Sunday, December 11, 2005

குஞ்சாமணி

என் அம்மாவுக்கு வளர்ப்பு மிருகம் என்றால் ஒரு வித ஒவ்வாமை. பாட்டி இரவு சாப்பாட்டில் மிச்ச மீதியை "மணி" என்று எங்களால் அழைக்கப்பட்ட நாய் ஒன்று போடுவார். அது நல்ல ராஜபாளைய நாய் என்றும் சொல்லுவார். ஆனால் வீட்டு காவல் எல்லாம் இல்லை. சில சமயம் இரவானதும் வரும், சாப்பிடும், பின் பக்க கதவருகில் படுத்திருக்கும். காலையில் அம்மா கதவை திறந்ததும் காணாமல் போய் விடும்.

ஆனால் வேறு தெருவுகளில் எங்காவது பார்த்தால் எங்களைப் பார்த்து வாலசைக்கும். எங்களுக்கு ஒரு நல்ல அல்சேஷன் நாய்
வளர்க்க வேண்டும் என்ற கனவு இருந்தது. அதை வித விதமாய் பழக்கி பார்ப்பவர் அனைவரையும் ஆச்சரியப்பட வைக்க வேண்டும் என்று பேராவலே இருந்தது. அன்றைய காலக்கட்டத்தில் படித்த காமிக்ஸ் கதைகள் ,மற்றும் எனிட் பிளைட்டன் போன்ற சிறுவர்கள் துப்பறியும் கதைகளில் கட்டாயம் ஒரு நாய் வரும். ஆனால் அம்மாவோ, "உங்களை வளர்ப்பது போதாதா" என்று வசனம் சொல்லிவிடுவார்.

இப்படி இருக்க, குஞ்சா மணி என்று பின்னால் பேர் வைக்கப்பட்ட ஒரு பூனை குட்டி என் வீட்டில் நுழைந்து, என் அம்மாவின் செல்ல பிராணியாய் மாறியது. இன்றுவரை என் அம்மா, நான் மற்றும் சகோதரர்களால் மறக்க முடியாத ஜீவன். மிருகங்களை தொடவே கூசும் அம்மா மனதை அது எப்படி கவர்ந்தது என்று இன்றுவரை புரியாத விஷயம். வீட்டில் ராஜா குட்டி மாதிரி இருந்தது.

அதன் நினைவாய் இந்த சிறுகதை. கணையாழியில் பிரசுரமானது. படியுங்கள் இந்த சிறுகதையை!

குஞ்சாமணி

" நாயி...., நாய் வளக்கணும்! " தம்பி அழுவதை அறை வாசலில் நின்றுக்கொண்டு சுவாரசியமாய் பார்த்துக்கொண்டிருந்தோம் நானும் அண்ணனும்.

"வேணாங் கண்ணு!. ஜீரம் ஜாஸ்தியாயிடும். அழாதே..." அப்பா கெஞ்சிக் கொண்டிருந்தார். அவனுக்கு அடிக்கடி ஜீரம் வரும். அப்போதெல்லாம் தனக்கு தேவையானதை அப்பாவிடம் கேட்பான். போன தடவை நூறு கோலிகுண்டுகள் வாங்கிக்கொண்டான். அதற்கு முன்பு பம்பரம்.

கேரம் போர்ட் கேட்டப்போது மட்டும் பாவம் அப்பா , அதை வாங்கிக்கொடுக்க மிக சிரமப்பட்டார். அடுத்த தடவை நாய் வேண்டும் என்று கேட்கச்சொல்லி நான் தான் அவனுக்கு ஐடியாக் கொடுத்திருந்தேன்.

எனக்கும் ஜீரம் வராதா என்று ஏக்கமாய் இருந்தது. என்னுடைய ஸ்டாம்புக்களை வைத்துக்கொள்ள ஒரு ஆல்பம் தேவையாய் இருந்தது. சனிக்கிழமை வழக்கம் போல் கோவிலுக்குப் போய் ஆஞ்சநேயரை சுற்றியும் பலன் கிடைக்கவில்லை. சனிக்கிழமை கோவிலுக்குப் போக இன்னொரு காரணம், அன்று யாராவது வடைமாலை போடுவார்கள்.


" வெல் டிரெய்ன்ட்" என்றான் அண்ணன்.

