Sunday, October 15, 2006

அவமானப்படுத்தும் தமிழ் சினிமா பொறுக்கிகள்!

இதோ முழு செய்தி.
நன்றி ஜூனியர் விகடன் 18- 10- 2006

------------------------------------------

பொங்கியெழும் திருநங்கை வித்யா...

அவமானப்படுத்தும் தமிழ் சினிமா பொறுக்கிகள்!


எதை இழக்கிறோம் என்ற மயக்கத்தில்,

அனஸ்தீஸ்யா இல்லாமலேயே

அறுத்துக் கதறும் நொடியிலும்...

செருப்புக்கு அடியில் தன்மானத்தை

மலமென்றே மிதித்தபடி,

கைநீட்டி கேவலப்பட்டு நிற்கும் நாட்களிலும்...

வன்மத்துடன் நுழையும் குறியால் மூச்சுமுட்ட,

நுரையீரல் திணறி நிற்கும் நாட்களிலும்...

எதற்கென்றே புரியாமல் எங்களை நோக்கி உமிழப்படும்

வீச்சமடிக்கும் எச்சில்களைக் கேட்கிறேன்...

மரணம் மட்டுமா மரணம்..?

&அரவாணிகளின் வாழ்க்கையை இப்படி கவிதைக்குள் அடைக்க முயன்றிருப்பவரும் ஒரு அரவாணிதான். மதுரையில் வசிக்கும் லிவிங் ஸ்மைல் வித்யா என்பவர்தான் அந்தக் கவிஞர். ‘வாழ்க்கையில்தான் புன்னகை இல்லை... பெயரிலாவது இருக்கட்டுமே என்று எண்ணியதன் விளைவுதான் பெயருக்கு முன்னால் லிவிங் ஸ்மைல்!

இணைய வலைதளத்தில் தனக்கென பிளாக் எனப்படும் பிரத்யேக வலைப்பக்கத்தை (ஷ்ஷ்ஷ்.றீவீஸ்வீஸீரீsனீவீறீமீ.தீறீஷீரீsஜீஷீt.நீஷீனீ) வைத்திருக்கும் வித்யா& தீவிர இலக்கிய ரசனை, சினிமா ரசனை என வித்தியாசமான முகம் காட்டுகிறார். இப்போது இவரது கோபம் கமல்ஹாசன் மீதும், வேட்டையாடு விளையாடு படத்தின் டைரக்டர் கௌதம் மீதும்தான். அந்தப் படம் பற்றி தன் பிளாக்&கில் மிகக் கடுமையான விமர்சனம் ஒன்றை எழுதியிருக்கும் வித்யா, திருநங்கைகள் (அரவாணிகளை இப்படிதான் சொல்லவேண்டும் என்கிறார் வித்யா) வேட்டையாடு விளையாடு படத்தில் மிகவும் கேவலமாக சித்திரிக்கப் பட்டிருப்பதை எதிர்த்து வழக்குப் போடவும் தயாராகிவிட்டார். இந்த விவகாரம் வலைதளத்தில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் வித்யாவைச் சந்தித்தோம். மனதின் வலி வார்த்தை களில் தெறிக்கப் பேச ஆரம்பித்த வித்யா, எனக்கு விவரம் தெரிந்து சினிமா பார்க்கத் தொடங்கிய நாளிலிருந்து திருநங்கைகளை அவமானப்படுத்துவதை தங்களது தார்மீக உரிமையாகவே தமிழ் சினிமாவினர் செய்து வருகின்றனர். சிலர் மட்டும் இதற்கு விதிவிலக்கு. இயக்குநர் மணிரத்னம் பம்பாய் படத்திலும், சித்திரம் பேசுதடி திரைப்படத்தில் இயக்குநர் மிஸ்கினும் எங்களைக் கண்ணியமாக சித்திரித்திருந்தனர். அதிலும் மிஸ்கின் மிக நன்றாக திருநங்கைகளைத் தன் படத்தில் காட்டியிருந்தார். ஆனால், திருடா திருடி, கில்லி உள்ளிட்ட பெரும்பாலான திரைப்படங்கள் எங்களை மலினமாகத்தான் காட்டியிருக்கின்றன. சமீபத்தில் திரைக்கு வந்திருக்கும் வேட்டையாடு விளையாடு சினிமா இதற்கு மோசமான சாட்சி.

