Tuesday, January 24, 2006

கொஞ்சம் கதைக்கலாம் வாங்க : யூ டூ விக்ரம்

மதிய செய்தியைப் பார்க்கலாம் என்று தொலைக்காட்சியைப் போட்டால், ரஜினிகாந்த்தின் பெயர் தெரியாதப் பழையப்படம் ஓடிக்கொண்டிருந்தது. "பொம்பளைங்க வீட்டு வேலை செய்ரதுதான் அழகு" என்று திருவாக்கு காதில் விழுந்தது. அடடா, என்று அப்படியே நின்று விட்டேன். மன்னன் என்ற படத்தில் இருந்துதான், ரஜினிகாந்த் இத்தகைய பெண் குலத்திற்கு அறிவுரை வழங்கும் வசனங்கள் விட ஆரம்பித்தார் என்று நினைத்திருந்தேன். தொலைக்காட்சியில் செய்திகளுக்குப் பிறகு ஊர்காவலன் படம் தொடங்கும் என்றுப் போட்டார்கள்.

ஆக, ஆரம்ப காலத்திலேயே ரஜினிகாந்துக்கு இந்த மேனியா இருந்திருக்கிறது. அதைப் பார்த்து விஜய் சூடுப் போட்டுக்கொண்டு இருக்கிறார் என்றால், மஜாவில் விக்ரம், அசினைப் பார்த்து பொம்பளையா அடக்கமா வீடுப் போயி சேரு என்று டயலாக் சொன்னார். யூ டூ விக்ரம் என்று கத்தத்தோன்றியது. நடிகர்கள் எப்படி வசனங்களுக்குப் பொறுப்பாவார்கள் என்றுக் கேட்டுவிடாதீர்கள். ஐயா இந்த சூப்பர் ஸ்டார்களுக்கு தெரியாமல் படத்தில் ஒரு அணுவும் அசையாது.

இதைவிடக் கொடுமை, இன்னும் தொலைக்காட்சி தொடர்களில் விதவை என்றால் ஒயிட் அன் ஒயிட் சீரூடையில் காட்சி தருகிறார்கள். ஆனால் நடை முறை அப்படியா இருக்கிறது? சில வருடங்களாய், இந்த மாற்றத்தைப் பார்த்து வருகிறேன். கணவனை இழந்தப் பெண்கள் பொட்டு வைத்துக்கொள்ளுவதும், பல வயதான பெண்கள் கூட, இப்பொழுது ஸ்டிக்கர் பொட்டு வைத்துக் கொள்வதும் சாதாரண நிகழ்வாகிக் கொண்டு இருக்கிறது. பொட்டு வைத்துக் கொள்வது பெரிய புரட்சியா என்று நினைக்காதீர்கள். பெண் குழந்தையாய் இருக்கும் முன்பே பொட்டு வைத்துக் கொள்ளும் வழக்கம் இருக்கும் பொழுது, கல்யாணம் ஆகி கணவனை இழந்தவள், வைத்துக் கொள்ளக்கூடாது என்று கட்டுப்பாடு விதிப்பது நியாயமா? சத்தமில்லாத சமூகப்புரட்சியாய் தோன்றுகிறது.

இந்த பொட்டு மேட்டருக்குப் போனதும் சரஸ்வதி ஞாபகம் வந்துவிட்டது. சில வருடங்களுக்கு முன்பு என் அம்மா வீட்டில் சரஸ்வதி என்ற நடுத்தர வயது பெண் வேலை செய்துக் கொண்டு இருந்தார். கணவன் இல்லை. மூத்த பெண் எட்டாவது வகுப்புடன் படிப்பை நிறுத்திவிட்டு, ஏற்றுமதி நிறுவனத்தில் வேலை செய்துக் கொண்டிருந்தாள். மகன் ஒன்பதாவது வகுப்பு படித்துக் கொண்டிருந்தான்.

என் அம்மாத்தான் முதலில் கண்டிப்பிடித்தார். எப்பொழுதும் பொட்டு வைத்துக் கொண்டு வரும் சரஸ்வதி கொஞ்ச நாளாய் பொட்டு வைத்துக் கொள்ளாமல் வருவதை! மேலும் சரஸ்வதி அடிக்கடி ஞாயிற்று கிழமைகளில் வீட்டு வேலைக்கு மட்டம் போடுதலும் ஆரம்பித்தது.

அச்சமயம் எங்கள் வீட்டுப் பக்கத்தில் இருந்த குடிசைப்பகுதியில் தினமும் மாலையானாலும் ஒலிப்பெருக்கில் "பாவிகளே" என்று பிரசங்கம் ஆரம்பிக்கும். இது எல்லாருக்கும் பயங்கர கோபத்தை தந்து அடிதடி வரைப் போய், ஒலிப்பெருக்கி இடம் மாறி குடிசை பகுதியின் உள்ளே புகுந்தது.

மெல்ல விஷயம் கசிய ஆரம்பித்தது. சரஸ்வதி பிலோமீனாவாக மாறுகிறாள் என்று. என்னம்மா உட்பட எல்லா வீட்டு பெண்களும் கூடி அவளுக்கு, செய்வது தவறு என்றும், மதம் மாறுவது பெற்ற தாயை குறைக்கூறுவதற்கு சமம் என்றெல்லாம் அறிவுரைகள் சொன்னார்கள். இப்படியே போனால், இந்து மதம் என்னவாகும் என்றும் எல்லாரும் கொதித்துப் போனார்கள். சரஸ்வதியை வேலையை விட்டு நிறுத்த வேண்டும் என்றும் சொல்ல ஆரம்பித்தனர். பணம், வேலை என்று மயக்கிவிட்டார்கள் என்றும் சொல்லப்பட்டது.

எனக்கு அசிடிட்டி தொந்தரவு உண்டு. முழு வயிறு சாப்பிட்டாவிட்டால் பிரச்சனைதான். அன்று இரவு தூக்கம் வரவில்லை. காரணம் இரவு சேமியா உப்புமா போதவில்லை. ஒரு டம்ளர் மோர் குடித்தும் பசியடங்கவில்லை. வயிற்றில் அமிலம் சுரந்து, வயிற்றில் வலி ஆரம்பித்தது. எழுந்து விளக்குப் போட்டதும் அம்மா வந்துவிட்டார். சூடாய் ஹார்லிக்ஸ் போட்டுக் குடித்துவிட்டு நாலு பிஸ்கட்டை தின்றதும், வயிற்றில் இரைச்சல் அடங்கியது.

