Wednesday, December 07, 2005

நடேசன் சார்

பள்ளி, கல்லூரிகளில் அவ்வப்பொழுது ஒரு சூப்பர் ஸ்டார் தோன்றும். படிப்பு, விளையாட்டு, நாடகம், நடனம் என்று எல்லாவற்றிலும் வெளுத்து வாங்கி, ஆசிரியர்கள் முதல் மாணவிகள் வரை அனைவரின் மனதுக்கும் இனியவராய் இருப்பார்கள். அந்த தகுதிகளால் கர்வமோ, மிதப்போ இல்லாமல் சாதாரணமாய் இருப்பார்கள்.

அப்படி பட்டவள்தான் அவள். பெயர் பிரியா என்று வைத்துக் கொள்ளலாம். பள்ளியே அவளைக் கொண்டாடியது. பள்ளிக்குப் போகும் வழியில் புதியதாய் குடிவந்தார்கள். பிரியா ஆறாவது வகுப்பு. அவள் அக்கா எட்டாவது என் வகுப்பு ஆனால் செக்ஷன் வேறு. பிரியாவின் அழகும், புத்திசாலிதனமும், பதினோறு வயதுக்குரிய அப்பாவிதனமும், எனக்கு அக்கா, தங்கையில்லாததாலும் அவள் என் மனதை வெகுவாய் கவர்ந்தாள். வீட்டில் எப்போதும் அவளைப் பற்றியே சொல்லிக் கொண்டு இருப்பேன். ஆறாவது முடிந்து ஏழாவதில் கான்வெண்டில் சேரப் போகிறாள் என்று அவள் அக்கா சொன்னாள்.

அதில் இன்னொரு விஷயம் என்னவென்றால் அவர்கள் அறிமுகமான இரண்டு வருடத்தில் நாலைந்து வீடுகள் மாறி, நான் பத்தாவது வரும்பொழுது, அவர்கள் முற்றிலும் வேறு இடத்திற்கு போய் விட்டார்கள். வாடகை வீடானால் நல்ல வசதியானவர்களே. அவளை மறந்தே போயிருந்தப் பொழுது, தினத்தந்தியில் ஒரு ஸ்டில். படம் இரட்டை இசையமைப்பார்களில் ஒருவரின் சொந்த தயாரிப்பு. நாயகனும் அரை சத வயதை எட்டிய அவரே. அன்று அந்த படத்தைப் பார்த்து என் மனம் பட்ட பாடே இந்த கதை. எனக்கு நன்றாய் தெரியும், பிரியா கதாநாயகியாய் அறிமுகம் ஆனப் பொழுது பதிமூன்று அல்லது பதினாலு வயதுதான் இருக்கும். லோ பட்ஜட் படம். ஓடவில்லை. பல வருடங்கள் கழித்து தொலைக்காட்சியில் பார்த்தப்பொழுது, மிக ஆபாசமாய் இருந்தது. பிறகு சில படங்கள் தங்கையாய் நடித்து, இருபது வயதினுள் காணாமல் போய், ஆனால் ஒழுங்காய் கல்யாணம் செய்துக் கொண்டு வாழ்ந்தவர், இப்பொழுது சின்ன திரையில் தலையைக் காட்டிக் கொண்டு இருக்கிறார்.

போன பதிவான பாகவதர், நடிகையர்கள்... மற்றும்? அதன் தொடர்ச்சி இது. இவரைப் பற்றியே அந்த பதிவின் பின்னூட்டத்தில் குறிப்பிட்டேன்.

இந்த சிறுகதை "பெண்கள் சந்திப்பு மலர்- 2005" வெளி வந்துள்ளது.


