Wednesday, January 23, 2008

2- எழுதியதில் பிடித்தது மட்டுமல்லாமல் பதிவுகளைப் பற்றியும் சில கருத்துக்கள்

சுய பேரிகைக் கொட்ட சொல்லி அழைப்பு வந்துக் கொண்டு இருக்கிறது. இந்த வருடம் எழுதியதில் பிடித்ததைச் சொல்ல வேண்டுமாம். எல்லாமே என் மனதுக்கு
இனியதுதான். பிடிக்காத எதையும் நான் எழுதுவதில்லை. ஆக, எனக்கு பிடித்தவைகள் எல்லாம் வாசகர்களுக்கும் பிடித்துப் போனதில் அதிசயம் ஒன்றுமில்லை. இந்த
வருட கண்டுப்பிடிப்பு "எழுத்தாளினி ஏகாம்பரி" ஏறக்குறைய எனக்கு எதிர்மறையான குணாதிசியங்களுடன், பிலாக்கோ போபியாவில் உருவானவள், "நானே நட்சத்திரம் ஆனேனே" யில் ஒரு காரக்டராய் உருவாகிவிட்டாள்.

ஆனால் மிகப்பிடித்த பதிவைச் சொல்ல வேண்டும் என்ற விதிமுறை இருந்ததாக், இந்த வருடம் எழுதியவைகளை ஆராய்ந்துக் கொண்டு இருந்தேன். என் எழுத்தை
விட்டு விட்டு, பல எண்ணங்கள் வலைப்பதிவுகளைப் பற்றி தோன்றின.

முதலில் ஒரு சிறிய பிளாஷ் பேக்- ஐந்து வருடங்களுக்கு முன்பு, கேட்ட சம்பவம் ஒன்றை, மசாலா சேர்த்து திண்ணை இணைய தளத்துக்கு அனுப்பினேன். அது பிரசுரம் ஆனதும், இணைய தளங்களில் எழுத ஆரம்பித்தேன். இணைய இதழ்கள் ஆரம்ப கட்ட எழுத்தாளர்களுக்கு சிறந்த தளம். சில பிரபல எழுத்தாளர்களின் முழு சிறுக்கதை
தொகுப்பை வாங்கிப் படித்தப் பொழுது, பல அருமையான கதைகள், பிரபலமில்லாத பல இதழ்களில் வெளியாகியிருந்தன. அதைப் போலதான் இணைய இதழ்களும்
புதியதாய் எழுத விழைப்பவர்களுக்கு இணைய தளங்கள் சரியான இடம்.

வழக்கான ஆசையின் விளைவாய் நாலைந்து கதைகள் விகடனுக்கு இணையம் மூலம் அனுப்பினேன். ஒரு கதை ஆனந்தவிகடனில் வெளியானது. குமுதம், கல்கி, கலைமகள், அமுதசுரபி, உயிர்மை, கணையாழி பத்தரிக்கைகளுக்கு மொத்தம் ஏழெட்டு சிறுக்கதைகள் அனுப்பியிருப்பேன். துபாயில் இருந்து அனுப்பும்பொழுது போஸ்டல் செலவும் அதிகம். போய் சேர்ந்ததா என்ற விவரமும் தெரியவில்லை, அதன் கதி என்னவாயிற்று என்றும் புரிப்படவில்லை. கணையாழியில் மட்டும் ஒரு கதை வெளியானதும், மீண்டும் அனுப்பிய மூன்று கதைகளில் இரண்டு பிரசுரம் ஆனது.

அப்பொழுது தோழியர் கூட்டு வலைப்பதிவில் எழுதியதைப் பார்த்து அமுதசுரபி ஆசிரியரான அண்ணா கண்ணன், துபாய் பற்றி ஒரு கட்டுரை எழுத சொன்னார். பிறகு அமுதசுரபிக்கு அனுப்பிய சிறுக்கதையும் வெளியானது.

2005ம் வருடம் சென்னையில் ஐந்து மாதங்கள், மகளின் கல்லூரி சேர்க்கைக்காக இருந்தேன். அப்பொழுது செய்த இரண்டு விஷயங்கள் கலைமகளில் நாவல் போட்டி அறிவிப்பைப் பார்த்து நாவல் ஒன்றை எழுதி, போட்டிக்கு அனுப்பிவிட்டு, சொந்த பதிவாய் "நுனிப்புல்" ஆரம்பித்தேன்.

