தீவுளிக்கு தீவுளி
என் தந்தை பத்திரிக்கையாளராய் இருந்ததற்கு கிடைத்த ஓரே நன்மை என்று அம்மா சொல்வது, இலவசமாய் கிடைக்கும் செய்திதாள்களைத்தான். இந்து, இந்தியன் எக்ஸ்பிரஸ் மற்றும் தினமணி, தினமலர், தினகரன், தினத்தந்தி. ஆனால் இலவசமாய் பத்திரிக்கைகள் கிடைக்காது. இதில் அக்கம் பக்கத்தில் லாட்டரி சீட்டு வாங்குபவர்கள் மத்தியில் தினத்தந்திக்கு நல்ல டிமாண்டு.
தினகரனில் கருவாடு மீனாகுமா, கறந்த பால் மடிபுகுமா போன்ற போன்ற செந்தமிழ் வாக்கியங்களைப் படித்து நான் தமிழ் அறிவையும், திராவிட அரசியலையும் தெரிந்துக் கொண்டேன், ஆனால் ஆங்கில பத்திரிக்கைகளுக்கு அண்ணனும், தம்பியும்
அம்மாவிடம் போரிடுவார்கள். எதற்கு தெரியுமா? அதை விற்று காசாக்கத்தான்.
முதலில் அம்மா பேப்பர் சேர சேர அதை விலைக்குப் போட்டுக் கொண்டு இருந்தார். பிறகு தீபாவளிக்கு ஒரு மாதத்திற்கு முன்னால், பட்டாஸ் தயாரிக்கும் தொழிற்சாலைகளுக்கு இந்த பேப்பர்கள் அவசியம் என்பதால், அப்பொழுது விலை அதிகரிக்கும். ஒருமுறை கொஞ்சம் அதிகம் சேர்ந்ததும் மொத்தமாய் போட போக, வியாபாரி அனைத்தையும் அள்ளிக் கொண்டு எடையில் ஏமாற்றிவிட்டான்.
அதனால் வருடாந்தர பேப்பர்கள், பன்னிரெண்டு ஆங்கில பேப்பர்கள் ஒரு கிலோ என்ற மேனிக்கு கட்டப்பட்டு பத்திரப்படுத்தப்படும், பதினெட்டு தமிழ் பேப்பர்கள் ஒரு கிலோ என்று நினைவு. தீபாவளி சமயம் அம்மா கையில் ரொக்கம் கணிசமாய் இருக்கும்.
ஆனால் அண்ணனுக்கும், தம்பிக்கும் ஏதாவது அவசர தேவை ஏற்பட்டால், நைசாய் ஒரு கிலோ கட்டை எடுத்து, சைக்கிள் பின்னாடி வைத்துக் கொண்டுப் போய் கொண்டே இருப்பார்கள். கிலோ இரண்டே முக்கால் ரூபாய் கிடைக்கும். இது, எண்பதின் ஆரம்பத்தின் விலை! அம்மா அலற அலற கண்டுக்காமல் போய் கொண்டு இருப்பார்கள், வேறு எங்கு சினிமாவுக்குதான் :-)
தீபாவளியன்று அம்மா செய்யும் பலகாரங்களில் அல்வாவிற்கு முதல் இடம். கோதுமையை ஊற வைத்து அரைத்து, பால் எடுத்து அப்படியே வைத்துவிடுவார்கள். மறுநாள் கொஞ்சம் புளித்துவிடும். மேலே தங்கும் நீரை வடித்துவிட்டு, சர்க்கரை பாகு வைத்து, கோதுமை
பாலை ஊற்றி கிண்ட வேண்டியது. இதுதான் கோதுமை அல்வா. எங்கள் வீடுகளில் அதிரசமும், உளுந்து வடையும் விசேஷங்களுக்கு செய்ய மாட்டார்கள். திவசத்துக்கு மட்டுமே உரியவை இவை. ஆனால் சாஸ்திர சம்பிரதாயங்களை ஏமாற்ற உளுந்து வடையில் வெங்காயமோ அல்லது முட்டை கோஸ்ஸோ சேர்த்து, வடை வேறு அவதாரம் எடுக்கும். ஆனால் அதிரசத்தை அப்படி எதுவும் செய்ய முடியாதே!
