Monday, August 13, 2007

முதலியார் சமூக தமிழும், சென்னை தமிழும்

யோகன் அவர்களின் இந்த பதிவைத் தொடர்ந்து
சென்னையில் என் சிறுவயதில் அக்கம்பக்கம் முழுவதும் முதலியார் சமூகத்தினர். ஆற்காட்டு முதலியார் என்ற உட்பிரிவு என்று நினைக்கிறேன்அப்பொழுது எல்லாம் எழுதுவேன் அல்லது பிளாக்கிலாவது பினாத்துவேன் என்று தெரியாததால் நினைவில் இருப்பதை சொல்கிறேன். அப்பாலிக்கா வரேன்- பிறகு வருகிறேன், இப்ப இன்னாங்கரே - இப்பொழுது என்ன சொல்கிறாய், இட்டா- அழைத்துவா, வலிச்சிக்கீனுவா- இழுத்து வருதல், தாராந்து பூட்ச்சு -காணாமல் போய்விட்டது, ஆயா- பாட்டி போன்ற செந்தமிழ் வாக்கியங்கள் மனப்பாடமானது. இவை எல்லாம் வெறும் ரிக்ஷாகாரகள் அல்லது சென்னை சேரி தமிழ் என்று நினைக்க வேண்டாம். இதுவும் வட்டார மொழியே.

ஜெயகாந்தன் தன் பல கதைகளில் இந்த ஸ்லாங்கை கையாண்டு இருப்பார். அவரின் "ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்" படத்தில் தேங்காய் சீனிவாசனும், ஸ்ரீகாந்தும் என்னமாய் முதலியார் தமிழ் பேசுவார்கள்! வேறு எந்த வட்டாரத்திலும் பாவிக்காத சொல் சித்தி அல்லது சின்னமாவுக்கு "தொத்தா".

அடுத்து சபாபதி என்ற திரைப் படம். நாற்பதுகளில் வெளியானது. கதை வசனம் பம்மல் சம்பந்த முதலியார். அதிலும் சென்னை தமிழ் போன்ற முதலியார்களின் பேச்சு வழக்குகள். பம்மல் K சம்மந்தம் என்ற பெயரில் நம்ம கமல், அனுபவித்து சென்னை தமிழ் பேசி
நடித்த படம். அதில் பம்மலில் வசிக்கும் கமலின் சொந்த பந்தங்கள், வயசான தாத்தா பாட்டி உட்பட பேசும் தமிழை கவனித்தீர்களா? அதுதாங்க முதலியார் தமிழ்.

முதலியார்கள் மட்டுமல்ல, சென்னையில் பிறந்து வளர்ந்தவர்கள் பேச்சு இப்படித்தான் இருக்கும். நீங்க சென்னையா என்று பேச ஆரம்பித்த உடனே கண்டுப்பிடித்துவிடுவேனாக்கும். கல்யாணம் ஆன புதியதில் அஸ்ஸாமில் இருந்தப்பொழுது சென்னைவாசிகளுடன் பேசும் என் தமிழைக் கண்டு என் கணவர் பயந்துப் போனார். ஆனால் என் செய்வது? தே மதுர தமிழ் ஓசை காதுக்கு இனிமை என்றாலும், அவரவர் பேச்சு வழக்கில் பேசுவது காதில் விழுந்தால் அது அல்லவா இன்னும் கொஞ்சம் அதிக மகிழ்ச்சியைக் கொடுக்கிறது :-)

20 பின்னூட்டங்கள்:

At Monday, 13 August, 2007, சொல்வது...

