Wednesday, January 18, 2006

கொஞ்சம் கதைக்கலாம் வாங்க - 1

முன்னுரையைப் படித்துவிட்டு சிலர், பெண்கள்தான் பொருள் இல்லாமல் மணிக்கணக்காய் பேசுவார்கள் என்ற கருத்தை வைத்தார்கள். இப்படி ஆண்கள் மட்டும் பேசமாட்டார்களா என்ன? இன்று படிப்பு, வேலை அதனால் கிடைக்கும் நட்புவட்டம் என்று பெண்கள் தங்கள் சிந்தனைகளை, கருத்துக்களை பரிமாறிக்கொள்ள பல தளங்கள் கிடைத்துள்ளன.

பெண்களுக்கான பிரத்தியோக உணர்வுகள், கருத்துக்கள், எண்ணங்கள் என்று தனியாய் ஒன்று உண்டு என்பதிலேயே எனக்கு ஒப்புமையில்லை. ( கவனிக்க தேவையில்லை என்ற கருத்தை சொல்லவில்லை) ஆணோ பெண்ணோ அவரவர் வளர்ந்த சூழ்நிலை, படித்த படிப்புக்கள், பழகும் வட்டம் இவற்றை வைத்தே எண்ணங்கள் ஏற்படுகின்றன என்பது என் தாழ்மையான எண்ணம்.

எழுத்தாளர் ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்தப்பொழுது, நான், பெண்களுக்கான 33% தேவையேயில்லை, தங்கள் வீட்டுப் பெண்களை முன் நிறுத்தி ஆண்கள் பாலிடிக்ஸ் செய்வார்கள் என்றேன். அதற்கு அவர் ஆரம்பம் அப்படித்தான் இருக்கும், காலப்போக்கில் பெண்கள் தானே முடிவெடுக்க ஆரம்பித்துவிடுவார்கள் என்றார். அவர் பார்த்த பஞ்சாயத்து பெண் தலைவிகள் அனைவரும் மக்களின் பிரச்சனையைத் தீர்க்க முனைந்தார்களே தவிர, வழிப்பாட்டு தலங்களை புதுப்பிக்க யாருமே பணம் செலவழிக்கவில்லை என்றார். அடுக்களையைத் தாண்டி வெளியே வரும்பொழுது, செய்திகள், பிரச்சனைகள், அதற்கான தீர்வுகள் என்று பல தளங்களில் அவர்களால் இயங்க முடியும் என்பதைச் சொல்ல முற்பட்டேன்.

சரி, சரி போதும் என்று நீங்கள் நினைப்பது புரிகிறது. சென்ற வாரம், சொற்களின் பொருள் சொல்வதைப் பற்றி பேசிக் கொண்டிருந்தோம். ஓரளவு இணையான சொல்லை, அதே மொழியில் சொல்ல முற்படலாமே தவிர, சரியான பொருள் சொல்வது கடினம்.

ஒரு சொல்லுக்கு பொருள் அதுவேதான்.

இந்த வசனம் சின்ன வயதில் டிடியில் பார்த்த "கவிசக்கரவர்த்தி கம்பன்" என்ற நாடகத்தில் வரும். அப்பொழுது எல்லாம் செவ்வாய் தோறும், ஒரு மணிநேர நாடகம் போடுவார்கள். சீரியல்/ தொடர் என்ற பெயர் கிடையாது. ஸ்டூடியோவில் செட் போட்டு நடத்தியதால் நாடகம் என்றே சொல்லப்படும். இந்த நாடகத்தில் கம்பராய் நடித்த ஜெயராமன் என்பவர், கம்பர் ஜெயராமன் என்றே பின்பு அழைக்கப்பட்டார். இப்பொழுது படங்களில், தொடர்களில் அழுதுவடியும் அப்பாவாக வருகிறார். நாடகத்தில் சோழ மன்னனாய் நடித்தவர் சண்முகசுந்தரம். நல்ல நடிகர், ஆனால் நல்ல வாய்ப்பு கிடைக்கவில்லை என்பது அவரின் துரதிஷ்டம். கரகாட்டக்காரனில் கனகாவின் தந்தையாக வருவாரே அவர்தான். கொஞ்சம் ஓவர் ஆக்ட் செய்வார். பாருங்க, மறந்தே போனேன், இப்பொழுது "கெட்டி மேளம்" தொடரில் அப்பாவாக வருகிறாரே அவர்தான். அது என்னவோ தொடரில் வரும் அப்பாக்கள் எல்லாம் கேனையன்களாக இருக்கிறார்கள்.

