Sunday, March 02, 2008

சுஜாதா- கோர்வையில்லாமல் சில எண்ணங்கள்

எழுபதுகளின் கடைசி என்று நினைக்கிறேன். ஜெமினி மேம்பாலத்தைத் தாண்டி பஸ் திரும்பும்பொழுது, ஜெமினி வளாகத்தில் பிரமாண்ட பேனர். சினிமா படத்திற்கான பேனர் இல்லை, ஆனந்தவிகடனில் "கனவு தொழிற்சாலை"தொடர்கதைக்கான விளமபரம் அது. இன்றுவரை ஒரு தமிழ் ஏழுத்தாளனுக்கு இந்தளவு அங்கிகாரம், பெருமை கிடைத்ததா என்று தெரியவில்லை. வயது முதிர்ந்து இயற்கை எய்திப்பொழுதும், வாசகர்கள் தன் வீட்டு இழவாய் துக்கம் கொண்டாடுவது இன்னும் ஒரு அதிசயம்.

மரண செய்திகள் மனத்தில் பல எண்ணங்களை தோற்றுவித்துவிடுகிறது. வயதானவர்கள் மரணம் என்றால் ஏதோ அவதிப்படாமல் போய் சேர்ந்தாச்சு என்று சினிக்கலாம் தோன்றும். கல்யாணம் ஆகி மூன்றாம் வருடம் கணவனை இழந்த பக்கத்துவீட்டு பெண், தற்கொலை செய்துக் கொண்ட உறவு பெண், இணைய அறிமுகத்தில் நட்புகளின் வீட்டு மரணங்கள்- இவை எல்லாம் இறந்தவர்களை விட அவர்களின் துணை, குழந்தைகள் எப்படி இந்த இழப்பை தாங்கிக் கொள்வார்கள் என்ற வேதனையே அதிகமாய் இருக்கும். ஆனால் முதன் முறையாய் கடந்த மூன்று நாட்களாய் உணர்வற்ற நிலைமை. இயந்திரமாய் வேலைகள் நடக்கின்றன. ஆனால் மனம் மறத்துப் போன உணர்வு. இணையத்தில் பதிவுகளை படிக்க படிக்க, தொண்டையில் ஒரு அடைப்பு. பின்னுட்டத்தில் கூட எங்குமே எதுவுமே சொல்ல தோன்றவில்லை. ஏன் இப்படி என்று என்னை நானே கேட்டுக் கொண்டேன்.

ஓரளவு விவரம் தெரிந்த நாளில் இருந்து, நாளும் அவர் எழுதியதைப் படித்துக் கொண்டிருந்திருக்கிறேன்.கொலையுதிர்காலமும், ப்ரியாவும், கனவு தொழிற்சாலையும், நிர்வாண நகரமும், பேசும் பொம்மைகளும், நிலா நிழலும், இருபத்தி நாலு ரூபாய் தீவும், ஸ்ரீரங்கத்து தேவதைகள் பழயதும் புதியதும், சிறுகதை எழுதுவது எப்படி என்ற சிறுக்கதை தொகுப்புகள், அறிவியல் கட்டுரைகள், க.பெ என அவர் எழுத்துக்கள் என்னை தொடர்ந்துக் கொண்டே இருந்தன. இனி அது தொடராது என்பதை அறிவு உணர்த்தும்பொழுது, வேதனை அதிகமாகிறது.

சில வருடங்களுக்கு முன்பு, அம்பல அரட்டையில் அறிமுகம் கிடைத்தது. எழுத்துக்களை பற்றி கேட்டுக் கொண்டு இருப்பேன். பாய்ஸ் வந்த நேரம், இந்த படத்திற்கு நீங்கள் வசனம் எழுதியிருக்கக்கூடாது என்றேன். கதை ரெண்டுங்கெட்டான் வயது பிள்ளைகளை தவறான பாதைக்கு திருப்பும் என்று வாதிட்டேன்.