இரண்டு வருடங்களுக்கு முன்பு நுனிப்புல்' ஆரம்பித்ததும், பத்திரிக்கைக்கு கதை அனுப்புவதையே விட்டு விட்டேன். இந்த வருடம் ஓரே (நாவல் அல்லாமல்)
ஒரு சிறுக்கதை கலைமகளில் வெளியானது. எதற்கு இந்த பழங் கதையெல்லாம் என்றுக் கேட்பவர்களுக்கு,. இந்த பதிவு எனக்கு வலைப்பதிவின் வீச்சை எனக்கு புரிய வைத்தது என்றால் மிகையில்லை.

இப்பதிவில் நாவலைக் குறித்து எழுதிவிட்டு, கதையைப் படிக்க விரும்புபவர்கள், மெயில் ஐடி தந்தால், அனுப்பு வைக்கிறேன் என்றேன். மறு நாள் காலையில் பார்த்தால்,
இன் பாக்ஸ் நிரம்பி வழிந்தது. இதில் விசேஷம் என்னவென்றால், பெரும்பாலோர் எனக்கு அறிமுகமில்லாதவர்கள். அதாவது சக பதிவாளர்கள் இல்லை. அன்றுதான்
வலைப்பதிவின் முழு பரிணாமம் புரிந்தது. ஒரு சிறு வட்டத்தில் நாம் கும்மியடித்துக் கொண்டு இருக்கிறோம் என்று நான் நினைத்துக் கொண்டிருந்தது எவ்வளவு தவறு? பின்னுட்டம் போட விரும்பாமல், வாசகர் என்ற வட்டத்தைத் தாண்டி வராதவர்கள் நிறைய பேர்கள், படித்துக் கொண்டு இருக்கிறார்.

சிற்றிதழ், இலக்கிய இதழ், வெகு ஜன பத்திரிக்கை வரிசையில் இணைய எழுத்தும் தனி இடம் பெறப்போகிறது. இதற்குதான் அதிக வாசகர்கள் இனி இருக்கப் போகிறார்கள்.
வெகுஜன பத்திரிக்கைகளின் சினிமா மாயையின் ஊடே தப்பிதவறி வரும் நாலு எழுத்துக்கள் எந்த பெயரையும் வாங்கித் தருமா என்று சந்தேகமாய் இருக்கிறது.

எழுதுவது எதற்கு? பணம், விருது பாராட்டு இத்தியாதிகளை விட அனைத்து படைப்பாளிக்கும், படைப்பு நாலு பேர்களால் படிக்கப்பட்டு, விமர்ச்சிக்கப்
பட வேண்டும் என்பதே அவன்/ள் எண்ணமாய் இருக்கும். கலைமகளில் ஆறு மாதங்கள் தொடர்ந்து வந்த நாவல் முடிந்துவிட்டது. அதற்கு என்ன விமர்சனங்கள்
வந்தது என்பது எனக்கு தெரியாது. இரண்டு மூன்று வாசக கடிதங்கள் பிரசுரமாயிருக்கலாம். ஆனால் பதிவில் போடாத கதையைக் கேட்டு வாங்கி படித்தவர்கள், மிக
அருமையாய், விளக்கமாய் அனுப்பிய அலசல்கள், திருத்தங்கள் போன்ற விளக்கமான விமர்சனங்கள் தந்த மகிழ்ச்சிக்கு எதுவுமே இணையில்லை. இதுதானே படைப்பாளி விரும்புவது?

இணைய எழுத்தாளர்களை இரண்டு வகையாய் பார்கிறேன். ஒன்று அதிக வாசக அனுபவம் இல்லாமல், தமிழ் தட்டச்சு தெரிந்து விட்ட மகிழ்ச்சியில், கிடைக்கும் பின்னுட்ட
போதையில் நினைத்ததை எழுதி தள்ளுவது. இது அதிக நாட்கள் தாங்காது. பரபரப்பான தலைப்புகள், பின்னுட்டம் அதிகரிக்க செய்யப்படும் முயற்சிகள், மத, சாதீய, அரசியல் காழ்புணர்ச்சி பதிவுகள் வாசகர்களால் ஓரம் கட்டப்படும். எழுத சரக்கு இல்லை என்றால் இந்த பதிவாளர்களும் எழுதுவதை நிறுத்தி விடுவார்கள்.

