Friday, December 30, 2005

திரும்பிப் பார்க்கிறேன் - வருடம் 2005

தமிழ் இணையம்- இணையத்தில் தமிழின் வளர்ச்சியைப் பார்க்க, பார்க்க பிரமிப்பாய் இருக்கிறது. நிறைய புதுமுகங்கள், தமிழில் முதல் முறையாய் தட்டச்சு செய்ய ஆரம்பித்தவர்கள் கூட, மிக அருமையான படைப்புகளைப் படைக்க ஆரம்பித்துள்ளார்கள். இணையம் ஒருவகையில் குருபீடங்களை தகர்த்து விட்டது என்று சொல்லலாம். நன்றாக எழுதப்படும் எழுத்து நிற்கும். யார் எவர் என்று எல்லாம் ஆள் பார்த்து, வாழ்த்தாமல் எழுத்தைப் பார்த்து பாராட்டுவது ஆரோக்கியமான வளர்ச்சிக்கு அறிகுறி. ஆரம்பத்தில் பிரபலமானவர்கள் எழுத ஆரம்பித்து, பின்பு விலகி புதியவர்கள் தமிழில் எழுதி பழக்கமில்லாதவர்கள் புதிது புதிதாய் தினமும் வலையுலகில் நுழைவதைப் பார்க்கும்பொழுது, தமிழ் வாழும் என்ற நம்பிக்கை வருகிறது. சங்க தமிழ் போல, இணைய தமிழ் என்று ஒன்று மெல்ல, மெல்ல உருவாகி வருகிறது.

இணையத்தில் எழுத ஆரம்பித்து மூன்று வருடமாகிறது. ஆரம்பத்தில் யாஹ¥ குழுக்களில், முக்கியமாய் மரத்தடி குழு என்னைப் போன்ற கத்துக்குட்டிகளுக்கு எழுத, நல்ல இடத்தை தந்தது. மிக அருமையான, ஒத்த சிந்தனையுள்ள நட்பு வட்டம், எழுத தந்த ஊக்கம்தான் இன்னும் இணையத்தில் குப்பைக் கொட்டுவதன் காரணம்.

இன்று இந்த குழுக்களின் பரிணாம வளர்ச்சியே தனிக்குடித்தனமாய் பிரிந்துப் போன வலைப்பதிவுகள். இதன் வளர்ச்சிக்கு முக்கிய காரணம் சுதந்திரம், இந்த சுதந்திரமே சில சமயம் வழி மாறிப் போகவும் செய்தது. ஆனால் உண்மையில் எழுத வேண்டும் என்ற ஆர்வத்துடன், சிந்தனையுடனும் முயற்சி செய்பவர்களுக்கு வலைப்பதிவுகள் ஒரு வரப்பிரசாதம்.

ஜோ, மூக்கு சுந்தர், இப்பொழுது பினாத்தல் சுரேஷ்- விகடன் குழும பத்திரிக்கையாளர்களால் இவர்களின் பதிவுகள் படிக்கப்பட்டு, அச்சில் பதிப்பிக்கப் பட்டுள்ளது. ஜெயந்தி சங்கர் அவர்களின் பதிவும் உயிர்மையில் திரு. மனுஷபுத்திரன் அவர்களால் படிக்கப்பட்டு உயிர்மையில் வெளியானது. என் எழுத்தும், அன்றைய அமுதசுரபி ஆசிரியரால் படிக்கப்பட்டு, அமுதசுரபிக்கு எழுத சொன்னார். பதிவு இடுபவர்கள் யார் எங்கு இருக்கிறார்கள் என்று அறியாமல் முழுக்க முழுக்க எழுத்தால் அறிமுகமாகி படைப்புகள் அச்சு பத்திரிக்கையில் வருவது மிக நல்ல விஷயம். ஆக, இந்த வாய்ப்புகள் இனி வரும் காலங்களில் அதிகரிக்கும் என்று நம்புகிறேன்.

அடுத்து பின்னூட்டம். நான் வலைப்பதிவு தொடங்கி, சில மாதங்களே ஆகின்றன. ஆனால் ஆரம்பம் காலம் முதல் ஒரு பதிவு மனதிற்குப் பிடித்தால் உடனே வாழ்த்து அல்லது ஒரு கருத்து தட்டிவிடுவேன். புதிய ஆள் என்றால் வரவேற்பும் உண்டு. பின்னூட்டம் பெற நல்ல வழி. முதலில் நல்ல எழுத்து அடுத்து அடுத்தவரின் அருமையையும் பாராட்டுங்கள், சில வரிகள் விமர்சனமும் எழுதுங்கள். அனாவசியமாய் புகழ்தல், முதுகு சொரிதல் இல்லை. நேரத்தை செலவழித்து தட்டச்சு செய்பவர்களுக்கு இதே ஊக்க டானிக். அடுத்து நீங்கள் எழுதியது நன்றாக இருந்தால், உங்களால் மறுமொழி பெற்றவர்களுக்கு மறுமொழி இட தோன்றும்.

