அவள் பத்தினி ஆனாள்- சிறுகதைப் போட்டிக்காக
உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு நடத்தும் சிறுகதைப் போட்டிக்காக
அவள் பத்தினி ஆனாள்
பெண்களின் கூட்டத்தின் நடுவில், அழகே வடிவெடுத்தது போல் அமர்ந்திருந்தாள் அப்பெண். நீண்ட பயண களைப்பையும் மீறி, அவள் முகம் பொலிந்தது. தாய் வீட்டு சீதனங்களை அவள் சகோதரன் சபையின் முன்பே வைத்துக் கொண்டிருந்தான். அவைகளைப் பார்த்த பெண்களின் கண்கள் விரிந்தன.அவன் நிறமும் உயரமும் அவர்களுக்கு புதுமையாய் இருந்தன.
மெல்ல குரலை செறுமினான். தலையை நிமிர்த்தாமல், விழி ஓரங்கள் சகோதரனை நோக்கியது. அவன் கண்களின் சிறு அசைவு.
அரியணையில் அமர்ந்திருந்தவளை வணங்கி, '' தாயே ஒரு விண்ணப்பம். நாளை விடிந்தால் என் சோதரி, உங்கள் வீட்டு மருமகள் ஆகிவிடுவாள். திருமணத்துக்கு முன்பு, அவள் கங்கையம்மனை பூஜித்த ஆசி பெற வேண்டும் என்பது என் தாயின் கட்டளை. அதற்கு நீங்கள் அனுமதிக்க வேண்டும்'' என்றான் அவன்.
''அதற்கென்ன, தாராளமாய் சென்று வரட்டும். இக்குல தெய்வமல்லவா கங்கை.'' என்றாள்
மெல்ல எழுந்த மணமகள் , '' தாயே! என் சகோதரனையும் உடன் அழைத்துச் செல்ல நீங்கள் அனுமதிக்க வேண்டும்'' தயவாய் கேட்டதும், அதற்கென்ன சென்று வாருங்கள் என்றாள் முதியவள்.
''பாவம் நாளை திருமணம் ஆனதும், சகோதரன் தன்நாட்டிற்கு திரும்பி விடுவான் இல்லையா? பெண்களுக்கே உரிதான உடன் பிறந்த பாசம்'' கூட்டத்தில் ஒரு பெண்ணின் குரல்.
இரட்டை குதிரைகள் பூட்டிய தேர், நீண்ட சாலையில் விரைந்தது. தெருவில் இருப்பவர்கள் நின்றுப் பார்ப்பதற்கு முன்பு, விரைந்தோடியதது. தேரை ஓட்டியவன், தங்கள் நாட்டுக்காரன் என்பதை அவள் கண்கள் கவனித்து விட்டு, '' என்ன விஷயம் சொல் சகோதரா?" அவன் உடனே பதில் சொல்லவில்லை. சிந்தனையில் ஆழ்ந்திருந்தது அவன் முகம். பிறகு ''அதிர்ச்சி தரும் விஷயம்'' என்றான்.
அவள் சிரித்தாள். சிரிப்பில் கசப்பு வழிந்தது. ''எனக்கு தெரியும். நம் தாய் கிளம்பும்போது சொல்லிவிட்டார். திருமணத்திற்கு பெண் கேட்டு வந்ததில் இருந்து, உங்கள் அனைவரின் முகத்திலும் பெரிய சந்தோஷத்தைக் காணவில்லை. ஏதோ பிரச்சனை இருக்கிறது என்பதை மட்டும் ஊகித்தேன். பரத குல பட்டத்து இளவரசர் ஒரு அந்தகர். அந்தகனை மணக்கப் போகும் துர்பாக்கியசாலி நான்'' என்றாள் அவள்.