அந்தப் படத்தின் காட்சிப்படி திருநங்கை ஒருவர், தனது காம இச்சையைத் தீர்த்துக் கொள்வதற்காக வாரந்தவறாமல் குறிப்பிட்ட போலீஸ் ஸ்டேஷனுக்கு வருவார். அவருக்கு உதவுவது அந்த ஸ்டேஷன் இன்ஸ்பெக்டரின் கடமைகளில் ஒன்று. அதன்படி அந்தவாரம் வருகை தரும் திருநங்கைக்கு லட்டாக அமைகின்றனர், லாக்&அப்பில் அடைக்கப்பட்டிருக்கும் இரண்டு கல்லூரி மாணவர்கள். திருநங்கையைப் பார்த்து மாணவர்கள் இருவரும் அலற, அய்... இந்தப் பக்கம் செவப்பு... அந்த பக்கம் கறுப்பு... என்று அவர்களைப் பார்த்து இச்சையோடு சொல்லி, வன்புணர்ச்சிக்கு அவர்களை உள்ளாக்கிக் காரியம் முடிக்கிறார் திருநங்கை. க்ளோஸ்&அப்பில் கைதிகள் இருவரும் அலறுவதாகக் காட்சி முடிகிறது. வேறொரு காட்சியில் ..த்தா... அந்த அலியை அப்பவே கொல்லணும்னு நெனச்சேன்... என்பதாக வசனம் வேறு. படத்தின் ஆரம்பத்தில் கமல் அறிமுகமாகும் காட்சியில், வில்லனின் ஆண்மையைக் கேள்விக்குள்ளாக்கும் விதமாக, நீ ஒரு பொட்டை என்று வசனம் பேசுவார். இப்படி ஆரம்பம் முதல் முடிவு வரை திருநங்கைகள் அப்படத்தில் மிகக் கேவலமாகக் காட்டப்பட்டிருக்கின்றனர். வரிசையாகத் தனது படங்களில் விதவிதமான கிரிமினல்களைக் காட்டிவரும் இயக்குநர் கௌதம், இப்படத்தில் பாலியல் வெறிபிடித்ததுபோல் திருநங்கையைக் காட்டியுள்ளார்.

இதேபோல், சில்லுன்னு ஒரு காதல் சினிமாவில் விபசாரி என நினைத்து, அரவாணிகளிடம் நடிகர் வடிவேலு சென்றுவிடுவதாகவும், அவர்கள் அவரை மிரட்டிப் பணம் பறிப்பதாகவும் காட்சி வருகிறது. அதுமட்டுமல்ல... படம் நெடுக இங்க பூரா இவிய்ங்களாதான் இருக்காய்ங்க... என்ற ரீதியில் திருநங்கைகளை ஆணாகவே பாவித்து வசனம் பேசுகிறார் வடிவேலு. குறைந்தபட்சம் ஒரு அலியாகக்கூட பாவிக்கவில்லை.

