Tuesday, December 20, 2005

கிழவி

கிழவி
எண்பது வயதை தாண்டி விட்டால், வயதானவர்கள் குழந்தைகளாக மாறி விடுகிறார்கள். குழந்தைகளை ஏற்றுக் கொள்ளும் நாம், வயதானவர்களை அலட்சியப்படுத்துகிறோம். பெரும்பாலோருக்கு வயது ஆக, ஆக உடலே சுமையாக மாறிவிடுகிறது. வீட்டில் பேச யாரும் இருப்பதில்லை. அப்பார்ட்மெண்ட் வாழ்க்கை ஏறக்குறைய ஜெயில்தான்.

தன்னுடைய அதிகாரங்களை இழந்து, பிறர் கையை எதிர்பார்த்து வாழும் வாழ்க்கை அனேகருக்கு கசந்துப் போய்விடுகிறது.
மரணத்தை எதிர் நோக்கி கசப்புடன் வாழ் நாளை தள்ளுபவர்களை காணும்பொழுது வருத்தமாய் இருக்கிறது. மகாபாரதத்தில்
திருட்ராஷன், தன் மனைவியுடன் காட்டுக்கு செல்ல முடிவெடுக்கும் கட்டம், கூட குந்தியும் விதுரனும் சேர்ந்துக் கொள்ளுகிறார்கள். அரண்மனைவில் எல்லா வசதியுடன் வாழ்பவர்கள் ஏன் காட்டுக்கு சென்று உயிர் துறக்க முடிவெடுக்கிறார்கள்?

அதேப் போல, பஞ்ச பாண்டவர்களும் திரெளபதியுடன் மரணத்தை தேடி செல்கிறார்கள். இவை தற்கொலை தானே? இந்து தர்மத்தில் பிரம்மசரியம், கிரகஸ்தம், வானபிரஸ்தம், சந்நியாசம் என்று நான்கு கட்டமாய் வாழ்கை பிரிக்கப்பட்டுள்ளது. வானபிரஸ்தம், வயதானதும் காட்டுக்கு சென்று வாழ்வது. ஆக பிள்ளைகளை பிரிந்து முதியோர் விடுதியில் சேருவது சரிதானே?

ஆனால் சில வயதானவர்கள், வாழ்க்கையை அனுபவிப்பது பார்க்க பார்க்க சுவாரசியமாய் இருக்கும். குழந்தைதனமான சுயநலம் ஏற்பட்டு தன்னுடைய செளகரியத்தை மட்டுமே சிந்திக்கும் நிலைமைக்கு வந்துவிடுவார்கள். பார்க்கும்பொழுது, நாமும் அந்த வயதில் அப்படிதான் மாறி விடுவோமோ என்ற எண்ணம் எனக்கு தோன்றும்.

இந்த கதை நான் மிகவும் அனுபவித்து எழுதியது. காரணம் இத்தகைய கிழவிகளை வாழ்க்கையில் பார்த்ததுதான் :-)


கிழவி


தன்னைத் தாண்டிக் கொண்டு உள்ளே விரையும் உருவத்தைப் பார்த்து ," யார்ரீ அது? " கண்ணை இடுக்கிக் கொண்டுக் கேட்டது கிழவி.

"நா தான்" என்றவாறு வேகமாய் உள்ளே போனாள் பக்கத்து வீட்டு அம்மணி.

பொழுதுக்கும் திண்ணையில் இருக்கும் கிழவியின் கேள்விகளுக்குப் பதில் சொல்லாமல் யாரும் அவ்வளவு சுலபமாய் உள்ளேயோ வெளியவோ போய் விட முடியாது.

" சக்கரை, துவரம் பருப்பு, காப்பி பொடின்னு ரெண்டு நாளுக்கு ஒருக்கா வந்துடறது. இவள சொல்லணும்" மருமகளை அலுத்துக்கொண்டாள்.

உள்ளே மருமகள் புலம்பும் சத்தம் நன்றாகக் கேட்டது கிழவிக்கு. இன்றைக்கு அவளுடைய தம்பியின் முதல்வருஷ திவசம். மாயவரத்திலிருந்து பொள்ளாச்சி போய்வர ரெண்டாயிரம் ரூபாயாவது எடுத்து வைக்கணும் என்று பிள்ளை அனுப்ப மறுத்துவிட்டான். பரவாயில்லை. சில சமயம் நம் மகனுக்கு வீரம் வந்து விடுகிறது மெச்சிக் கொண்டாள் மகனை. பசி வயிற்றைக் கிள்ளியது.

"மணி நாலாயிருக்கும், வெய்யில் சொல்கிறதே" எழுந்து மெதுவாய் உள்ளே போனாள்.

"டிபன் ஒண்ணும் பண்ணலையா" என்று ஆரம்பித்ததும், மருமகள் ஆக்ரோஷத்துடன், "பண்ணறேன். பண்ணறேன். யார் இருந்தா என்ன? செத்தா என்ன?" என்றாள்.

" ஏண்டி! ஒன் தம்பி கரண்டு அடிச்சி போயிட்டான். அது அவன் தலை எழுத்து. ஆயுசுங்கறது அவா அவா வாய்ண்டு வந்த வரம்"

"இருங்கோ, இருங்கோ. நீங்க மட்டும் நன்னா இருங்கோ. நா போய் உங்களுக்கு சீட் போட்டு வெக்கரேன். மெதுவா வாங்கோ" என்றாள்.

கிழவி பேசாமல் திண்ணைக்கு திரும்பினாள். அவளோட தம்பி சிப்பல்ல வாங்கிண்டு வந்தான்னா நா கப்பல்ல வாங்கிண்டு வந்திருக்கேன். அந்த சாதம் தீர வரை யமன் என்ன பண்ண முடியும்?

தன் வயது, ஆரோக்கியம் பற்றி மிகவும் பெருமை கிழவிக்கு. கண் நன்றாக தெரிகிறது. பல்லும் கெட்டி. எந்த வியாதியும் கிடையாது. பென்ஷன் வருகிறது. நிலத்தில் இருந்து சில சமயம் நெல் வித்த காசும் வருகிறது.

மெதுவாய் நடந்து காளியாங்குடி ஹோட்டலுக்குப் போய் அல்வாவும், மிக்சரும் வாங்கி வருவாள். சில நாள் திருஇந்தளூர் பரிமளரங்கநாதரை தரிசித்துவிட்டு வருவாள். போகிற வருபவர்களை வம்புக்கு இழுத்துக் கொண்டு, திண்ணையில் ராச்சியம் செய்துக் கொண்டு வாழ்க்கையை நன்றாக அனுபவித்துக் கொண்டிருந்தது கிழவி.

ஊரில் சாவு விழுந்தால், தன்னை மற்றவர்கள் ஏன் கோபமாய் பார்க்கிறார்கள் என்பது கிழவிக்கு விளங்கவே இல்லை. அப்படி என்ன வயசாகிறது தனக்கு? ஆனா பார்க்கிறவர்கள் எல்லாம் நூறு, நூத்தி அஞ்சுன்னு வாய்க்கு வருவதை சொல்லுவது கிழவிக்கும் தெரியும்.

கிழவி வயதைக் கணக்கே பண்ணுவதில்லை. கேட்டால் இன்னும் எம்பது ஆகவில்லை என்பாள். ஒரே பிள்ளை. நாக தோஷம் என்று பிறந்த எட்டுக் குழந்தைகளை மண்ணுக்கு வாரிக் கொடுத்தவளூக்கு இனி பிள்ளை பாக்கியமே இல்லை என்றிருந்தப் போது, நாற்பத்தி மூணு வயதில் வாராது வந்து மாமணியாய் பிறந்தான் மகன். அவன் ரிடையர் ஆக இன்னும் நாலஞ்சு வருஷம் இருக்கு!

உள்ளே இருந்து அம்மணி வருவதைப் பார்த்து, " ஏண்டி, உங்க மாமனார நாலு நாளாய் காணோம்? ஒடம்பு கிடம்பு சரியில்லையா?" என்றதற்கு, " ஸ்வாமிகளப் பார்க்க கும்மோணம் மடத்துக்கு போயிருக்கார்" அவசரமாய் பதிலளித்தாள் அவள்.

