Saturday, March 17, 2007

மூன்று- ஜூவி, கல்வெட்டு, அம்பை& உஷா

பெண்ணாய் பிறந்ததன் சில அசெளகரியங்களை, நவீன சாதனங்கள் ஓரளவு குறைத்தாலும், அறியாமையாலும் ஏழ்மைநிலையும் சேர்ந்துஇன்னும் பல பெண்கள் அவதிப்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள் என்பது வேதனை தரும் செய்திகள்.

முதலில் ஜூனியர் விகடனில் வந்த கட்டுரை, அடுத்து கல்வெட்டு என்கிற பலூன் மாமா தன் பதிவில் போட்டது அடுத்து திண்ணையில் அம்பை அவர்களின் சிறுக்கதையை எடுத்துப் போட்ட கே. ஆர். மணி அவர்களுக்கும் நன்றி.

21- 3- 2007 ஜூனியர் விகடனில்

அரசு எடுத்த மருத்துவ சர்வே.. நாற்பதை தொட்ட பெண்கள் உஷார்!

‘தங்களுக்கே தெரியாமல் தங்கள் பிறப்புறுப்பில் புற்று நோயைச் சுமந்து கொண்டிருக்கிறார்கள் கிராமத்துப் பெண்கள்!’ &இப்படியரு ‘ஷாக்’ ரிப்போர்ட் வந்திருப்பது, தமிழக அரசின் ‘வருமுன் காப்போம்’ திட்டத்தில் நடத்தப்பட்ட பரிசோதனையில்தான்!

‘கிராமப்புற பெண்களை மட்டும் இந்த நோய் குறிவைக்கக் காரணம் என்ன?’ என மருத்துவ வட்டாரத்தில் விசாரித்த போது கேள்விப்பட்ட விஷயங்கள், மேலும் நம்மை அதிர்ச்சியில் தள்ளியது.

இதுகுறித்து நம்மிடம் விரி வாகப் பேசிய தேனி மாவட்ட மருத்துவத்துறை துணை இயக்குநர் பாலசுப்பிரமணியன், ‘‘தேனி மாவட்டத் தில் இதுவரை பத்து மருத் துவ முகாம்களை நடத்தி இருக்கிறோம். அதில், முப்பது வயதிலிருந்து நாற்பது வயதுடைய கிராமப் பெண்களுக்கு மர்ம உறுப்பில் புற்றுநோய் இருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர். இது குறித்து ஏற்கெனவே சர்வே மேற்கொண்ட உலக சுகாதார மையமும், இந்திய மருத்துவக் கழகமும் கிராமப்புற பெண் களுக்கு இதுபோன்ற நோய் இருப்பதை எங்களுக்கு அறிவுறுத்தியது. அதையடுத்து நாங்களும் தீவிரமாகப் பரிசோதனையில் இறங்கினோம். இது வரையில் தமிழகத்தின் முக்கியமான நான்கு ஊர்களில் நடத்தப்பட்ட மருத்துவமுகாம்கள் மூலமாக எங்களுக்குக் கிடைத்திருக்கும் தகவலைச் சொன்னால் அதிர்ந்துதான் போவீர்கள். அந்த முகாம்கள் மூலமாக ஏராளமான கிராமத்துப் பெண்களை சோதித் ததில் சுமார் ஒரு லட்சத்து எழுபதாயிரம் பெண்களுக்கு இந்த புற்றுநோய் இருப்பது உறுதி செய்யப் பட்டிருக்கிறது. இதெல்லாம் ஆரம்ப கட்டம்தான் என் றாலும், காலப் போக்கில் இதன் பாதிப்புகள் தீவிரமாகும் என்பதையும் மறுப்பதற்கில்லை.’’ என்றார்.

உடனே, இந்த நோய் வருவதற்கான காரணம் என்ன என்று அவரிடமே கேட்டோம். ‘‘குறிப்பாக போன தலைமுறை பெண்கள், அதாவது முப்பது வயதிலிருந்து நாற்பது வயதுள்ளவர்கள் மாதவிடாய் காலங்களில் சானிட்டரி நாப்கினுக்குப் பதிலாகத் துணியைப் பயன்படுத்துகின்றனர். பெரும்பாலும் இதன் மூலம்தான் இந்த நோய் அவர்களின் பிறப்புறுப்பைத் தாக்குகிறது. நாப்கினாகப் பயன்படுத்தும் துணியை யாரும் பார்த்துவிடக் கூடாது என்பதற்காக மரம், சுவர் என இண்டு இடுக்குகளில் மறைத்து வைக்கின்றனர். அவற்றையே எடுத்து மீண்டும் மீண்டும் பயன்படுத்துகின்றனர். துணியை நன்றாக சுடு தண்ணீரில் துவைக் காமல், தேங்கிக் கிடக்கும் கண்மாய் மற்றும் குளத்தில் துவைப்பதாலும் துணியில் ஏற்கெனவே இருக்கும் கிருமிகளுடன் சுத்தமில்லாத தண்ணீரில் இருக்கும் கிருமிகளும் சேர்ந்து விடுகின்றன. இதனால் உற்பத்தியாகும் வைரஸ், பாக்டீரியா போன்றவை பிறப் புறுப்பைத் தாக்குகின்றன. தொடர்ந்து இந்தத் தவறை செய்யும்போது நாப்கின் துணிகள் நோய்கிருமிகளின் கூடாரமாகவே மாறிவிடுகிறது. இதனால் பெண்களைத் துவக்கத்தில் வெள்ளைப்படுதல் நோய் தாக்கும். பிறகு அதுவே புற்றுநோய்க்கும் அடித்தளம் போட்டுவிடும். இது ஒரு புறமிருக்க... துணி பயன்படுத்தும் பெண்கள், துணியைப் பின்புறத்திலிருந்து முன்புறம் கட்டுவதால் மல வாயிலுள்ள அசுத்தங்கள் துணியில் பட்டு, அதிலிருக்கும் கிருமிகளும் பிறப்புறுப்பைக் கடுமையாகப் பாதித்துவிடுகின்றன. இவை மொத்தமாக சேர்ந்துதான் நாளடைவில் புற்றுநோயை உருவாக்குகின்றன. அதனால் சுகாதாரமான துணி அல்லது நாப்கின்களைப் பயன்படுத்தாத பட்சத்தில் எதிர்காலத்தில் கிராமப்புறப் பெண்கள், இந்த நோயால் பெரிய அளவில் பாதிக்கப்படும் ஆபத்திருக்கிறது’’ என திகிலூட்டியவர்,
‘‘மொத்தத்தில் சுகாதாரத்தைப் பேணுவதைத் தவிர இதிலிருந்து தப்பிக்க வேறு வழியே இல்லை. இதை வலியுறுத்தி ஊட்டச்சத்துத் துறையுடன் இணைந்து வளர்இளம் பெண்களுக்கு வாராந் திர பயிற்சிகளை நடத்தி வருகிறோம். அதில் முப்பது வயதைத் தாண் டிய பெண்களுக்கும், கருவுற்ற தாய் மார்களுக்கும் பிறப்புறுப்பு புற்றுநோய் குறித்து விழிப்பு உணர்வை ஏற்படுத்தி வருகிறோம்’’ என்றார்.