அவன் முகம் கற்சிலையாய் எந்த உணர்வும் காட்டாமல், '' அது இல்லை விஷயம்! சகோதரி! மூத்தவன் அந்தகன் என்பதால், நாட்டை ஆள்வது கடினம் என்று, இளையவனுக்கு பட்டம் கட்டியிருக்கிறார்கள். அதனால் நீ பட்டத்து ராணி ஆகப்போவதும் இல்லை, நீ பெறப் போகும் பிள்ளைகள் நாட்டை ஆளப் போவதும் இல்லை. இது சமீபத்து ஏற்பாடாய் இருக்க வேண்டும். நாம் பயணத்தில் இருந்ததால் நமக்கு எட்டவில்லை.
அப்படியே திகைத்தவள், பிறகு மிதமிஞ்சிய கோபத்தில் தலையில் அடித்துக் கொண்டாள்''ஐயோ நம் அனைவரின் கனவுகள் எல்லாம் பாழாய் போனதே'' என்று புலம்பத் தொடங்கினாள்.
அவள் கையைப் பிடித்தவன், '' கோபம் சத்ரு என்று எவ்வளவு முறை நம் தாய் உனக்கு சொல்லியிருக்கிறார். உணர்வுகளை வெளிக்காட்டிக் கொள்ளாமல் இருக்க பழகிக் கொள். நிதானமாய் யோசிப்போம்''
'' பெண் கேட்டுவந்ததும், நானும் தந்தையும் யோசித்தோம். மணமகன் அந்தகர் என்ற செய்திகள் முன்பே தெரியும். பெண் தர மாட்டேன் என்றால், போர் செய்தும் உன்னை கவரும் ஏற்பாட்டுடனே அவர்கள் வந்திருந்தனர். என்றாலும் குலத்தின் மூத்த வாரிசு என்பதால் வருங்கால பேரரசர், நீ பட்டத்தரசி ஆனதும் உன் அறிவாலும் சாதுர்யத்தாலும் எந்த பிரச்சனையையும் சமாளிப்பாய். நாளை உன் வயிற்றில் பிறக்கும் பிள்ளை பரத வம்ச வாரிசு என்று நினைத்து மனதைத் தேற்றிக் கொண்டோம். ஆனால்.................உடலில் குறை இருப்பவர்களுடன் வாழ்வதே மிக கடினம். உன் அழகும் அறிவும் பிறருக்கு அசூயைக் கொடுக்கலாம். அவதூறு கிளப்பினால் அவன் மனம் அதை நம்பலாம். உன் கணவனுக்கு
மோகம் தீர்ந்ததும், வேறு பெண்களை நாடத் தொடங்குவான். நாளை நீ பிள்ளை உண்டானாலோ, வாரிசு குழப்பம் வரும் என்று அரண்மனை மருத்துவனுக்கு சிறு கண் அசைவு தந்தால் போதும். எல்லா சுவட்டையும் அழித்துவிடலாம்''
'''நான் மணக்க இருப்பவருக்கே நம் இளைய சகோதரிகள் பத்து பேர்களும் மாலையிடப் போகிறார்கள். ஏதும் அறியா அப்பாவி சிறுமிகள்! எங்கள் தலைவிதி அரண்மனையில் ஒரு மூலையில் கிடக்கப் போகிறோமா?'' சோகமாய் ஒலித்த குரல் மாறி, '' சகோதரா! நான் பட்டத்தரசி ஆகி வேண்டும். என் வயிற்றில் பிறக்கும் பிள்ளையே நாட்டை ஆள வேண்டும். அதற்கு என்ன வழி? அந்தகனுக்கு பிள்ளை அந்தகனாய் பிறக்காது இல்லையா?" ஆதங்கத்துடன் கேட்டாள்.
''ஓரே வழி. உன் கணவனின் பூரண நம்பிக்கையை நீ பெற்றால், நாம் எதையும் சாதிக்கலாம்" என்றான்
கங்கைக் கரையை நெருங்க நெருங்க அடந்த வனம் தொடங்கியது. சூரிய வெளிச்சம் புக முடியாத வானத்தைத் தொடும் விருக்ஷங்கள். விசித்திர ஓசைகள்.
