நான் இப்படி எழுதுகிறேன்?
ஆகஸ்ட் மாதம் என்னையும் எழுத்தாளி என்று தீர்மானமாய் நம்பும் காற்றுவெளி மதுமிதா ஒரு மாதம் கெடு அதற்குள் ”இரவு” என்ற தலைப்பு எழுதிக் கொடுங்க என்றார். கதையா, கவிதையா (!), அல்லது அபுனைவு என்றுக் கேட்டதற்கு உங்க இஷ்டம், எல்லா எழுத்தாளர்களிடமும் “இரவு” என்ற தலைப்பில் எழுத சொல்லிக் கேட்டு இருக்கிறேன், சந்தியா
பதிப்பகம் புத்தகத் திருவிழாவுக்கு வெளியிடுகிறது என்றார்.
ஆனால் என் சொந்த வேலை குடைச்சலில் மறந்தே போனது. இரண்டு நாட்களுக்கு முன்பு என்ன செளக்கியமா என்று விசாரித்ததும், “இரவு” எங்கே என்றார். நாளைக்கு காலை பதினோறுமணிக்குள் அனுப்பிடுங்க என்றுச் சொல்லி போனை வைத்தார்.
என்னத்த எழுத என்றும் யோசித்துக் கொண்டே இணையத்தை வலம் வரும்பொழுது, பிரபல எழுத்தாளர் நான் எப்படி எழுதுகிறேன்? என்று ஒரு பதிவு போட்டிருந்தார். கமெண்ட் பக்கத்திலோ பல வாசகர் இனி இதே போல எழுதுகிறோம் என்று உறுதி மொழி எடுத்திருந்ததும் கண்ணில் பட்டது.
ஆகா நல்ல நேரத்தில் நம் கண்ணில் பட்டதே என்ற உவகையுடன் அவர் எழுதியதை வரி வரியாய் படிதது மனனம் செய்துக் கொண்டு, என் வேலை ஆரம்பித்தேன்.
தட்டச்சி, அழித்து, மீண்டும் தட்டி ரெண்டு பாரா வருவதற்குள் மணி பத்தரை. எழுத்தாளரோ இரவு பத்து மணிக்கு ஆரம்பித்து அதிகாலை ஐந்து மணி வரை எழுத வேண்டும் என்கிறார்
எனக்கோ அதே அதிகாலையில் குக்கரை வைத்தால்தான் ஏழு மணிக்கு காலை டிபனும், மதிய சாப்பாடும் என் மகனுக்கு தயாராகும். ஆக, முதல் விதியே அடிப்பட்டுப் போனது.
ஏதோ கொஞ்சமாவது கடைப்பிடிக்கலாம் என்று காலையில் எழுந்து ஐந்தரை மணிக்கு காபி போட்டு விட்டு, சட்னி அரைத்து விட்டு, நேற்றிரவு எழுதியதை திருத்த ஆரம்பித்தேன்.
ஆறரை மணிக்கு மகனை எழுப்பி அவனுக்கு காபி, தோசை தந்துவிட்டு, மதிய சாப்பாடு இன்னைக்கு கல்லூரி காண்டீனில் சாப்பிடு , கொஞ்சம் ரைட்டீங் வேலை இருக்கு என்று ஆரம்பிக்கும்பொழுதே, இன்னைக்கு காண்டீன் போகவே நேரம் இருக்காது. ஒரு தயிர்சாதம் கலந்துக் கொடுக்கக்கூட உனக்கு நேரமில்லை இல்லையா? என்று கடுப்பு அடித்தவனிடம், அதே கடுப்பை நானும் முகத்தில் காட்டி, மாவு இருக்கு மூணு தோசை பாக் பண்ணி தரட்டா என்றுக் கேட்டதற்கு, என்னமோ செய் என்று முணங்கினான்.