குடும்பத்தாலும் சமூகத்தாலும் புறக்கணிக்கப்பட்டு, வாழ வழியின்றி பிச்சையெடுக்கவும் விபசாரம் செய்யவும் விதிக்கப்பட்டிருக்கிறது எங்கள் வாழ்கை. இதைப்பற்றி எந்த அக்கறையுமின்றி சட்டாம் பிள்ளைத் தனமான பொதுபுத்தியோடு இம்மாதிரியான திமிர்பிடித்த வேலையை நீண்ட காலமாக செய்துவருகின்றனர், தமிழ் சினிமா பொறுக்கிகள். மாதத்துக்கு ஒரு காதலி, வேளைக்கு ஒரு பெண் என்று வாழும் கலை விபசாரர்களான அவர்களைப் பொறுத்தவரை, திருநங்கைகள் சோத்துக்கு சிங்கியடித்து சாகவேண்டும். அதைவிடுத்து பிச்சை எடுத்து வாழ்வதும், விபசாரம் செய்து பிழைப்பதும் அந்தக் கூத்தாடிகளுக்கு கேவலமானதாகவும் அருவருப்பானதாகவும் தெரிகிறது. நாங்கள் ஏன் இந்த இழிநிலைக்கு தள்ளப்பட்டோம்..? அதற்குக் காரணம் யார் என்பதுபற்றி யாருமே யோசிப்பதும், பேசுவதுமில்லை. உலகம் ஒப்புக்கொண்ட யோக்கியமான வழிகளில் வாழ நாங்கள் முயலும்போதெல்லாம் எச்சில் உமிழ்ந்து, எட்டி உதைக்கும் சமுதாயத்துக்கு எங்களின் வாழ்கை முறையை விமர்சிக்க எந்த தகுதியும் இல்லை. ஆனால், சினிமாவில் மற்றவர்களைப்போல் அல்லாமல் உலக இலக்கியம், சமூக அக்கறை என்று பேசும் கமல் எப்படி இத்தகைய காட்சி அமைப்புக்கு ஒப்புக்கொண்டார்? தமிழில் பெயர் வைத்தால் வரிவிலக்கு என அறிவிக்கும் மாநில அரசும், சினிமாவில் சிகரெட் பிடித்தால் தவறு என வாதிடும் மத்திய சென்ஸார் போர்டும், சாதாரண விஷயங்களுக்கெல்லாம் கொடிபிடிக்கும் மனித உரிமை அமைப்புகளும் இந்த விஷயத்தைக் கண்டுகொள்ளாதது ஆச்சர்யம்தான். ஒருவேளை, அவர்களெல்லாம் இவர்கள் கண்ணோட்டத்தில் மனிதர்களுக்காக மட்டும்தான் போராடுவார்களோ என்னவோ..!

சினிமாவின் மீது தீரா காதல் கொண்டு உலகின் தரமான சினிமாக்களைப் பார்த்தும், அதுபற்றிய புத்தகங்களைப் படித்தும் வருபவள் நான். இப்போது இதுபோன்ற சினிமாக்களால் மனம் நொந்து கிடக்கிறேன். என் கோபத்தை பிளாக்கில் எழுதியதைப் படித்துக் கருத்துச் சொன்ன பலபேர், நான் நாகரிகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்தியிருப்பதாகச் சொன்னார்கள். இந்தப் பேட்டியிலும்கூட கண்ணியமற்ற வார்த்தைகளைக் கையாண்டிருப்பதாகப் பலர் சொல்லக்கூடும். அப்படிச் சொல்லும் ஒவ்வொருவரின் சமூக அக்கறை குறித்தும் நான் சந்தேகப்படுகிறேன். வார்த்தைகளின் நாகரிகம் குறித்துப் பேசும் யாரும், நரகமாகிக் கிடக்கும் எங்கள் வாழ்க்கையைப் பற்றி யோசிப்பதில்லை. தன்னைப் புனிதமாகக் காட்டிக்கொள்ளும் இந்த சமூகம், தனது ஈனச் செயல்களை ஒருபோதும் தவறென்று ஒப்புக் கொள்ளாது. ஆகவேதான் நான் உணர்ச்சியுள்ள ‘பொட்டை’ என்பதை சினிமா பொறுக்கிகளுக்குக் காட்டவாவது ‘வேட்டையாடு விளையாடு’ படத்தின் மீது வழக்குப் போடப் போகிறேன்’’ என்று பொங்கி முடித்தார் ‘லிவிங் ஸ்மைல்’ வித்யா. & பாரதி தம்பி
படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

26 பின்னூட்டங்கள்:

At Sunday, 15 October, 2006, சொல்வது...

முதலில் செய்திமட்டும் போட்டேன். ஆனால் பிளாக்கர் முழுங்கிவிட்டது. நன்றி என்று சொல்லி காப்பி, பேஸ்ட் செய்து போட்டுவிட்டேன். இப்படி எடுத்துப் போடலாமா என்று தெரியவில்லை :-)

 
At Sunday, 15 October, 2006, சொல்வது...