நடேசன் சார்

அரை ஆண்டு தேர்வு முடிந்து நேற்றுதான் விடுமுறை ஆரம்பித்தது. காலை பத்துமணிக்கு சுகமாய் கதை புத்தகம் வாசித்துக் கொண்டு இருக்கும் பொழுது, வாசலில் அப்பா யாரையோ வரவேற்கும் சத்தம் கேட்டு, எட்டிப் பார்த்தால் நடேசன் சார்! ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி பார்த்தது, சார் அப்படியேயிருந்தார். தலை முடியை பின்பக்கமாய் சீவி, நெற்றியில் சந்தனம் துலங்க, பேண்டு போட்டாலும், வேஷ்டி கட்டினாலும் ஜிப்பாதான் போடுவார். அவரைப் பார்க்கும்பொழுதெல்லாம் பிரமிப்பாய் இருக்கும். என்ன கம்பீரம் எங்க அப்பாவும் இருக்கிறாரே, எப்பொழுதும் அழுக்காய், லொங்கு லொங்கு என்று வேலை வேலை என்று! இந்த மாதிரி அப்பா இருந்தா எவ்வளவு நல்லா இருக்கும் என்று அவரைப் பார்க்கும்பொழுது எல்லாம் தோணும். பார்க்கிறவர்கள் யாருக்கும் அவர் மீது மரியாதைதான் தோன்றும். அப்பாக்கூட அவர் என்ன சொன்னாலும் சரி, சரி என்று தலையை ஆட்டிக் கொண்டு இருப்பார். அவருக்கு தெரியாத விஷயமே கிடையாது.

அவர் வந்து போன சில நாளுக்கு சார் சார் என்று நடேசன் சார் புராணம் பாடிக் கொண்டு இருப்பேன் என்று எல்லாரும் வீட்டில் கேலி செய்வார்கள். எங்களுக்கு சொந்தமெல்லாம் இல்லை. சாரோட அப்பாவும், எங்க தாத்தாவும் சேர்ந்து வேலை செஞ்சாங்களாம். முசிறியில் இருந்து சென்னைக்கு வந்தால் வீட்டுக்கு வந்து எங்களைப் பார்க்காமல் போக மாட்டார்கள்.

அட, இந்த முறை அத்தையும், முகுந்த்தும், ராதிகாவும் கூட வந்திருந்திருக்கிறார்களே! முகுந்த் என்னைவிட ஒரு வகுப்பு சிறியவன், ஏழாவது படிக்கிறான். ராதிகா ஒன்பதாவது, என்னைவிட ஒரு வகுப்பு பெரியவள். அவர்களைப் பார்த்து சிரித்துக் கொண்டே, சார் கையில் இருந்த பையை வாங்கி ஓரமாய் வைத்தேன். நல்லா படிக்கிறீயாமா என்று என் முதுகைத் தட்டிவிட்டு அப்பாவுக்கு எதிரில் இருந்த சோபாவில் உட்கார்ந்தார். நான் வழக்கப்படி அப்பா உட்கார்ந்திருந்த நாற்காலியின் கை மீது உட்கார்ந்து அப்பாவின் தோள் மீது கையைப் போட்டுக் கொண்டேன். அம்மா முறைப்பது தெரிந்தும் அந்த பக்கமே பார்க்கவில்லை. போன வாரம்தான் இப்படிதான், அப்பா டிவி பார்த்துக் கொண்டிருந்தப் பொழுது நாற்காலி கையில் உட்கார்ந்து அப்பா தோளைப் பிடித்துக் கொண்டு உட்கார்ந்திருந்ததைப் பார்த்துவிட்டு அம்மா, வயசு பொண்ணு இப்படி எப்பப் பார்த்தாலும் தொட்டுக்கிட்டு இருக்கிறது நல்லா இல்லே என்று திட்ட ஆரம்பிக்க, நா பெத்த புள்ளய அசிங்கமாவா பேசறேன்னு அப்பா, அம்மாவை அடிக்கவேப் போய்விட்டார்.

அத்தை "நல்லா வளர்ந்துட்டாளே?" என்றுச் சொல்லிவிட்டு அம்மாவிடம் குசுகுசுக்க ஆரம்பித்தார். அம்மாவும் சிரிப்புடன் தலையை ஆட்டியவாறு பதில் சொல்வதைப் பார்த்து முறைத்தேன். வேற என்ன? எட்டாம் வகுப்புக்கு வந்ததில் இருந்து யார் என்னைப் பார்த்தாலும் அம்மாவிடம் முதல் கேள்வி இதுதான். ஆனால் இன்னும் இல்லை. ஆனால் வகுப்பிலும் பிள்ளைகள் போன வருஷமே இதைப் பற்றி சொல்லிவிட்டார்கள்.