இவரின் தங்கை உதயசந்திரிகா. (பெயர் சரியா என்று சொல்லுங்கள்) சில படங்களில் "இது சத்தியம்" உட்பட சிலபடங்களில் கதாநாயகியாய் நடித்து, சிறுவயதிலேயே காலமாகிவிட்டார். சண்முகசுந்தரத்திற்கு பெண் வேடம் போட்டதுப் போலவே இருப்பார். இது சத்தியம் ஜாவர் சீதாராமன் எழுதி குமுதத்தில் தொடராய் வந்தது. திரைப்படத்தில் நாயகன் அசோகன், ஆமாம் வில்லனாய் வரும் அசோகன் தான் இதில் ஹீரோ. நாயகி உதயசந்திரிக்கா வாயசைக்க, பி.சுசீலா பாடிய " சரவண பொய்கையில் நீராடி, துணை தந்தருள் என்றேன் முருகனிடம் " என்ற பாடல் சுசீலாம்மாவின் காலத்தால் அழியாத தேனிசையில் ஒன்று.

ஜாவர் சீதாராமன் என்றதும் நினைவில் வருவது "உடல், பொருள், ஆனந்தி" என் அம்மா குமுதத்தில் தொடராய் வந்தப் பொழுது கிழித்து வைத்து, கோணி ஊசியால் தைத்து வைத்ததைப் பிறகு அம்மாவுக்கு தெரியாமல் படித்து நடுங்கியது. இந்தளவு வேறு எந்த பேய் கதையும் கவரவில்லை. சரி இவ்வளவு நன்றாக எழுதுகிறாரே என்று "மின்னல் மழை மோகினி என்ற நாவலை, சென்ற முறை ஊருக்குப் போயிருந்தப் பொழுது, சென்னை பொது நூலகத்தில் இருந்து எடுத்துப் படித்தால் ... எல்லாவித மசாலாக்களும் கொண்டு, பாத்திரங்கள் கூட இதற்கு இன்னார் என்று கண்டுப்பிடித்துவிடலாம், சினிமாவுக்கு என்றே எழுதப்பட்ட மகாகாவியம் (!)

தொலைக்காட்சியில் புத்தக கண்காட்சி பற்றி காட்டியிருப்பார்கள், வேறு என்ன அடிதடி விவகாரம்தான். தமிழ்முரசுவில் விலாவாரியாய் செய்தி கவர் செய்தப்பொழுது, சன்னில் காட்டாமல் இருந்திருப்பார்களா? நான் பார்க்க தவறிவிட்டேன். புத்தக காட்சி கன ஜோராய் நடந்துக் கொண்டு இருக்கிறது. இரு வருடங்களுக்கு முன்பு இலக்கிய நண்பர் ஒருவர் சொன்ன விஷயம், எழுத்தாளர் ரமணிசந்திரன் அவர்களின் நாவல்கள்தான் அதிகம் விற்கப்படுமாம். இந்த வருடம் சுஜாதா, ஜெயமோகன் அவர்களின் படைப்புகள் நன்றாக விற்பதாக சொன்னார்கள்.

ஆனால் இன்னும் குழந்தைகளுக்கான புத்தகங்கள் தமிழில் தரமாய் இல்லை. ஆங்கிலத்தில் என்னை கவர்ந்த குழந்தைகளுக்கான கதைகள் பல எழுதிய எழுத்தாளர் Roald Dahl. இவர் எழுதியதில் நான் படித்தவை, குழந்தைகளுக்கான Charlie and tha chocolate factory, Matilda, James and the giant peach, George's marvelous medicine.

Boy இதில் சிறுவயது குறும்புகள், ஹாஸ்டலில் பட்டப்பாடு, அது என்னவோ இவருக்கு ஆசிரியர்கள் மீது அவ்வளவு கோபம்! என்று ஆர். கே. நாராயணின் சிறுகதைகள் போல, குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் கதை. சுயசரித்திரம். அடுத்து Going Solo .இது இவரின் வேலைக்கு சேர்ந்த அனுபவம், இவரின் ராணுவ வாழ்க்கை, பல்வேறு நாட்டு மக்களுடனான அனுபவங்கள் என்றுப் போகும்.

