Tuesday, January 10, 2006

பா.ம.க தலைவர் ராமதாஸ் அவர்களுக்கு

பா.ம.க தலைவர் ராமதாஸ்அவர்களுக்கு,
ஐயா, தொலைக்காட்சியில் வரும் தொடர்கள் செய்யும் சமூக சீரழிவை எதிர்த்து குரல் கொடுத்தவர் என்ற முறையில் உங்களிடம் சில வார்த்தைகள். நேற்று ( 10- 1- 2006) மாலை 7.30 மணிக்கு, சன் தொலைக்காட்சியில் ஒரு தொடரில் காட்டப்பட்ட சம்பவ்த்தைப் பார்த்ததும் மிக மனம் நொந்து இதை எழுதுகிறேன்.

எட்டுமணிக்கு செய்தி வரும் என்பதால் சில நிமிடங்களுக்கு முன்பு தொலைக்காட்சியை
போட்டப் பொழுது, காட்சியில் ஒரு வயதான பெண், தன் மகனை வாய்க்கு வந்தப்படி திட்டி, சாபமிட்டு, மண்வாரி தூற்றுவதுப் போல ஒருக்காட்சி. அவனை அவனுடைய மனைவியின்
தாயுடனும் ( மாமியார்), அவளுடைய அண்ணி, தங்கை போன்ற அனைத்து உறவுகளுடனும் இணைத்துப் பேசி மரியாதைக்குரிய உறவுகளையே மிக நீண்ட வசனங்களால் கொச்சைப் படுத்திக் கொண்டிருந்தார். காட்சியில் இருந்த அனைத்து ஆண்சிங்கங்களும் பேசாமல் இருந்தது அதைவிட ஆபாச நகைச்சுவை.

தொலைக்காட்சி நடுவீட்டில் உட்கார்ந்துக் கொண்டு, பார்க்கும் அனைவரின் மனதிலும் நஞ்சை விதைத்துக்
கொண்டு இருக்கிறது. குறிப்பாய் குழந்தைகளும், பெரியவர்களுடன் அமர்ந்துப் பார்ப்பதால், பிஞ்சிலேயே வக்கிரமான பேச்சுகளும், நடத்தைகளும் அவர்கள் மனதில் தினமும் விதைக்கப்படுகின்றன.

ரிமோட் கண்ரோல் என்ற கருவி இருக்கிறதே அதை உபயோகப்படுத்தக்கூடாதா என்று சிலர் கேட்கிறார்கள். பார்க்கும் பலரும்
அதன் பின் விளைவுகளை அறியாமல், சுலபமாய் கிடைக்கும் பொழுது போக்கு என்று நினைக்கிறார்கள். இந்த பூனைக்கு யார் மணிக்கட்டுவது என்று தெரியாமல் பலரும் புலம்பிக் கொண்டு இருக்கிறார்கள். ஐயா, நீங்கள் இதை தடுக்க
முன்வர வேண்டும், தொலைக்காட்சி தொடர்களுக்கு "சென்சார்" முறை ஏற்படுத்த வேண்டும் என்பது எங்களின் பல பேர்களின் கோரிக்கை.

பி. கு இதை டாக்டர் ராமதாஸ், பார்வையில் படுமா, நடவடிக்கை எடுப்பாரா என்று நினைத்தெல்லாம் எழுதவில்லை. ஒரு ஆதங்கம் மற்றும் நேற்று பார்த்த அந்த சில நிமிடங்களின் பாதிப்பு. மேலும் ராமதாஸ் அவர்கள் மட்டுமே தொலைக்காட்சி தொடர்கள் செய்யும் சீரழிவைப் பற்றி கண்டித்ததாகவும் நினைவு.

22 பின்னூட்டங்கள்:

At Wednesday, 11 January, 2006, சொல்வது...

