Tuesday, September 04, 2007

சர்க்கரை- நீயா நானா?

தேசிகனின் சீனி கம் படித்ததில் இருந்து, நம்முடைய கதையையும் எழுதலாம் என்ற நினைப்பு டாக்டர். முருகானந்தம் அவர்களின் ஹாய் நலமா என்ற வலைப்பதிவில் இந்த பதிவைப் படித்ததும் வலுத்தது.

சரியாய் நான்கு வருடத்திற்கு முன்பு ஒரு மாஸ்டர் செக்கப் சென்னைக்கு வந்தப்பொழுது செய்துக் கொண்டேன். தேவையே இல்லை, நான் நன்றாகதானே இருக்கிறேன் என்று சொல்லிக் கொண்டு இருக்கும்போது சர்க்கரை இருக்கிறது என்றார்கள். பார்டர் தான். நீரிழிவு நோய்க்கான எந்த அறிகுறியும் இல்லை. உடல் எடை மிக சரியாய் இருக்கிறது மற்றப்படி எந்த பிரச்சனையும் இல்லை. சரி, தாய் தந்த சீதனம் என்று மனதை தேற்றிக் கொண்டேன்.

முதல் மூன்று மாதங்கள் மாத்திரை எடுத்துக் கொண்டேன். சொந்த பந்தங்களைக் கேட்டால், சர்க்கரை இல்லாத வீடே இல்லை என்று தெரிந்தது.. கொஞ்சம் வயது ஆனவர்கள், அதனுடன் சேர்ந்து இரத்த அழுத்தம், கொழுப்பு லொட்டு லொசுக்கு என்று அவரவர்கள் வேளைக்கு ஏழு எட்டு மாத்திரைகள் முழுங்குகிறார்கள்.

செலவு என்றுப் பார்த்தால் மாதம் நாலைந்தாயிரம் மருந்து செலவு. பணத்தைவிட இந்த மருந்துகளால் ஏற்படக்கூடிய பின் விளைவுகளை நினைத்து பயம் ஏற்பட்டது. நமக்குதான் இணையம் இருக்கிறதே அங்கங்கு தேடி பல விஷயங்கள் சேகரித்தேன். முதலில் எடுத்துக் கொண்ட மாத்திரைக்கு பிறகு மருந்துகளுக்கு தடா போட்டேன்.

சில கட்டுப்பாடுகள், மாற்றங்கள் செய்துக் கொண்டால் தாக்கு பிடிக்கலாம் என்று புரிந்தது.
எனக்கு சிறு வயதில் இருந்தே அதிக இனிப்பு பிடிக்காது. இனிப்பில் பாம்பே அல்வா, சோன்பப்டி, ஜாங்கிரி, அதிரசம் மட்டுமே பிடிக்கும். கேசரி, பாயாசம் என்று அதிகம் வீட்டில் செய்யப்படும் இனிப்புகளை தொடவே மாட்டேன். சிறு வயதில் இருந்தே காப்பியின் கசப்பு பிடிக்கும் என்பதால் அரை சக்கரைதான். ஆக, இனிப்பை குறைப்பது சுலபமாய்
இருந்தது.

காப்பிக்கு அரை சக்கரை அல்லது சுகர் ப்ரீ மாத்திரை. வீட்டில் டிரெட் மில்லும், உடற்பயிற்சிக்கான சைக்கிளும் இருப்பதால் மாலை சீரியல் ஒன்று பார்த்துக் கொண்டு அரை மணிநேரம். அதற்கு முன்பு மாலை ஒரு ரவுண்ட் அடித்துவிட்டு , காய்கறி மளிகை சாமான்கள் வாங்கி வருவது என்று வழக்கப்படுத்திக் கொண்டு உள்ளேன்.