அவனை அனுப்பி விட்டு, மகளை எழுப்பி, தோசையும் காப்பியும் தந்து விட்டு, “இன்னைக்கே கொடுக்க வேண்டும்” என்று என் எழுத்தாள பெருமையை ஆரம்பித்து, மதிய சாப்பாடு வெளியில் சாப்பிடுகிறாயா என்றுக் கேட்டதும், நீ உன் வேலையை பாரு. பிராட்வேல ஒரு ரெஸ்டாரண்ட் பார்த்து வைத்திருக்கிறேன், என் கொலிக் சொன்னாள். ஒரு முன்னூறு ரூபாய் கொடு” என்றாள்.
மூன்னூறு ரூபாயா என்றுக் கேட்காமல், “உன் தம்பி போல் நீயும் தோசை எடுத்துக்கிட்டு போகிறாயா ?” என்றதும், “ஐயே” என்றவள், பர்சை திறந்து “சேன்ஜ் இல்லை. ஐநூறு நோட்டு இருக்கு. எடுத்துக்கிறேன்” என்றாள்.
அவள் கிளம்ப கிளம்ப அம்மா போன் . எடுத்ததும், “நாளை வளைக்காப்புக்கு வரே இல்லே “ என்று ஆரம்பித்ததும், “வரேன் வரேன்! நீ போனை வெய்யி. முக்கியமாய் ஒண்ணூ டைப் செய்யணும்” என்று கடுகடுத்தேன்.
“எழுது எழுது. உனக்கும் பொழுது போகணுமில்லையா? என்று சொல்லி போனை கட் செய்தார். நான் ராஜேந்திரகுமார் ஈரோயினி மாதிரி முழித்துவிட்டு போன் வைக்க, அடுத்த அழைப்பு கணவர்!
இங்க ஒரு சின்ன முற்று புள்ளி வைத்துவிட்டு பாரா என்ன சொல்கிறார் பார்ப்போம்.
எழுதும்போது பிரவுசிங் கூடாது. சாட்டிங் கூடாது. ட்விட்டர் கூடாது. தொலைபேசி கூடாது. வீட்டுக்கு வரும் உறவினர் கூடாது. சினிமா கூடாது. டிவி கூடாது. எழுத்து நீங்கலாக மூன்று செயல்களுக்கு மட்டுமே அனுமதி. சாப்பிடலாம். ஓய்வெடுக்கலாம். இயற்கை உபாதைகளுக்குச் செவி சாய்க்கலாம். அவ்வளவுதான்.
கடைசி ஒன்றை தவிர வேறு ஒன்றையும் கடைப்பிடிக்க முடியாது. கணவர், அவர் சொன்ன வேலைகளை பட்டியல் இட்டு எது எந்த வரையில் இருக்கு என்றுக் கேட்க, இன்னைக்கு ஒரு நாள் என்னை விட்டு விடுங்க, கொஞ்சம் அர்ஜெண்ட் எழுத்து வேலை என்று ஆரம்பிக்க, என்னமோ செய் என்ற அலுப்பாய் ஆரம்பித்ததும் லேசான கோபம் வரத்தான் செய்தது.
ஆனால் அக்கோபம் எழுத்தை பாதிக்கும் என்ற நினைப்பில், இன்னும் பேச்சை வளர்த்தால் அது ஆபத்தான திசையில் பயணிக்கும் என்ற முன் அனுபவங்கள் பல உண்டு என்பதால், போனை வைக்கிறேன் என்று சொல்லி பதிலுக்கு காத்திராமல் தொடர்ப்பை துண்டித்தேன்.
திரும்ப தட்ட ஆரம்பித்தேன். மணி அடித்தது வேலைக்கார அம்மா! பாத்திரங்களை ஒழித்துப் போடவில்லை, வீட்டை சரி செய்யவில்லை. துணிகளை வாஷிங்மெஷினில் போடவில்லை. அரைமணிக்குள் நா வரேம்மா காபிகூட தரவில்லை என்றுச் சொல்லிக் கொண்டே வாசல் பக்கம் போனவரை இருங்க இருங்க காபி தரேன் என்று எழ முயற்சிக்க, நீங்க உங்க வேலையை பாருங்க என்று சொல்லி விருவிருவென்று போய் விட்டார்.
ஹூம், இது நாளைக்கு எபப்டி வெடிக்குமோ என்ற யோசனையுடன் மீண்டும் தட்ட ஆரம்பித்தேன். மீண்டும் வாசலில் மணி சத்தம்.
