Sunday, November 20, 2005

தேவை ஒரு "அவன் விகடன்"

துக்ளக் பத்திரிக்கையில ஒரு தடவை, இல்லற வாழ்க்கை நடத்த பயிற்சி தேவையா என்று டாக்டர் ருத்ரையாவும் சோவும் மோதிக் கொண்டார்கள். சோ, " ஆடு, மாடுகளுக்கு யாரு சொல்லிதராங்க?" என்று கேள்வி எழுப்பினார். அதற்கு டாக்டர், " அதுங்க கண்ட புத்தகங்களையும், படத்தையும் பார்த்து தப்புதப்பாய் புரிந்துக் கொள்ளுவதில்லை" என்றார். அதே தாங்க. என்னோட கவலையும். வர வர இளையஞர்கள் அதாவது வயசு பசங்களைக் கண்டால் வருத்தமாக இருக்கிறது.

ஆனா நான் சொல்லுகிற மேட்டர் வேறு. இளைஞர்கள் சினிமாவையும், புத்தகங்களையும்- வேண்டுமானால் இலக்கியங்கள் என்றும் கொள்ளலாம்- ஒன்றும் தெரியாத அப்பாவியாய் கல்யாணம் செய்துக் கொண்டு, யதார்த்தத்தின் வீச்சை எதிர்க் கொள்ளாமல் திணறுகிறார்கள். வாழ்க்கை கல்வி என்று ஒன்று உண்டு. அதை அவர்களுக்கு சரிவர சொல்லித்தர வேண்டும் என்பது என் எண்ணம்.

இன்றைய தேதியில் எத்தனை பெண்கள் பத்திரிக்கைகள், அவை அனைத்திலும் பெண் பிரச்சனைகளை தீர்க்க எண்பது வயது சுந்தரி பாட்டியில் இருந்து, இருபது வயது சுப்ரீயா வரை இலவச ஆலோசனைகளை வழங்குகிறார்கள். வக்கீல் அம்மாக்கள், டாக்டர் அம்மாக்கள், நடிகைகள், பெண் எழுத்தாளர்கள் என்று அவர்களுக்கு உதவ எத்தனை பேர்கள் இருக்கிறார்கள்! ஆனால் இரவெல்லாம் மெளனமாய் கண்ணீர் உகுத்து தலையணையை நனைக்கும் நம் ஆண் குல திலகங்களின் பிரச்சனைகளை தீர்க்க யாராவது ஒரு ஆண் எழுத்தாளராவது முன் வருகிறார்களா?

அவர்கள் செய்வது அறியாமல் படும் வேதனையைக் கேட்டால் நம் கண்ணில் கண்ணீர் வரும். ஆனால் கேட்கத்தான் ஆள் இல்லை. மேலை நாடுகளைப்போல கவுன்சிலிங் என்று போனால் பைத்தியகாரன் என்று பட்டம் சூட்டி விடுவார்கள். ஆக பிரச்சனையை தீர்க்க ஓரே வழி, அவர்களுக்கு என்று ஒரு பத்திரிக்கை ஆரம்பிக்க வேண்டும்.

பாட்டி மடியில் படுத்து கதைக் கேட்டப் பொழுது, தான் ஆறு பிள்ளைகளைப் பெற்றும் கணவனின் முகத்தையே பார்த்தறியாத கொடுமையை சொல்லி கண்ணீர் விட்ட பாட்டியின் முகத்தை பேரனால் மறக்க முடியுமா? பெற்றதாயோ அறியா வயதில் கல்யாணம் செய்துக் கொண்டு, தான் கணவன், அவன் சகோதரசகோதிரிகள் ,பெற்றோர்களிடம் எப்படி எல்லாம் அடங்கி நடந்த தியாக கதைகளை அவ்வப் பொழுது எடுத்துவிடுவார். போதாதற்கு நம் தலைக்கள் கேமிராவை பார்த்து, பெண்கள் எப்படி அடக்க ஒடுக்கமாய் நடக்க வேண்டும் என்ற விடும் வசனங்கள் வேறு! சின்ன வயதில் இந்த கதைகளை எல்லாம் கேட்டு வளர்ந்தவன் கல்லூரிவிடுதி, வேலை என்று மற்ற ஊர், நாடுகளுக்கு பிழைக்க போனவன், பெண் என்றால் இப்படிதான் இருப்பார்கள் என்று ஒரு முடிவுக்கு வந்தவனுக்கு தாலி கட்டியதும் மனைவி, அவளும் அவனுக்கு இணையாய் படித்து, சம்பாதிப்பவள் நடந்துக் கொள்ளும் முறை அவனுக்கு அதிர்ச்சியை தருகிறது.

