Saturday, December 17, 2005

பிள்ளை நிலா

குழந்தைகள் உலகம் அழகானது. சில விஷயங்கள் வாழ்க்கையில் அலுக்கவே அலுக்காது.முழு நிலாவுடன் கூடிய இரவு, மின்சாரம் இல்லாத, நிலவும் இல்லாத கோடிக்கணக்கான நட்சத்திரங்கள் மின்னும் வானம், கூடவே கடல், குரங்கு, யானை, மேகங்கள் வர்ண கோலம் போடும் வானம் இவை எல்லாம் என் பட்டியல்கள். இதில் அனைத்து உயிரினங்களின் குட்டிகளும் சேர்த்துக் கொள்ளலாம். மனித குட்டி என்றால் மூன்று வயதுக்கு உட்பட்டது.

நேற்று துபாயின் பெரிய மாலின் (Mall) ஒன்றான பர்ஜூமான் செண்டரில் பெரும்பாலும் ஐரோப்பியர்கள் கூட்டம். அங்கத்திய
பொருள்களின் விலை அப்படி. அப்படியே சுற்றி வரும் பொழுது மூன்று வயது பயல், கண்ணிலும் மூக்கிலும் நீர் வழிய அழுகை புரண்டுக் கொண்டிருந்தது. வீட்டில் என்றால் முதுகில் இரண்டு விழுந்து இருக்கும். கடந்துப் போகிறவர்கள் அனைவரும் பார்க்க, பரிதாபமாய் கெஞ்சிய தாய், ஒரு கட்டத்தில் ஒன்று செய்ய இயலாமல். பக்கத்தில் இருந்த இருக்கையில் அமர்ந்து முகத்தை திருப்பிக் கொண்டார்.

குழந்தையின் அழுகை எப்படிப் பட்டது என்பதை சுலபமாய் கண்டுப் பிடித்துவிடலாம். இது எதையோ கேட்டு அடம் பிடிக்கும் அழுகை. அதே இருக்கைகள் ஒன்றில் அமர்ந்திருந்த என்னை அந்த பையன் பார்த்தான். மெல்ல சிரித்தேன். என் மகளோ புருவத்தை உயர்த்து என்ன என்ன என்று கேட்க பயலின் சுருதி கம்மியது. தாயும் திரும்பிப் பார்த்து எங்களைப் பார்த்து புன்னகைக்க பயலுக்கு அவமானமாய் போய்விட்டது. அழுகை நின்று கோபமாய் எங்களை முறைத்துவிட்டு, நேராய் தாயின் மடியில் முகத்தைப் புதைத்துக் கொண்டது. சின்ன அழகான கவிதைபோல, அந்த நிகழ்வு இருந்தது.

என் பாட்டி " கோர்ட்டில் ஏழு வயதுவரை குழந்தைகளின் சாட்சி, தெய்வத்தின் சாட்சியாய் ஏற்றுக் கொள்ளப்படும்" என்பார்கள். எந்த ஊர் வழக்கம் என்று கேட்டுவிடாதீர்கள் :-)

ஆனால் அது உண்மையல்ல! அடுத்தவேளை உணவுக்கு உத்திரவாதம் இல்லாமல் தெருவில் அனாதையாய் திரியும் பிள்ளைகளை விட்டு விடலாம். பசி வயிற்றில் தீயாய் எரியும் பொழுது நியாய, அநியா போதனைகள் எடுப்படாது. அப்படி அலையும் குழந்தைகளை உருவாக்கிய சமுகம்தான் அதற்கு பொறுப்பு. இங்கு நான் சொல்ல வருவது நல்ல குடும்ப சூழ்நிலையில் வளரும் குழந்தைகளைப் பற்றி.

ஆறேழு வயது பெண் குழந்தை, அத்தையின் கல்யாணத்துக்கு தன் தந்தை, அதாவது கல்யாண பெண்ணின்
சகோதரர், செலவு செய்வதைப் பார்த்து, எல்லாத்தையும் தூக்கி கொடுத்துவிடுவதாய் அழுது ஆர்பாட்டம் செய்வதைப் பார்த்துள்ளேன். காரணம் என்ன தெரியுமா? குழந்தையைப் பெற்றவள், 'என்னால் கேட்க முடியவில்லை. என் பெண் கேட்கிறாள்" என்று அந்த குழந்தை பெரியவர்கள் விஷயத்தில் தலையிடுவதை பெருமையாய் நினைத்தது!

