வெற்றி - ஜனவரி 2006, கணையாழி
வெற்றி
கிழவரைப் பார்க்கும்பொழுது கழுகு ஞாபகம் வராமல் போகாது. முகம் சுருங்கி, உடல் கூன் விழுந்து
வயது அதிகமாகாவிட்டாலும் முதுமையில் ஏழைமையால் அந்த நிலைக்கு வந்துவிட்டார் மனுஷன்.
நினைவுகள் பழையதும், புதியதுமாய் அவரை அலைக்கழித்தன. திருவழந்தூர் பரிமளரங்கநாதர் கோவிலில் கூட்டமேயில்லை. முன்பே இங்கு வரும் கூட்டம் குறைவுதான். இப்ப இந்த டீவி வந்தாலும் வந்தது விளக்கு வைத்ததும் அதன் முன்னால் உட்கார்ந்து விடுவதுன்னு ஆயாச்சு.
முக்குப் பொடி போடாமல் மூக்கு நமநமத்தது. கையில் ஒத்தைபைசா கூட இல்லை. அய்யங்கார் கிழவர் வந்தாலாவது மூக்குப்பொடிக்கு காசு கேட்கலாம், பின்ஷன்தான் கை நிறைய வாங்குகிறாரே!
கிழவர் கண்ணுக்கு மேல் கையை வைத்து, கண்களை இடுக்கிக் கொண்டு, அய்யங்கார் வருகிறாரா என்றுப் பார்த்தார். கண்ணுக்கு எட்டிய தூரம் வரை காணவில்லை. நேற்றும் வரவில்லை. முந்தா நாளே வயிறு சரியில்லை என்றார். காசு பணம் இருக்கிறதே என்று காளியாங்குடி அல்வாவைப் தினமும் தின்னால் வயதானக் காலத்தில் ஒத்துக் கொள்ளுமா என்ன?
காளியாங்குடி அல்வா அவருக்கு பழைய இனிய நினைவுகளை கிளறிவிட்டது. அது ஒரு காலம். இறந்துப் போன மனைவி கண் முன்னால் வந்து நின்றாள். அவள் மட்டும் இப்பொழுது இருந்தால், மனம் கேவியது.
தூணில் சாய்ந்து உட்கார்ந்துக் கொண்டார். வீட்டில் நடக்கும் சங்கதிகள் மனக்கிலேசத்தை அதிகமாக்கிக் கொண்டிருந்தன. பசி வயிற்றை பிசைந்தது. மதியம் சாப்பிட்ட ரசமும், மோர் சாதமும் எப்பொழுதோ ஜீரணம் கியிருந்தது. சாப்பிடும்பொழுது, எண்ணெய் கமறல் வாசனை வந்தது. வடாமோ, வத்தலோ மருமகள் பொறித்திருக்காள் போலிருக்கிறது, ஆனால் இலையில் எதுவும் விழவில்லை. கேட்கலாம் என்று எழுந்த சபலத்தை நாக்கைக் கடித்துக் கொண்டு தடுத்தாகிவிட்டது.
ஆயிற்று இன்றோடு இருபது நாள் முழுமையாக, மகனுக்கு வேலைப் போய்! பாவம் மருமகளும் என்ன செய்வாள்? மொத்தம் அஞ்சு ஜீவன் சாப்பிட வேண்டுமே, அவளும் ஏதோ ஒப்பேற்றிக் கொண்டு இருக்கிறாள்.
மகன் ஏதோ பணம் கையாடல் பண்ணிட்டான் என்று ஜவுளிகடை பாய், கடைக்கு வரவேண்டாம் என்று சொல்லிட்டார். அவனும் அப்படி எதுவும் இல்லை என்று எவ்வளவோ சொல்லிப் பார்த்தான், பாய் படியே ஏற வேண்டாம் என்று கட் அண்டு ரைட்டாய் சொல்லி விட்டார். கிழவரும் போய் கெஞ்சியதும் இன்னும் பேசினால், போலீசுக்குப் போவேன் என்று குரலையல்லவா எழுப்பினார்?
போன மாசம் பக்கத்து வீட்டு கதிரேசன் பிள்ளையின் பேத்தி, பெரியவள் னதுக்கு மருமகள் போகும் பொழுது, கழுத்துலையும், காதுலையும் ஏதோ மின்னியது. பீ பித்தளையாக்கும்னு நெனச்சது, தப்பு என்று இப்பதான் புரியுது. ஏதாவது கேட்டால், அழுது காத்தியம் பண்ணுவாள்.