பாதுகாப்பிற்கு முன்னால் சென்ற காவலாளிகள், கையில் முன்னேற்பாடாய் தீ பந்தங்கள்.
'' எவ்வளவு அடர்ந்த வனம். மதிய வேளையில் சூரிய வெளிச்சம் உள்ளே புக முடியாதப்படி இவ்விருட்டு விசித்திரமாய் இல்லை?. நம் நாட்டில் காணக்கிடைக்காத அற்புதம்''
''என் வாழ்க்கையே இருண்டு விட்டதோ என்று பயமாய் இருக்கிறது. ஒன்றும் புரியாமல், கண்ணைக் கட்டி காட்டில் விட்டால் போல உள்ளது'' என்று அலுத்துக் கொண்டாள் அவள். அவன் என்ன சொன்னாய் என்றுக் கேட்டான். அவள் ஒரு கணம் புரியாமல் அவனைப் பார்த்துவிட்டு, ''நாளை.. " அவள் ஆரம்பிப்பதற்கு முன்பு அவளை பேசாதே என்று சைகைக் காட்டினான்.
பிறகு அங்கு மெளனம் நிலவியது.
தேர் கங்கை கரையை அடைந்தது. நீர் சுழித்துக் கொண்டு ஓடியது. பணிப் பெண்கள் பூஜை சாமான்களை, எடுத்து தர சாங்கியங்களை முடித்தாள் அவள்.
தேர் அரண்மனையை நோக்கி திரும்பும்பொழுது, அவன் தன்திட்டத்தைச் சொல்ல ஆரம்பித்தான்.
''இனி எல்லாம் உன் கையில்'' என்று மெல்ல சொல்லிவிட்டு அந்தபுர வாயிலில் விடை பெற்றான் சகோதரன்.
அக்னி தேவன் சாட்சியாய், அவள் பரத குல மருமகள் ஆனாள். மூத்தவர்களை தம்பதியினர் வணங்கி முடித்து, அலங்கரிக்கப்பட்ட சிம்மாசனத்தில் அமரும்பொழுது, அவள் நின்றாள்.
''சுவாமி'' என்று மெல்லிய குரல் எழும்பியது. மனைவியின் குரலை முதன் முதல் கேட்டவன் முகத்தில் வியப்பு.
அருகில் இருந்தவர்களும் வியப்புடன் நோக்க, ''நான் உங்களை நமஸ்கரிக்கிறேன். என்னை ஆசிர்வதியுங்கள்'' என்றவள், அவன் காலை கையில் பற்றி வணங்கி எழுந்து, அவன் முகத்தை கைகள் இரண்டில் ஏந்திக் கொண்டாள்.
கூட்டம் சட்டென்று பூரண அமைதியடைந்தது. அனைவரும் புரியாமல் பார்த்தனர்.
''சுவாமி, உங்கள் திரு முகத்தை நான் பூரணமாய் பார்த்து விடுகிறேன். அம்முகம் என் மனதில் ஆழமாய் பதிய வேண்டும்'' என்றதும், அவள் கணவனின் ஒளியிழ்நத கண்கள் முழித்தன, கூட்டத்தில் வியப்பொலிகள்.
திரும்பி சபையை வணங்கியவள், இடுப்பில் மறைவாய் சொருகியிருந்த கருப்பு துணியை எடுத்தவள், " என் குல தெய்வம் துர்க்கையின் மீது ஆணை! என் கணவர் பார்க்க இயலாத, இவ்வுலகை நானும் இனி என் உடலில் உயிர் உள்ளவரை பார்க்க போவதில்லை'' என்றுச் சொல்லி கண்களை, அத்துணியால் கட்டிக் கொண்டாள்.
சபையில் வியப்பொலி ஓங்கியது. யாரோ இவள் அல்லவா பத்தினி தெய்வம் என்று கூவினார்கள். பரத குலம் செய்த புண்ணியம் இத்தகைய புண்ணியவதி மருமகளாய் கிடைத்துள்ளாள் என்று இன்னொரு குரல். எங்கும் வாழ்க ஒலி.