சதயம்,
நானும் ஒரு கமெண்ட் போட்டு இருந்தேன். நான் பார்த்தவரையில் வித்யா அதை பப்ளிஷ் செய்யவில்லை. ஒருவேளை கமெண்ட் மாடரேஷனில் மாட்டிக் கொண்டு இருக்கலாம்.
சொன்ன கருத்து ஏறக்குறைய இதுதாந் " இப்பொழுது நன்றாக ஓடும் படம், வழக்கு என்று ஆரம்பித்தால் பிய்த்துக் கொண்டு ஓடும் என்பதுதான்"

ஆனால் படம் வந்தவுடனே வழக்கு என்றால் மிக நல்ல பயன் தரும். இனி போட்டும் இருவருக்கும் உபயோகமில்லை என்பது
என் கருத்து. ஆனால் பொது ஊடகத்தில் தன் கருத்தை பலமாய் ஒலிக்க செய்தது, கொஞ்சம் சிந்திக்கவாவது செய்வார்கள்
என்று நம்புகிறேன்.

 
At Sunday, 15 October, 2006, சொல்வது...

ம்ம்ம்.........

 
At Sunday, 15 October, 2006, சொல்வது...

நான் போட்டிருந்த பின்னூட்டமும் வெளியிடப்படவில்லை. எவ்வளவு மனவருத்தம் இருந்தாலும் நல்ல வார்த்தைகளில் வெளிப்படுத்தலாம் என்பதையே நான் சொல்லி இருந்தேன். இனிய உளவா.......

 
At Sunday, 15 October, 2006, சொல்வது...

ஜாஸ்மின் மேடம்,

பிளாகையும் அச்சு ஊடகங்களையும் ஒப்பிட முடியாது. உஷா அவர்களின் இந்தப் பதிவைப் பார்த்துவிட்டுத்தான்

நான் ஜூ.வி ஒன்றை வாங்கினேன். அதற்கு என்ன சொல்கிறீர்கள்? அவரது இந்தப் பதிவி ஜூ.விக்கு ஒரு விளம்பரம்தானே!

 
At Sunday, 15 October, 2006, சொல்வது...

சமுதாயத்தில் தங்களுக்கு உரிய மரியாதை கிடைக்கவில்லையே என்ற கோபத்தில் அவர்கள் அவ்வாறு எழுதியிருக்கின்றார்கள். அவர்களின் கோபம் நியாயமானது. ஆனால் வார்த்தைகளை கொஞ்சம் யோசித்து வெளியிட்டிருக்கலாம்...

 
At Sunday, 15 October, 2006, சொல்வது...

//இது குறித்த எனது பதிவிற்கு அவர் இன்னமும் பதில் சொல்லவில்லை...ம்ம்ம்ம்ம் //
சதயம், உங்கள் பதிவின் திரண்ட கருத்து இந்தக் கட்டுரையில் முடிந்து விட்டதாகத் தோன்றுகிறதே? நாம் எல்லாரும் விரும்பியபடி, ஸ்மைலி இதை இன்னும் பெரிய வட்டத்துக்கு எடுத்துச் சென்றிருக்கிறாரே, இன்னும் நல்ல விதமாக!

 
At Sunday, 15 October, 2006, சொல்வது...

//ஸ்மைலி இதை இன்னும் பெரிய வட்டத்துக்கு எடுத்துச் சென்றிருக்கிறாரே, இன்னும் நல்ல விதமாக!
//

உண்மைதான் பொன்ஸ்! ஜூ.வி யில் இவர் கூறியிருந்தவற்றை அப்படியே வெளியிட்டார்களா? அல்லது பத்திரிகை நாகரீகம் கருதி எடிட் செய்தார்களா என்று ஜூவிக்கும், வித்யா அவர்களுக்குமே வெளிச்சம்.

எனினும் அவரது எதிர்ப்பு வழக்கு என்னும் வரை சென்றதில் அனைவருக்கும் மகிழ்ச்சியே! இது சமூகத்தில் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டுமேயன்றி திரைப்படத்துக்கான விளம்பரமாக அமைந்துவிடக் கூடாது.

