Tuesday, November 15, 2005

கழுதைகள் மற்றும் எருமை மாடுகள்

நகைச்சுவை வேறு, அங்கதம் வேறு. அங்கதம் என்பதை இன்றைய தமிழில் சொல்வது என்றால் நக்கல். நக்கல்கள் பொதுவாய் சிரிப்பூட்டினாலும், சிலருக்கு கோபத்தைத் தரும். காரணம் நக்கல் என்பது ஏதோ ஒரு விஷயத்தில் உண்டான கோபத்தை, சிரிப்பு என்ற மேற்பூச்சில் வெளிப்படும் கோபமே!

ஒற்றை வார்த்தை- கழுதை என்ற சொல் எழுப்பிய தாக்கத்தை, பத்து நிமிடங்களில் இதை எழுதினேன். முன்பு தோழியரில்
போட்டது. கொஞ்சம் சரி செய்து keetru.com ற்க்கு அனுப்பி வைத்தேன். பதிவுகள் டாட் காமில் வெளிவந்த அவள் என்ற
சிறுகதையைப் படித்துவிட்டு, கீற்று எடிட்டர் மெயில் அனுப்பியிருந்தார். அப்படியே இந்த லிங்கையும் பாருங்கள். பற்றி எரியும் மேட்டரில், மிக சரியாய் எழுதியுள்ளார் ஆனாரூனா. யார் இவர்?
http://www.keetru.com/literature/essays/aanaarunaa_10.html


கழுதைகள் மற்றும் எருமை மாடுகள்


காலக்காலமாய் கழுதைகளுக்கு கல்யாண மார்கெட்டில் மவுசு அதிகம். ஆனால் இன்றைய தேதியில் பெண்களுக்கும் விழிப்புணர்வு அதிகமாகி வருவதால் அவர்களும் கழுதைகளுக்கே கழுத்தை நீட்ட பிரியப்படுகிறார்கள். காதலிக்கவும், கனவு காணவும் அழகிகளை நாடுபவர்கள் கல்யாணம் என்று வரும்பொழுது கழுதைகே முதலிடம் கொடுக்கிறார்கள். ஆனால் கழுதைகளைப் பற்றி சில உண்மைகளை எடுத்து சொல்ல விரும்புகிறேன். நீங்கள் ஒரு மேதை (இலக்கிய), அல்லது அறிவுஜீவியாய் இருந்தால், வாழ்க்கை சுமுகமாய் போக ஒரு கழுதையை வாழ்க்கை துணையாய் கொள்ள முடிவெடுக்கலாம். கழுதை என்றால் என்ன சொன்னாலும் கேட்டுக் கொள்ளும் என்பது உங்கள் எண்ணமாய் இருந்தால், அய்யகோ தவறு செய்கிறீர்கள் ஐயா!

கழுதையின் உலகம் அமைதியானது. தன் வேலையை, தனக்குக் கொடுத்த வேலையை மட்டுமே பார்க்கும். அனாவசியமாய் இன்னொருவர் விஷயத்தில் மூக்கை நுழைத்து சண்டை, சச்சரவு அல்லது உங்கள் மொழியில் சொன்னால், கருத்து மோதல் போன்றவைகளுக்குப் போகாது. இதுப்போன்ற பிரச்சனையால் மன உளச்சலில், அழுத்ததில், தலைவலியில் நீங்கள் தவிக்கும்பொழுது, பக்கத்தில் நிம்மதியாய் உறங்கும் கழுதையைப் பார்த்து உங்கள் எரிச்சல் அல்லது ரத்த அழுத்தம் கூடும் சாத்தியங்கள் உண்டு. இத்தகைய அறிவுஜீவித்தனமான விஷயங்களை அதற்கு நீங்கள் எவ்வளவு எடுத்துக் கூறினாலும், அது முகத்தில் எந்த உணர்வும் காட்டாமல் கடனே என்றுக் கேட்டுக் கொண்டிருக்கும்பொழுது, க... தெரியுமா க... வாசனை என்ற பழமொழியை நினைவுக்கூர்ந்து நீங்கள் அவ்விடத்தை விட்டு விலகிவிடுதல் உங்கள் உடம்புக்கு நல்லது.