நான் புரியாமல் அவனைப் பார்த்தேன்.

" எப்படி அழுதுகேக்கணும்னு நல்லா யோசிச்சி வெச்சிருக்கான்" என்று எடுத்து சொன்னான். நானும் அந்த ஆங்கில வார்த்தையை மனதிற்குள் சொல்லிப்பார்த்துக் கொண்டேன். இங்கிலீஷ் தெரியும் என்று யாரிடமாவது காட்டிக் கொள்ளலாமே!

அண்ணனுக்கு புதியதாய் இங்கிலீஷ் சார் வந்திருக்கார். பள்ளியில் வேஷ்டி அல்லது பேண்டு போட்டாலும் அழுதுவடியும் சார்கள் மத்தியில் வெள்ளை பேண்ட், சட்டை, கருப்பு பெல்ட், பள பள ஷ¤வில் வரும் இங்கிலீஷ் சார் மாணவ,மாணவியர் மத்தியில் ஒரு புயலையே கிளப்பிவிட்டார். அவர் வகுப்பு எடுத்த ஆறிலிருந்து எட்டாம் வகுப்பு வரை பிள்ளைகளுடன் ஆங்கிலத்திலேயே பேசினார். தான் ஆசிரியர் இல்லை, தோழன் என்பார். பிள்ளைகள் அவரை தெய்வமாய் கொண்டாடின. பிற ஆசிரியர்கள் இதனால் மிகவும் பாதிக்கப்பட்டனர். சிலது தமிழ்சாரிடமும் தங்கள் ஆங்கில புலமையைக்காட்டி அடி வாங்கின. அண்ணன் தினமும் அவரைப் பற்றி ஏதாவது சொல்லாமல் இருக்க மாட்டான்.

நாய் வளர்க்க வேண்டும் என்று எவ்வளவு சொல்லியும் அம்மாவும் பாட்டியும் முடியாது என்று மறுத்துவிட்டனர். இந்த ஒரு விஷயத்தில் இருவரும் ஒற்றுமையாய் முடிவெடுத்தது மிக ஆச்சரியமான விஷயம். ஆனால் தம்பி விடாபிடியாய் அப்பாவிடம் அழுதுக் கொண்டிருந்தான். வெற்றி பெறுவானா என்ற சஸ்பென்சுடன் நாங்கள் இருவரும் நின்றிருந்தோம்.

அம்மா உள்ளே வந்து, " வாய மூடு" என்று " தட்டிவிட்டு முதுகில் டப் என்று ஒன்று வைத்தாள். அப்பா தடுக்கும் முன்பு, " நாயாவது பேயாவது! ஒங்கள வளக்கிறது போறாதா? அத்தன ஐவேசு இங்க இல்ல! பிடிவாதம் பிடிச்சே ஒங்க சாந்தா மிஸ் கிட்ட சொல்லிடுவேன். மழைல ஆட்டம் போட்டுட்டு இப்ப பாடா படுத்துற?" என்றாள்.

அவன் சட்டென்று வாயில் விரலைப் போட்டுக் கொண்டு, " உன் பேச்சி... கா" என்றான்.

அம்மா அவனை அள்ளி முத்தமிட்டு நாய் வளர்க்க நிறைய காசு செலவாகும், நம்மால் முடியாது என்று எடுத்துச் சொல்ல ஆரம்பித்தாள். இனியும் ஏதாவது பேசினால் அம்மா முதுகை பெயர்த்து விடுவாள் என்று தெரிந்து தம்பி பேசாமல் இருந்துவிட்டான்.

எங்களுக்கும் சே என்று கிவிட்டது. நாய்க்கு பெயர்கூட தேர்ந்தெடுத்திருந்தோம். வேடன் என்று. இதுவும் அண்ணன் வைத்ததுதான். அவன் கிளாஸ், சிக்ஸ் ஏயில் படிக்கும் கோப்பெருந்தேவி வீட்டில் வேங்கை என்ற பெயரில் சோனியாய் ஒரு நாய் இருந்தது .

அவள் தம்பி நலங்கிள்ளி என் வகுப்பு, ·போர் பீ, பிள்ளைகள் அவனை கிள்ளிகிள்ளியே அவனுக்கு தன் பெயர் மேல் ஒரு ஒவ்வாமையை உண்டாக்கிவிட்டனர். தூய தமிழ் பெயர் வைப்பது ஒரு பேஷன்.