எழுத்து- சிறுகதை ஒன்று அமுதசுரபியில் வந்தது. கட்டுரை ஒன்றும் வந்தது. அவள் விகடனில் புகைப்படத்துடன் சின்ன பேட்டி வந்தது. இப்பொழுது நான் ஆரம்பித்து பினாத்தல் சுரேஷ் வீடு கட்டி ஆடிய " அவன் விகடன்" பதிவு பற்றி அவள் விகடனில் வந்துள்ளது.

படித்தவைகளில் பிடித்தது- இந்திரா பார்த்தசாரதியின் "கிருஷ்ணா, கிருஷ்ணா" மகாபாரதத்தின் கதாநாயகன் கிருஷ்ணனை வைத்து புனையப்பட்ட புதினம்.

பெருமாள் முருகனின் "கூளமாதாரி'" என்னைப் புரட்டிப் போட்ட புதினம் என்றால் மிகையில்லை. இரண்டு நாட்கள் படித்து நினைவில் வந்துக் கொண்டு இருந்தது. நம் நாட்டில் மனித இனத்தில் பிரிக்கப்பட்ட தாழ்ந்த சாதி என்று சொல்லப்படுவர்களின் வாழ்க்கை இப்படியும் இருக்குமா என்ற உண்மை உறைய வைத்தது. இன்னும் எத்தனை நாள் என்ற வருத்தமும் ஏற்பட்டது.

கிருஷ்ணா, கிருஷ்ணா இந்திராபார்த்தசாரதி அவர்களின் எழுத்தின் வீச்சு மயக்கியது என்றால், பெருமாள் முருகனின் யதார்த்தம்
சுட்டது.

பார்த்த படங்களில் பிடித்தது - மம்முட்டி நடித்த "காழ்ச்சா". குஜராத் பூகம்பம் பொழுது, தப்பி கேரளா வந்த சிறுவனின் கதை. ஊர் ஊராய் படம் போட்டு காட்டும் மம்முட்டி கதாபாத்திரமாய் வாழ்ந்துள்ளார். அந்த பிள்ளை, இடிந்த கற்குவியல் ஊடே தன் குடும்பத்தை தேடி கதறுவது, கண்ணைக் குளமாக்கியது. இதன் நாயகிதான் "தவமாய் தவமிருந்து" பத்மப்ரியா.

பேஜ் 3- ஹிந்தி படம். மேல் தட்டு வர்க்கத்தின் வக்கிர, கொடுர முகம். குமட்டுகிறது. அதீத பணம் தரும் போதை. பணத்தால் எதையும் வாங்கலாம் என்ற திமிர்.

பயணம்- குஜராத்தில் சோமநாத், துவாரகா, அட்லஜ், மவுண்ட் அபுவில் தில்வாரா ஜெயின் கோவில் மறக்க முடியாதவை. விரிவாய் எழுத வேண்டும், படங்களுடந்தான்.

சோமநாத் -, எம்.கே. முன்ஷீயின் "ஜெய் சோமநாத்" சின்ன வயதில் படித்ததில் இருந்து, பார்க்க வேண்டும் என்ற ஆவல் நிறைவேறியது. துவாரகா, மிக பழமையான கோவில். கால இயந்திரத்தில் பின்னே பயணித்த உணர்வு.

தில்வாரா கோவில்- உள்ளே புகைப்படம் எடுக்க அனுமதியில்லை. வழிப்பாட்டு தலம், நல்ல கூட்டம். பளிங்கு கல்லில் அபூர்வ சிற்பங்கள்.

அட்லஜ்- அகமதாபாத் அருகில் உள்ள கிணறு. கீழே இறங்க படிகள். சுற்றிலும் கல்லில் கை வண்ணம்.

பிறகு ஒரு வார பயணமாய் கொழும்பு, மலேசியா, சிங்கை பயணம்.

மகிழ்ச்சி- நேரில் பார்த்த இணைய நட்புக்கள்.

சோகம் - அப்படி ஒன்றுமில்லை :-)

திருப்தி- புதிய பதிவாளர்கள். நிறைய பெயர்கள் ஞாபகம் வந்தும், பெயர்கள் விட்டுப் போனால் என்ன செய்வது என்று யாருடைய பெயர்களைக் குறிப்பிடவில்லை.