"காலைல ராஜூவ பார்த்தேன். ஒன் மாமனாருக்குதான் ஒடம்பு முடியலையோன்னு நெனச்சேன்"

"சின்னவனுக்கு நாலு நாளாய் வயத்தால போறது. ராஜூ டாக்டர் வந்து ஊசிப் போட்டுட்டு போனார்"

"பாத்துடியம்மா, அலட்சியமா இருந்துடாதே. நாலுநாளைக்கு மேட்னி போறது எல்லாம் வெச்சிக்காதே. ஒண்ணுக்கிடக்க ஒண்ணாயிடுடப் போறது"

சனியன் இது வாய்ல நல்லதே வராதா என்று மனதினுள் திட்டிக்கொண்டே தலையை ஆட்டிவிட்டு, அடுத்து புறப்படப்
போகிற கேள்வி கணைகளிலிருந்து தப்பிக்க ஓடினாள்.

" பொடிக்கு காசு வேணும்னா மட்டும் ஜரூராய் வந்துடும். கும்மோணத்துக்கு போறேன்னு ஒரு வார்த்தை சொல்லியிருந்தா நானும் வந்திருப்பேன் இல்லையா, நாலு நாளைக்கு மடத்துல வக்கணையா போஜனம்" தன்னால் போக முடியவில்லையே என்ற எரிச்சல் அவர் மேல் கோபமாய் மாறியது.

கிழவி அவர் ஸ்ரீருத்ரம் சொல்வார் என்பதைக் கேள்விப்பட்டு அவரிடம் விசாரித்தாள். அவரோ பெண்கள் அதை சொல்லக்கூடாது என்று சொல்லியதற்கு, கிழவி , சொல்லத்தானேக்கூடாது, கேட்டால் ஒன்றும் தப்பில்லையே என்று பதில் சொன்னாள். அவரும் கை காசு வேண்டும் என்றால் கிழவியின் திண்ணையில் உட்கார்ந்து எதையாவது சொல்லிவிட்டு சில்லறை வாங்கிக் கொண்டுப் போவார்.

உள்ளே இருந்து கமகமவென்று வாசனை திண்ணைக்கு வந்தது. வாசனை வைத்தே கிழவி கண்டு பிடித்துவிட்டது, இன்னைக்கு அடை டிபனுக்கு என்று!

அடை என்றவுடன் மறைந்த கணவன் முகம் கண்ணில் வந்தது.

"பாவம், மனுஷனுக்கு அடைனா உசிர். நானும் வாரம் ஒரு தடவையாவது செஞ்சிப்போட்டுடுவேன். ஒரு நா சோம்பு அடை, ஒருநா சொரக்காய் அடை, இன்னொருநா முருங்கை கீரை அடை. வெங்காயம் மட்டும் வேண்டாம்பார். இவ என்னன்னா நாளு இல்லை கெழம இல்லை. அடைனா, அதுல மரக் மரக்குன்னு நாலு வெங்காயத்தை நறுக்கிப் போட்டுடரா. கொல்லையிலேயே முருங்க மரம். நாலு கீரைய போட்ட என்ன? நல்ல சோம்பேறி வந்து வாச்சிருக்கு!" கணவனை நினைத்து முடிவில் மருமகளை திட்டுவதில் முடித்தது கிழவி.

பேத்தி செருப்புப் போட்டுக் கொண்டு வெளியே புறப்படத் தயாரானாள்.

"டிபன் சாப்பிட்டியோ?"

உம் கொட்டியது பேத்தி.

" இது என்னடி அலங்கோலம். லட்சணமா பாவாடை, தாவணி போட்டுக்கக்கூடாதா?"

பேத்தி, " பாட்டி! இப்ப எல்லாரும் சல்வார் கம்மீஸ்தான். கடைல போய் கேட்டக்கூட பாவாடை தாவணி கிடைக்காது" என்றாள்.

கிழவி ," நல்லா வளர்த்திருக்கா, ஆமா இப்ப எங்க கெளம்பர?" என்றதுக்கு, பேத்தி, "கம்ப்யூட்டர் கிளாஸ்" என்றவாறு பறந்தது.

பேத்தி பைக்கில் போவதைப் பார்த்து, "ரேஸ் குதிரை மாதிரி போறதைப் பாரு!" வாய்க்குள் திட்டியது கிழவி.

உள்ளிருந்து மருமகள் கூப்பிடும் குரல் கேட்டது. கிழவி மெதுவாய் போய் உட்கார்ந்தது. தட்டில் மூன்று அடை விழுந்தது. அதற்கு குறைந்தால் கிழவிக்கு கோபம் வந்துவிடும். என்ன ஒன்று, ராத்திரி ரெண்டொரு தடவை கக்கூஸ்க்கு போக வேண்டி வரும்.

"கொஞ்சம் வெல்லம் இருந்தா போடு" என்றது.

வயசானக் காலத்தில் மூன்று அடை தின்பதைப் பார் என்று வயிற்றெரிச்சலுடன் வெல்லத்தைத் தட்டில் பொத்தென்றுப் போட்டாள் மருமகள்.

அவளுக்கு கல்யாணம் ஆகும்போது, மாமியார் கிழவிக்கு எழுபது வயசுக்கு மேல் இருக்கும். மாமனாரும் போய் சேர்ந்திருந்தார். நாத்தனார், கொழுந்தன் என்று எந்த பிக்கல் பிடிங்கலும் இல்லை. மாமியாருக்கும் வயசாச்சு சீக்கிரம் போய் சேர்ந்துவிடும் என்று சந்தோஷமாய் கழுத்தை நீட்டியவள் நினைப்பில் இப்படி மண் விழும் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை.

திருப்தியுடன் சாப்பிட்டு முடித்து, இரண்டாம் தடவை காபியும் குடித்துவிட்டு திண்ணைக்கு வந்தாள் கிழவி.

விளக்கு வைக்கும் நேரம் ஆனது. இன்னும் மகனை காணலையே என்று மருமகளை கூப்பிட்டாள்.

"இன்னும் சின்ன குழந்தையா என்ன? வராம எங்கப் போயிடப் போறார்" உள்ளேயிருந்து மறு மொழி வந்தது.

தெரு முனையில் நின்று வம்பளந்துவிட்டு பேரனும் வந்தான்.

"ஏண்டா, கோசிக் ஒங்க அப்பன பார்த்தியோ?"

" எம் பேரு கெளசிக்! அத மொதல்ல ஒழுங்கா சொல்லு" என்றவாறு உள்ளே போனான்.

"பெரியவான்னு ஒரு மட்டு,மரியாதை கிடையாது. வாய தொறந்தா சீகேரேட் நாத்தம்"

விளக்கும் வைத்தாகிவிட்டது. ஆனால் இன்னும் மகன் வீடு வரவில்லை. நேரம் ஆக ஆக நிலைக்கொள்ளாமல் தவித்தாள். திண்ணையைவிட்டு இறங்கி கதவருகில் நின்றுக் கொண்டாள். மருமகளும் பேரனும் வாசலுக்கு வந்துவிட்டனர்.

பேத்தி கத்திக்கொண்டே பைக்கில் இருந்து இறங்கினாள்.

"அப்பா சைக்கிள் மேல பஸ் மோதிடுச்சாம். ஆஸ்பத்திரியில இருக்கார். வழில கறார் ஜவுளிக்கடை பாய் சொன்னார். "

கிழவிக்கு கிடு கிடு வென்று வந்தது. " ஏண்டி, அவன் உசுருக்கு ஒண்ணும் ஆபத்தில்லையே?" என்று ஆரம்பிக்கும் போது மருமகளின் ஆவேசக் குரல் நடுவில் புகுந்தது.