இதைத் தவிர இவரின் சிறுக்கதை தொகுப்பு. சென்ற வருடம் செய்த அளவு சன் டீவியில் புத்தகக்கண்காட்சியை அதிகம் கவர்
செய்யவில்லை. ஏன் என்று தெரியவில்லை, ஒருவேளை தனி நிகழ்ச்சியாய் தினமும் ஏதாவது காட்டுகிறார்களா? என் கண்ணில் விழவில்லை.

ஆர். எஸ். மனோகர் காலமான செய்தி உங்களுக்கு தெரிந்திருக்கும். மனோரமா கதாநாயகியாய் அறிமுகம் ஆனப்படம் "கொஞ்சும் குமரி". அதன் நாயகன், ஆர். எஸ். மனோகர். அவர் நகைச்சுவை நடிகையானார். இவர் வில்லனாகி மாறிப் போனார். மனோரமா நடிக்க விரும்பி இன்னும் கிடைக்காதப் பாத்திரம் இருபாலினம் (அலி.) ஆண்களே இந்த வேடம் போடுவார்கள், பெண்கள் போட்டதில்லை என்றுச் சொல்லியிருந்தார்.

ஜெமினிகணேசன் இறந்தப் பொழுது, மனோரமா அவர்கள், "என்னுடன் நடிக்க வந்தவர்கள் ஒவ்வொருவராய் போய் கொண்டு இருக்கிறார்கள்" என்று சொன்னார். வயதானக் காலத்தில் தன் நட்புக்கள் ஒவ்வொருவராய் போய் கொண்டு இருப்பது, அவ்வயதையொத்தவர்களுக்கு அடுத்து நாம்தானா என்ற கேள்வி மனதில் எழும். சென்ற முறை ஊருக்குப் போயிருந்தப் பொழுது, இதே வசனம், ஆரோக்கியமான எண்பத்திரண்டு வயதான என் தந்தை சொல்லியப் பொழுது, ஒரு வினாடி என்ன சொல்வது என்று புரியாமல் தவித்தேன். நீண்ட ஆயுள் வரமா, சாபமா?

*************
தமிழோவியம்

14 பின்னூட்டங்கள்:

At Wednesday, 18 January, 2006, Blogger dondu(#11168674346665545885) சொல்வது...

"இவரின் தங்கை உதயசந்திரிகா. (பெயர் சரியா என்று சொல்லுங்கள்) சில படங்களில் "இது சத்தியம்" உட்பட சிலபடங்களில் கதாநாயகியாய் நடித்து, சிறுவயதிலேயே காலமாகிவிட்டார். சண்முகசுந்தரத்திற்கு பெண் வேடம் போட்டதுப் போலவே இருப்பார். இது சத்தியம் ஜாவர் சீதாராமன் எழுதி குமுதத்தில் தொடராய் வந்தது."

இது சத்தியம் ரா.கி. ரங்கராஜன் எழுதியது. படத்தில் கதாநாயகி சந்திரகாந்தா என்று நினைவு. படம் பார்க்கவில்லை.

""மின்னல் மழை மோகினி என்ற நாவலை, சென்ற முறை ஊருக்குப் போயிருந்தப் பொழுது, சென்னை பொது நூலகத்தில் இருந்து எடுத்துப் படித்தால் ... எல்லாவித மசாலாக்களும் கொண்டு, பாத்திரங்கள் கூட இதற்கு இன்னார் என்று கண்டுப்பிடித்துவிடலாம், சினிமாவுக்கு என்றே எழுதப்பட்ட மகாகாவியம் (!)"
படமாக எடுக்க ஆரம்பித்தார்கள். ஜெமினி, கே.ஆர். விஜயா. ஆனால் படம் முடிவடையவில்லை.

ஹாரி பாட்டரை விட்டுவிட்டீர்களே.

இப்பின்னூட்டம் என்னுடைய தனிப்பதிவிலும் பின்னூட்டமாக நகலிடப்படும். பார்க்க: http://dondu.blogspot.com/2005/12/2.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

 
At Wednesday, 18 January, 2006, Blogger அபுல் கலாம் ஆசாத் சொல்வது...