//ராமதஸ் அவர்களுக்கு //
எழுத்துப் பிழைக்கு உங்கள் மேல் தனி வழக்கு போடப்போகிறார் :-)

தவிர, மருத்துவர் தமிழ்க்குடிதாங்கி என்றல்லவா நீங்கள் அவரை விளித்திருக்கவேண்டும்? :-)))

//காட்சியில் இருந்த அனைத்து ஆண்சிங்கங்களும் பேசாமல் இருந்தது அதைவிட ஆபாச நகைச்சுவை. //

இதை என்ன அர்த்தத்தில் எழுதினீர்கள் என்று தெரியவில்லை. ஆனால் ஆண்கள்தான் அநியாயத்தைக் கண்டு பொங்கி எழவேண்டும் என்ற தொனி ஒலிக்கிறது. (அந்தக்காட்ட்சியில் இருந்த மற்ற பெண்கள் மௌனமாய் இருந்தது உறுத்தவில்லையா?) விளக்கினால் மகிழ்வேன்

 
At Wednesday, 11 January, 2006, சொல்வது...

நியாயமான ஆதங்கம். ஆனால் இதை ராமதாஸ் எப்படி கண்டுகொள்வார்? சன் டிவி என்ற பெயருக்கே யாரும் கண்டனம் தெரிவிக்கவில்லை்.அதைக் குறித்தே ராம்தாஸ் அவர்கள் ஒன்றும் சொல்லக் காணோம்.

சீரியல்களை பார்க்காமல் புறக்கணிப்பதே நம்மால் செய்யக் கூடிய செயல்.

அன்புடன்

ராஜ்குமார்

 
At Wednesday, 11 January, 2006, சொல்வது...

உஷா.......இதுதான் என்னுடைய கருத்தும்...வர வர தொலைக்காட்சித் தொடர்களை சினிமா அளவிற்கு மோசமாகக் காட்டுகின்றார்கள். ஆபாசமாகக் காட்டுவதில்லை என்பது உண்மையே தவிர, அனாச்சாரமாகக் காட்டுகின்றார்கள் என்பது உண்மையே. அதிலும் குடும்பக் கதைகள் என்ற பெயரில். வீட்டுக்குள்ளேயே ஒளிந்திருக்கும் வில்லன்களும் வில்லிகளும் படுத்தும் பாடுகள்......ஐயோ..........நான் டீவி நாடகம் பார்ப்பதை விட்டு நீண்ட நாட்களாயிற்று. இந்த மாதிரி குடும்ப நாடகங்களை விட ஸ்ரீபிரியா எடுக்கும் விக்கிரமாதித்தன்களும் சிந்துபாத்தும் எவ்வளவோ தேவலாம்.

 
At Wednesday, 11 January, 2006, சொல்வது...

தேர்தல் வேலையில் அவர் ஈடு பட்டு யார் யாருடன் கூட்டு வைத்தால் பாண்டியில் முதல்வர் பதவி கிட்டுமா? என யோசித்துக ்கொண்டிருக்கிறார். இதையெல்லாம் அவர் காண முடியுமா?

 
At Wednesday, 11 January, 2006, சொல்வது...

எனக்கு நீங்க யார்கிட்ட கேக்கிறீங்க என்பது அவ்வளவாக உறைக்கவில்லை. ஆனால் தொலைக் காட்சி தொடர்களில் வரும் அபத்தங்களைப்பத்தி பேசியது, (இல்லை இல்லை கதைச்சது,:)) பிடிச்சிருக்கு.

அதையேன் கேக்கிறீங்க. சில நாடகங்களைப் பாத்தா ரொம்பவே டென்ஷன் ஆகுது. அதுனால இப்பல்லாம் நான் அப்படி நாடகங்களை பார்த்தால், அல்லது பார்க்க நேர்ந்தால், ஏதோ ஒரு கொமெடி நாடகம் பாக்கிறதா (சீரியஸ் ஆக இருந்தாலும் கூட). நினைச்சு பாத்து சிரிச்சுட்டு போகிறேன். கொஞ்சம் கூட ரியலிட்டியே இல்லாம கதை போகும்.

அப்புறம் நிலா கேக்கிற கேள்வியும் நியாயமானதுதான். ஆண்கள் மட்டும் எதுக்கு பொங்கி எழணும்? பெண்களை இழிவுபடுத்தும் காட்சிகள் சிலதில், பெண்களே பொங்கி எழுறாங்க இல்லை, இதுல ஆண்களை குறை சொல்லி என்ன பண்ணுறது?

