Tuesday, March 11, 2008

உய்யடா மானிடா! உய்!

கடந்த பத்து நாளாய் சூரத் அல்லோகல்லோ பட்டுக் கொண்டு இருக்கிறது. காரணம் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் வருகை தருகிறார் என்று. எங்குப் பார்த்தாலும், வாய் கொள்ளா சிரிப்புடன் ஆளுயர கட்டவுட், மீடியம், சிறு போஸ்டர், வீதிகளில் மூன்று சக்கர வாகனத்தில் என்று சம்சார சாகரத்தில் உழலும் மக்களுக்கு யோகாவின் மூலம் உய்விக்கிறேன் என்று அருள்பாலித்துக் கொண்டு இருந்தார்.

வாசலில் துண்டு சீட்டு விளம்பர காகீத செய்தியை நீட்டும் கல்லூரி பையன். (விளம்பரத்திற்கு மட்டும் எத்தனை லட்சங்கள் செலவாயிற்றோ) ஒழுங்க படிப்பை கவனிக்க கூடாதா? இந்த ஆன்மீக கடலில் குதிக்க இன்னும் வயசு இருக்கிறது என்று ஆற்றாமையுடன் கேட்டால், ஆண்டி இது பார்ட் டைம் ஜாப் என்று பல்லை காட்டியது அந்த சிறுசு. என்னத்தான் சொல்லுங்க குஜ்ஜூக்கள் கில்லாடிகள். அது சரி, இம்புட்டு கூட்டம் ஏன் அம்முகிறது என்றுக் கேட்காதீர்கள். வியாபாரம், டென்ஷன், கருப்பு பணத்தில் புண்ணியம் சம்பாதித்தல் அல்லது மூன்று நாள் பயிற்சியில் இன்ஸ்டண்டாய் வாழ்வில் உய்யுதல் .

வித விதமாய் செய்திகள் காதில் விழுந்துக் கொண்டு இருக்கின்றன. அருகில் தரிசிக்க ஐநூறு ரூபாய் கட்டணம். காலை தொட்டு கும்பிட/ நம்ஸ்கரிக்க ஆயிரம் ரூபாய் கட்டணம். தெய்வமே! எப்படியோ எனக்கு ஒரு கதை எழுத சூப்பர் மேட்டர் கிடைத்தது! கதை சூப்பரா என்று வாசகர்கள்தான் சொல்லணும் :-)

நேற்றைய இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸில் கால் பக்கமும், டைம்ஸ் ஆப் இந்தியாவில் முழுப்பக்கத்திலும் ஜக்கி வாசுதேவ். டைம்ஸ் ஆப் இந்தியாவில் தலைப்பு இதுதான் Ignorant Gurus causae more damage than evil ones. அடுத்து எக்ஸ்பிரசில்- I have not read the vedas or the Upanishads, I confess I haven't read the Gita.

என்னமோ போங்க, லெளகீத வாழ்க்கையில் நாளும் உழலும் அஞ்ஞானிகளான நமக்கு சில விஷயங்கள் புரிப்படுவதேயில்லை, அனைத்தும் மாயை என்பது என்றுதான் கற்கப் போகிறோமோ? கேள்வியைப் பாருங்கள்

you ride a motorbike, you wear designer glasses, you drive a land rover, (யாரோட காசு) and dance at disco parties (கொடுமை). Is it part of your brand image? Or is it to say that you can be normal and spiritual (at the same time)?
Being spiritual is being normal. If you are not spiritual , you can be handicapped. What you call spiritual is an experience that is beyond the physical.(அடடா)