அடுத்து எண்ணங்கள், அனுபவம், நிகழ்வுகள் குறித்த கருத்துக்களை பகிர்ந்துக் கொள்பவர்கள். எல்லாரிடமும் சொல்வதற்கு விஷயங்கள் இருக்கின்றன. அனுபவங்கள், அரசியல் உட்பட நிகழ்வுகளைப் பற்றிய கண்ணோட்டங்கள், வாசிப்பு அனுபவங்கள், சமையல், ஷேர் மார்கெட், புகைப்படகலை, மருத்துவம், கல்வி போன்ற துறை சார்ந்த விளக்க கட்டுரைகள், ஆன்மீகம், பயணம், கதை, கவிதை என்று எழுதுபவர்கள், எழுத்திலும் தங்களை செம்மைப் படுத்திக் கொண்டால், நாளை பத்திரிக்கைகள் நம்மை அழைத்து எழுத வைப்பார்கள் என்பது என் கணிப்பு. இணையம் என்பது கட்டற்ற சுதந்திர வெளி. என்ன எழுத
வேண்டும் என்பதை தீர்மானிப்பது பதிவாளர்கள் என்றால், எதை படிப்பது என்பதை வரையறுப்பது வாசகர்கள். சில நாட்கள் தொடர்ந்து வலையுலகில் படித்தால், எது என்ன லட்சணம் என்று புரிந்து விடுகிறது. இப்படிதான் எழுத வேண்டும், இதைத்தான் எழுத
வேண்டும் என்று எந்த சட்டமும் போட தேவையும் இல்லை- இதில் சில வரைமுறைகள் உண்டுடில்லையா? எது நிற்கும் என்பது படிக்கும் வாசகர்களின் கையில் இருக்கிறது.
இங்கு பிரபலம் என்பதால் மட்டும் பதிவுகள் ரசிக்கப்படுவதில்லை. புதியவர்கள் நன்றாக எழுதினால், பலர் வாழ்த்தி பின்னுட்டம் இடுவதை பல முறை கண்டிருக்கிறேன்.
அரியாசனங்களை பதிவுகள் தகர்ந்துவிட்டன எனறு யாரோ சொன்னது நினைவுக்கு வருகிறது.

அனானிமஸ் பின்னுட்டங்கள், புது புது பெயர்களில் வம்புக்கு இழுப்பவர்களைக் குறித்த பயம் எல்லாம் போய்விட்டது. படிக்கும் வாசகர்கள் அனைவருக்கும் விமர்சிக்கும்
உரிமையுள்ளது. அதீத பாராட்டுகள் தரும் போதையை விட, எதிர்வினைகளே நம் தவறுகளை, குற்றங்குறைகளை கண்டுக் கொள்ள உதவும்.

மகா நடிகன் என்ற படம், சத்தியராஜ் நடித்தது. அதில் ஒரு நடிகையை, நீ சீரீயலில் நடிக்கத்தான் லாயிக்கு என்று நக்கல் அடிப்பார். அந்தம்மா உடனே, ''சும்மா கிண்டல் அடிக்காதீங்க, நாளைக்கு நீங்களும் அங்கத்தான் வரப்போறீங்க" என்பாள். சின்னதிரை, பெரிய திரையை ஓரம் கட்டியதுப் போல, (சிம்ரன் வாராங்களாமே) இணைய எழுத்தாளர்கள்,
நாளை அச்சு பத்திரிக்கை, புத்தக உலகில் பிரகாசிக்கப்போவது நிச்சயம் என்று எனக்கு தோன்றுகிறது.

19 பின்னூட்டங்கள்:

At Wednesday, 23 January, 2008, சொல்வது...

1000% உண்மை.

ஜால்ரா பின்னூட்டங்களைவிட தட்டிக்குட்டுவது அப்போதைக்குச் சுருக் என்று இருந்தாலும் எழுத்தை மேம்படுத்த உதவுதுதான்.

ரொம்ப 'ஆழமா' சிந்திக்காதீங்க:-)))))

 
At Wednesday, 23 January, 2008, சொல்வது...

