Friday, November 18, 2005

கரோமாவில் துளசி கல்யாணம்.

லோகத்துல நம்பள மாதிரி அல்ப மனுஷாளுக்கு புரியாத சமாச்சாரங்கள் ஏகப்பட்டது இருக்கு. அதுல ஒண்ணுதான் விதி சிரித்ததுன்னு எழுதுவாளே அது. இது என்ன வியாக்கியான்னம்கறேளா, சொல்லறேன். நம்ம விஜி இருக்காள்ளோனோ, அதுதா மைலாப்பூர் அப்பு முதலி தெருவுல ஒண்டுக் குடித்தனத்துல லோல் பட்டுண்டு இருந்தாளே அவதான். ஒண்டு குடித்தனம்னா சண்டைக்கு வந்துடுவா, அத ஸ்டைலா பிளாட்டுன்னு சொல்லுவா. எனக்கு அந்த அறநூறு அடி எலி வங்கு ஒண்டுக் குடித்தனம்தான்.

அவ ஆத்துக்காரன் சீனுவுக்கு துபாய்ல வேல கெடச்சி ரெண்டே மாசத்துல விசா ரெடி, 'துபாய்ல கராமாங்கற எடத்தில வீடும் பார்த்துட்டேன் கொழந்தைகள அழைச்சுண்டு வா'ன்னு கம்யூட்டர்ல தபால் போட்டுட்டான். இவளை கைல பிடிக்க முடியலை. பாக்கிறவாகிட்டெல்லாம் எங்காத்துக்காரருக்கு துபாய்ல மாசம் ஒரு லட்சம் ரூபா சம்பளம், நம்பளவா இருக்கிற எடமா வீடு பார்த்திருக்கார்ன்னு பீத்திண்டு இருந்தா! அப்பதா விதி அவளப் பாத்து சிரிச்சுது. இவ இருந்த ஜோர்ல காதில விழல அவ்வளவுதான்.

ரெண்டு கொழந்தைகளையும் அழைச்சிண்டு ஒரு நா துபாய்க்குக் கிளம்பிப் போனா. மூத்தது ப்ரியா, பீயூன்னு செல்லமா கூப்பிடுவா. அதுவும் டயட் பண்ணறேன் பேர்வழின்னு அரை இட்லி, கால் தோசைன்னு தின்னுண்டு வெடவெடன்னு ஒட்டடக் கொம்பாய் இருக்கும். சின்னது விக்னேஷ். அத செல்லமா கூப்பிடறேன்னு விக், விக்ன்னு விக்கிண்டு இருப்பா.

சீனுக்குப் பொறப்பே கொஞ்சம் ஸ்தூல சரீரம். அதுலையும் அவ அம்மா, கொழந்தை சாப்பிடறேன்னு நன்னா வக்கணையா சமைச்சி போட்டு வளர்த்துட்டா. அவன் பிள்ளை விக்கும், அப்பனைக் கொண்டு இருக்கும். சரி, கதைக்கு வரேன்.

ஒரு வருஷங்கழிச்சி நேத்து அவள கபாலீஸ்வரர் கோவில்ல பார்த்தேன். கழுத்துலையிலும், கையிலையும் துபாய் தங்கம் மினுமினுக்க பூக்காரியோட நாலணாவுக்கு மல்லுக்கட்டிண்டு இருந்தவளை செளக்கியமான்னு கேட்டதற்கு துபாய் புராணமே பாடிட்டா. அவ சொன்ன கதையக் கேக்கறேளா?

ரெண்டு கொழந்தைகளையும் அழைச்சிண்டு துபாய் போய் எறங்கின விஜிக்கு தன் ஆத்துகாரனப் பாத்து தூக்கிவாரிப் போட்டது. ரெண்டே மாசத்துல அஞ்சு கிலோ ஏறி இருந்தான். மனம் பொறுக்காம, என்ன இப்படி தொந்தி பெருத்து போச்சுன்னு அங்கலாய்ப்பா கேட்டுருக்கா. அவனோ அது காதுல விழாதமாதிரி கொழந்தைகளுக்கு துபாய பத்தி ரன்னிங் காமண்டரி கொடுக்க ஆரம்பிச்சான்.