"அவருக்கு ஒண்ணும் ஆகாது! வெங்கடரமணா! எனக்கு மாங்கல்ய பிச்சை கொடுப்பா. நடந்தே மலையேறி வரேன்" அவள் புலம்பலைக் கேட்டு கூட்டம் கூடியது.

கிழவியை யாரும் ஏன் என்றுக்கூட கேட்காமல் ஆட்டோவில் புறப்பட்டு சென்றனர்.

கிழவி தன்னந்தனியே வாசலில் உட்கார்ந்திருந்தாள். மகனுக்கு ஏதாவது ஆகிவிடுமோ என்று அவள் நெஞ்சு துடித்தது. ரெண்டும் கெட்டான் பிள்ளைகளை மருமகள் எப்படிக் கரையேத்துவாள், மகன் இல்லை என்றால் தன் கதி என்னவாகும் என்றுப் பயத்தில் வயிறுக் கலங்கியது அவளுக்கு.

பயமும், மூன்று அடைகளும் செய்த வேலையால் நான்கு முறைக் கக்கூஸ்க்குப் போய் வந்தாள்.அதிலேயே உடம்பு துவண்டு போனது. கண் இருண்டு வந்தது. கால்கள் துவண்டன.

அப்படியேக் கண்ணை மூடிக்கொண்டு, வாழ்வில் முதல் முறையாய்," பெருமாளே! என் மகனுக்கு ஆயுளை கொடு, அவனுக்கு பதில் என்னைக் கொண்டு போ" என்று மனமுவந்து மரணத்தை வரவேற்றுக் கொண்டிருந்தாள் கிழவி.

*****
maraththadi.com

31 பின்னூட்டங்கள்:

At Tuesday, 20 December, 2005, சொல்வது...

கிழவிக்கு போட்டாச்சு ஒரு குத்து.

அட, + ஐச் சொன்னேங்க.

 
At Tuesday, 20 December, 2005, சொல்வது...

//ஆக பிள்ளைகளை பிரிந்து முதியோர் விடுதியில் சேருவது சரிதானே?//

என்னே ஒரு தத்துவம்?

இதற்கு மகாபாரதம் வேறு துணையா?

அல்லது ஹிந்து மத தர்மமே பெற்றவர்களை வெளியேற்றி விடு என்பது தானா?

உஷா - எங்கோ தவறிருக்கிறது.

பெற்றவர்களை வெளியேற்றவோ, அல்லது வனாந்தரத்தில் போய் அநாதை வாழ்க்கை வாழவோ எந்த ஒரு மதமும், நேரிடையாகவோ, மறைமுகமாகவோ சொன்னதாக நான் நினைக்கவில்லை.

ஹிந்து மதத்திலும் அப்படி சொல்லி இருக்கவோ - அல்லது அவ்வாறு நினைக்கும் படி தூண்டவோ இல்லை.

கொஞ்சம் விசாரித்து சொல்லுங்கள்!!!

 
At Tuesday, 20 December, 2005, சொல்வது...

உஷா அக்கா,எனக்கு பக்கத்துவீட்டு பாட்டியதான் தெரியும்! நான் பொறந்த உடனே எங்காத்தா பொட்டுன்னு போய் செந்துட்டா. அதனால அந்த பாக்கியமெல்லாம் கொடுத்து வைக்கல. நல்ல வேலை நாந்தேன் எடுத்து முழுங்கினேன்னு யாரும் சொல்ல கேக்கல!

 
At Tuesday, 20 December, 2005, சொல்வது...

துளசி , உங்க வீட்டு விசேஷத்துல நேரமிருக்க, இங்க வந்து படிக்க :-)

ஜெயகுமார், தாத்தா இருந்தாரா? அவரைப் பற்றி எழுதுங்க

 
At Tuesday, 20 December, 2005, சொல்வது...

நண்பன், எந்த தர்ம சாஸ்திரமும் பெற்றொருக்கு செய்ய வேண்டிய கடமையை வலியுருத்தாமல் விட்டதில்லை. பெண்கள் தங்கள் மாமனார் மாமியாரை பேண வேண்டும் என்றும், மகன்கள் தங்கள் பெற்றோரை கடைசிவரை அன்புடன் கவனிக்க வேண்டும் என்ற நீதியை சொல்ல நிறைய கதைகள் உண்டு.

ஆனால் வெறும் மூன்று வேளை சாப்பாடு போடுவது கடமை என்ற அளவில்தானே இன்று நடந்துக் கொண்டு இருக்கிறது. முதியோர் விடுதியில் விடுவது ஊர் பார்வையில் அவமானம் என்ற எண்ணம் இன்னும் பிள்ளைகளுக்கு இருக்கிறது.

சாய்வு நாற்காலியில் வாய் இறுகி கிடக்கும் முதியோர்களையும், வழிப்பாட்டு தலங்களில் பிச்சை எடுக்கும் நிலைமையும் கண் கூடாய் தெரிகிறதே! நான் சொல்ல வந்தது, ஒரு வயதிற்கு மேல், உயிர் வாழ்தலே பாரமாக மாறி விடுகிறது. அதற்குதான் அந்த காலத்தில், காட்டிற்கு சென்று கிடைக்கும் காய் கனிகளை உண்டு, வீட்டு பாலிடிக்ஸ் மறந்து, பாசம் என்ற பந்தத்தை அறுத்து எறிந்து, கடைசி காலத்தில் கடவுளை மட்டும் நினைத்துக் கொண்டு இருப்பத்தை வானபிரஸ்தம் என்ற வாழ்க்கை முறை.

இது வலிக்காட்டாயமாய் பெற்றோரை காட்டில் தள்ளுவது இல்லை. லெளகீத வாழ்க்கை போதும் என்ற எண்ணத்தில் பந்த பாசங்களை துறப்பது.

இரண்டு வருடம் முன்பு, நார்வேக்கு சென்றிருந்தேன். பல இடங்களில் வயதான பாட்டி, தாத்தாக்கள் குழுக்களாய் சுற்றுலா போய் கொண்டு இருந்தார்கள்.சிலர் சக்கர நாற்காலியில்! சில உணவகங்களிலும் வயதானவர்கள் பேசி, சிரித்து சந்தோஷமாய் பார்க்கும்பொழுது, ஏன் நம் வீட்டு பெரியவர்கள் அப்படி இல்லை என்று தோன்றியது.

நம் குடும்பங்களில், சில வயதானவர்கள், தங்கள் சொந்தங்கள் உயிர் விட்ட பின்பு கூட உயிர் வாழும் பரிதாப நிலையைப் பார்த்திருக்கிறீர்களா? தொண்ணூறு வயதுக்கு பிறகு வாழ்வது சாபம்!

 
At Tuesday, 20 December, 2005, சொல்வது...

கதை அருமை; ஆனால் நிகழ்வது அந்தக் காலம். தற்காலத்திற்கு பொருந்தாது.
வயதான பெரியோரை போற்றவோ தூற்றவோ என பட்டிமன்றமே நடத்தலாம். இருபக்கங்களிலும் சமமான வாதபிரதிவாதங்கள் உண்டு. முக்கிய காரணம் அவர்கள் உடல் வலுவாக இருந்தாலும், மூளையின் செயலிழப்பும் (senility) தனிமையினால் ஏற்படும் மன அழுத்தமுமே.
அவர்களை, குழந்தைகள் என்று சொன்னீர்கள், மனவளர்ச்சி குறைந்த குழந்தைகளைப் போல் அணுகவேண்டும்.
இரண்டாவதாக வானப்பிரஸ்தம் என்று சொன்னீர்கள். இன்று தம்மக்களை வெளிநாட்டுக்கு அனுப்பிவிட்டு தனியே வாழ்வது வானப்பிரஸ்தம் தானே :)

 
At Wednesday, 21 December, 2005, சொல்வது...

கதைக்கு நன்றி,

வயது ஏற ஏற சமூகத்தைப்பற்றிய நமது பார்வை மாறிவிடுகின்றது.