கழுதை தன்னுடைய உலகில் சஞ்சாரித்துக் கொண்டு, சும்மா இருக்கும். சும்மா என்றால் வாய் வார்த்தை பேசாமல், மண்டைக்குள் குடைச்சல் பட்டுக்கொண்டு இருப்பது ஆகாது. தான் உண்டு தன் வேலை உண்டு என்று அமைதியாய் இருப்பது. நீங்கள் திட்டினாலும், உதைத்தாலும் அதற்கு ஒன்றும் ஏறாது. திட்டு என்பது நேரடியாய் திட்டினாலே பேசாமல் இருக்கும் நீங்கள் அறிவுஜீவித்தனமாய் இரட்டை அர்த்ததில், ஜாடையாய் திட்டினால் எந்த உணர்வும் காட்டாது.

ஆனால் இவைகளை ஓரளவு பொறுத்து போகுமே தவிர, பொறுமைக்கு பூஷணமான கழுதையும் சட்டென்று முரண்டு பிடிக்க ஆரம்பித்துவிடும். எந்த சாம, தான பேதங்களுக்கும் அசையாது. கடைசியில் நீங்கள் காலில் விழுந்து அதன் வழிக்குப் போக வேண்டியும் இருக்கும். அதைவிட, சில சமயம் கோபித்துக் கொண்டு பின்னங்காலால் ஒரு உதை விட்டு விட்டு, எங்காவது ஓடிப் போய் விடும். அப்பொழுதும் நீங்கள்தான் அதனை சமாதானப் படுத்தி அழைத்து வரவேண்டும். கழுதை ஒரு பொழுதும், சண்டைக்கும் வராது, அதே சமயம் அதுவே, சமாதானத்துக்கும் வெள்ளை கொடியும் காட்டாது என்பதை நினைவில் கொள்க.

கடைசியாய், கழுதையின் வாழ்க்கை சுகமானது. எதுவுமே அதை பாதிக்காது. தன்னால் முடிந்ததை முகம் கோணாமல் செய்யுமே தவிர, நீங்களாய் அறிவுஜீவிதனமாய், ஏதாவது பிரச்சனை செய்யாமல் இருந்தால், அதனுடன் வாழ்வது சுகமானதுதான்.

கழுதைக்களுக்கும் சிலசமயம் வாழ்க்கை அலுத்துவிடும். வேலை செய்வது, சாப்பிடுவது, தூங்குவது மீண்டும், மீண்டும் வே..., சா..., தூ.... வா? என்று யோசிக்க ஆரம்பிக்கும். எப்பொழுதுமே அத்தனை பிரச்சனைக்கும் காரணமே இந்த யோசனை தானே? பரீணாம வளர்ச்சி சிந்தாந்தப்படியும் ஏன் அடுத்தக்கட்டமான எருமை மாடாய் மாறக்கூடாது என்று நினைத்து யாரிடமும் யோசனை எதுவும் கேட்காமல். ஒரு நாள் எருமைகளாக மாறிவிட்டும். ஆனால் இதனால் ஊரும், உலகமும் அல்லோகல்லப்படும். கழுதையால் இவ்வளவு நாளும், சந்தோஷமாய் இருந்தவர்களுக்கு அஸ்தியில் ஜூரமே வந்துவிட்டது. சிலரோ எருமை மாட்டால் கிடைக்கும் நல்லது, கெட்டதை பட்டியல் இட்டுப் பார்த்ததில், அவர்களுக்கு பெரிய வித்தியாசம் ஒன்றும் கிடைக்கவில்லையாததால், பேசாமல் இருந்து விட்டார்கள்.

ஆனால் வித்தியாசம் அதிலும் மிகப் பெரிய வித்தியாசம் இருக்கத்தான் செய்தது. கழுதையின் அருகில் போய் நின்றால் போதும். அது மெதுவாய் தலையைத் தூக்கி, உலகில் உள்ள துக்கத்தை எல்லாம் தன் கண்களில் தேக்கி, உங்களை பரிதாபமாய் பார்க்கும். அதே சமயம்,எருமை மாட்டுக்கு அருகில் போங்களேன். முதலில் அது உங்களை கண்டுக்கவே கண்டுக்காது. திரும்ப, திரும்ப கவன ஈர்ப்பு தீர்மானம் போட்டால், போனால் போகிறது என்று தலையை திருப்பி, உங்களை ஒரு பார்வைப் பார்த்துவிட்டு திரும்ப தலையை திருப்பிக் கொள்ளும். அந்த பார்வையில் எந்த உணர்வும் இருக்காது. அது உங்களை அலட்சியப் படுத்துகிறது என்று உண்மை உங்களுக்கு புலனாகி, உங்கள் தன்மானத்தில் முதல் அடி விழும்.