தொண்டு நிறுவனங்களில் உள்ள பெண்கள் அனைவரையும் இணைத்து, பெண்கள் நெட்வொர்க் நடத்தி வரும் டாக்டர் சாம்ராயை சந்தித்தபோது அவர், ‘‘மதுரை மண்டலத்தில் எய்ட்ஸ் குறித்த மருத்துவ முகாம்களை நடத்தி வருகிறோம். கிராமிய பெண்கள், மர்ம உறுப்பில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வருவது குறித்து எங்களுக்கு அதிகாரிகள் தகவல் கொடுத்ததால், அது பற்றியும் எங்கள் மகளிர் குழுக்கள் மூலம் விழிப்பு உணர்வு பிரசாரம் செய்து வருகிறோம். கிராமப்புற பெண்களின் சுகாதாரத்தை மேம்படுத்த திட்டங்களை செயல்படுத்தும் அரசும் இந்த விஷயத்தில் இன்னும் கவனம் செலுத்த வேண்டும்’’ என் றார்..

இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆரிடம் நாம் பேசியபோது, ‘‘இந்த விஷயம் தொடர்பாக வருமுன் காப்போம் முகாம்களில் தனிக்கவனம் செலுத்த உத்தரவிட்டுள்ளோம். இந்த நோயால் பாதிக்கப் பட்டவர்களுக்கு ஆரம்ப சுகாதார மையங்களில் மருந்து& மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆரம்ப சுகாதார மையத்துக்கும், புற்றுநோய் இருப்பதை கண்டறியும் கருவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன. இதன்மூலம் இந்த நோயை ஆரம்ப நிலையிலே குணப் படுத்த நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். கிரமப்புற மக்களுக்கு இலவசமாக சானிட்டரி நாப்கின் தருவது பற்றி எங்கள் துறை அலுவலர்களிடம் ஆலோசனை கேட்டு, தலைவர் கலைஞரின் கவனத்துக்குக் கொண்டுசென்று முடிவு எடுக்கப்படும்’’ என்றவர், ‘‘கிராமப்புற மக்களின் சுகாதார மேம்பாட்டுக்குத் தொண்டு நிறுவனங்களை ஒருங்கிணைத்து விழிப்பு உணர்வு பிரசாரத்தையும் செய்து வருகிறோம். அதை இன்னும் தீவிரப்படுத்துவோம்...’’ என்றார்.
***
http://kalvetu.blogspot.com/2007/03/they-dont-use-anything-during-menses.html

கல்வெட்டு தன் சமீபத்து பதிவில் தனக்கு வந்த ஈமெயிலை போட்டிருக்கிறார். கடந்த வருடம், ரம்யா நாகேந்திரனும் இதே பொது நல சேவை மையத்தைப் பற்றி பதிவிட்டதாய் நினைவும். இன்னும் எந்த நூற்றாண்டில் இருக்கிறோம் என்று சந்தேகமாய் இருக்கிறது.
***
அடுத்து அம்பை
http://www.thinnai.com/?module=displaystory&story_id=60703156&format=html

அந்தக்கால சங்கடங்களையும், நம் ஊர் ஆண்களின் மாறாத மனப்பான்மைகளையும் அம்பை நன்றாக வெளிக் கொண்டுவந்துள்ளார்.
****
இது முன்பு நான் தோழியர் வலைப்பதிவில் எழுதியது.
அந்த கால மூணு நாள் விஷயங்கள், மதுமிதாவின் பாரதிதாசன் கட்டுரையைப் பார்த்தவுடன் பாட்டி சொன்ன விஷயங்களை நியாபகப்படுத்திவிட்டது. பாட்டி என்றால் அப்பாவின் அம்மா. சொந்த கதை, சோக கதை என்று தினமும் ஏதாவது சொல்லுவாள்.

இந்த மூன்று நாள் அவஸ்தை பற்றியும் அவள் சொன்ன சரித்திர குறிப்பு. அந்த காலத்தில் புடைவைக்குள் பாவாடை கட்டும் வழக்கம் இல்லை. அதனால் புடைவையை முதலில் உள் பக்கமாய் இழுத்து முடிச்சுப்போட்டு பிறகு சுற்றிக் கொள்வார்களாம். அதாவது கோவணம் டைப்பில் என்று வைத்துக் கொள்ளுங்களேன்.

அந்த மூணு நாள் வந்ததும், வீட்டுக்கு ஒதுங்கி உட்கார்ந்ததும் நாலைந்து பழைய புடைவைகளை தூக்கிப் போடுவார்களாம். அதன்உட்பக்கம் ஈரமானதும் அடுத்தது. தினம் இரு தடவை வண்ணாத்தி வந்து எடுத்துக் கொண்டுப் போய், சவுக்காரம் போட்டு துவைத்து -ஆற்றில் தான் மொடமொடவென்று துவைத்து உணர்த்தி தருவாளாம்.