அந்திமக்காலத்தை நெருங்குபவர்கள், சிறு குழந்தைகளாவதற்குக் காரணம், அவர்கள் அனுபவிக்காதவை அல்லது அனுபவித்தவைகளை இழந்தமை ஆகியவைகளை அவர்கள் எண்ணிப்பார்ப்பதால்தான் என்றே நினைக்கிறேன்.

காலம் யாருக்கும் காத்துக்கிடக்காது என்பதை அனுபவப்பூர்வமாக உணர்வதாலும் இருக்கும்.

நன்றி,
பூங்குழலி

 
At Wednesday, 21 December, 2005, சொல்வது...

Usha,
en pathil ingkee:

http://nilaraj.blogspot.com/2005/12/blog-post_21.html

 
At Wednesday, 21 December, 2005, சொல்வது...

அன்புள்ள உஷா

ஒற்றெழுத்து எங்கெங்கே வரும் , எங்கெங்கே வராது என்பதை விபரம் தெரிந்தவர்களிடம் கேட்டுக் கொள்ளுங்கள்

மற்றபடி இந்தப் பதிவுக்கு என்ன கருத்துச்சொல்வது என்று தெரியவில்லை

 
At Wednesday, 21 December, 2005, சொல்வது...

உஷா
நல்ல கதை.
முதுமை குறித்து நான் முன்பு எழுதிய பதிhttp://domesticatedonion.net/blog/thenthuli.php?itemid=471வு:

 
At Wednesday, 21 December, 2005, சொல்வது...

நிலா, உங்க அலசல் மிக சரி. கதையை விட்டு விட்டு பிரச்சனையைப் பார்த்தால் முதல் காரணம் பெண்கள் வேலைக்குப் போவது. அவசர வாழ்க்கை, குழந்தைகளின் படிப்புக்கு அந்த காலம் போல் இல்லாமல் நிறைய நேரம் ஒதுக்க வேண்டியிருப்பது போன்று! சென்னை போன்ற நகரங்களில் அடுக்குமாடி குடியிருப்பு இன்னொரு பிரச்சனை.
அடுத்து, வெறும் மூன்று வேளை சாப்பாடு மட்டும் போட்டால் போதாது, பெரியவர்களுக்கு தருகிற மரியாதை என்பது மிக குறைந்து வருகிறது. காரணம் கூட்டு குடும்பம் இல்லாமல், மகன் வீட்டில் வயதான காலத்தில் போய் சேர்ந்தால், மருமகளுக்கு சுமையாய் தோன்றுகிறது. வயதானவர்களாலும் புதிய சூழ்நிலையில் பொறுந்திப் போக முடியதில்லை.
பல இடங்களில் வயதானவர்கள் மீதும் நிறைய தவறுகள். மகன் மட்டுமே உறவு, மருமகளை வேண்டாத உறவுதான். வயதான
பிறகு, வைராக்கியம் வேண்டும், அதாவது அட்டாச்மெண்ட் வித் அவுட் டிடாச்மெண்ட் என்பார்களே, அப்படி வாழ தெரிவதில்லை.
யோசித்துப் பார்த்தால், நம் காலங்களில் முதியோர் விடுதிதான் சரிப்படும் போல இருக்கு. நீங்கள் குறிப்பிட்ட "கிளாசிக் குடும்பம்"
நன்றாக இருக்கிறது என்று சொல்ல கேட்டேன். கொஞ்சம் காஸ்ட்லி. அதே போல கோயம்பத்தூரிலும் ஒன்று இருக்கு.
பார்க்கலாம், நம் காலத்தில் நல்ல தரமானவை வரும் என்று நம்புவோம்.

 
At Wednesday, 21 December, 2005, சொல்வது...

மணியன், கதை சமீபத்தில் சம்பவம் தான். மாயவரம் போன்ற சிறுநகரத்தை வைத்து எழுதியது. ஆனால் அந்த கிழவி பாத்திரம் உண்மை. திண்ணையில் அரசாண்டு, இப்பொழுதுதான் போய் சேர்ந்தார். தனிமை இன்னொரு கொடுமை, பிள்ளைகள் வெளிநாட்டில் வசிக்க, தனியாய் வசிப்பது கொஞ்சம் ரிஸ்க்தான். மேலும் துணையை அதிலும் மனைவியை இழந்து கணவன் வாழ்வது மிக கொடுமை.

நான் இங்கு வானபிரஸ்தம் என்று குறிப்பிட்டது, பந்த பாசங்களை விட்டு, தன் வயதை ஒத்தவர்களுடன் வாழ்வது. குந்தி, விதுரன், காந்தாரி, திருட்ராட்ஷன் போல!

பத்மா, நாம் பேசியது எல்லாம் ஞாபகம் இருக்கு. உங்களைதான் மிக எதிர்ப்பார்தேன்.

பூங்குழலி, மரவண்டு வருகைக்கு நன்றி.

 
At Wednesday, 21 December, 2005, சொல்வது...

//ஒற்றெழுத்து எங்கெங்கே வரும் , எங்கெங்கே வராது என்பதை விபரம் தெரிந்தவர்களிடம் கேட்டுக் கொள்ளுங்கள்//


1)வன்தொடர்க் குற்றியலுகரம் நினைவிருக்கிறதா? க்கு ச்சு ப்பு ற்று. இந்த மாதிரி இடத்தில் எல்லாம் இ. வே. தொ. இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஒற்று கண்டிப்பாய் மிகும்.

பாக்கு கடித்தல்: பாக்குக் கடித்தல்; மூச்சு போதல்: மூச்சுப் போதல்; பட்டு புடவை: பட்டுப் புடவை; உற்று பார்த்தல்: உற்றுப் பார்த்தல்; ஒற்று கேட்டல்: ஒற்றுக் கேட்டல்.

இதில் இன்னொன்று. ஒருத்தரைப் பார்த்து, பேசினால் பார்த்து*ப்* பேச வேண்டும். பார்த்துதான் பேசவேண்டும். பார்த்தசாரதி, தப்பித் தவறி வழக்கில் 'பார்த்து' ஆனால், பார்த்து பேசலாம். 'பார்த்து' என்பது ஒரு பெயர்ச்சொல்லாக இருக்கும் பட்சத்தில் ப் வராது.

2)இரண்டு குறில் எழுத்துக்கள் இருக்கின்றன என்று வைத்துக்கொள்வோம். அதாவது இரண்டு குறில் எழுத்துக்களால் ஆன ஒரு சொல். அப்படிப்பட்ட சொல்லில் இரண்டாவது எழுத்து உகரத்தில் முடிந்திருக்கிறது. இந்த இடத்தில் குசுடுதுபுறு வந்தாலும் அது குற்றியலுகரம் ஆகாது. குற்றியலுகரம் என்றால் அந்தச் சொல்லில் குறைந்தது மூன்றெழுத்துகள் இருக்க வேண்டும். பசு, உறு, தெறு, படு, நடு, விடு, இது, புது, இவையெல்லாம் முற்றியலுகரங்கள். குற்றியலுகரம் இல்லை.

இந்த இடங்களில் ஒற்று மிகும். உரு கண்டேன்: உருக் கண்டேன். மது கடை: மதுக் கடை. மது புட்டி? மதுப் புட்டி தான். புட்டி என்பது தமிழ்ச் சொல்தான். புட்டில் என்று சொல்ல வேண்டும். புட்டிலைப் புட்டியாக்கி அதற்கு buddi என்று ஒலி கொடுத்துப் பிறமொழிச் சொல்லாக்கிவிட்டோம்.

3)இரண்டு எழுத்தால் ஆன சொல். முதலெழுத்து குறில். இரண்டாவது எழுத்து நெடில். குறில்நெடில். நிலா காலம்: நிலாக் காலம். விழா கோலம்: விழாக் கோலம்; கனா கண்டேன்: கனாக் கண்டேன். அம்புட்டுதேங்.

