Tuesday, January 31, 2006

கொஞ்சம் கதைக்கலாம் வாங்க- 3 திருமங்கை

மோகனாவையும், லாவண்யாவையும் பார்க்கும்பொழுது, ஒன்றும் வித்தியாசம் தெரியவில்லை. ஆனால் பேச ஆரம்பித்ததும் தெரிந்துவிட்டது. ஆணாய் இருந்து பெண்ணாய் மாறிய அரவாணிகள் என்று. அரவாணி என்பதற்கு தமிழிலில் திருமங்கை என்பார்கள்.

மோகனாவின் வாழ்க்கை, பொதுவாய் சொல்லப்படும் அனைத்து இருபாலினரின் கதை. சிறுவயதிலேயே பெண்களின் உடுப்புகள் அணிய ஆசை. ஆண் பிள்ளைகளைப் பார்த்தால் மோகம், விளையாட்டு, பேச்சு, நட்பு எல்லாம் பெண்களுடன் மட்டுமே. வீட்டில் எதிர்ப்பு, அடிதடி. சுற்றமும், நட்புகளும் செய்த கேலியைத் தாங்காமல் ஊரை விட்டு ஓடி, மும்பைக்கு சென்று ஆபரேஷன் செய்துக் கொண்டு, முழு பெண்ணாய் மாறியது என்று சொல்லிக் கொண்டுப் போனார். ஆனால் உண்மை என்னவென்றால், இவர்களால் முழு பெண்ணாய் மாற முடியாது. கர்ப்பபை இல்லாததால் குழந்தை பெற முடியாது. மனம் பெண் மனம் என்பதால், உடலை பெண்ணாய் உருவகித்துக் கொண்டு, பெண் என்று சொல்லிக் கொள்ளலாம்.

ஆனால் சிறுவயது நண்பரை ஊர் அறிய மணந்துக் கொண்டு இருக்கிறார். ஆனால் மோகனாவின் பேச்சைப் பார்க்கும்பொழுது, அவர் கணவர் அவரைப்பணத்திற்காக கல்யாணம் செய்துக் கொண்டிருப்பார் என்று தோன்றியது. தன்னால் பிள்ளை பெற முடியாது என்பதால் தானே தன் கணவனுக்கு இன்னொரு கல்யாணம் செய்து வைத்துள்ளார். பார்க்கும்பொழுது, கணவன், அவரின் இன்னொரு மனைவி, அவள் பெற்ற பிள்ளைகளை என்று குடும்பத்தில் மோகனாவின் கை ஓங்கியுள்ளது என்று தெரிந்தது.

ஏறக்குறைய இதே கதைதான் சு.சமுத்திரம் எழுதிய "வாடாமல்லி", ஆனந்தவிகடனில் தொடராய் வந்த கதையிலும். இவர்கள் சிறுவயதில் மனப்போராட்டங்களால் அலைகழிக்கப்பட்டு, பிறரின் கேலிக்கு உள்ளாகி, இக்கூட்டத்தாரால் கண்டெடுக்கப்பட்டு மும்பைக்குக் கொண்டு செல்லப்படுகின்றனர். மோகனா சொன்னார், வடநாட்டில் எங்களுக்கு மரியாதை அதிகம், இங்குத்தான் கேலிக்கு உள்ளாகிறோம் என்று.

நான் சில வருடங்கள், வடக்கில் இருந்தப் பொழுது, எதிர் வீட்டில் ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. மூன்றாம் நாள் குழந்தையுடன் தாய் வீட்டுக்கு வந்த சில மணி நேரங்களில் நாலைந்து ரிக்ஷாவில் ஒரு படையே வீட்டில் நுழைந்தது. ஏதோ பாட்டுபாடி, குழந்தையை ஆசிர்வாதிக்கிறோம் என்று சொல்லிவிட்டு, பேரம் பேசி சில நூறு ரூபாய்களைப் பெற்றுக்கொண்டுப் போயினர். அவர்கள் சென்றதும் என்னவென்று அந்த வீட்டாரைக் கேட்டப்பொழுது, இப்படி குழந்தை பிறந்தால், ஆஸ்பத்திரியில் விசாரித்துக் கொண்டு வருவார்கள், நம் நிலைமைக்கு தகுந்த பணம் தந்தால் வாங்கிக் கொண்டுப் போவார்கள் என்றவர்கள் முகத்தில் தெரிந்தது கேலியும் எள்ளலும் மட்டுமே. இப்படி கல்யாண வீடுகளிலும் கும்பலாய் போவதால், இவர்கள் போனால் போதும் என்று பணத்தைக் கொடுத்து அனுப்புவார்களாம்.

