Wednesday, January 04, 2006

அர்த்தமுள்ள சாஸ்திரங்கள் ???

பொதுவாக வாக்குவாதங்கள், தர்க்கங்கள் என்னை கவருவது இல்லை. காரணம் உண்மை மற்றும் பொய்கள், தவறு மற்றும் சரியான கருத்து என்பது இரண்டு பக்கமும் இருக்கும். ஆனால் தர்க்கிப்பவர்கள் இதை ஒரு கலையாய் வளர்த்துக் கொண்டு, தங்கள் வாதங்களையே பிடித்து தொங்கிக் கொண்டு இருப்பார்கள்.

நல்ல நட்புகளுடன், பரஸ்பர மரியாதையுடன் ஏற்படும் விவாதங்கள், பேச, பேச எதிர் கருத்தை ஒத்துக் கொள்கிறோமோ இல்லையே மனதிற்கு சுகமாய் இருக்கும். ஆனால் இத்தகைய கருத்துபரிமாற்றங்கள் வெகு அபூர்வமாய்தான் ஏற்படும். ஆக லேசாய், யாராவது குரல் ஓங்கி, புள்ளிவிவரங்களை அடுக்க ஆரம்பித்தால், நீங்கள் சொல்வது மிக்க சரி என்று மட்டும் சொல்லிவிட்டு ஒதுங்கிவிடுவேன். இது நட்பு அல்லாமல் குடும்பத்திலும் நன்றாக ஒர்க் அவுட் ஆகும்.

எதற்கு இத்தனை பீடிகை என்கிறீர்களா? நாலு பேர்கள் சேருமிடத்தில் ஒத்துக்கொள்ள முடியாத சப்ஜெட் என்றால் வாயையே
திறக்க மாட்டேன். ஆனால் நாலு நாட்களுக்கு முன்பு இந்து மதத்தின் மேன்மை பற்றி பேச்சு காதில் விழுந்தது. நான் பார்த்தவரையில் சொந்த நாட்டைவிட்டு வெளியே வந்ததும் சாஸ்திர சம்பிரதாயங்கள், பூஜை, புனஸ்காரங்கள் மற்றும் மத நம்பிக்கையில் அதிக பற்று வந்துவிடுகிறது.

காதை திறந்து வைத்துக் கொண்டு வாயை திறந்து உணவுவகைகளை உள்ளே தள்ளிக் கொண்டிருக்கும்பொழுது, " அந்தக் காலத்தில் நம் முன்னோர்கள் சொன்னதில் ஆயிரம் அர்த்தங்கள் உண்டு. தெரியாமல் ஒன்றும் சொல்லவில்லை அவர்கள்" என்று கொஞ்சம் வயதான அம்மாள் சொல்லிக் கொண்டு இருந்தார்.

இதே வசனத்தை என் அம்மா பலமுறை சொல்ல கேட்டிருக்கிறேன். ஆனால் அவை எல்லாம் அந்தக்காலத்திற்கு ஏற்றது, இப்பொழுது தேவையில்லை என்ற முறையில்! உதாரணமாய், விளக்கு வைத்ததும் குப்பை கொட்டக்கூடாது என்பதற்கு, அக்காலத்தில் மின் விளக்கு கிடையாது. புழக்கடையில் குப்பை கொட்டப்போய், இருட்டில் ஏதாவது பூச்சி, புழு கடித்தால் என்ன செய்வது என்பதால் சாஸ்திரம் என்று ஆக்கிவிட்டால், கேள்வி கேட்காமல் ஒத்துக் கொள்வார்கள் என்பதால் கடைபிடிக்கப்பட்டது ஆனால் இன்றைக்கு இரவை பகலாய் காட்டும் வெளிச்சத்தில் குப்பை கொட்டினால் தப்பில்லை என்று சொல்வார்.