கணவனின் கை மனைவியின் கையை பற்றியது. '' உன் தியாகத்தால் என் மனம் முழுவதும் நிறைந்துவிட்டாய்...'' மேலே பேச முடியாமல் அவன் குரல் கம்மியது.
''சுவாமி இனியும் இதைப் பற்றி தாங்கள் பேச்க்கூடாது'' அவள் குரல் கெஞ்சியது.
வளையல் அணிந்த கரம், அவள் தோளைப் பற்றியது.
'' மகாராணி'' ஒரு குரல் அறிவித்தது.
'' மகளே! உன் குலப் பெருமையை விளங்கச் செய்து விட்டாய். ஆனால்.... கொஞ்சம் யோசித்துப் பார்! உடற் குறையுள்ள என் மகனுக்கு உற்ற துணையாய் இருப்பாய் என்று, அழகிலும், அறிவிலும் சிறந்து விளங்கிய உன்னை தேடிக் கண்டுப்பிடித்தோம். ஆனால் இன்று உன் செய்கை...'' அவ:ள் முடிக்கும் முன்பு,
''தாயே! தன் குல தெய்வத்தின் மீது ஆணையிட்டு விட்டாள். இனியும் அதைப் பற்றி பேச வேண்டாம்'' மணவாளன் சொன்னதும், அவளுக்கு தன்கணவனின் மனோபாவம் முழுக்க புரிந்து போனது.
வேறு சில மூத்தவர்களும், அவள் செய்கை ஏற்படுத்தப் போகும் குழப்பங்களை சொல்ல ஆரம்பிக்க, அவள் கைக் கூப்பி வணங்கியவாறு, ''என்னை மன்னித்து விடுங்கள் ! என் செய்கை இப்படி ஒரு குழப்பத்தை தரும் என்று தெரியாமல் போய்விட்டது. நேற்று நான் இவ்வரண்மனையில் காலடி வைத்ததும், சில பெண்கள் செய்த விமர்சனங்கள் என்னை இம்முடிவு எடுக்க வைத்தது. ... ஒரு சிறு யோசனை! நீங்கள் தவறாய் நினைக்கவில்லை என்றால்....." அவள் குரல் தயங்கியது.
'' சொல் மகளே! தயங்க வேண்டாம். உன் சத்தியத்தில் இருந்து விடுபட ஏதாவது பரிகாரம் செய்யலாமா?"
''இல்லை! இல்லை'' என்றவள், ''சகோதரா..'' அவள் கைகள் தேடின.
''இதோ இங்கே இருக்கிறேன்.. உன் செய்கையால் பிறந்த வீட்டுக்கு பெருமையைத் தேடி தந்தாய் என்றாலும்.. ஏன் சகோதரி?" அவன் அக்குரல் தேம்பியது.
'' பார்வையில்லாதவர்களுக்கு ஒலிகளும், ஸ்பரிசங்கள் மட்டுமே வழிகாட்டி. இவ்வரண்மனையில் எனக்கு எல்லாம் புதியது. பாதைகளும், ஸ்பரிசங்களும் நான் முற்றிலும் அறியாதவை. உடன் பிறந்தோரின் கை ஸ்பரிசத்தை மட்டுமே என்னால் அடையாளம் காணமுடியும். என் சகோதரிகள் ஏதும் அறியாசிறுமிகள். இந்நகர நாகரிகங்களும், பழக்க வழக்கங்களும், பேச்சு மொழியும் அவர்களுக்கு பயத்தையே தந்துள்ளன. ஆனால் மூத்தவர்களின் விருப்பங்கள், அரண்மனை பழக்க வழக்கங்கள், மற்றும் எங்களுக்கு தேவையான ஆலோசனைகளை வழங்கவும் எனக்கு துணையாய் எங்கள் சகோதரன், இங்கு சில காலம் இருக்க அனுமதி தர வேண்டும்" மிகுந்த தயக்கத்துடன், கலக்கமான குரலில் வேண்டினாள்.
