Sunday, January 15, 2006

என் நாட்குறிப்பில் இருந்து 14- 1- 2006

இந்த முறை பொங்கலுக்கு வெறும் மஞ்சளும், இஞ்சியும் ஒரு கொத்து மட்டுமே கிடைத்தது. கரும்பு, மிக மெல்லியதாய் வெள்ளையும், மஞ்சளும், சில இடங்களில் கரும்பு வண்ணத்திலும் ஷோவிற்கு வைப்பதுப் போல, மூன்று மட்டுமே ஹைபர் மார்கெட்டில் நின்றிருந்தது. விலை எட்டு திராம்ஸ். ரூமாய் மதிப்புக்கு பன்னிரண்டால பெருக்கிக்குங்க. எப்பொழுதும் துண்டு கரும்பு கிடைக்கும். இரண்டு துண்டு வாங்குவோம்.

இன்னும் டிரெடிஷனலை செளகரியப்பட்டப் போது கடைப்பிடிக்கும் வீட்டுக்காரர், கரும்பு வேண்டுமா என்றதும், வழக்கப்படி உங்க இஷ்டம் என்று கழண்டுக் கொண்டேன். இது என் கணவர் சைக்காலஜி! வேண்டாம் என்றால் ஏதாவது ஸ்பீச் கொடுத்துவிட்டு கட்டாயம் வாங்குவார். உங்க இஷ்டம் என்றதும் கொஞ்சம் குழம்பி, முழித்துவிட்டு வேண்டாம் என்று சொல்லிவிட்டார். அந்த கரும்பின் பருமன், முருங்கைகாயை அளவு இருந்தது.

பொங்கல் அன்று பள்ளிக்கூடமும் உண்டு, அலுவலகமும் உண்டு. காலையில் எழுந்து மகனை ஏழு மணிக்கு அனுப்பிவிட்டு, ஒரே ஒரு டம்ளர் அரிசி இட்டு, வாணலியில் பொங்கல் கிண்டும் பொழுது பால் பொங்கியது. வாய் "பொங்கலோ பொங்கல்" என்று முணுமுணுக்கும் பொழுது, ஏன் பொங்கல் செய்ய வேண்டும் என்று தோன்றியது.

மனம் பின் நோக்கி ஓடியது. அது ஒரு அழகிய நிலா காலம். நினைவுகள் திரும்பிட வெறும் ஏக்கங்களே மிச்சம்!

போகி பண்டிக்கைக்கு பழைய பேப்பர், இலை, தழை எல்லாம் போட்டு எரித்து, மிக முக்கிய அம்சமாய் ஒரு மோளம் , அதற்கு என் அம்மா வைத்த பெயர் டண்டணக்கு. கட்டாயம் வாங்கி காலையில் அதை அடித்து தீர்ப்பது. இந்த கைங்கரியத்துக்கு என் அண்ணன் எப்பொழுதும் வரமாட்டான். தம்பி கொஞ்சம் பெரியவன் ஆனதும் நிறுத்தவிட்டான். ஆனால் இத்தகைய சம்பிரதாயங்களை நான் விடவேயில்லை.

மாலை பரணில் ஏறி பொங்கல் வைக்கவென்றே, தாய் வீட்டு சீதனமாய் என் அம்மா கொண்டு வந்த, வெங்கல பானையை தேடி எடுக்க வேண்டும். நல்ல கனமாய் இருக்கும். இரண்டு கையில் பிடித்துத்தான் தூக்க முடியும். அப்படியே கொஞ்சம் பரணை குடைந்துவிட்டு, அப்பாவின் பழைய கடிதங்களைப் படித்துவிட்டு, என் அம்மா அலற அலற சில பழைய குப்பைகளையும் கீழே இறக்குவது என் பணி. பொங்கல் பானையை அம்மா புளி, செங்கல் தூள் போட்டு விளக்கி, பளபளவென்று ஆக்குவார்கள். பிறகு சுண்ணாம்பில் பட்டைப் போடப்பட்டு, நடுவில் குங்குமம் இடப்படும்.