பார்ட்டியில் இந்த அம்மாள், காதில் கம்மலுக்கு மேல் வரிசையாய் துளையிட்டு காது குத்திக் கொள்வது மிக உசிதம். காரணம் அங்கிருக்கும் நுண்ணிய நரம்புகள் மூளைக்கு சம்மந்தப்பட்டவை, ஆகையால் மூளை பிரகாசிக்கும் என்றார். எனக்கு சிரிப்பு தாங்கவில்லை. வாய் தானாய் திறந்து, "பெண்கள் இப்படி காதுகள் குத்தப்பட்டு மிக புத்திசாலிதனமாய் ஆகிவிட்டார்கள். ஆனால் ஆண்களுக்கு ஏன் இந்த புத்திசாலிதனம் பெருகும் வழி சொல்லப்படவில்லை?" என்றதும், அந்த அம்மாள் முகம் போன போக்கை பார்க்க வேண்டுமே!

உடனே, 'இவற்றைக் குறித்து அமெரிக்காவில் ஆராய்ச்சி செய்து நம் முன்னோர்கள் சொன்னது விஞ்ஞான ரீதியான உண்மை என்று நிரூபிக்கப்பட்டுள்ளது" என்றார். அதற்கு பிறகு 'அமெரிக்க கண்டுப்பிடிப்பு" பற்றி நான் கேள்வி எதுவும் கேட்கவில்லை. அமெரிக்கா விஞ்ஞானிகள் சொன்னால் சரியாகதானே இருக்கும்? அது என்னவோ இத்தகைய ஆராய்ச்சிகள் அமெரிக்க விஞ்ஞானிகள் செய்வதாகவே சொல்லப்படுகிறது. ஏன் ஐரோப்பிய, ஆஸ்திரேலிய, ரஷ்ய விஞ்ஞானிகளை யாரும் சாட்சிக்கு அழைப்பதில்லை என்று தெரியவில்லை.

எனக்கு தெரிந்த ஒருவர் கம்மல் அல்லாமல் மொத்தம் ஆறு துளைகள் வரிசையாய் போட்டிருப்பார். இந்த காது துளைகள் மேலே மேலே போய் கடைசியாய் மேல் காதில் போடும் கம்மல் ஏறக்குறைய நட்டு போல்ட் மாதிரி இருக்கும். அது என்னவோ பெண்களை முட்டாள் ஆக்க விதவிதமான வழி முறைகள்!

பேஷன் என்ற பெயரில் பழையவை திரும்பிக் கொண்டு இருக்கின்றன. புல்லாக்கு என்று ஒரு நகை. மூக்கின் இரண்டு துளைகளுக்கும் நடுவில் குத்துவது. அந்த கால பானுமதி படத்தில் அதை போட்டிருந்ததைப் பார்த்து நான் அதை மூக்கு சளி தொங்குகிறது என்று நினைத்துவிட்டேன் என்று அம்மா சொல்லி சிரித்திருக்கிறார்.

இப்பொழுது ஸ்ரீப்ரியா அந்த பழைய பாரம்பரிய நகையை "விக்கிரமாதிதன்" என்ற தொடர் சன் டீவியில் வந்தது இல்லையா, அதன் டைட்டில் சாங்கில் போட்டிருந்தார். அதைப் பார்த்து எத்தனை பெண்ணரசிகள், கலாசாரத்தைக் காப்பாற்ற மூக்கை துளையிட்டுக் கொண்டார்களோ தெரியவில்லை!

25 பின்னூட்டங்கள்:

At Wednesday, 04 January, 2006, சொல்வது...

அர்த்தமற்ற சாஸ்திரங்கள் காது மூக்குடன் நின்றால் தேவலை!

 
At Wednesday, 04 January, 2006, சொல்வது...

அருமையாகச் சொன்னீர்கள் உஷா. இது போல இன்னும் நிறைய இருக்கின்றது என நினைக்கிறேன். ஒரு காரணத்திற்காகச் செய்யத் தொடங்கி பிறகு அந்தக் காரணமே தேவையில்லாமல் போன பிறகும் அதைத் தொடர்ந்து கொண்டிருப்பது. இவைகளை யாராவது பட்டியல் இடுங்களேன்.

 
At Wednesday, 04 January, 2006, சொல்வது...