பெய் என்றால் மழை பெய்யும், கண்ணகி இத்தியாதி பத்தினிகள் வாழ்ந்த நம் தமிழ் கலாசாரத்தில் வழி வந்தவள், வாடா என்று மூக்கை கிள்ளுவதும், சமையல் முதல் கொண்டு அத்தனை வேலையிலும் அவனின் பங்கை வலியுறுத்துவது, அச்சம் மடம் நாணம் என்றால் என்ன என்று நக்கல் அடிப்பது போன்ற அவளின் நடவடிக்கைகள் அவனை பீதியுற செய்கின்றன.

சினிமாவில், காலையில் எழுந்ததும். தாலியை கண்ணில் ஒற்றிக் கொண்டு விட்டு, கணவனின் காலைத் தொட்டு கும்பிட்டு விட்டு, தலைக்கு குளித்த தலையுடன், கையில் பெட் காப்பியுடன் கணவனை நாணத்துடன் எழுப்பும் பெண்களையே பார்த்து வளர்ந்தவன், ஹவுஸ் கோட்டுடன் பின் தூங்கி விழித்து காப்பி போடுமாறு சொல்லும் மனைவியை புரிந்துக் கொள்ள முடியாமல் தவிக்கிறான்.

மெல்ல சில நண்பர்களை விசாரித்தால், சிலர் தங்கள் வீட்டிலும் அதே பிரச்சனை என்று மென்று முழுங்குகிறார்கள். அடங்கி போவதா அல்லது டீவியிலும், சினிமாவிலும், இலக்கியத்தில் சொன்ன ஆண் மகனாய் லட்சணமாய் நடந்துக் கொள்வதா என்று நினைத்து நினைத்து மறுகுபவனுக்கு அறிவுரை சொல்லி வழி நடத்துவது அனைத்து ஆண் மக்களின் கடமையாகும்.

ஆகையால் 'அவன் விகடன்" என்று ஒரு பத்திரிக்கையை ஆண்களுக்காக ஆரம்பிக்குமாறு விகடன் குழுவை தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். மற்றும் பிரபல (ஆண்) எழுத்தாளர்கள், தங்கள் அனுபவத்தை வைத்து வயசு பசங்களை உய்விக்க வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

29 பின்னூட்டங்கள்:

At Sunday, 20 November, 2005, சொல்வது...

அன்றைய சூழ்நிலையில் ஆண் சம்ப்பாதிப்பான் , அழகான மனைவி அன்போடு இல்லம் நடத்துவாள்
இன்றோ நேர் எதிர் ,இரன்டு பேர் சம்பாதித்தால் தான் இனிதே வாழ்க்கை என்று வரும் போது பிரச்சனைகள் வரத்தான் செய்யும்.வேலைக்கு செல்வதால் ஆணுக்கு நிகரான களைப்பு பெண்ணுக்கும் இருப்பது நியாயமே! இதில் ஆனாதிக்கம் பெண்ணாதிக்கம் பார்க்க வேணுமா என்ன? கல்லூரி, வெளிநாடு என வலம் வந்தவனே புரிந்தறிதல் இல்லையெனில் மற்றவர்களை என்ன சொல்ல? என்னமோ போங்க!

 
At Sunday, 20 November, 2005, சொல்வது...

செயகுமார், இணையத்தில் ஒருவர் " சோழ நாட்டில் மழை பெய் என்றால் பெய்ய வைத்த கண்ணகிகள் வாழ்ந்த நாடு" என்று
சொல்லியிருந்தார். அது என்னவோ பாண்டிய, சேர நாட்டை விட்டு விட்டார். இந்த காலத்தில் அந்த இலக்கிய அதீத பெண்மையை
போற்றும் கட்டுகதயை உதாரணம் சொன்னதும், ஆச்சரியமாய் இருந்தது. ஏன் பாட்டி, அம்மாக்கள் மழையை பெய் என்று பெய்ய வைக்கவில்லை :-)
இன்னும் இளைஞர்கள் இப்படி இருப்பதால், இன்றைய கல்யாண வாழ்க்கையில் ஏகப்பட்ட பிரச்சனைகள்.