சில நிதர்சனமான உண்மைகளை எழுதியிருக்கீங்க....

ஆமாம், எனக்கும் ஈமெயில்ல உங்க கதைகளை அனுப்புவீங்களா? :-)

 
At Wednesday, 23 January, 2008, சொல்வது...

//அதிக வாசக அனுபவம் இல்லாமல், தமிழ் தட்டச்சு தெரிந்து விட்ட மகிழ்ச்சியில், கிடைக்கும் பின்னுட்ட
போதையில் நினைத்ததை எழுதி தள்ளுவது. இது அதிக நாட்கள் தாங்காது. பரபரப்பான தலைப்புகள், பின்னுட்டம் அதிகரிக்க செய்யப்படும் முயற்சிகள், மத, சாதீய, அரசியல் காழ்புணர்ச்சி பதிவுகள் வாசகர்களால் ஓரம் கட்டப்படும். எழுத சரக்கு இல்லை என்றால் இந்த பதிவாளர்களும் எழுதுவதை நிறுத்தி விடுவார்கள்.//

உங்களுக்குப் பிடித்த பதிவைப் பற்றி எழுதச் சொன்னால் எனக்கு சாபம் கொடுக்கும் உங்கள் பித்தளைத்தனம் பற்றி நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை!

 
At Wednesday, 23 January, 2008, சொல்வது...

//ரொம்ப 'ஆழமா' சிந்திக்காதீங்க:-)))))//

நல்லாச் சொல்லுங்க ரீச்சர்.

 
At Wednesday, 23 January, 2008, சொல்வது...

துளசி :-)


மதுரையம்பதி மெயில் ஐடி அனுப்புங்க. கதை அனுப்புகிறேன்


இலவசம், ஸ்மைலி போடாததால், கொஞ்சம் சீரீயசாய் ஒரு பதில். நல்ல பதிவுகள் கூட, பின்னுட்ட பெட்டியில் நடக்கும்
"சாட்டினால்" பதிவின் கருத்து கண்டுக்கொள்ளப்படாமல் போகலாம் என்ற ஆதங்கத்தில் சொன்னேன்.

 
At Wednesday, 23 January, 2008, சொல்வது...

சொல்லியுள்ள பல விஷயங்கள் உண்மைக்கு வெகு வெகு அருகில்.நான் என்ன படிக்கவேண்டும் என்று முடிவெடுத்துவிடுவதால் கவலைப்படுவதில்லை.அனானிகள் பின்னூட்டங்கள் உணர்ச்சிக்கு நல்ல உறை போட்டு மறக்கவைத்துவிட்டதால் இப்போது அதற்காகவும் கவலை படுவதில்லை.
அமுத சுரபிக்கு எழுதிய துபாய் கட்டுரை இங்கு போட்டீர்களா?

 
At Wednesday, 23 January, 2008, சொல்வது...

அடுத்த பின்னூட்டத்தைப் படிக்காம ஆழமா ஒரு பதில்! என்னத்த சொல்ல!!

 
At Wednesday, 23 January, 2008, சொல்வது...

குமார் சார், உண்மையை எழுதினால் பிரச்சனைதான் ;-) யதார்த்தவாதி பகுஜன விரோதி :-)))

இலவசம், ரீச்சர்தானே ஸ்மைலி போட்டாங்க? நீங்க போடலையே :-))

 
At Wednesday, 23 January, 2008, சொல்வது...

படிச்சிட்டேன்..........நல்லா இருக்குங்க உஷா.....:)

 
At Thursday, 24 January, 2008, சொல்வது...

டாங்ஸ்...

நல்லாத்தான் சொல்லியிருக்கீங்க... ஆனா கடைசிவரைக்கு உங்களுக்கு புடிச்ச பதிவு எதுங்கறதைத்தான் சொல்லவேல்ல! :)

 
At Thursday, 24 January, 2008, சொல்வது...