ஆனால் இவர்களையும் திருமணம் செய்துக் கொண்டு வாழ்பவர்கள் உண்டு. மோகனாவைப் போல இல்லாமல், திருட்டு தனமாய் தன் வீட்டாருக்கு, இன்னொரு மனைவி பிள்ளைகளுக்கு தெரியாமல், ஒரு குடித்தனம். இது இவருக்கும் தெரியும். நல்ல மனைவியாய் கணவனுடன் மனதார வாழ்ந்தாலும், எந்நேரமும் கணவனின் உறவினர்கள் கண்ணில் பட்டு அடி உதையுடன், அவன் இழுத்து செல்லப்படலாம். அவர்கள் வாழ்வில் எந்த உத்திரவாதமும் இல்லை. மோகனாவுக்கு கிடைத்ததுப் போன்ற வாழ்க்கை எத்தனைப்பேருக்கு அமையும்?

ஆனால் மோகனா, மும்பையில் பாட்டுபாடி நிறைய சம்பாதித்தேன் என்றார். இப்படி இவர்கள் கதையைக் கேட்கும்பொழுது எல்லாம் மனதில் தோன்றும் எண்ணம், ஏன் இவர்களால் சாதாரணமாய் வாழ முடியாதா என்று எண்ணும் மீண்டும் தோன்றியப்ப்பொழுது, லாவண்யா வந்தார்.

தாய், தந்தை, அண்ணனுடன் வசிப்பவர், குறிப்பிட்ட வயது வந்ததும் என் மனப் போராட்டத்தை சொன்னதும், தந்தை புரிந்துக் கொண்டார், தாய்க்கு சில காலமானது என்றார். ஊர் வம்பு மெல்லுபவர்கள் ஏதாவது வம்புக்கு இழுத்தால், தன் பெற்றோர்கள் கடவுள் தந்த குழந்தைகள் ஆண் ஒன்று, பெண் என்று என்று சொல்கிறார்களாம். படிப்பு, பாட்டு, ஓவியம், கணிணி என்று அவருடைய விருப்பங்களை சொல்லிக் கொண்டே போகும்பொழுது, மாறி வரும் சமுகப்பார்வை சந்தோஷத்தை அளிக்கிறது. சொல்லுவது எளிது என்றாலும் இதில் பெற்றோரின் பங்கே அதிகம்.

புகைவண்டிகளில், தெருவில், முக்கிய கடை வீதிகளில் கும்பல் கும்பலாய் பிச்சை எடுப்பதும், தான் பெண் என்று நிரூபித்து அழைப்பதையும் பார்க்கலாம். படைப்பின் கோளாறு, இதை சரி செய்ய முடியாது. ஆனால் அருவருத்து ஒதுங்கிப் போக நினைக்கும் நம் எண்ணங்களை மாற்றிக் கொண்டால், மேல் நாடுகள் போல, இவர்களும் நம் நாட்டில் சமூகத்தில் கெளரவமாய் வாழலாம். இவர்களை நல்வழிப்படுத்தவும்,எயிட்ஸ் போன்ற நோய்களில் இருந்து காத்துக் கொள்ளவும் பல சேவை அமைப்புகள் உள்ளன என்றார் மோகனா.

இந்த மோகனாவையும், லாவண்யாவையும் பார்த்தது ஜெ தொலைக்காட்சியில் நடிகை லஷ்மி நடத்தும் "அச்சமில்லை இனி அச்சமில்லை" என்ற நிகழ்ச்சியில்.

லாவண்யாவைப் போல, இந்த ஹார்மோன் குளறுப்படியை ஏற்றுக் கொண்டு படிப்பு, வேலை என்று சமூகத்தில் சாதாரணமாய் பலரும் வாழத் தொடங்கியுள்ளனர் என்ற செய்தி கல்கி 11. 12. 2005 இதழில் கண்ணில் பட்டது.