விளக்கை அணைத்துவிட்டுப் படுத்தால் சரஸ்வதியின் நினைவு வந்தது. கணவன் இல்லாமல், வீட்டு வேலை செய்து பிழைக்கும் அனாதை. கிடைக்கும் சில நூறு ரூபாய்களில் வீட்டு வாடகை, படிப்பு, உடை, மருத்துவம் எல்லாவற்றையும் சமாளிக்க வேண்டும். எத்தனை இரவுகள் அவர்கள் பசியுடன் துக்கமில்லாமல் புரண்டு இருப்பார்கள். அதே பசியுடன் காலை எழுந்து அவரவர் வேலைக்கும் செல்ல வேண்டும்.

மறு நாள் எழுந்ததும், பாதி ராத்திரியில் எனக்கு தோன்றிய ஞானத்தை அம்மாவிடம் சொன்னேன். அம்மாவால் உடனே பதில் சொல்ல முடியவில்லை. சில நிமிடங்கள் கழித்து, " சும்மாவா சொன்னாங்க பசி வந்தால் பத்தும் பறந்துப் போகும்ன்னு, எப்படியோ அவ கஷ்டம் தீர்ந்தால் சரி" என்றார். சாமி, மதம் போன்றவை எல்லாம் நம்மோட கண்டுப்பிடிப்புதானே? ஏதோ ஒரு கடவுள் அவளுடைய பிரச்சனையை தீர்க்கிறது என்றால், அதை ஏன் மறுக்க வேண்டும் அன்று தோன்ற எண்ணத்தில் இன்றுவரை மாற்றமில்லை.

எல்லா மதங்களும் உண்ணா நோம்பை வலியுறுத்துகின்றன. காரணம் பசி என்றால் என்னவென்று இருப்பவர்களும் அறியவேண்டும் மற்றும் வயிற்றுக்கு ஓய்வு வேண்டும் என்ற மருத்துவ கண்ணோட்டத்திலும். தாத்தா ஒரு பொழுது இருப்பதை நாங்கள் எல்லாரும் கேலி செய்வோம். இரவு பலகாரம் - எங்கள் வீட்டு பெரியவர்கள் இரவு அரிசி சாப்பாடுதான் சாப்பிடுவார்கள்- பிறகு ஒரு கிளாஸ் பால், நாலு வாழைப்பழம். இத்தனையும் தின்றுவிட்டு, விரதம் இருந்ததை சொல்லிக் கொண்டு இருப்பார்.

அதைவிட, நகைச்சுவையான விஷயம் ஒன்று. என் தோழியுடன் போனில் கதைக்க ஆரம்பித்தப்பொழுது, இன்னைக்கு நிறைய வேலை இருக்கு ஞாயிற்றுகிழமையானால், நல்ல சமையல் செய்ய வேண்டும் என்றாள். காரணம் அவள் கணவன் சனிக்கிழமை விரதம் இருப்பாராம். ஆக, விரதம் இருக்கும் அன்று, மறு நாள் என்ன ஸ்பெஷல் செய்ய வேண்டும் என்று அவர் மெனு கொடுப்பார் போல!

சமையலறையிலும், குளிர்சாதப்பெட்டியில் வகை வகையாய் உணவுப் பொருட்களை வைத்துக் கொண்டு நானும் விரதம் இருப்பேன், பசியைப் பற்றி எனக்கு தெரியும் என்று சொல்வதில் எந்த பொருளும் இல்லை. அடுத்தவேளை உணவு கிடைக்குமா என்றே தெரியாமல், தூக்கம் வராமல் புரளுவது என்பது கொடுமை. அதை தன் குடும்பத்தினரோடு அனுபவித்ததால் என்னவோ, பாரதி "தனியொருவனுக்கு உணவில்லை என்றால் ஜெகத்தினை அழித்திடுவோம்" பாடினான்?

*******
tamiloviam.com
sunday 22, Jan-2006

24 பின்னூட்டங்கள்:

At Tuesday, 24 January, 2006, சொல்வது...

இப்படி பொம்பளைங்களுக்கு அட்வைஸ் பண்ணுறத ,சில படங்களிலாவது அவர்களுக்கு அமைந்த பாத்திரங்களின் தன்மையினால் ,எல்லா நடிகர்களும் பேசியிருக்கிறார்கள் .ஆனால் ரஜினியைத் தவிர எல்லோரும் ஒரு கதாபாத்திரத்திடம் சொல்லுவது போல தான் காட்சி இருக்கும் .ரஜினி சொல்லும் போது யாரிடம் சொல்லுகிறாரோ அந்த கதாபாத்திரம் காமிராவுக்கு வெளியே போய் ,நம்ம சூப்பர் ஸ்டார் படம் பார்த்துகிட்டிருக்க பார்வையாளர்களை நேரடியா பார்த்து சொல்லுவார் .இப்போ விஜய் அப்படி ஆரம்பிச்சிருக்கார்

 
At Tuesday, 24 January, 2006, சொல்வது...