அருமையான அலசல். ரிட்டயர் ஆனபிறகு எப்படி பொழுது போகும்?னு பலமுறை யோசிச்சு இருக்கேன். பிளாக்காண்டவர் தான் துணை நிப்பார் போலிருக்கு. :)

//பின்னுட்டம் போட விரும்பாமல், வாசகர் என்ற வட்டத்தைத் தாண்டி வராதவர்கள் நிறைய பேர்கள், படித்துக் கொண்டு இருக்கிறார்.
//
நல்லா சொல்லுங்க. ஓசில படம் பாக்கற கூட்டம் நிறைய இருக்கு. :))

//எனக்கு சாபம் கொடுக்கும் உங்கள் பித்தளைத்தனம் பற்றி நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை!
//
@இ.கொ, என்ன அண்ணாச்சி, தன்னேஞ்சே தன்னை சுடுகிறதா? :))

@usha madam, பாருங்க, நான் மறக்காம ஸ்மைலி போட்ருக்கேன். :)

 
At Thursday, 24 January, 2008, சொல்வது...

அதிகமாக உங்கள் பதிவுகளுக்கு பின்னூட்டம் இடவில்லை என்றாலும் தொடர்ந்து படித்து வருபவன். உங்களின் இந்தப் பதிவு மிகவும் அருமையான உணர்ந்து எழுதப்பட்டுள்ளது.

நிதர்சனத்தை அழகாக வெளிப்படுத்தியுள்ளீர்கள்.

எதிர்காலம் இனி பதிவர்களின் கையில்தான் என்பதில் சந்தேகமே இல்லை.

 
At Thursday, 24 January, 2008, சொல்வது...

இந்த பதிவு மொக்கையா அல்லது பிடித்த பதிவுகளா...

ஒன்னும் புரியலையே ஆத்தா!

 
At Thursday, 24 January, 2008, சொல்வது...

நல்லா சொன்னீங்க வலைப்பூ இவ்வளவு வலிமையானதுன்னு நான் கூட நினைக்கலை.

 
At Thursday, 24 January, 2008, சொல்வது...

//பின்னுட்டம் போட விரும்பாமல், வாசகர் என்ற வட்டத்தைத் தாண்டி வராதவர்கள் நிறைய பேர்கள், படித்துக் கொண்டு இருக்கிறார்.//

அந்த கூட்டத்தில் நானும் ஒருவன்! ஆனால் பின்னூட்டம் போட விரும்பாமல் அல்ல,என்ன போடுவது என்று தெரியாமல்!

// ஆனால் பதிவில் போடாத கதையைக் கேட்டு வாங்கி படித்தவர்கள், மிக
அருமையாய், விளக்கமாய் அனுப்பிய அலசல்கள், திருத்தங்கள் போன்ற விளக்கமான விமர்சனங்கள் தந்த மகிழ்ச்சிக்கு எதுவுமே இணையில்லை.
இதுதானே படைப்பாளி விரும்புவது? //


கண்டிப்பாக!தன் எழுத்து பிறரால் அங்கீகரிக்கப்படுகிறது என்பது தான் படைப்பாளிக்கு பெரிய மகிழ்ச்சி. இணையத்தில் அந்த அங்கீகாரம் சக எழுத்தாள வாசகர்களிடம் இருந்து பின்னூட்ட வடிவில் வருவதால் எழுதியவருக்கு உடனடி
திருப்தி(instant gratification)கிடைக்கிறது என்று நினைக்கிறேன்.

//அதீத பாராட்டுகள் தரும் போதையை விட, எதிர்வினைகளே நம் தவறுகளை, குற்றங்குறைகளை கண்டுக் கொள்ள உதவும்.//

உண்மை உஷா மேடம்!ஆனால் அந்த அதீத பாராட்டுக்களை தானே மனம் அதிகம் நாடுகிறது! இல்லை என்று சொல்லுங்கள் பார்ப்போம் :)

 
At Thursday, 24 January, 2008, சொல்வது...

ராதா, வருகை பதிவேட்டில் கையெழுத்து இட்டதற்கு நன்றி

இளவஞ்சி, அதுதான் எளுதனது எல்லாம் புடிக்கும்னு சொல்லிட்டேன் :-) இது பிடித்த பதிவு என்பதைவிட, வலையுலகின்
வீச்சை புரிய வைத்த பதிவு.

அம்பி, ரொம்ப நல்லா இருக்கு :-) சொல்லுரதை சொல்லிட்டு ஸ்மைலி போட்டா ஆச்சா :-)))

மஞ்சூர் ராஜா, நீங்கள் தொடர்ந்து படித்துக் கொண்டு இருக்கிறீர்கள் என்பது எனக்கு தெர்யுமே :-)

அண்ணே/ அக்கா பைசா பவரூ! மொக்கையோ, உப்புமாவோ அல்லது அமர காவியமோ, அபத்த உளரல்களோ அவர் அவர்
புரிதல், அறிதலைப் பொருத்து!