தங்கள் சோகங்களை, வலிகளை, போராட்டங்களை "உறையாத நினைவுகள்" என்ற நாடகமாக ஒன்பது அரவாணிகள் மட்டுமே பங்கெடுத்து சென்னையில் அரங்கேற்றியுள்ளனர். தமிழகத்தில் மட்டும் ஒரு லட்சத்து நாற்பதாயிரம் அரவாணிகள் இருப்பதாகவும், அவர்களில் ஒரு சதவீதத்தினர் பட்டம் பெற்று, கணிப்பொறி கற்று தாங்களும் மனிதராய் சொந்தகாலில் நிற்க தொடங்கியுள்ளனர் என்ற செய்தியை சொல்லி நாடகம் முடிந்துள்ளது. சிறு துளிதான், ஆனால் சமூகமும், அரசாங்கமும் அவர்களும் மனிதர்கள் என்ற அங்கீகாரத்தை தரத் தொடங்கினால், அனைவரும் கெளரவமாக வாழ ஆரம்பிப்பார்கள். திரைப்படங்களில் இவர்களை நகைச்சுவை என்ற பெயரில் கேவலமாய் சித்தரிக்கும் காட்சிகள் வருகின்றன.

மனோரமா ஆச்சி, அரவாணி வேடத்தில் நடிப்பது தன்னுடைய ஆசை என்று சொல்லியிருக்கிறார். இது அவர் நடிப்பு திறமைக்கு சவாலான வேடமாய் இருக்கும். ஆண் பெண் வேடமிட்டு வந்தாலும், ஆண் என்று நன்கு தெரியும். அவ்வை சண்முகியில் கமலும், ஆணழகனில் பிரஷாந்தும் ஓரளவு ஜெயித்தாலும், பெண்ணாய் மாறி நடித்ததில் முதல் இடத்தைப் பெறுபவர் வைகைபுயல்தான். "பாட்டாளி" படத்தில் கருப்பு ஐஸ்வர்யாவாக வந்து, 99& சதவீதம் பெண்ணாகவே மாறி தன் நடிப்பு திறமையை நிரூபித்தார்.

tamiloviam- 30 Jan, 2006

( நர்த்தகி நட்ராஜ் என்பவர் மட்டுமே, பாஸ்போர்ட் வைத்துள்ள அரவாணி. அவரைக் குறித்து வந்த செய்தி ஒன்றில் திருமங்கை
அல்லது ஸ்ரீமங்கை நட்ராஜ் என்று சொல்லியிருந்தார்கள். இந்த அரவாணி, திருமங்கை, ஸ்ரீமங்கை சொற்களுக்கு விளக்கம்
தரமுடியுமா?)

14 பின்னூட்டங்கள்:

At Tuesday, 31 January, 2006, சொல்வது...

உஷாக்கா,

//இவர்களால் முழு பெண்ணாய் மாற முடியாது. கர்ப்பபை இல்லாததால் குழந்தை பெற முடியாது. மனம் பெண் மனம் என்பதால், உடலை பெண்ணாய் உருவகித்துக் கொண்டு, பெண் என்று சொல்லிக் கொள்ளலாம்.//

இதை யார் சொல்கிறார்களென்று தெரியவில்லை. என்னால் இந்த "உடல், (பிறக்கும்போதே) கர்ப்பப்பையுடன் கூடிய பெண்ணுடலாக" இருந்தால்தான் ஒருவர் பெண்ணாக இருக்கலாம் என்கிற கருத்தை ஒத்துக்கொள்ள முடியவில்லை. ஏன், கர்ப்பப்பை இருந்தால்தான், குழந்தை பெறும் "தகுதி" இருந்தால்தான் பெண்ணா? அதுதானா ஒருவரைப் "பெண்" என வரையறுக்கிறது?

 
At Tuesday, 31 January, 2006, சொல்வது...

நர்த்தகி நட்ராக் என்பவர் மட்டுமே கடவுச்சீட்டு வைத்திருக்கும் ஒரே ஒரு அரவாணி என்பது உறுத்துகிறது கடந்தவார ஆனந்த விகடன் படித்திருந்தால் ரேவதி என்பவர் கூட கடவுச்சீட்டுக்காகப் போராடுவதாகக் குறிப்பிட்டார்.பிறப்பு அத்தாட்சிப் பத்திரத்தில் மாற்ற முடியாததால் ஒருவேளை கடவுச்சீட்டை அங்கீகாரமாகக் கருதுகிறார்கள் என நினைக்கிறேன்

 
At Tuesday, 31 January, 2006, சொல்வது...