அய்யங்கார் மகன், நன்றாக செல்வாக்காய் இருக்கிறான். அவனிடம் சொல்லி, பையன் வேலைக்கு பார்க்கிறேன் என்று சொன்னவரை ரெண்டு நாளாய் காணோமே என்று கிழவருக்கு துடிப்பாய் இருந்தது.
பசி வயிற்றைக் குடைய ஆரம்பித்தது. கோவில் என்றால் அந்த காலத்தில் புளியோதரை, சக்கரை பொங்கள், வெண் பொங்கல் என்று ஏதாவது பிரசாதம் கிடைக்கும். இப்பொழுது, பெருமாளுக்கு காட்டிவிட்டு அப்படியே வீட்டுக்கு எடுத்துக் கொண்டுப் போய் விடுகிறார்கள்!
"மாமா, நீங்க கோபு அப்பா தானே?" என்றுக் குரல் கேட்டது.
கிழவர் கண்ணை சுறுக்கிக் கொண்டுப் பார்த்தார். " யாரு தெரியலையே?" பார்த்தால் உள்ளூர் மாதிரி தெரியவில்லை.
"நான் தான், அகோரம் பையன்"
"எந்த அகோரம்? தாலுகா ஆபிஸ் அகோரமய்யரா? சமையல் அகோரமா?.”
எதிரில் நின்றவன் லேசான சிரிப்புடன், " நான் சமையல் அகோரத்தோட சின்ன பையன் வைத்தியநாதன். கோபுவோட கிளாஸ்மெட்"
"நீங்கெல்லாம் எங்கோ அமேரிக்காவுல இருக்கறதா சொன்னாளே?"
"ஆமா, அண்ணா சாமிநாதனும் அங்கத்தான் இருக்கான். உங்க பெரிய பையன் பாபுவோட கிளாஸ்ல படிச்சானே?"
தன் பிள்ளைகளுடன் படித்தவர்கள், இன்று இருக்கும் நிலைமையையும், தன் மகன்களின் இருப்பையும் அவர் மனம் ஒப்பிட்டது. பணம் இருந்தால் அழகும் வந்துவிடுகிறது போலும்!
கிழவர் தலையை ட்டிக் கொண்டே " அப்பாதான் எப்பவோ காலமாயிட்டாரே.., ஒங்கம்மா ?" கேட்டார்.
"அம்மா, திருச்சில மாமாவோட இருந்தா. அவ போயி இருபது நாளாகிறது. காரியத்துக்கு வந்திருக்கோம். அவளோட மஞ்சகாணி நெலம் இங்க நத்தத்துல இருக்கு. அத வித்துடலாம்னு ஒரு ஐடியா. கோபு எப்படி இருக்கான்? என்ன பண்ணறான்? அவனப் பாத்து ரொம்ப வருஷமாச்சு"
சரிதான், அண்ணனும், தம்பியும் அமேரிக்காவுல கொழிக்கிறா, போததற்கு நெலம் வேறு விற்றுப் பணம் பண்ணப் போகிறார்கள்.. வயிறு எரிந்தது கிழவருக்கு.
"பாபு நாக்பூர்லனா இருக்கான். கோபு இங்க பாய்கிட்ட துணி கடையில வேலையாய் இருக்கான். ஆல் இன் ஆல் அவந்தான்"
"ரொம்ப சந்தோஷம் மாமா! நெலத்த டிஸ்போஸ் பண்ண நல்ல பார்ட்டி யாராவது இருந்தா சொல்லுங்கோ, இன்னும் பத்து நாளுக்குள்ள பண்ணிட்டா செளகரியமாய் இருக்கும்"
உம்., பணம் பணத்தோடதான் சேருகிறது. அந்த எடத்துல நெலம் கொள்ளை விலைன்னா விற்கிறது. எம் பையன், ஒட்டு குடித்தனத்துல அல்லாடுறான். மனம் நொந்து தான் தினமும் வணங்கும் பெருமாளை மனதார வைத்தவர், "இப்ப எல்லாம் யாரு வேவசாயம் பண்ணறா? அங்கக்கூட நெலம் எல்லாம் வீட்டு மனையாயிடுத்தாமே? எங்க கோபு கூட நெலம் வாங்கி வீடு கட்டணும்னு சொல்லிண்டு இருந்தான்" என்று சொல்லி வைத்தார்.
"கோபுக்குன்னா, வெலைகூட கொறச்சிக் கொடுன்னு அண்ணாக்கிட்ட சொல்லரேன். மொத்தமா கொடுக்காட்டாக்கூட மாசமாசம் தந்தால் போதும்"
"நீ எதுக்கு ஒன் போன் நம்பர் தந்துட்டுப்போ. கோபு பாயோட சூரத்துக்கு போயிருக்கான். நாலு நாள்ல வந்துடுவான். அவன் வந்ததும் பேச சொல்ரேன்" என்று மகனின் இல்லாத பெருமையை அவரின் வாய் சொல்லிக் கொண்டிருந்தாலும் எதிரில் நிற்கும் உருவத்தை அவர் மனம் அளந்துக் கொண்டிருந்தது.