கோவை ஆஸ்ரமத்துக்கு அடுத்து, Tennessee, அமேரிக்காவிலாமே? ஏதோ சம்சார சாகரத்தில் நாளும் ஏற்படும் பிரச்சனைகள், தலைவலிகளை ஏறக்கட்டிவிட்டு கிருஷ்ணா, ராமா என்று ஜபித்துக் கொண்டு இருப்பது துறவறம் என்று நினைத்துக் கொண்டு இருந்தேன். ஆனால் இது ஒரு சாம்ராஜ்ஜியத்தையே கட்டியாளும் வேலை இல்லவா? உலக முழுக்க பயணங்கள், தனிவிமானத்தில் பறந்தாலும் பயணம் உடலை வறுத்தாதா?, புது புது ஸ்தாபனங்களை ஏற்படுத்த திட்டங்கள், கொட்டும் பணத்தை கையாள நம்பிக்கையான ஆட்களை தேர்ந்தெடுத்தல், கண்காணித்தல், கணக்கு வழக்குகள், நேரம் காலம் இல்லாமல் தரிசிக்க வரும் வி.ஐ.பிகள் (இவர்களை பகைத்துக் கொள்ள முடியுமா), மணிக்கணக்காய் நீளும் கடவுளை அடையும் வழிகளைச் சொல்லிக் கொடுக்கும் உரைகளை தினமும் புது புதுதாய் சொல்லுதல், தயாரித்துக் கொடுக்க ஆள் இருந்தாலும், பேப்பரைப் பார்த்து படிக்க முடியுமா? ஹஸ்கி வாய்சில் பேச்சு பொங்கி வர வேண்டாமா? இருக்கும்
இருபத்திநாலு மணி நேரத்தில் ஆயிரத்து எட்டு தாத்பரியங்கள்! தான் உய்ய ஒரு நொடியேனும் சிந்தனை ஒருமைப்படுமா? ஒருவேளை இதுதான் கர்மயோகமா?புரியவில்லை :-)

32 பின்னூட்டங்கள்:

At Tuesday, 11 March, 2008, Blogger RATHNESH சொல்வது...

சந்தோஷமாக இருந்தது மேடம், தங்களின் வெளிப்படையான தெளிவான பார்வை குறித்த பதிவு படிக்கையில்.

நான் இது போன்ற குருக்களின் கொடுக்குகள் பலரிடமும் கேட்டுள்ள, கேட்கின்ற ஒரே விஷயம் இவர்கள் எல்லாம் காஷ்மீரிலும், அஸ்ஸாமிலும் போய் தீவிரவாதிகளின் மனங்களைச் சாந்தப்படுத்தட்டுமே, ஆஃப்கானிஸ்தானுக்கோ பாகிஸ்தானுக்கோ போக விசா இல்லை என்கிற பட்சத்தில்.

மூன்று முக்கிய இயக்கங்களில் குருவிடம் பல அடுக்கு தீட்சை பெற்றுள்ளவர்கள் சிலரை மிக நெருக்கமாகவே எனக்குத் தெரியும். சராசரி மனிதர்களை விட மனத்தில் பொறாமையும் வஞ்சனையும் குடி கெடுக்கும் குணங்களும் பல்கிப் பெருகி வாழ்ந்து வருகிறார்கள் இன்னும்.

முன்பே ஒரு பதிவில் கூடச் சொல்லி இருக்கிறேன்: உலகம் உய்விக்கப் பேசுபவர்களின் உள்ளார்ந்த வேண்டுதல் எப்போதும் இதுவாகத் தான் இருந்திருக்கிறது: "பகவானே! உலகத்தை நன்றாக வை. உலகத்தினருக்கு சகல சம்பத்தும் கொடு. என்னுடைய பக்கத்து வீட்டுக்காரனுக்கு மட்டும் வேண்டாம்; ஏனென்றால் அவன் என் கண்களுக்குத் தெரிகிறான்".

 
At Tuesday, 11 March, 2008, Blogger மங்களூர் சிவா சொல்வது...

ஒன்னும் புரியலை இவங்களை எல்லாம் நம்பறதா வேண்டாமா!?!?!?

