கதை சொல்லி ஜூன் – ஆகஸ்ட் 2010
ஒன்றரை வருடம் இருக்கும், சென்னையில் இருந்து ஒரு போன் வந்தது. “கதை சொல்லி” என்ற இதழின் பொறுப்பாசிரியர் பேசினார். என்னுடைய நாவல் படித்து, தொடர்ப்பு கொண்டவர்,“கதை சொல்லி" க்கு ஒரு கதை அனுப்ப சொன்னார். "கதை சொல்லி"க்கு மேற்பார்வை சிறந்த கதை சொல்லியான திரு.ராஜநாராயணன். உடனே அனுப்பி வைத்தேன். ஆனால் அவ்விதழ் பிறகு நின்று விட்டது. இப்பொழுது மூன்று மாதங்களுக்கு
ஒரு முறை வரும் இதழில் என் கதை வந்துள்ளது. ஆனால் ஒரு அதிர்ச்சி. எழுதியவர் பெயர் இல்லை. என்னுடைய பெயரை வரும் இதழிலாவது வெளியிடுங்கள் என்று ஒரு கடிதம் போட்டுள்ளேன். இதோ கதை. உங்கள் மேலான விமர்சனங்களை எதிர்ப்பார்க்கிறேன்
குப்பனுக்கு கல்யாணம்
(கதை சொல்லி- காலாண்டிதழ். ஜூன் –ஆகஸ்ட் 2010)
அத்தையும் மாமாவும் ஊருக்கு கிளம்பிக்கொண்டு இருந்தனர். அம்மா தந்த பூவையும், குங்குமத்தையும் எடுத்துக் கொண்ட அத்தை, ''இத்தனை பூ என் தலை தாங்காது" என்று ரெண்டு கண்ணி பூவை கிள்ளி தலையில் சொருக்கிக் கொண்டு மிச்சத்தை, என் இரட்டை சடையில் அழகாய் வைத்தாள். அப்பாவிடம் சொல்லிக் கொள்ள சென்றவள், தன் மகன் குப்பனுக்கு பார்த்த பெண்ணைப் பற்றி சொல்ல ஆரம்பித்ததும், "தோ பாருக்கா! ஆளு ஆளுக்கு எதையாவது சொல்லிண்டு இருந்தா, குப்பனுக்கு இந்த ஜன்மத்துல கல்யாணம் ஆகாது" அப்பா எரிச்சலுடன் சொன்னார்.
"சரி எதுக்கும் ஊருக்கு போயி கடுதாசிப் போடறேன்" என்று அத்தை சொன்னதும் குப்பன் முகம் மாறிப் போனது. அப்பாவை பரிதாபமாய் பார்த்தான்.
"குப்பனுக்கும், பாவாவுக்கும் ஓ.கே. அம்மாவும் சரின்னுட்டா. அதிசயமா ஒன் புத்திரிகளும் வாயை தொற்றக்கலை. மொதல்ல சரின்னுட்டு இப்ப ஏன் கொழப்பரே? பொண்ணு பி.ஏ பைனல் இயர் படிக்கிறா! நல்ல மார்க்கு, அதனால டெலிபோன்ஸ்ல, செண்ட்ரல் கவர்மெண்டு வேலை கிடைக்குன்னா ஒனக்கு கசக்குதா?. அவனுக்கு குருபலன் இன்னும் ஆறு மாசம்தான். இத விட்டா முப்பதாறு வயசுக்கு அப்புறம்தான் குரு பார்வைன்னு நாமக்கல் ஜோசியர் சொன்னார்ன்னு நீ தானே சொன்னே? இப்படியே போனா, இன்னும் ஆறேழு வருஷத்துல எம் பொண்ணே ரெடியாயிடுவா" என்று அப்பா என்னைப் பார்த்துச் சொன்னார்.
" போப்பா!" என்றுக் கத்தினேன்.