பள்ளியில் ஒவ்வொரு வகுப்பிலும் தேன்மொழிகள், திருநாவுக்கரசர்கள், கலைவாணிகள், புகழேந்திகள் நீக்கமற நிறைந்திருந்தனர். என் வகுப்பிலும் ஒரு திருநாவுக்கரசு இருந்தான். ஒவ்வொரு முறையும் தமிழ் விடைத்தாள் தரும்பொழுது அவனின் ஒற்றை இலக்க மார்க்கைப் பார்த்து தமிழ் சார், அவன் பெயரை மாற்றிவைத்துக் கொள்ளும்படி சொல்லுவார்.

தம்பி டூ பி, கான்வெட்டில் படித்துக் கொண்டிருந்தான். அவன் ஒருமுறை அக்பர் வாஸ் எ கிரேட் கிங் என்று படித்துக் கொண்டிருந்தான். நான் இவர் ·பாண்ட் போட்ட இங்கீலீஷ் அக்பர் என்று நினைத்திருந்தேன். ஆனால் அவன் புத்தகத்தில், என் சரித்திர பாட புத்தகத்தில் இருக்கும் அதே அக்பர் படம்தான் இருந்தது. அப்பாவிடம் கேட்டால் இரண்டும் ஓரே அக்பர்தான் என்றார். அது எப்படி என்று கேட்டதற்கு இனி இப்படி கேள்விக் கேட்டால் உதை வாங்குவாய் என்று சொல்லிவிட்டார்.

ஆனால் என் வகுப்பில் கென்னடி என்று ஒரு பையன் புதியதாய் சேர்ந்தான். டிராயிங்சார் அமெரிக்காவில் கென்னடி என்று ஒரு தலைவர் இருந்தார் என்று அவரைப்பற்றி கதை சொல்லிவிட்டு, அடுத்த டிராயிங் வகுப்பில் லைப்பரியிலிருந்து ஒரு புத்தகத்தைக் கொண்டு வந்து ஒரு வெள்ளைகாரரின் படத்தைக் காண்பித்தார். இந்த சந்தேகத்தை அம்மாவிடம் கேட்டால், எல்லாம் பெரியவள் புரியும், தொந்தரவு செய்யாதே என்று அலுத்துக் கொண்டாள்.

அண்ணனிடம் கேட்டதற்கு இரண்டு நிமிடம் விடாமல் ஏதோ சொன்னான். ஆனால் என்சந்தேகம் என்னவோ தீரவில்லை. அதற்கு பிறகு அவனிடம் சந்தேகம் கேட்க தைரியம் வரவேயில்லை.

மணி, ரோசி ,ஜிம்மி போன்று பழைய பெயர்கள் இல்லாமல் புதுமையாய் இருக்கவேண்டும் என்று அண்ணன் சொன்னான். எனக்கும் தம்பிக்கும் அவன் பேசுவதே சில சமயம் புரியாது. ஆனால் கன்னுக்குட்டி சைசில் ஒரு நாயை பிடித்துக் கொண்டு வாக்கிங் போகவேண்டும் என்பது மட்டுமே எங்கள் கனவாய் இருந்தது.

இரண்டு நாளாய் நல்ல மழை. நாளை காலை புயல் கரையைக் கடக்கும் என்பதால் பள்ளிகள் விடுமுறை என்று வானொலியில் அறிவித்துவிட்டார்கள். அப்பா நைட் டியூட்டிக்கு புறப்பட்டுவிட்டார். பாட்டி கதை சொன்னவாறு சாதத்தை உருட்டி கையில் போட்டாள். தின்றுவிட்டு கட்டிலில் எல்லாரும் உருண்டுக் கொண்டிருந்தோம்.

அம்மா மருந்துக்கொடுக்க தம்பியை அழைத்துக் கொண்டு பாத்ரூமிற்குப் போனாள். ஆஸ்பத்திரியில் ஜூரம் வந்தால் பிங்க் கலரில் மிக்சர் ஒன்றும், வயிற்றுப் போக்கு என்றால் வெள்ளை நிற மிக்சரும் கொடுப்பார்கள். அதில் ஜூரத்திற்கு கொடுக்கப்படும் மருந்தைக் குடித்தால் கட்டாயம் வாந்தி வரும். அவ்வளவு மோசமாய் இருக்கும்! வீட்டில் மருந்து என்று சொல்வதை டாக்டர் மிக்சர் என்று சொல்வதைக் கேட்டு மிட்டாய்கடை மிக்சர் என்று நினைத்து நாங்கள் ஏமாந்தும் போயிருக்கிறோம்.

