Wednesday, December 15, 2010

தமிழிசை பாடல்கள், & பெங்களூர் சுப்பு லஷ்மி

ஒளரங்கசீப் குடும்பத்தில் வாழ்க்கைப்பட்ட இசை பிரியையான என் அம்மாவுக்கு இருந்து இருந்து அறுபது சொச்ச வயதில் பாட்டு கற்றுக் கொள்ள முடிவெடுத்து வீட்டுபக்கத்தில் இருந்த பெங்களூர் சுப்புலஷ்மி என்ற பாடகியிடம் பாட்டு கற்றுக் கொள்ள சேர்ந்தார். சுமார் ஒருவருடங்கள்தான் கற்றுக் கொள்ள முடிந்தது.

அப்பொழுது அந்த அம்மாளுக்கு வயது எழுபதுக்கு மேல். எம்.எஸ் சுப்புலஷ்மி
அவர்களின் செட். கொஞ்சம் ஆண்மை கலந்த கணீர் என்று அபூர்வமான குரல். தொழில் ரீதியான போட்டி அரசியல், தன்னை சென்னையில் வளர விடவில்லை என்றுச் சொல்லி வருத்தப்பட்டார்.

பாபநாசம் சிவம் அவர்களின் கந்தா வா வா, கா வா வா என்ற பிரபல பாடல் அவர் பாட கேட்டு, அதே ஒள. பரம்பரையில் உதித்த நானே மெய் மறந்துப் போனேன்.

என் அம்மாவுக்கு இனிமையான குரல் வளம். முன்பு எல்லாம் நவராத்திரி வந்தால் பாட சொன்னால் கூச்சபடாமல் பாடிவிட்டு வருவது வழக்கம்.

பாட்டுகிளாசில் குஞ்சுகுளுவனுங்களுடன் வகுப்பு ஆரம்பித்தது. அம்மாவின் ஆர்வத்தைப் பார்த்து சரளி வரிசை எல்லாம் வேண்டாம், நேராய் பாட்டாய் கற்று தருகிறேன் என்று சொல்லி நூறுபாடல்கள் வரை கற்று தந்திருக்கிறார். அம்மா அவைகளை நாட்குறிப்பில் பாடல்கள் எழுதியது யார், ராகம், தேதி என்று வரிசையாய் ஆவணப்படுத்தியிருக்கிறார்.

நேற்று இசைவிழா பற்றி பேச்சு எழுந்ததும், இன்னும் தமிழ் பாடல்கள் அதிகம் பாடப்படுவதில்லை என்றுச் சொல்லிக் கொண்டு இருக்கும்பொழுது பெங்களூர் சுப்புலஷ்மி அம்மாள் பற்றி பேச்சு திரும்பியது.

அம்மா, அவ்ரிடம் கற்றுக் கொண்ட மிக அபூர்வமான தமிழ்பாடல்கள் இருபது இருபத்திஐந்து இருக்கும். எழுதி வைத்திருந்த டைரியும் , டேப் செய்து வைத்திருந்த பாடல்களையும் தேடி தருகிறேன் என்றுச் சொல்லியிருக்கிறார்.

சிலபாடல் வரிகள் நினைவிருந்த வரையில்- அம்மா சொல்லக் கேட்டு,

திருட்டு குலத்தினிலே, வேலேந்தும் தெய்வத்தை
கண்டெடுத்தேன், அவன் உருட்டல் மிரட்டெல்லாம்
நமக்கோர் உண்மை விளக்குதம்மா (திருட்டு)

ஜாதி பேதம் அறியா ஷண்முகன்
ஜாதிக்கெல்லாம் தலைவன்
கொள்ளை அடிக்கும் தொழில்
உள்ளத்தைக் கொள்ளை அடிக்கும் தொழில் (திருட்டு)

முழுக்க கிடைத்ததும் அனைத்தையும் இங்கு வலையேற்றுகிறேன்.

முருகன், கண்ணன், சிவன், அம்மன், பெருமாள் என்று அனைத்து கடவுள்கள் மேலும் தமிழ் பாடல்கள்.

இன்னும் ஒரு பாட்டு முழுக்க முழுக்க பழனி முருகனுக்கு கும்மி பாட்டில் அபிஷேக ஆராதனை.

இன்னும் ஒரு பாட்டில்,

வேலெடுத்து ஏன் நடந்தாய்? வடிவேலவா என்ற பாட்டில் குழலை மாற்றி திரு கோடு கண்டாய் நாட்டில் என்று ஒரு வரி. பழனியில் குழலை- முடியை எடுத்துவிட்டு,
திரு கோடு- என்றால் கோடு- மலை (திரு செங்கோடு)

கபாலீஸ்வரர் மேல் ஒரு பாடல். அதில் ஒரு வரி கடற்கரையில் மயிலாய்
உன்னை பூஜித்த மாதா கற்பகாம்பிகை நாதா ( ஆக கபாலீஸ்வரர் கோவில்
கடற்கரையில் இருந்திருக்கிறது)

இப்படி அந்தக்காலங்களில் தமிழ் பாடல்களை இசைத்துக் கொண்டு இருந்திருக்கிறார்கள். சென்னையில் இசை விழா என்று ஆரம்பித்த பிறகு தமிழ் ஒதுக்கப்பட்டு தெலுங்கு, வட மொழிக்கு முக்கியத்துவம் தரத் தொடங்கியிருக்க வேண்டும் என்பது என் கணிப்பு (சென்னை வாழ் தெலுங்கர்களின் டாமினேஷன் ?)

Labels:

3 பின்னூட்டங்கள்:

At Wednesday, 15 December, 2010, சொல்வது...

அருமையான விசயம்.. பதிந்து வைங்க.. பயன்பெறுவோம் நாங்கள்..

 
At Tuesday, 11 January, 2011, சொல்வது...

( ஆக கபாலீஸ்வரர் கோவில்
கடற்கரையில் இருந்திருக்கிறது)//

சரியாப் போச்சு போங்க, இந்த விஷயம் எப்போவோ திருஞானசம்பந்தர் எழுதிட்டாரே? :))))))

 
At Tuesday, 03 May, 2011, சொல்வது...

மாசத்துக்கு ஒருக்கா இந்தப் பதிவு தானே உயிர்த்தெழுமோ!!!!!!

இப்போ சாந்தோம் சர்ச் இருக்கு பாருங்க. அதுதான் முன்பொரு காலத்துலே கபாலியின் இருப்பிடம். வெளிச்சுற்றுச்சுவரில் அலைவந்து அடிச்சுட்டுப்போகுமாம். தண்ணீர் அவ்ளோ கிட்டே!

இப்ப இருக்கும் கோவில் முன்னூத்திச் சொச்சம்தான் வயசானது.

 

Post a Comment

<< இல்லம்