'சாமி'ன்னு சொல்லி தலைல தேங்காய் உடைக்கிறாங்க., மூக்கு குத்தறத சொல்றிங்க., ஒரு நடிகன் ஒவ்வொரு படத்திலயும் மூட பழக்க வழக்கங்களை எதிர்த்தும்., உங்கள எத்தன பெரியார் வந்தாலும் திருத்த முடியாதுடான்னு சந்தடி சாங்குல காசு குடுத்து பார்க்குறவங்கள ஏக வசனம் பேசி நடிச்சு பைய நிறப்பிகிட்டு., சாதி மாநாட்டுல கலந்துகிட்டு., எப்பவும் நம்மாளுகதான் மேலன்னு வசனம் பேசியிருக்குது... யாரும் கண்டுக்கலை. 'சோக்கு' நினைச்சு விட்டுட்டாக போல.

 
At Wednesday, 04 January, 2006, சொல்வது...

'சாமி'ன்னு சொல்லி தலைல தேங்காய் உடைக்கிறாங்க., மூக்கு குத்தறத சொல்றிங்க., ஒரு நடிகன் ஒவ்வொரு படத்திலயும் மூட பழக்க வழக்கங்களை எதிர்த்தும்., உங்கள எத்தன பெரியார் வந்தாலும் திருத்த முடியாதுடான்னு சந்தடி சாங்குல காசு குடுத்து பார்க்குறவங்கள ஏக வசனம் பேசி நடிச்சு பைய நிறப்பிகிட்டு., சாதி மாநாட்டுல கலந்துகிட்டு., எப்பவும் நம்மாளுகதான் மேலன்னு வசனம் பேசியிருக்குது... யாரும் கண்டுக்கலை. 'சோக்கு' நினைச்சு விட்டுட்டாக போல.

 
At Wednesday, 04 January, 2006, சொல்வது...

பூஜை நேரத்துல பூனையைக் கட்டுன கதைதான் எனக்கு நினைவுக்கு வருது. அமெரிக்காக்காரன் சொன்னானோ இல்லையோ, குருட்டாம் போக்குல எதையாவது சொல்லிவிட வேண்டியது தான். யாரு கேக்கப்போறா? இப்ப கூட String theory படிச்சுட்டு அதுல parallel universes பத்தி போட்டிருக்கு; அதைத் தான் நம்ம பெரியவங்க லோகங்களா சொல்லியிருக்காங்கன்னு ஒருத்தர் சொன்னார். இப்படி அவரவர்களுக்குப் பிடித்த கருத்து வந்தால் அது சம்பந்தம் இருக்கோ இல்லையோ எடுத்து விடுவது உலகம் முழுக்க இருக்கும் ஒரு குணம் தான் போல.

 
At Wednesday, 04 January, 2006, சொல்வது...

இந்த மாதிரி தர்க்கங்கள் /விவாதங்கள் எல்லாம் கலியுகத்தில் நடக்குமுன்னு முந்தியே சொல்லி வச்சிருக்காங்க:-)

 
At Wednesday, 04 January, 2006, சொல்வது...

சதயம், என்ன சொல்றீங்க புரியலை இந்த நுனிப்புல்லுக்கு :-)

தாணு, காது குத்தல்கள் பலவகைப்படும், சொல்கிறேன் விளக்கமாய்!

அப்படிப்போடு, இந்த வகையில் சத்தியராஜ் ஓ.கே. அவருடைய பேட்டி ஒன்று தொலைக்காட்சியில் பார்த்தேன். மிக யதார்த்தமாய் பேசினார். அவருடைய லொள்ளு எனக்கு மிக பிடிக்கும். ஆனால் பெண்களை மிக கேவலமாய் பேசுவதை குறைத்துக் கொள்ள வேண்டும் என்ற என்ற கோரிக்கையை யாராவது அவரை நேரில் பார்த்தால் சொல்லுங்க.

குமரன்! நாங்கள் காசிக்கும், அலகாபாத்துக்கும் சென்றப் பொழுது, அங்கிருந்த பண்டா ( பூசாரிகள்) என்ன
சொன்னார்கள் தெரியுமா? காவேரி மற்றும் திரிவேணி சங்கமத்தில் ஓடும் நீரை தலையில் தெளித்துக் கொள்ளுங்கள், ஆனால் வாயில் போட்டுக்கொள்ளாதீர்கள் எனறு எச்சரித்தார்கள்.