//பெண் குழந்தையாய் இருக்கும் முன்பே பொட்டு வைத்துக் கொள்ளும் வழக்கம் இருக்கும் பொழுது, கல்யாணம் ஆகி கணவனை இழந்தவள், வைத்துக் கொள்ளக்கூடாது என்று கட்டுப்பாடு விதிப்பது நியாயமா? சத்தமில்லாத சமூகப்புரட்சியாய் தோன்றுகிறது.//
உண்மைதான். இது எப்படி நடந்தது என்று தெரியாவிட்டாலும் இந்த மாற்றத்தைக் கவனித்து பெரும் மனநிறைவு அடைந்திருக்கிறேன். விதவைத் திருமணங்கள் எந்த அளவில் இருக்க்கிறதென்று தெரியவில்லை. அதுவும் சகஜமாகக் கருதப்படும் நிலை வந்தால் மகிழ்ச்சியாக இருக்கும்

மதமாற்றம் குறித்து - எனக்கு ஏனோ இப்படி மத போதகர்களை கரித்துக் கோட்டுவதும் மதமாற்றத் தடைச் சற்றம் கொண்டுவருவதும் முற்றிலும் சிறுபிள்ளைத் தனமான செயலாகத்தான் தெரிகிறது. மதம் என்பதே மனிதனுக்கு வாழ்க்கையில் நம்பிக்கையைத் தர ஏற்படுத்தப்பட்டது. தனிப்பட்ட மனிதனுக்கு எது சரியாகத் தோன்றுகிறதோ அதை செய்ய அவனுக்கு உரிமை உண்டு. கட்டாய மத மாற்றம் என்று ஒன்றுமில்லை. தேவாலயத்திலும் ஒரு மனிதன் முருகனை மனதில் நினைத்து வணங்க வாய்ப்புண்டு. இதெல்லாம் ரொம்பப் பெர்சனலான விஷயங்கள். வெறும் வெளி அடையாளங்களுக்காக சண்டை போட்டுக் கொள்வது வீண் என்று நமக்குப் புரிந்தால் சரி

 
At Tuesday, 24 January, 2006, சொல்வது...

மதமாற்ற விஷயத்தில் எனக்கு நிலா சொல்றது சரின்னு தோனுது..

ஆனா நீங்க சொல்றதும் சரிதான்.

இந்த பெந்தகோஸ்து சகோதரர்களுடைய தவறான அணுகுமுறையால கிறீஸ்துவ சமுதாயத்தின் நற்பெயர் கெடுகிறது.

இதுபோன்ற விஷயங்களை நானும் தூத்துக்குடியில் இருந்த சமயத்தில் நிறைய கண்டிருக்கிறேன்.

 
At Wednesday, 25 January, 2006, சொல்வது...

உஷா...விக்ரமும் ஒரு கதாநாயகந்தானே. அவரு கிட்ட மட்டும் நீங்க எப்படி எதிர்பாக்கலாம்....ஆனாலும் போங்க...சினிமாக்காரங்க கிட்ட ரொம்பவே எதிர்பாக்குறீங்க.

மதமாற்றம் என்பது அவரவர் சொந்த விஷயம். அதில் தவறு கண்டுபிடிக்கவே முடியாது. எந்த ஒரு காரணமாக இருந்தாலும் அந்தக் காரணத்தைத் தாய் மதம் நீக்காமல் இருக்குமானால் மதமாற்றம் எப்படித் தவறாகும். பணமே வருகிறது என்பதற்காக மாறுகிறார்கள் என்றே வைத்துக் கொள்வோம். அந்தப் பணம் அவர்களுக்கு எந்த ஒரு சூழ்நிலையில் தேவைப் பட்டிருக்குமோ. நீங்கள் சொல்வது போல வயிறு நிறைய வைத்துக்கொண்டு மதப்பெருமை பேசுவது மிக எளிது. பசிக்கிறவனுக்குத்தான் தெரியும் அந்தக் கஷ்டம்.

அதே நேரத்தில் அடுத்தவர்களைப் பாவிகள் என்பதும் ஸ்பீக்கர் வைத்துக் கொண்டு கத்துவதும்.....ரொம்பவே ஓவர். திருவான்மியூரில் என்னுடைய மைத்துனர் வீட்டிற்குப் பக்கத்தில் ஒரு சர்ச் இருக்கிறது. அங்கு ஒவ்வொரு ஞாயிறும் உயர்ந்த ஒலியில் பாடல்களை ஒளிபரப்புவார்கள். "ஏதாவது ஏதாவது செய்ய வேண்டுமே" என்று கூட ஒரு பாடல். christmas good friday மாதிரி ஏதாவது நாளும் கிழமையும் என்றால் சரி. ஒவ்வொரு ஞாயிறும் விடியற்காலையில் இருந்து என்றால்..."ஏதாவது ஏதாவது செய்ய வேண்டும்"

கல்யாண அகதிகள் என்று ஒரு படம். அதில் வரும் சரிதா பாத்திரம் ஒரு கிருஸ்துவரைக் காதலிக்கும். வீட்டில் எல்லாம் ஒத்துக்கொண்டு கல்யாணம் வரை போய் விடும். கல்யாணத்துக்கு முன் மதம் மாற வேண்டும் என்று சொல்வார்கள். அம்முலு என்ற பெயரையும் மாற்ற வேண்டும் என்று சொல்வார்கள். காதலனும் வீட்டில் கல்யாணத்துக்கு ஒத்துக்கொண்டதே பெருசு என்று பேசாமல் இருந்து விடுவான்.

இவளால் இவள் மனசுக்குப் பொய் சொல்ல முடியாமல் கல்யாணமே வேண்டாம் என்று விடுவாள். முருகனைக் கடவுள் என்று நம்புகிறேன். அதை இல்லை என்று திடீரென்று நம்பச் சொன்னால் எப்படி நம்புவது? நான் என்பது அம்முலு. இந்தப் பெயர் என்னோடு என் உயிரோடு கலந்தது..இதை எப்படி என்னால் மாற்ற முடியும். என்றெல்லாம் யோசித்து கல்யாணத்தை மறுப்பார். இதுவும் ஒரு சிந்தனை.

மீண்டும் சொல்ல வருவது....மதமாற்றம் என்பது அவரவர் சொந்த விருப்பம். நிர்பந்தங்களால் ஏற்படக்கூடியதல்ல.

 
At Wednesday, 25 January, 2006, சொல்வது...

//எத்தனை இரவுகள் அவர்கள் பசியுடன் துக்கமில்லாமல் புரண்டு இருப்பார்கள். அதே பசியுடன் காலை எழுந்து அவரவர் வேலைக்கும் செல்ல வேண்டும்.//

சகோதரி,

உங்கள் கண்ணோட்டம் மிகச் சரி.

ஆனால் இவ்வாறு பணத்துக்காகவோ, பொருளுக்காகவோ மதம் மாறுபவர்கள் மற்றொன்றையும் நினைவில் கொள்ள வேண்டும். மாறும் வரை கிடைக்கும் உதவிகள் மாறிய பிறகு காணாமல் போய்விடும். எத்தனை காலத்துக்கு தான் சாப்பாடு போடுவார்கள். அல்லது அவர்கள் கொடுக்கும் பணத்தில் எத்தனை காலம் தான் ஓட்ட முடியும்.