எனக்கும் பிள்ளைகள் இருக்கிறார்கள் என்றார். உங்களுக்கு இருப்பது வளர்ந்த பிள்ளைகள், மேலும் உங்களுக்கு பெண் குழந்தையில்லை என்றேன். அதற்கு அவர் பதிலளிக்கவில்லை. ஆனால் என்மீது அவருக்கு கோபம் இருக்கிறது புரிந்து கேட்டேன். ஆனால் அந்த கோபம் விரைவில் போய்விட்டது. ஆனால் வியாழன் வெள்ளியாய் இருந்த அமீரக வார விடுமுறை, வெள்ளி சனியாய் மாறியதும், அம்பல அரட்டையில் நுழைய கணிணி கிடைக்காமல் போனது.

உயிர்மை முதல் ஆண்டு விழாவில் ராயர் காபி கிளப் குழு மூலமாய் அறிமுகமாயிருந்த வெங்கடேஷிடம், சாரிடம் என்னை அறிமுகப்படுத்த வேண்டும் என்றுக் கேட்டுக் கொண்டேன். இரண்டே நிமிடம் தான். அவ்வாண்டு விடுமுறையில் சென்னைக்கு வந்து, மகளின் கல்லூரி சேர்க்கைக்காக, ஐந்து மாதங்கள் சென்னையில் இருந்தப்பொழுது, தலை சுற்றும் அளவு குழப்பங்கள்.ஒரு நாள் மாலை பிரசன்னா, இணைய வாசகர்கள் சந்திப்பு நடக்கிறது வருகிறீர்களா என்றதும், ஓடினேன்.

வரும் விமர்சன தாக்குதல்களை எப்படி எதிர்கொள்கிறீர்கள்?,என்ன விருது கிடைத்துள்ளது (ஓரே ஒரு சிறுக்கதைக்கு,குங்குமத்தில் வந்தது. அதற்கு இலக்கிய சிந்தனை விருது கிடைத்ததாம். இத்தனை வாசக அபிமானிகளை பெற்றதைவிட பெரிய விருது என்ன இருக்க போகிறது) கவிதைகளைப் பற்றி, வாசிப்பு என்று சில கேள்விகள் கேட்டேன். அன்று எழுத்து பற்றி பேசிய பல விஷயங்கள், கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் எழுத்தாளராய் மாதவன் உரையாற்றுவாரே அது அவர் காரக்டர்தான். மகளின் படிப்பை பற்றி சொன்னதும் அவருக்கு மிகுந்த சந்தோஷம். நேஷனல் லா யூனிவர்சிட்டி பற்றி பேச ஆரம்பித்துவிட்டார். அன்று நுழைவு தேர்வு முடிவு வராததால், நானே பயத்தில் இருந்தேன். வயதின் காரணமாய் தளர்ந்து இருந்தாலும், மனதில் சுஜாதா என்றதும் உற்சாகமான இளைஞன், இளமையும் குறும்பும் ததும்பும் வசந்த் என்ற பிம்பம், தேசிகன் என்ன சாப்பிடுகிறீர்கள்? தோசையா என்றதும், "ஏதாவது பஜ்ஜீ, போண்டா கிடைக்குமா?" என்றதும் யதார்த்த உலகின் எழுபது வயது தாத்தாவாகிப் போனார்.

நுழைவு தேர்வு முடிவு வந்து மகளுக்கு இடம் கிடைத்ததும். அவ்வார சனிக்கிழமை அம்பலம் அலுவலகத்துக்கு போன் செய்து வரலாமா என்றுக் கேட்டேன்.மகன், மகள், தம்பியின் எட்டு வயது மகனுடன் போனோம். மகன், மகளுடன் ஒரு பத்துநிமிட பேச்சுகள். பேச்சு சுவாரசியத்தில் மகள், தனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை என்றதும், கமலஹாசனிடம் சொல்கிறேன் என்று ஜோக் அடித்தார். கம்ப்யூட்டர், இன் ஜினியரிங் என்று போகாமல் சட்டம் படிப்பதைக் குறித்து வாழ்த்தினார். படிப்பு, லட்சியம், தமிழ் படித்தல் என்று பேச்சு வளர்ந்தது. பிள்ளைகள் பேச்சை கேட்டு, அம்மாவுக்கு நன்றாக வளர்த்திருக்கிறாள் என்ற பாராட்டும் கிடைத்தது. எடுத்துக் கொண்டு போன காமிராவில் புகைப்படம் எடுத்துக் கொண்டோம்.