"விஜி, ஜானு கல்யாணத்துக்கு வாங்கிய கடனே இன்னும் இருக்கு. வேலைக்குப் போறவளா வந்தா எனக்கும் செளகரியம் தானே" குப்பன் கெஞ்சுவதுப் போல சொன்னான்.
" வேலைக்கு போற பொண்ணு வேண்டாம்னு பார்த்தேன். என்னமோ பண்ணுங்கோ, எம் பிள்ளை பொண்டாட்டிக்கு பொடவ தோச்சி போடணும்னு விதி இருந்தா யாரால மாத்த முடியும்?" என்றாள் அத்தை விரக்தியாய்.
" நானே அத்தன வேலையும் பண்ணறப்போ எம் பிள்ளை, வேலைக்கு போற ஓய்புக்கு செய்யறது என்ன தப்புங்கறேன்" வாயே திறக்காத மாமாவும் சமயத்தில் அத்தையின் காலை வாரினார்.
" ஒரே பொண்ணு, சொந்த வீடு. அவருக்கும் இன்னும் ரிடையர் ஆக பத்துவருஷம் இருக்கு. குப்பனுக்கு ஹண்ரட் பர்செண்டு பொறுத்தமா இருக்கா. பார்க்க நல்ல மாதிரி இருக்கா. அந்த மாமி நல்ல சிரிச்ச மூஞ்...." அப்பா முடிக்கவில்லை.
"ஆமாம்பா! அம்மா பொண் பார்க்க போற எடத்துல ரெண்டாவது தடவ டிபன் போட வந்தா வேண்டாம்னு சொல்லிடணும்னு அம்மா சொல்லியிருக்கா. ஆனா அந்த மாமி நா வேண்டாம் வேண்டாம்னு சொன்னேன்பா! ஆனா முந்திரி பருப்பு போடரேன்னு இத்தன கேசரி போட்டாப்பா! அதுலையும் இதுவர தின்ன டிபன்லையே இதுதான் பெஸ்ட்" என்று தம்பி சர்டிபிகேட் தந்தான்.
"போதுமே! வாய மூடு" என்று அம்மா அப்பாவைப் பார்த்துக் கொண்டே சொன்னாள். சே! அரை பரிட்சை நேற்றுதான் முடிந்தது. அதனால் நானும், அண்ணாவும் புதன்கிழமை பெண் பார்க்க போன கூட்டத்தில் சேர முடியவில்லை.
அப்பா தன்னை சமாளித்துக் கொண்டு "இப்பவே பொண்ணு பார்த்துட்டு வந்து ரெண்டு நாளு ஆறது. அந்த மனுஷனும் நாலுவாட்டி ஆபிசுக்கு போன் பண்ணிட்டார். நாளைக்கு நாயித்துகெழம ஊர்ல இருந்து அவரோட மாமனார், மாமியார் ஏதோ விசேஷத்துக்கு வராளாம். அவா குப்பனப் பார்க்கணும்பாளாம். நா நாளைக்கு அவர் போன் பண்ணினா சரினுட்டா? " என்றார் அப்பா.
பாட்டி, " எனக்கென்னவோ கல்யாணம் ஆனா குப்பனை அவா பக்கமே இழுத்துண்டுடுவான்னு தோணர்த்து. ஒரே பொண்ணோல்யோ........." முடிக்கும் முன்பு அப்பா, " நீ ஒன் திரு வாய மூடிண்டு இருக்கியா?" என்று கத்தினார்.
அம்மா, " ஒரே பொண்ணு வேண்டாம்னு இருந்தா ஒங்க தங்கை சொந்தம், அந்த ரயில்வே ஹரிராவ் பொண்ண பண்ணிக்கோ பண்ணிக்கோன்னு குப்பனை கெஞ்சலை? " என்று சரியான பாயிண்டு பிடித்தாள்.
"நா பேசலிடியம்மா!" எழுந்து உள்ளேப் போனாள் பாட்டி.
