Thursday, January 12, 2006

பழைய நினைவுகள்.

முதன் முதலாய் தோழியர் பதிவில் எழுதியது. நந்தவனம் சோதனைக்கு ஒரு மீள் பதிவு.

**********************

என்னையும் பலர் வலைப்பூ ஆரம்பியுங்கள் என்று நாளும் தொல்லை செய்துக் கொண்டிருந்தனர்.
( ஐந்து பேர்கள்- இது மனசாட்சி பேசும் இடம்). அவர்கள் தொல்லை தாங்காமல் ( ஒரு தடவை கேட்டதற்கு இவ்வளவு பில்டப்பா?) நானும் வலைப்பூ ஆரம்பிக்கப் போகிறேன் என்று வீட்டுக்கு வந்த என் நெருங்கிய தோழியிடம் சொன்னேன்.

அவள் கேட்டாள் எதை பற்றி எழுத போகிறாய்? கம்ப்யூட்டர் பற்றியா?- கம்ப்யூட்டருக்கு ஸ்பெல்லிங் மட்டும் தெரியும் (இன்னும் ஒழுங்கா பின்னூட்டம் இட வரவில்லை) என்றேன். அறிவியல், விஞ்ஞானம், தொழில்நுட்பம்? நான் பரிதாபமாய் அவளைப் பார்த்தேன்.

சரி சரி புரியுது என்றவள் ஆன்மீகம்? சுத்தம் என்றேன். அப்படி என்றால் நாஸ்திக வாதமா? வேத காலத்தில் ஆரம்பித்து பெரியார், இன்றைய ஞாநி வரை தொடரலாமே?- ஹி! ஹி! என்றேன்.

நீ தான் எழுத்தாளி ஆயிற்றே, எப்படி எழுதுவது, புக் போடுவது, பத்திரிக்கையில் கதை வர செய்வது போன்ற குறிப்புகளை எழுதி இளம் எழுத்தாளர்களை வழி நடத்தலாமே என்றாள். என் கண்ணில் மடமடவென்று கண்ணீர் மல்கியது, ஆனாலும் இப்படி கேலி செய்யக்கூடாது என்று கேவினேன்.

என்னை சமாதானப்படுத்தியவள் கதை,கவிதை இவற்றை விமர்சிக்கலாமே என்றாள். வேண்டாமா விமர்சிக்கிறேன்னு எழுத்தாளர்களின் எழுத்தை சொல்லப் போய் ஆளு ஆளுக்கு முதுகில் டின் கட்டிய அனுபவத்தை நான் இன்னும் மறக்கவில்லை. அப்புறம் கவிதைன்னா…. வந்து வந்து…., சொல்லவந்ததை சொல்லாமல் முழுங்கினேன்.

தமிழ், ஆங்கில சினிமா விமர்சனம்? நான் இருப்பது பளபளப்பான குக்கிராமம் இங்க சினிமா எல்லாம் ஓடி முடிந்து ஆறுமாசம் ஆகிதான் வரும். கடைசியா இங்க வந்த படம் வர்ணஜாலம். அதை வேற காசை தண்டமாக்கி பார்த்துவிட்டு விமர்சனம் செய்யணுமா? என்றேன். உலக அரசியல்? திரும்பவும் ப.பார்வைப் பார்த்தேன். இந்திய, தமிழ்நாட்டு அரசியல் என்றதும் உச்சுக் கொட்டினேன்.

ஆஹா! நல்ல ஐடியா சொல்லுகிறேன்! பெண்களுக்கு என்று அழகு குறிப்புகள், மருத்துவ விஷயங்கள் முக்கியமாய் சமையல் குறிப்புகள்…. நான் முறைத்த முறைப்பைப் பார்த்து வாய் மூடிக் கொண்டாள்.

எழுதணும்னு தோணர்து ஆனா என்ன எழுதுதணும்னு தெரியலையே… என்று சிவாஜி மாதிரி டயலாக் விட்டேன்.

அவள் எரிச்சலுடன் எதையோ எழுதி தொலை என்று ஆசிர்வதித்துவிட்டு, கண்டதைப் படிக்கவேண்டும் என்று தலைவிதி என்று முணங்கினாள்.

யூரேகா என்று முழங்கினேன். கண்டது,கேட்டது, நினைத்தது, பார்த்தது, பேசியது, அனுபவித்தது எல்லாம் சேர்ந்து டைரி எழுதப் போகிறேன். விரைவில் எதிர் பாருங்கள் “ஒரு எழுத்தாளினியின் வலைக் குறிப்புகள்” என்று பெருமை பொங்க அவளைப் பார்த்தேன். ஒரு பெருமூச்சு விட்டு விட்டு
எழுந்துப் போனாள் அந்த பொறாமை பிடித்தவள்.