// மனோரமா கதாநாயகியாய் அறிமுகம் ஆனப்படம் "கொஞ்சும் குமரி". அதன் நாயகன், ஆர். எஸ். மனோகர். அவர் நகைச்சுவை நடிகையானார். இவர் வில்லனாகி மாறிப் போனார். //

இனிய உஷாஜி,

மனோரமா அறிமுகமான படம் *மாலையிட்ட மங்கை*. நீங்கள் சொல்வது கதாநாயகியாக நடித்த முதல் படமோ.

அன்புடன்
ஆசாத்

 
At Thursday, 19 January, 2006, Blogger கலை சொல்வது...

//ஆங்கிலத்தில் என்னை கவர்ந்த குழந்தைகளுக்கான கதைகள் பல எழுதிய எழுத்தாளர் Roald Dahl. இவர் எழுதியதில் நான் படித்தவை, குழந்தைகளுக்கான Charlie and tha chocolate factory, Matilda, James and the giant peach, George's marvelous medicine.//
நம்ம வீட்டுல இப்போ கொஞ்ச நாளா இந்த Roald Dahl தான். Charlie and the chocolate factory யும் லைப்ரரியில் இருந்து வீட்டுக்கு வந்திருக்கு. எனது 7 வயது மகள்தான் அதை வாசித்துக் கொண்டிருக்கிறாள். பாடசாலையில் Roald Dahl ஐப் பற்றி ஏதோ ப்ரொஜெக்ட்டாம். :)

 
At Thursday, 19 January, 2006, Blogger G.Ragavan சொல்வது...

உஷா, நீங்கள் எழுதியது போல கதைக்கும் (free rein) வகை படைப்புகள் எழுத வேண்டும் என்று நானும் எண்ணுவது உண்டு. நீங்கள் செயல்படுத்தி விட்டீர்கள். நன்றாக வந்திருக்கிறது. எனது பாராட்டுகள்.

சரவணப் பொய்கையில் நீராடி பாட்டு யாருக்குப் பிடிக்காது. இளையராஜாவிடம் வாய்ப்புக் கேட்டு வரும் பொழுது சித்ரா பாடிக் காட்டியது அந்தப் பாடலைத்தானாம். அதனால்தானோ என்னவோ சரவணன் அருளால் பெரும் புகழ் பெற்றார். நீடு வாழ்க.

தமிழில் முறையான குழந்தை இலக்கியம் மிகக் குறைவு. வாண்டு மாமா எழுதினார். பிறகு கொஞ்சம் நல்ல புத்தகங்கள் நான் குழந்தையாக இருந்த பொழுது வந்தன. அம்புலிமாமா, பாலமித்ரா, ரத்னபாலா, பூந்தளிர், கோகுலம், பொம்மை என்று பல புத்தகங்கள். இவற்றில் இப்பொழுது எத்தனை வருகின்றன என்றே தெரியவில்லை. அம்புலிமாமாவை மட்டும் அவ்வப்பொழுது ரயில்வே ஸ்டேஷனில் பார்ப்பதுண்டு.

 
At Thursday, 19 January, 2006, Blogger ENNAR சொல்வது...

//அவர் பார்த்த பஞ்சாயத்து பெண் தலைவிகள் அனைவரும் மக்களின் பிரச்சனையைத் தீர்க்க முனைந்தார்களே தவிர,//
ஆமாம் எந்த ஊரில் பெண் பஞ்சாயத்து தலைவர் செயல் படுகிறார். தமிழ் நாட்டில் அவர்கள்கள் கணவன்கள் செயல்பாடு.

 
At Thursday, 19 January, 2006, Blogger ரவியா சொல்வது...

//இந்தளவு வேறு எந்த பேய் கதையும் கவரவில்லை.//

ஆமாம் எனக்கும் தான்..

 
At Thursday, 19 January, 2006, Blogger ramachandranusha(உஷா) சொல்வது...

எம். கே. மாறன் அப்படியே உங்க பிளாக் பெயர் சொல்லியிருந்தா வந்துப் பார்த்திருப்போமிலே?

ஆசாத்ஜி, மாலையிட்ட மங்கையில் அறிமுகம் கொஞ்சம் குமரியில் கதாநாயகி மனோரமா, நாயகம் மனோகர். ஆனா டோண்டு
சார் சொன்னது சரியா? சண்முகசுந்தரத்தின் சகோதரி பெயர் ராஜகாந்தமா? இல்லைன்னு தோணுது. ஏதோ சந்திராக்கான்னு நினைவு.

