Sunday, December 25, 2005

க க கா

உணர்ச்சிவசப்படுபவர்கள் இதைப் படித்துவிட்டு வருந்த வேண்டாம். சும்மா பில்டப்புக்கு என்று நினைத்துவிட்டுப் படித்து பின்பு வருந்தினால் நான் பொறுப்பு இல்லை.

மூன்று க க்கள். அதாவது கடவுள், கவிதை, காதல். இவை மூன்றும் குறித்து பல புலப்படாத விஷயங்கள் உண்டு. இதில் கவிதை என்ற சொல்லுக்கு முன்னால் நவீன கவிதை என்றுப் போட்டுக் கொள்ளுங்கள்.

கடவுள்! இவர்தான் கடவுள் என்று ஒருவரை உலகில் உள்ள அனைத்து மக்களுக்கும் பொதுவாய் ஒன்றை காட்டவே முடியாது. அவர் கடவுள் இவருக்கு ஒப்புதல் இல்லை. இவர் கடவுள் அவருக்கு கடவுளே இல்லை. கடவுள் நம்பிக்கையற்றவர்கள் பற்றி பிரச்சனையே இல்லை. ஆனால் கடவுள் மறுப்பாளர்களோ என்று சொல்லிக் கொண்டு, அரைகுறை நாத்தீக வாதிகள் ( என்னைப் போல) எது கடவுள் என்று ஒருவகையாய் குழம்பி, எதற்கு வம்பு என்று வாயை மூடிக் கொள்கிறார்கள். அதைப் பற்றி யோசிப்பதையே விட்டு விடுகிறார்கள். இவை அப்படியே கவிதை அபிமானிகளுக்கும் பொருந்தும் இல்லையா?

கவிதையும் அப்படியே ஆஹா, ஓஹோ என்று பாராட்டப்படும் கவிதையை ஒருவனுக்குக் காட்டினால், பெரும்பாலோர் அலட்சியமாய் தோளை குலுக்கிக் கொள்வார்கள். சரி, எதுதான் நல்ல கவிதை என்று கேள்வி எழுப்பி அப்பொழுது காட்டப்படும் கவிதையோ கவிதையா என்றே சந்தேகத்தைக் கிளப்பும். அதிலும் என்னைப் போன்ற ஜீவராசிகள், எதுதான் கவிதை என்று கேட்டால், அதற்கு எந்த டெபஷீஷனும் கிடைக்காது. சிறுகதை, நாவல் ,குறுநாவல், கட்டுரைகள், மரபு கவிதைகள், ஹைக்கூக்கள் இவைகளுக்கு எல்லாம் இலக்கணம் சொல்லும் பொழுது, ந. கவிதை மட்டும் இலக்கணத்துக்கு அப்பாற்பட்டதாய், கடவுளைப் போல குழப்புகிறது.

அடுத்து நண்ப, நண்பிகள் காதலிக்கிறேன் என்று காட்டப்படும் ஆணை அல்லது பெண்ணைப் பார்த்ததும் முதலில் அதிர்ச்சியே வரும். என்னைத்த பார்த்து காதலிச்சா அல்லது காதலித்தான் என்ற எண்ணம் மேலோங்க, காதலுக்கு கண்ணில்லை என்ற பழமொழி ஞாபகம் வந்து மனம் தேற்றிக் கொள்ளப்படும். ஆனால் இங்கு நிறையேறாமல் போன அமரகாதல் காவியங்களையோ, இலக்கிய காதலர்களையே உதாரணத்துக்கு எடுத்துக் கொள்ள வேண்டாம்.

இந்த கடவுள், கவிதை, காதல் ஆகிய மூன்றும் புகழ் பெற பின்பாட்டு கூட்டம் தேவை. என் அனைத்து பிரச்சனையும் தீர்ந்தது என்று நாலு பேர்கள் சொல்ல, திடீர் என்று ஒரு கடவுள் புகழ் பெற ஆரம்பிப்பார். இதை கடவுளர்களுக்கும் பொருந்தும். கவிதையும் அப்படியே, இதுதாண்டா கவிதை என்று பிரபலம் ஒருவரோ அல்லது ஒரு கூட்டமோ நற்சான்றிதழ் தந்து அவற்றை போற்றி பாட ஆரம்பித்தால், புரியாத சிலரும் கூட்டு சேர வாய்ப்புகள் உண்டு.