சார் "என்னத்த வளர்ந்துட்டா? எனக்கு இன்னும் கொழந்ததான்" என்றவர், எட்டி என் கையைப் பிடித்து இழுத்து பக்கத்தில் உட்காரவைத்துக்கொண்டு என்னுடையப் படிப்புப் பற்றிக் கேட்டார். அதற்காக காத்திருந்த நான், போன டெஸ்டில் வாங்கிய மார்க்குகளை சொல்ல ஆரம்பித்தேன். நல்லா படிக்கணும் என்று முதுகைத் தட்டும் பொழுது, பெருமையாய் இருந்தது.

அதற்குள் அம்மா என்னை எழுந்து உள்ளேப் போய், எல்லாருக்கும் பிரிஜ்ஜில் இருந்து ஐஸ்தண்ணியை எடுத்து சாதா தண்ணியைக் கலந்துக் கொடுக்க சொன்னாள்.

ராதிகா ரெட்டை பின்னலும், சம்மந்தமேயில்லாமல் லூசாய் புல் ஸ்லீவ்ஸ் சுடிதாரில் இருந்தாள். அத்தை "தாவணி போடுனா கேக்க மாட்டேங்குது. மாடன் டிரஸ்தான் போடுவேன்னு ஓரே அடம்" சுடிதாரை மாடன் டிரஸ் என்றதும் சிரிப்பு வந்துவிட்டது. ஆனால் அடக்கிக் கொண்டேன்.

"என்னோட கவிதை தொகுப்பு ஒண்ணு அடுத்த மாசம் வெளியாகப்போகுது. நம்ம எம்.எல்.ஏ க்கு என் மேல ரொம்ப மரியாதை. அவர் தலைமைல தான் விழா. இன்விடேஷனை எம்.எல்.ஏ ஹாஸ்டலுக்கு போய் நேரா கொடுக்கணும்." என்றவாறு சார் அழைப்பிதழை எடுத்துக் கொடுத்தார். நானும் ஒன்றை எடுத்து வைத்துக் கொண்டேன்.

"இவளுக்கு ஆர்.எம்.கேவில பட்டு பொடவ எடுக்கணுமாம். நீங்க போய் பொடவ எடுத்துக் கொடுத்துட்டு, காஞ்சிபுரத்துக்கு வண்டி ஏத்தி விட்ட முடியுமா? அங்க அம்மா வீட்டுல நாலு நாள் இருந்துட்டு இவங்க மூணு பேரும் நேரா முசிறி வந்துடுவாங்க. நா ராத்திரி வண்டி பிடிச்சி இன்னைக்கே முசிறி போயாகணும்" என்றார்.

"அது என்ன காஞ்சிபுரத்துல கெடைக்காத பட்டுசேலையா?" என்று பாட்டி ஆச்சரியப்பட, " அங்க பட்டும், ஜரிகையும் நல்லா அழுத்தமாதான் இருக்கும், ஆனா டிசைன்ஸ் இவ்வளவு கெடைக்காது" என்றார் அத்தை. "அதெல்லாம் இல்லைங்க. அங்கையும் நல்ல டிசைன்ஸ் கிடைக்குது. இவ இந்த தடவ இங்க வாங்கணும்னு தீர்மானிச்சிட்டா" என்றார்.

அப்பா, " நாங்க பாத்துக்குறோம். நீங்க கவலைப்படாம ஒங்க வேலைய பாருங்க" என்றார்.

அப்பொழுது முகுந்தும், ராதிகாவும் ஏதோ சொல்ல, அத்தை, " இதுங்க ரெண்டும் ப்ரியாவை பாக்கணுனே வந்திருக்குதுங்க" என்றவர், என்னைப் பார்த்து, " அவ வீட்டுக்கு கூட்டிக்கிட்டு போறீயாமா?" என்றுக் கேட்டார்.