 
At Sunday, 20 November, 2005, சொல்வது...

கண்ணகி பொறந்தது சோழ நாட்டுல. அதும் இல்லாம சோழ நாட்டுலதான் அதிகமா நெல் வெளையுது ."வாழ்தல் வேண்டி ஊழ்வினை துறப்ப நின் பார் கொலைகளப்பட்ட கோவலன் மனைவி கண்ணகி என்பது என் பெயரே" ந்னு சொன்ன உடனே மன்னன் மயங்கி விழுந்துடுறான். அவ சாபம் இட்டா மதுர எரிஞ்சிது. அப்பிடீன்னு சொல்றாங்க. எங்காத்தா சாபம் விட்டா இமய மலையே இல்லாம போகும்னு சொன்னா யாரும் நம்புவாளா?

 
At Sunday, 20 November, 2005, சொல்வது...

//காலையில் எழுந்ததும். தாலியை கண்ணில் ஒற்றிக் கொண்டு விட்டு, கணவனின் காலைத் தொட்டு கும்பிட்டு விட்டு, தலைக்கு குளித்த தலையுடன், கையில் பெட் காப்பியுடன் கணவனை நாணத்துடன் எழுப்பும் பெண்களையே பார்த்து வளர்ந்தவன்//

அட அக்கா,
இப்படித்தான் நானும் இத்தன நாள் நினச்சுகிட்டிருந்தேன். நீங்க என்னடான்னா புதுசா குண்ட தூக்கி போடறீங்களே? இது அடுக்குமா?

 
At Sunday, 20 November, 2005, சொல்வது...

ரொம்ப சரியான சஜெஷன் தான் உஷா...என் கணவருக்கு அப்பப்ப தஙவேலு ஜோக்க சொல்லி சரி பண்ணர்துண்டு(பின் தூங்கி முன் எழுவாள் பத்தினி).....அம்மாம் பெப்சி உஷா கூட ஏதோ கேள்வி பதில் எழுதினப்போ எனக்கு heartattack வந்துவிட்டது.!!!!! iam totally amazed when people do these things.....!!!

ராதா

 
At Sunday, 20 November, 2005, சொல்வது...

என்ன தான் பெண் சுதந்திரம் பெற்றாலும், தான் இன்னும் அந்த ஆளுமையின் கீழ் தான் இருக்கிறோம் என்று கருதுவதாலே, அதிலிருந்து பெண்ணினம் முற்றிலும் விடுபட இது போன்ற அவள் விகடன் மற்றும் பெண் பத்திரிக்கைகள் இன்னும் தேவை படுது.(அறிவுரை சொல்ற மாமிகள் எத்தனை பேரு, ஹவுஸ் கோட்டுடன் பின் தூங்கி விழித்து காப்பி போடுமாறு சொல்றாங்கன்னு தெரியல்ல!)

விளம்பரத்தில இருந்து, டிவி சீரியல்ருந்து, பத்திரிக்கை யிலிருந்து, சினிமா மற்றும் பல இத்யாதிகள் வர, 'பொம்பளங்களை கவர் பண்ற மாதிரி செய்ங்க'ன்னு அவர்கள் தனித்துவத்தில் கவனம் செலுத்துவது வியாபர உத்தி, ஏன்னா, இதல கொண்டி புருஷன் சம்பாத்தியத்தை கொட்ற ஆளுங்க ஜாஸ்தி (விகடன் குழுவை கேட்டுப்பாருங்க), அப்படியே வந்தாலும் எந்த பயலும் 'அவன் விகடன்' வாங்க மாட்டான்

இன்னொன்னு,
//செயகுமார், இணையத்தில் ஒருவர் " சோழ நாட்டில் மழை பெய் என்றால் பெய்ய வைத்த கண்ணகிகள் வாழ்ந்த நாடு" என்று
சொல்லியிருந்தார்.//- மூணு பேத்தை பத்தில்ல சொன்னாங்க கீழே பாருங்க:-)

கொண்டான் குறிப்பு அறிவாள் பெண்டாட்டி;
கொண்டனசெய் வகை செய்வான் தவசி; கொடிது ஒரீஇ,
நல்லவை செய்வான் அரசன்; - இவர் மூவர்,
'பெய்' எனப் பெய்யும் மழை

 
At Sunday, 20 November, 2005, சொல்வது...