வேதனை- சாதி, பெண் என்ற அடையாளம் சொல்லி வந்த தாக்குதல்கள்.

வேடிக்கை- முதலில் வேதனையாய் இருந்த அதே தாக்குதல்கள் சில மணி நேரத்தில் காமடியாய் தோன்றியது.

அழுவதா, சிரிப்பதா என்று தெரியாமல் அவதிப்பட்ட செய்தி - சல்மான்கான் துபாயில் ஒரு கார் ஓட்டும் பயிற்சி மையத்தை ஆரம்பித்து வைத்தது.

சாதனை- யோசித்துக் கொண்டு இருக்கிறேன், அடுத்த வருடமாவது சொல்ல முயற்சிக்கிறேன் :-)

அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள். வரும் வருடத்தில் பிரச்சனைகளை எதிர்க்கொள்ளும் மனபான்மையை நன்றாக வளர்த்துக் கொள்ளுவோம். வேறு வழி ?

22 பின்னூட்டங்கள்:

At Friday, 30 December, 2005, சொல்வது...

உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்

 
At Friday, 30 December, 2005, சொல்வது...

உங்களுக்காக Page3 அப்போது எழுதியது, இருந்தாலும் நினைவுகூரலுக்கு உதவும் ;)

 
At Friday, 30 December, 2005, சொல்வது...

இணையம் தமிழின் அடுத்தக்கட்ட வளர்ச்சிக்கு முக்கிய கருவி தான். சந்தேகமில்லை. மற்றபடி தமிழ் எப்படி இருந்தாலும் என்றும் வாழும் தன்மை உடையது.

//சங்க தமிழ் போல, இணைய தமிழ் என்று ஒன்று மெல்ல, மெல்ல உருவாகி வருகிறது.//

சங்கத் தமிழ் இணையத் தமிழ் என்று எழுதுவது தான் சரி :)

 
At Friday, 30 December, 2005, சொல்வது...

இணையத்தில் கொடிகட்டி
இணையில்லா
அவள் விகடனுக்கு
இணையாக
அவன் விகடன்!
விதை போட்டு
கதையும் இங்கே
காட்சியும் இங்கே
கௌரவ ஆசிரியர் உஷா அவர்களே!
வயதில்லை வாழ்த்த
வணங்குகின்றேன் தாழ்மையுடன்
விமர்சனங்கள்
வளப்படுத்தும்
வசீகர எழுத்தை
கமர்சியல் அரசியலுமுண்டு
கமகம சாரமும் உண்டு
எழுதுங்கள் நிறைய
எல்லா நாளும் இனிய நாளே
புத்தாண்டில்
புதுப்பொலிவோடு
புறப்பட்டு வாருங்கள்!

 
At Friday, 30 December, 2005, சொல்வது...

தங்களின் இல்லத்திலுள்ள அனைவருக்கும் இதயங்கனிந்த புத்தாண்டு வாழ்த்துகள்

 
At Friday, 30 December, 2005, சொல்வது...

புத்தாண்டு வாழ்த்துகள் உஷா.

 
At Friday, 30 December, 2005, சொல்வது...

இதயங்கனிந்த புத்தாண்டு வாழ்த்துகள் !!

 
At Friday, 30 December, 2005, சொல்வது...

புத்தாண்டு வாழ்த்துகள் உஷா

 
At Friday, 30 December, 2005, சொல்வது...

This comment has been removed by a blog administrator.

 
At Friday, 30 December, 2005, சொல்வது...

சின்ன வயதில் ஜெய் சோம்நாத் படித்தது. நானும் கூட அந்தக்கோவிலைப் பார்க்க நினைத்துள்ளேன்.
புத்தாண்டு வாழ்த்துகள்!

 
At Friday, 30 December, 2005, சொல்வது...

அங்க இல்ல, இங்கே

ஆண்டு இறுதிங்கறதால கொஞ்சம் கொழம்பிட்டேன். மன்னிக்கவும்.

 
At Saturday, 31 December, 2005, சொல்வது...

நல் புத்தாண்டு வாழ்த்துகள்

 
At Saturday, 31 December, 2005, சொல்வது...

புத்தாண்டு வாழ்த்துகள் உஷா
இந்த வருஷம் நேரா பாருங்க:-)

இட்லி வடை யில் படிச்சு சந்தோஷமாயிருந்தது உஷா.