கடவுள் நம்பிக்கை இருக்கு ஆனா மீடியேட்டர்ஸ் மேல எனக்கு நம்பிக்கை என்னைக்குமே இல்லை :(

 
At Tuesday, 11 March, 2008, Blogger யோகன் பாரிஸ்(Johan-Paris) சொல்வது...

சகோதரி!
இவர்கள்; திண்டது சமிக்காதோருக்கு மோட்சம் காட்டும் சாமிமார். எங்களைப் போல் அன்றாடம் காச்சிகளுக்கு இவரை யாரெனவே தெரியாது.

 
At Tuesday, 11 March, 2008, Blogger லக்ஷ்மி சொல்வது...

:))))))

சராசரி மனிதர்களுக்கு இன்ஸ்டென்ட்டா பணம் பண்ணுவது மேல மோகம் அதிகரிக்க அதிகரிக்க அந்த பலவீனத்தை பயன்படுத்திக்க இது போன்ற அட்டைகளும் அதிகரிக்கத்தான் செய்வாங்க. இப்ப வீடு வாங்கற மோகம் அதிகரிக்கறப்ப நேர்மறை விகிதத்துல ரியல் எஸ்டேட் பிச்சுக்கறதில்லையா? அது போலத்தான் இதுவும். விரைவில் அந்தக் சூப்பர் கதைய ரிலீஸ் செய்ங்க. காத்துகிட்டிருக்கோம். ;)

பி.கு: இந்த ஸ்ரீலஸ்ரீ எங்கூர்க்காரர் - அதுலயும் எங்க தெருக்காரராம். நானும் இதைச் சொல்லி Art of living கத்துக்க எதுனா டிஸ்கவுன்ட் கேக்கலாமான்னு யோசிச்சுகிட்டிருக்கேன்.. :)

 
At Tuesday, 11 March, 2008, Blogger ஜயராமன் சொல்வது...

தங்கள் பதிவுகளில் படித்து வருத்தப்பட்ட முதலாம் பதிவு.

அடுத்து என்ன, திருப்பதி சாமி மீது நக்கலா?

நன்றி

ஜயராமன்

 
At Tuesday, 11 March, 2008, Blogger இலவசக்கொத்தனார் சொல்வது...

இதெல்லாம் பிஸினெஸ். விளம்பரம் இல்லாம ஆகுமா? பட்டாக் கத்தி பரிசாய் வாங்கிக் கொள்ளும் அரசியல் கூட்டம், இந்த மாதிரி பிசினெஸ் எல்லாம் ஒண்ணுதான். ரொம்ப ரென்சன் ஆவாதீங்க.....

 
At Tuesday, 11 March, 2008, Blogger ramachandranusha(உஷா) சொல்வது...

ரத்தனேஷ், இவை எல்லாமே பல முறை எழுதியவைதான். வெகுஜன பத்திரிக்கைகளில் தொடர்ந்து ஏதாவது ஜகத்குரு அருள்பாலித்துக் கொண்டு இருப்பதையும், பத்திரிக்கைகள் இவர்களுக்கு தரும் விளம்பரத்தைப் பற்றியும் எழுதியிருக்கிறேன்.

மங்களூர் சிவா, வசூல்ராஜா எம்.பி.பிஸ் படத்தில் கமல் சொல்லும் வசனம் இது

"கடவுள் உண்டு என்பவனை நம்பலாம், கடவுள் இல்லைன்னு சொல்லிகிறானே அவனையும் நம்பலாம். ஆனால் நான் தான்
கடவுள்னு சொல்லுகிறான் பாரூ, அவன மட்டும் நம்ப கூடாது"

எப்படி? சரியா :-)

யோகன் ஐயா, இராமாயணம் படித்துவிட்டு, சீதைக்கு ராமன் சித்தப்பா என்றால் எப்படி? அன்றாடங்காட்சிகளுக்கு எதுக்கையா
ஆன்மீகம்? அப்பால, ஆசிர வாசலில் ஃபோர் சீட்டர் பிளேன் எப்படி வரும்:-)))

 
At Tuesday, 11 March, 2008, Blogger பாச மலர் / Paasa Malar சொல்வது...