வீட்டின் பின் பக்கம் மாட்டுதொழுவம் அருகில் இருட்டு அறை இருக்கும். அங்குதான் இருக்க வேண்டும். தண்ணீர் வேண்டும் என்றாலும் கிணறு, வாளி எதையும் தொடக்கூடாது. யாராவது சேந்தி தரும்வரை காத்திருக்க வேண்டும். பொதுவாய் ஆண்கள் வரும் பொழுது வெளியே வந்து முகத்தைக் காட்டக் கூடாது. மூணு நாள் குளிக்கவும் கூடாது (உவே!). சுமங்கலியானாலும் பொட்டு வைத்துக் கொள்ளக்கூடாது. வீட்டுக்குள் வரக்கூடாதே தவிர இவர்களுக்கு என்று பிரத்தியோக வேலைகள் உண்டு. ரெஸ்ட் எல்லாம் இல்லை.

சாப்பாடு காலையில் பழையதுதான். பிறகு வீட்டு உறுப்பினர்கள் எல்லாரும் சாப்பிட்ட பிறகு சாப்பாடு போடப்படும். முதலில் குழம்பு சாதம் சாப்பிட்டவுடன் எழுந்து தூர நிற்க வேண்டும். பிறகு சாதமும் ரசமும் போடப்படும். அதை சாப்பிட்டு முடித்ததும் திரும்ப எழுந்து தூர நிற்க வேண்டும். இலையில் சாதமும் மோரும் ஊற்றப்படும். இவை எல்லாம் வீட்டின் பின் புறம் தான். மூன்று இரவு கணக்கு, கழிந்ததும் தலைக்கு குளித்து உள்ளே வரவேண்டும். ஆனால் கணவன் முகத்தை முதலில் பார்க்கக்கூடாது.

அம்மா காலத்தில் பழைய புடைவை கிழிச்சல் துணியை உபயோகித்து அதை தனியாய் தோய்த்து வேலியில் உலர்த்துவாள். வீட்டின் ஓரத்தில் யாரையும் தொடாமல், டம்ளர் தட்டு, பாயுடன் உட்கார்ந்து இருப்பாள். சாப்பாடு பாட்டி இருந்தால் பிரச்சனை இல்லை. இல்லாவிட்டால் அப்பா சமையலறையை ஒரு வழியாக்கிவிடுவார். ஆனால் அப்பா வைத்த ரசத்தின் சுவை இன்னும் நாக்கில் உள்ளது. அம்மா இரண்டாவது நாள் ஒவ்வொரு மாதமும் ஏதாவது சினிமாவுக்குப் போய் விடுவாள். அம்மா ஜாலியாய் மூன்று நாட்கள் விடுமுறையை அனுபவிப்பதாய்இருக்கும். என் காலத்தில், ஆரம்பத்தில் தனி என்று பெயர். எரிச்சலாய் இருக்கும். அம்மா அலற அலற வேண்டுமென்றே கால் மட்டும் வெளியே வைத்துக் கொண்டு உடம்பையும் தலையையும் சமையல் அறைக்குள் நீட்டுவேன். என் அண்ணனும் தம்பியும் தொட்டால் ஷாக் அடிக்குமா என்று வேண்டுமென்றே தொடுவார்கள். சில மாதம் கழித்து அப்பா திட்டி, அம்மாவும் இந்த அழும்பை சகிக்காமல் பார்த்தவுடன் தலைக்கு தண்ணீர் விட்டுக் கொண்டு, உள்ளே வர சொல்லிவிட்டார்கள். அப்போதே ஹெலனா வந்துவிட்டது.

பாட்டி சொன்னது எல்லாம் ஒரு எழுபது வருடங்களுக்கு முன்பு. இப்போது இந்த கதையை என் மகளிடம் சொன்னால் நம்புவாளா என்றே தெரியவில்லை. இன்னும் கொஞ்சம் ஒட்டிக் கொண்டிருக்கும் இந்திய கலாசாரத்தின் நம்பிக்கைகளை கைவிட மனம் வராமல் நான்காவது நாள் தலைக்கு தண்ணீர் விட்டுக் கொள் என்றால், இன்னைக்கு ஸ்கூல் இருக்கிறது. வீக் எண்டில்தான் என்று சொல்லிவிட்டுப் போய் கொண்டே இருக்கிறாள். (வருடங்கள் 1925 வாக்கில் இருந்து 50, 75க்கு பிறகில் இருந்து இப்பொழுது)

18 பின்னூட்டங்கள்:

At Sunday, 18 March, 2007, சொல்வது...

உஷா கட்டுரைகளும், கதையும் ஆச்சரியமும் அதிர்ச்சியும்தான் தந்தது. ரொம்ப ஆடம்பரமாக வளர்ந்துவிட்டேனோ என்று இந்த நிமிடம்தான் தோன்றுகிறது. இந்த மாதிரி விஷயங்கள் பாட்டிக் காலத்தில் கூட இருந்ததாக எனக்கு சொல்லவில்லை. இதெல்லாம் பெரியவங்க விஷயமென்று சொல்லாமல் விட்டுட்டார்களோ என்னவோ? ஜூவியின் கட்டுரையின் படி விழிப்புணர்வு முகாம்கள் ஆக்கப்பூர்வமாக செயல்பட்டால் நல்லது. தூரத்திலிருந்து இது போன்ற கட்டுரைகளை 'உச்'க்கொட்டி படிக்க மட்டுமே முடிகிறது என்ற கையாளாகாத்தனத்தை எண்ணி வேதனையாக இருக்கிறது.

 
At Sunday, 18 March, 2007, சொல்வது...