பொய் சொல்லுவது, சுயநலம், ஒருவர் சொல்வதை திரித்துப் பேசுவது, வயதுக்கு பொருந்தா பேச்சுக்கள் போன்ற கயமைத்தனம் உள்ள குழந்தைகளைப் பார்த்துள்ளேன். காரணம் ஜீனில் வருகிறது என்றாலும், தாயின் பேச்சுக்களும், கவனமின்மையுமே காரணமோ என்று தோன்றும்.

இது ஓரளவு உண்மை கதை :-)பிள்ளை நிலா

மைக்கும் மேடையும் கிடைத்தால் போதும்...., அறு அறு வென்று அறுக்க ஆரம்பித்துவிடுவார்களே, நம்மவர்கள்! பள்ளியின் தலைமை ஆசிரியர், பள்ளியின் ஆரம்பக்கால வரலாறு, வளர்ச்சி என்று ஆதளகீதாம்பரத்தில் ஆரம்பித்தார்.

பின்னால் ஊளை சத்தம், விசிலும் பறந்தது. ஒருவரும் அவர் பேச்சைக் கேட்காமல் பக்கத்தில் இருப்பவர்களிடம் பேச ஆரம்பித்தனர் அல்லது இடத்தை விட்டு எழுந்துப் போக ஆரம்பித்தனர். என் மனைவி சுவாரசியமாய் பக்கத்து இருக்கை பெண்மணியிடம் தன் மக்கள் பெருமையை அளந்துக் கொண்டிருந்தாள். மைக் சத்தம் தலைவலியாய் இருந்தது. ஒரு சிகரெட் குடித்தால் நன்றாக இருக்கும். ஆனால் இங்கு வேண்டாம் என்று மனதை அடக்கினேன்.

"நான் இங்கே உட்காரலாமா?" என்று அழகான ஆங்கிலத்தில் ஒரு குரல் கேட்டது நான் தலையை ஆட்டியவாறு திரும்பினேன்.

ஆறு வயதுதான் இருக்கும். சல்வார்கம்மீஸ். துப்பட்டாவை நொடிக்கு ஒருமுறை சரி செய்துக் கொண்டிருந்தது. கருத்த நெற்றில் வைத்திருந்த திருநீர் கீற்று தமிழ் என்றது. வரும் கொட்டாவியை அடக்கிக் கொண்டு, " எந்த கிளாஸ்?" என்று தமிழில் கேட்டேன்.

" நான் ஸ்ரேஜர்களிடம் பேச மாட்டேன்" என்றது மறுகணம் ஆங்கிலத்தில்.

குபுக் என்று வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு, அதை வம்புக்கு இழுக்க, " என் பிள்ளைகள் இங்கு படிக்கிறார்கள். மூண்றாம் நம்பர் பஸ்ஸில் ஸ்கூலுக்கு வருவார்கள். அவர்களை உனக்கு தெரிந்தும் இருக்கலாம்..." என்றவாறு என் பெண், பையனின் வகுப்பையும், பேரையும் சொன்னேன்.

" சிக்ஸ் பீ அஸ்வீனா..., அல்ஜாரா சூப்பர் மார்க்கெட்டில் ஏறுவானே..., அவனா?"

" அவனேதான். அம்ருதாவை தெரியுமா?"

"அம்ருதா நல்ல நிறம்! அழகியும் கூட!" தன் நிறக் குறைவின் வருத்தம் குரலில் எதிரொலித்தது. நம் ஆளுங்களுக்கே நிறம் ஒரு பெரிய குறை. பேச்சைமாற்ற நினைத்து, "அஸ்வின்?" என் மகன் நிறத்தில் என்னைக் கொண்டிருந்தான்.

"ஹக்" என்று வாந்தி எடுப்பதுப்போல சவுண்டு கொடுத்துவிட்டு, " நான் பையன்களை வெறுக்கிறேன்" என்றது.

இதை இன்னும் ஐந்தாறு வருடங்கள் கழித்து சொன்னால் உன்னைப் பெற்றவர்கள் உச்சிக்குளிர்வார்கள் என்று நினைத்துக் கொண்டேன்.

அப்போதுதான் அந்த பெண் நான் தமிழில் கேட்ட கேள்விகளுக்கு ஆங்கிலத்தில் பதில் அளித்துக் கொண்டிருப்பது என் மண்டையில் ஏறியது.

"தமிழ் பேச தெரியாதா?" என்றுக் கேட்டேன்.

"எனக்கு புரியும். ஆனால் யாரும் என்னிடம் தமிழில் பேசுவதில்லை. ஆனால் தமிழ்டீவி புரோக்கிராம் பார்ப்பேன்!" என்றது.