....உய்வது என்பது இப்போதைக்கு இல்லை..எப்போதைக்குமே இல்லையோ?

 
At Tuesday, 11 March, 2008, Blogger பினாத்தல் சுரேஷ் சொல்வது...

ஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீ ரவிஷங்கர் பாபாவை இப்படி நீச்சமாக எழுதி இருப்பதால் தங்களுக்கு ஏழு லோகங்களிலும் கீழான நரகம் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. அதைத் தவிர்க்க ஒரே வழி, உங்க ரங்கமணி உங்களுக்கு ப்ரசண்டாககொடுக்கவிருக்கும் ஏரோபிளேனை வாழும் கலைக்கு தாரைவார்ப்பதுதான்.

எப்படி வசதி?

 
At Tuesday, 11 March, 2008, Blogger சிறில் அலெக்ஸ் சொல்வது...

உஷா,
இதற்கு முன்னோடிகள் நம்ம கிறீத்துவ போதகர்கள். டெலிவஞ்சலிஸ்ட் என அழைக்கப்படுகிறவர்கள். சொந்த விமானம் எல்லாம் இவங்களுக்கு சைக்கிள் வச்சிக்கிறமாதிரி. இதேபோல கத்தோலிக்க திருச்சபையின் சொத்துக்களும் கணக்கிலடங்காதவை.

இவங்களுக்கு சாதகமா சில பாயிண்ட்கள் சொல்லியே ஆகணும்.
எல்லாராலேயும் சுயமாகவே ஆன்மிக அனுபவத்தை பெற முடிவதில்லை. சிலருக்குத்தான் இந்த சமையல் தெரிஞ்சிருக்குது. மற்றவங்க இன்ஸ்டண்ட் மசாலாப் பொடி வாங்கிக்கிறாங்க. வீட்டில இருக்கிற மிளகு, பட்டை லவங்கமெல்லாம் வச்சி நீங்களாகவே மசாலாவை உருவாக்க முடியும். ஆனாலும் எத்தனையோபேர் இன்ஸ்டண்ட் பொடிகள வாங்கிக்கிறாங்க இல்லியா. அங்கதான் நடக்குது பிசினஸ்.

என்னக் கேட்டா சமையல் நல்லா இருந்தா சரி என்பேன்.
:)

 
At Tuesday, 11 March, 2008, Blogger யு.எஸ்.தமிழன் சொல்வது...

நல்லா சொல்லியிருக்கீங்க உஷா!

ஆனா நீங்க இத சுட்டிய இடம் புரியல்ல?
>>>> I have not read the vedas or the Upanishads, I confess I haven't read the Gita.

அப்போ வேதா உபநிசத் கீதா படிச்ச உய்விப்பாளர்கள் நல்லவங்கன்னு சொல்லவர்றீங்களா?

-யு.எஸ்.த

 
At Tuesday, 11 March, 2008, Blogger சென்ஷி சொல்வது...

:))

 
At Tuesday, 11 March, 2008, Blogger அரை பிளேடு சொல்வது...

சாமியார்கள் "வாழும் கலை"யை கற்றவர்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை :)

 
At Tuesday, 11 March, 2008, Blogger ramachandranusha(உஷா) சொல்வது...