சிவசங்கரியின் பாலங்கள் என்ற தொடர் (ஆனந்த விகடனில் வந்தது), மூன்று தலைமுறைகள் மாதவிடாயை எப்படிக் கையாண்டார்கள் என்று எழுதியிருப்பார். அதை நினைவு படுத்தியது கட்டுரையின் பிற்பகுதி.

இலவச டிவிக்குப் பதிலாக இலவச நாப்கின்கள் வினியோகிக்கலாம். சுய உதவிக் குழுக்கள் மூலம் சுகாதாரமான முறையில் குறைந்த விலையில் தயாரித்துக் கொள்ளலாம்.

அன்புடன்,

மா சிவகுமார்

 
At Sunday, 18 March, 2007, சொல்வது...

ஜெசிலா, கல்வெட்டின் பதிவைப் படித்தீர்களா? ஏதும் செய்ய முடியவில்லை என்று வருந்தாதீர்கள். உங்களாலும் முடிந்ததை உதவ
முடியும் என்பதை சொல்லியிருக்கிறார்.

சிவகுமார், நீங்கள் சொன்னதைப் போல தோழியர் கூட்டு வலைப்பதிவில் அப்பொழுதுக் கிடைத்த பின்னுட்டங்களையும் படியுங்கள்

KVR சொல்கிறார்:
April 29th, 2004 at 9:35 am
Visit KVR
பல பெண்கள் பேசத் தயங்கிற விஷயத்தை நீங்களும் மதுமிதாவும் பேசி இருக்கிறீர்கள். கடந்தகாலங்களில் பெண்கள் எத்தகைய சிரமங்களுக்கு ஆளாகி இருக்கிறார்கள் என்பதைக் காட்டுகிறது.

தொடக்க காலங்களில் பெண்கள் இந்த மாதிரி நேரங்களில் கடினவேலைகள் செய்யாமல் ஓய்வெடுக்க உண்டாக்கப்பட்ட வழக்கம் பின்னர் ஒரு தீண்டாமைக்கொடுமை அளவுக்குப் போயிருக்கிறது.

எல்லாவற்றிற்கும் மறுமொழி கூறும் நமது தோழியர் இந்த இரண்டு கட்டுரைகளில் மௌனம் ஆகியது ஏனோ?

ரவியா சொல்கிறார்:
April 29th, 2004 at 12:08 pm
Visit ரவியா
//எல்லாவற்றிற்கும் மறுமொழி கூறும் நமது தோழியர் இந்த இரண்டு கட்டுரைகளில் மௌனம் ஆகியது ஏனோ?//
:-))

Uma சொல்கிறார்:
April 29th, 2004 at 1:45 pm
Visit Uma
கால் மட்டும் வெளியே, உடம்பும் தலையும் சமையல் அறைக்குள் ரொம்ப நாள் முன்னாடி படிச்ச சிவசங்கரியின் பாலங்கள் நாவல் நினைவிற்கு வருகிறது. ரொம்ப நல்லா எழுதிருக்கீங்க

usha சொல்கிறார்:
April 29th, 2004 at 2:09 pm
Visit usha
என்ன சொல்றீங்க உமா? பாலங்கள் நானும் எப்போதோ
படிச்சிருக்கேன். அதிலும் இந்த வரிகள் வருமா?
நான் என் அம்மாவை வெறுப்பேற்ற செஞ்சது இது.
பவித்ரா எங்க இருக்கே நீ!
கே.வி. ஆர் சிவசங்கரியின் பாலங்களில் அந்த நாட்களில்
ரெஸ்ட் இல்லாமல் பெண்கள் உடலுழைப்பு செய்வார்கள்
என்று வரும். பாட்டி பணக்காரி ஆதனால் வேலை எல்லாம்
செய்திருக்க மாட்டாள். அதனால் அதைப் பற்றி சொல்லவில்லை. அம்மாவும் அப்படிதான், ஜாலியை
உட்கார்ந்தவாறு ரன்னிங்காமெண்டரி கொடுத்துக்
கொண்டு இருப்பாள். இந்த நேரத்தில் படிக்கவென்றே
புத்தகங்கள் வைத்திருப்பாள். போதாதற்கு ஒரு நாள்
கட்டாயம் சினிமா உண்டு.
ரவியா, எழுதுவதே சரியா என்று யோசித்தேன்.

Princess சொல்கிறார்:
April 29th, 2004 at 2:39 pm
Visit Princess
அந்தக் காலத்தில் ரெஸ்டாவது இருந்தது. இந்தக் காலத்தில் அதுவும் இல்லை. யோசித்துப் பார்த்தால், சில விஷயங்களுக்குப் பழைய கால முறை சரிதான் என்றே தோன்றுகிறது:-)

“…பவித்ரா எங்க இருக்கே நீ!”

இங்கேதான் இருக்கிறேன்:-)

உமா: வந்துவீட்டீர்களா? great.:-)

“…எல்லாவற்றிற்கும் மறுமொழி கூறும் நமது தோழியர் இந்த இரண்டு கட்டுரைகளில் மௌனம் ஆகியது ஏனோ?…”

கொசப்பேட்டை மற்றும் ரவியா அண்ணன்களூக்கு: அடடா, உங்களுக்கென்ன, சொல்லிவிட்டுப் போய்விடுவீர்கள். சில விஷயங்களை மிக மிக ஜாக்கிரதையாகக் கையாள வேண்டும். நினைத்த போது எல்லாவற்றைப் பற்றியும் பேச முடியுமா? அவரவர் திருமதியையோ, வீட்டுப் பெண்மணிகளையோ கேட்டால், தெரியும்:-)