அவன் அவன் ஆத்துக்காரி இல்லைனா எளைச்சி துரும்பாப் போயிடறான், இவர் என்னன்னா இப்படி ஆயிட்டாரேன்னு பொருமிண்டு போனா விஜி.

ஆத்த பாத்ததும் அப்படியே பிரமிச்சி போயிட்டா எல்லாரும். ஆம் நன்னா விஸ்தாரமா ஜம்முன்னு இருந்தது. இவனும் நன்னா பாத்துபாத்து சாமான் செட்டு வாங்கிப் போட்டுருந்தான். ஊர் கதையும் எல்லாம் பேசிட்டு ஏ.சி போட்டுண்டு நன்னா, தூங்கி போயிட்டா எல்லாரும்.

மறுநாள் காலைல சொகமாத் தூங்கிண்டு இருந்த விஜி, விக்கு போட்ட சத்தத்துல அலறிண்டு எழுந்தா! என்னன்னு பால்கனிக்குப் போய்ப் பார்த்தா, ஆத்த சுத்தி சரவணபவன், மீனாட்சி பவன், அஞ்சப்பர், சங்கீதான்னு ஏகப்பட்ட ஹோட்டல். அத பார்த்தவொடனே ஆத்துக்காரர் ஊதினதுக்குக் காரணம் புரிஞ்சிடுத்து விஜிக்கு.

இது போதாதுன்னு சீனு, நாம்ப ஹோட்டலுக்கே போகவேண்டாம், ஆர்டர் பண்ணினா ஆத்துக்கே சப்ளை பண்ணிடுவான்னு சொல்லிண்டு இருந்ததைக் கேட்டு, விஜிக்குப் கோபம் தலைக்கு மேலே சர்ருன்னு ஏறித்து. ஆனா வந்த மொதல் நாளே சண்டை வேண்டான்னு, இப்படி ஹோட்டல்ல தின்னா அப்பனுக்கும், பிள்ளைக்கும் ஒடம்புக்கு ஆகாதுன்னு மெதுவா எடுத்துச் சொன்னா. வாரம் ஒருநா போகலாம்ன்னு எல்லாரும் முடிவு பண்ணினா.

அன்னைக்கே ஸ்கூல் சேர்க்கணும்கிறதால, எல்லாரும் சரவணபவன்ல டிபன் பண்ணிட்டு, ஸ்கூலுக்கு போனா.

கொழந்தைகள ஸ்கூல்ல விட்டுட்டு ஆத்துக்கு வந்து கிச்சன்ல சாமான் ஒழுங்கு பண்ண ஆரம்பிச்சா விஜி. எல்லாத்தையும் எடுத்து வெச்சிட்டு, கிச்சன பெருக்கலாம்ன்னு பாத்தா தொடப்பம் வாங்காதது ஞாபகம் வந்திருக்கு. காலைல பக்கத்து ஆத்து மாமி ஸ்மைல் பண்னினத ஞாபகம் வெச்சிண்டு, அவ ஆத்து கதவ தட்டினா. ரெண்டு நிமிஷத்துக்குப் பின்னே, அந்த மாமியும் ஒரு ஸ்லோகத்த மொண மொணத்துண்டே கதவ, தொறந்தா. இவளப் பார்த்து என்னன்னு சைகைல கேட்டா. விஜியும் துடைப்பம் வேணும்னா. மாமி அவளை அழைச்சிண்டு போய் துடைப்பம் இருக்கிற எடத்த காட்டினா. விஜி அதை எடுத்துண்டு வரும்போது சைகைல இரு, இருன்னா. துடைப்பத்த கீழே வெச்சிட்டு கை அலம்பிண்டு வான்னா.