ஜூவியில் மட்டுமின்றி இன்னும் பல ஊடகங்களுக்கும் சென்றடைந்திருக்க வேண்டிய விஷயம் இது. அப்படி சென்றடையாததான் காரணம் என்னவென்று யோசிப்பாரா லிவிங்க்ஸ்மைல்?

 
At Sunday, 15 October, 2006, சொல்வது...

:-)))

 
At Sunday, 15 October, 2006, சொல்வது...

ஜிரா ம்ம்ம்ம் பொருள் புரிகிறது.

இ.கொ. பொன்ஸ், சிபி, சில நேரங்களில் சில கோபங்கள்
அவசியமே. வார்த்தைகள் எழுத்தாளர்களின் மனநிலைமையை வெளிப்படுத்துகின்றன. இப்படி எழுதலாம் அப்படி எழுதலாம் என்பதை
அவரவர்தான் முடிவு. ஆண்டாண்டாய் அவமானப்படுத்தப்பட்டு சமூகத்தில் சேரவிடாமல் ஒடுக்கப்பட்டவர்களின் புரட்சி குரலாய் வித்யாவைப் பார்க்கிறேன். அவர் வலி அவருக்கு! மெல்ல சொல்லு நாகரீகமாய் பேசி என்பதெல்லாம் கவைக்கு உதவாத
வாதம். தலைப்பில் இருந்த ஆங்கில கெட்ட வார்த்தை மட்டும் அதிகம் என்பது என் கருத்து.

ஜாஸ்மின், முதலில் செய்தியைப் போட்டேன். அதை பிளாக்கர் முழுங்கிவிட்டது. பிறகு பலரும் இபப்டி நன்றி சொல்லிவிட்டு,
காப்பி, பேஸ்ட் செய்வது நினைவுக்கு வந்து எடுத்துப் போட்டேன். விஷயதானம் என்பது சரியே, எடுத்துப் போட்டது தேன்கூட்டில் முதலில் வந்து நிற்கிறது. மாய்ந்து மாய்ந்து எழுதியது என்றைக்காவது முதல் இடம் பெற்றதா என்று யோசிக்கிறேன் :-)

ஜாஸ்மின் இந்த மேடம் வேண்டாமே, வயசாத பீலிங் வருது :-)

நிலவு அதே அதே!

லக்கி, உங்கள் புன்னகையைப் பார்த்து நான் புன்னகைக்கிறேன் :-)

 
At Sunday, 15 October, 2006, சொல்வது...

//ஜாஸ்மின் இந்த மேடம் வேண்டாமே, வயசாத பீலிங் வருது :-)//

:-) எ.பி: வயசான,

 
At Sunday, 15 October, 2006, சொல்வது...

//தலைப்பில் இருந்த ஆங்கில கெட்ட வார்த்தை மட்டும் அதிகம் என்பது என் கருத்து//

அதைத்தானே அனைவரும் சொல்கின்றனர் உஷா அவர்களே!

மற்றபடி அவரது குரல் பலமாக ஒலிக்கவேண்டும். இது போன்ற (நாகரீகமின்மை) காரணங்களால் அவரது குரல் செவிமடுக்கப்படாமல் போய்விடக் கூடாது என்றுதான் சொல்கிறோம்!

 
At Sunday, 15 October, 2006, சொல்வது...

//பொன்ஸ், சில நேரங்களில் சில கோபங்கள்
அவசியமே. வார்த்தைகள் எழுத்தாளர்களின் மனநிலைமையை வெளிப்படுத்துகின்றன. இப்படி எழுதலாம் அப்படி எழுதலாம் என்பதை
அவரவர்தான் முடிவு. ஆண்டாண்டாய் அவமானப்படுத்தப்பட்டு சமூகத்தில் சேரவிடாமல் ஒடுக்கப்பட்டவர்களின் புரட்சி குரலாய் வித்யாவைப் பார்க்கிறேன். அவர் வலி அவருக்கு! மெல்ல சொல்லு நாகரீகமாய் பேசி என்பதெல்லாம் கவைக்கு உதவாத
வாதம். தலைப்பில் இருந்த ஆங்கில கெட்ட வார்த்தை மட்டும் அதிகம் என்பது என் கருத்து.
//
உஷா, இந்த விஷயத்தில் நான் இதுவரை பொதுவில் கருத்து சொல்லவே இல்லை.. நண்பர்கள் சிலரிடம் பேசியதோடு சரி.