நான் சங்கடமாய் அம்மாவைப் பார்த்தேன். இது ஒரு பெரிய பிரச்சனையாய் இருக்கிறது. வீட்டுக்கு யார் வந்தால் ப்ரியாவை பற்றி பேச வேண்டியது, பிறகு அவ வீட்டுக்குப் போகலாமா என்று ஆரம்பிக்க வேண்டியது!

அம்மா " மொதல்ல போன் செஞ்சி விசாரி" என்றதும், அம்மாவையே செய்ய சொன்னேன். நல்லவேளையாய் அவள் ஷ¥ட்டிங் போய்விட்டாள் என்று சொன்னார்கள். ஆனால் வீட்டு வாசலில் சிவப்பு ஜென் நின்றிருந்தது. அது வீட்டில் இருந்தால் அவளும் வீட்டில் இருக்கிறாள் என்று எனக்கு தெரியும். தெருவின் எதிர்புறத்தில் மூன்றாவது வீட்டில் குடியிருக்கும் பிரியா என் வகுப்பில்தான் படித்துக் கொண்டு தெருவில் விளையாடிக் கொண்டு இருந்தாள். திடீரென்று சினிமாவில் நடிப்பதாய் செய்திதாளில் அவள் படம் வந்தது. பள்ளி கூடத்துக்கும் வருவதில்லை. என் வகுப்பு பிள்ளைகளுடன் ஒரு நாள் அவள் வீட்டிற்குப் போய் கேட்டப் பொழுது வாசலிலேயே நிற்க வைத்து இனி அவள் பள்ளிக்கூடம் வரமாட்டாள் என்று சொல்லி அனுப்பிவிட்டார்கள்.

ராதிகாவும், முகுந்தும் ஜன்னல் வழியாய் பிரியா வீட்டையேப் பார்த்துக் கொண்டு இருந்தார்கள். திரும்ப திரும்ப அவளைப் பற்றிக் கேட்டும் எனக்கு ஒன்றும் தெரியாது என்று நான் சொன்னதை அவர்கள் நம்பவில்லை. எங்கள் தெருவிலேயே இருக்கும் அவளைப் பார்த்தே பல மாதங்கள் ஆகிவிட்டது. அதிலும் தினதந்தியில் குளிக்கிற மாதிரி அரைகுறை உடையில் அவள் படத்தைப் பார்த்ததும் ஏனோ அவளை பிடிக்காமல் போய்விட்டது. தெருவில் அவள் வீட்டு வழியாய் போனால் கூட அவள் வீட்டுப் பக்கம் திரும்பாமலே போவேன். ஆரம்பத்தில் ஒரிரண்டு தடவை அவள் மாடியில் நின்றுக் கொண்டு கூப்பிட்டும், காதில் விழாத மாதிரி வேகமாய் போய்விட்டேன்.

சார் கிளம்பியதும் நாங்கள் எல்லாரும் டி.நகர் போய் புடைவை எடுத்துவிட்டு முருகன் இட்லி கடையில் சாப்பிட்டுவிட்டு அவர்கள் மூவரையும் காஞ்சிபுரத்துக்கு பஸ் ஏற்றி அனுப்பிவிட்டு நானும் அம்மாவும் வீடு வந்து சேரும்பொழுது எட்டாகிவிட்டது. காலையில் பாதியில் விட்ட மர்மநாவலில் சுவாரசியமாய் ஆழ்ந்திருந்தப்பொழுது, போன் அடித்தது.

எடுத்தால் நடேசன் சார் மாதிரி இருந்தது. கொழ, கொழவென்று பேச்சு தெளிவாய் இல்லை. பின்னால் ஓரே சத்தம், சிரிப்பு வேறு.

"ஹலோ ஹலோ" என்றுக் கத்தினேன்.