ஆனால் நம் ஊரில் "வெள்ளைக்கார விஞ்ஞானிகள்" ஆராய்ச்சிப்படி கங்கை நீர் எந்த வித மாசும் இல்லாதது என்று பலரும் சொல்ல கேட்டிருக்கிறேன். முக்கியமாய் காசி கங்கை நீர்! அது என்னவோ, இதற்கு வெள்ளைக்கார விஞ்ஞானிகள் கொடுக்கும் நற்சான்றிதழ்தான் நம் ஆட்களுக்கு முக்கியமாய் படுகிறது :-)

ராகவா, பட்டியல் போட ஆரம்பித்தல் மாளாது. நம்பிக்கைக்கும், மூட நம்பிக்கைக்கு நிறைய வேறுப்பாடு உள்ளது. ஒருமுறை திருப்பதி தாயாரின் தாலி கழண்டு விழுந்துப் போயிற்று என்ற கூத்து கிளம்பியது ஞாபகம் இருக்கா? முதல் மெயில் அமரிக்கா தோழியிடம் இருந்து வந்தது. இங்க பலரும் போனில் கொடுத்த டார்ச்சர் தாங்காமல், 'நான் கயிறு அணியவில்லை, தங்கத்தில்
தாலி செயின் போட்டு உள்ளேன். புதுசு கேட்டால் வாங்கி தரமாட்டேன் என்று சொல்கிறார்" என்று சொல்லி சொல்லி அலுத்துப்
போயிற்று.

துளசி, அதுதானே :-)

 
At Thursday, 05 January, 2006, சொல்வது...

//குமரன்! நாங்கள் காசிக்கும், அலகாபாத்துக்கும் சென்றப் பொழுது, அங்கிருந்த பண்டா ( பூசாரிகள்) என்ன
சொன்னார்கள் தெரியுமா? காவேரி மற்றும் திரிவேணி சங்கமத்தில் ஓடும் நீரை தலையில் தெளித்துக் கொள்ளுங்கள், ஆனால் வாயில் போட்டுக்கொள்ளாதீர்கள் எனறு எச்சரித்தார்கள்.
//

உஷா காசியில் காவேரி ஓடுதா நான் பார்த்ததேயில்லையே, நான் நினைக்கிறேன் என்னைக்கூட்டிக்கொண்டு போன கைடு காட்டாமல் ஏமாற்றிவிட்டாரென்று. :-)

 
At Thursday, 05 January, 2006, சொல்வது...

மோகன் தாஸ், தப்பு தப்பு தப்பு. காவேரியல்ல, கங்கை, கங்கை. கங்கை.

டி.ராஜ், இருக்கலாம். ஆனால் எல்லாவற்றையும் "விஞ்ஞான ரீதியாய்" சரி என்று நீரூபிக்கப்பட்டதாய் சொல்வது எபப்டி?
உதாரணமாய் "பஞ்சகாவ்யம்" கேள்விப்பட்டிருப்பீர்கள்,( ஸ்பெல்லிங் சரியா?) அதை பிரசாதமாய் வாயில் போட்டுக் கொள்வதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியதில்லை.

 
At Thursday, 05 January, 2006, சொல்வது...

//இப்படி அவரவர்களுக்குப் பிடித்த கருத்து வந்தால் அது சம்பந்தம் இருக்கோ இல்லையோ எடுத்து விடுவது உலகம் முழுக்க இருக்கும் ஒரு குணம் தான் போல
//
என்னங்க இப்படி சொல்றிங்க, தற்போது படித்துக்கொண்டிருக்கும் புத்தகம் சோ எழுதிய 'எங்கே பிராமணன்' அதிலே ஆரம்பித்தில் சொல்லியிருப்பாரு பாருங்க பத்ம வியூகத்தை உடைப்பதை கண்ணனும் அர்ஜுனனும் பேசிக்கொண்டிருப்பதை கர்பத்திலிருக்கும் அபிமன்யூ கேட்டு கற்றுக்கொண்டு குருசேத்திர போரில் பத்மவியூகத்தை உடைத்தாராம் ஆனால் அதிலிருந்து வெளிவருவதை கண்ணனும் அர்ஜீனனும் பேசியது கர்ப்பத்தில் இருந்த அபிமன்யூவிற்கு கேட்காததால் அதில் மாட்டிக்கொண்டு இறந்துவிட்டாராம், கருவில் இருக்கும் குழந்தைகள் வெளியிலிருந்து கற்றுக்கொள்கின்றன என்பதை ஆதாரப்பூர்வமாக விஞ்ஞானிகள் நிரூபித்துள்ளனர் அப்பவே இப்படி சொல்லியிருக்காங்க என்று புளங்காகிதப்பட்டுள்ளார், அது மட்டுமில்லாமல் புராணத்தில் பயன்படுத்தப்பட்ட அஸ்திரங்கள் எல்லாம் தற்போதுள்ள ஏவுகணைகள், அணுஆயுதங்கள் என்றும் படித்தேன்.... இன்னும் நிறைய நிறைய புளங்காகிதங்கள் அந்த புத்தகத்தில் படிக்க படிக்க ஒரே சிரிப்பு தான் போங்க....ஆனால் இந்த புத்தகத்தை சீரியசாக படித்தால் பலருக்கு இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும் என்பதால் இதை வெறும் நகைச்சுவையாக மட்டுமே படிக்கவும் இல்லையென்றால் படிக்காமல் இருக்கவும்...