எனவே பசிக்கு தீர்வு மதம் மாறுவதல்ல.

மதத்தை தவறாக விளங்கிய சிலர் செய்யும் இது போன்ற தவறுகளுக்கு பலியாக சரஸ்வதி போன்ற வறுமையில் உழல்பவர்கள் இருக்கத்தான் செய்கின்றனர். என்ன செய்ய!

//தனிப்பட்ட மனிதனுக்கு எது சரியாகத் தோன்றுகிறதோ அதை செய்ய அவனுக்கு உரிமை உண்டு. கட்டாய மத மாற்றம் என்று ஒன்றுமில்லை. //

சகோதரியே! சரியாக கூறினீர்கள் !

மாற்றம் மனதிலிருந்து வந்தாலே அவர் மாறியதாக பொருள்படும். உலக ஆதாயங்களுக்காக மாறுவதையா இறைவன் எதிர்பார்க்கிறான். அவ்வாறு மாறினால் அவர் உண்மையிலேயே இறைவனை சரியான பார்வையில் கண்டு கொண்டார் எனக் கூற முடியுமா? பின் எதற்கு இந்த "கட்டாய" சொல்! பின் யாருக்கு கணக்கு கொடுக்க, எந்த இறைவனை திருப்தி படுத்த? இந்த மதமாற்ற முயற்சிகள்.

அன்புடன்
இறைநேசன்

 
At Wednesday, 25 January, 2006, சொல்வது...

அட, என்னங்க என் மகள் பள்ளி நாட்களிலிருந்தே பொட்டு வைத்துக் கொள்ளமாட்டாள். சண்டைபோடும் பாட்டிக்காக ஒட்டுபொட்டு வைத்துக்கொண்டு வெளியில் போனதும் எடுத்து விடுவாள். உலக முழுவதும் ஒரே நடையுடை பாவனைக்கு மாறிக் கொண்டிருக்கிறோம்.

இந்தியா ஒவ்வொரு உலக மாநாட்டிலும் ஆஸாத்காஷ்மீர் இந்தியாவைச் சேர்ந்தது என்று சொல்லிக்கொண்டிருந்தும் எல்லா உலக வரைபடங்களிலும் அதனை பாகிஸ்தானுடனேயே காண்பிப்பது போல, நீங்களும் ஒவ்வொரு ஆணாதிக்க வசனத்தை கேட்கும்போதும் பதிவு செய்து கொண்டிருக்கிறீர்கள். இன்னும் MCPக்கள் பெரும்பான்மையாக இருக்கும் வரை இவை தொடரும். வளரும் தலைமுறையினர்தான் இப்போக்கை கைவிடுவார்கள் எனத் தோன்றுகிறது.

 
At Wednesday, 25 January, 2006, சொல்வது...

மிகவும் சரியாகச் சொன்னீர்கள் இறைநேசன்.

 
At Wednesday, 25 January, 2006, சொல்வது...

ஜோ! விஜய், தனுஷ், சிம்பு எல்லாருமே காமிராவைப் பார்த்துதான் சவுண்டு விடுகிறார்கள்.

டி.ராஜ், விக்ரமை ஏன் சொன்னேன் என்றால் சிவாஜிக்குப் பிறகு கமலஹாசன், பிரகாஷ் ராஜ், விக்ரம், சூர்யாவை சேர்த்துக் கொள்ளலாமா என்ற யோசனையுடன், நடிப்பு இவர்களுக்கு passion என்று தோன்றும். விக்ரம் இத்தகைய வசனங்களை தவிர்த்திருக்கலாம்.

 
At Wednesday, 25 January, 2006, சொல்வது...

நிலா, ஜோசப் சார், ஜிரா, இறைநேசன் நன்றி .மறுமொழிகள் நல்ல விவாத கருத்துக்களை தந்துள்ளன.

மதமாற்றம் என்பது என்னைப் பொருத்தவரையில் சரியில்லை என்பேன். எல்லா மதங்களும் மனிதனை நல்வழிப்படுத்த தோன்றியவைத்தான். ஆனால் எல்லா மதத்திலும் நான் பார்த்தவரை மத அபிமானிகள் அல்லது தீவிர மத விரும்பிகள் எண்ணிக்கை மிக குறைவு. பல ஊர்களையும், சில நாடுகளையும் சுற்றியதன் விளைவாய் இந்த மதத்தில் பிறந்துவிட்டோம், பெரியவர்கள் சொல்வதை
அப்படி அனுஷ்டிப்போம் என்று இருப்பார்கள். மற்ற மதத்தினரின் சடங்குகளை கேலியாக பேசி கிண்டல் அடிப்பவர்கள் மிகமிக குறைவு.

சிலரோ தங்கள் மதத்தை குறித்து வெகுவாய் பெருமையடித்துக் கொள்ள ஆரம்பித்தால் நகைப்புக்கு உரியதாகின்றனர். எல்லா
மதத்திலும் காலத்துக்கு ஒவ்வாத விஷயங்களும், குறைகள் போன்றவையுண்டு. தன்னுடைய மதமோ, தன் அபிமான நட்சத்திரமோ, எழுத்தாளனோ, அரசியல் தலைவனோ இவர்களைப் பற்றி உண்மையில் அபிமானம் இருந்தால் அவற்றை பொதுவில் சிலாக்கிப்பது தேவையில்லை என்பது என் அபிப்ராயம்.
எனக்கு சாதியைக் குறித்து வெறுப்பு உண்டென்றாலும், மதங்களைப் பொறுத்தவரையில் மத மறுப்பு கொள்கைதான்.

சரஸ்வதியின் நிலைமையில் அவள் செய்தது சரியே. எந்த ஒரு செயலுக்கு, கருத்துக்கும் பல பரிணாமங்கள் உள்ளது.

 
At Wednesday, 25 January, 2006, சொல்வது...