என்னைப் பொறுத்தவரை, லிவிங் ஸ்மைலின் கட்டுரையில் மாற்ற வேண்டிய சொல்லோ, குறைக்க வேண்டிய உணர்வோ எதுவுமே இல்லை என்பது தான் என் எண்ணம். பாதிக்கப்பட்டவரால் எழுதப்பட்டது என்பதை அவர்களின் பக்கத்திலிருந்து பார்க்கும் போது அதில் குற்றம், குறை சொல்ல எதுவுமே இல்லை.

"இப்படிச் சொல்லி இருக்கலாம், இந்தச் சொல்லைப் பயன்படுத்தி இருக்கலாம்" போன்ற அறிவுரைகளை விலக்கிவிட்டு, வேறு எந்த விதத்தில் இதை இன்னும் பரவலாக்கலாம் என்று சிந்திக்க வேண்டியது தான் நண்பர்கள் என்ற முறையில் நாம் செய்யக் கூடியது. - மொழிபெயர்ப்பாளர்களின் வேலையைப் போல, யாருக்கு எப்படிச் சொன்னால் புரியுமோ, உறைக்குமோ, முகம் சுளிக்காமல் கருத்துக்குள் புகவைக்குமோ, அப்படியான சொற்களில் இதை எடுத்துச் சொல்வது..

"செய்வாரா?" என்பதை "செய்யுங்களேன்" என்றுச் சொல்லிப் பார்ப்போமே, அது எடுத்துக் கொள்ளப்படும் விதமே வேறு!

 
At Sunday, 15 October, 2006, சொல்வது...

//அவர் வலி அவருக்கு! மெல்ல சொல்லு நாகரீகமாய் பேசி என்பதெல்லாம் கவைக்கு உதவாத
வாதம். //

அவர் தவறான வார்த்தைகளை பயன்படுத்திவிட்டார் என்று சொல்லும் அனைவருக்கும் அவர் அப்படி சொன்னதால் என்ன கஷ்டம் என்று பாருங்கள். யாருக்கும் ஒரு கஷ்டமும் இல்லை.

பின் ஏன் அப்படி சொல்கிறார்கள்?
அப்படி சொல்பவர்கள் அனைவரும் அவரை/ அவரது கருத்துக்களை முழுமையாக ஆதரிப்பவர்கள்.

அவரது மரணம் மட்டுமா மரணம் என்ற கவிதை படித்திருப்பீர்களே! அதை அனைவரும் பாராட்ட வில்லையா! அக்கவிதை எந்த அளவுக்கு வீரியம் மிக்க வார்த்தைகளாள் புனையப்பட்டது. அதனை வரவேற்ற சக வலைப்பதிவர்கள், இப்போது விமர்சிக்கிறார்கள் என்னும்போது சற்றேணும் யோசித்துப் பார்க்க வேண்டும். அதைவிடுத்து விமர்சிப்பர்களின் சமூக அக்கறை குறித்து சந்தேகப்படுவது எவ்விதத்தில் சரி?

 
At Sunday, 15 October, 2006, சொல்வது...

//விமர்சிப்பர்களின் சமூக அக்கறை குறித்து சந்தேகப்படுவது எவ்விதத்தில் சரி?//

சமூக அக்கறை குறித்து சில பேர் புதியதாக சர்ட்டிபிகேட் கொடுக்க கிளம்பியிருக்கிறார்கள். எனக்கும் ஒரு சர்ட்டிபிகேட் கிடைக்குமா? :-))

 
At Monday, 16 October, 2006, சொல்வது...

1. கண்டிப்பாக (முகம் சுளிக்க வைக்கும் )எனது பதிவை கௌதம் விளம்பரமாக்க முடியாது. ஏனெனில் கட்டுரையின் கட்டமைப்பு அப்பிடி...