சென்ற வருடம் கலைமகள் பரிசு கிடைத்ததும், தேசிகனுக்கு மெயில் அனுப்பி சாரிடம் சொல்லவும். என்று மெயில் அனுப்பினேன். காலையில் இன் பாக்சில் அவரிடமிருந்து, ஒரு மெயில். இதை இங்கு சொல்லும்பொழுது, இதே போன்ற் வாழ்த்துக்களை, எழுத தூண்டும் ஊக்கங்களை பல புதுமுக எழுத்தாளர்களுக்கு வாரி வழங்கியிருக்கிறார் என்பது தெரிகிறது. கணையாழியின் கடைசி பக்கங்களும், கற்றதும் பெற்றதும் தொடரிலும் அவர் அறிமுகப்படுத்தியிராவிட்டால், கல்யாண்ஜியும், பசுவய்யாவும், ஞானகூத்தனும், அ.வெண்ணிலாவும் என் கண்ணில் படாமலேயே போயிருப்பார்கள்.

இதை மடிகணிணியில் தட்டிக் கொண்டு இருக்கும்பொழுது, தொலைக்காட்சியில் சிம்ரனின் சின்ன திரை விளம்பர நிகழ்ச்சி. முதல் கதையாய் "வண்ணத்து பூச்சி" எழுதியவர் சுஜாதா என்கிறார் சிம்ரன். வரிசையாய் தொடர் சம்மந்தமானவர்களின் படங்கள். நடுவில் சுஜாதா. நீங்கள் எங்கும் போகவில்லை சார். இன்னும் இன்றைய தலைமுறை வாசகர்கள் மனதில் ம வாழ்ந்துக் கொண்டு இருப்பீர்கள். கமலஹாசன், ஒருமுறை, எங்கள் தலைமுறை நடிகர்களிடம் சிவாஜிகணேசனின் தாக்கம் கட்டாயம் இருக்கும் என்றார். அதைப் போல இன்றைய தலைமுறை எழுத்தாளர்களிடம் உங்கள் தாக்கத்தைத் தவிர்க்க முடியாது. நீங்கள் வாழ்ந்த காலத்தில் நானும் வாழ்ந்தேன் என்ற சிறு நிறைவுடன் ,
உங்கள் வாசகி.

16 பின்னூட்டங்கள்:

At Sunday, 02 March, 2008, சொல்வது...

He is a role model for all who like to write something for tamil and science. No one can replace him in his simple style of expressing computer knowldge.

God rest his soul peace.

R. Kuppuraj
kuppuraaj2002@gmail.com

 
At Sunday, 02 March, 2008, சொல்வது...

//வாழ்த்துக்களை, எழுத தூண்டும் ஊக்கங்களை பல புதுமுக எழுத்தாளர்களுக்கு வாரி வழங்கியிருக்கிறார்/

உண்மைதான்!

கற்றதும் பெற்றதுமில்
சிறு வரிகளுக்கிடையில் சிதறும் சிரிப்புக்கள்!சிந்தனைக்கேற்ற வார்த்தைகள் என அவர் மட்டுமா கற்றார், பலரும் கற்பதற்கு, காரணமாகவும் இருந்திருக்கிறரே..!

 
At Sunday, 02 March, 2008, சொல்வது...

நீங்கள் அதிர்ஷடசாலி. அவரின் அறிமுகம் கிடைத்து இருக்கிறது.

மிக நிச்சயமாக தமிழ்நாட்டின் ஒரு முக்கிய அடையாளத்தை இழந்து இருக்கிறோம்.

Please see my post on.

http://kulambiyagam.blogspot.com

 
At Sunday, 02 March, 2008, சொல்வது...

மிக நிச்சயமாக தமிழ்நாட்டின் ஒரு முக்கிய அடையாளத்தை இழந்து இருக்கிறோம்.

Please see my post on

http://kulambiyagam.blogspot.com

 
At Sunday, 02 March, 2008, சொல்வது...