காலையில் ஐந்தரை மணிக்கு எழுந்து விடுவேன். ஒரு லிட்டர் பால் அடுப்பில் காய்ச்சும்போது, சில வார்ம் அப் க்களும், அனைத்து கழுத்துக்கான உடல் பயிற்சிகளையும் செய்து முடித்துவிடுவேன். பிறகு அரை டம்ளர் காபி, ஒரு மணி நேரம் கழித்து மூச்சு பயிற்சி. முதலில் வலது பக்கம் இழுந்து, இடது பக்கம் விடுவது. பிறகு இடது டூ வலது. பிறகு வலது பக்கம் இழுத்து, இடது பக்கம் விடுவது, இடதில் ஆரம்பித்து வலது விடுவது என்று ஒவ்வொன்றும் இருபது முறை, கடைசியாய் முழுக்க மூச்சை இழுத்து விடுவது. இது கணக்கு இல்லை,
பால்கனியில் காலை நேர சுகமாய் வீசும் காற்றில் சில நிமிடங்கள் உட்கார்ந்து இருப்பேன். அதுக்கு மேல் நேரம் ஏது?

இங்கு வந்தப்பிறகு கிடைத்த ஒரு டிப்ஸ்- முதல் நாள் பறித்து நன்கு கழுவிய மூன்று ஆர்க்கு வேப்பிலையை ஒரு கிளாஸ் நீரில் ஊற வைத்து காலை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும் என்று. ஆனால் வெறும் வயிற்றில் குடிக்க முடியவில்லை. காபி குடித்து ஒரு மணிநேரம் கழித்து மடமடவென்று வாயில் ஊற்றிக் கொண்டு விடுவேன். நல்ல கசப்பு! எட்டுமணிக்குள் ஒரு கிளாஸ் ஓட்ஸ் கஞ்சி. பதினோறு மணிவாக்கில் பிரவுன் பிரட் இரண்டு- கொழுப்பு குறைந்த வெண்ணை மற்றும் தக்காளி சாஸ் அல்லது சர்க்கரை குறைந்த ஜாம் தடவியது. ஒரு மணிவாக்கில் அரிசி சாதம் வழக்கப்படி

மாலை மீண்டும் அரை கப் காபி. இரவு எட்டு மணிவாக்கில் மூன்று சப்பாத்திகள் ( கோதுமை மாவில் சோயாமாவும் கலந்து உள்ளேன்) ஆக, ஒருவேளை மட்டும் அரிசி சாதம். பசியோ களைப்போ அதிகம் தோன்றுவதில்லை. அப்படி பசி எடுத்தால் அரை ஸ்பூன் வெந்த பொடி
போட்ட மோர், ஏதாவது ஒரு பழம் சாப்பிடுவேன். வீட்டு வேலை முழுவதும் மற்றும் கழிவறை கழுவுதல் வரை நானே! பல வருடங்களாய் வீடு பெருக்கி, துடைக்க மட்டும் ஆள் போட்டு இருக்கிறேன். ரங்கமணிக்கு ஆபிஸ் வேலை செய்வாரே தவிர, வீட்டு வேலை எதுவும் செய்ய வணங்காது. கேட்டால், வேலைக்கு ஆள் போட்டு கொள், உன்னை யாரூ அவதிபட சொன்னது என்பார்.

மிக முக்கியமாய் நான் செய்யும் ஆசனம்- கர்பாசனம் என்று நினைக்கிறேன். முஸ்லீம்கள் தொழுகை செய்வதுப் போல காலை மடக்கி உட்கார்ந்து முன் பக்கம் தலை- நெற்றி தரையில் தொடும்படி வைப்பது. மூச்சை இழுத்து முன்னால் தலையை வைத்து (முகத்தில்
ரத்தம் பாய்வது நன்றாக தெரியும்) விட்டு நிமிறும்போது மூச்சை விட வேண்டும்.. இதைத் தவிர ஒரு செட் உடல் பயிற்சிகளும் இருக்கிறது. ஆக, என் அனுபவத்தில் போதுமான உடல் பயிற்சிகளும், நடையும், சீரான உணவு பழக்கங்களும் மேற்கொண்டால், மருந்து மாத்திரைகளை தவிர்க்கலாம் என்பதே. எப்பொழுது சர்க்கரை அளவு பார்த்தாலும் நார்மலாய் இருக்கிறது.