அரவாணிகள் சமூகத்தில் ஒரு அங்கமாக மாற முடியாமல் போனதற்கு நமது சமூக அமைப்பும் ஒரு காரணம். ஏனோ அவர்கள் மேல் ஒரு அருவெறுப்பு.

இதற்குக் காரணமென்று ஒன்றைத்தான் என்னால் சொல்ல முடியும்.

பொதுவாகவே எந்த விஷயத்திலும் நம்மைப் போல இல்லாதவர் மேல் லேசான வெறுப்பு இருக்கும். அது லேசாகவோ வலுவாகவோ இருப்பது ஆளைப் பொருத்தும் மாறுபடும் விஷயத்தைப் பொருத்தும். மத, மொழி, இன, பண என இன்னும் பல வேறுபாடுகளைச் சொல்லலாம்.

எங்கும் பெரும்பாலானவர்களே ஆதிக்கம் செலுத்துவார்கள். அடுத்தவர்களைக் குற்றம் சொல்வார்கள்.

அந்த வகையில் இந்த விஷயத்தில், பிறப்போடு தொடர்புள்ள ஒரு விஷயத்தில் பெரும்பாலானோர் தங்களை மட்டுமே நிறையுடையவராகக் கருதிக் கொண்டு குறையுடையவர்கள் என்று இவர்களை ஒதுக்கி வைக்கின்றதே காரணம்.

இந்நிலை மாற வேண்டும் என்பதில் ஐயமில்லை. இவர்களும் தங்களுக்குப் பிடித்த வகையில் படித்து முடித்து வேலை பார்த்து பாஸ்போர்ட் வைத்துக் கொண்டு வெளிநாடுகளுக்கும் சென்று வந்து, மற்றவர்களைப் போல மகிழ்ச்சியோடு வாழ வேண்டும். ஆனால் அதற்கெல்லாம் விடுகின்றவர்களா நாம்? அலுவலகத்தில் அப்படி ஒருவர் வந்தால் என்ன பேச்சு பேசுவோம். பெண்களையே விட்டு வைப்பதில்லை. அரவாணிகளை? இறைவன் அவர்களைக் காப்பாற்றட்டும்.

உஷா, நீங்கள் சொன்னது போல வடிவேலு அந்தப் படத்தில் சிறப்பாக நடித்திருப்பார்.

 
At Tuesday, 31 January, 2006, சொல்வது...

தங்களின் பதிவை படித்தேன்.
பொதுவாக ஹிஜடா(மாறிய பாலினம்)
-க்களுக்கு சரியான தமிழ் பதம் இல்லை என்றுதான் தோன்றுகிறது.
அரவாணி, திருமங்கை,ஸ்ரீமங்கை போன்ற சொற்கள் இந்து மதத்தினை சார்ந்த சொற்களோ...(மகாபாரதத்தில் வரும் அரவான் பற்றி அறிவீர்கள் தானே?)அதனால் இவற்களுக்கு இந்த சொற்கள் தற்காலிகமாவைகளே...

அம்மக்களுக்கான தனி இலக்கிய வடிவம் தோன்றும் போது.. ஒரு பொதுப்பெயர் தோன்றும்.
ஏனெனில் இவர்களுக்கு சாதி+மதங்களை கடந்த அற்புதமான மனிதர்கள்.

பொருளாதாரத்தில் நல்ல நிலையில் இருக்கும் மக்களும், கல்வியறிவில் தேர்ச்சி பெற்றவர்களுக்கும் மாறிய பாலின மக்களை விரைவில் ஏற்றுக்கொள்ளும் மனநிலைக்கு வந்து விடுகிறார்கள் என்பது வரலாற்று உண்மை.