லஷ்மீ, விளையாட்டுக்கு சொல்லவில்லை. துபாயில் எனக்கு தெரிந்த கணவன், மனைவி. இருவரும் சி.ஏ. வேலையை
விட்டு விட்டு, வாழும் கலையில் சேர்ந்து உலகம் சுற்றிக் கொண்டு ஓஹோன்னு இருக்காங்க. அதனால இந்த அஞ்சு, பத்து
டிஸ்கவுண்டுக்கு ஆசைப்படாம, உருப்படுகிற வழிய பாருங்க :-)

இல்லையே ஜயராமன் சார், முன்னாடி ஒரு முறை கூட நீங்க வருத்தப்பட்டீங்களே கரோமாவில் துளசி கல்யாணம் என்ற பதிவில் இதோ லிங்கு http://nunippul.blogspot.com/2005/11/blog-post_18.html
ஐயா, துறவி, துறத்தல் என்ற வார்த்தைக்கே பொருள் இல்லாமல், தன்னையே கடவுளாய் கும்பிட சொல்வது, அபிஷேக
ஆராதனைகள், மலர் கீரீடங்கள், அதீத ஆடம்பரம், சொத்து குவிப்பது இவை எல்லாம் சரியான துறவி வழியா என்று நீங்களே சொல்லுங்கள், ?

இலவசம், இங்கிட்டு புரளும் பணத்தைப் பார்த்தால் அரசியல் எல்லாம் ஜூஜூபி. மேலும் எவ்வளவு வெளிப்படையாய் வாழ்க்கையை அனுபவிக்கலாம். துறவிக்கு பிளாட்பரமும் ஒன்று, ஏழு நட்சத்திர ஓட்டலும் ஒன்றில்லையா?

 
At Tuesday, 11 March, 2008, Blogger ramachandranusha(உஷா) சொல்வது...

பாசமலர், உய்வதும் உய்யாமல் போவதும் அவரவர் கையில் உள்ளது. இதில் நடுவில் கடவுள் பெயரை விற்பவர்கள் தேவையே இல்லை.

பினாத்தாலே, இதில் நான் வாத்தியார் கட்சி. சும்மா பஜனை கேட்டுக் கொண்டு இருந்தால் போர் அடிக்கும். மேலும் நாஸ்தீகவாதிக்கு நரகமே பிராப்தி என்பது ஆன்றோர் வாக்கு.

சிறில், அடடா, இதில் நாங்கள்தான் உலகிற்கு வழிக்காட்டி என்று பலராலும் தூற்றப்பட்டது சரியில்லையா? இன்ஸ்டண்ட்
சமையல், பெயருக்கு மட்டுமே.

யு.எஸ். தமிழன் ஐயா, இரண்டு தலைப்பையும் ஒன்றாய் பார்த்தால் தமாஷாக இருந்தது.

 
At Tuesday, 11 March, 2008, Blogger ramachandranusha(உஷா) சொல்வது...

சென்ஷீ ;-))))))))

அரைபிளேடு, போட்டீரே ஒரு போடு. அது :-)

 
At Tuesday, 11 March, 2008, Blogger துளசி கோபால் சொல்வது...

//தனிவிமானத்தில் பறந்தாலும் பயணம் உடலை வறுத்தாதா?, //


என்ன உஷா இது. இவர் உடம்பு கடலையா என்ன? வருத்தாதா?ன்னு இருக்கணும் இல்லே.

டீச்சர் டீச்சர்ன்னு மக்கள்ஸ் உசுப்பேத்திவிட்டுட்டாங்க. இப்பப் பாருங்க பிழையே கண்ணுலே படுது.


அது இருக்கட்டும். எனக்கு உய்யவே வழி இல்லை உஷா. நான் இடைத்தரகர்களைக் கணக்கிலே எடுத்துக்கலை. எல்லாமே நமக்கு டைரக்ட் காண்டாக்ட்தான்.

ரத்னேஷ் சீனியர் சொல்வது போலதான் பல இடத்திலும். சாமியே பிரத்யட்சமா வந்து புழுங்கலரிசி இங்கே இருக்குன்னு கூட சிலருக்குச் சொல்றாராம். அவுங்களை நல்லாத் தெரிஞ்சுக்கிட்டவங்களுக்கு எப்படி இருக்கும்..........

பணமில்லாட்டா வாழவே முடியாதுன்னு இருக்கும்போது கலை மட்டும் வந்துருமா?