2. சதயம் கேட்ட கேள்விகளுக்கு தனி மடலாக அவரது ப்ளாக்கில் சென்று தந்திருந்தேன். "வேறுஒருவர் இது தவறுதலாக வந்துள்ள பதில் எனக்கானதல்ல " என்று பதில் மெயில் அனுப்பினார். திரும்ப திரும்ப செக் செய்தும் சரிவராத காரணத்தால். மெற்கொண்டு முயற்சி செய்யவும் இல்லை. இ.கொக்கும் ஒரு தனிமடல் அனுப்பியிருந்தேன். but, sorry உஷா மேடம், உங்களுக்கு பதில் தர நினைத்தும் வேலைப் பளுவில் முடியாமல் போனதற்காக வருந்துகிறேன். (ecr போன்ற,சிலர் மிக மிக மட்டமான வார்த்தைகளால் கூட எனக்கு கமெண்ட் அனுப்பியதை நான் சொல்லப் போவதில்லை..)

3. கண்டிப்பாக இது போன்ற மட்டரகமான காட்சிகள் சட்ட ரீதியாக இனி தடை செய்யப்பட வேண்டும் என்பதே என் நோக்கம். கமலோ, கௌதமோ தண்டிக்கப்பட வேண்டும் என்று ஒருபோதும் நான் நினைக்கவில்லை. (எனக்கு தெரியும் நான் இருப்பது இந்தீயாவில் என்று) ஆக, சென்ஸார் போர்டுக்கு வேண்டுகோள் விடுக்கும் பொறுட்டு ஒரு பொது நலவழக்கு பதிவு செய்வது தான் எனது திட்டம்.. (பணப்பற்றாக் குறை தான் இதற்குக் காரணம் - கவனம் இதற்காக, நான் யாரிடமும் பண உதவி கேட்கவில்லை. ஏனெனில் இதயும் சதயம் விளம்பரம் என்று சொல்லலாம்)

3. மேலும், நான் ஜீ.வி.யில் சில்லுனு காதல் படத்தை குறித்து கொஞ்சமும், வேறு சில (நீங்கள் விரும்பக்கூடிய) கண்ணியமான/பரிதாபமான வார்த்தைகளும் சேர்த்துத்தான் தந்திருந்தேன். எடிட்டோரியலில் சில மாயம் ஆகிவிட்டது.. மேற்படி தகவலுக்கு அடுத்த மாதம் புதிய கோடாங்கி படிக்கவும் (Not yet confirmed)

 
At Monday, 16 October, 2006, சொல்வது...

மற்றபடி நன்றியையும் சொல்லிக் கொள்கிறேன்.

 
At Monday, 16 October, 2006, சொல்வது...

//அப்படியே எனக்கும் ஒரு சர்ட்டிஃபிகேட் வாங்கிக் கொடுங்க...புண்ணியமாப் போகும்...ஹி..ஹி...
//
சதயம், உங்களுக்கு சர்டிபிகேட் கொடுப்பது ரொம்ப கஷ்டம்ங்க..

ஒரு இடத்துல சாய்பாபாவைப் பற்றிப் பேசுபவர்கள் எல்லாரும் குப்பையைக் கிளறும் பன்றின்னுவீங்க (நாகரிகமான மொழியில்?!), அதே சகோதரி லிவிங் ஸ்மைலின் சொற்கள் இன்னும் நாகரிகமாக இருக்கவேண்டும்னுவீங்க.. கொஞ்சம் கஷ்டம் தான்...

- இதை வைத்து விவாதம் தொடங்க விரும்பாததால், :)))) போட்டுக்கிறேன்..

 
At Monday, 16 October, 2006, சொல்வது...

//ஒரு இடத்துல சாய்பாபாவைப் பற்றிப் பேசுபவர்கள் எல்லாரும் குப்பையைக் கிளறும் பன்றின்னுவீங்க //

அப்படியா?

நண்பர் சதயமின் அந்த பதிவு லிங்க் கொடுங்களேன்... ப்ளீஸ்...