சில ஆண்டுகள் இம்மக்களின் மிக அருகில் இருந்து, இவர்களின் வாழ்க்கை முறையினை பார்த்தவன் நான்.
இவர்களை மையமாக கொண்டு ஒரு நாவல் எழுத தொடங்கி.. இரண்டு அத்தியாயங்களோடு நிற்கிறது. இந்த வருட இறுதிக்குள்ளாவது அதனை கொண்டு வர வேண்டும்.
பார்க்கலாம்.
எனது நம்பிக்கையின் படி இந்த வருடம் இவர்களது வாழ்வை சித்தரிக்கும் படைப்புகள் அதிகமாக வரலாம்.

 
At Tuesday, 31 January, 2006, சொல்வது...

ஷ்ரேயா,
ஏறக்குறைய நீங்கள் சொல்வதைத்தான் நேற்று டீ.சேவின் பதிவில் பின்னுட்டமாய் போட்டிருக்கேன். இன்னும் "இங்கே" போட கற்றுக் கொள்ளவில்லை:-)

நான் இங்கு சொல்ல வந்தது, ஆண் பெண் உடல்கூறு வித்தியாசம் மட்டுமே! அதையும் தவிர முழுக்க முழுக்க ஆணாய் பிறந்தவர்கள், உடலாய் ஆணாய் இருந்து, மனம் பெண்ணுணர்வுகளை கொண்டு, உடலாலும் பெண்ணாக
முற்படுவவர்களை ஒற்றைப் பார்வையால் பெரும்பாலும் கண்டுப்பிடித்துவிடலாமே. கி.ராஜநாராயண் அவர்களின் சிறுகதை ஒன்று,
ஆண் மேல் கொள்ளும் காதலையும் அவன் அருவருத்து விலகுவதையும் படிக்கும்பொழுது இவர்களின் மன போராட்டங்கள் வேதனையாய் இருக்கும்.

 
At Tuesday, 31 January, 2006, சொல்வது...

ஈழநாதன்,
பொது கழிவறை உபயோகிக்கவும் இவர்களுக்கு பிரச்சனை இருக்கிறது. ஆனால் இங்கு சில பிலிப்பினோ ஆட்களை பார்த்துள்ளேன்.
ஆஸ்பத்தரியில் நர்சாய் வேலைப்பார்பவரும் இருக்கிறார். அவர்கள் அரசு அவர்களுக்கு எப்படி அங்கீகாரம் தருகிறது என்று தெரியவில்லை. பாஸ்போர்ட்டிலும் எப்படி வகைப்படுத்தப்படுகிறார்கள் என்றும் தெரியவில்லை. இவர்கள் ஓரளவு படித்திருந்தால்
மட்டுமே பாஸ்போர்ட் எடுத்து இன்னொரு நாட்டுக்கு வேலைக்கு செல்ல முடியும். அப்படிப் பார்க்கப்போனால், இந்தியாவில் வெகு சமீபகாலமாக மிக குறைந்த அளவில் படிக்க தொடங்கியுள்ளனர். அவர்களை ஒதுக்காமல் ஏற்றுக் கொள்ள பெற்றோரும் முன் வந்துள்ளதே நல்ல மாற்றம்.

பாலபாரதி, உங்கள் நாவல் எழுத தொடங்கியுள்ள முயற்சிக்கு வாழ்த்துக்கள். வெறும் கண்ணில் பட்ட செய்திகளை அடிப்படையாய் வைத்து எழுதினால் நன்றாக வராது. ஆனால் நீங்கள் அருகில் இருந்துப் பார்த்திருக்கிறீர்கள். மோகனாவும் சில சேவை மனிதர்களைப் பற்றியும் சொன்னார்.

மகாபாரத அரவானும், இருபாலினம்தானே? அரவான் - அரவாணி சரிப்படவில்லையே? இந்த கூவாகம் விழாவைப் பற்றி சொல்லுங்களேன். சில விஷமிகள் கூட்டமாய் போய் அகப்படும் அரவாணியை துன்புறுத்துவதாகவும், வித்தியாசமான உறவுகளுக்காகவே பல ஆண்கள் அங்கு செல்வதாகவும் சொல்லப்படுகிறது. இந்த விழாவிற்கு வரும் அரவாணிகளுக்கு காவல்துறை
தக்க பாதுக்காப்பு தரவேண்டும், இல்லை என்றால் விழாவையே தடை செய்ய வேண்டும்

அகத்தியர் குழுவில் டாக்டர் ஜெயபாரதி அவர்கள், ஒரு முறை இத்தகைய மனிதர்களில் அறிவியல் கூற்றுப்படி பல்வேறு பிரிவினர் இருப்பதாய் பட்டியல் போட்டு இருந்தார்.