உஷா!
விபரமான பதிவுக்கு நன்றி!
நான் வாழ்வில் ஒரே ஒரு தடவை சென்னை வந்துள்ளேன்; அப்போதும் இந்த சென்னைத் தமிழை நான் புழங்கிய இடங்களில் கேட்கமுடியவில்லை. ஒரே ஒரு இளநீர் விற்பவர் மூலம் இதைக் கேட்டேன். அதற்கு முன் இந்த மொழியை திரைப்படவாயிலாகவும்; சோவின் "கூவம் நதிக்கரையினிலே நாவல் நாயகன் ஜக்கு, மற்றும் நீங்கள் கூறிய ஜெயகாந்தன் நாவலிலும், படித்துள்ளேன்;.
சோவின் "ஜக்குவை" படமாகத் தீட்டியவர் ஒரு சேரிவாசிபோல் தான் தீட்டியிருந்தார்; அத்துடன் திரைப்படத்தில் லூசு மோகன்; பசி சத்தியா.. பேசிக் கேட்டுள்ளேன்.
அவர்கள் ஏற்கும் பாத்திரங்கள்;அந்த பாத்திரம் அணியும் உடுப்பு ;யாவும் சேரிப் பாணியென்பதுபோல தொடர்ந்து காட்டி மனதில் பதியப்பட்டவிடயம்.( தவறான பதிவாகவும் இருக்கலாம்)
குறிப்பாக லூஸ் மோகம் லுங்கி கட்டி; பனியன் தெரியும் ;முட்டாசுக் கலர் சொக்காயும் போட்டு;கழுத்தில் கைக்குட்டியும் கட்டி பீடி பிடித்துக் கொண்டு வருவார். அதை வைத்து அந்த முடிவுக்கு வந்தேன்.
நான் இட்ட படக்காட்சியிலும் பாருங்கள்; இக்காட்சியில் வருவோர்; சென்னை தொடர் மாடியில் குடியிருப்போர் மாதிரியா? இருக்கிறார்கள்.
நான் நினைக்கிறேன். இங்கே திரைப்பட இயக்குநர்கள்...தவறாக பார்வையை எம் போன்றோருக்கு ஏற்படுத்துகிறார்கள்;

 
At Monday, 13 August, 2007, சொல்வது...

அப்பாலிக்கா வரேனுங்க!

 
At Monday, 13 August, 2007, சொல்வது...

சென்னையில் வசிக்கும் போது (2 வருடங்கள்) சில முதலியார் நண்பர்கள் வீட்டிற்குச் சென்ற போது தான் முதலில் இதனைக் கவனித்தேன். அது வரை சென்னைத் தமிழ் சேரியில் வாழ் மக்கள் பேசுவது மட்டுமே என்று எண்ணியிருந்தேன். பின்னர் தான் அது வட்டார மொழி என்பது புரிந்து கொண்டேன். கவனித்த இன்னொன்று. முதலியார்கள் வடலூர் வள்ளலார் பெருமான் மேல் மிகுந்த பக்தி கொண்டவர்களாகவும் அவரது பாடல்களை விரும்பிப் படிப்பவர்களாகவும் இருக்கிறார்கள்; சென்னையைச் சுற்றி இருக்கும் பல சைவத்திருக்கோயில்களில் வடலூர் வள்ளல் பெருமானின் சன்னிதி இருக்கிறது.

கோவையிலிருந்து வந்த ஒரு முதலியார் நண்பருக்குச் சென்னைத் தமிழில் நிறைய சொற்கள் புரியவே இல்லை. அதுவும் வியப்பாக இருந்தது. :-)

 
At Monday, 13 August, 2007, சொல்வது...

யோகன், சேரி பாஷைக்கும், முதலியார் தமிழுக்கும் வித்தியாசம் என்றால் மு. தமிழ் கொஞ்சம் ரிபைண்டாய் இருக்கும்.
அது எங்களுக்குதான் தெரியும் :-) அடுத்து ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் படத்தில் தேங்காய் சீனிவாசன் பேசுவது போல,
அவ்வை சண்முகி பார்த்தீர்களா? அதில் மணிவண்ணன் பேசும் தமிழ், அவர் முதலியார் என்றே சொல்லிக் கொள்வார்.

குமரன், பெருமாளும் கும்பிடுவார்கள், கந்த கோட்ட கந்தசாமியும் குலதெய்வம் என்று நினைக்கிறேன்.பல செலாவாடைகள்
சென்னைவாசிகள் அல்லாமல் மற்றவர்களுக்கு புரியாது.

கீதா, எப்பாலிக்கா வரீங்க :-)

 
At Monday, 13 August, 2007, சொல்வது...

ஆமாம்......... இப்ப இன்னான்றே?

சும்மாப்பூந்து வெள்ளாட்றம்மா நீயி:-)

 
At Monday, 13 August, 2007, சொல்வது...

தொள்சி, மிஷ்டேக்கா பூட்சு,
//ஆமாம்......... இப்ப இன்னான்றே?

சும்மாப்பூந்து வெள்ளாட்றம்மா நீயி:-)
//

இப்ப பாரூ- ஆமா----- இப்போ இன்னாங்கறே?
சொம்மா பூந்து வெள்ளாட்றம்மா நீயி ;-)

சரியா!!!!!!!!!!!

கீதா, //வரேனுங்க// - இது இன்னா? மருவாதி மன்சுல இருந்தா போதும். வாய் வார்த்தையிலே தேவயில்லேமே

 
At Monday, 13 August, 2007, சொல்வது...

கர்ர்ர்ர்ர்ரீட்டு.