குப்பன் மறுத்த ஒரே பெண் அவள்தான். அத்தையும் பாட்டியும் எத்தனை வேப்பிலை அடித்தும் மறுத்துவிட்டான்.
"பொண்ணு ஈர்குச்சி மாதிரி இருக்கான்னு பார்கிரீயா? கொழந்த பொறந்தா ஒடம்பு வெச்சிடும். வீடு, நெலம் எல்லாம் இப்பவே ஒன் பேர்ல எழுதி வைக்கரேன்னு சொல்லரா. பேசாம ஒத்துக்கோ" என்று பாட்டி சொல்லியும் மறுத்துவிட்டான்.
பாட்டி, தான் சொன்னால் பேரன் மறுக்கமாட்டான் என்று பெண் வீட்டாரிடம் வீராப்பு பேசிவிட்டு வந்தவளுக்கு தன் தோல்வியை ஒத்துக்க முடியாமல் கொஞ்சநாள் குப்பனுடன் டூ விட்டு இருந்தாள். ஆனால் உண்மையான காரணம், அந்த பெண் கான்வெண்டில் படித்தவளானததால், கேட்ட கேள்விக்கெல்லாம் இங்கிலீஷீலிலேயே பதில் சொன்னதில் குப்பன் பயந்துப் போனது எங்களுக்கு பிறகு தெரிய வந்தது.
என் அத்தையின் ஓரே மகனான குப்பன் என்ற பிந்துமாதவனுக்கு, நான் நான்காவது படிக்கும் பொழுது கல்யாணம் என்று ஆரம்பித்தார்கள். இப்போ நான் ஏழாவது வந்தாச்சு!
ஞாயிற்று கிழமை வந்தால் குப்பனுக்கு பொண்ணு பார்க்க என்று கிளம்பிவிடுவோம். அம்மா இதையே காரணம் காட்டி நாலு புது புடைவை வாங்கிக் கொண்டாள். எனக்கும் இரண்டு புது பாவாடைகள் கிடைத்தன.
கோத்திரம், ஜாதகம், குடும்பம் இதை எல்லாம் கடந்து, போட்டோ வந்ததும் பிரச்சனை தொடங்கும். சில பெண்கள் போட்டோவைப் பார்த்தே அத்தையும் அவளுடைய இரண்டு பெண்களும் நிராகரித்துவிடுவார்கள். என்ன சிரிப்பு சினிமாகாரி போல என்றோ, கடுவன் பூனை மாதிரி மொகத்துல என்ன கடுகடுப்பு என்றோ நிர்தாட்சனையாய் மறுத்து விடுவார்கள்.
இதுல பாட்டி தன் பங்குக்கு எதையாவது சொல்லி வைப்பாள். ஒரு பெண் மகம் நட்சத்திரம் என்றதும், மகமா வேண்டாவே வேண்டாம் அடங்கா பிடாரியாய் இருக்கும் என்றவள் தாத்தா மகம், அவரால் தான் பட்ட கஷ்டங்களை சொல்லி கண்ணீர் விட்டாள். இன்னொரு பெண் பெயர் லீலா என்றதும் தனக்கு தெரிந்த நாலைந்து லீலாக்களை வரிசையாய் சொல்லி, அவர்கள் அனைவரும் மாமியாரைபாடாய் படுத்திக் கொண்டு இருக்கிறார்கள் என்றாள்.
குப்பனோ, மகனுக்கு கல்யாணம் செய்வதிலேயே தன் பெற்றோருக்கு விருப்பமில்லையோ என்று எங்களிடம் புலம்பினான். அவனுக்கு வேறு நண்பர்கள் யாரும் இல்லாததால் என்னிடமும், அண்ணாவிடமும் தன் மனகுறைகளை வெளியிடுவான். தன்னை ஏராளமான பெண்கள் காதலித்ததாகவும், ஆனால் பெற்றோர் காட்டும் பெண்ணையே மணப்பேன் என்று தான் செய்த தியாகங்களைப் பட்டியல் இடுவான்.
