Monday, January 07, 2008

வாஸ்துக்காய்ச்சல்- ஷாராஜ்

ஷாராஜ் என்ற எழுத்தாளர் பெயரை மட்டும் கேட்டிருக்கிறேன். "உயிர் எழுத்து" என்ற இலக்கிய பத்திரிக்கையில் (பத்திரிக்கையில் கதை, கட்டுரைகள் மிக நன்றாக இருக்கின்றன. டாண் என்று மாதம் பிறந்ததும் வந்துவிடுகிறது) ஜனவரி இதழில் ஷாராஜ் எழுதிய " வாஸ்துக் காய்ச்சல்" என்ற சிறுக்கதை வந்துள்ளது.

சிறந்த சிறுக்கதை என்பதற்கு என் அளவுக்கோல் முடிவு- . எப்படி போகும் என்று தெரியாமல், ஒரு பஞ்ச் இருக்க வேண்டும். அது சோகமாகவோ, நகைச்சுவையாகவோ, நக்கலாகவோ அல்லது இனிய முடிவாகவும் இருக்கலாம்.

நேற்று இந்த கதையைப் படித்ததில் இருந்து, இன்னும் மறக்க முடியவில்லை. ஒருவேளை இந்த ஜோசிய, நல்லநேரங்கள், வாஸ்து இத்தியாதிகளில் நம்பிக்கையில்லாததாலும் இருக்கலாம்.

கதை சுருக்கம்- பீதாம்பரம் முதலாளி வீடு கட்டப் போகிறார் என்றதும், எல்லாரும் சொன்னது வாஸ்து பார்த்துக்கட்டுங்கள் என்று! இவருடைய டிரைவர் (கருத்து) கந்தசாமி. அந்த ஆள் சொன்னதன் பேரில் வாஸ்து மேதையையை பிடிக்கிறார்.

விசிட்டுக்கு ஆயிரம் ரூபாய் பீசு. வந்தவர் மனைவின் ரோகம், பிள்ளையின் திக்குவாய், பெற்றவள், சகோதரிகளின் குறைப்பாடுகள் எல்லாவற்றையும் புட்டு புட்டு வைத்து, எல்லாரையும் பிரமிக்க வைக்கிறார். அப்புறம் என்ன ஒவ்வொன்றுக்கும் கார் அனுப்பி, ஐநூத்தி
ஒரு ரூபாய் தட்டசணையும் கொடுத்து படாத பாடுபட்டு வீடு கட்டுகிறார்.

போட்ட பட்ஜெட்டுக்கு மேல் எகிற, கடன் உடன் பட்டு, நகைகளையும் அடகு வைத்து கட்டினாலும் வீடு லஷ்மீகரமாய் வந்திருக்கிறது என்று பார்த்தவர்கள் எல்லாரும்
சொல்லும்பொழுது, பீதாம்பரத்துக்கு இனி வர போகும் அதிருஷ்டத்தை நினைத்து மனதைத் தேற்றிக் கொள்கிறார்.

ஆயிற்று கிரக பிரவேச நாளும் நெருங்கியது. அன்றைக்கு புது வீட்டில் மாடு விட வேண்டும் அல்லவா! வீட்டு வேலைக்கார அம்மாளின் வீட்டில் மாடும் இருக்கிறது. முதலாளி வேலைக்கார அம்மாளிடம் சின்ன மகளிடம் மாட்டை அனுப்பு என்று கண்டிப்பாய் சொல்லிவிடுகிறார். காரணம் அந்த சின்னமகளின் பெயர் லஷ்மி. புது வீட்டில் பசுமாடு முதலில் நுழைவதே லஷ்மிகரமானது. கூடவே லஷ்மி என்ற பெயருடைய பெண்ணும் வந்தால், மகாலஷ்மியே வந்தா மாதிரி இல்லையா?

அதிகாலையில் ஹோமங்கள் நடந்துக் கொண்டு இருக்கின்றன. அப்பொழுது வாசலில் அழைக்கும் குரல். யாரூ லஷ்மியா? உள்ள வா என்று அழைத்தே விட்டார் முதலாளி.

"இல்லிங்கோ லட்சுமியோட அக்கா" என்று சொல்லிக் கொண்டே, மாடும் ஒரு பெண்ணும் உள்ளே நுழைகின்றனர்.