ஒக்களிக்கும் ஒலி மட்டும் கேட்டது. ஆனால் அம்மா வெற்றிகரமாய் மருந்தை உள்ளே செலுத்திவிட்டாள். எதற்கும் வாந்தி வந்தால் எடு என்று அவனை அங்கேயே உட்கார வைத்துவிட்டு அம்மா உள்ளே வந்தாள்.

பாத்ரூமில் இருந்தவன் அம்மா அம்மா என்று அலறியதைக் கேட்டு நாங்கள் எல்லாரும் ஓடினோம். அங்கு பின் வாசல் திறந்து ஆக்ரோஷமாய் காற்றும் மழையும் உள்ளே வந்துக் கொண்டிருந்தது.

அம்மா ஓடிப்போய் கதவை சார்த்திவிட்டு தம்பியை பார்த்து, " ஒரு செகண்டுக்கூட சும்மா இருக்க மாட்டியா...! எதுக்கு கதவ தொறந்தே? " என்று அலுத்துக் கொண்டாள்.

தம்பி ஒரு மாதிரி முழித்துக்கொண்டிருக்கும் போது, "மியாவ்" என்ற சத்தம் கேட்டது.

பார்த்தால் மூலையில் கருப்பும் சாம்பல் நிறமும் சேர்ந்த நிறத்தில் மிக அழகாய் ஒரு பூனைக்குட்டி உடம்பை உதறியவாறு நின்றிருந்தது. அது எங்களைப் பார்த்து திரும்ப மியாவ் என்றது. உள்ளே வரலாமா என்று பட்டன் போன்ற கண்ணை உருட்டி பார்த்தது அனுமதிக்கேட்பதுப் போல இருந்தது.

அப்புறம் என்ன! பின்னால் குஞ்சாமணி என்று அம்மாவால் பெயர் சூட்டப்பட்ட அந்தபூனை எங்கள் வீட்டு உறுப்பினரானது. அம்மா எங்களை கொஞ்சும் போதும் இந்தப் பெயரைதான் பாவிப்பாள். அண்ணன் பூனைக்குட்டி ணா, பெண்ணா என்று தெரியாத நிலையிலேயே அதற்கு முகில்வண்ணன் என்று பெயர் வைத்தான். ஆனால் எங்கள் வாயில் குஞ்சாமணியே சுலபமாய் நுழைந்தது. பாட்டி மட்டும் பூனை முடி உதிர்ந்தால் பாவம், ஆஸ்துமா வரும் என்று புலம்பிக்கொண்டிருந்தாள்.

குஞ்சாமணிக்கு காலையில் ஒரு தடவை, இரவு ஒரு தடவை கொட்டாங்குச்சியில் பால் வைப்பாள் அம்மா. அது தோட்டத்தில் கண்டதைப் பிடித்து தின்றுவிட்டு நன்றாக கொழு கொழுவென்று இருந்தது. அதன் புத்திசாலித்தனத்தைப் பார்த்து நாங்கள் வியந்துபோனோம். ஒருநாளும் வீட்டின் உள்ளே அசிங்கம் செய்யாது. அம்மா அதை சமயலறையின் உள்ளே வரவிடவில்லை என்பதை புரிந்துக்கொண்டு வாசல் படியில் நின்றுக்கொண்டே மியாவ் என்று கத்தும். உள்ளே போகாது.

மாலை பள்ளியில் இருந்து வந்ததும் அதனுடன் பால், ரிப்பன், கயிறு என்று எதையாவது வைத்துக்கொண்டு விளையாடுவோம். ஆனால் வர வர அது அம்மாவின் செல்லபிள்ளையாய் மாறிக்கொண்டிருந்தது.