டோண்டு sir, நான் கதை பைண்டிங் புத்தகமா படிச்சேன். அம்மா கேரக்டரில் கண்ணாம்பா, கதை முழுவதும் மதுரை சைடூ. படம்
ரெண்டு, மூணு வருஷம் முன்னாடி சன் டீவில போட்டாங்க. அசோகன் ஹ¥ரோ, ஓவர் ஆக்டிங் இல்லாட்டி நோ ஆக்டிங்.
பார்க்க முடியாம நிறுத்திட்டேன். ஆனா கதைய எழுதியது ரா.கி. ரங்கராஜனா? ஜாவர் இல்லையா?
மி. ம. மோகினி கதையைப் படிக்கும்பொழுது, ஜெமினி கண் முன்னால் வந்தார். ஹீரோயின் கே.ஆர்.விஜயா அல்லது ச.தேவி என்றும்
தோன்றியது. வயசுக்கு மீறி பேசும் குழந்தை, வில்லன் என்று நினைத்த நல்லவர் என்று ஒவ்வொரு கேரக்டரும், உருவமாய்
நமக்கு தோன்றும்.

 
At Friday, 20 January, 2006, Blogger ramachandranusha(உஷா) சொல்வது...

கலை, அந்த புத்தகங்களில் இருக்கும் படங்களைப் பாருங்களேன். வெறும் கோட்டு சித்திரங்கள், ஆனால் எனக்கு மிகப்பிடிக்கும்.
ஆனா, பிள்ளைகளிடம் முக்கியமாய் சொல்ல வேண்டியது ஒன்று, அந்த கலவைகள் எல்லாம் சும்மா என்று! வீட்டில் எதையாவது
கலக்கி குடித்து வைக்கப் போகிறார்கள். என் மகனை அறிவுருத்தியது இது :-)

அனுராஜேஷ், என் காதிலும் செய்து விழுந்தது. பூக்குட்டிக்கு பொருள் என்ன தெரியுமா? சின்னஞ்சிறு ஆட்டுக்குட்டிக்கு பூக்குட்டி
என்று பெயராம். பெருமாள் முருகனின் "கூளமாதாரி"யில் வரும். கதை ஞாபகமில்லை. ஆனால் மணியம் செல்வனின் படமும், அதன் வர்ண சேர்க்கைகளும் கண் முன்னால் நிற்கிறது. நல்ல முயற்சி ஆனால் சில சமயம், தமிழ் படிக்கும் குழந்தைகளின்
எண்ணிக்கையை நினைத்தால் கவலையாய் உள்ளது.

ராகவா, அதேதான் மிக மலிவாய் தெனாலிராமன், பீர்பால் கதைகள்தான் கண்ணில் பட்டது. வாண்டுமாமாவின் மூன்று மந்திரவாதிகள் படித்திருக்கிறீர்களா?

டி.ராஜ், ஓரளவு வயது அதிகமானால் தனியாய் அனுப்ப மற்றவர்கள் விடுவதில்லை. காரணம் கீழே விழுந்து அடிப்பட்டால் யார் செய்வது? நார்வே பயணத்தில் எழுதியது ஞாபகம் இருக்கா? அந்த நிலைமை வர நம் ஊரில் இன்னும் நிறைய வருடமாகும்.

என்னார், பஞ்சாயத்து தலைவிகளைப் பற்றி விரிவாய் பிறகு எழுதுகிறேன். ஆனால் நிலைமை ஆரோக்கியமாய் மாறி வருகிறது.

ரவியா, அப்படியே பேய் படம் என்றால் சிக்ஸ் சென்ஸ்தான்.

டோண்டு, மாறன் மற்றும் ஆசாத் அவர்களின் பின்னூட்டம் மட்டும் வந்திருந்தப் பொழுது அதைப் படித்துவிட்டு மறுமொழி இட்டேன். அடுத்து சில மணி நேரத்திற்கு பின்பு வந்த சில பின்னுட்டங்களை படித்துவிட்டு, கிளிக் செய்தேன். ஆனால் அவை முன்பு இட்ட என் மறுமொழிக்கு முன்பு பதிவாகியுள்ளது. ஏன், எப்படி என்று புரியவில்லை. உங்கள் மறுமொழியை
கண்டுக் கொள்ளவில்லை என்று தயவு செய்து, யாரும் தவறாய் நினைக்க வேண்டாம்.