மங்களூர் சிவா, உங்களை யோசிக்க வைத்தது இந்த பதிவு என்பதை நினைத்து மகிழ்கிறேன்

வந்தியதேவன், எழுத ஆரம்பித்தப்பொழுது, இருந்த பின்னுட்ட மோகம் இப்பொழுது எல்லாம் குறைந்துவிட்டது. பதிவின்
சிறப்பே உடனே கிடைக்கும், பின்னுட்டம் என்ற ஊக்கம்தான். அது தேவையில்லை என்றால், நான் எழுதி பத்திரமாய் என் கணிணியிலோ, டைரியில் எழுதியோ பிறர் கண் படாமல் வைத்துக் கொள்ளலாமே? பின்னுட்டம் என்பது
கருத்து பரிமாற்றம், ஆரோக்கியமான எதிர்வினைகளாய் இருக்க வேண்டும் என்பது என் கருத்து.

 
At Saturday, 09 February, 2008, சொல்வது...

//மகா நடிகன் என்ற படம், சத்தியராஜ் நடித்தது. அதில் ஒரு நடிகையை, நீ சீரீயலில் நடிக்கத்தான் லாயிக்கு என்று நக்கல் அடிப்பார். அந்தம்மா உடனே, ''சும்மா கிண்டல் அடிக்காதீங்க, நாளைக்கு நீங்களும் அங்கத்தான் வரப்போறீங்க" என்பாள். சின்னதிரை, பெரிய திரையை ஓரம் கட்டியதுப் போல, (சிம்ரன் வாராங்களாமே) இணைய எழுத்தாளர்கள்,
நாளை அச்சு பத்திரிக்கை, புத்தக உலகில் பிரகாசிக்கப்போவது நிச்சயம் என்று எனக்கு தோன்றுகிறது.//

சரியா சொன்னிங்க/..இப்போதே பத்திரிக்கைகள் வலைப்பதிவுகளை கவனிக்க ஆரம்பித்து விட்டன..

 
At Saturday, 09 February, 2008, சொல்வது...

////அதிக வாசக அனுபவம் இல்லாமல், தமிழ் தட்டச்சு தெரிந்து விட்ட மகிழ்ச்சியில், கிடைக்கும் பின்னுட்ட
போதையில் நினைத்ததை எழுதி தள்ளுவது. இது அதிக நாட்கள் தாங்காது. பரபரப்பான தலைப்புகள், பின்னுட்டம் அதிகரிக்க செய்யப்படும் முயற்சிகள், மத, சாதீய, அரசியல் காழ்புணர்ச்சி பதிவுகள் வாசகர்களால் ஓரம் கட்டப்படும். எழுத சரக்கு இல்லை என்றால் இந்த பதிவாளர்களும் எழுதுவதை நிறுத்தி விடுவார்கள்.//

அடிக்கடி பதிவுகளுக்கு எடுத்துக்கிட்டாலும்,ஆடிய கால்கள் நிரந்தரமா நிக்க முடியாதுன்னு தான் தோனுது.
எண்ணங்களின் வடிகால் கண்ட திருப்தியில்,மீண்டும் மனசு ஃபுல் ஆனதும்,வடிகாலைத் தேடி வந்து தான் ஆவார்கள்ன்னு நெனக்கறேன்..ஹிஹி..

 
At Saturday, 09 February, 2008, சொல்வது...

//அடிக்கடி பதிவுகளுக்கு எடுத்துக்கிட்டாலும்,ஆடிய கால்கள் நிரந்தரமா நிக்க முடியாதுன்னு தான் தோனுது. எண்ணங்களின் வடிகால் கண்ட திருப்தியில்,மீண்டும் மனசு ஃபுல் ஆனதும்,வடிகாலைத் தேடி வந்து தான் ஆவார்கள்ன்னு நெனக்கறேன்..ஹிஹி//

ரசிகன், பார்ப்போம் யாரூடைய ஆருடம் பலிக்கிறது என்று :-)

 

Post a Comment

<< இல்லம்