காதலும் அப்படியே. அவன் உன்னை பார்க்கிறானடி/டா என்று பலர் சொல்ல ஆரம்பிக்க, காதல் மூளை விட ஆரம்பிக்கும். மனம் மெல்ல பூ பூக்க ஆரம்பிக்கும். அதை பாராட்டி, சீராட்டி வளர்க்க நண்பர்கள் குழாம் அவசியம் தேவை.

அனைத்தையும் படித்து விட்டு மூன்று க மேல் நம்பிக்கையில்லையா என்று மட்டும் கேட்காதீர்கள். இவை மூன்றுமே வானவில் போல, வெகு அபூர்வமாய் தங்கள் இருப்பைக் கோடிக் காட்டிவிட்டு, மறையும். பார்த்ததோ அல்லது அனுபவித்ததோ அதுதானா என்று கொஞ்சம் குழம்பும் பொழுதே காணாமல் போய் விடும். ஆனால் அந்த அனுபவத்தை, உணர்வுகளை பிறருக்கு எடுத்து சொல்ல முடியாது என்பது மட்டும் நிச்சயம்.

நவீன கவிதை பற்றிய ஒரு சிறுகதை.


டி.வியில் கவிஞர் இரா.அருள் அமுதன்

" விவி டீவில என்ன இண்டர்வீயூ எடுக்கப் போறாங்க! " என்று கவிஞர் இரா.அருள்அமுதன் சொன்னதும் பிள்ளைகள் சந்தோஷக் கூக்குரல் எழுப்பினார்கள்.

" ஆமா..., நீங்க ஒருத்தருதா பாக்கி !" அலட்சியமாய் இழுத்தது அவர் மனைவியின் குரல்.

வழக்கப்படி அதை காதில் போட்டுக் கொள்ளாமல், " இண்டர்வீயூ எடுக்கப்போவது யார் தெரியுமா? சூப்பர் நடிகர் சஞ்சித்..., என்னைக்கு வரப்போகுது தெரியுமா? வர வருஷ பொறப்பு அன்னைக்கு காலைல..."

காதில் விழுந்த செய்தியைக்கேட்டு வாயடைத்து ஊமையானார்கள் மற்ற மூவரும்.

கவிஞருக்கு சமீபத்தில் ஒரு அறக்கட்டளை சார்ப்பாக விருதும் கணிசமான தொகையும் கிடைத்தது. அதை தெரிவித்தப்போதுக் கூட இத்தனை சந்தோஷம் காண்பித்தார்களா என்று ஒருகணம் யோசித்தார்.

"நாலுநாளைக்கி முன்ன விவி டீவில இருந்து போன் செஞ்ஞாங்க. பிசியான நடிகரோட நேரம் கெடைக்கணும் இல்லியா..., இப்பதான் கன்பார்ம் பண்ணினாங்க. சாயந்தரம் நாலுமணிக்கு கெளம்பணும்"

"இனிமேலயாவ்து ஒழுங்கா ராய்ல்டி கொடுங்கன்னு ஒங்க புக்கு போடறவங்கள கேளுங்க! உலகமே ஒங்களப் பாக்கப் போகுதுனா சும்மாவா?" மனைவி சொன்னதும் சரியான பாயிண்ட்.

"ஆமாம்... அந்த ஆளு தமிழருன்னு தெரியும். ஆனா அவுருக்கு கவிதைய பத்தி என்ன தெரியும்?" கவிஞர் ஆரம்பிக்கும் போதே, நடுவில் மகளின் குரல் புகுந்தது.

"என்னப்பா! இப்டி கேட்டுட்டீங்க! அவுரு தென்றல் தீபாவளி மலரில் வியர்வைன்னு ஒரு கவிதை எழுதியிருக்காரு" என்று சொல்லும்போதே, மகன் எள் என்றால் எண்ணையாய், பத்திரிக்கையை எடுத்துக் கொண்டு வந்து நீட்டினான். கவிஞர் இலக்கிய பத்திரிக்கையை மட்டும்தான் படிப்பார். எப்பொழுதாவது வணிகப்பத்திரிக்கைகளைப் புரட்டுவதுடன் சரி!