இரவு படுத்ததும் பத்து நிமிடங்களில் தூக்கம், எந்த இடையூறும் இல்லாமல் அதிகாலை வரை நன்கு வருகிறது. வீட்டில் வரவேற்பரையில் கீழே உட்கார கம்பளம் போட்டிருக்கிறேன். முடிந்தவரையில் கீழே உட்காருவது என்று உடலை பிளெக்சிபலாய் வைத்துக் கொள்வது
நல்லது இல்லையா? கணக்குப் பார்த்தால் நடை உட்பட உடல் பயிற்சிகளுக்கு மொத்தம் ஒரு மணிநேரம் ஆகிறது.

இவை எல்லாம் தினமும் செய்கிறேன் என்று சொல்ல முடியாது. சில சமயங்களில் தொடர்ந்து பத்து நாட்கள் கூட செய்யாமல் இருந்திருக்கிறேன். ஆனால் கழுத்துக்கான பயிற்சிகள் மட்டும் கட்டாயம் செய்துவிடுவேன். மிக மிக அவதிப்பட்டு, தற்பொழுது முழுக்க குணமானது இந்த பயிற்சி என்று நம்புகிறேன். நலன் விசாரிக்கும் நட்புகளும் சொந்தபந்தங்களும் இது ரொம்ப நாள் தாங்காது. மாத்திரை எடுக்க வேண்டி இருக்கும் என்கிறார்கள். நான் நினைப்பது என்னவென்றால் முடிந்தவரையில் தள்ளிப் போடலாமே என்பதுதான்.

22 பின்னூட்டங்கள்:

At Tuesday, 04 September, 2007, சொல்வது...

He that takes medicine and neglects diet wastes the skill of the physician. -Chinese proverb

 
At Tuesday, 04 September, 2007, சொல்வது...

நல்ல வேளை தங்கமணி பதிவெல்லாம் படிக்கிறது இல்லை! இல்லைன்னா இதெல்லாம் நானும் செய்யணும் அப்படின்னு (இன்னும்) பிடிவாதம் பிடிப்பாங்க!!

ஆல் தி பெஸ்ட் உஷாக்கா!

 
At Tuesday, 04 September, 2007, சொல்வது...

இது எனக்கு உதவும் என்று நினைக்கிறேன்,ஏனென்றால் இன்னும் முழு பரிசோதனைக்கு போகவில்லை,போனால் தெரியும்.
வேப்பிலையா 3 ஆர்க்? இங்கா!
கோவிலுக்குத்தான் போகனும்.

 
At Tuesday, 04 September, 2007, சொல்வது...

படிச்சதே பாதி உடற்பயிற்சி செஞ்ச தெம்பைத் தருது.

அரைக்கப் காபிக்கு நாக்கு அடங்காது. பெரிய கப்பா ஒரு முழுக் கப் குடிச்சாத்தான்
மனசே அடங்கும். அதுக்குத்தான் ஊருக்கு வந்தால் சரவணபவனில் ரெண்டு காபி வாங்கிக்
குடிச்சுக்குவேன்.

 
At Tuesday, 04 September, 2007, சொல்வது...

//கேசரி, பாயாசம் என்று அதிகம் வீட்டில் செய்யப்படும் இனிப்புகளை தொடவே மாட்டேன். //

அடடா! வாழ்கைல ஒரு பெரிய விஷயத்தை இழந்து வீட்டீங்களே! :)))

படிச்சதே எதோ நாங்களே excercise செஞ்சது போல இருந்தது. என் அம்மாவுக்கு சொல்றேன். thanks alot. :))

 
At Wednesday, 05 September, 2007, சொல்வது...