நன்றி

 
At Thursday, 05 January, 2006, சொல்வது...

குழலி. "சோ" வை மட்டும் குறிப்பிடுவதை வன்மையாய் கண்டிக்கிறேன் :-)
கண்ணதாசன் எழுதிய "அர்த்தமுள்ள இந்துமதம்" வரிசையில் இத்தகைய "புளங்கிதங்களைப்" படித்ததாய் நினைவு. பிறகு
லேட்டஸ்ட் "பக்தி" பத்திரிக்கைகள் மானாவாரியாய் வருகிறது, அதிலும் இத்தகைய விஞ்ஞான பூர்வ கண்டுப்பிடிப்பு சமாசாரங்கள்
இருக்கும், படித்து இன்புருக!

டி.ராஜ், ஸ்பெல்லிங் சரிதான் போல இருக்கு?

 
At Thursday, 05 January, 2006, சொல்வது...

உஷா. பஞ்சகவ்யம் சரியான ஸ்பெல்லிங்.

 
At Thursday, 05 January, 2006, சொல்வது...

எல்லா நம்பிக்கைகளையுமே இலேசாக சுரண்டினால் அடியில் சந்தேகம் தான் இருக்கும் உஷா. நம்பிக்கையின் இயல்பே அப்படித்தான். உங்கள் கண்ணெதிரே ஒரு ரோஜா இருந்தால் நீங்கள் அது அங்கு இருப்பதாக நம்பமாட்டீர்கள். அது இருக்கிறது! அவ்வளவுதான். ஆனால் ஓரிடத்தில் ரோஜா இருப்பதாக நம்பினால் 1% ஆவது இல்லாமல் போவதற்கான சாத்தியம் அடியில் அவநம்பிக்கையாக இருக்கும். ஆகவே எல்லா நம்பிக்கைகளும் கூடுமானவரை இப்படி சான்றிதழ்களை இழுத்துக்கொண்டுதான் வரும்.

 
At Thursday, 05 January, 2006, சொல்வது...

This comment has been removed by a blog administrator.

 
At Thursday, 05 January, 2006, சொல்வது...

ரொம்ப சிம்பிளா சொல்லிடுவாங்க! உனக்குத்தான் தெரியலே -- எல்லா சம்பிரதாயத்துக்கும் ஒரு காரணம் இருக்குன்னு! எனக்கு (உனக்குமே) காரணம் தெரியாம ஏன் கடைப்பிடிக்கணும்?????

பாக்யான்னு ஒரு பத்திரிக்கை இன்னமும் வருது(ன்னு நினைக்கிறேன்)! நீவிர் படித்து புளகாங்கிதப்படவே தயாரிக்கப்படுகிற பத்திரிக்கை அது.

 
At Thursday, 05 January, 2006, சொல்வது...

Nalla thamaashaa keethu! Pl. don't ask me which one! :-)

 
At Friday, 06 January, 2006, சொல்வது...

மீண்டும் ஒரு வழவழ கொழ கொழ பதிவு....

பின்னூட்டம் எழுதப் போய், ஒரு நீண்ட பதிவாகி விட்டது. அதனால அதையே ஒரு பதிவாக வைத்து விட்டேன் என் வலைப்பூவில்.