தன் மகனுடன் படித்தவன் நிலையும், தன்னுடைய மகனின் இல்லாமையையும் ஒப்பிட்டுப் பார்த்து பசியுடன் வயிறெரிச்சலும் சேர்ந்துக் கொண்டது கிழவருக்கு.
வாய் வார்த்தைகளால் சவடால் விட்டுக்கொண்டிருந்தவருக்கு, சட்டென்று தான் சொல்லுவதின் மற்றொரு நிஜபரிமாணம் அவர் மனத்தைத் தாக்கவும் நிலை குலைந்துப் போனார். முதலிலேயே மகன் பணம் கையாடல் செய்துவிட்டான் என்று பாய் சொல்லிக் கொண்டு இருக்கிறார். மாயவரமோ சின்ன ஊர்! யாராவது, நிலம் வாங்குகிறான், வீடு கட்டப் போகிறான் என்று பாய் காதில் போட்டு வைத்தால், வேறு வினையே வேண்டாம். பயத்தில் வேஷ்டி கொஞ்சம் நனைந்துவிட்டது.
அடுத்து என்ன சொல்வது என்று மனம் சடசடவென்று யோசிக்க, " இருடாப்பா! தப்பா சொல்லிட்டேன். என் மூத்த பையன் பாபு, நாக்பூர்ல வீடு கட்டப் போறேன்னு சொல்லிண்டு இருந்தான். வயசாச்சோல்லியோ, நா கோபுன்னு மாத்தி சொல்லிட்ட்டேன். அவனுக்கு இப்ப, இங்க வீடு கட்டற உத்தேசமெல்லாம் இல்லை. அவன் கொழந்தைக்கே ஒடம்பு ரொம்ப படுத்தறது. வைத்திய செலவே மாசமானா சமாளிக்க முடியலைன்னு சொல்லிண்டு இருக்கான்." என்று சால்ஜாப்பாய் வாய்க்கு வந்ததை, ஓரளவு கோர்வையாய் சொல்லி முடித்துவிட்ட நிம்மதியுடன் மேல் துண்டால் முகத்தை துடைத்துக் கொண்டார்.
"சரி நான் வரேன். நேரமாச்சுன்னா எம் பையன் தேடிண்டே வந்துடுவான்" என்று இடத்தை விட்டு இறங்கியவர், அவனை மரியாதைக்காவது வீட்டுக்கு வர சொல்லலாமா என்று நினைத்துவிட்டு, மறு கணம் வேண்டாம் என்று முடிவெடுத்தார்.
கொஞ்சம் ஏமாற்றத்துடன், "அப்படியா மாமா, சரி! சரி! நா பார்த்துக்கிறேன்" எழுந்தவன் கண்ணில் கிழவனாரின் பழைய பழுப்பு ஏறிய வேட்டி, அதில் சில கிழிச்சல்களும், பல கறைகளும் அவனுக்கு அவர் நிலைமையை எடுத்து சொல்லின.
சட்டை பையில் இருந்து. கற்றை நோட்டை எடுத்தான்.
அட, அடா! எத்தனை நோட்டுக்கள்! இதுமாதிரி யுளில் பார்த்தது இல்லை.
"இந்தாங்கோ" என்று ஒரு தாள் அவர் முன் நீட்டப்பட்டது. நூறா, ஐநூறா தெரியவில்லை. எல்லாம் ஓரே மாதிரின்னா இருக்கு! போதாதற்கு எல்லாவற்றிலும் காந்திபடம். வித்தியாசமே தெரிவதில்லை ! வாங்கிக் கொள்ளலாமா என்று எழுந்த சபலத்தை அடக்கிக் கொண்டு, தலையை அசைத்தவாறு, "ஏதோ உன் அளவு இல்லைனாலும் என் பையன்களும் ஓரளவு சம்பாதிக்கிறா. என்னையும் நன்னாதான் பார்த்துக்கிறா" என்று சொல்லிவிட்டு திரும்பி பார்க்காமல் வீட்டை நோக்கி நடக்க ரம்பித்தார் கிழவர்.
ஐநூறு ரூபாயிருந்தால், மளிகைக் கடை பாக்கியாவது கொடுத்திருக்கலாம் என்று மனம் புலம்ப தள்ளாடி, தள்ளாடிப் போய் கொண்டிருந்தார் கிழவர்.