எல்லாத்துக்கும் டப்பு காவால.

ம் ம்ம்ம்ம்ம்ம் சொல்லமறந்துட்டேனே.....
சில சாமியார்கள் பக்தர்கள் விருப்பத்திக்கிணங்க தலையிலே கிரீடம் எல்லாம் வச்சுக்கிட்டுக் கிருஷ்ணர் வேஷம்கூடப் போட்டுக்கறாங்கப்பா....

 
At Tuesday, 11 March, 2008, Blogger SurveySan சொல்வது...

குட்! :)

ஆனா, இந்த ஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீ வழிமுறைகள், பலருக்கு பிடிச்சிருக்குன்னு சொல்றானுவ.
என் நண்பன் ஒருவனும், இதுல தீவிரமா இருக்கான்.
என்ன சேர சொன்னான். $350 ரெண்டு நாள் கோர்ஸுக்கு. நான் எஸ்கேப்.

யோகா, மன அமைதியைத் தரலாம். ஆனா, அத சொல்லித்தர ஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீ எல்லாம் தேவையில்லை என்பது அடியேன் கருத்து.

 
At Wednesday, 12 March, 2008, Blogger வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) சொல்வது...

முதலில் இவர்கள் தங்களை துறவிகள் என்றோ கடவுள் என்றோ கூறிக் கொள்கிறார்களா என்று தெரியவில்லை.

இரண்டாவது - ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் சில விஷயங்கள் சொல்கிறார்கள். ஜக்கி வாசுதேவ் ஒரு வகையில் என்றால், ஓஷோ மற்றொரு வகையில். ரவிசங்கர் இன்னொரு வகையில். இவர்கள் அனைவரும் ஏதும் கெட்ட போதனைகள் சொல்வதில்லையே?

மூன்றாவது - இவர்களை பற்றி ஒரு நடு நிலையான விமர்சனம் வைக்க வேண்டும் என்றால் இவர்கள் செய்யும் நல்ல விஷயங்கள் ஒன்றிரண்டு குறிப்பிட்டு இருக்கலாமே. நண்பர் ரத்னேஷ் கேட்டார் - பாகிஸ்தானிலோ, ஆப்கானிஸ்தானிலோ சென்று சாந்தபடுத்த சொல்லி. விக்கிபீடியாவில் ரவிசங்கர் பற்றி தேடிப் பார்த்தால் "Philosophy and Activities" என்ற செக்ஷன் கீழ் இதற்கு விடை இருக்கிறது.

எதையும் கருப்பு கண்ணாடி அணிந்தே பார்க்க வேண்டாமே?

நீங்கள் கூறியவற்றில் சிலது உண்மையாக இருக்கலாம். ஆனால் முழுவதுமாக தெரிந்துக் கொண்டு கூறவில்லை என்றால் அதுவும் பொய்க்கு நிகராகிவிடும். Partial truth is same as lie. அஸ்வத்தாமன் இறந்தான் என்பது Partial truth. அஸ்வத்தாமன் என்ற யானை இறந்தது என்பது தானே உண்மை.

நாம் பல விஷயங்களை அனுமானங்களிலும் ஊகங்களிலுமே முடிவு பண்ணி விடுகிறோம். என்னை பொறுத்தவரை ஒருவரை புகழ அதிகம் யோசிக்க வேண்டாம். ஆனால் எதிர்க்கும் போது அதிகம் தெரிந்திருக்க வேண்டும். கேள்விகளை முன் வைக்கலாம். ஆனால் உடனடி முடிவுகளுக்கு வந்து விடுவது தான் அபாயமானது ; அது பல நேரங்களில் தவறான முடிவுக்கு கொண்டு சென்று விடுகிறது.