 
At Monday, 16 October, 2006, சொல்வது...

//- இதை வைத்து விவாதம் தொடங்க விரும்பாததால், :)))) போட்டுக்கிறேன்.. ////



மீண்டும் இணைய நாரதர் வேலை ஆரம்பித்தற்கு நன்றி.

ரொம்ப குசும்புங்க பொன்ஸ்...

 
At Monday, 16 October, 2006, சொல்வது...

உஷா, வித்யாவின் பேட்டியை இங்கே அளித்ததற்கு நன்றி. மிக பொருத்தமான வார்த்தைகளில், கோபம் சொல்ல வரும் கருத்தை விழுங்கிவிடாவண்னம் தெளிவான மொழியில் அளித்திருக்கிறார். இதற்கு நம்மால் இயன்ற தார்மீக ஆதரவை தருவதற்கு மேல் சொல்ல வேறு எதுவும் இல்லை.

 
At Monday, 16 October, 2006, சொல்வது...

பொன்ஸ், சிபி! நம்ம சினிமா ஆட்களிடம் எனக்கு பெரிய மரியாதை இல்லை. அதனால் வித்யா சொன்ன வார்த்தை தவிர்த்திருக்கலாம் என்று சொன்னேனே தவிர, ஏன் இப்படி எழுதினீங்க என்றெல்லாம் அறிவுரை
சொல்ல மாட்டேன்.

வித்யா, படம் ரிலீஸ் ஆன மறுநாள் இந்த பதிவுப் போட்டு பத்த்ரிக்கையில் வந்திருந்தால் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டுதான்.
அனைத்து ஊடகங்களிலும் உங்க பேரூ வந்திருக்கும் ;-) இதுவும் ஒரு விளம்பரம்தாங்க. உங்க தலைப்புடனேயே வந்திருக்கும் :-)
அந்த வார்த்தைக்கு யாரும் கவலைப்பட்டிருக்க மாட்டார்கள், படம் ஓடுதா அடுத்த படத்துக்கு அட்வான்ஸ் வாங்கினமோ என்று போய் கொண்டே இருப்பார்கள்.

பின்னுட்டம் இட்டவர்கள் அனைவருக்கும் நன்றி.

 
At Monday, 16 October, 2006, சொல்வது...

avruku vera velai illai ..ungalaukum vera velai illai

 
At Monday, 16 October, 2006, சொல்வது...

கறுத்துஇன்னா செய்தவக் கண்ணும் மறுத்தின்னா
செய்யாமை மாசற்றார் கோள்.

எதோ பொதுவா இந்தக் குறளைச் சொல்லணும் போல இருந்தது. எதோ அவர் திட்டினாருன்னு இவர் திட்ட இவர் திட்டனதை பத்தி இன்னொருத்தர் எடுத்துக் காட்டோட திட்ட மொத்ததில இந்தப் பின்னூட்டம் எனக்குத் தேவையில்லாத வேலை.

 
At Monday, 16 October, 2006, சொல்வது...

இக்கட்டுரையை மீளப்பதிந்தமைக்கு நன்றி உஷா.
.....
பின்னூட்டத்தில் வசந்த கூறியதையே நானும் சொல்லவிளைவது.

 
At Monday, 16 October, 2006, சொல்வது...

வசந்த். டி.சே! எருதின் வலி காக்கைக்கு தெரியாது என்ற பழமொழி இங்கு சரியாய் இருக்குமில்லையா? சில விஷயங்கள்
எவ்வளவு எடுத்து சொன்னாலும் பிறருக்கு புரியாது, அவர்கள் புரிந்துக் கொள்ளவும் முயல மாட்டார்கள்.

சதயம், அந்த பதிவில் நான்கூட சாய்பாபாவை கிண்டல் அடிச்சிருக்கேன். நானும் பன்னியா:-(
நேத்து ஒருத்தரு, மரணதண்டனை வேண்டாம் என்று சொன்னவர்களை தூக்கில் போட வேண்டும் என்று பயமுறுத்தியிருக்கிறாரூ, நல்லா இருங்க :-)

 

Post a Comment

<< இல்லம்