ஜோசப் சார், சென்ற விடுமுறையில் சென்னையில் என் மகள் நுழைவு தேர்வு எழுதும்பொழுது, பல பெற்றோர்கள் கல்லூரி
வாசலில் காத்திருந்தோம். அதில் ஒருவர் தன்னுடைய பையில் இருந்து, சில புத்தகங்களை எடுத்து விநியோகித்தார், வாங்கிய
அனைவரின் முகத்திலும் கேலி, எள்ளல். நான் வேண்டாம் என்று மறுத்துவிட்டேன். கிளம்பும்பொழுது, ஒருவர் கூட அப்புத்தகங்களை கையோடு கொண்டு செல்லவில்லை. அவை அனாதையாய், மரத்தடியில் கிடந்ததைப் பார்த்தப் பொழுது, தந்தவர் மீதுதான் கோபம் வந்தது. தன் கடவுள்மீதும், மதத்தின் மீதும் நம்பிக்கையிருந்தால், நம்பாதவர்களுக்கு ஏன் விநியோகிக்க வேண்டும்? மைக்கில் பேசுவதும் இப்படித்தான், அவர்களை ஏச்சுபவர்களுக்கு எடுத்துக் கொடுப்பதுப் போல இருக்கிறது.

 
At Wednesday, 25 January, 2006, சொல்வது...

மணியன், உங்கள் மகள் பொட்டு வைத்துக்கொள்ளாததும், நான் கடுகு சைசில் பொட்டு இட்டுக் கொள்வதும் இதுவும் ஒன்றல்ல. மிக சென்சிடிவான மேட்டர் இது. நிலா, சொன்னதைப் போல, மிக மெளனமாய் எப்படி, எப்பொழுது ஆரம்பித்தது என்று தெரியவில்லை.

மற்றப்படி, ரஜினிகாந்தின் அபத்த சிந்தனையின் வெளிப்பாடு, நடிக்க வந்த ஆரம்பக்காலத்திலேயே இருந்தது என்ற கண்டுப்பிடிப்பை சொன்னேன் :-)

 
At Wednesday, 25 January, 2006, சொல்வது...

காசுக்காக மதம் மாறுகிறார்கள் என்பது உண்மையா?
ஏதோ கட்சிக்கூட்டங்களுக்கு காசு கொடுத்து ஆள்சேர்ப்பது போல நினைக்கிறார்கள் பலர். எத்தனை காலம்தான் காசு கொடுத்துக்கொண்டே இருப்பார்கள். காசு கிடைப்பது நின்றவுடன் இவர்கள் ஓடிவிடமாட்டார்களா?. இந்தக் கூடாரக் கோவில்களில் ஏழை என்றும் பாரமல் ஒரு அங்கீகாரம் கிடைக்கிறது. தானும் ஏதோ ஒரு குழுவில் அங்கம் என்ற சமூக தேவை நிவர்த்தியாகிறது. தன்னை ஒரு மத போதகர் பேர் சொல்லி அழைத்து விசாரிக்கிறார் என்னும் பெருமை.. இன்னும் பல.

எல்லா மதமும் ஒன்றே என்பது அறிவு ஜீவிகளின் தெளிவு, மற்றவர்கள் ஏதோ ஒன்றைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள், இது வெறும் காசுதான் என்றால் நீங்களே ஒரு மதம் ஆரம்பித்துவிடலாம்.

எத்தனையோ போலி சாமியார்களிடம் ஏமாந்துபோகும் மக்கள் காசு கிடைக்கிறதென்றா போகிறார்கள்? உண்மையிலேயே இயேசுவையும் அவர் போதனையும் உணர்ந்து பலரும் மதம் மாறுவதுமில்லை.

மதம் மாறுவது அவரவர் விருப்பம் என்பதில் எந்த மறுப்புமில்லை, இதில் அரசு தலையிடுவதென்பது, அடிப்படை உரிமைகளுக்கெதிரானதாகும்.

மதங்களைப் பற்றிய விவாதங்களின் போது, (சில போதை ராத்திரிகள்) நான் எப்போதும் என் இந்து நண்பர்களுக்கு கூறும் சில கருத்துக்கள்.

1. இந்து மதத்தில் என்னைக் கவர்ந்த்து, அது (பொதுவாக) எந்த வித வழிபாட்டையோ, தவமுரையையோ வலியுறுத்தவில்லை, ஞயிற்றுக்கிழமை கோவில் போகவில்லையென்றால் உன் மண்டை வெடித்துவிடும், என்கிற நிலை அங்கு இல்லை.

2. வாழ்வியல் தத்துவங்கள் பல இந்துமதக் கொள்கைகளிலும், கதைகளிலும், இலக்கியத்திலும் காணப்படுகின்றன. தத்துவத்தையும், இறையியலையும் அருமையாக ஒன்றாக்கியிருக்கிறது இந்து மதம்.

3. உங்கள் குழந்தைகளுக்கு உங்கள் மதத்தைப் பற்றி எடுத்துக்கூறுங்கள். அதற்கு முதலில் நீங்கள் அதைப்பற்றி தெரிந்து கொள்ளுங்கள். எத்தனை இந்துக்களுக்கு இந்துமதம் ஒரே மதமல்ல, பல ஒத்த மதங்களின் கூட்டு என்பது தெரிகிறது? இராமாயணத்திற்கும் மகாபாரததிற்குமே வித்தியாசம் தெரியாதவர்கள் எத்தனைபேர்.

இராமகிருஷ்ண பரமஹம்சர் கூறியதுதான் நினைவுக்கு வருகிறது,"ஒருவனால் தன் சொந்தக் கடவுளை நம்ப முடியாவிட்டால், வெறெந்தக் கடவுளையும் நம்பமுடியாது".

கிறித்துவம் உலகம் முழுவதுமாய் பரவியிருக்க காரணம், அதற்கு எழும் எதிர்ப்பே, என்பது வரலாறு.

 
At Wednesday, 25 January, 2006, சொல்வது...

பொம்பளைன்னா பொறுப்பா இருக்கணும், ஆம்பளைன்னா நெருப்பா இருக்கணும் - இந்த வசனம் எந்தப்படத்திலே வருதுன்னு சொல்லுங்க பார்ப்போம்??