"சித்ராவாமா? ஒன் பிரண்டு பிரியா போன் நம்பர் கொஞ்சம் சொல்றீயாமா?" என்றுக் கேட்டார். ஒரு நிமிடம் எனக்கு எதுவுமே புரியவில்லை. சார் என்னக் கேட்கிறார்? அவளோட நம்பர் இவருக்கு இந்த நேரத்தில் எதுக்கு? ஏதோ புரிந்தமாதிரி இருந்தது. பயத்தில் நெஞ்சு அடித்துக் கொண்டது. என்ன பதில் சொல்வது என்றுத் தெரியாமல், எனக்கு தெரியாது என்று பட்டென்று சொல்லிவிட்டு ரீசிவரை வைத்துவிட்டேன். இந்த நேரத்துல யாரு என்றுக் கேட்டவாறு அப்பா வந்தார்.

ராங்நம்பர் என்று முணங்கினேன். ஏம்மா மூஞ்சி ஒரு மாதிரி இருக்கு என்றுக் கேட்டுக் கொண்டே பக்கத்தில் வந்தார். முதல் முறையாய் அப்பா அருகில் வரவர உடம்பெல்லாம் கூசியது. அவர் கை என்னைத் தொடும் முன்பு உடம்பை சுறுக்கிக் கொண்டு உள்ளே சென்று படுத்துவிட்டேன். திரும்ப போன் வருமா என்று காதை தீட்டிக் கொண்டிருந்தேன். ஆனால் வரவில்லை.

நடேசன் சார் முகத்திலேயே எச்சில் துப்பி, நன்றாக அடி வைக்க வேண்டும் என்று ஆத்திரமாய் வந்தது. காலையில் அவர் தந்த அழைப்பிதழை எடுத்து கவரில் தூ தூ என்று துப்பிவிட்டு, அப்படியே சுருட்டி குப்பை டப்பாவில் போட்டு விட்டு படுத்தேன். மூடிய கண்ணில் பிரியா தினதந்தியில் டவல் கட்டிக் கொண்டு குளிக்கும் படம் அப்படியே வந்தது. என்னால் அழுகையை அடக்க முடியவில்லை.


*********************************
ராமசந்திரன் உஷா
பெண்கள் சந்திப்பு மலர் - 2005

13 பின்னூட்டங்கள்:

At Wednesday, 07 December, 2005, சொல்வது...

பதின்ம வயதில் சில விஷயங்கள் எவ்வாறு புரிந்துபோகிறது என்பதற்கு இது ஒரு சான்று உஷா.

 
At Wednesday, 07 December, 2005, சொல்வது...

romba nalla ezhuthi irukeenga.
Nalla nadai.

Padichuttu manasu baarama irundhuthu

 
At Wednesday, 07 December, 2005, சொல்வது...

இங்கு உங்கள் எழுத்து நடையை பாராட்டுவதா இல்லை நீங்கள் எழுதிய தொகுப்பு என்னை எந்த அளவு பாதித்தது என்பதை கூறுவதா தெரியவில்லை.

 
At Wednesday, 07 December, 2005, சொல்வது...

நடேசன் பக்கத்துல 'சார்' எதற்கு என்று தெரியவில்லை.

 
At Wednesday, 07 December, 2005, சொல்வது...

சம்பவங்களை கோர்வையா எழுதி கதை சொல்லி முடிக்கிறப்ப, ஆம்பளங்களுக்கு, இதல என்ன இருக்கு, சொம்மா கவர்ச்சிகறமா சம்பவங்களை படிக்க இன்ட்ரஸ்ட்டாதான் இருக்குன்னு தட்டிவிட்டு போகத்தான் தெரியும். ஆனா அந்த விடலையில பொன்புள்ளங்க மனநிலை எப்படி குழ்ப்பமும் பயமுமா இருக்கும், அந்த மாதிரி சூழ்நிலையிலங்கிறதை, சாரி, பசங்க உணரமுடியாது, ஆனாலும் எழுத்துகளோட தாக்கம் கொஞ்சம் தெரியதான் வக்கிது. வாழ்த்துக்கள்!

 
At Wednesday, 07 December, 2005, சொல்வது...

முதல் பாதியில் விட்டு இப்போதான் படிச்சுமுடிச்சேன்.
ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க... இத... இதத்தான் எதிர்பார்த்தேன்!
இது எதுவாயிருந்தாலும் நல்லாயிருந்துச்சு.