அம்மாவுக்கு கொஞ்சம் தொப்பை இருக்கும். அவள் மத்தியானம் தூங்கும்போது, நெஞ்சுக்கும் வயிற்றுக்கும் நடுவில் இருக்கும் பள்ளத்தில் சொஸ்தமாய் படுத்துக் கொள்ளும். அம்மா அதற்காகவே மல்லாக்காய், அசையாமல் படுத்திருப்பாள். காலையில் எங்கள் போர்வைக்குள் புகுந்துக் கொள்ளும். அம்மாவின் பின்னாலே அலையும். அப்பாவைப் பார்த்தால் மட்டும் ஒரே ஓட்டமாய் ஓடிவிடும்.

ஒருநாள் மாலை பள்ளியிலிருந்து வருகிறோம் அம்மா அழுதுக்கொண்டிருந்தாள். அம்மா அழுவதைப் பார்த்து நாங்கள் பயந்துப்போனோம். அப்பா, பாட்டிக்கூட சண்டைப்போட்டால் முறைத்துக் கொண்டிருப்பாளே தவிர அவள் அழுது நாங்கள் பார்த்ததே இல்லை. அப்பா மெளனமாய் உட்கார்ந்திருந்தார். பாட்டி எங்களை அழைத்துப்போய் டிபன் கொடுத்துக் கொண்டே விஷயத்தைச் சொன்னாள்.

அம்மாவின் அண்ணன் அதாவது பெரியமாமாவின் புதுவீடு கிரகபிரவேசம் என்று இரண்டு நாளுக்கு முன்பே முடிந்துப்போன விசேஷத்துக்கு இன்று பத்திரிக்கை வந்துள்ளதாம். அப்பாவுக்கும், மாமாவுக்கும் சில வருடங்களாய் பேச்சு வார்த்தை கிடையாது.

ஆனால் மாமா ஒவ்வொரு கனு பொங்கலுக்கும் அம்மாவுக்கு பதினைந்து ரூபாய் மணியார்டர் அனுப்பிவிடுவார். அதில் ரவிக்கைதுணி வாங்கிக் தைத்துப் போட்டுக் கொள்வாள். கொஞ்ச நாளுக்கு வீட்டிற்கு வந்துப்போகிறவர்களிடமெல்லாம் இந்த மணியார்டர் வந்ததைச் சொல்லிக் கொண்டிருப்பாள். பாட்டி அலட்சியமாய் பதினைந்து ரூபாய்தானே, பெரிய சிவாஜி சாவித்திரி பாசமலர் என்று ஒருமுறை சொன்னதற்கு, எவ்வளவு என்பது முக்கியம் இல்லை, அவன் என்னை மறக்காமல் வருடம் தப்பாமல் அனுப்புகிறானே, அதைப் பார்க்க வேண்டும் என்றாள்.

பாட்டி பிறகு அப்பாவிடம் என்ன வத்தி வைத்தாளோ, "மரியாதைக் கெட்ட பயல்! பிச்சைக்காசு அனுப்பறான். அத திருப்பி அனுப்பிடு" என்று அப்பா சொன்னதற்கு அன்று அம்மா ருத்ர தாண்டவம் ஆடிவிட்டாள். அண்ணன் தங்கை பாசத்தின் நடுவில் யாரும் வரக்கூடாது என்று ஒரே போடாய் போட்டு விட்டாள்.

இன்று இப்படி செய்துவிட்டானே என்று அம்மா அழுதது எங்கள் எல்லாருக்கும் மிக கஷ்டமாய் இருந்தது. அப்பா, பாட்டிக்கூட அம்மாவை சமாதானப்படுத்தினர். குஞ்சாமணிக்கு என்ன புரிந்ததோ சுத்தி சுத்தி வந்துக் கொண்டிருந்தது.

" அம்மா, அப்பா, ஒடன்பொறப்பு அப்புறம் பிள்ளகுட்டிகள்! பாசத்த மனசுல சொமந்துக்கிட்டு ஏமாந்துப் போறதே பொண் ஜென்மங்களுக்கு தலைவிதியா போச்சு" என்று அரட்டினாள்.

" ஏ.., இந்த லிஸ்டுல புருஷங்காரன விட்டுட்ட..?" பாட்டிக் கொஞ்சம் எடக்காய் கேட்டாள்.

"பாசம் வேற, கடமை வேற" என்றாள் அம்மா.

அந்த நேரம் குஞ்சாமணி அம்மா மடியில் ஏறி முகத்தைப் பார்த்து மியாவ் என்றது.