''அனுமதி தந்தேன. பூரண சுதந்திரத்துடன், இந்த நாட்டிலும், இந்த அரண்மனையிலும் உன் சகோதரன் தன் விருப்பம் போல வசிக்கலாம்'' அவள் கணவனின் குரல் முந்திக் கொண்டு ஓங்கி ஒலித்தது.
இனி வெற்றிதான் என்பதை அறிவித்தது சகோதரியின் கைகளை மெல்ல பற்றிய தம்பியின் கைகள். எல்லாவற்றையும் பார்த்த, கேட்ட ஓரிருவர் முகங்கள் கருத்தன.
*****************
'
Labels: சிறுகதை
29 பின்னூட்டங்கள்:
காந்தாரியும் சகுனியும் வந்து சேர்ந்த கதை ! நிச்சயம் இது ஒரு புது கோணம் தான் ! :)
வாழ்த்துக்கள் அக்கா !
வெற்றி பெற வாழ்த்துக்கள்.
நல்ல கதை.. நமக்கு தெரிந்த மகாபாரதத்தில் இருந்து தெரியாத சில பக்கங்கள்.. வெற்றி பெற வாழ்த்துகள்..
ஓ...அந்த கறுப்பு துணிக்கு பின்னாடி இவ்ளோ கதை இருக்கா??
வெற்றி பெற வாழ்த்துக்கள்...
ஆயில்யன், மொழி, அதுசரி, வெண்பூ நன்றி.
இப்படியும் ஏன் நடந்து இருக்காது என்ற கோணப்பார்வை என்று வைத்துக் கொள்ளுங்களேன் :-)
காந்தாரியுடன், சகுனி செட்டில் ஆனதைக் குறித்து மனம் எழுப்பிய கேள்விகளே, இச்சிறுகதை
உருவானதுக்கு காரணம்.
உஷா மேடம்,
சிறப்பான கதை, கடைசிவரை வரலாற்றுப் புனைவு கதை என்றாலும் ஒரு த்ரில்லர் போல முடிந்திருந்தது.
அருமையான புனைவு! சகுனி அந்த வயசிலேயே தன் வேலையை காட்ட ஆரம்பிச்சுட்டாரா?
வெட்டி பாலாஜி கூட பீஷ்மரை பற்றி "பத்தாம் நாள்' அப்படின்னு ஒர்ரு புனைவு எழுதியிருக்கார். அதுவும்நல்லா இருக்கு.
வெற்றிக்கு என் வாழ்த்துக்கள்!
வித்தியாசமான பார்வை. வெற்றி பெற வாழ்த்துக்கள்.
கற்புக்கரசியா? கடுப்பின் அரசியா?
வேறொரு கோணத்தில் எழுதப் பட்டிருக்கிறது தல
வித்தியாசமான பார்வை! அருமை! வாழ்த்துக்கள்...
அபி அப்பா, பழனி சுரேஷ், அருணா, கோவி கண்ணன்,விதூஷ் நன்றி
உஷா. மகாபாரதம் தான் எத்தனை எத்தனை கதைகளை எழுதும் படி தூண்டுகிறது?! வற்றாத ஊற்று அது என்று நினைக்கிறேன். மிகத் தெளிவாகச் சென்றது கதை.
திருதுராஷ்ட்ரன் என்ற அரை லூசு என்ற பெயர் பொருத்தமா இருக்காதோ? . எப்படியோ , கதை அவ்வளவு ரசிக்கும்படி இல்லை.
மன்னிக்க... இதே போன்றதொரு கதையை முன்பே படித்த ஞாபகம் இருக்கின்றது. எங்கு என்று சரியாக நினைவில் இல்லை.
இல்லை இது உங்கள் மீள்பதிவா!?
-சென்ஷி
இந்தக் கதைக்கு பின்னூட்டம் போடவில்லை என்றால் சகுனி கோபித்துக் கொள்வார் என்பதால் இந்தப் பின்னூட்டம்...இருந்தாலும் மகாபாரதக் கதையில் காந்தார ராஜகுமாரன் அக்காவுடன் வந்து செட்டில் ஆனதுக்கு ஒரு கதை இருக்கிறதனாலே இந்தப்....