 
At Wednesday, 01 February, 2006, சொல்வது...

வாடாமல்லி கதையை நான் தொடர் கதையாக வரும்போதே படித்தவன். அதை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்குமாறு சமுத்திரம் அவர்கள் என்னை அணுகினார். ஆனால் ரேட் ஒத்து வரவில்லை. ஆகவே செய்யவில்லை.

இந்தப் பின்னூட்டத்தின் நகல் என்னுடைய தனிப்பதிவிலும் பின்னூட்டமாக நகலிடப்படும். பார்க்க: http://dondu.blogspot.com/2005/12/2.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

 
At Wednesday, 01 February, 2006, சொல்வது...

இதுவரை சமூகம் கிணற்றுத் தவளையாய் முழு புரிதல் இன்றி செயல்பட்டு வந்திருக்கிறது. உடற்குறைகளையே கேலி செய்து வந்தவர்கள் தானே! ஊடகங்களில் பார்த்தும், படித்தும் வரும் ஆண்டுகளில் இந்நிலை மாறும். அத்திசையில் உங்கள் பதிவும் ஒரு படிக்கல்.

 
At Wednesday, 01 February, 2006, சொல்வது...

ஜிரா, மணியன் ரயிலில் இவர்களை கூட்டம் கூட்டமாய் வருவார்கள். அவர்கள் நடந்துக் கொள்ளும் முறையும் அருவருப்பாய்
இருக்கும். என்ன செய்வது எந்த சமூக அங்கிகாரம் இல்லாமல், பசிக்கு சம்பாதித்து ஆக வேண்டும் என்ற நிலைமை. சென்னை பட்டினபாக்கம் பஸ் ஸ்டாப்பில் பல வருடங்கள், ஒருவர் பூ கட்டி விற்று வந்துக் கொண்டிருந்தார். எல்லாருக்கும் இப்படி ஒரு தொழில் அமைய மற்றவர்கள் விடுவதில்லை. ஊனமுற்றவர்களை கேலி பேசி மூலையில் ஒடுங்க வைப்பதுப்போல இவர்களையும் ஒதுக்கும் சமூகம். மாற்றம் மனங்களில் வருகிறது. அரசும் இவர்களை கவனிக்க வேண்டும்.

டோண்டு சார், அந்த நாவலுக்கு விருதுகள் கிடைத்தது என்று நினைக்கிறேன். வேறு யாராவது மொழிபெயர்த்தார்களா?

 
At Wednesday, 01 February, 2006, சொல்வது...

அந்த நாவலுக்கு விருது தமிழிலேயே கிடைத்தது என்றுதான் என் ஞாபகம். ஆங்கிலத்தில் யாராவது மொழி பெயர்த்தார்களா என்பது பற்றித் தெரியாது.

இந்தப் பின்னூட்டத்தின் நகல் என்னுடைய தனிப்பதிவிலும் பின்னூட்டமாக நகலிடப்படும். பார்க்க: http://dondu.blogspot.com/2005/12/2.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

 
At Wednesday, 01 February, 2006, சொல்வது...

// ஜிரா, மணியன் ரயிலில் இவர்களை கூட்டம் கூட்டமாய் வருவார்கள். அவர்கள் நடந்துக் கொள்ளும் முறையும் அருவருப்பாய்
இருக்கும். என்ன செய்வது எந்த சமூக அங்கிகாரம் இல்லாமல், பசிக்கு சம்பாதித்து ஆக வேண்டும் என்ற நிலைமை. சென்னை பட்டினபாக்கம் பஸ் ஸ்டாப்பில் பல வருடங்கள், ஒருவர் பூ கட்டி விற்று வந்துக் கொண்டிருந்தார். எல்லாருக்கும் இப்படி ஒரு தொழில் அமைய மற்றவர்கள் விடுவதில்லை. ஊனமுற்றவர்களை கேலி பேசி மூலையில் ஒடுங்க வைப்பதுப்போல இவர்களையும் ஒதுக்கும் சமூகம். மாற்றம் மனங்களில் வருகிறது. அரசும் இவர்களை கவனிக்க வேண்டும். //

உண்மைதான் உஷா. எனக்குக் கூட ஒருமுறை ரயிலில் இந்தப் பிரச்சனை வந்திருக்கிறது. வயிற்றுக்காக உழைக்க வேண்டியிருப்பதால் அவர்களுக்கும் வேறு வழியில்லை.