" இதுவேற... " என்றவள் என்ன தோணியதோ, ஏதோ முடிவுக்கு வந்தவள்போல் கண்ணைத் துடைத்துக் கொண்டு எழுந்தாள்.

குஞ்சாமணிக்கு கொட்டாங்குச்சியில் பால் கொண்டு வந்து வைத்தாள். அது குடித்து முடித்ததும், அதை இரண்டு தடவை தடவிக் கொடுத்தவள் கன்னத்தில் வைத்து முத்தமும் கொடுத்தாள்.

பிரம்புக் கூடை ஒன்றை எடுத்து, அதில் குஞ்சாமணியை வைத்து அண்ணனிடம் கொடுத்து " அசட்டு பாசம் வெக்கவும் வேண்டாம். பின்னால அவஸ்தையும் படவேண்டாம்!. இத ரொம்ப தூரக் கொண்டுப் போய் விட்டுடு. பக்கத்துல விட்டா திரும்பி வந்துடும். தனியா போகாதே! ஒன் பிரண்ட் ராஜாவோட போ" என்றாள்.

ஒரு நிமிடம் அம்மா என்ன சொல்கிறாள் என்றே புரியாமல் முழித்தோம். பிறகு வேண்டாம்மா! வேண்டாம்மா! என்று அழுது புலம்பினோம். தம்பி கீழே விழுந்து அழ ஆரம்பித்தான். அப்பாக்கூட சொல்லிப் பார்த்தார். அம்மா குரலில் இருந்த உறுதி எல்லாரையும் வாயடைக்கச் செய்தது.

நானும் தம்பியும் அண்ணன் பின்னால் ஓடிக் கெஞ்சினோம். அண்ணன் அந்தக்கூடையை சைக்கிள் ஸ்டாண்டில் வைத்தவாறு, " "ஷீ இஸ் கரெக்ட்" என்றான்.

கணையாழி
ஜூன், 2004

20 பின்னூட்டங்கள்:

At Sunday, 11 December, 2005, சொல்வது...

//சிலது தமிழ்சாரிடமும் தங்கள் ஆங்கில புலமையைக்காட்டி அடி வாங்கின//
//சிக்ஸ் ஏயில்//
//போர் பீ//

அதெப்படீங்க இவ்வளவு நன்றாக கவனித்து / நினைவு கூர்ந்து எழுதியிருக்கீங்க???

 
At Sunday, 11 December, 2005, சொல்வது...

ellar veetu sellakuttykum oru kathai iruku.engada appappa valartha nai appappa heart attack vanthu irantha anru morning la irunthe sapidellayam...appappa night than iranthavar anal avtra naikutyku muthaleye therinjuttu pola.

 
At Monday, 12 December, 2005, சொல்வது...

நானும் தலைப்பைப் பாத்திட்டு பதறியடிச்சு ஓடிவந்தா...
அட, கதை!!!!

 
At Monday, 12 December, 2005, சொல்வது...

வசந்தன், இந்த கதை நான் இலக்கியவாதியாய் "பரிமளக்க" ஆரம்பிப்பதற்கு முன்பு எழுதினதுங்க :-))))

இன்னைக்கு இந்த தலைப்புல எழுதுவேனா என்ன? எல்லாத்துலையும், இரண்டு, மூன்று முதல் ஆறுவரை அர்த்தம் கண்டு பிடிக்கும் அளவு பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளேன் என்பதை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். அம்மா மட்டுமில்லை, எங்க வீட்டுல குழந்தைகளை இப்படி கொஞ்சுவது வழக்கம். நானும்தான் என் பிள்ளைகளை :-)

டி.ராஜ், கதையில நான் என்று வந்தால் அது நானா? அடுத்து ஒரு காதல் கதை எழுதலாம் என்று உள்ளேன் :-)

சிநேகிதி, அது என்னவோ பெற்ற குழந்தைகளை விட, வளர்ப்பு பிராணிகள் மீது பாசம் அதிகம் இல்லையா? ஆனா பிறகு வாழ்க்கையில் எந்த பிராணியையும் வளர்க்க முடியவில்லை.

 
At Monday, 12 December, 2005, சொல்வது...

நானும் தலைப்பைப்பார்த்துவிட்டு
ஓடிவந்தேன்.உஷா இலங்கைதமிழில்
இது ஒரு மாதிரியான வார்த்தை.
ஏன் ஒரு படத்தில் விவேக், மைனர்
இடம் பெறும் காட்சியில் இந்த வசனம் வரும்.