இதில் போன முறை பார்த்த பெண் எல்லாரும் ஒத்துக் கொண்டு சரி என்னும் பொழுது பாட்டியால் கெட்டது. அந்த பெண்ணுக்கு ஜடை மிக அழகாய் நீளமாய் இருந்தது. எனக்குக்கூட என் எலிவாலை நினைத்து ஏற்பட்ட பொறாமையை மறைத்து,
அப்பெண்ணின் நீண்ட ஜடையையே பார்த்துக் கொண்டிருந்தேன். அம்மா, அத்தையும் அவளுடைய பின்னலைப் பற்றியே பேசிக் கொண்டு இருந்தார்கள். பாட்டி வழக்கப்படி தன் சோதனையை ஆரம்பித்ததும் அந்த பெண், பாட்டி கையைத் தட்டிவிட்டது பாட்டிக்கு கோபம் வந்துவிட்டது.
வீட்டுக்கு வந்து எல்லாரும் சம்மதம் என்னும் பொழுது, பெரியவான்னு மட்டுமரியாதை இல்லாத குடும்பம் என்று ஆரம்பித்தாள் பாட்டி.
"நீ ஏம்மா அவ ஜடைய எல்லாம் பிடிச்சி இழுத்தே?" என்று அப்பா கேட்டதற்கு, பாட்டி, " நிஜமா, சவுரியான்னு பார்த்தேன். அது சவுரிதான். அத்தன அழகா பின்னியிருக்கா! இதுலையே இத்தனை பித்தலாட்டம், சாமார்த்தியம்னா வேற இன்னும் என்ன மூடி மறச்சியிருக்காளோ?" என்று சாமார்த்தியமாய் ஒரு போடு போட்டாள்.
குப்பன், " சவுரி முடி அவுந்துடும்னு ஒன் கைய யதேச்சையா தட்டியிருக்கலாம். ஆனாலும் இதெல்லாம் மேன்ர்ஸ் இல்லே பாட்டி" என்றான்.
பாட்டி, " இந்த பாட சொல்லி, நடக்க சொல்லி பரிட்சை பண்ணிப் பாக்கறது ஒண்ணும் தப்பில்லை. அந்த காலத்துல கல்யாண பையன நாலு பெரியவா.... " நிறுத்தியவள், குப்பனுக்கு மட்டும் கேட்கும்படி ஏதோ சொன்னாள்.
குப்பன் அதிர்ந்துப் போய், "ஏம் பாட்டி அசிங்க, அசிங்கமாய் பேசரே?'' என்றான்.
" இதுல என்னடா அசிங்கம். தாலி கட்டிய பெறகு அய்யோ, அம்மான்னா முடியுமா? இல்லாட்டி வெள்ளக்கார மாதிரி பொண்ணுக்கு டைபோர்ஸ்ஸோ என்னவோ சொல்லுவாளே, அதுமாதிரி இன்னொரு கல்யாணம் செய்ய முடியுமா? பொண்ணுக்கு நாத்தனார் பொடவை உடுத்திவிடுவது இதெல்லாம் எதுக்குங்கறேன்? கல்யாணத்தன்னைக்கு காலைல பையனுக்கு நாசுவன்...." பாட்டி முடிக்கும் முன்பு, அம்மா தலையில் அடித்துக் கொண்டு, "போதுமே எங்கே என்ன பேசர்த்துன்னு உங்களுக்கு வெவஸ்தையே இல்லையா?'' என்றவள் எங்களைப் பார்த்து '' எழுந்து போய் படிங்களேன்" என்று கத்தினாள்.
அவள் வாய் முகூர்த்தம், அன்றைக்கு ராத்திரியே அத்தை பாத்ரூமில் சறுக்கி விழுந்தாள். சகுனம் சரியில்லை என்று அந்த பெண்ணை வேண்டாம் என்று சொல்லி விட்டார்கள்.