சிரமம் பாராது வந்திருந்து ஒரு பார்வை பாத்து திட்டி விட்டுப் போங்கள்.

http://nanbanshaji.blogspot.com/2006/01/blog-post_06.html

நன்றி.

புத்தாண்டு வாழ்த்துகள்,

அன்புடன்
நண்பன்.

 
At Friday, 06 January, 2006, சொல்வது...

நன்றி நண்பன்.

விவாதங்கள் பற்றிய உங்கள் பதிவையும் பார்த்தேன். விவாதங்கள் பரஸ்பர மரியாதையுடன் மட்டுமல்லாமல் நேர்மையுடனும் நடக்க வேண்டும். ஆனால் அப்படி எத்தனை நடக்கின்றன? எங்கு அடித்தால் வலிக்கும் என்று நன்றாக அறிந்து வாதிடுபவர்களைக் கண்டு பயந்து ஓடுகிறேன் என்று நீங்கள் நினைத்தால் மிக சரி. காரணம் அப்படி என்னால் பிறரை பேச முடியாது.

நல்ல நட்புகளை பெற்ற அதிருஷ்டசாலி நான். நான் எழுதும் கதைகளை 'சூப்பர்", "மிக நன்றாக எழுதுகிறீர்கள்" என்று முன்னால் சொல்லிவிட்டு பின்னால் சிரிப்பவர்கள் இல்லை. மிக அழகாக வரிக்கு வரி அலசும் நட்பு உண்டு. "எதுக்கு கவிதை எல்லாம் எழுதி கொல்லுகிறீங்க?" என்று சொல்லும் நட்பும் உண்டு. கொஞ்சம் விவகரமான பதிவு என்றால் சும்மா இருக்ககூடாதா என்று கடித்துக் கொள்ளும் அன்பு உள்ளங்களும் உண்டு.

நீங்கள் வழவழக்கொழ கொழ பதிவு என்று சொன்னால் அதையும், சூப்பராய் அலசியிருக்கீங்க என்று மெச்சிக் கொள்ளும் வார்த்தையையும் ஒன்றாக பாவிக்கும் மன பக்குவம் எனக்கு இருக்கிறது. காரணம் இரண்டுமே உண்மை :-)

ஒருமுறை நா. கண்ணன் அவர்களுடன் கடவுளைப் பற்றி ஒருவாரம் சண்டை போட்டேன். இன்றுவரை மனதிற்கு பிடித்தவைகளில்
ஒன்று அது. ஒரு கட்டத்தில் நாங்களே நிறுத்திவிட்டோம். காரணம் அவரவர் கொள்கை அவரவருக்கு. சிறுவயதில் இருந்தே,
அனாவசியமாய் வார்த்தை விடுவதில் எனக்கு ஒப்புதல் இல்லை. இது வெறும் நேர விரயம்தான்.
எழுதும் எல்லாமே எல்லாரையும் கவரும் என்பது இல்லவேயில்லை.

எப்படியோ என் "நுனிப்புல்" எழுத்துக்கூட உங்களை இரண்டு பதிவு போட வைத்ததற்கு சந்தோஷமே!

 
At Friday, 06 January, 2006, சொல்வது...

Good follow up comment Usha; I liked Nanban's post for the decency in the words used and the style he put it up (though I dont agree with the contents fully)


//'சூப்பர்", "மிக நன்றாக எழுதுகிறீர்கள்" என்று முன்னால் சொல்லிவிட்டு பின்னால் சிரிப்பவர்கள் இல்லை. மிக அழகாக வரிக்கு வரி அலசும் நட்பு உண்டு.// I too feel you are lucky:-) and This is a MUST for a growing writer - if he/ she had to grow!!

 
At Friday, 06 January, 2006, சொல்வது...

விவாதங்களைப்பற்றி சொல்ல ஒன்றுமில்லை, ஆனால் பின்னூட்டங்களையும் பின்னூட்ட மட்டுறுத்துதலையும் மிகச் சரியான முறையில் பயன்படுத்துகிறீர்கள். :-).

 
At Friday, 06 January, 2006, சொல்வது...

சுரேஷ், ரொம்ப பொறாமைப்படாதீங்க.