ரவியா சொல்கிறார்:
April 29th, 2004 at 3:30 pm
Visit ரவியா
உஷா ! பல வலைபதிவுகளில் “Politically correct” என்ற போர்வையில் தங்களையே ஏமாற்றிக்கொண்டு இம் மாதிரி ஆரோக்கியமான் விஷயங்களை எழுதுவதில்லை-விவாத்து கருத்து பரிமாரிக்கொள்வதில்லை. (ஆனல் சிறு விஷயங்களுக்கெல்லாம் சண்டை). “பெண்களுக்கான வலைப்பதிவில்” மதுமிதாவும், நீங்களும் அந்த எழுதப்படாத விதியை உடைத்திருக்கீர்கள் என்பது நீங்கள் பெருமைப் பட வேண்டியதொன்று. பாராட்டுக்கள்.!!(KVR முந்திக்கொண்டுவிட்டார்.)
இந்த கலாசார gap உண்ர்ந்துத்தான் நான் வலைப்பதிவு தொடங்க தயங்கினேன்.மதி தான் மற்றவர்களை போல் எழுதவேண்டுமின்றில்லை. உங்கள் வித்தியாசமான கருத்துக்களை சொல்லலாம் என்று ஊக்கிவித்தார்கள்.
உங்கள் மகளைப்போல் தான் என் மகளும். அவளிடம் முன்பே வெளிப்படையாக “சொல்லி” வைத்திருந்ததால் “முதல்” முறை பயப்படாமல் சமாளித்தாள். எத்தனை வீட்டில் தாயார்கள் தங்கள் மகளிடம் இவ் விஷயங்களைப் பற்றியோ அவளின் ஆண் நண்பர்கள் (நண்பர்கள் தான்)பற்றியும் பேசுகிறார்கள்?
ஒரு சமயம் வெளிநாட்டில் வாழ்வதால்தான் இப்படி நம்மால் பேச முடிகிறது என்று சிலர் நினைக்கலாம்.

ரவியா சொல்கிறார்:
April 29th, 2004 at 3:39 pm
Visit ரவியா
rectif–விவாதித்து
பரிமாறிக்கொள்வதில்லை
மற்ற தவறுகள்,பரி கழுகு கண்களுக்கு…::))

Uma சொல்கிறார்:
April 29th, 2004 at 6:16 pm
Visit Uma
உஷா மன்னிக்கவும், சரியா சொல்ல தெரியாம சொதப்பிட்டேன் போலருக்கு. உங்க பாட்டி, உஙக அம்மா என்று சில தலைமுறை பற்றி படிச்ச்தால ‘பாலங்கள்’ நினைவுக்கு வந்தது. “கால் மட்டும் வெளியே, உடம்பும் தலையும் சமையல் அறைக்குள்” என்ற வரிகள் படிச்சதும் வீட்டுக்கு வீடு வாசப்படின்னு நினைச்சு சிரிச்சேன்.

பவித்ரா - வந்தாச்சு!!!!

madhumitha சொல்கிறார்:
April 30th, 2004 at 9:44 am
Visit madhumitha
¯„¡

±ÉìÌõ º¢Ã¢ôÒ Åó¾Ð
“???? ??????? ??????, ???????? ??????? ?????? ?????????”
±ýÈ Åâ¨Âô ÀÊò¾Ðõ.
±ý ¦À¡ñÏõ þô§À¡ ¦Ã¡õÀô ÀÎòи¢È¡û
¦Ã¡õÀ×õ ÍðÊ «Åû
ÓýÒ þôÀʦÂøÄ¡õ þÕó¾¢Õ츢ȡ÷¸û ±ýÚ
«ÅÙìÌî ¦º¡øÄ¢ ÅÕ¸¢§Èý
±ùÅÇ× Í¾ó¾¢ÃÁ¡¸ þÕ츢ȡû ±ýÀÐ «ÅÙìÌ þô§À¡Ð¾¡ý Ò⸢ÈÐ
±¾ü¸¡¸§Å ¿¡õ «Åº¢Âõ ±Ø¾¢§Â ¬¸ §ÅñÎõ

«ýÒ¼ý
ÁÐÁ¢¾¡

ரவியா சொல்கிறார்:
April 30th, 2004 at 2:42 pm
Visit ரவியா
//ùÅÇ× Í¾ó¾¢ÃÁ¡¸ þÕ츢ȡû ±ýÀÐ «ÅÙìÌ þô§À¡Ð¾¡ý Ò⸢ÈÐ
±¾ü¸¡¸§Å ¿¡õ «Åº¢Âõ ±Ø¾¢§Â ¬¸ §ÅñÎõ
// அதைத்தான் நான் சொல்ல வந்தேன்

KVR சொல்கிறார்:
May 1st, 2004 at 8:55 am
Visit KVR
பவி, உஷாவின் கட்டுரை ஒரு தைரியமான வெளிப்படையான கட்டுரை. அதைப் பாராட்ட ஊக்குவிக்க ஆள் இல்லையா என்பதாக தான் என் கமெண்ட் இருந்தது. இன்றைய காலகட்டங்களில் ஓய்விற்கு கூட வழி இல்லை என்று நீங்கள் சொல்லி இருப்பது முற்றிலும் சரி.

ரவியா, இந்த மாதிரியான விஷயங்களில் பெண்களுக்கு அவர்களது அம்மாக்கள் ஒரு தோழியாக இருக்க அவர் மெத்த படித்தவராகவோ, வெளிநாட்டு வாசமோ இருக்க அவசியம் இல்லை. என் அம்மா ஒன்பதாம் வகுப்பு வரை படித்த கிராமத்துப் பெண் தான். ஆனால் பெண்களின் சிரமங்களை பையனான எனக்கே ஒரு தோழியாக உணர வைத்தவர். இன்றும் என் தோழிகள் லிஸ்ட்டில் முதலிடம் அவருக்கு தான்.

உஷா, நான் தொடக்க காலம் என்று சொன்னது உங்கள் பாட்டி காலத்தை அல்ல. உடல் உழைப்பிலிருந்து கொஞ்சம் விடுப்பு கொடுக்க ஏற்படுத்தப்பட்ட இந்த நடைமுறை தொடங்கிய காலத்தைச் சொன்னேன்.

சந்திரவதனா சொல்கிறார்:
May 3rd, 2004 at 8:32 am
Visit சந்திரவதனா
நானும் சிவசங்கரியின் பாலங்கள் கதையை மிகவும் ரசித்துப் வாசித்தேன்.