எழுந்தவளைப் பிடித்து,'’ அப்படியே அதை எப்படிப் போடுவதுன்னு சொல்லுக் கொடு. எனக்கு நிறைய பிரண்ட்ஸ் இருக்காங்க. விக்கி, ஆர்.எஸ்.எஸ், திஸ்கி, யூனிகோர்ட், மூவபிள் டைப்பு, ஹெச்டிஎம் எல், டெம்பேளட் டிசைன்ன்னு கூடி கூடி பேசராங்க. எனக்கு ஒரு மண்ணும் புரியலை”
என்று நான் புலம்பிக் கொண்டே கம்ப்யூட்டரை ஆன் செய்தேன்.

அவள் நான் சொன்னதைக் தலையை ஆட்டிக் கொண்டே கேட்டுக் கொண்டு, தன் செல் போன்னை தட்டிக் கொண்டிருந்தாள். ” இருபது பிரண்ட்ஸ்க்கு எஸ்.எம்.எஸ் அனுப்பிட்டேன். என் பெஸ்ட் பிரண்டு பிளாக்ஸ் ஆரம்பிக்க போறா படியுங்கன்னு” என்றாள்.

ஒரு நாலு பேராவது படிச்சிட்டு கமெண்ட்ஸ் சொல்ல மாட்டாங்களா என்று அவளை நன்றி பொங்க பார்த்தேன்.

“அய்யயோ என்னடி இது?” என்று அலறலைக் கேட்டு எனக்கும் தூக்கிவாரிப்போட்டது. திரையில் முரசு அஞ்சல்தான் இருந்தது.

“மு மு முரசு அ அ அஞ்சல்! என்ன இது?” என்றாள். நானோ புரியாமல், ” முரசு அஞ்சல் இருந்தாதானே தமிழில் டைப் அடிக்க முடியும்” என்று வினவினேன்.

“மை காட்! அப்படினா உன் கதை, இந்த பிளாக்ஸ் எல்லாம் தமிழ்லையா?” இங்கீலிஷ்ல இல்லையா? தமிழ்ல யாரு படிப்பா?” என்றுக் கேட்டாள் அந்த பச்சை தமிழச்சி, எம்.சி.ஏ பட்டதாரி.

என்னமோ நான் கம்ப்யூட்டரை கற்பழி… சே ! சே! உதாரணம் சரியில்லை. கொடுமை, துரோகம் செய்தா மாதிரி என்னை ஒரு பார்வை பார்த்தாள்.

நான் பொறுக்க முடியாமல், ” தமிழ் எழுத்து, இலக்கியம், ஆண்டாள்ன்னு நீ பேசினது இல்லை” என்றுக் கேட்டேன்.

“கம்பராமாயணம், திருப்பாவை, சுஜாதா, கல்கி, தமிழ் சினிமா பாட்டு, விருமாண்டி எல்லாம் இங்கீலிஷ்லதான் நாங்கள் படிப்பது!” என்றாள் காதலிக்க நேரமில்லை காஞ்சனாவும், ராஜஸ்ரீ மாதிரி.

“தமிழ் படிக்க தெரியாதவங்களுக்கு சரி! நீ பத்தாவதுவரை தமிழ் மீடியம்தானே படிச்சே!” என்றதற்கு பதில் சொல்லாமல் முகத்தை சுழித்தாள்.

அப்புறம் கதையை வளர்ப்பானேன், நான் கம்ப்யூட்டருக்கு செய்த துரோகத்தைத் தாங்க முடியாமல் அன்றுடன் என்னுடன் பேசுவதையே நிறுத்திவிட்டாள்.

பிறகு மீண்டும் என் கவலை அதிகரித்தது. அப்பொழுதுதான் இந்த பெண்ணினம் என்ற கூட்டு வலைப் பதிவைக் கண்டேன். லட்டுமாதிரி உருவாக்கியிருக்கிறார்கள் , அதிலேயே என் எண்ணங்களைப் பதிவு செய்துவிட்டால், அன்று கணையாழியில் கடைசி பக்கத்தில் சுஜாதா தன்
மனத்திற்கு தோன்றியவைகளை எழுதுவாரே, அதுப் போல நாமும் என்று என்ன முடிகிறதோ அன்று என் சிந்தனை சிதறல்களை (!) அங்கு பதிவு செய்தால் என்னவென்று களத்தில் குதித்துவிட்டேன்.
****

2 பின்னூட்டங்கள்:

At Friday, 13 January, 2006, சொல்வது...

தங்களுக்கும் தங்கள் குடும்பத்திற்கும் எனது பொங்கல் பண்டிகை நல்வாழ்த்துகள்.

 
At Friday, 13 January, 2006, சொல்வது...

சிங், நன்றி. பொங்கல் சாப்பிட்டாச்சா?

 

Post a Comment

<< இல்லம்