கொழாய் அடச்சிருக்குன்னீங்களே, புளம்பர் வந்து இருக்காரு என்றார் வாட்மேன். வாராது வந்த மாமணி அவரை உள்ளே அழைத்து வேலை சொன்னேன். வாங்க வேண்டியவைகளை பட்டியல் இட்டு பணம் வாங்கிக் கொண்டு சென்றார்.
ஏறக்குறைய முடித்திருந்த கட்டுரையை மதுமிதாவுக்கு அனுப்பி விட்டு, காபி போட்டு குடித்தேன். அதற்குள் குழாய் ரிப்பேர் ஆரம்பித்தது. வெள்ளை சிமெண்ட் கலக்க மக் கொடுங்க, பழைய துணி, பேப்பர் குடுங்க, குபபையை அள்ளி போட பிளாஸ்டிக் கவர் என்று அவர் கேட்க கேட்க எடுத்துக் கொடுக்கும்பொழுது, மது, “நாலாத்தான் இருக்கு, ஆரம்பமும்,
முடிவும் ஓ.கே நடுவுல கொஞ்சம் சேர்க்க வேண்டும்” என்று ஆரம்பித்தார்.
அவர் சொல்வதை காதில் வாங்கிக் கொண்டே மீண்டும் தட்ட ஆரம்பித்தேன். அதற்குள் வேலை ஆயிற்று என்று கிளம்ப கூலி கொடுத்து அனுப்பினேன்.
திரும்ப கட்டுரையை அனுப்பிவிட்டு உள்ளே போனால், அரை குறை வேலை. சிமெண்ட் வைத்து சரியாய் பூசவேயில்லை. நல்லவேளையாய் போன் நம்பர் இருந்தது. சொன்னதும், தோ வரேம்மா என்றார்.
அதற்குள் மது போன், க்ட்டுரையில் குறிப்பிட்ட அனுபவங்களை வார்த்தையால் சொல்லிக் கொண்டு இருக்கும்பொழுது, இதையெல்லாம் எழுத்தில் கொண்டு வரவில்லை. கொஞ்சம் முயற்சி செய்யுங்க. பன்னிரெண்டு மணிக்குள் தந்துடுங்க என்றார்.
மீண்டும் முழுக்க ரீ ரைட் செய்துவிட்டு மணியைப் பார்த்தால் ஒன்றடிக்க பத்து நிமிடம். மீண்டும் மதுவுக்கு அனுப்பி விட்டு, இனி என்னை விட்டு விடுங்கள் ஏதாவது கரெக்ஷன் இருந்தால் நீங்களே சரி செய்துக் கொள்ளுங்கள் என்று சொல்லி விட்டேன்.
குளித்துவிட்டு, குக்கர் வைத்து ஊறுகாயும் தயிரும் சாப்பிட்டேன். மீண்டும் பிளம்பரை அழைத்தால் நாளைக்கு வந்து செஞ்சிடரேம்மா என்றார்.
சமையலறை குழாய் திறந்தால் தண்ணீர் பூசப்படாத இடுக்கில் இருந்து கீழே பாய்கிறது. பிளம்பர் சரியாய் துடைக்காததால் சாக்கடை நாற்றம். பினாயில் போட்டு துடைத்தெடுத்து, எல்லாம் சுத்தம் செய்துவிட்டு, துணி போட்டு எடுத்து..... போதுமடா என்று ஆகிவிட்டது.