எனக்கும் எனது அந்த நாளைய அனுபவத்தையும் சடங்கு சம்பிரதாயங்களுக்குள் நான் பட்ட அவஸ்தையையும் எழுத வேண்டுமென
நெடுநாளாகவே ஆசை இருந்து கொண்டுதான் இருக்கிறது. அதை எப்படித் தொடங்குவதென பல தடவைகள் ஒத்திகை பார்த்தும் இன்னும் சரியாக அது என்னுள் உருவெடுக்கவில்லை.
இப்போ உஷா இதை எழுதிய பின் நானும் கண்டிப்பாக எழுதி விட வேண்டுமென நினைக்கிறேன்.
நினைவை விரைவில் செயற் படுத்துகிறேன்.

உஷா
உங்கள் எழுத்துக்கள் யதார்த்தத்துடன் நாளாந்தப் பிரச்சனைகளையும் சமூகப் பிரச்சனைகளையும் பேசுவதால்
மிகவும் நன்றாக உள்ளது. தொடருங்கள்

சந்திரவதனா

 
At Sunday, 18 March, 2007, சொல்வது...

உஷா. ஆக்கபூர்வமா எழுதி இருக்கீங்க.
அம்பை, கல்வெட்டுப் பதிவுகளும்
படிக்க வேண்டும்.
எங்க வீட்டில் மரபீரொவைத் தாண்டிக் காலை வைக்க அம்மா விடமாட்டார்.
பாவம் அதிர்ந்து பேசாத மனுஷி.
அம்மாவின் இரண்டு வார சமையல் பொருட்களை அப்பா அந்த மூன்று நாட்களில் செலவழிப்பார்.
அம்மா தனியிருக்கும் நாட்களில் கோபப்படும் நான் ,என் முறைவந்தபோது தொல்லை கொடுத்திருக்கிறேன்.வேலி இருந்ததால் அவர்களுக்குக் காயப் போடவாவது இடம் கிடைத்தது. இந்தக் கிராமத்துப் பெண்களும், மற்றும் கீழ்த்தட்டு நகரத்து முனியம்மாக்களும் என்ன செய்வார்கள்!

 
At Sunday, 18 March, 2007, சொல்வது...

கிராமப்புற பெண்கள் மட்டும் இல்லை உஷா, நகர் புரத்தில், மிடில் கிளாஸ் பெண்கள் கலந்து கொண்ட ஒரு முகாமிலும் பல பெண்களுக்கு, RTI இருப்பது தெரிய வந்தது..இது கவணிக்காமல் விட்டால் புற்று நோயால மாறலாம்..சில பெண்களுக்கு புற்று நோய் இருப்பதும் தெரிய வந்த்தது...

இலவச மருத்துவ முகாம் என்றால் வசதி படைத்த மக்கள் வருவது இலலை..வந்தாலும் PAP smear எடுக்க அனுமதி கொடுப்பது இல்லை.. ஏதோ கேவலமாக நினைக்குறார்கள்..

கோவையில், ஒரு WHO திட்டத்தின் கீழ் சுலபமாகவும், விரைவாகவும் colposcopy மூலம் செய்தோம்... ரொம்ப துல்லியமான, அதிக செலவில்லாத ஒரு சோதனை முறை.. இலவசமாக செய்ய முயற்சி செய்தும் யாரும் வரவில்லை...

இந்த வகையான சோதனைக்கு பிறகு இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு உடலுறவு கொள்ளக்கூடாது... இதை சொன்னதும் நம் மக்கள் பின் வாங்கி விடுவார்கள்..உண்மை தான்...கணவர் கோபித்துக் கொள்வார் என்று பயம்.. அவர்கள் மீது தப்பு இல்லை.. நிஜமாகவே நடந்தது..ஒரு பகுதியில், பெண்களிடம் பேசி சோதனை நடத்திய பின்னர், கணவன்மார்கள் எல்லாம் படை திரட்டி வந்து சண்டையோ சண்டை.. எங்க Prof மலையாளி..அவருக்கு இவங்க திட்டறது முக்காவாசி புரியவும் இல்லை...:-))...அன்னைக்கு எங்க டிபார்ட்மென்ட்ல ஒரே காமெடி.. முகாமிற்கு போனது நானும் இன்னும் சில gynecologist ம் .. கணவன்மார்களிடம் எப்படி எடுத்துக் கூறுவது என்று தெரியவில்லை.. அப்புறம் முந்தின முகாமில நடந்த சோதனைகளில் எத்தனை பெண்கள் பாதிக்கப்பட்டிருந்தார்கள் என்று Powerpoint போட்டு காட்டினோம்.. அப்படி இருந்தும் சமாதானம் ஆகவில்லை...பாருங்கள் நம் பெண்களின் கதியை...இவர்களின் இச்சையை மூன்று நாட்களுக்கு கட்டு படுத்த முடியவில்லை...அதற்காக ஒரு பொது இடத்தில் வந்து கத்தி சண்டை போடும் அளவிற்கு போகிறார்கள் என்றால்..ஹ்ம்ம்ம்....

நம்ப முடியவில்லை இல்லையா?...

 
At Sunday, 18 March, 2007, சொல்வது...

Usha
This is a major problem among women. Many women do nto even go to doctor as they are shy. I have seen women who manage with prolapsed uterus, urine incontinence in villages and still hesitant to go to the doctors. Education and awareness is very important. we think women are well advanced lookign at the metropolitan cities. Villages in interior of Bihar, MP, UP are worse than that in TN.

 
At Sunday, 18 March, 2007, சொல்வது...

வல்லி, என்னுடையதுவிட் கல்வெட்டின் பதிவு முக்கியம், அம்பையினுடையது சுவாரசியமான சரித்திர குறிப்பு.