ஏழை தொழிலாளர்களின் ரத்தம் வியர்வையாய் மாறுவதை புதுகவிதைமாதிரி ஒன்று நடிகரால் எழுதப்பட்டிருந்தது.

"ரொம்ப கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்தவரோ?" ஆரம்பிக்கும்போது பிள்ளைகள், "அய்யே! அவுங்க அப்பாவே பெரிய புரோட்டியூசர், வொய்ப் பெரிய பிசினெஸ்மேன் பொண்ணு. இன்னைக்கு தமிழ் இண்டஸ்ரியின் சூப்பர் நடிகர் அவுருதான். இந்த வருஷத்துல மூணு ஹிட் கொடுத்திருக்காரு!" பிள்ளைகள் நடிகரைப் பற்றிய புள்ளி விவரங்களை அடுக்கின.

பிள்ளைகளின் பொது அறிவு அவரை அதிகம் வியக்க வைக்கவில்லை. பிபிசியில் பொது அறிவுப்போட்டியில் வென்ற நடிகையின் பேட்டிப் பத்திரிக்கையில் வந்திருந்தது. நடிகை என்றால் மூளை இருக்கக்கூடாதா என்று பெருமையுடன் பதில் அளித்திருந்தார். அவர் வியந்துப் போய், பிள்ளைகளிடம் சொன்னப்பொழுது, கேள்விகள் அகில உலகையே கலக்கும் தமிழ்இசையமைப்பாளர் பற்றி என்றும் இதற்கு பதில் தெரியாதவர்கள் இந்தியாவில் யாருமே இருக்கமாட்டார்கள், என்ன ஒண்ணு அந்தம்மா இங்கிலீஷ்ல
பதில் சொல்லிச்சு என்று கவிஞரின் பிள்ளைகள் அலட்சியமாய் சொல்லின.

நடிகரைப் பார்க்கவேண்டும், அவருடன் போட்டோ எடுத்துக்கொள்ள வேண்டும் என்று மகள் பிடிவாதமாய் அவருடன் கிளம்பினாள். நடிகையாய் இருந்தால் மகன் வந்திருப்பான் என்று நினைத்தவாறு அவர் கிளம்பும்போது, மனைவி, " கொஞ்சம் தன்மையா பேசுங்க! ஒங்க மேதாவிதனத்த அங்கக்காட்டாதீங்க! சினிமாவுக்கு பாட்டு எழுத சான்ஸ் கிடச்சா எவ்வளோ நல்லா இருக்கும்!" அவள் கற்பனை சிறகடித்து பறந்தது. வழக்கப்படி தலையை ஆட்டிவைத்தார்.

தன் கவிதை புத்தகங்கள், சில குறிப்புக்களை எடுத்துக் கொண்டு அரைமணி நேரத்துக்கு முன் போய் சேர்ந்தனர். அந்த தனியார் தொலைக்காட்சி நிலயத்தை அடைந்ததும் அவர் பிரமிப்பின் உச்சியை அடைந்தார். பணத்தின் செழுமை ஒவ்வொரு இடத்திலும் வெளிப்பட்டன. அங்கிருப்பவர்களின் பேச்சும், உடையும் அவர் சென்னையில்தான் இருக்கிறாரா என்று அவருக்கு சந்தேகமாய் இருந்தது.

அவருக்கு லேசான மொக்கல் வாடையுடன் பட்டி வேட்டி சட்டை கொடுக்கப்பட்டது. முகத்திற்கு மேக்கப்பும் அடிக்கப்பட்டது.

இந்த அலங்காரத்துடன் படபிடிப்பு தளத்தில் நடிகருக்காக காத்திருந்தார். ஆள் ஆளுக்கு பரபரப்பாய் ஓடினார்கள், செல்பேசினார்கள். ஆனால் படபிடிப்பு ஆரம்பமாகவில்லை. தந்தையும், மகளும் தெய்வமே என்று உட்கார்திருந்தனர். சிறிது நேரத்தில் பட்டுபுடவையில் சர்வ அலங்கார பூஷணியாய் நடிகை அஷ்விதா வந்து அமர்ந்தாள்.