அவ்வளவுதான் முதலாளிக்கு நெஞ்சு ஸ்தம்பித்து போய் விடுகிறது.

"லட்சுமிக்கு சிக்கன்குனியா காச்சல். ஒடம்பெல்லாம் வலின்னு ராத்திரி முழுக்க அனத்திக்கிட்டு இருந்துச்சு. நீங்கதான் எங்கம்மாள மாடு கொண்டு வர வேணாம். மகக்கிட்ட அனுப்பி விடுன்னு சொன்னீங்களாம்" என்று லஷ்மியின் அக்காள் விளக்கம் சொல்கிறது.

அந்த "லட்சுமியோட அக்கா" என்ற குரல் முதலாளியை அல்லும் பகலும் துரத்த ஆரம்பிக்கிறது. எல்லாம் நஷ்டம்.

கந்தசாமி வேறு இடத்தில் வேலைக்கு சேர்ந்து எல்லாரிடமும் சொல்வது "விதிய மாத்த முடியாதுன்னு விதி இருந்தா, அந்த விதிய மாத்தறக்கு விதியால தான் முடியும்" :-)

பி.கு லட்சுமியின் அக்கா யார் என்றுச் சொல்ல வேண்டுமா என்ன
: ))

Labels:

13 பின்னூட்டங்கள்:

At Monday, 07 January, 2008, சொல்வது...

கதையின் இரண்டாவது பகுதி - லெட்சுமிக்கு அக்கா - கிராமப் புறங்களில் ரொம்ப சகஜமாய் புழக்கத்திலிருக்கும் ஒரு கதை. என் தந்தை சொல்லக் கேட்டுள்ளேன்.

 
At Monday, 07 January, 2008, சொல்வது...

லஷ்மி, இந்த அக்கா கதை நானும் கேட்டு இருக்கிறேன். ஆனால் இந்த சிறுக்கதை எட்டுபக்கம் வந்துள்ளது. கதை சொன்ன பாணி அருமை. என்னை (எங்களை) போல இவைகளில் நம்பிக்கையே இல்லாவிட்டால் பிரச்சனையே இல்லை. ஆனால் நம்புபவர்களுக்கு இப்படிதான் ஆகும். சொந்தங்கள், நட்புகள் இப்படி மூடநம்பிக்கையின் அடிப்படையில் சொல்லுபவைகளைக் கேட்டால், தலையில் அடித்துக்கொள்ளலாம் என்று தோன்றும்.

 
At Monday, 07 January, 2008, சொல்வது...

சப்ஜெக்ட் புடிச்ச உடனே போஸ்டர் ஒட்டுறீங்களாக்கும், நாங்க எல்லாம் ஒரு மேட்டருக்குச் செய்யறது மாதிரி! :)))

நடக்கட்டும் நடக்கட்டும். அந்த கதைக்கு சுட்டி எதுவும் இல்லையா?

 
At Monday, 07 January, 2008, சொல்வது...

அந்த அக்கா கதை என்னன்னு கொஞ்சம் சொல்லுங்க. எனக்கு யாருமே இதுவரைக்கும் சொல்லல.

 
At Monday, 07 January, 2008, சொல்வது...

இலவசம், பதிவை ஒழுங்காய் பாரும். படித்ததில் பிடித்தது, அதாவது அச்சு பத்திரிக்கையில் படித்ததை தட்டிப் போட்டு இருக்கேன்.
சுட்டி, கிட்டி எல்லாம் இருந்தால் நான் ஏன் கதை சொல்ல வேண்டும் :-)

தம்பி, லஷ்மி (பதிவரல்ல) என்கின்ற ஸ்ரீதேவி (நடிகையல்ல)யின் அக்காள் மூதேவி. லஷ்மியின் அக்கா என்ற வார்த்தையின் பொருள் இப்ப புரிஞ்சிதா :-))

 
At Monday, 07 January, 2008, சொல்வது...

மொக்கை போடத் தெரியாத உங்களை ரசிகனின் தொந்தரவு தாங்க முடியாமல் மொக்கைக்கு அழைத்துள்ளேன். போடலைனா, அப்புறம் கிடைக்கப் போகும் "ஆப்பு"க்குப் பொறுப்பு நீங்களே தான்! :P

எத்தனை நாளைக்குத் தான் ரொம்பவே சீரியஸா எழுதப் போறீங்க? கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணிக்கலாமே? :))))))))))))))))

 
At Tuesday, 08 January, 2008, சொல்வது...