" உன் ஊர் எது?" கேட்டதற்கு, " துபாய்தான்" என்றது.

மூன்றாவது தலைமுறையாய் இங்கு பிறந்து வளரும் குழந்தைகளுக்கு இந்த குழப்பம் ஒரு பரிதாபம்தான்.படிக்கும் வரை இருக்கலாம், வேலையும் இங்கேயே கிடைத்தால் பிரச்சனையில்லை. பெண் பிள்ளையாய் இருந்தால் கல்யாணம் ஆகும் வரை தந்தையின் விசாவில் இருக்கலாம் .இல்லாவிட்டால் சொந்த நாடு என்று கைக்காட்டப்படும் இடத்திற்குப் போகவேண்டியதுதான்.

பேரைக் கேட்டதும், " சவுண்ட்" என்றது.

இது என்ன பெயர் ஆச்சரியத்துடன் , "உன் முழு பெயர் என்ன?" கேட்டேன்.

"சவுண்டரம்"

சரிதான், செளந்தரம் சவுண்டரம் ஆகிவிட்டது.

"உன் அப்பா, அம்மா வரவில்லையா?" என்று ஆரம்பித்தேன்.

"நான் பிரைசும் வாங்கவில்லை. எந்த புரோக்கிராமிலும் இல்லை. அதனால அம்மா வரமாட்டேன் என்று சொல்லிவிட்டாள்"

"அப்பா?" என்றதும், " அவர் ஒரு சோம்பேறி" என்று சட்டென்று பதில் வந்தது. "எப்போதும் கம்ப்யூட்டர் முன்னால் உட்கார்ந்திருப்பார். ஆனால் அம்மாவும் சோம்பேறிதான் என்று பாட்டி சொல்லியிருக்காள். அவள் எப்போதும் டீ.வி பார்த்துக்கொண்டிருப்பாள்".

எனக்கு சிரிப்பு வந்துவிட்டது. அதன் வாயைக் கிளற, "நீ அழகாய்தானே இருக்கே! ஏன் புரோக்கிராமில் சேரவில்லை" என்றுக் கேட்டேன். அதன் முகம் பூவாய் மலர்ந்தது.

"ஜென்னி மேடம் மகா பார்ஷீயல்!" சோகமாய் பதில் வந்தது. அதற்கு எல்லாரைப் பற்றியும் ஏதாவது ஒரு கணிப்பு இருந்தது.

எந்த ஒரு முகமூடியும் இல்லாமல், பிள்ளைமனதின் வெகுளிதனம். மனதில் பட்டதை பட்பட்டென்று சொல்லிக் கொண்டிருந்தது. போலிதனமில்லாத அந்தபேச்சு, நாமும் பிள்ளையாக்காவே இல்லாமல் போனோமே என்று ஏக்கமாய் இருந்தது.

தான் டூ ஏவில் படிப்பதாகவும், எவ்வளவு நன்றாகப் படித்தாலும் ஆசிரியர்கள் மார்க் போடுவதில்லை என்றும் எல்லா ஆசிரியர்களும் பார்ஷீயல் என்று ஆணித்தரமாய் சொன்னது.

திடீரென்று திரும்ப, " அம்ருதா மிக அழகி " என்றது.

"அவளிடம் சொல்கிறேன்" என்றேன்.

"நானும் சக்கோலா ·பேர்சஸ் ஆயில் உபயோகிக்கிறேன். இன்னும் கொஞ்ச நாளில் நானும் சிகப்பாய் ஆகிவிடுவேன். நீங்களும் ஸ்மார்ட் அங்கிள்!" என்றது.

நான் பதில் சொல்லாமல் ஆச்சரியத்துடன் பார்த்தேன். திரும்ப என்னை புகழ்ந்து சொல்லிக் கொண்டிருந்தது, சட்டென்று, " எனக்கு மிகவும் பசியாய் இருக்கிறது. காண்டீனில் சிப்சும், ஐஸ்கிரீமும் வாங்கி தருவீர்களா?" என்றுக் கேட்டது.

மனதில் இருந்த பிம்பம் மறுகணம் உடைந்து நொறுங்கியது. ஆயாசத்தை மறைத்தவாறு, " என்னிடம் சில்லறையில்லையே!" என்றேன். ஏமாற்றப்பட்ட உணர்வு என்னைப் பொய் சொல்லவைத்தது.