[இரண்டு குறில் ஆயிற்று. குறில் நெடில் ஆயிற்று. அப்படியானால், முதலெழுத்து நெடிலாகவும், இரண்டாவது எழுத்து குறிலாகவும் வருமோ? ஒரு கதை சொல்றேன் கேளு. Either or survivor கணக்கின் பயன் என்ன என்று கேட்டார்கள். If Either dies, the Survivor can operate the account என்று பதில் வந்தது. நம்ம சமத்து திருப்பிக் கேட்டது: What happens if the Survivor dies and Either remains?:):P அது எவ்வளவு சாத்தியமோ அவ்வளவு சாத்தியம்தான் நெடில்குறில் சொல். 'காவு கேட்ட' என்பதில் 'காவு' என்பது நெடில்குறில் தானே? அப்போது கா தனி சிலபிள் ஆக நிற்கும். ஒற்று மிகாது. Survivor cannot die. ;-)]


4) ஒரே எழுத்தால் ஆன சொல். நெடிலாக இருக்கும். அப்போதும் மிகும்.

தீ சட்டி: தீச் சட்டி. பூ கொய்ய: பூக் கொய்ய....

["பூப்பெயர் முன் இனமென்மையும் தோன்றும்" என்ற விதிப்படி
பூ + கொடி = பூங்கொடி என்று வரும்.]


5)சில, பல போன்ற வார்த்தைகளுக்கு அடுத்து சந்தி மிகுமா?

மிகாது. 'சில சமயம். பல தருணங்களில். சில சொற்கள். பல வாக்கியங்கள்.'

இப்படிக் குறிப்பிட்டுச் சொல்ல ஒரு பெரிய பட்டியலே இருக்கிறது- இங்கிங்கே மிகாது என்று அடுக்க. சிலவற்றை முன்பே ஒரு முறை தந்ததாக நினைவு. எவை என்று நினைவில்லை. மேலும் சில (முன்பே சொல்லியிருந்தால் கண்டுக்க வேணாம்):

அது, இது, (சுட்டு)
எது, யாது (வினா)
அவை, இவை, எவை
அத்தனை, இத்தனை, எத்தனை
அவ்வளவு, இவ்வளவு, எவ்வளவு,
அவ்வாறு, இவ்வாறு, எவ்வாறு
அன்று, இன்று, என்று

* இந்தச் சொற்களுக்குப் பின்னால் ஒற்று மிகாது.*

இந்தப் பட்டியலை அவ்வப்போது விரிவுபடுத்துகிறேன். It is just that one should have a feel for it. மனப்பாடம் செய்துதான் தெரிந்துகொள்ளவேண்டும் என்பதில்லை. பழக்கத்தில் தானாகவே வரும். சொல்லப்போனால், தெரியாமலேயே, உள்ளுணர்வினால் தூண்டப்பட்டுப் பல இடங்களில் சரியானபடி எழுதிக்கொண்டிருப்போம். சில சமயங்களில் இடறும். அந்தச் சமயங்களில் ஒத்திட்டுப் பார்த்துக்கொள்ளத்தான் பட்டியல் போடுவது. அவ்வப்போது இதைச் செய்தால் உள்ளுணர்வு கூர்மையுறும். அப்புறம் இந்தப் பட்டியலைத் தூக்கிக் கடாசிவிடலாம்.

6) எனது, உனது, என்னுடைய, உன்னுடைய போன்ற வார்த்தைகளுக்கடுத்துச் சந்தி வருமா?

எனது சொற்களின் மீது உனது கவனம் படியட்டும். உன்னுடைய குறும்புத்தனத்தால் என்னுடைய பேச்சை விட்டுவிடாதே.

யாரு இவ்வளவையும் நினைவில் வைத்துக்கொள்வது என்று கேட்கிறீர்கள்? அதுதானே? பழக்கம். பழக்கம்தான் எல்லாமும். தப்புத் தப்பாய் எழுத அஞ்சக் கூடாது. தப்பைச் சுட்டிக்காட்டினால் திருத்திக்கொள்ளத் தயங்கக் கூடாது. எல்லா வான் முட்டும் மரங்களும் ஒரு விதையிலிருந்துதான் முளைத்தன. எல்லா வானுரசிகளும் (sky-scraper) ஒற்றைச் செங்கல்லோடுதான் ஆரம்பிக்கப்பட்டன.

---------


இது ஹரியண்ணா மரத்தடியில் சொன்னது. இதையெல்லாம் பார்த்து நான் எழுதுவேனான்னு கேட்டா மாட்டேன். இது மரவண்டு சொன்னதுக்காக, (உதவிக்காக) மட்டுமே. ஒரு வேலை தேவையில்லாமலும் இருக்கலாம்.

மரவண்டு அண்ணாச்சி சும்மா குத்தம் சொல்லக்கூடாது உதவணும். :-)))))

//மகாபாரதத்தில்
திருட்ராஷன், தன் மனைவியுடன் காட்டுக்கு செல்ல முடிவெடுக்கும் கட்டம், கூட குந்தியும் விதுரனும் சேர்ந்துக் கொள்ளுகிறார்கள். அரண்மனைவில் எல்லா வசதியுடன் வாழ்பவர்கள் ஏன் காட்டுக்கு சென்று உயிர் துறக்க முடிவெடுக்கிறார்கள்?
//

உண்மயிலேயே தெரியாதா உங்களுக்கு??????

//அதேப் போல, பஞ்ச பாண்டவர்களும் திரெளபதியுடன் மரணத்தை தேடி செல்கிறார்கள். இவை தற்கொலை தானே?//

அப்படியா????

இந்தக் கதைக்கு என்ன சொல்றது. :Ksp:

 
At Thursday, 22 December, 2005, சொல்வது...

மோகன் தாஸ், வணங்க வயதாகிவிட்டது. அதனால் வாழ்த்துகிறேன் ஐ மீன் உதவிக்கு! நானும் எவ்வளவோ முயற்சி செஞ்சிப்
பார்த்துவிட்டேன். இந்த சந்திப் பிழை காலை வாருகிறது

மோகன் தாஸ், படித்தவைகளில் முதல் இடம் மகாபாரதம். எத்தனை முறை வேண்டுமானாலு அலச நான் தயார். சமீபத்தில் "உப பாண்டவன்" படித்ததில் எழுந்த கேள்வி இது.

திருட்ராட்ஷன், காந்தாரி இருவருக்கும் தன் குலம் அழிந்த சோகம். குந்திக்கு மகன்கள் ஆள வேண்டும் என்பதுதானே லட்சியம்.
ஒரு வேளை, தன் வாரிசுகள் அனைவரும் இழந்ததற்கு குந்திதான் காரணம் என்று மகன்களும், மருமகளும் குற்றம் சாட்டுவார்கள்
என்ற பயமா? குந்திக்கு கிருஷ்ணன்,அவளுடைய ஐந்து பிள்ளைகள் உயிருக்கு உத்திரவாதம் தந்தாரே.

விதுரன், ஏன் கூடப் போனார்? பஞ்ச பாண்டவர்களுக்கு வாழ்க்கை ஏன் அலுத்துப் போனது? விடை எனக்கு தெரிந்த
அளவில் உள்ளது. என் கண்ணோட்டத்தில் பெரும்பாலும் வயதானவர்களுக்கு வாழ்க்கை அலுத்துப் போய் விடுகிறது.
சரியா?

Yuganta by Iravathi Karave யாராவது படித்திருக்கிறீர்களா? மகாபாரதத்தின் இன்னொரு அலசல். சாகித்ய அகாதமி விருது கிடைத்த ஆங்கில புதினம்.

 
At Thursday, 22 December, 2005, சொல்வது...

மோகன் தாஸ் , அது என்னய்யா Ksp புரியலையே?

டி.ராஜ், பின்னூட்டங்கள் என் பதிவைப் பொருத்தவரையில் ஆரோக்கியமான விவாதமாகவே இருக்கின்றன. போதாதற்கு கமெண்ட்
மாடரேஷன் போட்டுள்ளதால், விவாதம் திசைமாறிப் போகும் தனிப்பட்ட தாக்குதல்கள் நீக்கப்படுகின்றன. ஆனால் மாடரேஷன்
என்பது எழுத்தை குறித்த தவறு, குறைகளை சுட்டிக்காட்டும் எதிர்வினைகள் நீக்கப்படுவதில்லை.