எருமை மாடுகள் சந்தோஷமாய் தான் நினைத்ததை சாதிக்க புறப்பட்டு விட்டன. யாரையும் குறித்து எந்த அச்சமோ, நினைப்போ இல்லாமல் தங்கள் வேலையைப் பார்க்கத் தொடங்கின. ஆரம்பத்தில் அமைதிக்காட்டியவர்கள், நடப்பதைப் பார்த்து பீதிக் கொள்ள தொடங்கினர். தாங்கள் கொண்ட பீதியை மற்றவர்களுக்கு சொல்லி, சொல்லி எல்லாருக்கும் பயம் காட்ட தொடங்கினர். வேகமாய் வந்தவர்கள், அவைகளின் மேல் இடித்தும் இடிக்காமலும் நின்றுவிட்டு, வாய்க்கு வந்தப்படி திட்டி விட்டு நகர்ந்தனர். ஆனால் எருமை மாடுகளுக்கு மேல்தோல் கடினமானது. அதனால் வெய்யிலும் மழையும் அவைகளை எந்த வகையிலும் பாதிக்கவேயில்லை. பாவம்! அவர்கள் கோபம் அவர்களுக்கு! ஆனால் கருமமே கண்ணான எருமை மாடுகள் அசைந்தும் கொடுக்கவில்லை. ஒன்றிரண்டு பேர்கள் அவைகளின் பொறுமையைப் போற்றினாலும் எருமைமாடுகள் அதற்கும் ஒன்றுமே பதில் சொல்வதில்லை. மெதுவாய் ஊர்ந்து போய் கொண்டேயிருந்தன.

இன்றைய பதில் இல்லாத கேள்வி எல்லார் மனங்களிலும், சிலரின் வாய் வார்த்தையாலும் வெளியே வரத் தொடங்கி விட்டது. இது எங்குப் போய் முடியும்? இன்று கழுதை எருமை மாடானது, நாளை குலைத்து பின்பு கடிக்க தொடங்கும் நாய் ஆகலாம்! அதற்கு பிறகு.... நினைக்கவே முடியாமல் எல்லாரும் பயத்தில் வாழ்ந்துக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால் சில பெருசுகள் "காலம் கலிக் காலம்" என்று சொல்லி பெருமூச்சு விட்டுக் கொண்டு, கழுதையுடன் தாங்கள் வாழ்ந்த இனிய வாழ்க்கையை சொல்லி பெருமூச்சு விட்டுக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால் இனியும் அந்த சுகமான வாழ்க்கை யாருக்குமே அமையாது என்ற கசப்பான உண்மை மட்டும் எல்லாருக்கும் தெள்ள தெளிவாய் புரிந்துவிட்டது. ஆனால் ஏற்றுக் கொள்ளத்தான் மனம் வரவில்லை.

****

33 பின்னூட்டங்கள்:

At Tuesday, 15 November, 2005, சொல்வது...

உஷா,

கொன்னுட்டீங்க போங்க!

மனமார்ந்த வாழ்த்துக்கள் உஷா.

 
At Tuesday, 15 November, 2005, சொல்வது...

உங்களால் மட்டும் எப்பிடுங்க இப்படியெல்லாம் முடியுது. :-)

 
At Tuesday, 15 November, 2005, சொல்வது...

கலக்கல் உஷா!

அன்னைக்கு படிச்சதுபோலவே இன்னைக்கும் படிக்கும்போது ரொம்ப அர்த்தமுள்ளதா இருக்கு...

 
At Tuesday, 15 November, 2005, சொல்வது...

This comment has been removed by a blog administrator.

 
At Tuesday, 15 November, 2005, சொல்வது...

உஷா அவர்களே,
நீங்கள் இப்பதிவில் எழுதியவை நான் ஆண் பெண் கற்பு நிலை பற்றி போட்ட 3 பதிவுகளுடன் ஒத்துப்போவதாக எனக்குப் படுகின்றன. அல்லது என் புரிதலில் ஏதேனும் தவறுள்ளதா?

அன்புடன்,
டோண்டு ராகவன்

 
At Tuesday, 15 November, 2005, சொல்வது...