மோகன் தாஸ், மாடரேஷன் போட்டதும் ஆபாச வசவுகள் எதுவும் வருவதில்லை. ஆக வரும் பின்னூட்டம் அனைத்தையும் பப்ளிஷ்
செய்துவிடுகிறேன். நீங்கள் சொல்வது சரியாய் புரியவில்லை. இதுவரை ஒரு பின்னூட்டம் கூட போடாமல் இருக்கவில்லையே???

 
At Wednesday, 12 July, 2006, சொல்வது...

அவரவர் நம்பிக்கை அவரவர்க்கு!
அடுத்தவர் மேல் திணிக்காத வரைக்கும், அடுத்தவரோடு பகிந்து கொள்ளக் கட்டாயப்படுத்தாத வரைக்கும் என்னவேனும் நம்பிக்கையை நீ வைத்துக் கொள்ள உனக்கு உரிமை இருக்கிறது என் இந்த நாட்டின் அரசிய சட்டம் உரிமை கொடுத்திருக்கிறது.
அது, இங்கும் உதவும் என நினைக்கிறேன்.

மற்றபடி, குழலியாருக்கும் உங்களுக்கும் ஒரு சின்ன திருத்தம்!
புளங்காகிதமும் இல்லை, புளங்கிதமும் இல்லை.
அது 'புளகாங்கிதம்' = உடல் முழுதும் பரவும் மகிழ்ச்சி உணர்வு.

நல்ல பதிவு!

 
At Wednesday, 12 July, 2006, சொல்வது...

அந்த காலத்தில் ஆண் குழந்தைகளுக்கும் காது குத்தத்தானே செய்தார்கள்? அது புத்திசாலியாவதற்கா எனத் தெரியவில்லை. ஆனால் "it stimulates your brain" என எங்கள் குடும்பத்தில் சொல்லி கேள்விப்பட்டிருக்கிறேன். அது போல மெட்டி அணியும் விரலில் இருக்கும் நரம்புகள் ஸ்டிமுலேட் ஆவதால் கருப்பை பைக்கு நல்லது என்றெல்லாமும் கூற கேட்டுள்ளேன்.

காரண காரியம் இல்லாமல் இவைகள் வழிமுறைக்கு வந்திருக்காதெனவே தோன்றுகிறது. நமக்கு முன்னால் இருந்த தலைமுறைகள் ஏனென்று கேட்க்காமல் கண்மூடித்தனமாக பின்பற்றுவதால் நமக்கு ஏற்றுக் கொள்வது கடினமாய் இருக்கிறது.

உலகெங்கும் மோதிர விரல் என்பது குறிப்பிட்ட அந்த விரலாகவே இருப்பது ஏன்? இவையெல்லாம் நம்மை சிந்திக்கத் தூண்டும் கேள்விகளே.

குமரன் சொல்லுன் பூனை போல் அந்த வழிமுறைகளும் அதிகம் இருக்கும். இவற்றின் காரண காரியங்களை ஆராய்ந்து இன்றைக்கும் பொருத்தமாக இருக்கும் வழிமுறைகளை கண்டறிந்து பின்பற்றினால் நல்லதுதான்.

திரச, எஸ்.கே போன்றோர் வந்து விளக்கினால் நன்றாக இருக்கும்.

 
At Wednesday, 12 July, 2006, சொல்வது...

உஷா, கண்ணதாசனின், அர்த்தமுள்ள இந்தும்மதம் படிச்சீங்களா? அதிலெ எழுதி இருந்த சில சம்பரதாயம்,சாஸ்திரங்களை என் நண்பன் சிறுவயதில் என்னமோ பெரிய உண்மை எழுதியதை போல சிலாகித்துக் கூறுவான்! அவனிடம் ஏகபட்ட தர்க்கம் அப்பொழுது பண்ணியதுண்டு! இது தான் எனக்கு இப்ப ஞாபகம் வருது!

 
At Wednesday, 12 July, 2006, சொல்வது...

சந்தடி சாக்கில் ஒரு சின்ன விளம்பரம் - இதுவும் நீங்க சொல்ற சாஸ்திரம் பத்திதான்:http://dharumi.weblogs.us/2006/03/08/199

 

Post a Comment

<< இல்லம்