 
At Thursday, 22 December, 2005, சொல்வது...

//மோகன் தாஸ், வணங்க வயதாகிவிட்டது. அதனால் வாழ்த்துகிறேன் ஐ மீன் உதவிக்கு!//

வாழ்த்தவும் வேண்டாம் வணங்கவும் வேண்டாம். :-))))

உபபாண்டவம்னு சொன்னதால அதிலேர்ந்தே தரப்பார்க்கிறேன்.

திருட்ராஷ்டிரன் போனதிற்கும், குந்தி போனதிற்கும் காரணம் முதுமைன்னு சொல்ல முடியாது. இதே யுத்தத்தில் கௌரவர்கள் ஜெயித்திருந்தால் காட்சிகள் மாறியிருக்கும். அதனால் அப்படி சொல்லமுடியாது. கடைசியில் அத்துனை நடந்த பிறகும் திருட்ராஷ்டிரன் யுதிர்ஷ்டிரனை கொல்லபார்த்ததும், குந்தி யுதிர்ஷ்டிரனை, தன் கண்களால் பார்த்து பிரச்சனை கொடுக்க நினைத்ததும் நீங்கள் படித்திருப்பீர்கள் தானே.

வேண்டுமானால் விதுரன் போனதிற்கு வயோதிகம் காரணம் என்று சொல்லலாமா என்றால் அதுவும் கிடையாது. விதுரனை நாட்டில் கட்டிவைத்திருந்ததில் பெரும் பங்கு பிதாமகரையே சேரும் அவரை தடுக்கும் உரிமைப்பெற்ற ஒருவர் இல்லாத காரணத்தால் அது நடந்திருக்கலாம், கூலாங்கல்லை வாயில் அடக்கி வைத்து நாவு பிரண்டுவிடாமல் தடுத்ததைக்கூட விதுரனின் ஆசையாகப்பார்க்கிறேன் நான். மேலும் என்னதான் இருந்தாலும் அவர் திருஷ்டாவின் மதிமந்திரி. மன்னன் எவ்வழியோ மந்திரியும் அவ்வழியே. முதுமை பெரும்பாலும் ஆசைகளை அழித்துவிடுவதில்லை. அவைகள் அலுப்பதுமில்லை.

பாண்டவர்கள் வனபிரஸ்தம் போனபொழுதும், கிருஷ்ணை பீமனுடன் போனதாகப்படித்த ஞாபகம். இதைப்பற்றிய சில கதைகளை படித்திருந்தேன். நினைவில் வர மறுத்துவிடுகிறது.

முக்கியமான ஒன்று இதுபோன்ற தீவிரமான பிரச்சனைகளில் புதினங்களை இழுக்காதீர்கள். என்ன ஆனாலும் அது புதினமே. :-))))) ஒருவேளை இந்த முதுமைப்பற்றி பேசுவதற்கு கூட எனக்கு வயதுவரவில்லையோ என்னவோ.

 
At Thursday, 22 December, 2005, சொல்வது...

Usha athu oru .gif image code in php forums.

http://www.geetham.net/forums/images/smiles/icon_rolleyes.gif

see the image if you want.

:D

 
At Thursday, 22 December, 2005, சொல்வது...

//குந்தி யுதிர்ஷ்டிரனை, தன் கண்களால் பார்த்து பிரச்சனை கொடுக்க நினைத்ததும் நீங்கள் படித்திருப்பீர்கள் தானே.//

மோகன் தாஸ், அது குந்தியில்லை காந்தாரி. மகனை கொன்றவன் மீது ஏற்பட்ட கோபம்! கிருஷ்ணனின் கால் நக நுனி அவள் பார்வையாய் கருக்கும்.
அடுத்து, விதுரன், திருட்ராட்ஷன், பாண்டுவின் தம்பி. தந்தை ஒன்று. ஆனால் தாயும் வேறு
இந்த இடம் எனக்கு புரியவில்லை.

//பாண்டவர்கள் வனபிரஸ்தம் போனபொழுதும், கிருஷ்ணை பீமனுடன் போனதாகப்படித்த ஞாபகம். இதைப்பற்றிய சில கதைகளை படித்திருந்தேன். நினைவில் வர மறுத்துவிடுகிறது.//

கடைசியில் உயிர் துறக்க பஞ்சபாண்டவர்களும், திரெளபதியும் போகிறார்கள். கூட தருமனின் தர்மம் நாய் உருவத்தில் பின் தொடர்கிறது.

மகாபாரதத்தையும் புதினம் என்ற கண்ணோட்டத்தில் பார்க்கிறேன். பாத்திரங்கள், இடம் எல்லாம் உண்மையாய் இருக்கலாம்.
ஆனால் வாய் வழியாய் சொல்லப்படும் பொழுது, பல கட்டு கதைகள்/ கற்பனைகள் சேர்ந்து இருக்கலாம் என்பது என் எண்ணம்.

 
At Thursday, 22 December, 2005, சொல்வது...

சாரி, கீபோர்டு ஸ்லிப்பாயிருச்சு, அது காந்தாரிதான். (இதுக்குத்தான் பக்கத்தில் figure பார்த்துக்கிட்டே எழுதக்கூடாதுன்னு நினைக்கிறேன் :-)))))))))).)

அப்புறம், அது கிருஷ்ணன் இல்லைன்னும் நினைக்கிறேன். யுதிஷ்டிரனின் கால் பெருவிரல்கள் தான் அவ்விதம் ஏற்படும். சரியோ. கிருஷ்ணனுக்கு தான் ஏற்கனவே சாபம் கொடுத்தாச்சே, ஒட்டுமொத்த வம்சமும் அழிஞ்சிறும்னு.

//விதுரன், திருட்ராட்ஷன், பாண்டுவின் தம்பி. தந்தை ஒன்று. ஆனால் தாயும் வேறு
இந்த இடம் எனக்கு புரியவில்லை.
//

என்ன புரியலை?????

//தருமனின் தர்மம் நாய் உருவத்தில் பின் தொடர்கிறது.
//

அது தருமனின் தர்மமா, இல்லை பாண்டவர்களின் ஆசையா??? ஒரேயடியா குழப்பீட்டீங்க. இன்னிக்கு நைட்டும் கோவிந்தா யாருப்பா அது என்னோட உபபாண்டவத்தை எடுத்துட்டுபோனது. :-))))))))))))))

 
At Thursday, 22 December, 2005, சொல்வது...

//பாண்டவர்கள் வனபிரஸ்தம் போனபொழுதும், கிருஷ்ணை பீமனுடன் போனதாகப்படித்த ஞாபகம். இதைப்பற்றிய சில கதைகளை படித்திருந்தேன். நினைவில் வர மறுத்துவிடுகிறது.//

இந்த வரிகள்தான் புரியவில்லை. நீங்க சைட் அடிச்சிக்கிட்டு தட்டச்சினால், நான் பாத்திரம் கழுவிக் கொண்டு, அடுப்பில் கிண்டிக்
கொண்டு தட்டச்சுகிறேன் :-)

நீங்கள் கிருஷ்ணை, (அதாவது திரெளபதி, கிருஷ்ணனின் சகோதரி என்ற பொருளில்) பீமனோடு எங்கு சென்றாள்? புரியவில்லை. ஆறு பேரும் , நாய் தர்மத்தின் அடையாளம் தான், நான் படித்தவரையில், வனவாசம் போகிறார்கள். வனவாசம் என்று சொல்வதா, இறப்பை தேடி என்று சொல்வதா? இமயமலையில் அவர்கள் சென்ற பாதை இன்னும் இருக்கிறதாம், அந்த
வழியில் சென்றவர்கள் திரும்புவதில்லையாம், அதனால் அதில் போவதில் அனுமதி கிடையாதாம். இதெல்லாம் காதில், கண்ணில் விழுந்த செய்தி. உண்மையா என்று கேட்டால், நான் போய் பார்த்துவிட்டு வந்து சொல்கிறேன் :-))

 
At Thursday, 22 December, 2005, சொல்வது...