சுவார்ஸமாக எழுதியிருந்தீர்கள். ரசித்துப் படித்தேன். உங்கள் குருதிச் சீனி அளவு கட்டுப்பாட்டிற்குள் இருப்பதற்கு வாழ்த்துக்கள். ஒரு சிறிய ஆலோசனை. மருந்து வேண்டாம் என்பதோ தள்ளிப் போடலாம் என்பதோ இலக்காக இருக்கக் கூடாது. குருதிச் சீனி அளவு கட்டுப்பாட்டிற்குள் இருக்க வேண்டும் என்பதே முக்கியம்.

 
At Wednesday, 05 September, 2007, சொல்வது...

இந்த மாதிரி வெறுப்பேத்தலாமா உஷா!!! :-) பதிவு ஆரம்பத்திலேர்ந்து கடைசி வரைக்கும் //...// போட்டு, "அடேங்கப்பா உஷா நிஜமாவா" ன்னு கேட்கணும் போல இருக்கு. கேட்க முடியாதே! நீங்களாவது எடை போடறதாவது? சான்ஸே இல்ல.
துளசி, நகருங்க. நம்ப இந்தப் பக்கம் எட்டிப் பார்த்ததே தப்பு :-)

 
At Wednesday, 05 September, 2007, சொல்வது...

உஷா
இந்த பதிவை படிக்கும் போது நீங்கள் எடுத்துக்கொள்ளும் கவனம் மகிழ்ச்சியை தருகிறது. பெண்கள் தங்களை தானே ignore செய்து கொள்வதுதான் அதிகம். தொடரட்டும் உஷா. நானும் கட்டாயமாக நேரம் ஒதுக்கி உடற்பயிற்சி செய்கிறேன். இப்போதையை புது ஆர்வம் பிலாட்டே(pilate). நல்ல புத்துணர்ச்சி தருகிறது. கூடவே நடையும், ஒரு நாளைக்கு 20 நிமிடமேனும் நடக்கிறேன்.

 
At Wednesday, 05 September, 2007, சொல்வது...

துளசி, நகருங்க. நம்ப இந்தப் பக்கம் எட்டிப் பார்த்ததே தப்பு :-)//

Ahaa ithu....

Usha you too good to be true.

I caanot be without medicines:(((

and it has ben two years since I discovered I am too sweet physically:0))

veppilaiyum,paavakkaayum nalla marunthu. and menthiyam.
Thankspa.
thembu vantha maathiri irukku.

 
At Wednesday, 05 September, 2007, சொல்வது...

உங்களையே இவ்வளவு கவனிச்சுக்கிட்டா, உங்க வீட்டுல மத்தவங்களை? ('அதுக்கெல்லாம் ஏது நேரம்' - அப்படின்னு சொல்வது கேட்குது :-))

 
At Wednesday, 05 September, 2007, சொல்வது...

ALL THE BEST FOR THE AWARENESS.

LOT OF WOMEN KNOW THIS BUT THEIR CIRCUMSTANCES THEY ARE NOT ABLE TO DO REGULAR.

@AMBI/AMMANCHI
YOU DONT MISS KESARI. THIS IS CHUMMA POOCHAANDI

SIVA, MANGALORE.

 
At Wednesday, 05 September, 2007, சொல்வது...

மருத்துவர் ராமனாதன் ஐயா, நீங்களே இப்படி சொன்னா எப்படி ;-)

இலவசம், சில விஷயங்கள் யார் எடுத்துச் சொன்னாலும் மற்றவர்கள் கேட்க மாட்டார்கள். அவர் அவர்களுக்கு தோன்ற வேண்டும். எனக்கே பட்ட பிறகு பெற்ற ஞானம் இது. என்ன கொஞ்சம் சீக்கிரம் சுதாரித்துக் கொண்டு விட்டேன்.

வடூவூர் குமார், முதல்ல பரிசோதனை செஞ்சிப்பாருங்க. ஆரம்பித்திலேயே கண்டுப்பிடித்தால் நல்லது இல்லையா?