நான் சொன்னது சரிதானே?
(பர்த்ருஹரி-உள்ளொளி)
இந்த வருஷமாவது ஒத்துக்கோங்க

க்ருபா ஏம்ப்பா எழுதி அழிச்சிட்டீங்க

 
At Saturday, 31 December, 2005, சொல்வது...

உஷா,

புத்தாண்டு வாழ்த்துக்கள்.

'நுனிப்புல்'னு சொல்லிட்டு வருசம்பூரா நடந்ததை இப்படிப் புட்டுப்புட்டு வச்சுட்டீங்க!

நல்ல வருஷமாஇருந்திருக்கு. இனியும் நல்ல வருஷமாவே இருக்கும்.

 
At Saturday, 31 December, 2005, சொல்வது...

பட்டினத்து ராசா, டுபுக்கு, ஞானவெட்டியான், என்னார், ராகவன், க்ருபா, பாபா, துளசி! நன்றி.

நாராயணா! நல்லப்படம் என்று சொல்லப்படும் படங்களின் விமர்சனத்தை ஆழ்ந்து படிக்க மாட்டேன் :-) இப்பொழுது படித்தால் " கதவை ஒழுங்காய் சாத்திக் கொள்" என்ற வசனம் என்னக் கவர்ந்ததுப் போல, உங்களுக்கும் ப்டித்த இடம் என்று தெரிந்தது.

தங்கமணி, படங்களுடன் விவரமாய் எழுதிகிறேன். கதைப் படித்த மோகத்தால், மனம் பழைய நினைவுகளில் ஓடம் எழ மனமில்லாமல் அப்படியே உட்கார்ந்திருந்தேன்.

ரவிசங்கர் உங்களுக்கு ஒரு ஸ்பெஷல் நன்றி. இப்பொழுது கண்டுக்காதீங்க, அவசரமாய் தட்டச்சு செய்கிறேன்.

மது, நன்றி

சிங், ஆனாலும் இப்படி பீதியைக் கிளப்பக்கூடாது :-))))

 
At Saturday, 31 December, 2005, சொல்வது...

புத்தாண்டு வாழ்த்துக்கள்

 
At Saturday, 31 December, 2005, சொல்வது...

இட்லிவடையில் உஷா பற்றி வந்துருந்ததுக்கு முதலில் தவறான முகவரி குடுத்துட்டேன் மதுமிதா. அப்பறம் காத்தாலதான் பார்த்தேன், தப்பா இருந்ததை. சரின்னு அதை அழிச்சுட்டு சரியான URLகுத்தேன் . மாடரேஷன்ல இருக்கறதால இன்னும் இங்க வரலை. உஷா பார்த்த அப்பறம் அந்த புது கமெண்ட் வரும்.

 
At Saturday, 31 December, 2005, சொல்வது...

Hi every1,
puthu varuda valthukal!!! (usha thani pathivu podamal unga post la ellarukum wish panran sowie.)

 
At Sunday, 01 January, 2006, சொல்வது...

புத்தாண்டு வாழ்த்துகள் உஷா

 
At Sunday, 01 January, 2006, சொல்வது...

ம்,.. நல்ல யோசிச்சு எழுதியிருக்கீங்க.
படிக்க சுவையா இருக்கு.

ச்சின்ன ஒரு கரெக்ஷன் ப்ளீஸ்,..
உயிமையில் என் முதல் கட்டுரை வந்தது
அக்டோபர் 2004
2005 இல்லையே,.. : )

 
At Monday, 02 January, 2006, சொல்வது...

மதுமிதா, க்ருபா சொன்னதைப் படித்துவிட்டீர்களா? ( ஒரு சின்ன சம்சயம், மேல்கைண்ட் பசங்க கைவரிசைதானோ "இட்லிவடை"?)

தருமி, சிநேகிதி, சிவா நன்றி

ஜெயந்தி, நன்றாக ஞாபகம் இருக்கிறது, ஆனால் பொதுவாய் இணையம் மூலம் அச்சு பத்திரிக்கைகளின் மோதிர குட்டு கிடைக்கும் என்ற எண்ணத்தில் எழுதினேன்.

 
At Wednesday, 04 January, 2006, சொல்வது...

ஒரு சின்ன சம்சயம், மேல்கைண்ட் பசங்க கைவரிசைதானோ "இட்லிவடை"?

ஆ, உங்க வலைப்பதிவுல கூடதான் நிறைய உண்மையெல்லாம் எழுதறீங்க? அதுக்காக உஷாவும் இட்லிவடையும் ஒன்னாகிடுமா?

 

Post a Comment

<< இல்லம்