பி.கு: கடைசிபத்தி இல்லாமயிருந்திருக்கலாமோன்னு தோணுது.

 
At Thursday, 08 December, 2005, சொல்வது...

நல்ல ஆக்கம். பாராட்டுக்கள்.

 
At Thursday, 08 December, 2005, சொல்வது...

தாணு, ஒரு நிமிடத்தில் "வாழ்க்கை கல்வி" புரிந்துப் போனது. ஆனால் அதிர்ச்சி இன்னும் இருக்கிறது. அதனால்தான் போன பதிவில் எழுதிய "பதிமூன்று வயது பெண்களை" சினிமாவில் விடும் பெற்றோர்களைக் குறித்தும், பண்டரிபாயின் ஆதி கால படத்தையும் சொன்னது.

டுபுக்கு நன்றி.

அன்புள்ள எதிரி,
நன்றி. இங்கு "நடேசன் சார்" என்பது அந்த பெண் கூப்பிடும் பெயர். அவர் மீது இருக்கும் மரியாதை குறைந்தாலும் , கூப்பிட்டு
பழகிய பெயர், அப்படியே தானே வரும்? ( இப்படி எல்லாமா எடக்குமடக்காய் கேள்வி கேட்பது :-)

பல்லவி, டி.ராஜ், மணியன் நன்றி.

வெளி கண்ட நாதரே, தட்டச்சில் ஏன் இத்தனை பிழைகள்? நீங்கள் சொல்வது மிக உண்மை. அந்த போட்டோவைப் பார்த்த அன்று என்னால் தூங்கவே முடியவில்லை.

அன்பு, கதையோ, கவிதையோ அதுவேயல்லவா எழுதிக் கொள்கிறது :-)
சிறுகதை வடிவத்திற்கு முடிவு ஒன்று வேண்டுமே, அதற்காக அப்படி அமைத்தேன். வேறு எப்படி என்று எனக்கு தெரியவில்லை.

இந்த கதை "காலம்" (என்று நினைக்கிறேன்,)போட்டியில் பரிசு கிடைக்கவில்லை. ஆனால் இன்று நீங்கள் நன்றாக வந்துள்ளது
ஒரு சொல் இன்னும் என்னை எழுத ஊக்குவிக்கும். மீண்டும் அனைவருக்கும் நன்றி.

 
At Thursday, 08 December, 2005, சொல்வது...

சகோ. உஷா..

>> முதல் முறையாய் அப்பா அருகில் >>வரவர உடம்பெல்லாம் கூசியது. அவர் >>கை என்னைத் தொடும் முன்பு >>உடம்பை சுறுக்கிக் கொண்டு >>உள்ளே சென்று படுத்துவிட்டேன்

மனதை பாதித்த வரிகள் இவை..

-
செந்தில்/Senthil

 
At Friday, 09 December, 2005, சொல்வது...

நன்றி செந்தில், உங்களைப் போன்ற நண்பர்களின் இந்த டானிக் வார்த்தைகள் இன்னும் நன்றாக எழுத வேண்டும் என்ற
எண்ணத்தை அதிகரிக்கும்.

 
At Wednesday, 14 January, 2009, சொல்வது...

நல்ல கதை. கதையின் போக்கில் முடிவு ஒரு மாதிரி தெரிந்து விட்டது. உங்களை அதிகம் இந்த சம்பவம் பாதித்திருக்கிறது என நினைக்கிறேன். கதையை நடேசன் சாரோடு போன் பேசியதோடு முடித்திருக்கலாம்.

 
At Sunday, 18 January, 2009, சொல்வது...

2005 ல் எழுதி போட பட்ட கதைக்கு முந்தா நாள் உங்கள் கமெண்ட் பார்த்து ஆச்சரியம் அடைந்தேன்.
நன்றி திரு Na2

 
At Sunday, 14 October, 2012, சொல்வது...

ஓக்கே! இப்போ மனசிலாயி:(

 

Post a Comment

<< இல்லம்