விஜி வந்த ஒடனே குங்குமம் இட்டுக்கோன்னு சிமிழ நீட்டறா. இத்தனையும் சைகைதான். அவளும் அதை இட்டுண்டு, துடைப்பத்த வாய்ண்டு ஆத்துக்கு வந்தவளுக்கு கிறுகிறுன்னு வந்துடுத்து! ஒரு மணி நேரம் கழித்து பெல் அடிக்கிற சத்தம் கேட்டு பார்த்தால் பக்கத்தாத்து மாமி. ஸாரி பூஜ பண்ணிண்டு இருக்கறச்சே யாரோடவும் பேசமாட்டேன், அப்புறமா ஆத்துக்குவான்னா! இவளும் பெருக்கிட்டு தொடப்பத்த கொண்டு கொடுத்தா, அந்த மாமி இன்னைக்கு சனிக்கிழம சுமங்கலி ஆத்துக்கு வந்து இருக்கன்னு தேங்கா, பிளவுஸ் பீசுன்னு வெச்சி குடுக்கிறா. இவளும் வாய மூடிண்டு அத வாய்¢ண்டு வந்துட்டா.

கதையை மேல சொல்லறதுக்கு முன்னாடி ஒரு விஷயம். சீனுவுக்கும், விஜிக்கும் அத்தனை பக்தி போதாது. எப்பவாவது நாளு கிழமைனா கோவிலுக்குப் போவா. தெனமும் பெருமாளுக்கு வெளக்கேத்தி, ஒரு கும்பிடு போடுவா ரெண்டு பேரும், அவ்வளவுதான்.

இப்படி யார் ஆத்துக்குப் போனாலும் கிளம்பும் போது தேங்கா, பிளவுஸ் பீஸ்.சும்மா ரெண்டு நிமிஷம் பேசப்போனாலும் கெளம்பும்போது குங்குமத்த நீட்டறதப் பார்த்து ஒருமாதிரி ஆயிட்டா விஜி. ஒரே வாரத்துல பத்துப் பதினஞ்சு பாலிஸ்டர் பிளவுஸ் பீஸ், மட்டையோட ஏழு எட்டுத் தேங்கா கலக்ட் ஆயி கிச்சன்ல ஒரு மூலைல அவளப் பாத்து ஈன்னு சிரிச்சிண்டு கெடந்தது.

பத்துநாள் கழிச்சு வாசல்ல பெண்கள் எல்லாம் கூடிப் பேசிண்டு இருந்தா. மாமி 'துளசி கல்யாணம்'ன்னு சொன்னவொடனே நம்ப விஜி 'யாரு துளசி'ன்னு கேட்டுட்டா. மாமி துளசி செடிக்கு கல்யாணம்ன்னு லெக்சர் குடுக்க ஆரம்பிச்சுட்டா. அவகிட்ட இருந்து எப்படித் தப்பிக்கிறதுன்னு யோசிக்கும்போது, எதிர்த்தாத்து பாக்யலஷ்மி ஒரு சின்ன ஹெல்ப்ன்னு விஜிய பாத்துக்கேட்டா. அவ ஆத்துல இல்லாததால அவ வளர்க்கிற துளசிச் செடிக்குத் தண்ணிவிடணுமாம்.

அங்க போய்ப் பார்த்தா, அந்தப் பாலைவன வெய்யில்ல காஞ்சி போய் மொத்தமே அஞ்சு எலயோட சோகையா அந்த செடி நின்னுண்டு இருந்துது. அதுக்குதான் கல்யாணம்ன்னாளாம், பொங்கிவந்த சிரிப்ப அடக்கிண்டு ஆத்துக்கு ஓடியே வந்துட்டா விஜி.