மங்கை, பத்மா, இரண்டு நாட்களுக்கு முன்பு கல்வெட்டின் பதிவு படித்து ஏதாவது செய்யலாமே என்று தோன்றியது. பிறகுnநேற்று அதே மேட்டரில் அம்பையும்,ஜூவியில் கட்டுரையும். பதிவு போட வேண்டாம் என்று நினைத்திருந்த என்னால் இதை
சொல்லாமல் இருக்க முடியவில்லை. நீங்கள் இருவரும் மருத்துவ துறையில் இருப்பதால் கட்டாயம் ஏதாவது விஷயம் சொல்வீர்கள் என்று எதிர்பார்த்தேன். என் எண்ணம் நிறைவேறியது.

 
At Sunday, 18 March, 2007, சொல்வது...

Usha
I am preparing awareness material in Tamil at 3 grade level to easily understand. I was talkign to some social organization in TN to help me distribute. Let us see. even if we can send it to 10 women, they can send it to 10 more, this can spread.
Mangai, it is not any different here in US among underserved population who are in federal poverty line.

 
At Sunday, 18 March, 2007, சொல்வது...

பத்மா..

கோவையில ஏதாவது உதவி வேனும்னா சொல்லுங்க...to distribute the pamphlet...

 
At Sunday, 18 March, 2007, சொல்வது...

பத்மா எனக்கும் ஒரு சாப்ஃட் காப்பி இருந்தா அனுப்புங்க.

ஜெஸிலா, பத்மா காப்பி அனுப்பினா, ஊருக்கு போகும் போது எடுத்துக்கிட்டுப் போயி வீட்டு வேலக்கார அம்மாவுக்கு படிச்சிக்காட்டலாம். பிரிண்ட் எடுத்து, அக்கம் பக்கம் இருக்கும் ஏழை பெண்களுக்கு கொடுக்கலாம். இவை எல்லாம் நம்மால் முடியும். என்ன கொஞ்சம் மெனக்கெடணும், யாராவது நக்கல் அடிப்பாங்க அதையும் வாங்கிக்கட்டிக் கொள்ளணும். அதெல்லாம் செய்ய ஆரம்பித்தா பழகிடும் :-)

 
At Sunday, 18 March, 2007, சொல்வது...

மங்கை, பத்மா, உஷா, s.K,

கார்டாசில்(gardasil)ன்னு இங்க ஒரு ஷாட் அறிமுகப் படுத்தியிருக்காங்க. செவர்விகல் கான்செர் தடுப்புக்கு....இத பத்தி தெரியுமா? puberty வருவதற்க்கு முன்பே கூட பெண் குழந்ததைகளுக்கு(11 வயதிலிருந்து) இதை தடுப்பு மருந்தாக குடுக்க சொல்கிரார்கள். இந்தியாவில் அற்முகம் ஆகிவிட்டதா??

உஷா நல்ல பதிவு.

 
At Sunday, 18 March, 2007, சொல்வது...

Radha
I was at the vaccine releasign ceremony at Capitol hill. It is not very effective, but we are still going to popularize it and give vaccine. This vaccine only will be effectiev for papiloma virus. If any one is inetersted ine ducational video on cervical cancer, please email me. Its meant for distribution. CDC released it in January 2007 for circulation.

 
At Monday, 19 March, 2007, சொல்வது...

உஷா,
காண்டம் விசயத்தில் இருக்கும் விழிப்புணர்வுகூட இதில் இல்லை.பேசவே பயப்படுகிறார்கள் அல்லது பேசுவது கேவலம் என்று நினைக்கிறார்கள்.

ரம்யாவின் சென்ற வருடப்பதிகளின் மூலமே எனக்கு இந்த தொண்டு நிறுவன அறிமுகம் கிடைத்தது.என்னதான் தொண்டு நிறுவனங்கள் உதவி செய்தாலும், அரசின் முழு ஈடுபாடு இல்லாமல் எந்த நல்ல திட்டங்களும் நிறைவு பெறாது.போக வேண்டிய தூரம் நிறைய உள்ளது.

 
At Monday, 19 March, 2007, சொல்வது...

ராதா, இதெல்லாம் அவ்வளவு விரைவாய் இந்தியாவுக்கு வராது. இங்கும் எனக்கு தெரிந்த பெண்
மருத்துவர்களிடம் கேட்டுப் பார்க்கிறேன்.

கல்வெட்டு, அரசு செய்ய வேண்டும் என்று காத்திராமல்,நம்மால் முடிந்ததை செய்வோம் என்பதே என் கொள்கை. சிறுதுளிதான், ஆனால் வசதிப்படைத்தவர்கள் கைக் கொடுக்க தொடங்கினால், எவ்வளவோ
செய்யலாம். அனைத்துக்கும் காரணம் ஏழ்மையும், படிப்பறிவு இன்மையும். பெண்கள் படித்து, தங்கள்
காலில் நிற்க ஆரம்பித்தாலே பல இழிவுகளில் இருந்து தப்பிக்கலாம்.

பத்மா, மங்கை இன்னும் ஒரு விஷயம், ஊரில் நான் சந்திக்கும் சொந்தங்கள், நட்பு என்று பல
பெண்கள், முப்பது வயதைக் கடந்தால், கர்ப்ப பை ஆபரேஷன் (புற்றுநோய், சிஸ்ட் என்று ) செய்து எடுத்துவிட்டேன் என்று வெகு சாதாரணமாய் சொல்கிறார்கள். இதனால் பின் விளைவுகள் இருக்காதா? இந்த ஆபரேஷன் எண்ணிக்கை கூடுவதன் காரணம் என்னவாக இருக்கும்?

 
At Monday, 19 March, 2007, சொல்வது...

