டிங்கால் பாதிக்கப்படுவதை விட, ஐ டி எம்ப்ளாயீஸ் சாலரி கட் செய்வதால் தங்கள் செலவைக் குறைத்துக் கொள்வதால் பாதிக்கப்படுவதுதான் அதிகம். அதையும் விட அந்த குறைக்கப்பட்ட சாலரியும் முற்றிலும் பறி போகும் அபாயத்துடன் எந்நேரமும் மன அழுத்தமும் கூட.

ஐ டி மக்கள் குறித்து வெளியில் இருந்து பார்ப்பவர்களின் எரிச்சலாகவே இந்த கதையின் முடிவும் எனக்குத் தெரிகிறது. மன்னிக்கவும்.

 
At Thursday, 22 October, 2009, சொல்வது...

திகழ்,ராம்குமார் அமுதன் நன்றி

 
At Thursday, 22 October, 2009, சொல்வது...

வெண்பூ, நான் எழுதியதை நானே படித்துப் பார்த்தேன் :-) எங்கும் ஐடி கம்பனி என்ற சொல்
சொல்லப்படவில்லையே? என் கணவர் பணிபுரியும் (பவர்) எம் என் சியில் நடக்கும் காஸ்ட் கட் கூத்துக்களை உதாரணமாய் டிரைவர்களை பணி நீக்கம் செய்து போன்று கீழ் தட்டு மக்களின் வாழ்க்கையை பாதிப்பதை பேசிக் கொண்டு இருப்போம்.

சூரத்தில் இருந்தப் பொழுது, இந்தியாவிலேயே நம்பர் ஒன் கம்பனியில் காண்டீனில் காஸ்ட் கட்
என்ற பெயரில் போடுவது பருப்பு தண்ணியும், ஒரு சப்ஜி மற்றும் இரண்டு சப்பாதிகள். அங்கு காஸ்ட்
கட் என்பது காமடியாய் போய் விட்டது. வயிற்றெரிச்சலை மறைக்க ஜோக்காய் சொல்லி சிரித்துக்
கொண்டு இருப்போம் என்று அங்கு வேலை செய்பவர்கள் சொன்னார்கள்.

இத்தகைய அலுவலகங்களில் கீழ் நிலை பணியாளர்கள் அடிப்பட்டுகிறார்கள். மத்திய நிலை பணியாளர்கள் பாதிக்கப்படுகிறார்கள். மேல் தட்டு தன் தனிப்பட்ட செலவுகளை- அதாவது கம்பனி கணக்கில்- எள்ளளவும் குறைத்துக் கொண்டதாய் எனக்கு தெரியவில்லை.

வெண்பூ, ஒரு சுவாரசிய அனுபவ பகிர்தலுக்கு நன்றி

 
At Friday, 23 October, 2009, சொல்வது...

நல்லா இருக்கு உஷா. பரிசு பெற வாழ்த்துக்கள் :)

 
At Friday, 23 October, 2009, சொல்வது...

உஷா...

கதை நல்லா இருக்கு...

அதோடு பின்னூட்டத்தில் உங்களுக்கும், வெண்பூ உரையாடல் ரசித்தேன்...

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்...

 
At Wednesday, 04 November, 2009, சொல்வது...

கதையும், வெண்பூ அவர்களின் கருத்தும், தங்களின் பதிலும் அருமை. வாழ்த்துக்கள்.

 
At Friday, 13 November, 2009, சொல்வது...

முதல் பகுதி வெகு இயல்பு. கடைசி பகுதி வேறு சில பேர் சொன்னது போல் உண்மையில்லை. மக்கள்

போட்டிக்கு வாழ்த்துக்கள்
*******

இந்த எளியவனும் கதை போட்டியில் கலந்துள்ளேன். “அடுத்த வீட்டு பெண்” கதை படிக்க எனது blog-க்கு வருகை தரவும்: http://veeduthirumbal.blogspot.com/

 
At Wednesday, 18 November, 2009, சொல்வது...

நல்லா இருந்ததுங்க..

வெற்றி பெற வாழ்த்துகள்

அன்புடன்,
சுவாசிகா
http://ksaw.me

 
At Saturday, 12 December, 2009, சொல்வது...

Miga Arumai.. MNC companyla ithu nadakuthu...

 

Post a Comment

<< இல்லம்