தாத்தா இறந்தப் பொழுது, திவசத்தின் போது, தின்ற அதிரசம் பல நாட்கள் நினைவில் இனித்துக் கொண்டு இருந்தது. பிறகு கிராண்ட் ஸ்வீட்ஸ் கடையில் அதிரசம் தின்று தின்று அதிசயம், சாதாரண விஷயமாய் மாறிப் போனது. அப்பொழுது எல்லாம் பட்சணங்கள் என்பது அபூர்வ வஸ்து. போட்டி போட்டுக் கொண்டு தின்போம். ஆனால் இப்பொழுதோ வகை, வகையாய் கடைகளில் கிடைப்பதாலும், பிள்ளைகளுக்கு மில்க் ஸ்வீட்ஸ் பிடிக்கும் அளவு, நம் பாரம்பரிய இனிப்புகள் பிடிப்பதில்லை. செய்துவிட்டு, வீணாகப் போகிறது என்று நாம்தான் தின்று தீர்க்க வேண்டியுள்ளது.
தீபாவளிக்கு முதல் நாள் படுக்க எப்படியும், மணி பன்னிரெண்டு ஆகிவிடும். படுத்திருக்கும்பொழுது, தூக்கம் வராது. முதல் வெடி யார் போடுகிறார்கள் என்று காதை தீட்டிக் கொண்டு படுத்திருப்போம் இல்லையா? நான்கு மணிக்கு எழுந்து குளித்து, வெடிக்க ஆரம்பித்தால் இரவு வரை தொடரும்.
ஆறாவது படிக்கும்பொழுது. ஒரு தீபாவளியன்று காலை அப்பாவும் அம்மாவும் புது உடை உடுத்திக் கொண்டு சொந்தக்காரர்கள் விட்டுக்கு சென்றுவிட்டார்கள். அண்ணன் அப்பொழுது எட்டாவது. வெடிக்காத வெடிகளை பிரித்து அதன் மருந்தில் நெருப்பு வைக்க, அது சர் என்று விரலில் அடிக்க, கட்டை விரல் தோல் அப்படியே கழண்டு விட்டது. கீழே விழுந்து துடிக்கிறான். வீட்டில் பாட்டி மட்டும்.
அப்பொழுது தெரு மூனையில் மாடியில் ஒரு டாக்டர் புதியதாய் குடி வந்தது ஞாபகம் வர, நான் ஓடினேன். விஷயத்தைச் சொன்னதும் அழைத்து வர சொன்னார்கள். பிறகு முதலுதவி செய்துவிட்டார். அன்று ஏற்பட்ட பயம் இன்றுவரை போகவில்லை. அதற்கு பிறகு அண்ணன் வழக்கப்படி வெடிக்க ஆரம்பிக்க, பட்டாஸ் என்றால் அலர்ஜியாய் போய்விட்டது. தீபாவளி என்றால் விரும்பி வாங்குவது, நாற்றமும், புகையும் கக்கும் பாம்பு மாத்திரை மட்டுமே என் விருப்பம். பாம்பு மாத்திரையை லைனாய் வைத்து, நெருப்பு வைத்தால் அதிலில் இருந்து கருப்பாய் நெளிந்து நெளிந்து வரும். அம்மா எனக்கு என்று ஞாபகமாய் அதை வாங்குவார்.
அடுத்து நான் பெற்ற வாலு, நான்கு வயது இருக்கும்பொழுது, தீபாவளியன்று காலையில் மத்தாப்பூ கொளுத்த வைத்திருந்த மெழுகுவத்தி சட்டையில் பற்றிக்கொண்டு வயிறு முழுவதும் எரிந்துப் போனது. வீட்டில் நாம் எத்தனை ஜாக்கிரதையாய் பார்த்துக் கொண்டாலும், இது கீழ் வீட்டில் ஏற்பட்ட விபத்து. வாலு என்றேனே, இல்லை மகா வாலு என்று சொல்ல வேண்டும். லேசா அழுததுப் போல ஞாபகம். இத்தனைக்கும் கொப்புளமே வராமல், தோல் வழண்டுப் போயிருந்தது. ஆனால் காயத்தின் வடு இன்னும் மாறவேயில்லை.(ஒன்றரை வயதில் எடுத்த எனக்கு பிடித்த படம்)
இங்கு அமீரகத்தில் பட்டாசுகள் வெடிகள் வெடிப்பது சட்டப்படி தவறு. விற்பனையும் குற்றமே! தீபாவளியன்றும் பள்ளி, அலுவலகம் இருக்கும் என்பதாலும் தீபாவளியின் அருமை தெரியாமலேயே பிள்ளைகள் வளர்ந்தாகிவிட்டது. தெரியாத விஷயம் என்பதால் இழப்பு அவர்களுக்கு தெரியாது. ஆனால் ஒவ்வொரு வருடமும், அடுத்த வருஷமாவது நம் ஊரில் தீபாவளி கொண்டாட வேண்டும் என்று மனம் ஏங்கும். தீபாவளியன்று காலை புது உடை அணிந்து ஸ்வீட்டும் முறுக்குகளும் தின்றுக் கொண்டே தீபாவளி மலர் படிப்பது, நட்பு உறவினர்களின் புது உடை அலசல், பல கார பரிமாற்றம். பட்டாசுகளின் சத்தம்,
புகை நாற்றம்... பார்க்கலாம், அடுத்த வருடம்...