தங்களின் படிக்கத்தூண்டும் ரசிப்பத்தன்மையான எழுத்துக்கு பாராட்டுக்கள்.

( ஆமா ஏன் முதலையின் வாயினுள் தலையை வைக்கிறீங்க..? வாழ்ககை அலுத்துவிட்டதா?)

இதயம் நெகிழ்வுடன்

ரசிகவ் ஞானியார்

 
At Tuesday, 15 November, 2005, சொல்வது...

Marupadiyum?! :-(

 
At Tuesday, 15 November, 2005, சொல்வது...

/இதயம் நெகிழ்வுடன்
ரசிகவ் ஞானியார் /

இப்படி அடிக்கடி எல்லாத்துக்கும் இதயம் நெகிழ்ந்தால் உடம்புக்கு ஒன்னும் ஆகாதா?

;-)

 
At Tuesday, 15 November, 2005, சொல்வது...

இன்னொரு தடவையும் பாலசந்தர் மாதிரி கதை சொல்லிட்டீங்க. அது என்னமோ தெரில உங்க எழுத்த படிச்ச அந்த நினைப்பு தான் வருது. உதாரணம் மன்மதலீலையில வர ஒய் ஜி பார்த்தசாரதி பொண்டாட்டி மாதிரி, "இப்ப கதவை எல்லாம் அடச்சிட்டேன், என்னான்னு சொல்லு" ன்னு மவகிட்ட கேட்க, மவ அப்பன் சமயக்காரி வண்டவாளத்தை எடுத்து உட, அதுக்கு அம்மாகாரி "எனக்கு எல்லாம் தெரியும்" னு அமைதியா வாழ்ந்த வாழ்க்கையும், வாழ போற வாழ்க்கைக்கு எந்த பங்கமும் வரக்கூடாதுன்னு அமைதியா போறத எடுத்தி சொல்லி மவளை மன்மத மருமவங்கிட்ட அனுப்பி வக்கிறா,அவளை என்னான்னு சொல்றது, அப்புறம் சிந்துபைரவில அசமந்தம் மாதிரி இருக்கிற பொண்டாட்டி புருஷன எவகிட்ட வேணுனாலும் புள்ள பெத்துக்கிட்டும், ஆனா அவரு வாழ்ந்த வாழ்க்கை என்னா, இந்த சங்கீத புருஷன் இப்ப சீபடுரானேன்னு, அவனுக்காக சக்களத்திக்கிட்ட முந்தானை பிச்சை கேட்டு மன்றாடுறாளே, அவளாகட்டும் எத்தனை யுகம் ஆகட்டும் நாங்க கழுதையாவோ, இல்ல எருமையாவோ இருக்க தான் வசதி, ஏன்னா என்ன சுத்தின சமூகம் அப்படின்னு எத்தனை நாளைக்கு சொல்லிட்டு அலைய போறீங்களோ! ஆனா ரூனா சொன்ன மாதிரி அடிமையில்லா, விளம்பர அழகியில்லா சுதந்திர சிந்தனை மலர்ந்த அன்பு மயமான தோழிகள் கொண்ட சமுதாயம் வரணும்னா ஆயிரம் குஷ்புவும், சுஹாசினியும் வந்தாவுணும்!

 
At Tuesday, 15 November, 2005, சொல்வது...

வெளிகண்ட நாதர்...
உங்களுக்கு இந்த கட்டுரையின் பின்புலம் தெரியவில்லை என்று நினைக்கின்றேன்.

சரி அப்படியே இருந்தாலும் இதனில் மறைந்திருக்கும் கோபம் புரியவில்லையா :-(

 
At Wednesday, 16 November, 2005, சொல்வது...

நல்ல கட்டுரை.

 
At Wednesday, 16 November, 2005, சொல்வது...

சாமியோவ்... இனி இந்த பக்கமே வரக்கூடாது போல...
கழுதை, எருமை, நாய்....

மூன்று பரிணாமங்களிலும் ஆண்களை "ஆண்" என்று சொல்லவில்லை... உள்குத்தோ...?

எப்படிங்க பத்து நிமிஷத்தில இப்படியெல்லாம் எழுத முடியுது....