பிறகு அந்த குட்டி வாயை திறக்கவேயில்லை. என்னாலும் பிறகு பேசமுடியவில்லை.

***


maraththadi.com

10 பின்னூட்டங்கள்:

At Sunday, 18 December, 2005, சொல்வது...

//காரணம் ஜீனில் வருகிறது என்றாலும், தாயின் பேச்சுக்களும், கவனமின்மையுமே காரணமோ என்று தோன்றும்.//


சைல்ட் சைக்காலஜி எனக்குப் பிடித்த துறை. முடிந்த போதெல்லாம் கூர்ந்து கவனித்து வருகிறேன். பி.பி.சியில் இதற்காக இரு 20 வருட ப்ராஜக்ட் நடத்துகிறார்கள். 2000- ல் பிறந்த பல்வேறு குடும்பப் பின்னணியுள்ள குழந்தைகளை 20 வருடங்கள் ஆராய்ந்து விவரணப்படம் எடுத்துவருகிறார்கள். பல சுவையான தகவல்களை இந்த விவரணப்படத்தில் தெரிந்து கொண்டேன்.

குழந்தைகள் பல விஷயங்களைத் தங்கள் சூழலிலிருந்து பற்றிக் கொள்கிறார்கள்; பெரியவர்கள் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதை உன்னிப்பாய்க் கவனித்து அதை மிமிக் செய்கிறார்கள்; தங்கள் செயலுக்கு எப்படிப்பட்ட ரீயாக்ஷன் கிடைக்கிறது என்பதைப் பொறுத்துதான் தங்கள் குணநலன்களை அமைத்துக் கொள்கிறார்கள்.

பொதுவாக பாட்டி,தாத்தாவிடம் வளரும் குழந்தைகளைப் பாருங்கள். பெற்றோரிடம் வளருபவர்களை விட பிடிவாதம் மிகுதியாக இருக்கும். காரணம் அடம் பிடிக்கும் போது பெற்றோரைவிட பாட்டி, தாத்தாக்கள் சட்டென்று இறங்கி வந்துவிடுவதுதான். அடம் பிடித்தால் காரியம் ஆகும் என்ற மனப்பான்மை வளர்வதற்கு இது ஒரு காரணம்.

குணநலத்தில் ஜீனும் முக்கிய பங்கு வகிக்கிறது என்பதையும் மறுக்க முடியாது. ஆனால் அதற்கு சமமாக சூழலும் அமைகிறது என்பது என் கருத்து.

 
At Sunday, 18 December, 2005, சொல்வது...

சைல்ட் சைக்காலஜி எனக்குப் பிடித்த துறை. முடிந்த போதெல்லாம் கூர்ந்து கவனித்து வருகிறேன். பி.பி.சியில் இதற்காக இரு 20 வருட ப்ராஜக்ட் நடத்துகிறார்கள். 2000- ல் பிறந்த பல்வேறு குடும்பப் பின்னணியுள்ள குழந்தைகளை 20 வருடங்கள் ஆராய்ந்து விவரணப்படம் எடுத்துவருகிறார்கள். பல சுவையான தகவல்களை இந்த விவரணப்படத்தில் தெரிந்து கொண்டேன்.

குழந்தைகள் பல விஷயங்களைத் தங்கள் சூழலிலிருந்து பற்றிக் கொள்கிறார்கள்; பெரியவர்கள் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதை உன்னிப்பாய்க் கவனித்து அதை மிமிக் செய்கிறார்கள்; தங்கள் செயலுக்கு எப்படிப்பட்ட ரீயாக்ஷன் கிடைக்கிறது என்பதைப் பொறுத்துதான் தங்கள் குணநலன்களை அமைத்துக் கொள்கிறார்கள்.

பொதுவாக பாட்டி,தாத்தாவிடம் வளரும் குழந்தைகளைப் பாருங்கள். பெற்றோரிடம் வளருபவர்களை விட பிடிவாதம் மிகுதியாக இருக்கும். காரணம் அடம் பிடிக்கும் போது பெற்றோரைவிட பாட்டி, தாத்தாக்கள் சட்டென்று இறங்கி வந்துவிடுவதுதான். அடம் பிடித்தால் காரியம் ஆகும் என்ற மனப்பான்மை வளர்வதற்கு இது ஒரு காரணம்.

குணநலத்தில் ஜீனும் முக்கிய பங்கு வகிக்கிறது என்பதையும் மறுக்க முடியாது. ஆனால் அதற்கு சமமாக சூழலும் அமைகிறது என்பது என் கருத்து.