 
At Friday, 20 January, 2006, Blogger ramachandranusha(உஷா) சொல்வது...

மாறன் பார்த்துவிட்டேன். நிறைய எழுதுங்கள். மீண்டும் வாழ்த்துக்கள்

 
At Friday, 20 January, 2006, Blogger G.Ragavan சொல்வது...

// ராகவா, அதேதான் மிக மலிவாய் தெனாலிராமன், பீர்பால் கதைகள்தான் கண்ணில் பட்டது. வாண்டுமாமாவின் மூன்று மந்திரவாதிகள் படித்திருக்கிறீர்களா? //

இல்லையே உஷா. படித்ததில்லை. வாண்டுமாமாவின் மற்றொரு கதை....ஒரு சிறுவன் மிகச்சிறுவன் ஆகிவிடுவான். அவன் அனுபவங்களைச் சொல்வது போல பூச்சி பொட்டுகளை அறிமுகம் செய்து வைப்பார். உண்மையிலேயே சிறந்த புத்தகம்.

சிறு வயதில் எனக்குப் பிடித்தது ரத்னபாலாதான். அதற்குப் பிறகு அம்புலிமாமா, பாலமித்ரா எல்லாம் வரும். பிறகு கோகுலமும் பூந்தளிரும் வந்தது.

 
At Friday, 20 January, 2006, Blogger doondu சொல்வது...

usha...

உங்கள் மேல் எனக்கு தனிமதிப்பு உண்டு. இனிமேல் முகமூடி, டோண்டு, மாயவரத்தான் போன்ற தீவிரவாத பார்ப்பன வலைப்பதிவில் நீங்கள் பின்னூட்டம் இட்டால் எனது கடுமையான தாக்குதலுக்கு இலக்காக நேரிடும்.

எனது கடுமையான எச்சரிக்கை!

 
At Saturday, 21 January, 2006, Blogger தி. ரா. ச.(T.R.C.) சொல்வது...

அவர் பெயர் சந்தரகாந்தா என்பதுதான் சரி தி.ரா.ச

 
At Thursday, 26 January, 2006, Blogger Geetha Sambasivam சொல்வது...

Dear Usha, there was one children book called "KANNAN" and writer Aarvie was the editor of that book. No other books coming today are qualified enough to compare with that book. It was coming from the KALAIMAGAL group publications. Even today I am in search of those old binds.I want to read them again.sivamgss.

 
At Friday, 27 January, 2006, Blogger ramachandranusha(உஷா) சொல்வது...

ஸ்ரீதரன் நன்றி.

ஜிரா, முத்துகாமிக்ஸ் படிச்சதில்லையா?

டோண்டு என்ற பெயரில் எச்சரிக்கை விடுத்தவரே, ஆளு , சாதி, மதம் பார்த்து பின்னுட்டம் போடுவதில்லை. எனக்கு நேரமும்,
காலமும், மனமும் ஒத்துழைத்தால் நேற்று பதிவு ஆரம்பித்தவருக்கும் பின்னுட்டம் உண்டு.

அனுராஜேஷ், நீங்கள் சொல்வது மிக சரி. என் பிள்ளைகள் பலவற்றையும் படித்து, என்னுடைய பல விஷயங்களை விவாதிக்கும்பொழுது, பாடம் அல்லாத பல படிப்புகள் தேவை என்று புலனாகிறது.

திராச, தகவலுக்கு நன்றி. சந்திரகாந்தாவின் குரல் மிக நன்றாக இருக்கும் இல்லையா?

கீதா , நீங்கள் சொன்னதும் லேசாய் ஞாபகம் வருகிறது மற்றும் "ஒரு நாள் போதுமா?" என்ற கதை கண்ணனின் வந்ததா?
படமும், புத்தகத்தின் சைசும் நினைவுக்கு வருகிறது, கதை ஞாபகம் வரவில்லை. கண்ணன் கலைமகள் குடும்பம் என்பது தெரியும். கொஞ்சம் வளர்ந்த பிள்ளைகளுக்கு, சரியா?

மிக தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும். இனி இப்படி நேராது.

 

Post a Comment

<< இல்லம்