எனக்குத்தெரிந்து கைம்பெண் பொட்டு வைத்துக்கொள்வது அந்தப் பிரபல கவிதை வந்தபோதே (விதவைக்கு பொட்டில்லை - கைம்பெண்ணுக்கு இரண்டு பொட்டு - நினைவிருக்கிறதா?) நடந்துகொண்டுதானிருந்தது. இப்போது அது ஒரு மேட்டரே இல்லை என்கிற அளவுக்கு ஆரோக்கியமான மாற்றமா விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. இதற்கெல்லாம் எந்த மதகுருவின் / அரசியல்வாதியின் உபதேசங்களும் -ம் தேவையில்லைன்னு சமுதாயம் அவங்களை (ம கு / அ வா) பார்த்து உரத்தே சொன்னாலும் அவர்கள் வாயை மூடுவதாய் இல்லை.

 
At Wednesday, 25 January, 2006, சொல்வது...

சுரேஷ், அது என்ன கவிதை? கவிதைக்கும் எனக்கு உள்ள தூரம் உங்களுக்கு தெரியுமல்லவா? பாரதிதாசனின் "கோரிக்கையற்று
கிடந்த பலாபழமா?"

சிறில், இந்துமதம் என்பதை இந்துதர்மம் என்பார்கள். அதாவது வாழ்க்கை வாழும் முறை. இதில் நாத்திக வாதமும் அடக்கம்.
எனக்கு சில தமிழ் அல்லாத கிருஸ்துவ தோழிகள் உண்டு. நன்றாக மதங்களை அலசுவோம். மனிதம் வாழ மதங்களை தேவையில்லை என்று சொல்லும் நிறைய தோழமைகளும் உண்டு.

 
At Wednesday, 25 January, 2006, சொல்வது...

//..//பெண் குழந்தையாய் இருக்கும் முன்பே பொட்டு வைத்துக் கொள்ளும் வழக்கம் இருக்கும் பொழுது, கல்யாணம் ஆகி கணவனை இழந்தவள், வைத்துக் கொள்ளக்கூடாது என்று கட்டுப்பாடு விதிப்பது நியாயமா? சத்தமில்லாத சமூகப்புரட்சியாய் தோன்றுகிறது.//
உண்மைதான். இது எப்படி நடந்தது என்று தெரியாவிட்டாலும் ....//

உஷா, நிலா,

என் நினைவுக்கு எட்டியவரையில், பிரபல எழுத்தாளர் சிவசங்கரி இந்த ஆரோக்கியமான மாறுதலை ஆரம்பித்தார். அதற்கு முன்பே இந்த விஷயம் பேசப்பட்டிருக்கலாம். ஒரு சிலர் பாதை வகுத்திருக்கலாம். ஆனால் பரவலாக ஒரு சமூக அங்கீகாரம் ஏற்பட இவரது முன்னுதாரணம் ஒரு காரணம். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக விழிப்புணர்வு பரவியுள்ளது. சமூக மாறுதல்கள் என்றும் எங்கும் ஒரு தனி மனிதரிடமிருந்துதான் ஆரம்பிக்கின்றன என்பதற்கு மற்றுமொரு சான்று.

Aruna

 
At Thursday, 26 January, 2006, சொல்வது...

அருணா, நீங்க சொன்னதும் ஞாபகம் வருது, எழுத்தாளர் ராஜம்கிருஷ்ணனும் எழுதியிருக்கிறார். அதே சமயம், "கணவனை இழந்த கைம்பெண், ஆனால் நெற்றில் திலகம், காலம் செய்யும் கோலம், புரட்சி சிந்தனை" என்றெல்லாம் விமர்சித்து வந்த கதைகளும் கண்ணில் பட்டிருக்கிறது.
ஆனால் எந்த குருமார்களும் இதை கண்டுக் கொள்ளாதது மிகுந்த ஆச்சரியம். சிவசங்கரி முதல் அடி எடுத்தாலும், அவருக்கு மட்டும் முழு பாராட்டு சொல்ல முடியாது :-)
காரணம் சமூகத்தில் எல்லா நிலையில் இருப்பவர்களும் ஒட்டு மொத்தமாய் மாறிப்
போயிருக்கிறார்கள்.

 
At Friday, 27 January, 2006, சொல்வது...

//இதைவிடக் கொடுமை, இன்னும் தொலைக்காட்சி தொடர்களில் விதவை என்றால் ஒயிட் அன் ஒயிட் சீரூடையில் காட்சி தருகிறார்கள். ஆனால் நடை முறை அப்படியா இருக்கிறது?//
ஒயிட் அன் ஒயிட் சீரூடையில் வருவது இருக்கட்டும். அன்றொருநாள் செல்வி தொடரில் ஒரு காட்சி பார்க்க நேர்ந்தது. செல்வியின் தங்கை மலருக்கு கணவர் இறந்து விட்டார். ஏதோ ஒரு நாள் நிர்ணயித்து அன்று அவரிடம் இருந்து பூ, பொட்டு, நீக்கி, வெள்ளை உடைக்கு மாற்றுகிறார்கள். கதைப்படி இவர்கள் எல்லோரும் இருப்பது ஏதோ ஒரு கிராமத்தில் அல்ல. தமிழ் நாட்டின் தலை நகரமாம் சென்னையில். இந்த நடைமுறை (அதாவது கணவனை இழந்தவருக்கு, ஒரு விழா எடுத்து, பூ கழற்றி, பொட்டு அழித்து, வெள்ளை உடைக்கு மாற்றுவது) உண்மையிலேயே இந்தியாவில், அதுவும் சென்னையில் இருக்கிறதா எனபதை அறிய ஆவலாய் உள்ளது. அந்த நடைமுறை இல்லாத பட்சத்தில், எதற்காக இல்லாத ஒன்றை இருப்பதாகக் காட்டுகிறார்கள் என்ற கோபம்தான் வருகிறது. இதில் இன்னொரு விடயமும் உண்டு. கதைப்படி செல்வி குடும்பம் இலங்கையில் இருந்துதான் இந்தியா வந்திருக்கிறார்கள். இலங்கையில் இப்படி ஒரு விழா நடந்ததாக நான் அறியவில்லை. இலங்கையில் வாழும் இந்தியக் குடும்பங்களில் கூட இப்படி ஒரு விடயம் நடந்ததாக நான் இதுவரை அறிந்திருக்கவில்லை. அப்படியிருக்க இவர்கள் எதற்கு இல்லாதவற்றை இருப்பதாக காட்டுகிறார்களோ தெரியவில்லை. எதை நிரூபிக்க இவ்வாறு செய்கிறார்கள் தெரியவில்லை. இத்தனைக்கும் இந்தக் கதையில் நிகழ்கால நாட்டு நடப்புக்களும் அவ்வப்போது சேர்த்துக் கொள்ளப்படுகின்றன. அப்படி நிகழ் காலத்தில் கதையை நகர்த்திக் கொண்டு, நிகழ்காலத்துக்கு பொருத்தமில்லாத, நிச்சயமாக அவசியமே இல்லாதவற்றை அங்கே சேர்த்துக் கொள்வதற்கு காரணம் என்னவாக இருக்கும். கோபம்தான் வருகிறது. இலங்கையிலோ, அல்லது இந்தியாவில் சென்னையிலோ இத்தகைய நடைமுறை இருப்பதாக இருந்தால் எனது கோபம் நியாயமற்றதுதான் என்பதையும் ஒத்துக் கொள்கிறேன்.