சிலசமயம் தோணும், இப்படிப் பட்ட காட்சிகளில் நடிக்க பெண்கள் எப்படி சம்மதிக்கிறாங்க ன்னு. :(

 
At Wednesday, 11 January, 2006, சொல்வது...

ஆத்திரத்தை ஆதங்கமாய் சொல்லியிருக்கிறீர்கள்.நேற்றைய சமுதாயம் சினிமாவால் சீரழிந்ததென்றால், இன்றைக்கு சினிமாவும்,சின்னத்திரைத் தொடர்களும் நம்மை உருவழித்துக் கொண்டிருக்கிறது.

எய்ட்ஸ் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்வது போல போகிற போக்கில் சின்னத்திரை தொடர்களுக்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளும் நிலைமை வந்தாலும் வரலாம்...

 
At Wednesday, 11 January, 2006, சொல்வது...

பதிவுக்கு நன்றி உஷா..

இது போன்ற செய்தி ஊடக நிகழ்வுகளை கண்டுகொள்ளுமாறு திரு. தயாநிதி மாறன் அவர்களுக்கு எழுதி இருக்கிறேன்.


சில செய்திகளைப் பற்றிய சரியான தகவல்கள் இல்லையாதலால் அது வரைவுப் பதிவாகவே இருக்கிறது.

எனது வேலையை நீங்களே செய்துவிட்டீர்கள்.

வாழ்த்துக்கள்.
நன்றி,
பூங்குழலி.

 
At Wednesday, 11 January, 2006, சொல்வது...

உஷா, நீங்க பார்த்ததெல்லாம் ஒண்ணுமே இல்லீங்க. நாங்க இணைப்பு வாங்கும்பொழுது சன் மட்டுமே போதுமா கே டீவீயில் வெறும் சினிமா சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகள்தானே வரும் என்று யோசித்தோம். ஆனால் இப்போழுது அதுதான் அதிகம் ஓடிகிறது. not that it is great, but it is lesser of the two evils.

 
At Wednesday, 11 January, 2006, சொல்வது...

நிலா, அந்தக்காட்சியில் வயசான ரோலில் சுலக் ஷணாவை அவருடைய சம்மந்தியம்மாள் திட்டுவார். இவர் வாய் மூடி அதிர்ச்சியுடன் கண்கலங்கி நிற்பார். அடுத்து சுலக் ஷணாவின் மகள் கேரக்டர், அவர் கோபத்துடன் மாமியாரை திட்ட ஆரம்பிக்கும்பொழுது, அவரை மிக கேவலமாய் பேசுவார் மாமியார். மகனோ எங்கம்மாத்தான் பேசிகிறாங்க, நீயாவது வாயை மூடிக் கொண்டு இரு என்பார். பெற்ற தந்தையோ, பெரியவங்க பேசும் போது, நீ பேசாதே என்று மகளை தடுத்தார்.
கொஞ்சம் தூரத்தில் மூன்று பெண்கள், அருவருப்புடன் காதை மூடிக் கொண்டார்கள்.
இங்கு பெண்ணீய கண்ணோட்டத்தில் பாராமல், குடும்பத்தில் வயதான பெண் வாய்க்கு வந்ததைப் பேசினால்,
கணவன், மகன், சம்மந்தி என்ற ஆண்கள் பேசாமல் இருப்பார்களா? பொதுவாய் நம் குடும்பங்களில் நடக்கும் நிகழ்ச்சி என்றால்
யார் எப்படி ரியாக்ட் செய்வார்கள் என்ற எண்ணத்தில் எழுதினேன்.

கலை! நானும் பொழுது போகவில்லை என்றால் பார்த்து சிரித்துவிட்டு போவேன். ஆனால் நேற்று பார்த்தது கேவலம். பிறகு நடித்தவர்களை குறை சொல்ல முடியாது, இவர் இல்லை என்றால் இன்னொருவர். இதற்கு முழு பொறுப்பு, இத்தகைய
அசிங்கங்களை தன் நிறுவனத்தில் அனுமதித்த சன் தொலைக்காட்சி உரிமையாளர் தயாநிதி மாறன் அவர்கள்களுக்குத்தான்.

பூங்குழலி, ஊதுகிற சங்கை ஊதி வைப்போம்!

 
At Wednesday, 11 January, 2006, சொல்வது...