உஷா,மோகந்தாஸ்,
மகாபாரத அலசல் உங்களிருவருக்கும் இருக்கும் பாண்டித்யத்தைக் காண்பிக்கிறது; எப்போது எங்களுக்கு பகிரப் போகிறீர்கள் :)

ஹரியண்ணாவின் தொகுப்பை தமிழ்மணம் விக்கியில் இணைத்துவிடலாம்.

 
At Thursday, 22 December, 2005, சொல்வது...

அருமையான எதார்த்தம் தொனிக்கும் கதை

 
At Thursday, 22 December, 2005, சொல்வது...

மணியன், கொஞ்சம் பதிவின் தலைப்பைப் பார்த்துவிட்டு "பாண்டித்தியம்" என்ற வார்த்தையை சொல்லுங்கள். இல்லை சும்மா ஜோக்குக்கு என்றால் போய்ட்டு போகுதுன்னு மன்னிச்சி விட்டுடரேன் :-)

மாலிக் அவர்களே, நன்றி.

 
At Thursday, 22 December, 2005, சொல்வது...

உஷா...நானும் ஒரு +வ் போட்டுட்டேன். கிழவி மேல் இருந்த கோவமும் ஆத்திரமும் கூடிக் கூடிக் கடைசில் சட்டென்று ஒரு நொடியில் மறைந்தது. நல்ல கதை இது.

பிறகு, இந்து மதத்தில் எங்கும் வனப்பிரஸ்தம் அவசியம் என்று சொல்லவில்லை. மகாபாரதத்தில் அவர்கள் போனதிற்குப் பல காரணங்கள். அதை எல்லாரும் செய்ய வேண்டும் என்று மகாபாரதமும் நியாயப்படுத்தவில்லை. வேறு எந்த நூலும் நியாயப்படுத்தவில்லை.

 
At Friday, 23 December, 2005, சொல்வது...

மணியன் நீங்கள் சொன்னதில் ஒன்றை ஒப்புக்கொள்கிறேன். உஷா அவர்களை மஹாபாரதத்தில் பாண்டித்தியம் பெற்றவர்கள் என்பதை. ஆனால் நான் இல்லை, என்னிடம் துச்சலை யார்னு கேட்டீங்கன்னா தெரியாதுன்னுதான் சொல்லுவேன். :-)

வேண்டுமானால் உஷாவை இதைப்பற்றியொரு(மஹாபாரதத்தை) பதிவு எழுது நானும் வேண்டுகிறேன்.

உஷா, கிருஷ்ணை நீங்கள் புரிந்துகொண்ட திரௌபதை தான் கடைசியில் அவளுக்கு பாண்டவர்களுடன் வனவாசம் போவதற்குண்டான விருப்பதைவிடவும் வேறு எண்ணங்கள் இருந்தது. கடைசியில் வனவாசம் போகும் பொழுதும் அவள் பீமனுடன் தான் தன் பயணத்தை தொடர்ந்தாள்.

அதேபோல் கடைசியில் கிருஷ்ணை கீழே விழுந்ததும் பீமன் அவளுடன் தன் வாழ்வை இணைத்துக்கொள்ள வேண்டியே அவள் அருகில் சென்றுவிட்டான். இது உபபாண்டவத்தில் படித்தது. எங்க பாட்டி இதில்லாம அந்த பனிப்பயணத்தின் கதையாக மேலும் சிலவற்றை சொல்லியிருந்தார்கள் அதைத்தான் மறந்துவிட்டது என்றேன்.

பிறகு அந்த நாய் பாண்டவர்களின் ஆசைதான். யுதிஷ்டிரனின் தருமமல்ல.

PS: மேலே துச்சலை பற்றி சொன்னது வெறும் விளையாட்டுக்கு.

 
At Friday, 23 December, 2005, சொல்வது...

மோகன் தாஸ், ஒரு சின்ன திருத்தம். எஸ்ராவின் பார்வையில் மகாபாரத கதை "உப பாண்டவம்" இதைப் போல இந்திய மொழிகள் பலவற்றில் எழுதப்பட்டுள்ளன. அவரவர் கற்பனைக்கு ஏற்றப்படி. ஆனால் நான் படித்த ராஜாஜியின் "வியாசர் விருந்து"
மற்றும் சோவின் "மகாபாரதம்" அப்படியில்லை. மொழி பெயர்ப்பு என்று கூறலாம்.
இவைகள் என்றோ படித்தவை, கைவசம் புத்தகமும் இல்லை. ஆக ஆழ்ந்து உள்ளே போக பயமாய் இருக்கிறது. பல முறை விரும்பி படித்ததால், ஓரளவு ஞாபகத்தில் வைத்து எழுதுகிறேன்.
தர்மனை கடைசியில் பின் தொடர்வது அவனின் தர்மம் நாய் வடிவில், ஆசை என்பது எஸ்ராவின் கற்பனையாய் இருக்கலாம்.

ராகவன், குமரன் போன்று - என் பார்வையில் இந்து மதத்தை பற்றி அறிந்தவர்கள் சொல்லலாம். அவர்கள் பதிவில் கூட இதைப் பற்றி தொடர வேண்டும் என்பது என் ஆசை.

மோகன் தாஸ், மகாபாரதத்தை விளக்கிக் கொள்வது என்பது குருடர்கள் யானையை தடவியதைப் போல, ஆளுக்கு தகுந்தார் போல, விளக்கம் கிடைக்கும் :-)

ராகவன் விளக்கத்துக்கு நன்றி. நான் சொன்னதும் இது தானே?

 
At Friday, 23 December, 2005, சொல்வது...

மேலே உள்ள பின்னுட்டத்தில் எழுத மறந்தது-
இதில் ஏதாவது தவறு இருந்தால் தயவு செய்து சொல்லவும்

 
At Friday, 23 December, 2005, சொல்வது...

எப்படியோ இந்தப் பதிவு இவ்வளவு நாள் என் கண்ணில் படாமல் போய்விட்டது. இப்போது தான் 28 பின்னூட்டங்கள் வந்துருக்கேன்னு வந்துப் பாத்தா சூப்பர் பதிவு; சூப்பர் பின்னூட்டங்கள்.

முதல் வேளையா நானும் ஒரு + குத்திட்டேன்.

கிழவி கதை ரொம்ப நல்லா இருந்துச்சு. நல்லா எழுதியிருக்கீங்க. நானும் இந்த மாதிரி சில பெரியவங்களைப் பாத்திருக்கேன்.

மகாபாரதத்தில் எனக்குத் தெரிந்தவரை இங்கே எழுதலாம்ன்னு இருக்கேன்.

உஷா சொன்ன மாதிரி திருதராஷ்ட்ரனும் காந்தாரியும் வனவாசம் போனதும் அவர்களுடன் குந்தியும் விதுரரும் போனதும் மகாபாரத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் அவர்கள் வாழ்க்கையை வெறுத்து வனவாசம் போனதாக நேரடியாகவோ மறைமுகமாகவோ சொல்லப்படவில்லை (நோ க்ளூஸ்). அது உஷாவே சொன்னமாதிரி இந்துமதம் சொல்லும் மூன்றாம் நிலை தான் - வானப்ரஸ்தம் எல்லாருக்கும் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது; ஆனால் கட்டாயம் இல்லை. அந்தக் காலத்தில் அவர்கள் வனவாசம் சென்றதற்கு இந்தக் கால சூழ்நிலையில் நாம் ஏதாவது காரணம் கற்பித்தால் அது சரியாக இருக்குமா என்று தெரியவில்லை.

பஞ்ச பாண்டவர்களும் பாஞ்சாலியும் சொர்க்க யாத்திரை கிளம்பிப் போவதும் வானப்ரஸ்தத்தில் சேர்ந்தது தான். தற்கொலை இந்து மதத்தில் ஒரு பெரும் பாவமாகச் சொல்லப்பட்டிருக்கிறது; அதனால் சொர்க்க யாத்திரையை அது தற்கொலையாக இருந்தால் அவ்வளவு உயர்த்தி வியாசபாரதத்தில் சொல்லியிருக்க மாட்டார்.