ஆனால் இன்று கடைசியாய் அத்தை அரைகுறை மனதுடன் தலை ஆட்டினாள். அத்தை அவனை ஸ்டேஷனுக்கு வரியா என்றதும் அப்பா குப்பனுக்கு ஜாடைக் காட்டினார். அங்குப் போய் திரும்ப ஏதாவது குழப்பப் பார்ப்பாள் என்று அறிந்த குப்பன், "திங்கட்கிழம பாங்குல ஆடிட்டிங் ஆரம்பிக்கிறது. தலைக்கு மேலே வேலை இருக்கு. இங்கேயே தூங்கிட்டு காலைல ஆபிசுக்கு ஓடணும்" என்றான்.
மாமா, அப்பாவிடம் " நாளைக்கு எஸ்சுன்னு போன் பண்ணி சொல்லிடு" என்று முடிவாய் அறிவித்துவிட்டு அத்தையுடன் படியிறங்கினார்.
மறுநாள் காலையில் முதல் வேலையாய் அன்னை மெடிக்கல்ஸ் போய் அப்பா போன் செய்துவிட்டு வந்தார். அப்புறம்தான் விஷயம் தெரிந்தது. குப்பன் கல்யாணத்துக்கு முன்பு பெண்ணோட பேச திட்டம் போட்டு இருக்கான் என்று! பாட்டிக்கு தெரியாமல் அப்பா இந்த புரட்சி திட்டத்திற்கு ஒத்துழைப்பு தந்தார்.
காலையில் இருந்து அந்த பெண் ராதாவுக்குத் தர கடிதம் தயார் செய்துக்கொண்டிருந்தான். புதுகவிதை, வைரமுத்து, மு.மேத்தா மற்றும் அவனின் ஆதர்ச எழுத்தாளர் பாலகுமரனை எல்லாம் இழுத்து, என் தாய் தந்தையர் தெய்வத்துக்கு சமம் அவர்களை மரியாதையாய் நடத்தவேண்டும் என்றெல்லாம் நாலு பக்கத்திற்கு எழுதினான்.
அண்ணா "குப்பா! இது லவ் லெட்டர் மாதிரியே இல்லையே! என் கிளாஸ் பிரபாகர் வாரத்து ஒரு லவ் லெட்டர் ஸ்ரீதேவிக்கு எழுதுவான்" முடிக்கும் முன்பு, குப்பன், "சீ! சீ! இது என் மன உணர்வுகளை வெளிப்படுத்தும் மடல்" என்றவன் குரலை தாழ்த்திக் கொண்டு, "ராதான்னு வர சினிமா பாட்டு சொல்லு" என்றுக் கேட்டான்.
அண்ணா, " ராதாவின் பார்வை "என்று ஆரம்பித்தது, நான் , ''ஐயே, அது ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்! ராதையின் நெஞ்சமே! ஓ.கேவா குப்பா?" என்றுக் கேட்டேன்.
குப்பன் நன்றியுடன் என்னைப் பார்த்துவிட்டு, அந்த பாட்டை பாடியவாறு, அவளுக்கு சினிமா பாட்டு பிடிக்குமா என்று கேட்டுவிட்டு, தனக்கு ராதையின் நெஞ்சமே கண்ணனுக்கு சொந்தமே என்ற பாட்டு மிகவும் பிடிக்கும் என்று சொன்னதும் அவள் மனம் உருகிவிடும், பிறகு என்ன நடக்கும் என்பதை சிறு பிள்ளைகளான எங்களிடம் சொல்லக்கூடாது என்றான்.
கடிதத்தின் நடுவில் சில ஆங்கில வாக்கியங்களில் இருந்த இலக்கண பிழைகளை அண்ணன் சரி செய்துக் கொடுத்தான்.