துளசி, சரிதான் :-) அதிலும் உங்க நீயூசு பாலு, கொழுப்பு நீக்கியதா இல்லையா? இங்க வந்ததில் இருந்து அல்மராய் (அரபு நாடுகளில் பிரபல டயரி நிறுவனம்) பாலையும், மோரையும் குடித்த நாக்கு அந்த அரை டம்ளர் கூட வேண்டாம் என்கிறது.

அம்பி, முழுக்க முழுக்க என் அம்மாதான் காரணம். சின்ன வயசில் ஆ, உ என்றால் எங்கள் வீட்டில் கேசரி. தின்னு தின்னு அலுத்துப் போய் ஒரு கட்டத்தில் கேசரியைத் தொட மாட்டேன் என்று ஸ்டிரைக் செய்ய ஆரம்பித்தேன்.

டாக்டர், முருகானந்தன் நன்றி. முதலில் சின்ன அடி எடுத்து வைப்பது முக்கியம். மெல்ல பழக்கம் ஆகிவிடும். அதைச் சொல்லத்தான்
உங்கள் பதிவைப் பார்த்ததும் என் அனுபவத்தை எழுதினேன். துளசி, அம்பி அம்மாவுக்கும் இதையே சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.

 
At Wednesday, 05 September, 2007, சொல்வது...

அருணா :-)

பத்மா, எந்த மருந்தும் சாப்பிடுவதில்லை. ஆனால் விட்டமின் மாத்திரைகள் எடுத்துக் கொள்வது அவசியமா? டாக்டர் முருகானந்தம் உங்களையும் கேட்கிறேன். எனக்கு வயது நாற்பத்தி ஐந்தாகிறது.ஆனால் உடலில் வேறு எந்த பிரச்சனையும் இல்லை.

வல்லி, வேப்பிலை போன்ற இயற்கை வைத்தியம் மெல்ல செயல்பட ஆரம்பிக்கும். தொடர்ந்து செயல்படுத்த ஆரம்பித்தால், பலன் தெரிய ஆரம்பிக்கும். அப்படியே நடையும்தான்.

மங்களூர் சிவா நன்றி.

 
At Wednesday, 05 September, 2007, சொல்வது...

ஜெசி, நேற்று உங்கள் பின்னுட்டம் பார்த்ததில் இருந்து அதே நினைவு. இன்னும் எவ்வளவு நாட்களுக்கு பழைய படங்கள் அல்லது இன்றைய சீரியல் அம்மாக்கள் போன்று வசனம் பேசுவது. நாம் நன்றாக ஆரோக்கியமாய் இருந்தால்தானே
குடும்பமும் மகிழ்ச்சியாய் இருக்கும்? என் வயதை ஒத்தவர்களில் பலரும் இங்கு வலி, அங்கு வலி என்று புலம்பிக் கொண்டு இருப்பதைப் பார்க்கும்பொழுது பாவமாய் இருக்கிறது. எந்த கணவர்கள்,அன்பே நீ ரெஸ்ட் எடு, நான் இரவு வந்து அத்தனை வீட்டு வேலைகளையும் பார்க்கிறேன் என்று காதலுடன் சொல்வார் என்று எனக்கு தெரியவில்லை :-)
நான் என்னை கவனிக்க ஸ்பெஷலாய் நேரம் எதுவுமே ஒதுக்குவதில்லை. காலை நேரத்தில் எழுந்து விடுவேன். டீவிக்கு ஒரு நாளைக்கு அதிகபட்சமாய் அரைமணி நேரம்தான். அதையும் பார்த்துக் கொண்டே சைக்கிளிங் அல்லது உட்கார்ந்து செய்யும் பயிற்சிகள். நடை என்பது மளிகை மற்றும் காய்கறி வாங்கி வரவும் சேர்த்துதான். இனையமும் தட்டச்சு செய்துக் கொண்டே படிக்க! நோயற்ற வாழ்வே குறையற்ற செல்வம்.
பி.கு தவறாய் நினைக்க வேண்டாம், இது என் ஆதங்கம். பெண்கள் வீட்டின் கண்கள் இல்லையா :-)

 
At Thursday, 06 September, 2007, சொல்வது...

after reading yr latest super 'padaipu' i hv started singing to my wife " un samayal arayil naan 'vepeliaya' vendhayama'!!!
God bless u and yr pathiyam and naattu marudhuvam

(latha) sridhar

 
At Sunday, 09 September, 2007, சொல்வது...