 
At Friday, 27 January, 2006, சொல்வது...

கலை! கலை சேவை என்பது பொருள் குவிக்கவே என்றாலும், மேல் நாட்டில் வாழ்ந்து, படித்து, இன்று அதே மேல் நாட்டு பாணியில்
வாழ்க்கையை அமைத்துக் கொண்டவர், இத்தகைய பண்பாடோ, கலாச்சாரமோ ஏதோ ஒன்று இன்னும் இந்து மதத்தில் இருப்பதாய்
காட்டுவது எப்படி? யூ டூ ராதிகா என்று கேட்க தோன்றியது :-)

கதைக்கும், இயக்குனரின் வேலையிலும் நான் தலையிடுவதில்லை, என்னுடைய வேலை நடிப்பும், தயாரிப்பும் மட்டும்தான்
என்றால் அது இன்னொரு பூ சுத்தல்.
அந்த சிரியல் பார்தததில்லை, மெட்டி ஒலி ஒன்றுதான் ஓரளவு, செளகரியப்பட்டப் பொழுது பார்த்தேன். மை டியர் பூதம் என்று நினைக்கிறேன், சரியாய் ஞாபகம் இல்லை. என் மகன் சில சமயம் பார்ப்பான். அப்பொழுது கண்ணில் விழுந்தது இந்த வெள்ளுடை பண்பாட்டு சின்னம்.
இத்தகைய சடங்குகள், சென்சிடிவான விஷயம் என்பதால் வெகு லாகவமாய்,
மேலோட்டமாய் நடத்தப்படுகின்றன. சிறு வயது என்றால் இன்னும் லேசாய்.

 
At Monday, 30 January, 2006, சொல்வது...

காசு கொடுத்தோ இல்லை நீங்கள் சொல்வது போல் சோறு கொடுத்தோ மதம் மாற்றுபவர்கள் சேவை செய்வதாய் சொல்லிகொள்ள கூடாது.அவர்கள் செய்வது முழுக்க முழுக்க வியாபாரம்.minority institution என்ற போர்வையில் செய்வதும் கடைதெடுத்த வியாபாரம்.அங்கே படிக்கும் பச்சிளம் குழந்தைகள் அநேகம் பேர் இரவில் ஜெபம் செய்வதும் சிலுவை இட்டுகொள்வதும் சில பல வீடுகளில் காணமுடியும். எந்த வித பொருளாதர இடையீடு இன்றி மனம் மாறுபவரகள் (மாற்ற படுபவர்களே நிரைய) வலம்புரிஜான் சொல்வது போல முட்டாள்கள், அவர்கள் தன் மதத்திலும், தான் சேரப்போகும் மதத்திலும் என்ன உள்ளதென்பதை "முழுமையாக" அறியாதவர்கள். அந்த மாற்றத்தினால் கிடைகும் சோறு எத்தனை நாளைக்கோ..... கண்ணன். muscat

 
At Wednesday, 01 February, 2006, சொல்வது...

அன்புள்ள மஸ்கட் கண்ணன்,
மதமாற்றம் சரி என்று நான் சொல்லவும் முற்படவில்லை. ஆனால் சரஸ்வதி விஷயத்தில் அவளை தடுக்க யாருக்கு வாய் இல்லை.
இன்று நம் ஊரில் ஒவ்வொரு மாநிலத்திலும் நுற்றுகணக்கான இந்துசமய அமைப்புகள். யோகா, ஆசிரமம் என்று கோடிக்கணக்கான
சொத்துக்கள். ஆனால் சாமியாரின் பிறந்த நாள் வைபத்தில் அன்னதானம் இடுவதோ, முதியோர்களுக்கு இலவச கண் பரிசோதனை
மட்டுமோ போதாது. ஆசிரமத்தை விரிவுபடுத்துவதில் இருக்கும் சாமியார்கள், குருக்களில் எத்தனை பேர்கள் ஏழை இந்துக்களுக்கு
உதவ முற்படுகிறார்கள்? ஏழைகள் அங்கு உள்ளே நுழையவாவது முடியுமா?

 
At Wednesday, 01 February, 2006, சொல்வது...

உஷா... உங்களின் கடைசி வரிகளில் எனக்கும் உடன்பாடு உண்டு.சரஸ்வதி விஷயத்தில் நடந்தது வியாபரமே.அரசியல் கட்சிகள் கூட்டத்திற்கு ஆள் பிடிப்பதற்கும்,இதற்கும் எனக்கு பெரிய வேறுபாடு இருப்பதாய் தெரியவில்லை.கூட்டம் முடிந்ததும் கூட்டத்திற்கு சேர்த்த ஆளை அவர்கள் நினைப்பதுமில்லை."இவரும்" கடவுள் எனும் போது ஏதும் இல்லை. "இவர் மட்டுமே கடவுள் எனும் போது தான் மனசு பாழ் படுகிறது. என்ன செய்வது, கண்ணதாசன் சொன்னது போல் சகிப்புதன்மையால் தான் இந்த(து) மதம் வளர்ந்து கொண்டிருக்கிறது. வளரும். கண்ணன்.