 
At Sunday, 18 December, 2005, சொல்வது...

This comment has been removed by a blog administrator.

 
At Sunday, 18 December, 2005, சொல்வது...

உஷா
இதில் மரபணுவின் பங்கைவிட மனநிலை அதிகம் பங்கேற்கிறது. தெரிந்தும் தெரியாமலும் பெற்றோர்களே சில சமயம் பழக்க்ங்கள் வளர காரணமாயிருக்கிறார்கள்.பெற்றவர்கள், மற்ரும் நண்பர்கள் பழங்கங்களை பார்த்து குழந்தைகள் அதை பழகுகிறார்கள். சில குழந்தைகள் பெற்றோரின் அதீத கண்டிப்பால் பொய்யும் சொல்ல பழகுகிறார்கள். இதற்கு அவர்களாஇ காயப்படுத்த விருப்பம் இல்லாததும் தண்டணைக்கான பயமும் காரணம். நான் இப்போதெல்லாம் நிறைய இது மாதிரியான குழந்தைகளை பார்க்கிறேன்.

 
At Sunday, 18 December, 2005, சொல்வது...

நிலா, நீங்கள் சொல்வதைப் போல, இது சுவாரசியமான சப்ஜெட்தான். அதைப் போல, வயசான பெரியவர்கள், எண்பது
வயதுக்கு மேலே போக போக, குழந்தையாகிவிடுவது கவனிக்க வேண்டிய இன்னொரு சுவாரசியமான விஷயம்.
எனக்கு தெரிந்தவர், மிக அமைதியான பெண். கோழையல்ல, குடும்பத்தில் எல்லாரும் பேசினால் சண்டை அதிகமாகும் என்று
பிரச்சனை வந்தால் கூட அமைதியாகிவிடுவார். அவர் பெண் மூன்றாவது படிக்கிறாள், வயதுக்கு ஒவ்வாத அதி பேச்சு! என்ன சாமார்த்தியம் அம்மாவைப் போல இல்லை என்று அவர்கள் உறவினர்கள் சொல்லும்போது வேதனையாய் இருந்தது. அமைதியாய் இருந்ததற்கு மக்கு பட்டம்!

பி.கு நிலா, நீங்கள் மூன்றுமுறை கிளிக் செய்தீர்கள் போல இருக்கு, மூன்று பின்னுட்டம் வந்திருந்தது. இரண்டாவதும் பதிவாகுமா
என்று செக் செய்துப் பார்த்து அழித்துவிட்டேன்.

 
At Sunday, 18 December, 2005, சொல்வது...

பத்மா, எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே! ஆனால் அதீத கண்டிப்போ அல்லது அதீத சுதந்திரமோ
தவறான பாதைக்கு போக வைக்கிறது. ஆனல் இவற்றின் எல்லை எது என்று சொல்ல முடிவதில்லை. வெகு மோசமான
பெற்றோர்களுக்கு மிக நல்ல பிள்ளைகள் அமைவதும் இன்னொரு அதிசயம்.
ஏதோ அவரவருக்கு தெரிந்ததுப் போல வளர்கிறோம். பிறகு அவர்கள் தலைவிதி :-)

 
At Monday, 19 December, 2005, சொல்வது...

எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. பேசாமல் ஒரு +வ் போட்டு விடுகின்றேன்.

 
At Monday, 19 December, 2005, சொல்வது...

//ஏதோ அவரவருக்கு தெரிந்ததுப் போல வளர்கிறோம். பிறகு அவர்கள் தலைவிதி :-) //
ஒரே வரியில் அசத்தல் உண்மை. சரியா வளர்த்தோமான்னு காலம் தான் பதில் சொல்லும் போல....

 
At Monday, 19 December, 2005, சொல்வது...

Very true Usha!. I am having a gala time with my daughter. She is turning two soon.

-Satheesh

 
At Tuesday, 20 December, 2005, சொல்வது...

ராகவன் மீண்டும் நன்றிகள் :-)

டி.ராஜ். எத்தனையோ பாசம் காட்டி வளர்த்த பிள்ளைகள், பெற்றோர்களை கவனிக்காமல் விடுவதும், அவர்கள் மேல்
வெறுப்பை உமிழ்வதும் பார்த்துக் கொண்டு இருக்கும் விஷயம் தானே? காரணம் ஏன் என்று யாருக்கும் தெரியாது.
சத்தீஷ், மிக நல்லது. இந்த மழலை உலகம் அழகு. அதை அனுபவியுங்கள்.

 

Post a Comment

<< இல்லம்