இது நடுவுல இந்த குரூப்ல சேராத ஒருத்தியும் இவளுக்குப் பழக்கமானா. அவ கூட பேச ஆரம்பிச்ச ஒடனே, விஜி இந்த ஞானப் பழ குரூப்பப் பத்தி லேசா விசாரிச்சா.அவளோ, ஆமா ஆமாம் நேக்கு இதுல எல்லாம் நம்பிக்கை இல்லைனுட்டு ஆர்ட் ஆப் லிவிங், வாஸ்து, ரெக்கின்னு ஆரம்சுட்டாளாம்.

விஜிக்கு என்ன பண்ணறதுன்னே தெரியல. அந்த பக்தி சாகரத்திலும் ஐக்கியமாகவும் அவளுக்கு தோதுபடலை. ஆத்தையே மாத்தலாம்னா, சீனு, வாடகை போஸ்ட் டேட்டட் செக்கா வீட்டுகாரனுக்கு ஒரு வருஷத்துக்குக் கொடுத்தாச்சு. நடுவுல மாறினா கொடுத்த காசு எள்ளுனான். இதுதான் துபாய் வழக்கமாம்.

இப்படி மாட்டிண்டோமேன்னு கவலைப் பட்டுண்டு இருக்கறச்சே, ஒரு நா பக்கத்தாத்து மாமி விளக்கு பூஜைபண்ணப் போறேன் அன்னைக்கு யார் யார் ஆத்துல இருப்பான்னு லிஸ்ட் எடுக்க ஆரம்பிச்சாளாம். விஜி டக்குன்னு 'என் கிட்ட வெளக்கு இல்ல மாமின்னுண்டிருக்கா. அவளோ 'என்னாண்ட ஸ்பேர் இருக்கு'ன்னுட்டாளாம். விஜிக்கு எப்படி இந்த கோஷ்டில இருந்து தப்பிக்கிறதுன்னு யோசிச்சி யோசிச்சி தலைவலிதான் ஜாஸ்தி ஆயிண்டிருந்தது.

ஒரு நா கவலையா ஒக்காந்துண்டு இருக்கறச்சே, 'என்ன விஷயம்'ன்னு சீனு கேட்டான். மனம் பொறுக்க முடியாம அத்தனை விஷயத்தையும் கொட்டிட்டா.எப்படி அவளக் காப்பாத்தலாம்னு கொழந்தைகளும் சேர்ந்து யோசிக்க ஆரம்பிச்சா.

கொழந்த விக்கு சடால்ன்னு, 'அம்மா நோக்கு ஏதாவது கேன்சர், எய்ட்ஸ் மாதிரி பயங்கரமான டிசீஸ்னு சொல்லிடலாமா, நீயும் சமையல் பண்ணாம படுத்துண்டே இரு, கொஞ்சநாளுக்கு ஹோட்டல்ல சாப்பிட்டுக்கலாம்'னு யோசன சொல்லித்து.

சீனுக்குப் பெரும பிடிப்படல. 'என்னமா பேசர்த்து கொழந்த'ன்னு சொல்லும்போதே, ஆத்துகாரி மூஞ்சிய பார்த்துவிட்டு சைலண்ட் ஆயிட்டான்.' கண்ட புஸ்தகம் படிக்கற பலன் 'இது'ன்னு பல்ல கடிச்சா விஜி. அதுக்குள்ள பியூ, 'அம்மா, கல்யாணத்துக்கு முன்னே சி.ஏ படிச்சேன்னியே, அத முடியேன்'னா. அது நல்ல ஐடியாவா தெரிஞ்சது விஜிக்கு. மகள பாராட்டிட்டு நல்ல ஐடியா இல்லேன்னு ஆத்துகாரன கேட்டா. அவனோ 'நேக்கும் தோணித்து, ஆனா படிக்கிறேன் பேர்வழின்னு பாதி ஆத்து வேலைய என்னாண்ட தள்ளிடுவேன்னு சொல்லலே'ன்னான்.