சதயம், சென்ற தலைமுறை சினிமாவில் கெட்டது என்றால், பாழாய் போனது யார் தெரியுமா? பொருளாதாரத்தில் கீழ்மட்டத்தில்
இருந்தவர்களையே அரசியலும், ரசிகர் மன்றமும் இன்னும் கீழே தள்ளி, தான் மேலே ஏறி வந்தார்கள். இன்றும் அதே நிலைமைதான். கொஞ்சமாய் பணம் செலவழித்து நாள் முழுக்க கேளிக்கை என்று அவர்கள் வாழ்க்கையின் முன்னேற்றத்தில்
விளையாடுகிறது, தொலைக்காட்சிகள்.
வாழ்க்கையில் முன்னேறியவர்கள், இதன் தாக்கத்தை உணர்ந்து பிள்ளைகளைப் பார்க்கவிடுவதில்லை, சிலர் வயதானவர்களுக்கு
தனியே சின்னதாய் அவர்கள் ஒன்று வாங்கிதந்துவிடுகிறார்கள். இது சென்னையில் உறவினர்கள், நண்பர்கள் வீட்டில் பார்த்தது!

 
At Wednesday, 11 January, 2006, சொல்வது...

ராஜ்குமார், இலவசகொத்தனார், என்னார் கருத்துக்களுக்கு நன்றி.

ஜிரா! அது அடுத்தக் கொடுமை "மை டியர் பூதம், ராஜராஜேஸ்வரி ஹி,ஹி, வேப்பில்லைகாரி " போன்று எத்தனை தொடர்கள் ஆன்மீகம் என்ற போர்வையில் கடவுள் என்ற நம்பிக்கையை கேவலப்படுத்துவது? எல்லாமே நச்சுதான்

 
At Wednesday, 11 January, 2006, சொல்வது...

Usha
thanks for the clarification

//சன் தொலைக்காட்சி உரிமையாளர் தயாநிதி மாறன் //

I hope you meant Kalanidhi Maran

 
At Wednesday, 11 January, 2006, சொல்வது...

நன்றி நிலா. கலாநிதிமாறன் அவர்கள்தான், அவர்கள் பார்வைக்குப் போனால் போதும். கல்வெட்டு என்பவர் இத்தகைய பொது நல விஷயங்களில் ஆர்வமுள்ளவர். அவரும் ஏதாவது செய்யலாம்!

 
At Wednesday, 11 January, 2006, சொல்வது...

இந்த கலாநிதி மாறன் தன் சேனல் நிகழ்ச்சிகளை பார்ப்பதில்லை
என்று விகடனில் சொல்லியிருந்தார். (செய்திகள் தவிர.) அதில் வரும்
குப்பைகளை அவர்களே பார்ப்பதில்லை. ஆனால் குப்பை விற்ற காசு
நாறாது.

இந்த குப்பைகளை sponsor செய்யும் நிறுவனங்களுக்கும் இதே லாஜிக்தான்.
இந்த சீரியல்களை யாரும் பார்க்காவிட்டால் டிவி சேனல்கள் ஓடாது.
வீட்டிலிருப்பவர்களுக்கு வேறு entertainmentக்கு வழியில்லாமல்தான் இதைப்
பார்க்கிறார்கள்.

 
At Wednesday, 11 January, 2006, சொல்வது...

உஷா,
இது முழுக்க முழுக்க வியாபாரம். சோறு விற்றும் பிழைக்கலாம், கள் விற்றும் பிழைக்கலாம், கஞ்சா விற்றும் பிழைக்கலாம். கள்ளுக்கும் கஞ்சாவுக்குமே மக்கள் மயங்குகிறார்கள் என்பதற்காக அது மட்டுமே விற்றுப் பிழைப்பது ஒரு வகை.

குமுதத்தில் இது பற்றி ஒரு கட்டுரையே வந்தது. (பார்க்க சீரழிக்கும் சீரியல்கள்:http://arrasu.blogspot.com/2005/12/blog-post_19.html ) அதுக்கு ஒரு வரவேற்பும் இல்லை. (குமுதம் மட்டும் ஒழுங்கில்லை. குறைந்தபட்சம் கட்டுரை போட்டதே ஆறுதல்தான்.)