அனைவருக்கும் தீபாவளி மற்றும் ரமலான் வாழ்த்துக்கள்.
15 பின்னூட்டங்கள்:
படம் ஏற மறுக்கிறது. தனியாய் போடுகிறேன்
தீபாவளி நல் வாழ்த்துக்கள்....
உங்களுக்கும், உங்கள் குடும்பத்தாருக்க்கும் உங்கள் முதலைக்கும் குதிரைக்கும்..
அட எல்லாருக்கும்.
நல்ல பகிர்தல்
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார்களுக்கும் என் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.
தீபாவளி நல்வாழ்த்துகள்...
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!!!!
இது ரெண்டாவது வருஷங்க வெறும் வாயால வாழ்த்து மட்டும் சொல்லி தீபாவளிய கொண்டாடறது.
//ஆனால் ஒவ்வொரு வருடமும், அடுத்த வருஷமாவது நம் ஊரில் தீபாவளி கொண்டாட வேண்டும் என்று மனம் ஏங்கும்.//
உண்மை.
:-)
தீபாவளி வாழ்த்துக்கள்.
=இஸ்மாயில் கனி
ஜித்தா, சவுதி அரேபியா
உஷா!
இனிய தீபாவளி வாழ்த்துக்கள்
யோகன் பாரிஸ்
இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!!
உஷா ,முடிந்தால் கோதுமை அல்வா recipe முழுவதுமாக குடுங்களேன்..:)
சதயம், சிறில், நிலவு, சரவணன், வைசா, யோகன், மணியன் நன்றி.
நன்மனம், அடுத்த வருடம் ஊரில் இருப்பேன் என்று கனா கண்டுக் கொண்டு இருக்கிறேன்.
இஸ்மாயில் கனி, பெரு நாளுக்கு ஊருக்குப் போறீங்களா?
அனாமிகா, செய்யும் முறை அவ்வளவுதாங்க. கிண்டுவதில்தான் இருக்கிறது. அதை நினைத்தால்
பயமாய் இருக்கிறது. குக்க்ர் அல்வா, முயற்சிக்கலாம் என்று இருக்கிறேன். கட்டாயம் செய்துப் பார்த்து ரெசிபி, படத்துடன் போடுகிறேன்.
பெருநாளைக்கு ஊருக்கு போகவில்லை. வருடம் தோறும் கிடைக்கும் 1 மாத விடுமுறை 4 மாதத்திற்கு பிறகு கிடைக்கும். அப்போது தான் செல்லவதற்கு உள்ளேன்.
="குடந்தை" இஸ்மாயில் கனி
ஜித்தா, சவுதி அரேபியா
நல்லா எழுதியிருக்கீங்க....நம்மூர் ஸ்டையிலில் தீபாவளி கொண்டாட முடியவில்லையே என்ற ஆதங்கப்பதிவுக்கு பின்னூட்டம் அனைத்தும் "தீபாவளி வாழ்த்துக்கள் " :)
ச.சங்கர், எனக்கு அதே எண்ணம்தான். பதிவைப் படிக்காமலேயே தீபாவளி வாழ்த்தை கிளிக்கிட்டாங்களா என்று :-)
இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.
இனிய தீபாவளி வாழ்த்துகள் உஷா. இந்த முறை நீங்கள் என்ன பலகாரம் செய்தீர்கள்? கோதுமை அல்வாவா? அதிரச உளுந்து வடையா?
அதிரசம்ங்குற பேர்லயே இருக்குது அதோட ருசி. ஊர்ப்பக்கம் சுடுவாங்க.சிறுசு. நடுத்தரம். பெருசு. ஓட்ட போட்டது. போடாததுன்னு. தீபாவளிக்குன்னே உள்ள பண்டம் அது. உள்ள மெத்துன்னு இருக்கனும். தொலி தனியா வரனும். அதுதான் சிறப்பான அதிரசம். கிராண்டு ஸ்வீட்சில் கிடைக்கிறதே. நானும் முன்பெல்லாம் சென்னைக்குப் போகும் பொழுதெல்லாம் வாங்குவேன். இப்பொழுது இனிப்புகளையே குறைத்து விட்டதால்....அதிரசமும் குறைந்தது.
Post a Comment
<< இல்லம்