நடிகரின் நேரம் கிடைக்கவில்லையாம். சிறப்பு ஒளிபரப்பு என்பதால் தமிழ் உலகில் வளர்ந்து வரும் தாரகையை அழைத்திருப்பதாக சொல்லப்பட்டது. கவிஞரை அவள் எதிரில் அமர சொன்னார்கள்.

கவிஞர் குழப்பத்துடன் மகளிடம், " ஏட்டி ! இவியளுக்கு தமிழ் தெரியுமா?" பயத்தில் தாய்மொழி வெளிப்பட்டது.

மகள், " பஞ்சாபிப்பா!" என்றாள்.

கவிஞர் பேட்டி ஆங்கிலத்திலோ என்று பயந்துப்போனார். ஆங்கில அறிவு அவருக்கு சிறிது குறைவு, அதிலும் தன் தமிழ் கவிதையை எப்படி ஆங்கிலத்தில் விளக்குவது என்ற யோசனையில் ஆழ்ந்தார்.

புதுகவிதை, நவீன கவிதை இவற்றிற்கு எல்லாம் ஆங்கிலத்தில் என்னவென்று யோசித்தும் ஒன்றும் பிடிபடவில்லை. மகளைக்
கேட்டால் தெரியாது என்று தலையை ஆட்டினாள். ஒரு செல்போன் இருந்தாலாவது, யாரையாவது கேட்டு எழுதி வைத்துக் கொள்ளலாம், இப்போது என்ன செய்வது என்ற பயத்தில் வயிறு கடபுடத்தது. வியர்வை பொங்கி வழிந்தது. துடைக்கலாம் என்றால் மகள், மேக்கப் கலைந்து அசிங்கமாய் ஆகிவிடும் என்று தடுத்தாள்.

கல்லூரி பருவத்தில் மாணவராய் லட்சணமாய் காதலிக்கும்போது கவிதை என்று எழுத ஆரம்பித்தார். அது கல்லூரி மலரில் போடப்பட்டு, அதை சில மாணவர்கள் பாராட்டியதும் கவிதை படைப்பதே தன் இலட்சியமாகக் கொண்டார்.

ஆரம்பத்தில் மரபு கவிதை எழுதியவர், பின்பு அது வழக்கொழிந்துப் போனதால், புதுகவிதை எழுத ஆரம்பித்து பின் நவீன கவிதைக்கு தாவி விட்டார். அவர் எழுதுவது புரியவேயில்லை என்ற குற்றச்சாட்டு பின்பு, அதுவே அவருக்கு புகழைக் கொடுத்து, இன்று விருது வாங்கும் அளவிற்கு வளர்ந்துவிட்டார்.

அடுத்தக்கட்டமாய் மனைவியும், நண்பர்களும் ஏற்றிவிட்டதில் திரைபடங்களுக்கு பாட்டு எழுத முயற்சி செய்துக்கொண்டிருந்தார். ரகசியமாய் குத்துபாட்டு எழுதவும் வீட்டில் பயிற்சி செய்துக் கொண்டிருந்தார். நடிகரிடம் மெதுவாய் வாய்ப்பு கேட்கலாம் என்று நினைத்தவர் நினைப்பில் மண் விழுந்தது.

ஆங்கிலத்தில் கேட்டால் தமிழிலில் பதிலளிப்பது, நடுவில் ஆங்கிலத்தில் ஓரிரு வரிகள் சொல்வது என்று முடிவெடுத்தது,
நிம்மதி பெருமூச்சு விட்டார்,

தன் கவிதைகளில் சிறந்தது என்று நான்கை தேர்ந்தெடுத்து, அவற்றை மனதினுள் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துக் கொண்டு, கொஞ்சம் யோசனையுடன் அஷ்விதா முன்பு போடப்பட்ட நாற்காலியில் அமர்ந்தார்.

நடிகை புடைவை தன் நிறத்துக்கு மேட்ச் ஆகவில்லை, போலி நகைகளை தன் வாழ்நாளில் அணிந்ததேயில்லை என்றும் முணுமுணுத்துக் கொண்டு இருந்தாள். கவிஞரை ஏறெடுத்தும் அவள் பார்க்கவில்லை.