//பரீணாம வளர்ச்சி சிந்தாந்தப்படியும் ஏன் அடுத்தக்கட்டமான எருமை மாடாய் மாறக்கூடாது என்று நினைத்து யாரிடமும் யோசனை எதுவும் கேட்காமல். ஒரு நாள் எருமைகளாக மாறிவிட்டும்.//
யோசனை எதுவும் கேட்காமல்.....Note this point

//இன்று கழுதை எருமை மாடானது, நாளை குலைத்து பின்பு கடிக்க தொடங்கும் நாய் ஆகலாம்! //
என்னவோ போங்க...

 
At Wednesday, 16 November, 2005, சொல்வது...

வெளிகண்ட நாதரே! இராமநாராயணனை சொல்லியிருந்தாகூட பரவாயில்லை, கழுதை எருமைன்னு எழுதுகிறோம். முதலை, புலி
படம் காட்டுகிறோம் என்று மனதை தேற்றிக் கொண்டிருப்பேன். ஆனா பாலசந்தர் என்று சொல்லிவிட்டீர்களே ;-(

சின்னதா ஒரு பிளாஷ்பேக். அக்னிசாட்சி என்று ஒரு படம், பிரண்ட்சோட போயிருந்தேன். புதுமை பெண் என்று சரிதாவை காட்டியவர் சடால் என்று லூசு என்று சொல்ல ஆரம்பித்துவிட்டார். கூட வந்தவளுங்க முகத்த பார்க்கணுமே! அன்றில் இருந்து கொஞ்ச கேனத்தனமா யாராவது பிலிம் காட்டினா, என்னடி இவ பாலசந்தர் ஈரோயினி மாதிரி பேசரா என்று செலாவாடையே
வந்துவிட்டது. அப்புறம் ரொம்ப நாளுக்கு பிறகு கல்கி பார்க்கும்பொழுது, முதல்ல தலையில அடிச்சிக்கிட்டேன், அப்புறம் நல்ல தமாஷாய் இருந்துச்சு. இப்ப ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி
மாதவன வெச்சி படமெடுத்தாரு இல்லையா, என்னத்தான் மாதவன் நடிச்சிருக்காரு என்றாலும் ரிஸ்க் எடுக்க மனசு வரலைங்க.
என்னத்த சொல்லுரது, கேட்டா இதுதான் பாலசந்தர் முத்திரைன்னுடுவாரு.

//ஆனா ரூனா சொன்ன மாதிரி அடிமையில்லா, விளம்பர அழகியில்லா சுதந்திர சிந்தனை மலர்ந்த அன்பு மயமான தோழிகள் கொண்ட சமுதாயம் வரணும்னா ஆயிரம் குஷ்புவும், சுஹாசினியும் வந்தாவுணும்! // ?????????????

 
At Wednesday, 16 November, 2005, சொல்வது...

யதார்த்தமான கதை. ஆனால் கழுதையாகவும் எருமையாகவும் இருந்தால் கற்பரசிப் பட்டமும் கோயிலில் இடமும் ஒழுக்கமான பெண் என்ற பட்டமும் ஆண்களிடம் கிடைக்கும். அதையெல்லாம் விட முடியுமா? கழுதையோ எருமையோ குட்டி போட்டாதான் மதிப்பு. குட்டி போடாத கழுதைக்கும் எருமைக்கும் மதிப்பே இல்லை தெரியுமா!

 
At Wednesday, 16 November, 2005, சொல்வது...

ஆனாரூனா. யார் இவர்?
answer is here
http://ravisrinivas.blogspot.com/2005/10/blog-post_26.html

 
At Wednesday, 16 November, 2005, சொல்வது...

காலம் கலிகாலம் ஹும்..

 
At Wednesday, 16 November, 2005, சொல்வது...

துளசி இந்த "கொன்னூட்டீங்க" என்ற வார்த்தைக்கு இரண்டு அர்த்தம் தெரியுமா :-)

நன்றி மோகன் தாஸ்.

இளவஞ்சி, இன்றைய நாளில் இது பொருத்தமாய் இருக்கும் என்ற எண்ணத்தில், சிறுகதை கேட்ட, கீற்று ஆசிரியருக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு அனுப்பினேன்.