மத்தியானம் ஒரு மணி சுமாருக்கு நான், அண்ணா, குப்பன் மூவரும் பாட்டியிடம் ஹிந்தி படம் போகிறோம் என்று சொல்லிவிட்டு தாம்பரத்திற்கு கிளம்பினோம். தமிழ் படம் என்றால் பாட்டி முதலில் கிளம்பிவிடுவாள். பஸ் ஸ்டாண்டில் குப்பன் நாலு முழம் மல்லிகை பூ வாங்கிக் கொண்டு, எங்களை மறந்தும் அவனை குப்பன் என்று கூப்பிடக் கூடாது என்று சத்தியம் வாங்கிக் கொண்டான்.
வழியெல்லாம் அவளுடன் என்ன எப்படி பேச போகிறான் என்பதையே சொல்லிக் கொண்டிருந்தான்.
அங்கே போனதும் அந்த மாமி சுடசுட உருளை கிழங்கு போண்டா தந்தாள். பெரியவர்கள் இல்லாததால் நானும், அண்ணனும் நன்றாய் வெட்டு வெட்டினோம். ஒருமாதிரி பயத்தில், யோசனையில் இருந்த குப்பனும் எங்களைக் கண்டுக் கொள்ளவில்லை.
மாமி பொதுவாய் அவனுடன் பேசிக் கொண்டு இருந்தாள். பெண்ணும் பக்கத்திலநின்றிருந்தது. நானும் அண்ணனும் மெதுவாய் எழுந்து வீட்டை சுற்றி இருந்த தோட்டத்தை வலம் வந்தோம். அரி நெல்லிக்காய் நிறைய காய்த்து இருந்தது. அதைப் பறிக்கும் பொழுது பக்கத்தில் இருந்த ஜன்னல் வழியாய் குப்பன் பேசுவது நன்றாகக் கேட்டது. நேற்றைய ஒத்திகைப்படி அந்த பெண் ராதாவுடன் தனிமையில் பேசகிறான் போல என்று நாங்கள் ஜன்னலுக்கு வெளியே காதைக் கூர்மையாக்கிக் கொண்டுக் கேட்டுக் கொண்டிருந்தோம்.
அந்த பெண்ணை நீங்க, வாங்க, போங்க என்று பவ்வியமாய் தன்னுடைய இலட்சியம், படிப்பு, கவிதை, அப்பா, அம்மா, பாட்டி என்று சம்மந்தா சம்மந்தம் இல்லாமல் பேசிக் கொண்டிருந்தான். இன்னும் லெட்டரைக் கொடுக்க வில்லை போல் இருக்கு என்று அண்ணா ஜாடை செய்தான்.
ராதா, " உங்களுக்கு இந்த தொங்கு மீசை நல்லாவேயில்லை. கொஞ்சம் கொறச்சிடுங்கோ. அப்புறம் துணி எடுத்து ஷர்ட் தெச்சிக்காதீங்கோ, ரெடிமேட்தான் பிட்டிங் அழகா இருக்கும்" என்றாள். பதில் ஒன்றும் வரவில்லை.பல்லைக் காட்டிய என்னை அண்ணா உஷ் என்று வாயைப் பொத்தினான்.
" சி.ஏ ஐ ஐ பில இன்னும் எத்தனை பேப்பர் பாக்கியிருக்கு? தாம்பரம் பிராஞ்சுக்கு டிரான்ஸ்பர் கெடைக்குமா? ஏன்னா நானும் வேலைக்கு போக ஆரம்பிச்சா, இங்க இருந்தா செளகரியமாய் இருக்கும்"
அண்ணா மாடு மாதிரி தலையை ஆட்டிக் காண்பித்தான். என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை. குப்பனின் முகம் இப்போது எப்படி இருக்கும் என்று நினைத்தக் கொண்டு நானும் அண்ணாவும் பின் பக்கமாய் ஓடி கிணற்றடியில் சிரிக்கலாம் என்னும் பொழுது, பக்கத்தில் சமையலறை போல் இருந்தது.