நான் அப்பீட்டு

அப்பாலிக்கா வர்ட்டுமா?

 
At Monday, 13 August, 2007, சொல்வது...

ஆச்சிரியமான தகவல்கள், சென்னை தமிழ் இப்படி இருப்பதற்க்கு காரணம் தெலுங்கு பேசும் மக்கள் வட சென்னையிலும், சேரிகளிலும் கலந்து வாழ்வதே காரணம் என்று, சில அன்பர்கள் என்னிடம் சொன்னார்கள்... அதுவே உண்மை என்று இதுநாள் வரை நம்பியிருந்தேன். உங்களுடைய பதிவிற்க்கு பிறகு எனக்கு வேறு கோணம் கிடைத்திருக்கிறது.

நன்றி

 
At Monday, 13 August, 2007, சொல்வது...

பாரி அரசு, அத்தொட்டு தான் (அதனால்தான்) விலாவாரியாய் (விளக்கமாய்)போட்டேன் :-)

 
At Monday, 13 August, 2007, சொல்வது...

உஷாஜி, நீங்க குறிப்பிட்டு எது முதலியார் தமிழ் என்று சொல்லவில்லை. கண்டிப்பாக முதலியார்கள் சென்னை தமிழ் பேசுவதில்லை.. சில குடும்பங்கள் வட சென்னை பகுதியில் இருக்கும் முதலியார்கள் வேண்டுமானால் இப்படி பேசுவார்களோ என்னவோ தெரியவில்லை. ஆனால் எனக்கு தெரிந்து, நான் கவனித்தவரை சென்னை தமிழ் அளவிற்கு முதலியார்கள் பேசுவதாக தெரியவில்லை.

நானுமே அப்பாவுடைய அம்மாவை ஆயா ' என்றும், அம்மாவுடைய அம்மாவை அம்மும்மா' என்றும் அழைப்பேன்.. ஆயா என்பது சென்னை தமிழா?, முதலியார் தமிழா?.. நிஜமாகவே எனக்கு தெரியவில்லை... உங்களுக்கு தெரிஞ்சா சொல்லுங்கஜி..

 
At Tuesday, 14 August, 2007, சொல்வது...

விழுப்புரத்திற்கு வடக்கே தமிழ் சென்னை வாசம் வீச ஆரம்பித்து விடுகிறது. ஆற்காடு, வேலூரிலும் தமிழை சென்னையில் பேசுவது போல்தான் பேசுகிறார்கள். அங்குள்ள முதலியார் சமூகம் இந்த மாதிரி பேசலாம். ஆனால், அவர்கள் பேச்சு மொழிதான் சென்னைத் தமிழ் ஆகியிருக்குமா என்று சந்தேகமாக இருக்கிறது. இன்னொரு விதத்தில் இந்த சந்தேகத்தை மொழிந்தால்: முதலியார் சமூகத்தால் சென்னையின் தமிழ் உருவாக்கப்பட்டதா? சென்னையின் தமிழை அங்குள்ள முதலியார் சமூகம் பேசுகிறதா? வேலூர், ஆற்காடு போன்ற இடங்களில் மற்ற சமுதாயத்தினர் எப்படி பேசிக் கொள்கின்றனர் என்பதை ஆராய்ந்தால் இதற்கு விடை கிடைக்கலாம்.

சென்னைத் தமிழில் எனக்கு ஒரு குறிப்பிடத்தக்க அம்சம் தென்படுகிறது. தமிழகத்தில் குமரி, நெல்லை, மதுரை, தஞ்சை, கோவையென்று பல பாகங்களிலும், ஈழத்திலும், மலேசியாவிலும், தமிழ் பேசப்படும் விதம் ஒரு வித இனிமையையும் கவர்ச்சியையும் கொண்டிருக்கிறது. சென்னையின் தமிழில் அந்த இனிமையும் கவர்ச்சியும் இல்லை. (பம்மல் கே சம்பந்தத்தில் கமல் பேசுவதை ஒரு விதிவிலக்கு என்றே எடுத்துக் கொள்ள வேண்டும்). கூடவே, இன்னொரு விஷயத்தையும் கவனிக்க வேண்டும். வேறு பகுதியைச் சேர்ந்தவர் ஒருவர் கோவையிலோ, நெல்லையிலோ ஒரு வீட்டிற்குப் போனால், அந்த வீட்டில் பேசும் தமிழில்தான் அவரோடு உரையாடுவார்கள். ஆனால், சென்னையிலேயே பிறந்து, வளர்ந்து தங்கள் வீட்டில் சென்னைத் தமிழ் பேசிக் கொள்ளும் படித்தவர்கள், வேறு பகுதியிலுள்ள ஒருவர் அவர்கள் வீட்டிற்கு வந்தால் ஒரு பொதுவான தமிழில் பேசுவார்கள். இது சென்னைத் தமிழ் சேரித் தமிழென்று அடையாளப்படுத்தப்பட்டு விட்டதன் விளைவு என்று நினைக்கிறேன்.