**************
(இந்தக் கதை, இரண்டு வருடத்திற்கு முன்பு மரத்தடி நண்பர்களால் அலசப்பட்டு, பின்பு முழுவதும் ரீ ரைட் செய்து, இரு
மாதங்களுக்கு முன்பு கணையாழிக்கு அனுப்பினேன்)
12 பின்னூட்டங்கள்:
உஷா,
'கடுகு சிறுத்தாலும் காரம் போகுமோ?'
ம்ம்ம்ம்ம்.....உண்மைதான் கொடுப்பதிலும் இடம் பார்த்து அளந்து கொடுக்க வேண்டும். இல்லையென்றால் இப்படிப் பயனிலதான். மானம் ஒப்புக் கொள்ளவில்லையே பெரியவருக்கு....பச்ச்ச்ச். பணத்தை வாங்கிருக்கக் கூடாதா தாத்தா!
உஷா., வயோதிகத்தை படம் பிடித்து காட்டியிருக்கிறீர்கள். கதை சொல்ல சரளமாக வருகிறது உங்களுக்கு.
துளசி, ஜீரா, அப்படி போடு வருகைக்கு நன்றி.
என்ன உஷா எனக்கு ஜீரா என்று பட்டப் பெயரா! இனிப்பான பேருதான். ஆனா பொருத்தமான பேருங்குறீங்களா?
நல்லா இருக்கு உஷா கதை..புத்தாண்டு வாழ்த்துகள்!
ரம்யா, நன்றி
ஜிரா, பொருத்தமோ இல்லையோ வெச்சாச்சு :-)
கதையோட்டம் இயல்பா நல்லா இருக்கு. வோட்டு போட்டாச்!
கதை நல்லா இருக்கு உஷா. ஏன் இந்தக் கதைக்கு வெற்றின்னு தலைப்பு வச்சிருக்கீங்கன்னும் கொஞ்சம் சொல்லிடுங்க. எனக்கு எல்லாமே விளக்கமாச் சொன்னாத் தான் புரியுது.
ஐ...ஜீராவா...சூப்பர் பொருத்தமாச்சே இராகவனுக்கு. அவர் என்னமோ கோஇரான்னு போட்டுக்கறார். நீங்க ஒரு நல்ல பேரா ஜீரான்னு வச்சிருக்கீங்க. இனிமே இதையே பயன் படுத்த வேண்டியது தான்.
நிலா நன்றி
குமரன், வெற்றி என்பதன் பொருள், கிழவர் ஐம்பதோ, ஐநூறோ ரூபாயை வாங்க மறுத்து தன் பசியை, தன்னை இந்த நிலைமையில் வைத்துள்ள ஆண்டவனை வென்றுவிட்டார். இதை தன்மானம் என்று சொல்ல முடியாது, ஒருவித பழிவாங்கும் உணர்ச்சி, யாரை என்றால் தன்னைவிட பணம் படைத்தவனை!
ராகவன், நெல்லிகாய் ஜாமூன் என்ற பதிவுப் போட்டாரே அன்றைக்கு இந்த பெயர் உதயமானது. நல்லா இருக்கு இல்லே ஜீரா?
உஷா, அழகாகக் கதை சொல்கிறீர்கள். ஏகப்பட்ட கதாபாத்திரங்களைப் போட்டுக் குழப்பிக் கொள்ளாமல், வெறுமனே இரண்டு கதாபாத்திரங்களைக்கொண்டு மட்டுமே கதையை நகர்த்தும் சிறுகதை உத்தியைத் தெளிவாகப் புரிந்து வைத்திருக்கிறீர்கள்.
மேலும் சம்பவ அமைப்புகளிலும் தெளிவும், அமைதியும் காணப்படுகிறது. என்றாலும், வாதங்கள் தர்க்கங்களைக் கண்டு ஏன் அஞ்சுகிறீர்கள் என்று புரியவில்லை.
வெறுமனே, கதை கவிதை என்று இயங்குவதால், மட்டுமே நீங்கள் விரும்பும் எழுத்தாளர் என்ற லட்சியத்தைத் தொட முடியும் என்று தோன்றவில்லை. கட்டுரை எழுதுவதிலும், விவாதிப்பதிலும் கவனம் செலுத்துங்கள்.
தர்க்கம் உங்கள் பார்வையை விரிவடையச் செய்யும்.
இன்னும் நிறைய எழுதி புகழ் பெற வாழ்த்துகள்.
விமர்சனத்துக்கு மிக்க நன்றி நண்பன்.
Post a Comment
<< இல்லம்