எப்பொழுதோ படித்த கதை. அமெரிக்காவில் வசிக்கும் ஒரு கர்நாடக் இசை பாடகிக்கு சென்னை இசைவிழாவில் பாட வாய்ப்பு கிடைக்கிறது. வயது வந்த பெண்ணை பார்த்துக் கொள்ள வேண்டும், வீட்டு பொறுப்பு, விமான பயண சீட்டு செலவு என்று கணவன் முகம்
சுளிக்க, படாத பாடு பட்டு சென்னை வருவார். காலை பத்துமணி கச்சேரி. எதிரில் எண்ணி நாலைந்து ரசிகர்கள். (எழுதியது கீதா பெர்னாட் என்று நினைவு)
அந்த கதையின் நாயகி போல் எதற்கு இவ்வளவு பாடு என்று பல முறை தோன்றியுள்ளது. ஆனால் நாளை அந்த புத்தகத்தில் இடம் பெற்ற என்னுடைய கட்டுரையையும் யாராவது முகம் தெரியாத வாசகர் வாசித்துவிட்டு, நன்றாக இருக்கிறது என்று சொல்ல போகும் அந்த சொல்லுக்குத்தான் இன்னும் நானும் எழுதிக் கொண்டு இருக்கிறேன்.
Labels: அனுபவம்
27 பின்னூட்டங்கள்:
இவ்ளோ கஷ்டப்பட்டு எழுதிய கதை - அதை விட்டுங்க, இவ்ளோ (அனுபவங்களை) கஷ்டங்களை வெளியே - யம்மாம் டீடெயில்சு - கொண்டு வந்து உங்களுக்கு சமர்த்தாக படுத்துக்கிடந்த எழுத்தாளினியை எழுப்பிவிட்டுட்டாங்கள்தானே :)
உங்களுக்கு ”அவர்” பார்முலாவெல்லாம் வேணாம்! இதே எழுத்தாளினி ரூட்ல நீங்க போங்க :)))))))
வாழ்த்துகள்.. இதுவே ஒரு சிறப்பான நிஜக்கதையாக ரசித்தேன்..
ஆயில்யன், பாரா சொன்ன விதி முறைகளை எந்த பெண் எழுத்தாளர்களாலும் பின் பற்ற
முடியாது என்றே எனக்கு தோன்றுகிறது.
நன்றி பயணமும் எண்ணங்களும்
ஹைய்யோ ஹைய்யோ......
புட்டு புட்டு வச்சுட்டீங்களே ஏகாம்பரி!!!!!!
பத்துமணி கச்சேரி. எதிரில் எண்ணி நாலைந்து ரசிகர்கள். (எழுதியது கீதா பெர்னாட் என்று நினைவு)//
சுஜாதாவோட "மத்யமர்" (கல்கி வாரப்பத்திரிகையில்) தொகுதியிலே வந்தாப்போல் நினைவு! கீதா பென்னெட் இல்லைனு நினைக்கிறேன்.
துளசி முழுக்க முழுக்க உண்மை சம்பவம். சாட்சி மதுமிதா :-)
கீதா நீங்க சொன்னது சரி என்று நினைக்கிறேன். ஒரு பர்சனல் மெயில் போட்டேனே கிடைத்ததா?
ஓ, மன்னிக்கணும், உஷா, நிறைய மெயில்கள் இருப்பதில் சரியாய்ப் பார்க்கவில்லை. பார்க்கிறேன். நன்றி :)))))
மாமி, Fuல்லரித்துவிட்டது. இத்தனை சோலிகளை வைத்துக்கொண்டே இவ்வளவு எழுதுகிறீர்களே, உங்களுக்கு எதற்கு விதிகளும் வெங்காயமும்? சும்மா அடித்து ஆடுங்கள்.
ஏகாம்பரி சிரிச்சு சிரிச்சு முடியலை! :) மத்யமர் கதை தான்னு நானும் நினைக்கிறேன்..
செம சிறுகதை படிச்ச எஃபெக்ட் :))
சிவசங்கரி கூட இதே போல் ஒரு கதை எழுதியிருப்பார். எண்ணெய் தேய்த்து குளிக்க திட்டமிடும் குடும்பத் தலைவிப் பற்றி. எல்லா இடைஞ்சல்களும் தாண்டி குளியலறையில் இருக்கும்போது பக்கத்து வீட்டிலிருந்து ‘ஃபோன் வந்திருக்கு’ என்று கூப்பிடுவார்கள். அடித்து பிடித்து உடையணிந்து கொண்டு போனால் அது தவறான அழைப்பு என்று முடியும்.