லக்ஷ்மியின் அக்கா கதையெல்லாம் ரொம்ப வருசங்களாகவே நடப்பிலிருக்கும் கதைதான் உஷா.

ஒருவேளை அவர் சுவாரசியமான நடையில் எழுதி இருக்கிறாரோ என்னவோ. அதான் மனதில் ஒட்டிக்கொண்டது.

 
At Tuesday, 08 January, 2008, சொல்வது...

ஒரு பாக்யராஜ் படத்தில வரும்ல ...லக்ஷ்மியோட அக்கா :)

எலே தம்பி அந்த படம் பாக்கலியா நீ!

/முடிவு- . எப்படி போகும் என்று தெரியாமல், ஒரு பஞ்ச் இருக்க வேண்டும்/

உண்மையில வருத்தமா இருக்கு..இந்த மாதிரிலாம் யார்ங்க சொன்னது?நச் கதை அது இது மக்க கும்மிட்டு இருக்கறது பத்தாதுன்னு நீங்க வேறயா? ஒரு காட்சி, ஒரு தீட்டல், ஒரு வடிவம், ஒரு விவரணை இதாங்க சிறுகதை ஆரம்பம் இப்படி முடிவு இப்படி, நடுவில இப்படின்னு திட்டமிட்டு பன்றதுக்கு சிறுகதை என்ன சமையலா / காரியமா?

 
At Tuesday, 08 January, 2008, சொல்வது...

ஸ்ரீதேவியின் அக்கா எப்படி மூதேவியா இருக்க முடியும்? ஸ்ரீதேவி அக்கா ஸ்ரீஸ்ரீதேவியால இருக்கணும் :-)

 
At Tuesday, 08 January, 2008, சொல்வது...

கீதா வரேன் வரேன்

//ஒருவேளை அவர் சுவாரசியமான நடையில் எழுதி இருக்கிறாரோ என்னவோ. அதான் மனதில் ஒட்டிக்கொண்டது.// துளசி! அதே

ஜெசிலா, நல்ல கேள்வி :-)

வாங்க அய்யனார்! முதலிலேயே அது என்னுடைய கணிப்பு என்று சொல்லிவிட்டேன் (முன் ஜாக்கிரதையுடன்) ஐயா! கதையோ சமையலோ அவரவர் ரசனை என்று ஒன்று உண்டு. ஒருவருக்கு உயிராய் இருப்பது மற்றவர்களுக்கு பிடிப்பதில்லை/ பிடிப்படுவதில்லை. "நச்"வகையறாவை விடுங்கள்.
மனித உணர்வுகளை யதார்த்தமாய், எளிமையாய் வெளிப்படுத்தும் கதைகளே என்னை கவர்கின்றன.
என்ன செய்ய அவரவர் பூத்தது போல (வார்த்தை உபயம்- லா.ச.ரா)

 
At Wednesday, 09 January, 2008, சொல்வது...

<= தம்பி, லஷ்மி (பதிவரல்ல) என்கின்ற ஸ்ரீதேவி (நடிகையல்ல)யின் அக்காள் மூதேவி. லஷ்மியின் அக்கா என்ற வார்த்தையின் பொருள் இப்ப புரிஞ்சிதா :-))
==>
இப்படி விளக்கம் கொடுத்தாதானே புரியும்.

 
At Saturday, 12 January, 2008, சொல்வது...

siva, அதெல்லாம் சரி சொல்லிடணும் இல்லே :-)

 
At Saturday, 12 January, 2008, சொல்வது...

//புது வீட்டில் மாடு விட வேண்டும் அல்லவா! //

என்னமோ நம்ம பேர் அடிபடுதேன்னு வந்தேன்.

ஷாராஜ் அருமையான எழுத்தாளர். கேரளாவில் இருக்கிறார் என்று நினைக்கிறேன். அவருடையை எல்லா கதைகளும் மொழி நடையில் அடர்த்தி கொண்டவை. கனமான விஷயங்கள் கொண்டவை.

என்னமோ எனக்கு தெரிஞ்சதையும் சொல்லணுமில்ல...

லட்சுமிக்கு அக்கா கதை?

எங்களுக்கும்தான் சொல்லுங்களேன்.

 

Post a Comment

<< இல்லம்