அப்போது ஒரு பெண் எதையோ நீட்டினாள். அதை வாயில் போட்டுக்கொண்டாள் அஷ்விதா. அவள் வாய் அசைப்போட ஆரம்பித்தது. காமிரா பக்கத்திலிருந்து ஒரு ஆள் சிரிப்பு என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்ட போர்ட்டைக் காட்டினான்.

அஷ்விதா தமிழ்நாட்டையே மயக்கும் தன் மோகன சிரிப்பை சிந்தினாள். அப்போது வேறு ஒரு திசையிலிருந்து, அவளுக்கு வழக்கமாய் டப்பிங் வாய்ஸ் கொடுக்கும் குரல் கான்வெட் தமிழில், " வாழ்த்துக்கல்(ள்) கவிஞரே!" என்று கொஞ்சிப் பேச ஆரம்பித்தது.

கவிஞர் நடிகையின் அசையும் வாயைப் பார்த்து பேசுவதா அல்லது குரல் வரும் திசையைப் பார்த்து பேசுவதா என்று குழம்பிப்போய், குத்துமதிப்பாய் பார்வைப் பார்த்து "நன்றி!" என்றார்.

அடுத்து அடுத்து முகபாவனைகளைக் காட்ட சொல்லி அட்டைகள் காட்டப்பட்டன. அதற்கேற்றார்போல் அவளின் முகபாவனைகள் மாறின. எங்கிருந்தோ வந்த குரல் தமிழைக் கடித்து துப்பியது.

நடிகை அஷ்விதாவின் வாய் தொடர்ந்து சூயிங்கத்தை மென்றுக்கொண்டிருந்தது. கவிஞரும் பதிலளித்துக் கொண்டிருந்தார்.

******************************************

appusami.com

14 பின்னூட்டங்கள்:

At Monday, 26 December, 2005, சொல்வது...

இந்தக் கதைக்கு அந்த முன்னூட்டம் பொருந்தியதாக எனக்குப் படவில்லை உஷா. கதையைத் தனிப்பதிவாகவும், க-க-கா ஒப்பீட்டை தனிப்பதிவாகவும், இன்னும் சற்று விரிவாகவும் இட்டிருக்கலாம்.

எல்லா க-க்களிலும், மறுப்பாளர்கள்தான் அதிகப்புகழ் பெறுகிறார்கள்; காதலைத்தவிர. (எனக்கு இன்னும் காதலுக்கும் அஜீரணத்துக்கும் வித்தியாசம் புலப்படவில்லை என்பது தனிக்கதை:-))

மரபான க-க்களின் பரிணாம வளர்ச்சியாய் திடீர் சாமியார்க்கடவுள்கள், போஸ்ட் கார்ட் புதுக்கவிதைகள், செமெஸ்டர் முடிவுக்குள் இயற்கை மரணம் எய்தும் தெய்வீகக்காதல்கள்!

இப்படியும் அலசியிருக்கலாம் இல்லையா?

 
At Monday, 26 December, 2005, சொல்வது...

வால்க..டமீல் உஷாஜி... இப்டி ஆவுது டமீல் வலக்கிறோம்ன்னு நனைச்சா பெர்மையா இருக்குது...
டமீல் வல்ர்போம்... டமில்னாட் காப்பாத்துவோம்

 
At Monday, 26 December, 2005, சொல்வது...

உஷா
மூணு சென்சிடிவ் விஷயங்களையும் கலாய்ச்சுட்டு உணர்ச்சிவசப்படக் கூடாதுன்னு சொன்னா எப்படிங்க? மூணுமே கற்பனா சக்தி அதிகம் உள்ளவங்களால் உணரப் படுவது. வறட்டுத் தத்துவம் பேசுறவங்களுக்கு( நீங்களும் அதிலே ஒண்ணா?) அதைக் கிண்டிக் கிளறி அதில் குளிர் காய்வதில் ஒரு காதல்(மனிதர் உணர்ந்து கொள்ள இது மனிதக் காதல் அல்ல ,வறட்டுக் காதல்)

 
At Monday, 26 December, 2005, சொல்வது...