 
At Monday, 12 December, 2005, சொல்வது...

நீங்கள் பதில் இடும் போது நானும்
பின்னூட்டம் இட்டிருக்கிறேன் போலும்.
நன்றிகள்.

 
At Monday, 12 December, 2005, சொல்வது...

¸Ã¢¸¡Äý, º¢É¢Á¡¨Å Å¢Îí¸û. ÅÆ츢ø þó¾ ¦ÀÂ÷¸û ¯ñÎ. குஞ்சக்கா என்பது எம். எஸ். சுப்புலட்சுமி அவர்களை வீட்டில் கூப்பிடும் பெயர். குஞ்சுமணி என்று புல்லாங்குழல் பெண் வித்துவான் உண்டு - ¾¸Åø சரியா என்று யாராவது சொல்வீர்களா?) இதை தவிர குஞ்சி, குஞ்சா போன்ற பெயர்கள் குழந்தைகளை கூப்பிடுவது உண்டு.

 
At Monday, 12 December, 2005, சொல்வது...

குஞ்சம்மா, குஞ்சம்மான்னு ஒரு அம்மா இருந்தது இந்த கதையில வரமாதிரி, புருஷன் செத்ததும், சொத்தை புள்ளங்க பேர்ல நம்பிகையில்லாம, பொண்டாட்டிப்பேர்ல எழுதிட்டுப் போனான் அந்த புண்ணியவான். ஆத கட்டி காத்தாலும், புள்ளங்க என்னமோ, நமக்குத்தான் சொத்த தரபோகுது இந்த கிழவின்னு என்னமோ பாசமாத்தான் இருந்தானுங்க, கிழவிக்குத் தெரியாதா, தன் பாடை இந்தப் பக்கம் போனா, சொத்த கூறுபோடத் தான் இவெங்க சுத்துரானுங்கன்னு. இருந்த வரை கட்டி காத்ததை, கடைசியில பேரப் பசங்களுக்கு எழுதி வச்சுட்டு செத்துப் போச்சு, கடைசி வரக் கூட வச்சிருந்த நாயிதான் கடைசியில அழுது தீத்துச்சு, அதை வீட்ல வச்சிருந்த அது நினப்பாவே அழுதுமடிஞ்சும்னு தூரப்போயி உட்டுட்டு வந்தாங்களான். உங்கதையை படிச்சோன, ஏதோ என் காதுக்கு எட்டுன கதையை சொன்ன அம்முனு!

 
At Monday, 12 December, 2005, சொல்வது...

//அடுத்து ஒரு காதல் கதை எழுதலாம் என்று உள்ளேன் :-)//

உஷா: சீக்கிரம் ஆகட்டும் ;)

 
At Monday, 12 December, 2005, சொல்வது...

தமிழ் அக்பர் இங்கிலீஷ் அக்பர் எல்லாம் உண்டுன்னு இப்போதான் தெரிஞ்சுது! நல்ல கற்பனை வளம் ! உங்க காதல் கதையிலாவது அழகா ஐ லவ் யூ சொல்ல வையுங்க!!

 
At Monday, 12 December, 2005, சொல்வது...

அழகான, இயல்பான நடை. பிடிச்சுது.

 
At Tuesday, 13 December, 2005, சொல்வது...

//தம்பி டூ பி, கான்வெட்டில் படித்துக் கொண்டிருந்தான். அவன் ஒருமுறை அக்பர் வாஸ் எ கிரேட் கிங் என்று படித்துக் கொண்டிருந்தான். நான் இவர் ·பாண்ட் போட்ட இங்கீலீஷ் அக்பர் என்று நினைத்திருந்தேன். ஆனால் அவன் புத்தகத்தில், என் சரித்திர பாட புத்தகத்தில் இருக்கும் அதே அக்பர் படம்தான் இருந்தது. அப்பாவிடம் கேட்டால் இரண்டும் ஓரே அக்பர்தான் என்றார். அது எப்படி என்று கேட்டதற்கு இனி இப்படி கேள்விக் கேட்டால் உதை வாங்குவாய் என்று சொல்லிவிட்டார்.//

:)))

நல்ல கதை.