மறுநாள் காலை மஞ்சள், இஞ்சி கொத்துக்கள் வெங்கல பானையின் கழுத்தை சுற்றிக்கட்டபப்ட்டு, பால் பொங்கும். பொங்கலோ, பொங்கல் என்று நாங்கள் கத்துவது எட்டு ஊருக்குக் கேட்கும். நன்றாக சாப்பிட்டு தூங்கி எழுந்து, மதியம் காப்பி குடித்துவிட்டு கரும்பு தின்னும் படலம் ஆரம்பிக்கும். வீட்டின் பின்பக்கம், பழைய செய்தித்தாளை விரித்து, ஒரு முழு கரும்பையும் அறிவாளால் வெட்டி தின்ன வேண்டியது. அடிக்கரும்பு இனிக்கும் என்பதாலும், பற்கள் வலுவாய் இருந்ததாலும் அதையும் விடுவதில்லை. ஈ மொய்க்கும் மற்றும் குப்பை என்பதால் கரும்பை தின்றுவிட்டு சக்கையை பேப்பரில் அப்படியே சுருட்டி எறிய வேண்டும் என்பது அம்மாவின் சட்டம்.

கரும்பு, நாடார் கடையில் பொங்கலுக்கு ஒரு வாரத்துக்கு முன்பே, துண்டாய் வெட்டி விற்க ஆரம்பித்து விடுவார்கள். துண்டு கரும்பில் ஈ மொய்த்துக் கொண்டு இருக்கும் என்பதால், அப்பா வாங்க கூடாது என்பார். நாடார் எனக்காக முழு கரும்பில் வெட்டி தந்தார் என்று பொய் சத்தியம் செய்துவிட்டு, ஒரு வாரத்துக்கு முன்பே ஆரம்பித்து விடுவேன். பொங்கலுக்கு இரண்டு முழுகரும்பு வாங்கப்படும், ஒன்று முழுவதும் எனக்கு. இரண்டு நாளுக்கு பிறகு இன்னொன்று என்று பிடிங்கி எடுத்து இன்னொரு முழு கரும்பும் கடித்து துப்ப வேண்டியது. இதில் பிரச்சனை ஒன்றே ஒன்றுதான். நாக்கு பிளந்து எரியும். ஆனால் பற்கள் பிரகாசிக்கும்.

பழைய நினைவுகள் நினைக்கும்பொழுது ஒரு ஏக்கம். அந்த காலம் வாராது என்று மட்டும் அல்லாமல், வேறு நாட்டில் குடியேறி சொந்த பந்தங்களை விட்டு வேறு உலகில் வாழும் வாழ்க்கை முறையும்தான். இது எல்லாம் என் பிள்ளைகளுக்கு கிடைக்கவில்லையே என்ற ஏக்கமும் கூட, ஆனால் கண்பார்பார்வை உள்ளவனுக்கு நடுவில் கண் போனால் ஏங்கும் ஏக்கம் இது. பிள்ளைகளோ, பிறவி குருடன் போல, அவர்களுக்கு எதுவும் தெரியாது என்பதாலும் எந்த ஏக்கமும் கிடையாது.

மாட்டு பொங்கலுக்கு வீதியில் மாடுகள் வரும். என் வீட்டில் வேலை செய்த சாரதா வீட்டு மாடு கட்டாயம் வருகை தரும். இதில் சாரதா என் அம்மாவுக்கு தத்து புத்திரி. ஆனால் வேறு பள்ளிக்கூடம். அரசு பள்ளியில் என் வகுப்பே படித்தாள். அம்மா தந்த செல்லத்தில் எனக்கும் தம்பிக்கு அட்வைஸ், போட்டுக் கொடுத்தல் எல்லாம் உண்டு. ஆனால் ரகசியங்கள் காப்பதிலும், திருட்டுதனங்களுக்கு குருவாகவும், உடந்தையாய் இருந்ததாலும் அவள் நட்பு எங்களுக்கு மிக தேவையாய் இருந்தது. நாங்கள் மூவரும் போடும் சண்டை பலமுறை அவளும் சேர்ந்து நாலு பேரும் வீட்டை சுற்றி ஓடி அடித்துக் கொள்வோம். சாரதாவுக்கு பொங்கலுக்கு கட்டாயம் புது உடை உண்டு. மூன்றரை மீட்டர், சீட்டி துணி வாங்கி அம்மாவே பாவாடை, சட்டை தைத்துவிடுவார். ஒரு முறை அந்த உடை அழகாய் இருக்கு என்று, எனக்கு வேண்டும் என்று அழுது உதை வாங்கியது என்று .. ஒவ்வொரு நினைவாய் மனதில் ஏக்கங்களை கூட்டுகிறது.