 
At Thursday, 02 February, 2006, சொல்வது...

நாங்க....... ஒருமுறை..... (ஊரிலிருக்கும் போது., வருடா வருடம் செல்வதுதான்) கொடைக்கானல் போனப்ப., ஒரு கிறித்துவ நண்பர் வீட்டில் தங்கினோம்., அப்போ நான் கல்லூரியில் இருந்த சமயம். 15 நாள் சும்மா சந்தோசமா சுத்தலாம்னு நினைச்சுப் போனா... கலைல எழுந்திரிச்ச உடனேயே ஸ்தோத்திரம்... காலை உணவின் போதும் அதே., மதிய உணவின் போதும் அதே மாலையில் பைபிள் படிப்பு., இரவு உணவின் போதும் ஜெபம்., தூங்கும் போதும் ஜெபம். வரா இறுதிதான் இருக்கேன்னு நினைச்சா... சனிக்கிழமை பைபிள் கிளாஸ்., ஞாயிற்றுகிழமை சர்ச். நம்ம நிலைமைய கொஞ்சம் யேசிச்சுப் பாருங்க!.,

அட., இந்த ஜெபத்தாலெல்லாம் பல அருமையான கருத்துகள், பழக்கங்கள் கற்றுக் கொண்டேன். ஆனா இந்த முட்டிக்கால் போடறது இருக்கு பாருங்க... ரெண்டு நாள் பார்த்தேன். அதற்குப் பிறகு நம்ம அறையிலிருந்து வெளி வருவதே இல்லை (சுற்றப் போகும் போது மட்டும்தான் வருவது). அப்படியும் தெரியாம தண்ணி குடிக்கிறது அப்படி, இப்படின்னு ஜெப நேரத்தில வெளில வரும்போது அந்த அங்கிள்., 'வாலிபப் பிராயத்தில் உன் சிருஸ்டிகளை நினை'ன்னு சத்தம் போட்டு சொல்வாரா? அப்புறம் என்ன? ., தேமேன்னு கொஞ்ச நேரம் உட்கார்ந்து 'வசனங்கள் கற்றுக் கொள்வேன்'.

ஆனால் அக்குடும்பத்தின் பக்தியும், கட்டுப்பாடும்., பிள்ளைகளும் யாரும் வற்புறுத்தாமல் அதை தனது கடமைபோல் செய்யும் விதமும். என்னை மிகவும் சிந்திக்க வைத்தது என்பதில் ஐயமில்லை. நினைத்தை செய்து வாழ்ந்த என் வாழ்க்கையில்., அந்தப் 15 நாட்கள் பெரும் மற்றம் தந்தது என்பதில் ஐயமில்லை. இதெல்லாம் எங்க அப்பாவின் முன்னேற்பாடோ? என்ற ஐயமும் இன்றுமுண்டு!!.

சரி மதம் மாறுதல்... மனிதனுக்கு மதம் என்ற ஒன்று தேவையா?., எல்லா மதமும் மேம்போக்காகப் பார்த்தால்... நல்லதையே சொல்கிறது. ஆனால் நாம் நம் செயல்களுக்கு ஏற்றவாரு அவைகளுக்கு அர்த்தம் தருகிறோம்.

விதவை பொட்டு., இன்றும் சில குடும்பங்களில் சீருடையுள்ளது., ஈரோட்டில் அதிகம் உள்ளது வருந்ததக்கதொரு முரண். சடங்குகள் (விதவைக் கோலமிடும்) என்கிற சனியன் இன்னும் மத்திய தர குடும்பங்களில் உள்ளது. அதற்கு அந்த ஒரு நாள் இடம்கொடுத்துவிட்டு, அடுத்த நாளிலிருந்து நார்மல் வாழ்க்கைக்கு திரும்புவர்களும் உண்டு.

 
At Friday, 03 February, 2006, சொல்வது...

மனசு அவர்களே,
சரஸ்வதி செய்தது சரி என்கிறேனே தவிர அவரை தங்கள் சுயநலனுக்கு பயன் படுத்திக் கொள்பவர்களின் செயல் சரியில்லை.
ஆனால் இந்துசமய சார்ந்த எத்தனை அமைப்புகள் உள்ளன? அவைகள் இந்த மதமாற்றத்திற்கு பலியாகும் ஏழைக்களுக்கு ஏதாவது
செய்யக்கூடாதா என்பது என் கேள்வி.

அப்படிப்போடு,
நீங்கள் பார்த்த ஈரோடு பெண்கள் போன தலைமுறை பாட்டிகளாய் இருப்பார்கள். சரியா? ஆனால் நீங்கள் குறிப்பிட்டதுப் போன்று
ஒழுக்கம், வழிப்பாடு என்று அதீத கட்டுப்பாடுகளுடன் வளர்க்கப்படும் பிள்ளைகள், வெளியுலகைப் பார்க்க ஆரம்பித்ததும், வெகு
சுலபமாய் தடம் மாறிப் போகும் அபாயம் உண்டே?

 
At Friday, 03 February, 2006, சொல்வது...

போன தலைமுறைப் பாட்டிகள் அதிகம்தான். ஆனால் ஓரிரு இடங்களில் இன்றும் தொடர்கிறது என்பதும் உண்மை.

//வெளியுலகைப் பார்க்க ஆரம்பித்ததும், வெகு
சுலபமாய் தடம் மாறிப் போகும் அபாயம் உண்டே?//
ம்கூம்... யாரும் கட்டாயப் படுத்தவே இல்லை. அவர்களாகவே காலையில் எழுந்தவுடன்., பைபிள எடுத்து வச்சுக்கிறாங்க. பேச்சு எல்லாம் எதாவது ஒரு வசனத்தை சொல்லித்தான். அவ்வளவு தூரம் பக்தி தேவையா? என்றாலும், சலிப்பின்றி தினமும் அந்த சிறுவர்களால் ஒரு பழக்கம் பின்பற்றப்படுவது எனக்கு ஆச்சரியத்தையே அளித்தது.

 

Post a Comment

<< இல்லம்