அப்புறம் என்னேங்கேறேளா, இந்த ஐடியா நன்னா வொர்க் அவுட் ஆயி, விஜி படிக்கணும்ன்னு அவா கிட்ட கதவிட்டு, அப்படியே அந்த பஜன கோஷ்டில இருந்து நைசா கழண்டுண்டுட்டா! எப்படி இருக்கு கத பார்த்தேளா! இந்தக் கால பொம்மனாட்டிகளப் பத்தி கேக்கணுமா. இத்தன கத சொன்னவகிட்ட நா ஒண்ணே ஒண்ணு கேட்டேன். 'ஏண்டியம்மா, என்னமோ சிஏன்னியே அத படிச்சி முடிச்சியோன்'னேன். 'அத பத்திமாத்தரம் பேசாதேள் மாமி'ன்னுட்டா விஜி.

*************************

அப்புசாமி.காம்

24 பின்னூட்டங்கள்:

At Friday, 18 November, 2005, சொல்வது...

This comment has been removed by a blog administrator.

 
At Friday, 18 November, 2005, சொல்வது...

நல்லவேளையா உங்ககிட்ட நேர பேசல....

அப்பா சாமி..... நம்மாள நினைச்சுக்கூட பார்க்க முடியல

 
At Friday, 18 November, 2005, சொல்வது...

துளசிக்கு கல்யாணம்னு சொன்னவுடனே ஓடோடிவந்த என்னை இப்படி ஏமாற்றிவிட்டீங்களே உஷா:-)

எனக்குக் கிடைக்கவிருந்த ப்ளவுஸ் பிட் போச்சே:-))

இங்கேயும் கொஞ்சம் ப்ளவுஸ் பிட் இப்படிச் சேர்ந்திருக்கு உஷா. அதை எப்படித் தள்ளிவிடறதுன்னு ஒரு யோசனை?

கதை நல்லா இருக்கு உஷா.

 
At Friday, 18 November, 2005, சொல்வது...

மாமி நேக்கும் ஒங்க டெக்னிக் சொல்லி தருவேளா? தலக்கி மேல நிரைய பிரச்சன வச்சிண்டு லோல் படுறேன்

 
At Friday, 18 November, 2005, சொல்வது...

மன்னி,
பிச்சு எடுக்கறேள் போங்கோ! எப்படித்தான் ஐடியால்லாம் தோன்றதோ?

 
At Friday, 18 November, 2005, சொல்வது...

இது என்ன சொந்தக்கதை சோகக்கதையா?

 
At Friday, 18 November, 2005, சொல்வது...

நல்ல கதை நடை உஷா. துளசி பிளவுஸ் பிட்டெல்லாம் இன்னும் கூட யாராவது தர்ராங்களா?

 
At Friday, 18 November, 2005, சொல்வது...

நன்னா சொன்னேள் மாமி... அங்கே அப்படின்னா... பர்துபாய் கோயிலுக்கு பக்கதுல குடியிருக்கறவா எல்லாம் எப்படி?

ஒண்ணு மட்டும் நன்னா தெரிஞ்சது. சரவணபவன விட சங்கீதாவுலதான் டேஸ்ட் நன்னாருக்கு. ஆனா நேக்குதான் எட கூடவேல்ல தெரியுமோ..?

 
At Friday, 18 November, 2005, சொல்வது...

என்னது துளசி புராணமால்ல போய்டுத்து, ஒரே துளசி பதிவா போட்டுண்டுருக்கா! :-)

 
At Friday, 18 November, 2005, சொல்வது...

உஷா:

என்னுடைய பெயர் சீனு(வாசன்) , என் மனைவி 'அவர்களின்' பெயர் விஜி !!!

ரொம்ப சுவராசியமான பதிவு :)

 
At Friday, 18 November, 2005, சொல்வது...

உஷா நல்ல கர்பனை.......ஆனா இங்கே நிஜமாகவே இது மாறி மாமிகள் தொந்தரவு தாங்க முடியாது....உங்கள் கதாநாயகி விஜி மாதிரி நானும் அதே படிப்பு காரணம் சொல்லி தப்பித்துவிட்டேன்.

