சத்தம்
முணங்கலாய் ஆரம்பித்த
சத்தம் மெல்ல மெல்ல
பலரும் சேர வலுக்க ஆரம்பித்தது
இதுவரை கேட்டறியாத
அந்த சத்தங்கள்
யாருக்கும் பிடிக்கவில்லை
ஏன் அலறுகிறார்கள் என்று
பல முகங்கள் சுழித்தன
அவர்களோ அதை சட்டை செய்யாமல்
தங்கள் குரலை மேலும் உயர்த்தினர்
சிரிக்கிறார்கள் உங்கள் கூச்சலைப்
பார்த்து என்று எச்சரிக்கை வந்தது
வாயை திறந்து பழக்கமில்லை கொஞ்சம்
புரிந்துக் கொள்ளுங்கள் என்று பதில் வந்தது
எங்களைப் போல நாகரீகமாய்
பேச பழகிக் கொள்ளுங்கள்
என்று அறிவுரை சொல்லப்பட்டது
பல நூறு ஆண்டுகள் கட்டப்பட்ட
தொண்டையிலிருந்து வரும் முதல்
சத்தங்கள் நாராசமாய்தான்
உங்கள் காதில் விழும்
பிறகு பழகி விடும் என்றார்கள்
ஓவென்று சிரித்து கூச்சலிட்டப்படி!
11 பின்னூட்டங்கள்:
ஆதிக்கம் செய்த வம்சங்களுக்கு அடிமைகளின் விடுதலைக்குரல் நாகரீகமற்றுத்தான் இருக்கும். அந்த ஆதீக்க சக்திகளின் நாகரீகப்பட்டங்கள் குப்பைக்கு சமம். விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் விடுதலைக் குரல்கள் ஓங்கி ஒலிக்கத்தான் செய்யும்.
சேறள்ளி தெளித்து விட்டு ஓடி ஒளிந்து கொள்ளும் கோழைகள் அல்லர் அவர்கள். ஆகையால் சத்தம் ஓங்கி ஒலிக்கத்தான் செய்யும்.....
சத்தம் சங்கீதமாக மாற வாழ்த்துக்கள். (நாராசமாய் போகாமாலிருந்தால் சர்தான்.)
உஷா,
நீங்கள் கவிதை, கதை என பல தளங்களிலும் இயங்குவீர்கள் என
நண்பர் இசாக் முன்னமே கூறியிருந்தார் என்றாலும் - இப்பொழுது தான்
முதன்முதலாக கட்டுரைகள் அல்லாமல் - கவிதை ஒன்றை வாசிக்கிறேன் -
நீங்கள் எழுதியது.
முதலில் -
கவிதை புதுக்கவிதையின் வடிவ, உள்ளடக்க விதிகளுக்குட்பட்டு சிறப்பாக
இருக்கிறது.
பாராட்டுகள்.
ஆனால், இந்த வடிவத்தை விட்டுவிட்டு, உள்ளடக்கத்திற்கும் அதில் தொனிக்கும்
கவிஞனின் குரல் பற்றியும் பார்த்தால் - மீண்டும் கவிஞனின் குரலிலிருந்தும் வேறுபட வேண்டியதிருக்கிறது.
மகாபாரதத்தில் வரும் திருதராஷ்டிரியனைப் பார்த்து ஒரு விமர்சனம் வைப்பார்கள் -
தருமத்துக்கும், பிள்ளை பாசத்திற்கும் இடையே ஊடாடும் ஒரு அப்பாவி பெரிய மனிதரென்று.
அதாவது -
அவருக்கு பாண்டவர்களுக்கு இழைக்கப்படும் அநீதியில் உடன்பாடுமில்லை.
ஆனால், அதற்காக தன் மூத்த மகனைக் கண்டித்து, அடக்கி, நடவடிக்கை எடுக்க மனமுமில்லை.
இது வழமையான பெரிய மனிதத் தோரணம். இந்தக் கவிஞனும் (அவன் பேசும் உயர்ந்தவர்களில் பலரும்)
அப்படியான ஒரு வளையத்திற்குள் சிக்கிக் கொண்டு அவதியுறுவதாகத் தான் தோன்றுகிறது.
இந்தக் கவிஞனுக்கு எளிய தாழ்ந்த இனத்து மக்கள் மீது இருக்கும் அக்கறையும் காட்ட வேண்டிய ஆவலிருக்கிறது.
ஆனால், அதே சமயம் அவர்களைத் தங்களுக்கு சமமாகப் பாவிப்பதையும் ஏற்க இயலாதிருக்கிறது.
முனகலான குரல் - பல வருடங்களாக அடிமைப்பட்டு ஒன்றிணைய இயலாத தனித்த குரல் என்று அடையாளம்
காட்டி, பலரும் சேர வலுத்து பலருக்கும் பிடிக்காத சப்தத்தை என்று யதார்த்தத்தை எளிதாகச் சேர்த்து, தொடக்க வரிகள்
அட்டகாசமாக அமைந்து விட்டன.