காணும்பொங்கல், இது கொஞ்சம் விசேஷமானது. கனு பொங்கல் என்று சகோதரர்கள், சகோதரிகளுக்கு ஏதாவது தர வேண்டும். என் மாமியாருக்கு அவர் சகோதரர் சில வருடங்களுக்கு முன்பு இறக்கும் வரை பணம் அனுப்பிக் கொண்டு இருந்தார். சில பத்து ரூபாய் மணியார்டர் வரும். ஆனால் ஞாபகம் வைத்து சகோதரன் அனுப்பவது அவருக்கு மிக சந்தோஷம். நாங்கள் காணும் பொங்கலுக்கு கட்டாயம் பொருட்காட்சி போவோம். ஒரு கட்டத்தில் அரசு ஸ்டால்கள், இரட்டை தலை பெண், ரங்கராட்டினம், பாம்பு மனிதன் போன்றவை அலுத்தும் போனது.

அதற்கு பிறகு புத்தகக்காட்சி, ஆனால் ஜனவரியில் பொங்கல் சமயம் நடக்குமா என்று ஞாபகம் இல்லை. அன்றைய வாழ்வில் புத்தகம் காசு கொடுத்து வாங்குவது மிக தவறான செயல் :-). கையில் இருக்கும் சில ஒற்றை ஒத்த ரூபாய் நோட்டுகளுடன் எல்லாவற்றையும் பார்த்துவிட்டு, கடைக்காரர் ஓட்டும்வரை அவசர அவசரமாய் விருப்பமானவைகளின் சில பக்கங்களைப் படிப்பதும் உண்டு. அதிக கூட்டம் எல்லாம் இருக்காது. பெரூமூச்சு விட்டு விட்டு வீடு வந்து சேருவேன். இப்பொழுது கையில் வேண்டிய காசு இருக்கிறது, ஆனால்.......?

தீபாவளி, பொங்கல் என்று கொண்டாடுவது, இவற்றை விடக்கூடாது என்ற எண்ணத்தில் மட்டுமே. ஆனால் குழந்தை பருவத்திலேயே அமீரகம் வந்த என் பிள்ளைகளுக்கு இந்த பண்டிகைகள் எல்லாம் அவர்கள் பெரியவர்கள் ஆனாதும் கொண்டாட தோன்றுமா என்று கேள்வியுடன் தூங்க சொல்கிறேன்.

12 பின்னூட்டங்கள்:

At Sunday, 15 January, 2006, சொல்வது...

உஷா, நானும் கொஞ்சம் பின்னால் போய் விட்டேன். வீட்டுக்கு முன்னே அம்மா வெங்கலப் பானையில் பொங்கல் வைப்பதும்....அதை ஒரு சருவத்தால் மூடி வைப்பதும்....எல்லாரும் வந்ததும்...சூடம் காட்டிக் கன்னத்தில் போட்டுக் கும்பிடுவதும்...இப்பெல்லாம் அப்பார்ட்மெண்ட்டுல குக்கர் பொங்கல்தான்.

 
At Sunday, 15 January, 2006, சொல்வது...

ஹும்.... இங்கேயும் இதே கதைதான்.

நான் இருக்கறவரை கொண்டாடிட்ட்டுப் போவேன்னு சொல்லி இருக்கேன்.

கொண்டாட்டமுன்னா பிரமாதமாயில்லை. ரொம்ப சிம்பிள்தான்.

பிகு: சக்கரைப் பொங்கல் பாக்கி இன்னும் ஃப்ரிஜ்லே இருக்கூ(-:

 
At Monday, 16 January, 2006, சொல்வது...

உஷா..

நான் தஞ்சாவூர்ல இருந்தப்போ வந்து போன பொங்கல் ஒரு மறக்க முடியாத அனுபவம்..