ஏவிஎஸ்

 
At Tuesday, 14 August, 2007, சொல்வது...

கவிதா, ஆமாம். ஆயா என்று அழைப்பது பல இடங்களில் இருக்கிறது. ஆனால் மற்ற கேள்விகளுக்கு பம்மல் சம்மந்த முதலியார், கமலஹாசன், ஜெயகாந்தன் இவர்களைதான் கேட்க வேண்டும். ஆனால் எனக்கு அறிமுகமானவர்கள் நான் குறிப்பிட்டதுப் போலவே பேசினார்கள். என்ன செய்ய அப்ப பிளாக்கோ, எழுத்தாளியாகவோ இல்லையே :-) நல்லவேளையாய், குமரன் சொல்வதைப் படியுங்கள்.

ஏவிஎஸ், விவரங்களுக்கு நன்றி. ஆனால் சென்னைதமிழ் இனிமை இல்லை என்பதை என்னால் ஒத்துக் கொள்ள முடியாது.
ஊரை விட்டு வெகு தூரம் வந்த பிறகு யாராவது சென்னை தமிழில்- அந்த ஸ்லாங் சென்னையில் பிறந்து வளர்பவர்களுக்குதான்
வரும்- யாராவது பேசுவது காதில் விழுந்தால், என்ன உற்சாகமாய் இருக்கும் தெரியுமா :-)

 
At Tuesday, 14 August, 2007, சொல்வது...

அறிஞர் அன்னாவைப் பற்றி படிக்கும் போது..அவர் தொத்தா,,என்று குறிப்பிடுவார்..நான் அதை தெலுங்கு என்றெ எண்ணி வந்தேன்..இதன் மூலம் தெலுங்காக் கூட இருக்கக் கூடும்..

 
At Tuesday, 14 August, 2007, சொல்வது...

TBCD-2, ஆனால் ஒரு சந்தேகம்- சின்னம்மாவை தெலுங்கில் பின்னி என்று அழைப்பார்கள் இல்லையா?

 
At Tuesday, 14 August, 2007, சொல்வது...

ஆமாம்...அவர் சித்தியயை அப்படி அழைத்தாரா என்று உறுதியாக தெரியவில்லை..
எனக்கு தெர்ந்து..கன்னடத்திலும்..ஒரு சிலர்..புத்தா என்று அழைக்கின்றனர்..சித்தியயை...

/*ramachandranusha said...

TBCD-2, ஆனால் ஒரு சந்தேகம்- சின்னம்மாவை தெலுங்கில் பின்னி என்று அழைப்பார்கள் இல்லையா?*/

 
At Tuesday, 14 August, 2007, சொல்வது...

அய்யே, இன்னாது இது? உங்க ஊராண்ட வேணா மொதலியாருங்கோ இப்டி பேசுவாங்களா இருக்கும். ஆனா நம்ம பக்கம் வந்தீயானா அவங்க ஷ்டையிலே வேற.

நம்ம பக்கமுன்னா எதுன்னு கேட்டீயளான்னா அது நம்ம தின்னேலிதான்.

 
At Tuesday, 14 August, 2007, சொல்வது...

அட... பாச பலவிதமா இங்கி விரவி கிடப்பதை வாசிச்சதும், மன்சு சந்தோஷமா கீதுப்பா.

 
At Wednesday, 15 August, 2007, சொல்வது...

டிபிசிடி-2, இலவசம், காட்டாறு மற்றும் பல அருமையான விவரங்களை தந்த அனைத்து பின்னுட்டங்களுக்கும் நன்றி

 
At Monday, 20 August, 2007, சொல்வது...

Vanakkam Usha Madam,
Interesting article.

Sabapathi is a really unforgettable movie - I still remember some of the slang words used in the movie,like women calling each other as 'Machi' (synonymous to sister-in-law, our college slang must have evolved from this :-)) and words like 'aempaa', sollupa' (I also believe that Madras tamil must have originated from Mudhaliars.

 
At Tuesday, 21 August, 2007, சொல்வது...

ஸ்ரீ,நன்றி. அப்படியே ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் மற்றும் பம்மல். கே.சம்மந்தமும் பார்த்துவிடுங்கள்.

 

Post a Comment

<< இல்லம்