உஷா, மூன்று நாட்களுக்கு முன்பு தொலைக்காட்சியில் ஷபனா ஆஷ்மி சொன்ன அதே செய்தி. ஆனால் புற்றுநோயைப் பற்றி அவர் சொல்லவில்லை. ஆனால் பட்டிக்காடுகளில் சிறிது சூரிய வெளிச்சம் எப்படி பெண்களுக்கு மறுக்கப்படுகிறது என்று கொதித்தார். அவர்கள் அந்தத் துணிகளைத் துவைத்து அவைகளை அடுத்தவர் பார்க்கக் கூடாது என்பதற்காகவே வேறு துணிகளுக்கு அடியில் காயப்போடுவதைச் சொல்லி வருத்தப்பட்டார். இது புற்றுநோய் வரைக்கும் போகும் என்பது வயிற்றெரிச்சலாக இருக்கிறது. இதைத் தீட்டு என்று சொல்வதுதான் தீட்டு. அப்படிச் சொல்கிறவன் தலையில் இடி விழ.

 
At Tuesday, 20 March, 2007, சொல்வது...

உஷா!
இச்செய்தி படித்து ,விகடன் கட்டுரையும் வாசித்து ,விக்கித்தேன்.
கெட்டகுடியே! கெடுமென எம்மினப் பெண்களுக்கு மேலும் ஒரு துன்பம்.
ஆண்டாண்டு காலமாக இருக்கும் இந்தமுறையில் பழுதல்ல; சமீபகாலமாக
நமது நீர் நிலைகளில் ஏற்பட்ட அழுக்கின் பாதிப்பே இது.
எனவே இதை தூயநீரில் தோய்த்து; கொதிநீரில் அமிழ்த்தி; நன்கு வெய்யில் படக்
காயவைத்து, மறு பாவனை வரை ஏனைய உடுப்புக்களுடன் பத்திரப்படுத்தலாம்
எனும் புரிதலை இந்தப் பெண்களுக்குப் புகட்டுவதுடன்,ஏனைய வீட்டு அங்கத்தவர்களுக்கும்
இது இயற்கை;;தீட்டல்ல;ஒதுக்கப் படவேண்டியதில்லை என்பதை விளக்கவேண்டும்.
பலர் ஏழைகள்;அன்றாடம் காச்சிகள் மாதம்; நவீன சாதனங்களுக்கு குறைந்தது 200 ரூபா
செலவு செய்தல் என்பது இலகுவல்ல!!அரசாங்கம் இலவசமாக உடன் கொடுக்குமா??அது இவர்களை
ஒழுங்காகச் சென்றடையுமா?? என்பன ??சிந்திக்கப்பட வேண்டியவை!!
இந்த அளவில் இந்த உண்மை வெளிவந்ததே!!பெரிய விடயம்..
அரச சுகாதாரத்துறை ஆவன செய்யும்; அதற்கு சமூக சேவையினர் தூண்டு கோலாக இருப்பார்கள்
என நம்புவோம்.

 
At Tuesday, 20 March, 2007, சொல்வது...

ஜிரா, அந்த சமயம் பெண்கள் சுத்தமாய் இருந்தால் போதும், அதை விட்டு விட்டு, தீண்டதகாதவளாய்
ஆக்கி, ஒதுக்கி வைத்து.. அது எப்படித்தான் உலகம் முழுக்க இப்படி இருந்தது, இன்னும் இருக்கிறதோ?

யோகன், இன்னும் ஒரு வருத்தம் தரும் செய்தி. பொதுவாய் ஏழை பெண்கள், நைலான், நைலக்ஸ்
சேலைகளையே அதிகம் வாங்குவார்கள். நிறம் மங்காது, அவ்வளவு சுலபமாய் கிழியாது என்பதால்.அதனால் பருத்தி துணி கிடைப்பதே அவர்களுக்கு கஷ்டம். எத்தனை பிரச்சனைகள்! ஜெஸிலா
சொன்னதைப் போல நாம் ஆடம்பரமாய் இருக்கிறோம் என்பதே குற்றவுணர்ச்சியைத் தருகிறது.

பத்மா அனுப்பிய தனிமடலில், கர்ப்பப்பை நீக்குவதால் எலும்பு தேய்மான நோய் வரும் வாய்ப்பு
உண்டு என்றும் இதைக் குறித்து விவரமாய் பதிவில் எழுதுகிறேன் என்றும் சொல்லியுள்ளார். கணவன்கள்
கவனிக்க வேண்டிய விஷயம்.

 
At Tuesday, 20 March, 2007, சொல்வது...

உஷா..

பத்மா அளவுக்கு டெக்னிகலா சொல்ல முடியலைனாலும் எனக்கு தெரிஞ்சத சொல்றேன்...

பக்க விளைவுகள் பல விஷயங்கள் அடிப்படையா வச்சு தோன்றும்..
வயது, அப்போதைய உடல்நிலை, இன்னும் மதவிடாய் வருதா என்பதை பொருத்துதான்..

இது ரெண்டு வைகப்படும்

Partial and total Hysterctomy

Partial
ஓவரீஸ் அகற்றப்படவில்லை என்றால் ஹார்மோன் மாற்றங்கள் இருந்து கொண்டே இருக்கும், அதாவது, நமக்கு மாதவிடாயின் போது ஏற்படும் மாற்றங்களைப் போல..

Total
ஒரு வேளை ஓவரீஸ் அகற்றப்பட்டால், மெனோபாசின் போது ஏற்படும் உடல், மற்றும் உளவியல் மாற்றங்கள் ஏற்படும்...(உ-த) vaginal dryness, இரவில் அதிகமாக வேர்த்து கொட்டுதல், மன நிலை மாற்றங்கள் ஆகியவை ஏற்படும்...இதுல uterus, fellpoian tube, ovaries எல்லாம் அகற்றப்படும்...இது Surgical Menopause னும் சொல்வாங்க...
முட்டிவலி, இதையநோய்,
osteoporosis (எலும்பு சம்பந்தப்பட்டது)நோய்கள் வர வாய்ப்பு இருக்கு...

இதுல முக்கியமான ஒன்னு, பெண்களுக்கு progesterone/ testosterone கண்டிப்பா வேணும்.. கர்ப்பப்பை எடுத்துட்டா இந்த உற்பத்தி நின்னு போகும்...இதோட பக்க விளைவுகள் பத்மா சொன்னா நல்லா இருக்கும்....

 

Post a Comment

<< இல்லம்