வியாபாரம் என்று வந்துவிட்ட பிறகு முதலாளிகளின் பார்வைக்கு பணம் மட்டுமே தெரிவதால் அவர்கள் இதை எல்லாம் கண்டு கொள்ளவே மாட்டார்கள்.

யாரிடம் சொல்வது?

**காலாநிதி மாறன் இதன் முதலாளி. அவருக்கு சமூக அக்கறை....வேண்டாம் விடுங்கள்.

**அவரின் தம்பி தயாநிதி மாறன் மத்திய அமைச்சர் ...அவருக்கு தாத்தா அமைச்சர் பதவி கொடுத்தபின்தான் வெளியே தெரிகிறார்.அவர் சம்பத்தப்பட்ட துறை அல்ல இது.

**கலைஞரோ "சன்"னுக்கும் தன்க்கும் ஒரு தொடர்பும் இல்லை என்று சொல்லிவிட்டடார்.

**மருத்துவர் இராமதாசு இந்தக் கூட்டணியில் இருக்கும் வரை "சன்" னுக்கு எதிராக எதுவும் செய்ய மாட்டார். அவரின் தமிழ் பெயர்ப்பலகைப் போராட்டத்திலேயே அது தெரிந்துவிட்டது.

**சிதம்பரம்.. "இனிமேல் சிவகங்கை என்ற சன்னல் வழியாக உலகத்தைப் பார்ப்பேன்" என்றார், ஆனால் அப்படிப் பார்ப்பதாகத் தெரியவில்லை. நிதித்துறையில் செம பிசியாகிவிட்டார் பசி.

மாற்று வழி...தமிழக அரசிடமோ, மத்திய அரசிடமோ தொலைக்கட்சித் தொடர் தணிக்கை வேண்டி விண்ணப்பம் செய்யலாம். விதி வகுப்பதில் பெரிய சிக்கல் இருக்கும்.

**ஜெயா டிவியும் இதையே செய்து வருவதால் தற்போதைய தமிழக அரசு இதைக் கண்டுகொள்ளுமா என்று தெரியாது.

**தயாநிதி மாறன் மத்திய அமைச்சரவையில் இருப்பதால் அண்ணனுக்கு பாதகமாக ஏதும் வர விடமாட்டார்.

தமிழக அரசியலில் ஒரே நம்பிக்கை நல்லக்கண்ணு. வேண்டுமானால் அவரிடம் முறையிடலாம். முயற்சி செய்கிறேன்.

அதுவரை ஒத்துழையாமை இயக்கம் போல் அனைவரும் சன்/ஜெயா தொலைக்காட்சி வகையறாக்களை தவிர்ப்பதே நல்லது. இது ரொம்ப ரொம்ப சிரமம். என்னால் எனது சொந்த பந்தங்களையே இந்த விசயத்தில் திருத்த முடியவில்லை.

இந்த நேரத்தில் சொல்ல வேண்டியது:

நான் வசிக்கும் வடக்கு கரோலினா மாநிலத்திஉல் UNC என்று ஒரு தொலைக்காட்சி உள்ளது. இவர்கள் மக்களிடமே நிதி வசூல் செய்து குழந்தைகள் நிகழ்ச்சிகளைச் நல்ல விதமாகச் செய்கிறார்கள்.

அதுபோக செய்தி, நல்ல பொழுது போக்கு நிகழ்ச்சிகளும் உண்டு.

//Some 40% of UNC-TV’s program schedule features commercial-free and educational programming for children. Parents know that UNC-TV provides a safe haven for children. //

அவர்களின் நோக்கம் பற்றி அறிய:
http://www.unctv.org/aboutus/

இப்படி ஒரு தொலைக்காட்சியை தமிழகத்தில் யாராவது நிறுவமாட்டார்களா என்ற ஆதங்கம் எனக்கு உண்டு.

 
At Wednesday, 11 January, 2006, சொல்வது...

உஷா!