//தொண்டையில் ஒரு அடைப்பு. பின்னுட்டத்தில் கூட எங்குமே எதுவுமே சொல்ல தோன்றவில்லை. ஏன் இப்படி ??//

எனக்கு கூடத்தான். ஆனால் தேசிகன் தயவில் அவருடய "சொல்லப்படாத" விஷயகள் நமக்கு தெரிய வரும் பாருங்கள்..

 
At Sunday, 02 March, 2008, சொல்வது...

அருமையான நினைவுகள். கடைசிவரி இன்னும் அருமை.

அதேதான் நம்மில் பலரின் எண்ணமும்.

என்னுடைய 'பதிவுகளை' அவர் படித்து ஒரு கருத்துச் சொன்னதா ஒரு முக்கிய நண்பர் சொன்னார். எனக்கு அதுவே மனம் நிறைஞ்சிருந்தது.

 
At Sunday, 02 March, 2008, சொல்வது...

உஷா. தமிழில் எழுதத் தெரிந்த அனைவரின் எண்ணங்களையும் பிரதிபலிப்பதாக இருந்தது உங்கள் கடிதம். இருந்தாலும், நீங்கள் மோதிர விரலால் தொடப்பட்டுவிட்டீர்கள். பாக்கியசாலி. மிகவும் தயங்கி, ஒரு விஞ்ஞான (நெடுங்) கதை எழுதி, நண்பர்களிடம் காட்ட, "டேய், கட்டாயம் சுஜாதா சாருக்கு காட்டு, ரசிப்பார்," என்று சொல்லியும் என் நேரம் காலம் சரியாக அமைத்துக் கொள்ளாத போதாத காலம் அதி என் கணினியின் உள்ளேயே உட்கார்ந்து கிடக்கிறது! எங்கேனும் அவர் பெயரில் science fiction கதை போட்டி வைத்தால் அனுப்பலாம் என்று உத்தேசம். ஆனாலும் அவர் பார்க்கமுடியாதே! நான் கொடுத்து வைத்தது அவ்வளவு தான்!

 
At Sunday, 02 March, 2008, சொல்வது...

A fitting Obituary.

நேரில் பழக்கம் இல்லை என்றாலும் கூட, எத்தனை பேரை ஒரே மாதிரி பாதித்திருக்கிறார் இவர் என்பது ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. இன்னொரு பதிவு போட ஆவல் எழும்புகிறது.

RIP!

 
At Sunday, 02 March, 2008, சொல்வது...

குப்புராஜ். ஆயில்யன், கோகுல், துளசி, ரவியா, சுரேஷ், ஜெய. சந்திரசேகர் எல்லார் மனநிலையும் என் எண்ணத்தையே
பிரதிபலிக்கிறது இல்லையா?

கோகுல், கட்டாயம் படிக்கிறேன்.

துளசி, உங்கள் அதிருஷ்டம் எனக்கு இல்லை.

ரவியா, சரியாய் புரியவில்லை. ஆனால் ஆவியிலோ, குமுதத்திலோ அவரின் கடைசி பத்தி வரும் என்று ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறேன்.

ஜெய. சந்திரசேகர்,மோதிர குட்டு எனக்கும் கிடைக்கவில்லை. மூன்று ஆண்டுகளுக்கு முன்புதான் நேரில் பார்த்தேன். அப்பொழுதே மிக தளர்ந்து இருந்தார். மேலும் சினிமா வசனம், பத்திரிக்கைகளில் எழுதுவது போன்ற பிசியாய் இருந்தவரிடம் நான் எழுதுவதைப்பற்றி எல்லாம் சொல்லிக்கொள்ள தயங்கினேன். ஆனால் நானும் எழுதுகிறேன் என்று அவருக்கு தெரியும். என்றாவது
என் கதையை படிக்க நேர்ந்து, அதைப் பற்றி சொல்லுவார் என்று இலவு காத்த கிளியாய் மனதில் ஒரு நப்பாசை இருந்தது :-(

சுரேஷ்,நேரில் பார்க்காவிட்டாலும் இதையேதான் எழுதியிருப்பேன்.