டோண்டு சார், என்னுடைய எழுத்தை நவீனகவிதை/பின்நவீனத்துவ ரேஞ்சுக்கு தூக்கிட்டீங்க. எனக்கு தெரியலை. ஆனா அப்படி நீங்க பொருள் கொண்டால், அது உங்க இஷ்டம் :-)

ரஜினிராம்கி, இது என்னுடைய சொந்த இடம், வெளிவந்தவைகளில் சுமாராய் இருப்பதை இதில் பத்திரப்படுத்தி வைக்கும் எண்ணம்.
கோச்சிக்காதீங்க ஒன் ஆப் த மேல்கைண்ட் நண்பரே :-)

ரசிகவ் ஞானியாரே, வாழ்க்கை கசந்துப் போன இப்படி எல்லாம் நக்கலடிக்க முடியாது :-) அதிரைக்காரருக்கு நன்றி, நானும் அதையே சொல்லணும் என்றிருந்தேன். படாவதி மேட்டருக்கு எல்லாம் இதயம் நெகிழ்ந்தா எப்படி ஞானியாரே???

 
At Wednesday, 16 November, 2005, சொல்வது...

சுதர்சன், கோ.கணேஷ், ஜி.ராகவன் நன்றி. கல்யாணம் ஆகாத பையன்கள் பயந்துவிட்டார்கள் என்று நினைக்கிறேன்.

சோழநாடான், விளக்கத்துக்கு நன்றி. வெளிகண்டநாதருக்கு இப்பொழுது விளங்கியிருக்கும் என்று நினைக்கிறேன்.

மணியன், த்ரேதாயுகத்திலேயே இருந்திருக்கலாம் இல்லையா :-)

 
At Wednesday, 16 November, 2005, சொல்வது...

ஐயா மனிதரே, அது அவங்க பாடு, இதுல நான் சொல்ல என்ன இருக்கு? கல்யாணம் என்பது ஒப்பந்தம். இருபக்கமும் லாபநஷ்டம் பார்த்து கல்யாணம் செய்துக் கொள்கிறார்கள். தாலிகட்டியவருக்கு இவரைப் பற்றி தெரியாமல் இல்லையே? அவர்களின் சொந்த விஷயத்தில் கருத்து கூற யாருக்கும் உரிமையில்லை ஐயா!

 
At Wednesday, 16 November, 2005, சொல்வது...

ரவி, வாய்ஸ் ஆப் விங்ஸ் தெருத்தொண்டன் இதேயே போட்டு இருந்ததையும் சொல்லியிருக்கிறார். இரண்டிலும் நான்
பின்னூட்டமும் கொடுத்துள்ளேன். ஒவ்வொரு நாளும் குஷ்பூ, கற்பூ என்று நாலைந்து படிப்பதால், படித்தது ஞாபகம் இருந்தாலும்
எங்கு என்பது நினைவுக்கு வரவில்லை.

 
At Thursday, 17 November, 2005, சொல்வது...

உஷா ! எங்கேயோஓஓஒ போய்ட்டீங்க !

 
At Thursday, 17 November, 2005, சொல்வது...

ரவியா, எங்க போனேன் இங்கேதானே இருக்கேன் :-)

 
At Thursday, 17 November, 2005, சொல்வது...

ரொம்ப நல்லா சொல்லியிருக்கீங்க. பாராட்டுகள்.

 
At Thursday, 17 November, 2005, சொல்வது...

ஒரு கழுத சுகாசினிக்கி லெட்டெர் எழுதினிச்சி
மறுகணமே அந்த கழுத தான் செஞ்சது தப்புன்னு சொல்லிட்டு
ஒரு கழுதையோட மனசு இன்னொரு கழுதைக்குதாங்க புரியும்..

http://singaarakumaran.blogspot.com/2005/11/blog-post_113196862249017962.html

 
At Thursday, 17 November, 2005, சொல்வது...

பரஞ்சோதி நன்றி.
ஜெயகுமார், பார்த்தேன். ஆனா என்ன சொல்ல? கவிதைக்கும் எனக்கு ரொம்ப தூரம்.

 
At Thursday, 17 November, 2005, சொல்வது...

ஏன் விளங்கல்ல, நீங்க கழுதை, எருமை, நாய்ன்னு யாரை கூப்பிடிங்களோ, அதுக்கு எதிர்மறைகள, எதிர்த்து போராடாத அப்பாவிகளை நான் கூப்பிட்டேன். அவ்வளவுதான். எல்லாரும் நுனிபுல்லை மேஞ்சிட முடியுமா? சுஹாசினி,குஷ்பாத்தான் ஆயிடமுடியுமா?
கசப்பான உண்மை தெரிங்சும் எத்துக்க மனமில்லாத தோழியர் கொண்ட சமுதாயம் தானே இது, அதைத்தான் சொன்னேன்.