அங்க இந்து, கிறீஸ்துவங்கன்னு வித்தியாசம் இல்லாம ஊரே விழாக் கோலம் பூண்டு நிக்கும்.. டவுண்ல பெரீய பொருட்காட்சி, பக்கத்து ஊர்ல ஜல்லிக்கட்டு அப்படீன்னு தொடர்ந்து ஒரு வாரத்துக்கு நடக்கும். காணும் பொங்கலன்னிக்கு தெருவுல வர்ற புலியாட்டமும் ரொம்ப நல்லாருக்கும்.. அப்புறம் மார்கழி மாசம் முழுசும் தினம் தினம் வீடுகளுக்கு முன்னால போடற மாக்கோலங்கள்! க்ளைமாக்ஸா போகி அன்னைக்கி ராத்திரி விடிய, விடிய வயசுப் பொண்ணுங்க போடற ராட்சச சைஸ் கோலங்கள்.. யாராவது மிதிச்சிட்டா சண்டைக்கு வர்ற சீன்.. அது ஒரு அலாதியான அனுபவம்..

சென்னையில என்ன இருக்கு.. கிராமங்கள்லிருந்து வந்து குடியேறன குடிசைவாசிகள் மட்டும்தான் விமர்சையாக கொண்டாடுகிறார்கள்..

இப்பல்லாம் எங்க கோயில்லயும் பொங்கல் வச்சி கொண்டாடுறாங்க.. ஆனா அதுலயும் கிராமத்துவாசிகள் மட்டுமே கலந்துகொள்றாங்க..

உங்க flash back படிச்சப்போ என்னோட பழைய நினைவுகளும் வந்தது..

அதுக்கு உங்களுக்கு தாங்க்ஸ்..

பொங்கலோ பொங்கல் :-))

 
At Monday, 16 January, 2006, சொல்வது...

ரொம்ப அவசியமான சந்தேகம். :-)கரும்பை அப்படியே - வஜ்ரதந்தி விளம்பரம் போல கடிப்பீர்களா - இல்லே நாசுக்காக துண்டு போட்டு வைத்துக் கொண்டா?

ஏதோ நீங்க சொல்றாப்போல எப்படியோ எல்லாமோ கிடைச்சதை வைச்சு, பண்டிகையெல்லாம் "கொண்டாடிவிட்டு" இப்போ தமிழ் நாட்டுலே சுகமா வெங்கலப் பானையில் பொங்கல் வைச்சுப் பாலைப் பொங்க விட்டு ( அடுப்பை இப்படியெல்லாம் mess பண்ணிதான் ஆகணுமா? - இது என் மகன். ) - அசல் நம்ம கருப்பு கரும்பைக் கண்ணாலே தரிச்சு.... கொண்டாடுற சந்தோஷம் எனக்கு........ அதான் சும்மா உங்களைக் கொஞ்சம் சீண்டிப் பார்க்கத் தோணுது..... :-)

மற்றப்படி புலம் பெயர்ந்தவர்களின் அடுத்தத் தலைமுறையினரின் பண்டிகைக் கொண்டாடும் மனோபாவம் எப்படியிருக்கும் என்று எனக்கும் தோன்றுகிறது.... பண்டிகைகள் கொண்டாடுவது ஒரு வாழ்க்கை முறை. ஒரே மாதிரியாக இல்லாமல், ஒரு சின்ன எதிர்பார்ப்பு, புத்தாடை, - உணவு, சுத்தம் செய்தல், அலங்கரித்தல் என்று சின்ன சின்ன வேலைகள் வாழ்க்கையில் கொஞ்சம் மாறுதலைக் கொடுக்கின்றன. ஒரு விதத்தில் இது ஒருப் புத்துணர்வையும் கொடுக்கலாம். இந்த மாதிரி சின்ன சந்தோஷங்களை இந்தத் தலைமுறையினர் இழக்கிறார்களா - அல்லது இன்றையக் கால ஓட்டத்தில் - மாறுதலுக்கு பல வடிகால்கள் இருக்கும்போது, பண்டிகைகளின் மூலம் புத்துணர்வும், மாறுதலும் தேவையில்லை என்று தோன்றுமோ?

 
At Monday, 16 January, 2006, சொல்வது...