"ஏண்டி என்ன சொன்னார் மாப்பிள்ளை?" என்று அந்த மாமி கேட்க, "சுத்த பேத்தல்" என்று மறு மொழி வந்தது.
சத்தமில்லாமல் வாயைப் பொத்திக்கொண்டு சிரித்தவாறு திரும்ப சுற்றிக் கொண்டு வீட்டில் நுழைந்தால் குப்பன் சோகமாய் அமர்ந்திருந்தான். லெட்டர் குடுத்தியா என்றுக் கேட்டதற்கு இல்லை என்று தலையை ஆட்டியவன், அம்மா சொன்ன மாதிரி இந்த பொண்ண வேண்டாம்னு சொல்லிடப் போறேன் என்று முணுமுணுத்தான்.
அந்த நேரம் ஒரு வயசான தம்பதியினர் உள்ளே நுழைந்தனர். குப்பன் எழுந்து நின்றான். அண்ணா ஜாடைக்காட்ட நான் வெளி வெராந்தாவுக்கு போனேன்.
"பாவம்டி அந்த மாமி! குப்பனை எப்படியாவது சமாதானம் செய்யணும். இந்த அசடை அந்த ராதாதான் வழிக்கு கொண்டு வருவா" என்று தின்ன போண்டா நன்றியை மறக்காமல் பேசினான் அண்ணா.
பத்து நிமிஷம் கழித்து வாயெல்லாம் பல்லாய் வெளியே வந்தான் குப்பன்.
"வரேன் அத்தை! வரேன் பாட்டி, தாத்தா" என்று அவர்களிடம் உரிமையுடன் சொல்லிக் கொண்டவன் ராதாவிடம், "எக்ஸாமுக்கு பெஸ்ட் ஆப் லக் ராதா" என்று காதல் பொங்கி வழிய சொல்லிவிட்டு, எங்கள் இருவரையும் அழைத்துக் கொண்டு தெருவில் இறங்கினான்.
என்ன நடந்தது என்று புரியாமல் நாங்கள் முழிக்க, " இது ஜன்ம ஜன்மாய் தொடரும் உறவு. ராதா எனக்காகவே பிறந்துள்ளாள்" என்று வசனம் பேச ஆரம்பித்தான்.
எப்படி இந்த ஞானோதயம் என்று நாங்கள் பார்க்கும் பொழுது, " ராதாவோட பெட் நேம் என்ன தெரியுமா?" என்று நிறுத்தியவன், "குப்பி! " தேன் குடித்த நரிக்கணக்காய் பதிலளித்தான்
**********************
9 பின்னூட்டங்கள்:
test :-)
//உடனே அனுப்பி வைத்தேன். ஆனால் அவ்விதழ் பிறகு நின்று விட்டது.//
ஆமாலுக்கு பதிலா அத்னால் வந்திருந்தால் நன்னா இருந்திருக்குமோ..? :P
கதை இருபது வருஷத்துக்கு முன்னாடி எழுதினதா..?
அம்பி, ஏழாவது படிக்கும்பொழுதே சரஸ்வதி கடாச்சரம் கிடைத்திருந்தால், இந்நேரம் சாகித்ய
அகாதமியாவது வாங்கியிருக்க மாட்டேன் , ஹூம் :-(
This comment has been removed by the author.
சொல்ல வந்த 'test' மேட்டர் பூர்வ கர்ம பலன் காரணமாக! திரிந்து விட்டதால்... திரும்ப இங்கே....
:-) keep writing, we are watching, though not commenting!
test
http://nunippul.blogspot.com/search?q=test
நன்றி ஞான்ஸ். அவ்வப்பொழுதாவது தரிசனம் தாங்க
Superb :-)
கதை நல்லாயிருக்குங்க..
ரொம்ப அருமையா இருக்குங்க..
Post a Comment
<< இல்லம்