ராதா

 
At Friday, 18 November, 2005, சொல்வது...

ஜாலியான நடை உஷா...

 
At Friday, 18 November, 2005, சொல்வது...

கோ.ராகவன் விரைவில் ஆண்'ஈய" சிந்தனையை வெளிப்படுத்தும் பதிவு ஒன்று போட்டு விடுகிறேன்.

துளசி "ரீ சைக்கிளிங்"தான்.

செயகுமார், என்னவோ "அவள் விகடன்" மாதிரி உங்க பிரச்சனைக்கு என்னிடம் தீர்வு கேட்டா எப்படி? நா அனுராதாரமணன் மாதிரி எல்லாம் இல்லைங்க,சாதாரண எழுத்தாளினி :-)

ராமநாதன், மன்னி என்று எல்லாம் கூப்பிட்டால் வயசான பீலிங் வருது :-) உஷா போதுமே!

முகமூடியாரே! அது தொழில்ரகசியம்

தேன் துளி, மட்டையோட தேங்காய், பிளாஸ்டிக் சாமான்கள் மற்றும் பாலிஸ்டர் பிளவுஸ் பீஸ். இங்க தேங்காயை சூப்பர் மார்கெட்டில் துருவிக் கொடுத்துவிடுவார்கள். அதை உடைக்கவும் சாதனம் ஒன்றும் கிடையாது.. பிளவுஸ் பீச், பிள்ளைகளுக்கு கொடுத்து விடுவேன். கத்திரி கோலை வைத்து துண்டு துண்டாய் வெட்டிவது அவர்களுக்கு பிடித்தமான விளையாட்டு.

முருகரே, பர்துபாயா? ஆனா கரோமா ஹோட்டல்கள் எண்ணிக்கைத்தான் அதிகம்.

வெளிகண்டநாதரே, உங்க "துளசி புராணத்தை" பார்த்ததும் இந்த ஐடியா வந்தது. புதுசா எழுத நேரமில்லை.

வாசன், கேஸ் போட்டுடாதீங்க :-)

ராதா,என்ன சொல்ல? ஊரை விட்டு வந்தால் பக்தி அதிகமாகிவிடுகிறது.

ரம்யா, படைப்பாளிக்கு இதுதான் தேவை.

அனைவருக்கும் நன்றி

 
At Friday, 18 November, 2005, சொல்வது...

கோ.ராகவன் அல்ல. கோ. கணேஷ்! பேரை மாற்றிவிட்டேன். முதல் பதில் உங்களுக்குத்தான்.

 
At Sunday, 20 November, 2005, சொல்வது...

ஏன் மாமி ஆத்துக்காரரும் ஒத்துக்கொண்டார் பசங்களும் சரவண பவான்ல சரண்டர் அப்புறமேன் CA படிக்கலயாம் உங்க கதாநாயகி??; விஜியும் அம்புஜம் மாமி கோஷ்டியோட ஐக்கியமாக் போறாவா?

 
At Monday, 21 November, 2005, சொல்வது...

// கோ.ராகவன் அல்ல. கோ. கணேஷ்! பேரை மாற்றிவிட்டேன். முதல் பதில் உங்களுக்குத்தான். //

அதான....நான் இப்பத்தான வந்திருக்கேன். அதுக்கு முன்னாடியே என்னோட பின்னூட்டத்துக்கு முன்னூட்டமான்னு பயந்து போயிட்டேன். போற போக்குல நம்ம போடப்போற பதிவுகளுக்கெல்லாம் உஷா இப்பவே முன்னூட்டம் போட்டு தயாரா வெச்சிருப்பாங்களோன்னு நெனச்சு மூச்சே நின்னு போச்சு.

சரி. கதைக்கு வருவோம். simply superb.

 
At Monday, 21 November, 2005, சொல்வது...