உண்மைதாங்க, இப்ப எங்க வீட்டிலையே எடுத்துக்கோங்களேன், எங்கக்காவை மாஸ்டர்ஸ் படிக்க வைச்சவங்க, நான் நல்லா படிச்சிருந்தும்(அப்படித்தான் சொல்லிக்கிட்டாங்க) ஒரே சமயத்தில் இரண்டுபேரையும் படிக்க வைக்கமுடியாத சூழ்நிலையால் என்னைய வேலைக்கு அனுப்பிட்டாங்க. படிக்கிற வயசுல (20) நான் எங்கையோ ஒரு மொழி தெரியாத காட்டில வேலைசெஞ்சேங்க, எங்க அம்மா அப்பாவுக்கெல்லாம் பயம் எங்க தன் பொண்ணை படிக்க வைக்கலன்னா, மகளீர் போலீஸ் கிட்ட எங்கக்கா புடுச்சிகொடுத்துற்மோன்னு.

ஆனா நான் ஏமாளி, எனக்கு யாரைத்தெரியும், யார் எனக்கு உதவிபண்ணுவா, முதல்ல NDTV வருமா சொல்லுங்க உதவுறதுக்கு. இப்பக்கூட எங்கப்பா அம்மா மேல கேஸ் போடமுடியுமான்னு தெரியலை. இதுக்கெல்லாம் சரியான தீர்வு அவன் விகடனால கிடைக்கும்னா நிச்சயமா வரணும்.

அவ (எங்கக்கா) இன்னும் இன்னும் படிக்கிறேன்னு கல்யாணம் பண்ணிக்க மாட்டேங்கிறா, வூட்டுலையோ அவளுக்கு அப்புறம் தான் நமக்கு கல்யாணம் பண்ணுவேன்னு கண்டிப்பா சொல்றாங்க. காதலிச்சு கூட்டிக்கிட்டு ஒடிப்போயிரலாம்னா நம்மலை யாரு காதலிக்கிறேங்கிறா சொல்லுங்க(இதுக்கும் வழக்கு போட முடியுங்களா? தெரியலை) ஆனா எல்லா ஆண்களும் அவன் பத்திரிக்கையை வாங்குவாங்கன்னு நான் உத்திரவாதம் தரமுடியாது வெளிக்கண்ட நாதர் மாதிரி, ஆனா நல்லா விற்பனையாகும் அதான் எங்கள் சகதர்மினிகள் இருக்காங்களே. அவங்க நிச்சயமா படிப்பாங்க.

 
At Sunday, 20 November, 2005, சொல்வது...

'அவள் விகடன்' வகைப் பத்திரிகைகள் மீது எனக்குத் தீவிர விமர்சனமுண்டு. அழகுக் குறிப்புகள், சமையல் குறிப்புகள், குழந்தை வளர்ப்பு, Agony Aunt பகுதி, Fair & Lovely விளம்பரங்கள் என்று இன்னும் எவ்வளவு நாள் அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருப்பார்கள் என்று நினைத்திருக்கிறேன். ஒரு வேளை இவையெல்லாம் பயனுள்ளவையாக இருக்கலாம், எனக்குப் புரியாத வகையில். இந்நிலையில் 'அவனு'க்கு வேறு ஒரு விகடனா?

 
At Sunday, 20 November, 2005, சொல்வது...

உங்கள் ஆவலுக்கேற்ப வந்தாச்சு அவன் விகடன்!!!!!!

நீங்கள் எதிபார்த்ததும் அதற்கு மேலும்!!!!!!!!!!!!!!!!!

 
At Monday, 21 November, 2005, சொல்வது...