இதே பத்து வருஷங்களுக்கு முன்னே பொங்கல் பண்டிகைன்னா எனக்கு புடிச்சது கன்னி பொங்கல்தான்.மார்கழி மாதம் பிறந்துச்சுன்னா அதிகாலையில பக்கது விட்டு பொண்ணுஙக எல்லாம் எழுந்து பெரிய பெரிய கோலம் போட்டு. நடுவே சாணி புள்ளையார் புடிச்சி வச்சு ஒரு மாசத்துல ஒரு கூடை புள்ளையார் சேர்ந்துடும், கன்னி பொங்கல் அன்று ஒவ்வொரு பெண்களும் ஒவ்வொரு வகையான பதார்த்தம் மோதகம்,கொழுக்கட்டை,சுண்டல் அப்டீனு பட்டியல் நீளும் .ஒரு மாதமா புடிச்சி காயவச்ச புள்ளயார் மொத்தமா சேர்த்து,அத சுத்தி கும்மி அடிப்பாங்க ,முன்னமே ரிகர்சல் நடந்துடும் ,எனக்கு இந்த பாட்டு ,ஒனக்கு அந்த பாட்டுன்னு, எல்லாரும் பாடி முடிச்சதும் நமக்கு வாய்ப்பு குடுப்பாங்க. அது ஒரு ஜாலியான காலம். இப்போ அந்த பண்டிகையும் இல்ல. நாலு புள்ளிக்கு மேல கோலம் போடுற பொண்ணுங்களும் ஊர்ல இல்ல , இங்கயே இப்பிடி நெலமை மாறி போயிடிச்சி. நீங்க அமீரகத்துக்கு போயிடீங்க.

 
At Monday, 16 January, 2006, சொல்வது...

பேசாம ப்ளாஷ்பேக் பொங்கல்னு தலைப்பு போட்டிருக்கலாம்...எல்லாரும் மாஞ்சு மாஞ்சு கொசுவர்த்தி சுத்தறாங்க...

பொங்கல் கசந்தது, அப்படி இப்படினு சொல்லி அப்செட் ஆனதால இந்த இனிக்கும் ப்ளாஷ்பேக் பதிவா?

 
At Monday, 16 January, 2006, சொல்வது...

அன்புள்ள உஷா அவர்களே,
அந்த நாளுக்கே கொண்டு போய்டீங்க... நம் குழந்தைகளுக்கு
பண்டிகைகள் சம்பிரதாயம்...தான்...
அதுவும் பரணில் வெண்கலபானை சாக்கா..வச்சு..குடைவது...இவை இனிக்கும் நினைவுகள் மட்டுமே..
அக்கா தம்பியுடன் கறும்பு சண்டை...
மலர வைத்து விட்டீர்கள்.. நினைவுகளை..

 
At Wednesday, 18 January, 2006, சொல்வது...

வணக்கம்.

நான் இந்த வலை பகுதிக்கு புதுமுகம்.

==> என் நாட்குறிப்பில் இருந்து 14- 1- 2006

இதை படிச்சதும் எனக்கும் நினைவு எல்லாம் கடந்தகால பொங்கல் பண்டிகையை சுத்த ஆரம்பிட்சிட்டுது.
நீங்க எல்லாம் பரவாயில்லை, எனக்கு இந்த பொங்கல் ஹோட்டல்ல. நம்ம பூர்வீக இடத்தை விட்டு பணிநிமித்தமாக
வெளிநாடு வந்து இருக்குறவங்க எல்லாருக்குமே, இந்த நினைவுகள் தவிரிக்க முடியாத ஒன்றுதானோ!

 
At Wednesday, 18 January, 2006, சொல்வது...

இந்த அளவு எல்லாரும் டார்டாய்ஸ் கொசுவத்தி சுருள் கைல வெச்சியிருப்பீங்கன்னு நெனைக்கவேயில்லை.

ஜிரா, துளசி, ஜோசப் சார், சதயம், சிங், தென்றல், மாறன், அருனா அனைவருக்கு நன்றி.