//“எழுது எழுது. உனக்கும் பொழுது போகணுமில்லையா? // இதான் டாப் :))
ஏகாம்பரி எழுதி ஏகப்பட்ட நாள்கள் ஆச்சு என்பது தெளிவாகத் தெரிகிறது. ஏகப்பட்ட எழுத்துப்பிழைகள். கொடுத்த கதையிலாவது இப்படி இருக்காது என்று நம்புவோமாக.
பெண்களுக்கு மட்டுமே இப்படி லிஸ்ட் போட்டு வேலை என்பதைக் குறிப்பிட்டு ஆண்கள் எல்லாம் என்னமோ வெட்டியாக இருப்பதால் எழுதித்தள்ளுவதாக செய்யும் நுண்ணரசியல் கண்டு பிரமித்து நிற்கிறேன்.
அண்ணன் பெனாத்தலார் வந்து மிச்சக் கருத்துகளைச் சொல்லுவார்.
அதானே, பெண்ணாய் லட்சணமாய் இல்லாமல், என்ன எழுத்து வேண்டியிருக்கு?...இப்படின்னு சொல்லுகிற மக்கள் நிறைய பேர் எனக்குத் தெரியும்:(
இதுவே ஆண் பதிவர் / எழுத்தாளர்னா எழுத்து அவருக்கு ஒரு தவம்:-(
admin , குழந்தை வளர்ப்பது எப்படி என்று எந்த வகுப்பும் எடுக்க முடியாது. அதைப் போல எழுவது
என்பது அவரவர் வழி, சூழ்நிலை, மற்ற வேலைகளைப் பொறுத்தே அமையும்.
பொற்கொடி, இது சீரியஸ் மேட்டர் :-) இதுக்கு பல்லைக்காட்டுவது அநியாயம் :-))
நன்றி ஸ்ரீதர்
இலவசம், இது ஆணிய சிந்தனைக்கு மறுமொழின்னு தெளிவா குறிப்பிட்டு இருக்கோமில்லே :-(
கெ.பி, நா மட்டும் தவம் செய்ய மாட்டோமா, ஒரு எண்பது வயசு ஆகி, ஓல்ட் ஏஜ் ஹோமில்
வேளாவேளைகு சாப்பிடுவந்தால் தவம் கைக்கூடும்.
உஷா மாமி என் ப்ளாகர் ஐடியில் என்னமோ பிழை. என் பெயரில் வராமல் அட்மின் என்று வந்திருக்கிறது. அந்த கமெண்ட் என்னுடையது. ஆமென்.
பாரா/
உஷா,
:) நன்றாகச் சிரித்துப் படிக்கமுடிந்தது. ஆனால் இதெல்லாம் வெட்டிச்சாக்கு என்றுதான் நான் சொல்வேன் :>
பாராவுக்கு வக்காலத்து வாங்குவதாக நினைத்துக்கொள்ளவேண்டாம். ஆணோ, பெண்ணோ, எழுதவேண்டும் என்று நினைத்தால் அதற்கான நேரத்தை ஒதுக்கிக்கொள்ளமுடியவேண்டும் - ஒதுக்கிக்கொண்டாகவேண்டும் - ஆண்களும் வேறு சில சவுகர்யங்களை / பொழுதுபோக்குகளை (சில சமயங்களில் கடமைகளைக்கூட) இழந்துதான் எழுதுகிறார்கள் என்பதை மறுக்கமாட்டீர்கள் என நம்புகிறேன் :)
//கெ.பி, நா மட்டும் தவம் செய்ய மாட்டோமா, ஒரு எண்பது வயசு ஆகி, ஓல்ட் ஏஜ் ஹோமில்
வேளாவேளைகு சாப்பிடுவந்தால் தவம் கைக்கூடும்.//
அல்ஸைமர் வராமல் இருந்தால்.........ஒருவேளை..... ச்சான்ஸ் இருக்கு.