வாய்ஸ் ஆப் விங்ஸ்! அவள் விகடன் ஓரளவு பரவாயில்லை. சில கட்டுரைகள் உண்மையில் நல்லா இருக்கு. ஆனால் என் டயரி
என்று ஒன்று வருகிறது. ஆரம்பத்தில் நன்றாக இருந்தது, இப்பொழுது சூப்பர் காமடியாய் போய்விட்டது. பினாத்தலார் அதையேதான்
காப்பியடிச்சியுள்ளார் ;-)
மங்கையர் மலர் ரமேஷ் மஞ்சுளா போனதும் நன்றாக இல்லை. பொதுவாய் சென்னைக்குப் போனால் கண்ணில் விழுவதுதான்.
பெண்களுக்கு என்று ஒன்று தனியாய் வேண்டியதே இல்லை. ஆங்கிலத்தில் விமன்ஸ் ஈரா ஒரு மாதிரி என்றால் பெமீனா கண்ராவி.

ராமநாதரே, மனச தேத்திக்குங்க, வேற வழியில்லை.

ராதா, கோலங்கள் "அபி" வழங்கிய கவுன்சிலிங் விகடனில் சில வாரங்கள் வந்தது. கேள்வி கேட்டவர்களும் அபி, அபி என்று
வழிய தலையில் அடித்துக் கொண்டால் நமக்குதான் தலையை வலிக்கும்!

 
At Monday, 21 November, 2005, சொல்வது...

செயகுமார் மற்றும் வெளிகண்ட நாதரே! நாங்கள் இபப்டியும் போக முடியாமல் அபப்டியும் போக முடியாமல் இணையத்தில்
மட்டும் பெண்ணுரிமை பேசுபவர்கள். ஆனால் இந்த காலத்தில் கல்யாணம் செய்துக் கொண்டு, அவளும் அதெ ஐ.டி கம்பனிகளில்
கை நிறைய சம்பளமும் அதே நேரம் வேலை பளுவில் அவதிப்பட்டுக் கொண்டு இருப்பவர்கள் வாழ்க்கையில் ஈகோ பிரச்சனையுள்ளது. பல ஆண்கள் தன் தாயுடன் கம்பேர் செய்து பிரச்சனை செய்கிறார்கள். இதை பெரியதாக்குவதில் இதில் இரு பக்க பெற்றோர்களின் கைங்கரியமும் உண்டு.
இந்த காலத்திலும் வீட்டு வேலை செய்வதை அசிங்கமாய் நினைக்கும் ஆண் குல திலகங்கள் உண்டு.

 
At Monday, 21 November, 2005, சொல்வது...

மோகன் தாஸ் உங்கள நெனச்சா பாவமாத்தான் இருக்கு! கவலைப்படாதீங்க, சீக்கிரம் நல்ல வழி பிறக்கும் :-)
சுரேஷ்,பார்த்து, காப்பி ரைட் பிரச்சன வரப் போகுது.

 
At Monday, 21 November, 2005, சொல்வது...

ஏன் ஒரு கூட்டு பதிவு துவக்கலாமே !

 
At Monday, 21 November, 2005, சொல்வது...

உஷா,

நானே இதைப்பற்றி ஒரு பதிவு போடவேண்டுமென்று ரொம்ப நாளாக யோசித்துக் கொண்டிருந்தேன். "மேல் கைண்ட் அன்பர்களுக்கு" என தொடர் ஆரம்பிக்கலாம் என எண்ணியிருந்தேன். தற்போதைய காலத்திற்குத் தேவையான ஒரு விஷயம் இது. கூட்டுப் பதிவு ஒரு சிறந்த வழியாக இருக்கலாம் என தோணுகிறது. பெனாத்தல் சுரேஷும் கலக்கியுள்ளார். ஆனால் யார் 'அவன் விகடன்' காசு கொடுத்து வாங்குவார்கள் என தெரியவில்லை. இது மாதிரி பத்திரிக்கைக்கு அனுராதா ரமணன், சிவசங்கரி, இந்துமதி போன்றோர் சிறப்பாக எழுதுவார்கள் என தோன்றுகிறது. பாலகுமாரனையும் ஒரு தொடர் எழுத வைக்கலாம். சுகி சிவம், கு.ஞானசம்பந்தன், சாலமன் பாப்பையா, லியோனி போன்றோருக்கு சில பக்கங்கள்.