ஆனால், அதை அலறலாக அடுத்த வரியில் மாற்றிக் கொண்டதும், முகச்சுழிப்புற்றதும், அடுத்தவர்கள் சிரிக்கிறார்கள்
என்று நையாண்டியுடன் எச்சரிக்கை செய்ய முயற்சித்ததும், முதன்முதலாக பேசும் வாய்ப்பு - சப்தமாக இருக்கிறது என்று
அவர்கள் பவ்யமாக சொல்வதும்,
கவிஞன் தான் சார்ந்த உயர்ந்தவர்களின் மனநிலையினைத் தெளிவாகத் தான் சொல்கிறான். எத்தனை காலமானாலும் - தாங்கள்
சார்ந்த சாதியை விட்டுக் கொடுக்கப் போவதில்லை. தன்னைப் போல் நாகரீகமாக நடந்து கொள்ளுங்கள் என்கிறான்.
இங்கு தான் கவிஞனின் சாதீயப்பார்வைகள் கூர்மையடைகின்றன. தன் வாழ்வே நாகரீக வாழ்வு என்று நிறுவ எத்தனிக்கிறான்.
பிறருடைய வாழ்க்கை முறையை சற்றேனும் கூட ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை. தன் வாழ்வே நாகரீகம் என்ற சாதியத் திமிர்
தொனிக்கிறது அவனது குரலில். அவன் ஒரு சமூகத்தின் பிரதிநிதியாக இருக்கும் பட்சத்தில் இன்னமும் அந்த சமூகம்
அந்த திமிர்த்தனத்துடன் தான் இயங்கி வருகிறது என்று அவனது குரல் - கொஞ்சமும் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கிறது.
அப்பொழுதும் அந்த மக்கள் சொல்வது - பல வருடங்களாய் கட்டப்பட்ட குரல் - சாதகம் செய்யாது - வாசிக்க இயலாது - கிசுகிசுப்பாய்
சுவர்களுக்கிடையே மட்டும் ஒலித்துக் கொண்டிருந்த அந்த கரடு முரடு மனிதர்களின் குரல் கொஞ்ச நாட்களில் பழகி விடும் என்கிறார்கள்
ஆனால் அதையும் சிரித்து எழுப்பும் கூச்சலாகப் பார்க்கும் கவிஞனின் அச்சம் மிகுந்த குரல் -
திருதராஷ்டிரனைத்தான் நினைவு படுத்துகிறது,
மனித நீதியின் பக்கமாகப் போவதா?
இல்லை, தன் சாதியத்திமிரினுள் அடங்கி அதையே வெளிப்படுத்திக் கொள்வதா?
கவிஞனின் குரல் தான் பதில் சொல்ல வேண்டும்....
முதலில் இது கவிதைதான் என்று ஒத்துக் கொண்ட உங்கள் மூவருக்கும் என் நன்றிகள் :-)
கவிதை எழுதுவது சுலபமில்லை, இதுவரை நான் கவிதை என்று நினைத்து எழுதியவை நாலைந்துதான். அதையும் படித்துவிட்டு,
சூப்பர் என்று சிலரும், வேண்டாம் இந்த விஷபயிற்சி என்றும் சிலர் தடுத்ததால் இவற்றின் பக்கமே போவதில்லை. ஆனால்
அன்றிருந்த மனநிலை என்னை எழுத தூண்டியது அல்லது ஒரு கவிதை தானே எழுதிக் கொள்ளும் என்றும் சொல்லலாம் :-)
நண்பன், கவிதை பற்றி- ஒருமுறை தோழி தேன் துளி பத்மா- பெண்களும் சாதி,மதம் என்ற போர்வையில் ஒடுக்கப்பட்ட வர்க்கம் போல என்றார். நான் பெண்களை நினைத்து எழுதியதை நீங்கள் ஒடுக்கப்பட்ட சமூகம் என்ற பொருள் கொண்டது பத்மா சொன்னதை நிரூபிக்கிறது.
ஆரம்பத்தில் முணங்கலாய் ஆரம்பித்து, மெல்ல துணை குரல்கள் எழுந்து, பணிவாய் தங்கள் நிலைமையை சொல்லி கடைசியில்
இணைந்த கூட்டம் தந்த தைரியத்தில் நக்கலாய் எதிர்ப்பை வெளிபப்டுத்துகிறார்கள் என்ற பொருளில் எழுதினேன்.
பெண்களை ஆரம்பத்தில் எட்டு படிப்பு கெடுத்துவிட்டது என்று முகம் சுழித்தார்கள். உரிமைக்கு குரல் உயர்ந்தப் பொழுது
கத்தாதே என்றார்கள். எழுத்தில் உரத்த குரல் எழுந்தப் பொழுது நாசுக்கு இல்லை, நாகரீகமில்லை என்கிறார்கள்.