@Naga Chokkanathan,
என்னைப் பொறுத்த வரையிலும் சரியே. எல்லாருக்குமே சில, பல பிரச்னைகள் இருக்கின்றன. ஆணோ, பெண்ணோ யாரானாலும். என்னைப் பொறுத்த வரையிலும் மத்தியானம் 12ல் இருந்து இரண்டு வரை என்று வைத்துக்கொண்டிருக்கிறேன். வேலை எல்லாம் முடிஞ்சுடும். கவனம் சிதறாது. திடீர் விருந்தினர் வந்தாலொழிய! :))))))))))
காலையிலோ, மாலையிலோ, இரவிலோ மெயில்கள் பார்ப்பதும், பதில் கொடுப்பதும் மட்டுமே! :))))))))
வாங்க சொக்கன், அதே தான் எழுத நேரமில்லை என்பது ஒரு சாக்குபோக்கு சொல்தான். நானும்
இந்த க்ளேபரத்தில் எழுதி அனுப்பிவிட்டேனே! ஆனால் நான் சொல்லவந்தது, எழுத வேண்டும்
என்ற எண்ணம் இருந்தாலும் எப்படியும் எழுதலாம், இதற்கெல்லாம் விதி முறைகள் வகுக்க முடியாது
என்பது தான்.
பாரா சொன்ன இந்த வார்த்தைகள் தான் என்னை இந்த பதிவு எழுத தூண்டியது.
// எழுதும்போது பிரவுசிங் கூடாது. சாட்டிங் கூடாது. ட்விட்டர் கூடாது. தொலைபேசி கூடாது. வீட்டுக்கு வரும் உறவினர் கூடாது. சினிமா கூடாது. டிவி கூடாது. எழுத்து நீங்கலாக மூன்று செயல்களுக்கு மட்டுமே அனுமதி. சாப்பிடலாம். ஓய்வெடுக்கலாம். இயற்கை உபாதைகளுக்குச் செவி சாய்க்கலாம். அவ்வளவுதான்.//
இதைக்கடைப்பிடிக்க பெண் எழுத்தாளர்கள் கல்யாணமே செய்துக் கொள்ள கூடாது என்று ஒரு
வரி சேர்த்திருக்கலாம்.:-)))))) எபப்டியோ விளையாட்டாய் எழுதியது, சுவாரசியமான அலசல்களுக்கு வழிவகை செய்து விட்டது. நன்றி பாராவுக்கு
பாரா சார், உங்களையே உங்களிடம் கிரிட்டிசைஸ் செஞ்சிட்டேனா :-)
துளசி,அல்சைமர் எல்லாம் சிந்தனாவாதிகளுக்கு வராது என்பது தெரியாதா :-)))
கீதா, நான் மழலை பட்டாளம் ஹூரோ மாதிரி, எல்லா களேபரங்கள் நடுவில் தட்டிக் கொண்டு
இருப்பேன். வீடு ஒருவரும் இல்லாமல் அமைதியாய் இருந்தால் எனக்கு என்னமோ போல்
இருக்கும் :-)
’இரவு’ பற்றி கட்டுரை கேட்டா ரொம்ப ஈஸி...’தூக்கம்’ அப்படின்னு ஒரு வரியிலே எழுதி இருக்கலாமே (நான் எழுத்தாளன் இல்லை) :)
’பகல்’-னு கேட்டிருந்தாங்கன்னா இந்தப் பதிவையே அனுப்பியிருக்கலாம்...Very nice commentary about your daily chores.
ராஜ்சந்திரா, ஐடியாக்கு நன்னி :-) பகல்ன்னு யாராவது கேட்டால் இதையே அனுப்பலாம்ன்னு
சொன்னதுக்கு :-))
உஷா, உங்கள் எழுத்து இளமைமாறாமல் அப்படியே இருக்கிறது :-)
class
பா.ராவை படித்த போது எழுத உத்வேகம் வர்ரா மாதிரி தெரிஞ்சுச்சு, உங்க எழுத்தை படிக்கும் போது நிதர்சனம் புரிஞ்சுது :)
இவ்ளோ வேலைக்கு மத்தியில எழுதனும்னு நினைக்கிறீங்களே...
வாழ்த்துக்கள்!!!
இவ்வளவு சிரமத்துக்கு இடையிலும் எழுதும் உங்கள் முனைப்பை பாராட்டுகிறேன்.
The story was by Sujatha.
- Simulation
Post a Comment
<< இல்லம்