 
At Sunday, 02 March, 2008, சொல்வது...

//துளசி, உங்கள் அதிருஷ்டம் எனக்கு இல்லை.//

கொஞ்சூண்டு பாராட்டும், நீளமா இருக்குன்னு தலையில் நல்லாவே குட்டியும் இருக்கார்.

ஆனாலும் எனக்கு தலை வலிக்கலை.
மகிழ்ச்சியாத்தான் இருந்தது:-)

நேரில் சந்திக்கலைன்ற குறை ரொம்பவே இருக்கு உஷா.

 
At Monday, 03 March, 2008, சொல்வது...

ரவியா சொன்னது-

உஷா
நான் சொல்ல வந்தது தேசிகன் சொன்னது...
//

அவர் வாழ்க்கை சரித்திரம் எழுத வேண்டும் என்று சொன்னபோது முதலில் பல தர்ம சங்கடங்கள் வரும் என்றார். பிறகு சில காலம் கழித்து கேட்டபோது, ஒத்துக் கொண்டார். பல கேள்விகளை அவர் முன்னால் வைத்தான். அவற்றுக்கு நேர்மையான பதில்கள் தந்தார். சிலவற்றுக்கு கண்ணீரும் விட்டார். அந்த பயாக்ரஃபி இப்போது பாதியில் நிற்கிறது.//

ரவியா பார்க்கலாம் எப்படி வருகிறது என்று

துளசி, இத்தகைய சரியான கணிப்புதானே நாம் விரும்புவது?

 
At Monday, 03 March, 2008, சொல்வது...

எல்லோருடைய எண்ணங்களையும் பிரதி பலிப்படாக இருக்கிறது உஷா.
அவர் நம் எழுத்தில் கட்டாயம் இருப்பார்.

 
At Tuesday, 04 March, 2008, சொல்வது...

அறிவியலை பாமரனுக்கும் எளிய புரியும் விதமாக எடுத்து சென்றதில் இவருக்கு இணை இருக்க முடியாது.

பேரிழப்பு.

எல்லா வயதினரிடமும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார் என்று சொன்னால் மிகையல்ல.

 
At Wednesday, 26 March, 2008, சொல்வது...

உஷா,
உங்களுடைய பதிவுக்கு முதல் தடவையாக வருகிறேன். சுஜாதாவைப்பற்றி எவ்வளவு படித்தும் போதவில்லை. நல்ல எழுத்தாளர். நல்ல மனிதரும். கற்றவர். கற்றுக்கொடுத்தவர். பெற்றவர். அள்ளிக்கொடுத்தவர். நீங்கள் பார்த்துப்பேசியும் இருக்கிறீர்கள். உங்கள் பாக்யம். இப்படி ஒருவர் தமிழுக்குக் கிடைத்தது தமிழின் பாக்யமும் கூட.

 
At Friday, 04 April, 2008, சொல்வது...

வல்லி, சிவா, விஜய் ஒருமித்த எண்ணங்கள் இல்லையா?

 
At Tuesday, 22 April, 2008, சொல்வது...

என்னுடய தாயை (த்ரீ months hospital-இல் இருந்து கஷ்டப்பட்டார்) சமீபமாக இழந்தேன்-(அதனால் உஷாவின் படைப்புக்களை படிக்கும் வாய்ப்பை 4 months இழந்தேன்). அந்த மீளா துயரை தொடர்ந்து தமிழ் எழுத்தாளர்களின் topranker சுஜாதா அவர்களின் இழப்பு மிக்க துயரத்தை தருகிறது

ஒரு முறை அவரை, அவரின் BEL ஆபிஸில் சென்று பார்த்தேன். சென்று பார்த்த விஷயத்தை மட்டுமில்லாது பற்பல விஷயங்கள் பற்றி மிக சரளமாக பேசினார். வி கேன் கால் ஹிம் வாக்கிங் encyclopaedia.

உஷா has given rightly worded tributes to சுஜாதா's great writings. his creations will enable us to feel his presence amidst us for ever

Sridhar latha

 

Post a Comment

<< இல்லம்