Saturday, January 14, 2006

பொங்கல் கசக்கிறது

வாயை இறுக்கி மூடிக் கொள்கிறேன்
என்ன சொன்னாலும்
தவறாகப் போய்விடும் என்று
நட்பும் கற்புப்போல என்பார்கள்
சந்தேகம் வந்தால்
வாழ்நாள் முழுதும் தொடரும்
நடந்தவைகள் நன்றாக இல்லை
நடப்பதும் சகிக்கவில்லை
நடக்கப் போவதில்
என் நம்பிக்கை குலைந்துக்
கொண்டு இருக்கிறது
தமிழ் என்ற அமுதம்
தந்த நட்பில் பேதம்
இது நாள்வரை தோன்றவில்லை
எங்கோ எவரோ தலைக்குமேல்
வீசப்பட்ட பளீர் ஒளியிலும்
ஏற்றிவிட்ட மேடையிலும்,
கிடைத்த ஒலிப் பெருக்கியிலும்
உளறிய உளரல்களுக்கு இந்தளவு
முக்கியத்துவம் தர வேண்டுமா தோழா?
முதல் முறையாய் வாயில் இட்ட
பொங்கல் கசக்கிறது

9 பின்னூட்டங்கள்:

At Saturday, 14 January, 2006, சொல்வது...

ஒன்றும் புரியவில்லை..
யாரைச் சொல்கிறீரென்று
மரமண்டைகளுக்குள் ஏறுவதில்லை.
பொங்கல் இனித்திட வெல்லம் போடுங்கள்..
வாழ்க்கை இனித்திட உள்ளம் போடுங்கள்..


இது(வும்) கவிதை மாதிரியே இல்லை?

 
At Saturday, 14 January, 2006, சொல்வது...

எப்போதும் போல பொங்கல் செய்யாமல் கற்பனையே செய்ய முடியாத அச்சுக்களில் தயாரிக்கப்பட்டு தினமொரு விதமாக வெளிவரும் வெல்லத்தில் செய்தீர்களா? எதிலும் மயங்காமல் எப்போதும் போல பொங்கலிட்டு வீட்டுக்குள்ளேயே "பொங்கலோ பொங்கல்" என்று கூவி சாப்பிட மட்டும் வாய் திறவுங்கள். பொங்கல் இனிப்பாக இருக்கும்.

உழவர் திருநாள் வாழ்த்துக்கள்

 
At Saturday, 14 January, 2006, சொல்வது...

உஷா நீங்கள் சொல்வது எனக்குப் புரிகிறது. பல பிரச்சனைகளில் கொஞ்சம் வாயை மூடிக் கொண்டிருந்தாலே...பிரச்சனைகள் காணாமல் போய்விடும். இன்னும் பல சமயங்களில் நாம் பேசியே எதிரியைப் பெரிய ஆளாக்கி விடுகிறோம்.

வருந்த வேண்டாம். பொங்கல் இனிக்கும். சாப்பிடும் பொழுது சாப்பாட்டை மட்டும் நினையுங்கள்.

இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

 
At Saturday, 14 January, 2006, சொல்வது...

எந்த தோழனை பார்த்து கேக்குறீங்கன்னு சொன்னாத்தான தெரியும். அதைத்தான் நேரடியா சொல்லிடுங்களேன். யாருக்கு ஒளிவட்டம் வந்திருக்கு, யாருக்கு ஒலிப்பெருக்கு கிடைச்சிருக்குனு?

தெரியாதவங்க எல்லாம் தெரிஞ்சிக்குவாங்கல்ல


அப்புறம் இனிய தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துகள்

 
At Saturday, 14 January, 2006, சொல்வது...

உஷா,

பொங்கல் வாழ்த்துக்கள்

உங்கள் கதைகளில் இருக்கும் யதார்த்தமும் எளிமையும் கவிதைகளில் ஏனோ இருப்பதில்லை. ஒரு வேளை எனக்குத்தான் அப்படித் தோன்றுகிறதோ என்னவோ. இருந்தாலும் சொல்லத்தோன்றியது.

 
At Saturday, 14 January, 2006, சொல்வது...

சுரேஷ், உங்கள் கவிதை அருமை :-)

மூகமூடியாரே, உணர்ச்சிவசப்பட்டு வார்த்தைகள் விழுந்துக் கொண்டு இருக்கின்றன. சொந்த பெயரில் எழுதும்பொழுது கொஞ்சம்
நிதானமாக பொங்கலை ஆக்கி உண்டுவிட்டு வருகிறேன்.

முத்துகுமரன், ஆனாலும் இப்படி கிண்டல் அடிக்கக்கூடாது :-) சாதாரணமாய் எழுதினதையே புரியவில்லை என்றாலும், நானும்
இலக்கியதரமாய் எழுத ஆரம்பித்தால்..., நீங்கள் சப்தபதி மந்திரத்தின் விளக்கத்துக்கு பதில் கொடுக்காதப் போதே நினைத்தேன், ஈத் விடுமுறைக்கு எங்கே போனீர்கள்? இரண்டு நாட்களாய் நடக்கும் விவாதங்களைப் படித்துப் பார்த்தால் எல்லாம் புரியும்.

நிலா, நல்லா பாருங்க, நான் எங்காவது கவிதை என்று போட்டு இருக்கிறேனா:-) வார்த்தைகளைப் படிக்கட்டாய் அமைத்தால் கவிதை என்று பொருள் கொள்வதா? :-)))))

ஜீரா, ஆள் ஆளுக்கு உணர்ச்சிவசப்பட்டு பேசும்பொழுது மெளனம் காப்பதே சிறந்த வழி.

 
At Saturday, 14 January, 2006, சொல்வது...

// ஜீரா, ஆள் ஆளுக்கு உணர்ச்சிவசப்பட்டு பேசும்பொழுது மெளனம் காப்பதே சிறந்த வழி. //

உண்மை உஷா. நானும் அதைத்தான் செய்து கொண்டிருக்கிறேன் என்று நினைக்கிறேன்.

 
At Saturday, 14 January, 2006, சொல்வது...

யாரோ எதையோ பேசியதுனால நம்ம வீட்டு பொங்கல் ஏனுங்க கசக்கணும். இந்நாள் எல்லாருக்கும் நல்லா நாளாகட்டும். கடவுளே எல்லோருக்கும் நல்ல புத்தியை கொடுடான்னு வேண்டிகிட்டு பொங்கலை ஒரு கை பாருங்கோய்.

பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

 
At Saturday, 14 January, 2006, சொல்வது...

உஷா,

எல்லோரும் ஒண்ணுபோல இருக்க முடியுமா? அவுங்கவங்க நினைப்பு, கருத்து எல்லாம் அவுங்கவுங்களுக்கு.

அதுக்குப் பொங்கல் ஏன் கசக்கணும்?

ரெண்டு நாளா என்ன்.... ரெண்டு மாமாங்கமானாலும் இப்படி எதாவது விவாதங்கள், கருத்துவேற்றுமைகள் வந்துக்கிட்டுத்தான் இருக்கும்.
அது பாட்டுக்கு அது இது பாட்டுக்கு இது.

இனிய மாட்டுப்பொங்கல் வாழ்த்துக்கள்.

இன்னிக்கு மாட்டுப் பொங்கல்தானே? தப்பா நினைச்சுராதீங்க.

 

Post a Comment

<< இல்லம்