சொந்த வேலைகள் காரணமாய் இந்த பக்கம் வர முடியவில்லை. விமர்னங்களுக்கு நன்றி,
சென்ஷி, மீள் பதிவில்லை. இதே மாதிரி கதை என்றால் மகாபாரதமா :-)
//சென்ஷி, மீள் பதிவில்லை. இதே மாதிரி கதை என்றால் மகாபாரதமா :-)//
மகாபாரதத்திலிருந்து பிய்(ந்)த்துத்தான் இந்த கதை வந்திருக்கிறது என்று இப்போதுதான் தெரிந்து கொண்டேன். நான் குறிப்பிட்டது சகுனி, காந்தாரியுடன் திருராஷ்டிரனின் அரண்மனையில் தங்கியது!
ஆகா ! ப்ரமாதம். புத்திசாலி பெண். சென்டிமென்ட் முட்டாள் கணவன். வில்லத்தனமான வில்லன். அருமையான கற்பணை. சில நிமிடங்கள் மன்னர்காலத்திற்கு சென்று வந்தது போலிருந்தது.
நானும் என் கதை(?) யை போட்டிக்கு அனுப்பியுள்ளேன். தயவுசெய்து படித்துவிட்டு comment செய்யுமாறு கேட்டுகொள்கிறேன்.
http://yuvaking2005.blogspot.com/2009/07/blog-post.html
நன்றி
போட்டியில் உங்கள் கதை வெற்றி பெற்றதற்குப் பாராட்டுக்கள் !!
அன்புடன்
சீமாச்சு...
வெற்றி பெற்றதற்கு வாழ்த்துகள் ... மீ த பஷ்டூ????
ஏற்கனவே கதையப் பத்தி பின்னூட்டம் போட்டாச்சி, அதனால் வாழ்த்துகள் மட்டும்தான் இப்போது.. :)
உரையாடல் போட்டியில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள்!
உஷா, பரிசு பெற்றதற்கு வாழ்த்துகள்!
முன்பே இக்கதை படித்திருந்தேன். நல்ல மொழி. வெற்றி பெற்றமைக்கு வாழ்த்துகள்.
-ப்ரியமுடன்
சேரல்
கதை அருமை,
வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள்!!
அக்கா.. போட்டியில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள்! :) கோவையிலா இருக்கீங்க?
வாழ்த்திய அனைத்து நட்புகளுக்கும்
நன்றி.
காயத்திரி, ஆமாம் இப்ப கோவையில். ஒரு மீட்டிங் போடலாமா :-)
பரிசு பெற்றமைக்கு என் இனிய வாழ்த்துக்கள் :-)
// என் மகன் இந்த வருடம் எம்பிபிஎஸ் சேர்ந்துள்ளான் //
இப்பத்தான் பார்த்தேன். கங்ராஜுலேஷன்ஸ் உஷா ஆண்ட்டி. உங்கள டாக்டர் அம்மான்னு (தளபதி படத்துல கலெக்டர் முயற்சியில போர் தண்ணி பீரிட்டு அடிக்கும்போது அந்த ஊர் மக்கள் எல்லாம் ஸ்ரீவித்யாவ நெகிழ்வா கூப்பிடுவாங்களே, அந்த மாதிரி) கூப்பிடலாம்னு ஆசைதான். அதுக்குத்தான் இன்னும் 22 வருசமிருக்கே :))
அன்புள்ள உஷா,
நானும் ஒரு எள்ளுருண்டை பிடித்துவிட்டேன் - ஒரு மகாபாரதக் கதை எழுதி இருக்கிறேன். முடிந்தால் படித்துப் பாருங்கள். http://siliconshelf.wordpress.com/2011/05/27/துரோண-கீதை/
RV
http://siliconshelf.wordpress.com/
Post a Comment
<< இல்லம்