குடும்பத்தில் தோழி தாணு சொன்னத்தைப் போல வேறு வழியில்லாமல் "அடங்கு" என்ற நிலைமை என்றாலும், பொதுவில் பெண்களின் குரல் கேலியாய்தானே பேசப்படுகிறது. எங்கோ ஓரிரு இடத்தில் தரப்படும் இடம் கூட இட ஒதிக்கீடை கடைப்பிடிக்கிறோம் என்று காட்டத்தான். மந்திரிசபையில் சிறுபான்மையினருக்கு பங்கு தருவதைப் போல :-)
எனக்கு கவிதைகள் அதிகம் பிடிப்பதில்லை. புரிவதில்லை என்பது தான் காரணம் என்று தோன்றுகிறது.ஆனால் இந்த கவிதை நன்றாகவே வந்துள்ளது..வாழ்த்துக்கள் உஷா.
ஆனால் கவிதையோ அல்லது ஒரு படைப்போ தானாகவே எழுதிக்கொள்ளும் என்றோ நிகழும் என்றோ எனக்கு தோன்றவில்லை.
அப்படி கிடையாது முத்து, ஒரு கவிஞனின் சாதீய உணர்வுகளோ, இல்லை அவன் சார்ந்துள்ள சமூகத்தின்/இயக்கத்தின் உணர்வுகளோ அவனுடைய, கதை சொல்லியை, கவிதை சொல்லியை பாதிக்கக்கூடாது அவனுடைய தாக்கம் அவன் படைப்புகளுக்கு இருக்கக்கூடாது. ஒரு கட்டுக்குள்ளோ இல்லை ஒரு அமைப்புக்குள்ளோ கவிதையை அடக்கிவிட முயலக்கூடாது. என்னைப்போன்ற ஆரம்பவாதிகளுக்கு இருக்கும் இத்தகைய குறை உஷா போன்ற பெரிய எழுத்தாளினிகளுக்கு :-)இருக்கக்கூடாது என்றே நண்பன் கூறுவதாக கருதுகிறேன்.
mohandas.
we are sailing in the same boat..that is what i said..
நீங்கள் சொல்வது போல அர்த்தம் எடுத்துக்கொள்ளலாம். ஆனால் தன்னுடைய கொள்கைகளோ சாதி சார்ந்த பார்வைகளோ இயக்கம் சார்ந்த கொள்கைகளோ எழுத்தில் பிரதிபலிக்காமல் யாராலும் எழுத முடியாது. கனவு நிலையிலா எழுதுவீர்கள்?
அல்லது இப்படி சொல்லலாம்.அப்படி வெளிப்படும் கொள்கைகள் நியாயமான கொள்கைகளா இல்லையா என்பதுதான் விவாதிக்கத்தகுந்தது.நண்பன் கூறுவது பொருட்குற்றம்.உஷாவும் பதில் சொல்லியிருக்கிறார்.
நான் சொல்ல வந்தது நம் கருத்தோ எண்ணமோ எதிரொலிக்காமல் நாம் படைப்பது மிகவும் கடினம்(நீங்கள் ஏதோ சொல்லவரும் பட்சத்தில்). நீங்கள் வெறும் சாட்சியாக இருக்கும் சூழ்நிலையை சித்தரித்தீர்கள் என்றால் அது சாத்தியம்.
(உளறி இருக்கிறேன் என்று நினைக்கிறேன்
கவிதையை உணர்வது என்பது வாசகனுடைய பார்வையை பொறுத்தது. அவனுக்குள் கவிதை என்ன மாதிரியான சிந்தனைகளை, வாசிப்பனுபவங்களைத் தோற்றுவித்திருக்கிது என்பதுதான் முக்கியம். அது கவிஞரின் எண்ணத்தோடு ஒத்திருக்கலாம். வேறொரு திசையிலும் இருக்கலாம்.
நம் கருத்தும் எண்ணமும் பிரதிபலிக்காமல் வருவது என்பது எந்தவகையான இலக்கியத்திலும்
சேராது. கவிதையோ, கதையோ படைப்பாளியின் தாக்கம் இல்லாமல் வந்தால் அது போலியே....
ஆளு ஆளுக்கு ஒன்னு சொல்றீங்க. மொத்தமா குழப்பமா இருக்கு! ஆனா கவிதை எழுதிட்டு அதுக்கு பொருள், விளக்கம்
எல்லாம் கொடுக்க கூடாது என்று நிஜமாகவோ சொல்லியிருக்காங்க:-)
நண்பன் எழுதியதற்கு மோகன் தாஸ் பொழிப்புரைக் கொடுத்திருந்தாலும் எனக்கு புரியவில்லை.மதம், சாதி, இனம், அரசியல் என்று எந்த ஒரு பக்கமும் சாராமல் பொது பார்வையில் எழுதக்கூடாதா? எங்கள் குரல் என்று ஆரம்பித்தால், அது பெண்ணீயம் பேசுவதாய் பாகுப்பாடு பார்க்கப்படும் என்பதால் அவர்கள் என்று சொன்னேன்.
ஏதோ கவிதை என்றாவது ஒத்துக் கொண்டீர்களே!
Post a Comment
<< இல்லம்