This comment has been removed by a blog administrator.

 
At Monday, 21 November, 2005, சொல்வது...

கோ.ராகவன் நன்றி

சிநேகிதி! படைப்பாளியின் படைப்புக்கள்தான் பேச வேண்டுமே தவிர படைப்பாளி தன்படைப்புகளைப் பற்றி பேசக்கூடாது என்று பெரிய எழுத்தாளர்கள் சொல்லியிருக்கிறார்கள்.அதனால் நாயகி ஏன் சி.ஏ முடிக்கவில்லை என்று கேட்காதீர்கள்.
(அது பர்சனல் மேட்டருங்க :-)

 
At Monday, 21 November, 2005, சொல்வது...

got it Usha

 
At Wednesday, 23 November, 2005, சொல்வது...

அப்போ, நீங்க தான் விஜின்னு சொல்லுங்க. :))

 
At Thursday, 24 November, 2005, சொல்வது...

//படைப்பாளியின் படைப்புக்கள்தான் பேச வேண்டுமே தவிர படைப்பாளி தன்படைப்புகளைப் பற்றி பேசக்கூடாது என்று பெரிய எழுத்தாளர்கள் சொல்லியிருக்கிறார்கள்//

யாருங்க அந்த பெரிய படைப்பாளி/எழுத்தாளர் சுஜாதாவா?

 
At Thursday, 24 November, 2005, சொல்வது...

டி.ராஜ், படைப்பு என்பது கற்பனையும், நிஜமும் சேர்ந்து உருவாக்கப்படுவது. அதில் நிஜம் எவ்வளவு, கற்பனை எவ்வளவு என்பது
சம்மந்தப்பட்ட எழுத்தாளரின் ரகசிய பார்முலா. இதுவும் பெரிய ஆளுங்க சொன்னதுங்க :-)

மோகன் தாஸ், வில்லங்கத்துல மாட்டி விட்டுடீவீங்க போல இருக்கே! பாவம் சிநேகித, அப்பாவியாய் புரிகிறது என்று சொல்லிவிட்டு போய்விட்டார். மேட்டர் என்னவென்றால் இப்படி சொல்லிட்டா, மேற் கொண்டு கேள்வி வராமல் தப்பிச்சிடலாம் பாருங்க :-)

 
At Monday, 28 November, 2005, சொல்வது...

This comment has been removed by a blog administrator.

 
At Monday, 28 November, 2005, சொல்வது...

Jayaraman has left a new comment on your post "கரோமாவில் துளசி கல்யாணம்.":

கீழ்த்தரமான மன விகாரங்களை பிரதிபலிக்கும் கீழ்த்தரமான பதிவு.

நான் கராமாவில் 10 வருழம் வாழ்ந்தவன். பல ஸமயம் ஜவட்டாலுக்காக பிறாமண ஸமூகம் போட்டியில் இருப்பது வாஸ்தவம்தான்.

ஆனால், பல நல்ல விழயங்களை அவர்கள் ஆர்வமாக வளர்க்கும் முயற்சிகளை தாங்கள் கொச்சைப்படித்தியிருப்பது வருத்தப்பட வேண்டிய விழயம்.

துபாய் வாழ் பிறாமணர்கள் தங்கள் வாழ்க்கையை, மற்ற இந்திய வாழ் (மயிலாப்பூர் மாதிரி) ஆட்களை விட கலாசார மத விழயங்களில் தங்களையும், தன் குழந்தைகளையும் மிக நல்ல முறையில் ஈடுபடுத்திக் கொண்டுள்ளார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை.

இந்த (இட்டுக்கட்டியதோ?) விஜி மூலம் தங்களின் negativity மற்றும் பத்தாம்பசலித்தனம் (hypocracy) வெளிப்படுவதாகவே எனக்குப் படுகிறது.

ஜயராமன்.

11/28/2005 12:14:20 AM

 

Post a Comment

<< இல்லம்