 
At Friday, 18 November, 2005, சொல்வது...

நல்லாதான் இருக்கு.படிச்சு முடிச்சப்புறம் புரிஞ்சா மாதிரியும் இருக்கு...புரியாமலும் இருக்கு...
என்னமோ போங்க...:)))

"ஆனால் இன்றைய தேதியில் பெண்களுக்கும் விழிப்புணர்வு அதிகமாகி வருவதால் அவர்களும் கழுதைகளுக்கே கழுத்தை நீட்ட பிரியப்படுகிறார்கள். காதலிக்கவும், கனவு காணவும் அழகிகளை நாடுபவர்கள் கல்யாணம் என்று வரும்பொழுது கழுதைகே முதலிடம் கொடுக்கிறார்கள்."++++இது சுத்தமா புரியலை
கழுதை யாருங்கோவ்...இது புரியாம முழிக்கிற நாந்தானோ???

அன்புடன்...ச.சங்கர்

 
At Friday, 18 November, 2005, சொல்வது...

என்ன உஷா?? நல்ல சட்டையர்.....நிரைய -பேர பல விதம்மா இன்டெர்ப்ரெட் பன்ண வச்சிடிஙக.....இன்ச்பிரேஷன் அனிமல் fஆர்ம் ஆ?? பேஷ் பேஷ்!!!!!

ராதா

 
At Friday, 18 November, 2005, சொல்வது...

ஆதிரை, ராதா நன்றி.

ராதா தமிழ் பழகிட்டீங்க போல இருக்கு, ஆனா படிச்சா தமிழ் மாதிரி இல்லை :-)

வெளிகண்டநாதரே, உங்களுக்கு பதில் விரைவில் ஒரு பதிப்பாய் போட்டு விடுகிறேன்.

சங்கர், இதுக்கு எல்லாம் விளக்கம் தரமுடியுமா? வேண்டும் என்றால் இந்த வரிகளை பின்குறிப்பாய் மாற்றி படித்துப் பாருங்கள்.

//ஆனால் இன்றைய தேதியில் பெண்களுக்கும் விழிப்புணர்வு அதிகமாகி வருவதால் அவர்களும் கழுதைகளுக்கே கழுத்தை நீட்ட பிரியப்படுகிறார்கள்.//

அப்படியும் புரியவில்லை என்றால் வீட்டுல மனைவி இருந்தால் அவங்களுக்கு தமிழ் தெரிந்தால் படித்து பொருள் சொல்ல சொல்லுங்க. இன்னும் கல்யாணம் ஆகவில்லை என்றால் சீக்கிரம்
ஒரு கழு... மன்னிக்க, மன்னிக்க!

 
At Friday, 18 November, 2005, சொல்வது...

கழுதைகளில் ஆண்,பெண் என்றும் எருமைகளில் ஆண்,பெண் என்றும் பிரிவுகள் உண்டு என்ற எனது தாழ்மையான கருத்து. எந்த இனக் கழுதைகளை (எருமைகளை) நீங்கள் ஆதரிக்கின்றீர்கள் என்பது தெரியவில்லை.

 
At Friday, 18 November, 2005, சொல்வது...

கல்வெட்டு, நான் ஏன் ஒன்றை ஆதரிக்க வேண்டும்
:-)

 
At Friday, 18 November, 2005, சொல்வது...

//கல்வெட்டு, நான் ஏன் ஒன்றை ஆதரிக்க வேண்டும்//

ம்ம்...பிடி கொடுக்காம நழுவுறீங்களே :-))

 
At Friday, 18 November, 2005, சொல்வது...

உஷா தமிழ்நாட்டைவிட்டு வந்து பல வருஷம் ஆச்சு.இப்பொ வசிப்பதோ வெளிநாட்டில்.பல நேரம் ஆஙகிலத்தில் உரையாட வேண்டி உள்ள்து.அதனால்தான் கொஞம் தமிஙலமாக எழுடுகிரேன்.சீக்கிரம் நல்ல தமிழ் எழுத முயற்சிக்கிரேன்.i have taken yr "Nakkal" as constructive crticism...and shall work on it

cheers
Radha

 

Post a Comment

<< இல்லம்