நல்ல பழக்கந்தான். தொடருங்க. உணவுக்கட்டுப்பாடு நம்மாளுகளுக்குக் கண்டிப்பா அவசியம். சோற்று மலையில சாம்பார் ஆறு ஓடுது. ரத்தத்துலயும் பலருக்குச் சர்க்கரை ஓடுது.

 
At Sunday, 09 September, 2007, சொல்வது...

நல்ல பதிவுதான் ஆனா கொஞ்சம் பயமா இருக்கே, டெஸ்ட் பண்ணினா எக்கு தப்பா முடிவு வந்துச்சுன்னான்னு ஒரு பயம் அதான்!

 
At Sunday, 09 September, 2007, சொல்வது...

ஸ்ரீதர் சார், வேப்பிலை ரெண்டு ஆர்க்கு போதும், அதேப்போல அதிகம் நீரில் ஊறினாலும் கசப்பு கொன்னுடும். நேற்று
மறந்துப் போய், காலை பதினோறு மணி வாக்கில் குடிக்கப் போய் அப்படியே துப்பிவிட்டேன். எட்டு மணி நேரம் ஊறினால்,
போதும்.

ஜீரா, அடுத்த பதிவு படிக்கவும் :-)

அபி அப்பா! சட்டென்று உடல் எடை குறைய ஆரம்பித்தாலும் பிர்ச்சனை. , பெற்றோர்களுக்கு இருந்தால் சோதனை அவசியம்.

 
At Monday, 10 September, 2007, சொல்வது...

usha,
just incase you are interested in the recipe of your mystery halwa..assuming that is mahim halwa...http://www.mangaloreanrecipes.com/151.htm

may be it should go to jeyashree,
btw, i have no clue about this sweet...your blog made me search!!!!

 
At Wednesday, 17 October, 2007, சொல்வது...

கசப்பான காய்கறிகள் அதிகம் நல்லது. உதாரணத்திற்கு பாவற்காய். பச்சையாக சாப்பிடுவது சிறந்தது. சின்ன சின்னதாக வெட்டி வெங்காயம் பச்சை மிளகாய் உப்ப தேசிக்கா புளி விட்டு சாப்பிட்டு வாருங்கள். நல்லது. இலைவகை நிறைய சாப்பிடுங்கள். அதிலும் கசக்கும் இலைவகை மிக நன்று.

 
At Wednesday, 17 October, 2007, சொல்வது...

நாளாயினி மேடம், உங்க கொச்சுகாய்( மிளகாய்) வார்த்தையே என் தவறை கண்டுபிடிக்க செய்தது. உங்களை நானானி என்று நினைத்ததை சொல்கிறேன். இது இலங்கை பேச்சு
வழக்கு இல்லையா :-)

 
At Wednesday, 17 October, 2007, சொல்வது...

இது குறித்த மேலும் விவரங்களுக்கும் ஆலோசனைகளுக்கும் அனுகவும்..அனுபவவைத்திய சிகாமணி டாக்டர்.இரண்டாம் சொக்கன்.

(என் அப்பாவுக்கு கடந்த இருபது வருடங்களாய் அநியாயத்துக்கு சர்க்கரை...அவரை விட அதிகமாய் நான் அவருக்கான சிகிச்சைகளுக்காய் மருத்துவமனைகளுக்கு சென்று வந்திருக்கிறேன்...ஹி..ஹி..)

 

Post a Comment

<< இல்லம்