தொலைக்காட்சி தொடர்கள் வெறும் குப்பை. அந்த குப்பையை பார்க்காமல் இருந்தாலே நேரமும் மிச்சம், மன உளைச்சலும் மிச்சம். சீரியல் பார்காமலே இருக்க முடியுமா. நான் என் குடும்பத்தோடு இருக்கிறனே. எங்கள் வீட்டில் ஒரு சீரியல் பேர் கூட தெரியாது. நாங்கள் சென்னையில் இரண்டு வருடம் இருக்கும் போதும் அப்படி தான். முடிந்தால் கடைபிடித்து பாருங்கள். அதன் பயனை உணர்வீர்கள்.

 
At Wednesday, 11 January, 2006, சொல்வது...

இவ்வளவு பேசும் நீங்கள் ஆடையவிழ்த்து நடிக்கும் நடிகைகளையோ காசுக்காக எதையும் பேசும் நடிகர்களையோ இயக்குனர்களையோ கதாசிரியர்களையோ பாடெழுதிகளையோ ஏன் கடுமையாகக் கண்டனம் செய்யக் கூடாது? சன் என்று மட்டுமில்லை. ஒட்டுமொத்தமாக எல்லா டிவியுமே தன் நிலையை மறு பரிசீலனை சேய்ய வேண்டும்.

 
At Wednesday, 11 January, 2006, சொல்வது...

//ராமதாஸ் அவர்கள் மட்டுமே தொலைக்காட்சி தொடர்கள் செய்யும் சீரழிவைப் பற்றி கண்டித்ததாகவும் நினைவு.

Naataamey!

Ungalaithaan nambuthu intha boomi,
engalukku oru nalla vazhi kaami!

:-)

 
At Friday, 13 January, 2006, சொல்வது...

கல்வெட்டு, மிக தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும். ஏதோ ஒரு ஆதங்கம். யாராவது ஏதாவது செய்யக்கூடாதா என்று புலம்பிவிட்டேன். நல்லகண்ணு அவர்களிடம் சொல்ல முடிந்தால் நல்லது. முயற்சிக்கவும்.

சிவா, கலை சொல்லியதைப் போல, எப்பொழுதாவது தொலைக்காட்சி பெட்டியை ஆன் செய்து அந்த நேரம் ஓடுவதை சில
நிமிடங்கள் பார்ப்பது மட்டுமே! ஓரளவு தொடர்ந்துப் பார்த்தது "மெட்டி ஒலி" மட்டுமே! அதையும் முடிவு பார்க்க முடியவில்லை.
பினாத்தல் சுரேஷ், பதிவைப் பார்த்துவிட்டு, சில வாரமாய் "சிதம்பர ரகசியம்" பார்த்துக் கொண்டு இருக்கிறேன்.

போலியன், ராம்கி,ஆதிரை வருகைக்கு நன்றி

 
At Friday, 13 January, 2006, சொல்வது...

உஷா,
//நல்லகண்ணு அவர்களிடம் சொல்ல முடிந்தால் நல்லது. முயற்சிக்கவும். //
நம்ம என்ன அவரோட நேர்லயா பேச முடியும். சும்ம மயில் அனுப்புவது. அரசியல் வட்டாரத்தில் உள்ள நண்ர்களின் துணையுடன் செய்தியை அவர்களின் காதுக்கு கொண்டு போவது போன்ற வேலைதான். :-))

எப்படியோ என்னால் முடிந்த அணில் முயற்சிகளை நிச்சயம் மேற்க்கொள்வேன்.

 
At Friday, 13 January, 2006, சொல்வது...

சமூக சேவை

ம்ம்ம் நடக்கட்டும் நடக்கட்டும் :-)

 
At Saturday, 14 January, 2006, சொல்வது...

// ஜிரா! அது அடுத்தக் கொடுமை "மை டியர் பூதம், ராஜராஜேஸ்வரி ஹி,ஹி, வேப்பில்லைகாரி " போன்று எத்தனை தொடர்கள் ஆன்மீகம் என்ற போர்வையில் கடவுள் என்ற நம்பிக்கையை கேவலப்படுத்துவது? எல்லாமே நச்சுதான் //

ஐயோ! அந்தக் கொடுமையைச் சொல்லாதீர்கள். சாமியை கிராபிக்சில் இவர்கள் கொடுமை செய்வதையெல்லாம் பார்க்கும் பொழுது கடவுள் மேல் பரிதாபம் தோன்றுகிறது.

 

Post a Comment

<< இல்லம்