ஏன் அவர்களும் அவர்களுக்குத் திறமையுள்ள தொழிலைச் செய்ய முடியாது. அதற்கு நல்ல வழி ஏற்பட வேண்டும். அதற்கு மக்கள் மனமும் மாற வேண்டும்.

இந்தியாவில் சரி. மற்ற நாடுகளில் இவர்கள் நிலமை எப்படி இருக்கிறது? சமூக வாழ்க்கையை எப்படி அமைத்துக் கொள்கிறார்கள்?

 
At Wednesday, 01 February, 2006, சொல்வது...

நல்ல ஒரு பதிவு உஷா. நானும் அந்த ஆனந்தவிகடனில் வந்த தொடர்கதை வாசித்திருக்கிறேன். மனதை தொட்ட கதை.

 
At Wednesday, 01 February, 2006, சொல்வது...

Usha...i havent read vadamalli but have heard a lot about the novel.anyway iam kinda totally confused coz let me explain....there are Eunuchs,tranvestites,lesbians homosexuals....as per my understanding they all have different sexual orientation from rest....are these all same called by differenr names?? or is there a difference between them....a lebian is a woman who falls in love with a woman right??...so a man who falls in love with a man is a homosexual right?? so a eunuch is a man who like to dress up like a woman and falls in love with a man right.....so how is he different from a homosexual?? he/she is just a cross dresser..is there any psychological thing to it.....i really dont know.anyway hope havent confused you as much as iam and your post has put me in a thought process..
love
Radha

 
At Friday, 03 February, 2006, சொல்வது...

ஜிரா, இப்படி சின்ன வயதிலேயே பிள்ளைகளை தங்களுடன் அழைத்துப் போய் கூட்டமாக செயல்படும் அமைப்புகள் நம் நாட்டில்
மட்டுமே! பாட்டு, ஆட்டம் பிறகு பிச்சை எடுத்தல் என்று பணம் பிடுங்குதல் அனைத்துமே கூட்டமாய் நடைப்பெறுவதை இந்தியா முழுவதும் காணலாம். கூட்டமாய் இருப்பது அவர்களுக்கு பாதுக்காப்பு என்பதால் காரணம் நாம்தானே?

கலை, வாடாமல்லி சு.சமுத்திரம் அவர்களின் மாஸ்டர் பீஸ் எனலாம்.

ராதா, அனைத்து விஷயங்களும் வெறும் செய்தியாய் தெரிந்துக் கொண்டதுதான். ஆண் உருவில், பெண் மனம் என்பதை நாம் சாதாரணமாய் பார்ப்பது. அடுத்து வயது ஆக ஆக மற்றொரு பாலினமாய் மாறுவது. என்னுடன் படித்தவள், ப்ளஸ் ஒன்னின் போது, முகத்தில் முடி முளைக்க ஆரம்பித்து, நடையுடை பாவனை எல்லாம் ஆண் போல மாறத் தொடங்க, கூட படிக்கும் பெண்ணுக்கு லவ் லெட்டர் தந்து பள்ளியில் இருந்து வெளியேற்றப்பட்டாள். சில சமயம், பிறக்கும் குழந்தைக்கு, இரண்டு உறுப்புகள் அல்லது சரியாய் வளர்ச்சியடையாத இன்னொரு பால் உறுப்பு இருக்கும். ஒன்றை மருத்துவர்கள், இப்பொழுது நீக்கிவிடுகிறார்கள்.

எஸ். பாலபாரதி , அரவாணிகளை அறிந்திருக்கிறேன் என்று சொல்லியிருக்கிறார். பாலபாரதி, உங்களுக்கு தெரிந்த விவரங்களை உங்கள் பதிவில் எழுதுங்களேன்.

ஆனால், லெஸ்பியன், ஹோமோ செக்ஷ¥வல் போன்றவர்கள் வேறு. அவர்களைப் பற்றி முன்பு தோழியர் வலைப்பதிவில் எழுதியுள்ளேன்.

 

Post a Comment

<< இல்லம்