இவ்வளவு ஆழ்ந்து படித்தும் யோசித்துக் கொண்டும் இருக்கும் நீங்கள் ஏன் உங்கள் வலைப்பூவுக்கு நுனிப்புல்னு பேர் வச்சீங்களோ தெரியலை. நானும் ஆரம்பத்தில் வந்து அதைக் கிண்டலடித்திருக்கிறேன். அதற்கு அப்போதே மன்னிப்பு கேட்டுவிட்டேன். இன்னொரு முறை இங்கேயும் மன்னிப்பு கேட்டுவிடுகிறேன்.

மரவண்டு கணேஷ். எனக்கும் ஒற்றெழுத்து எங்கெங்கே வரும்; வராது என்பதில் ஒரு குழப்பம் உண்டு. என் பதிவுகளை ஒரு பார்வை பார்த்து எவ்வளவு மார்க் வாங்குவேன் என்று சொல்கிறீர்களா?

மோகன் தாஸ், ஹரியண்ணா சொன்னதை இங்கே போட்டதற்கு மிக்க நன்றி. நான் வெட்டி ஒட்டி வைத்துக்கொண்டேன். அடுத்த முறை சந்தேகம் வரும் போது பார்த்துக்கொள்கிறேன்.

//வேண்டுமானால் விதுரன் போனதிற்கு வயோதிகம் காரணம் என்று சொல்லலாமா என்றால் அதுவும் கிடையாது. விதுரனை நாட்டில் கட்டிவைத்திருந்ததில் பெரும் பங்கு பிதாமகரையே சேரும்// மோகன் தாஸ். உங்கள் அலசலைப் பார்த்தால் நீங்களும் உஷாவைப் போல மகாபாரதத்தைக் கரைச்சு குடிச்சிருப்பீங்க போல இருக்கே.

//முதுமை பெரும்பாலும் ஆசைகளை அழித்துவிடுவதில்லை. அவைகள் அலுப்பதுமில்லை.
// உண்மை.

//கிருஷ்ணை பீமனுடன் போனதாகப்படித்த ஞாபகம். // பாஞ்சாலிக்கு கிருஷ்ணை என்ற பெயர் இருப்பது பெரும்பாலோருக்குத் தெரியாது. உபபாண்டவம் நாவலில் இந்தப் பெயர் தான் பயன்படுத்தியிருக்கிறார்களா?

கிருஷ்ணைக்கு பீமனிடமும் கர்ணனிடமும் தனிப்பட்ட அன்பு என்று நான் மகாபாரதத்தில் படித்திருக்கிறேன். பீமனிடம் அதிக அன்பு கொண்டதற்கு காரணம் அவன் தான் அவள் கேட்பதை எல்லாம் முதலில் செய்பவன். கர்ணனிடம் இருந்த அன்பு அவளை அரசவையில் வேசி என்று சொன்னபிறகு வெறுப்பாய் மாறிவிட்டது. நீங்கள் சொன்ன பீமனுடன் தனியாக செல்வது புதினத்தில் வரும் புதுமையாக இருக்கவேண்டும். மகாபாரதத்தில் அவ்வாறு கூறவில்லை.

//அது தருமனின் தர்மமா, இல்லை பாண்டவர்களின் ஆசையா// உபபாண்டவத்தின் படி அது பாண்டவர்களின் ஆசையாய் இருக்கலாம். ஆனால் மகாபாரதத்தில் அது தருமராஜனின் மாறுவேஷம் என்று தான் சொல்லியிருக்கிறது.

//உஷா,மோகந்தாஸ்,
மகாபாரத அலசல் உங்களிருவருக்கும் இருக்கும் பாண்டித்யத்தைக் காண்பிக்கிறது; எப்போது எங்களுக்கு பகிரப் போகிறீர்கள் :)
// உண்மை. எனக்கும் அதே கேள்வி வந்தது.

//ஆனால் நான் இல்லை, என்னிடம் துச்சலை யார்னு கேட்டீங்கன்னா தெரியாதுன்னுதான் சொல்லுவேன்//

மோகன் தாஸ். ஆனாலும் உங்களுக்கு ரொம்பவே அடக்கம். துச்சலை என்ற பெயர் தெரிந்திருக்கும் போது அது யார்ன்னு தெரியாதா என்ன? அது சரி துச்சலை என்றால் யார்? நான் கேள்விபட்டதில்லையே?

//Pஸ்: மேலே துச்சலை பற்றி சொன்னது வெறும் விளையாட்டுக்கு.//

அதானே பார்த்தேன்.

//ராகவன், குமரன் போன்று //

அட. இராகவன் வந்து பின்னூட்டம் இட்டிருக்கார். அவர் வந்தாலே என் நினைவும் வருகிறதா என்ன? :-) தங்கள் கருத்துக்கு நன்றி.

//அவர்கள் பதிவில் கூட இதைப் பற்றி தொடர வேண்டும் என்பது என் ஆசை.
// நிச்சயமாகச் செய்யலாம். எதிர்காலத்தில்.

//மகாபாரதத்தை விளக்கிக் கொள்வது என்பது குருடர்கள் யானையை தடவியதைப் போல, ஆளுக்கு தகுந்தார் போல, விளக்கம் கிடைக்கும் // உண்மை. நல்ல நூல்கள் எல்லாவற்றிற்குமே இந்தக் குறை (?!) உண்டு. திருக்குறள், கீதை என்று பல உதாரணங்கள் கூறலாம்.

 
At Saturday, 24 December, 2005, சொல்வது...

நன்றி குமரன்! நேற்று அவசரத்தில் தட்டச்சியது. இன்னும் யாராவது பட்டியலில் விடப்பட்டார்களா? மகாபாரதத்தைப் பற்றி எழுதுங்கள், படிக்க காத்திருக்கிறோம். இத்தகைய கருத்து பரிமாற்றங்கள், மேலும் கொஞ்சம் ஒழுங்காய் எழுத வேண்டும் என்ற பொறுப்பையும், ஆவலையும் அதிகப்படுத்துகின்றன.

ஆனால் "நுனிப்புல்" தலைப்பில் எந்த மாற்றமும் கிடையது :-)

குடிபெயர்ந்து இன்னொரு நாட்டின், இலக்கிய நட்பு வட்டம் எதுவும் இல்லாத, சின்னஞ்சிறு பளபளப்பான கிராமத்தில் நூலகம் கூட இல்லாத இடத்தில் வசிக்கும் என்னால் பெரியதாய் புள்ளி விவரம் தர இயலாது. ஆக, யாரும் என்ன எழுதியிருக்கிறாய் என்று பேச முடியாது பாருங்கள், ஒரு முன் எச்சரிக்கை
நடவடிக்கைத்தான் :-)))))

 
At Saturday, 24 December, 2005, சொல்வது...

//துச்சலை என்ற பெயர் தெரிந்திருக்கும் போது அது யார்ன்னு தெரியாதா என்ன? அது சரி துச்சலை என்றால் யார்? நான் கேள்விபட்டதில்லையே?//

இதை நான் குறிப்பிட்டதற்கான காரணம் உஷாவிற்கு தெரிந்திருக்க வாய்பிருக்கிறது. :-) :-) உண்மையில் பாண்டித்தயம் பெற்றவரால் உஷாவிற்கு விளக்கப்பட்டிருக்கிறது. அவர் உங்களுக்கு உதவுவார் என்று நினைக்கிறேன்.

 
At Saturday, 24 December, 2005, சொல்வது...

மோகன் தாஸ், ஹரிகிருஷ்ணன் அவர்கள் நான் பார்த்தவரையில் இணையத்தில் இருந்து ஒதுங்கிவிட்டார் என்று நினைக்கிறேன். எப்பொழுதாவது யாஹ¥ குழுவில் அவர் மடல்கள் தென்படுகின்றன.

 

Post a Comment

<< இல்லம்