- அலெக்ஸ்

 
At Monday, 21 November, 2005, சொல்வது...

அலெக்ஸ்ஜி, ரவியாவும் அதே தான் சொல்கிறார். ஆரம்பிங்க, ஆரம்பிங்க நாங்களும் வந்து ஜாலியா படிச்சிட்டுப் போகிறோம்.

 
At Wednesday, 23 November, 2005, சொல்வது...

உஷா,
`அவன் விகடன்' லோகோவாக `அடங்கு அல்லது அடக்கு'ன்னு போட்டிடலாம். இப்போ நிறைய பேர் முதல் வகையைத்தான் தேர்ந்தெடுக்கிறதாகக் கேள்வி!!!

 
At Wednesday, 23 November, 2005, சொல்வது...

ஒரு நூற்றாண்டிற்கும் முன் நீங்கள் பதிந்திருக்கனுமிதை.

ஆணும் பெண்ணும் சமமாக உழைக்கவும்,
பாரம் சுமக்கவும்,
இன்பம் துய்க்கவும் பழகிக் கொண்டு விட்டனர் இன்று.

இன்னமும் அவள் வேறு அவன் வேறு என்று
பார்த்துப் பார்த்துப் பேசும்
உங்களின் மனம் ஒரு நூற்றாண்டிற்கும் முன்னால்....

உறங்கிக் கொண்டிருக்கிறது.....

 
At Thursday, 24 November, 2005, சொல்வது...

ரொம்ப லேட்டா சொல்லியிருக்கீங்க.... :-)))

//ஆனால் இரவெல்லாம் மெளனமாய் கண்ணீர் உகுத்து தலையணையை நனைக்கும் நம் ஆண் குல திலகங்களின்//
ஆஹா கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்க....

//வயசு பசங்களை உய்விக்க வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன//
"இளைஞர் மனமறிந்த மங்கையர்க்கரசின்னு" உங்களுக்கு பட்டம் கொடுக்கலாமா?

"அவன் விகடன்" புத்தகத்தில கூட நம்மாளுங்க சினிமா நடிகை அட்டைப் படம் போடுவாங்க......

 
At Thursday, 24 November, 2005, சொல்வது...

தாணு, 'அடங்கு" வேற வழியில்லாமல் :-)

கோ.ராகவன், அட்டைபட மேட்டரை பினாத்தல் சுரேஷ்க்கு சொல்லியிருக்கணும்.

நண்பரே, ஒரு நூற்றாண்டுக்கு முன்பே எல்லாம் மாறிவிட்டது என்றா சொல்கிறீர்கள்? அப்படி என்றால் சந்தோஷமே!

 
At Thursday, 24 November, 2005, சொல்வது...

Dear Usha

ungal valaippathvaip paRRi(ezuththu viyaabaarikaL) intha vaara kalkiyil ezuthi irukkiRaarkaL.

 
At Saturday, 26 November, 2005, சொல்வது...

உஷா,
உங்க பதிவு எத்தனை பேரை சிந்திக்க வைத்ததோ தெரியவில்லை. பெனாத்தலாரை வித்தியாசமா சிந்திக்க வைத்து ஒரு நல்ல நகைச்சுவைப் பதிவை போட வைத்தது.
very nice
அன்புடன்...ச.சங்கர்

 
At Saturday, 26 November, 2005, சொல்வது...

உஷா,
உங்க பதிவு எத்தனை பேரை சிந்திக்க வைத்ததோ தெரியவில்லை. பெனாத்தலாரை வித்தியாசமா சிந்திக்க வைத்து ஒரு நல்ல நகைச்சுவைப் பதிவை போட வைத்தது.
very nice
அன்புடன்...ச.சங்கர்

 
At Sunday, 27 November, 2005, சொல்வது...

வண்டு, என்ன போட்டிருக்காங்க கல்கிலன்னு கொஞ்சம் சொல்லக்கூடாதா?