துளசி, நான் சிங்கனம் சிங்கம்மா. சரியா சின்ன கிளாஸ்ல ஒரு டம்ளர் அரிசிப் போட்டேன். பையனுக்கு ஸ்வீட்டுன்னா மில்க்
ஸ்விட் மட்டும்தான் சாப்பிடுவான். இந்த பழச ப்ரிஜ்ல வெச்சி மறு நாள் மைக்ரோ வேவ் ஓவன்ல சூடு பண்ணுகிற கதையே
கிடையாது.

சதயம், வழக்கமான (டிரெடிஷனல்) சமையலில் ஞான் சூப்பர் குக்காக்கும். அப்புறம் பொங்கல் கசக்குதுன்னு கவிதை
எழுதினா, அது செய்கிற பொங்கல் இல்லை. அது ஒரு உவமை என்று அறிக. என்ன பாவக்காயை அரிஞ்சிப் போட்டா
பொங்கல் வைப்பாங்க?

எ. கே. மாறன் அவர்களுக்கு தனியா ஒரு நன்றி. நீங்களும் ஒரு பிளாக் ஆரம்பிங்க.

 
At Wednesday, 18 January, 2006, சொல்வது...

அருணா, சம்பிரதாயம் மீறக்கூடாது என்பதைவிட, என்னைப் போன்றவர்களுக்கு பழைய நினைவுகளை, சந்தோஷங்களைப் புதுப்பிக்க ஒரு சந்தர்ப்பம். பிள்ளைகளிடம் இதை எதிர்ப்பார்க்க முடியாது. அவர்களுக்கு புது பண்டிகைகள், கொண்டாடடங்கள் உருவாகும்.
நவீனமாக்கல்/ உலகமயமாக்கலின் இன்னொரு பரிணாமம் இது. இதை இழப்பு என்று நாம் சொல்லலாம், அவர்களுக்கு தெரியாது, ஆக இழப்பு அவர்களுக்கு இல்லை.

ஒன்றரை அடி நீளத்துக்கு வெட்டிக்க வேண்டியது :-)
பிறகு வாய் ஓரமெல்லாம் புண்ணாகி திட்டு வாங்குவது. அதனாலோ என்னவோ பற்கள் இன்னும் வலுவாய் உள்ளது. ஆனால் கரும்பு திங்க இயலாது. காரணம் பத்து வருடத்திற்கு முன்பு,
கம்பனியில் இலவசமாய் பற்களை சோதித்தார்கள். அந்த டாக்டர், பின் பல், சொத்தை பிடுங்க வேண்டும் என்று சொல்லி, படு ஸ்ட்ராங்கான பல்லை பிடிங்க முயல, முடியாமல் வாயை நன்றாக திற என்று பாடாய் படுத்தி ஒரு வழியாய் நாலைந்து பீசாய் எடுத்தார். இதில் கொடுமை என்னவென்றால், பல் சொத்தை என்பது அவர் சொல்லிதான் எனக்கு தெரிந்தது.

அன்றிலிருந்து கொஞ்சம் அதிக கடுமையாய் எதையாவது கடித்தால் முகத்தின் பக்கவாட்டில் வலி வரும்.

 
At Friday, 20 January, 2006, சொல்வது...

உஷா,
தாமதமான `பொங்கல் வாழ்த்துக்கள்’. மலரும் நினைவுகளுக்கு எப்பவுமே மவுசு ஜாஸ்திதான். அமீரகம் மட்டுமல்ல இங்கே உள்ள அமிஞ்சிக்கரையில் கூட பொங்கல் இப்படி பொலிவிழந்துதான் கிடக்குது. என் தம்பி மட்டும் விடாப்பிடியா சூரியன் உதிப்பதற்குள் கல்லு கூட்டி பால் பொங்கவிடுவான், அவங்க வீட்டு மொட்டை மாடியில். அந்த உணர்வுகளை என் பிள்ளைகளும் உணரணும்னே பொங்கல்தோறும் சென்னைக்கு ஓடிடுவேன். இந்த வருஷம் மிஸ் பண்ணிட்டோம். என் பொண்ணுதான் பொங்கல் அடுப்புக்கு கோலம் போடுவாள். அதில் ஒரு சின்ன சந்தோஷம்

 
At Friday, 20 January, 2006, சொல்வது...

தாணு, பொண்ணு கோலம் போடுவாளா? பரவாயில்லையே :-)

 

Post a Comment

<< இல்லம்