கடவுள் நம்பிக்கையில்
எனது கருத்தும் ஒத்து போகும் போல,அதற்காக நாத்திகம் பேசி அலைவதில்லை
கோவிலுக்கு போகும் பழக்கம் உண்டு அமைதியாய் அரைமணி நேரம் தியானம் ,அவ்ளோதான் சாமி கும்புடுகின்ற பழக்கம் இல்லை.
நல்ல எண்ணம் கொண்ட மனிதரே தெய்வங்கள்!
அப்புறம் காதல் ஓர் அழகான கவிதை...............
-

 
At Monday, 26 December, 2005, சொல்வது...

நீங்கள் சொல்வது ரொம்ப பிராக்டிகலா இருக்கு. கட+வுள் என்று இறைவன் நம்முள்ளே இருப்பதாகத்தான் எனக்கு போதிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், நடைமுறை வழக்கங்களில் ரொம்ப குழம்பிக்கிடக்கிறது.

நன்றி

ஜோதி

 
At Tuesday, 27 December, 2005, சொல்வது...

சுரேஷ், என்னுடைய கதைகளை தொகுத்து ஒரு இடமாய் இருக்கட்டுமே என்று இங்குப் போடுகிறேன்.
உங்கள் யோசனைகளுக்கு நன்றி.

தேவ், என்னத்த சொல்ல? ஒருமுறை தொலைக்காட்சியில், ஒரு நடிகை கேள்வியை மட்டும் கேட்ட, அதாவது எழுதிக் கொடுத்த
கேள்விகளைக் கேட்க, எழுத்தாளர் தெய்வமே என்று பதிலளிக்க அப்பொழுது தோன்றியது இந்த கதை கரு. யோசித்துப் பாருங்கள்,
பொங்கல் காலை வணக்கம் தமிழகத்தில் அசினும் எழுத்தாளர் சோ அன் சோ வும் சந்தித்தால்! ஐய்யா, இங்க சோ என்றால் துக்ளக்
சோ இல்லைங்க :-)

சிங், ஜோதி! காதல், கடவுள், கவிதை இவை மூன்றின் மீது ஏற்படும் உணர்வுகள், ஒவ்வொரு மனிதனின் தனிப்பட்ட உணர்வுகள். அந்த அனுபவத்தை வார்த்தைகளால் பிறருக்கு விளக்க முடியாது.

தாணு, கோசிக்காதீங்க ! அதுக்காக தானே இந்த கடைசி வரிகளை சேப்பா சேர்த்துட்டேன் :-)

//அனைத்தையும் படித்து விட்டு மூன்று க மேல் நம்பிக்கையில்லையா என்று மட்டும் கேட்காதீர்கள். இவை மூன்றுமே வானவில் போல, வெகு அபூர்வமாய் தங்கள் இருப்பைக் கோடிக் காட்டிவிட்டு, மறையும். பார்த்ததோ அல்லது அனுபவித்ததோ அதுதானா என்று கொஞ்சம் குழம்பும் பொழுதே காணாமல் போய் விடும். ஆனால் அந்த அனுபவத்தை, உணர்வுகளை பிறருக்கு எடுத்து சொல்ல முடியாது என்பது மட்டும் நிச்சயம்.//

 
At Tuesday, 27 December, 2005, சொல்வது...

உஷா
சுரேஸ் சொல்வது போல இந்தக் கதைக்கு அந்த முன்னூட்டம் பொருந்தியதாக எனக்குப் படவில்லை . கதையைத் தனிப்பதிவாகவும், க-க-கா ஒப்பீட்டை தனிப்பதிவாகவும், இன்னும் சற்று விரிவாகவும் இட்டிருக்கலாம்.

இந்தக் கவிதை விடயத்தில் எனக்கும் குழப்பந்தான்.
எல்லாக் கவிதைகளையும் என்னால் ரசிக்க முடிவதில்லை.

 
At Wednesday, 28 December, 2005, சொல்வது...

"க" கன்னியை விட்டுவிட்டீர்களே.

கன்னி (அதாவது பெண்) மனத்தையும் புரிந்து கொண்டவர்கள் யாரு?