உஷா, நீங்க நினைக்கிற அளவுக்கு மோசமாகவெல்லாம் இந்தக் கால பசங்க இல்லை. நீங்க சொல்லிக்கிட்டு இருக்கிறது 35+ ஆண்கள்ல வேணா இருக்கலாம், அவங்களெல்லாம் இதுக்கு முந்தைய தலைமுறை. அவங்களுக்கு எத்தனை விகடன் போட்டாலும் மாற மாட்டங்க. அதுக்கு அடுத்த தலைமுறை எவ்வளவோ மாறியாச்சு. பொண்டாட்டிக்கு உடம்பு சரி இல்லைன்னா அவளை ரெஸ்ட் எடுக்கச் சொல்லி தான் வேலை செய்யிற ஆண்கள் இப்போ நிறைய.

 
At Sunday, 27 November, 2005, சொல்வது...

சங்கர், நல்லா இருக்குன்னு பினாத்தலாரையும் சொன்னா எப்படி :-)

ராசா, அதே, அதே! வண்டார் அதைப் பற்றி சொல்லவில்லை. கல்கில என்ன வந்தது? கால் வரியா, அரைவரியா என்று எனக்கு தெரியாது.

//பொண்டாட்டிக்கு உடம்பு சரி இல்லைன்னா அவளை ரெஸ்ட் எடுக்கச் சொல்லி தான் வேலை செய்யிற ஆண்கள் இப்போ நிறைய//

சொந்த விஷயம் எல்லாம் பொதுல பேசக்கூடாது தம்பி ;-)

 
At Sunday, 27 November, 2005, சொல்வது...

//சொந்த விஷயம் எல்லாம் பொதுல பேசக்கூடாது தம்பி ;-) //

அட, நான் பொதுவா நடக்கிற விஷயங்களைச் சொல்றேன். அப்படியே சொந்த விஷயமா இருந்தால் தான் என்ன? நாம நாலு பேருக்கு ஒரு ரோல் மாடலா இருந்தா சரி தான். எனக்கு தெரிஞ்ச பல இடத்திலே இப்படி உதவுறாங்க. அதுவும் சொந்தத்தை எல்லாம் பிரிஞ்சு வெளில வந்துட்டா "உனக்கு நான் ஆதரவு, எனக்கு நீ ஆதரவு" பாலிசி தான் அதிகமா இருக்கு.

 
At Thursday, 20 April, 2006, சொல்வது...

//கையில் பெட் காப்பியுடன் கணவனை நாணத்துடன் எழுப்பும் பெண்களையே பார்த்து வளர்ந்தவன், ஹவுஸ் கோட்டுடன் பின் தூங்கி விழித்து காப்பி போடுமாறு சொல்லும் மனைவியை புரிந்துக் கொள்ள முடியாமல் தவிக்கிறான்//

என்னை மாதிரி பேச்சுலர்களை எல்லாம் பயப்படுத்துறீங்களே, நியாயமா? -- Sivam

 
At Tuesday, 20 November, 2007, சொல்வது...

நீங்கள் சொல்லும் யோசனை நல்ல யோசனை தான். ஆனால் ஏன் அதை அவன் விகடன் என வைக்கவேண்டும். பிறகு அவள் விகடன் போல அறைத்த மாவையே அறைக்கவேண்டும். வேறு ஏதேனும் பெயரில் வைக்கலாமே. அல்லது ஆண்கள் மீது உண்மையிலேயே கரிசனம் உள்ள பெண்களே ஆரம்பிக்கலாமே!

 
At Tuesday, 20 November, 2007, சொல்வது...

மஞ்சூர் ராஜா, நீங்கள் ஓரிஜனலா போலியா என்று தெரியாத நிலையில், தவறாக ஒன்றும் இல்லை
என்பதால் உங்கள் பின்னுட்டத்தை அனுமதிக்கிறேன். மற்றப்படி உங்க்ள் சஜஷன் அருமை.

 
At Wednesday, 27 August, 2014, சொல்வது...

நாங்கள் வேலைக்கு செல்கிறோம். நீங்கள் காலையில் எழுந்து எங்கள் கால்களை தொட்டு வணங்கி , எங்களால் கட்டப்பட்ட தாலியை கண்ணில் ஒற்றி வீட்டு வேலை முடித்து நாங்கள் பணிகளை முடித்து களைப்போடு வீடு வரும் போது உங்களை அலங்காரம் செய்து தயாராக இருக்க தயாரா? நாங்கள் வேலைக்கு சென்று குடும்பத்தை காப்பாற்ற தயார்.

 

Post a Comment

<< இல்லம்