 
At Tuesday, 13 December, 2005, சொல்வது...

அனைவருக்கும் நன்றி. குழந்தைகள் உலகம் அற்புதமானது. அதன் அப்பாவிதனம் வெகு அழகு. என் மகன் ஐந்து வயது இருக்கும்,
பழைய கருப்பு வெள்ளை புகைப்படங்களைப் பார்த்துவிட்டு, ஏன் கலர் இல்லை என்றுக் கேட்டான். அப்பொழுது கலர் கண்டுப்
பிடிக்கவில்லை என்று சொன்னதை, அக்காலத்தில் உலகில் எல்லாமே கருப்பு, வெள்ளையில் இருந்ததாய் சொல்லிக் கொண்டு இருந்தான்.

பள்ளியில் ஒருமுறை, ஏதோ ஒரு நாட்டுக்க்காக, அகதிகளுக்கு பழைய துணிகளை பள்ளியில் சேகரித்தார்கள். பி.பி.சியில் அந்த
பிரச்சனையில் அவதிப்படும் அகதிகளை காட்டும் பொழுது ஓடி சென்று டீவி முன்னால் நிற்பான். கேட்டதற்கு, அவன் தந்த உடைகளை ஏதாவது பிள்ளை போட்டு இருக்கா என்று பார்ப்பதற்காம்!
இன்னும் நிறைய இருக்கு, அவனை வைத்து ஒரு சிறுகதையே எழுதியிருக்கேன். முதல் பாதி அந்நாளில் நான் கேட்ட கேள்விகள் :-))

ஆனால் சில பிள்ளைகள் ரத்தத்தில் வரும் குணமா அல்லது வளர்ப்பின் காரணமாகவோ பிஞ்சிலேயே
பழுத்திருக்கும். கயமை என்று சொல்லும் சொல் சரியாய் இருக்கும். சாருநிவேதிதா ஏழை பிள்ளைகளை சொல்லியிருக்கிறார். அது சர்வேயல் பிரச்சனை, இது நல்ல குடும்பத்தில் வளரும் சில பிள்ளைகளின் குணம் அதிர்ச்சியடைய வைக்கும்.

 
At Thursday, 15 December, 2005, சொல்வது...

கதை சொன்ன விதம் ...பாராட்டுகள்

 
At Thursday, 15 December, 2005, சொல்வது...

வசந்தன், கரிகாலன் சொன்னது போலவே எனது அனுபவமும். தலைப்பை பார்த்து என்ன இப்படி வார்த்தையை போட்டிருக்கிறீர்கள் என்று பார்க்க வந்தேன். :)))

 
At Thursday, 15 December, 2005, சொல்வது...

Hi Usha,

yeah...Kids can be very cruel....i dont think their back ground or their upbringing has to do anything with that (atleast to a certain extent)...

Radha

 
At Friday, 16 December, 2005, சொல்வது...

இளந்திரையன் ( பெயர் நல்லா இருக்குங்க) நன்றி,

ராதா இந்த சப்ஜெட் அடுத்து போடரேன்.

ஜெயசந்திரன், உங்கள் ஏமாற்றத்தைப் பாவமாய் இருக்கு, ஆனா இபப்டி ஆகும் என்று நினைக்கவேயில்லை.

 
At Friday, 16 December, 2005, சொல்வது...

உஷா இந்தக் கதையைத் தாமதமாகப் படித்துத் தாமதமாகக் கருத்துச் சொல்வதற்கு முதலில் மன்னிக்க.

ஒரு எழுத்தாளரைப் பார்த்து இது கதைதானா என்று கேட்கக் கூடாது. அந்த அளவிற்கு இயல்பாய் இருக்கின்றது. மிகவும் அற்புதமான கதைகளில் இதுவும் ஒன்று என்பது என் கருத்து. மிக மிக ரசித்துப் படித்தேன். எனது உளமார்ந்த வாழ்த்துகள்.

 
At Sunday, 18 December, 2005, சொல்வது...

ராகவன், உங்கள் பாராட்டுக்கு நன்றி.

 
At Sunday, 01 January, 2006, சொல்வது...

hi my friend;
tamil is a intersting & polite language. but unfortunately i cant read tamil. but i speak.
somehow i apperi it .
tack care
satanickid2002@yahoo.com

 

Post a Comment

<< இல்லம்