நவீன கவிதை மாதிரி நவீன கன்னியும் ஒரு புரியாத புதிர்.

கடவுளும் கன்னியும் ஒன்றோ! கடவுள் நின்று கொல்வான். கன்னியோ (பார்வையால்) அன்றே கொல்கிறாளே!

நன்றி

ஜோதி

 
At Wednesday, 28 December, 2005, சொல்வது...

உஷா & பெனாத்தல் சுரேஷ். உங்கள் பெயர்களும் உங்கள் 'அவன் விகடன்' பதிவுகளும் இந்த வார அவள் விகடனில் வந்துள்ளது. பார்த்தீர்களா? வாழ்த்துகள்.

பொறாமையுடனும் பெருமையுடனும்
குமரன்.

 
At Wednesday, 28 December, 2005, சொல்வது...

க க கா பற்றி நோ கமெண்ட்ஸ். நல்லா எழுதியிருக்கீங்க.

கதையும் நல்ல இருந்துச்சு.

 
At Wednesday, 28 December, 2005, சொல்வது...

//தமிழகத்தில் அசினும் எழுத்தாளர் சோ அன் சோ வும் சந்தித்தால்!
//
தங்கத் தலைவி அசினை கிண்டலடித்த உஷா அவர்களை வன்மையாக கண்டிக்கின்றேன்...

என் தலைவி அசினுக்கு தமிழ் நன்றாக பேசத் தெரியும்.... தமிழ் புரியும்.... என்பதை நினைவில் கொள்ளவும்.

இவன்
அகில உலக அசின் ரசிகர் மன்றத்தின் ஒரே தலைவன்....

 
At Wednesday, 28 December, 2005, சொல்வது...

சந்திரா கவிதைப் பற்றிய உங்கள் "புரிதலும்" அப்படியேவா :-)
கதை, ந. க வைப் பற்றி என்பதால் இங்குப் போட்டேன்.

ஜோதி, அப்படி பார்த்த இன்னொரு "க" வும் இருக்கு, எத்தனை வருஷம் குப்பை கொட்டினாலும் புரிஞ்சிக்காத, புரிந்துக் கொள்ளாத "க". கேக்காதீங்க, ஓ வென்று அழ மகளிர் அணி தயாராய் இருக்கு :-(

குமரன், பார்த்தேன் நன்றி!

குழலி, என்னய்யா இது? ஜெயமோகனில் இருந்து ஞானகூத்தன் கவிதைவரை அசீன் படித்து அலசி ஆராய்ந்து இருக்கிறாரா, எனக்கு தெரியாதே :-), பார்த்து தம்பி, பொங்கல் வணக்கம் தமிழகத்துல செஞ்சிட போறாங்க :-) அப்புறம் தமிழ் கூறும்
நல்லுகம் , பழிய நம்ம மேல போட்டுடப் போகுது :-) ( ஸ்மைலி எத்தனை ஸ்மைலியடி )

 
At Thursday, 29 December, 2005, சொல்வது...

உங்கள் க க கா இன்னும் முழுமையாக வாசிக்கவில்லை. அதற்கிடையில் ஒரு விஷயம் சொல்ல வேண்டும். முன்பே யாராவது சொல்லி விட்டார்களா தெரியவில்லை. கொஞ்சநாளைக்கு (அல்லது ரொம்ப நாளைக்கு) முன்னர் நீங்கள் அவன் விகடன் போட்டால் என்ன என்று எழுதப் போக, அதற்கு சுரேஷ் ஒரு சாம்பிள் அவன் விகடனையே உருவாக்கி இருந்தார்தானே. அதுபற்றி அவள்விகடனில் உங்கள் இருவரின் வலைப்பூ சுட்டிகளுடன் வந்திருக்கிறது. நான் இண்டெர்னெட்டில் பார்த்தேன். வாழ்த்துக்கள்.

 
At Thursday, 29 December, 2005, சொல்வது...

உஷா அக்கா உங்க (அவன் விகடன்) கோரிக்கை நிறைவேறிடிச்சு போல இப்போ சந்தோசம்தானே போட்டுதாக்குங்க

 

Post a Comment

<< இல்லம்