நன்றாக வாதாட கூடிய நாத்திகர்கள் ஆத்திகர்களை விட கொஞ்சம் அதிகம் சாஸ்திரம் படித்திருப்பார்கள் இல்லையா! :)

இவர்களை அனைவரைப் பற்றியும் சர்வ சாதாரணமாக ஒரு "generalisation" செய்து விட்டது தான் எனக்கு ஆச்சர்யத்தை அளிக்கிறது.

இதை 1. மேம்போக்காக அணுகவில்லை 2. prejudice இல்லாத மனப்பான்மையுடன் அணுகி இருக்கிறேன்

மேற் கூறிய இரண்டுக்கும் உங்களால் ஆம் என்று கூற முடியுமா? ( நான் எதுவும் சண்டைக்கு வருவதாக நினைத்துக் கொள்ளாதீர்கள். நான் வாழும் கலையிலும் உறுப்பினர் இல்லை, இஷா யோகவிலும் இல்லை)

 
At Wednesday, 12 March, 2008, Blogger Unknown சொல்வது...

//கடவுள் உண்டு என்பவனை நம்பலாம், கடவுள் இல்லைன்னு சொல்லிகிறானே அவனையும் நம்பலாம். ஆனால் நான் தான்
கடவுள்னு சொல்லுகிறான் பாரூ, அவன மட்டும் நம்ப கூடாது"
எப்படி? சரியா //

இதைப் படித்து விட்டு ஒரு முஸ்லீம் சாமியாரைப் பற்றிக் கேட்டதை அடி! தொடப்பத்தால!! எழுதியிருக்கிறேன். இயன்றால் பார்வையிடவும்.

 
At Wednesday, 12 March, 2008, Blogger ramachandranusha(உஷா) சொல்வது...

வந்தியதேவன், முதலிலேயே சொல்லிவிடுகிறேந் எனக்கு இந்த மாதிரி மனிதர்களிடம் எந்த நம்பிக்கையும் இல்லை. இரண்டு
அல்லது மூன்று நாள் பணம் கட்டி கற்றுக்கொள்ளும் (ஆளுக்கு ஒரு யோக பெயர்) யோகாவால் எந்த பலனும் வருவதில்லை. அவர்கள்
செய்வது என்னவென்றால் வீட்டில் மேற்படி குருவின் படத்தை மாட்டி (சைஸை பொறுத்து விலை) வணங்குவதும், பஜனை செய்வதும் தான். இவை எல்லாம் நான் கண்டு உணர்ந்த விஷயங்கள்.
தன்னை கடவுளாக கும்பிட அனுமதிக்கிறார்கள். தங்க, வைர கீரிடங்கள் அணிந்து காட்சி அளிக்கிறார்கள். அதீத ஆடம்பரம்
தேவையா? ஏதோ மருத்துவமுகாம் நடத்துகிறார்கள், முதியவர்களுக்கு கண் பரிசோதனை எல்லாம், அங்கு டிவோட்டிகளாய் இருக்கும் மருத்துவர்கள் செய்கிறார்கள். பள்ளி, கல்லூரி நடத்துகிறார்கள் என்றால் அப்பள்ளி என்ன ஏழை மக்களுக்கு
இலவசமாய் நடக்கிறதா? நல்ல விஷயங்களை சொல்கிறார்கள், ஒத்துக் கொள்கிறேன் இதை தென்கச்சி சாமிநாதன் போன்றவர்களும்
வருட கணக்காய் சொல்லிக் கொண்டுதானே இருக்கிறார்கள்.
மிக மிக வருத்தம் தரும் விஷயம், கண்கூடாய் பார்த்தது, பணக்காரர்கள் பணத்தைக் கொட்டுகிறார்கள். ஆனால் தொண்டர்கள் தேவையில்லையா, அதற்கு சிறு வயது பிள்ளைகள். படிப்பை துறந்துவிட்டு, ஆன்மீகம் என்று நினைத்து வாழ்வை நாசமாக்கிக்
கொள்கிறார்கள். இதற்கு என்ன சொல்கிறீர்கள்?

 
At Wednesday, 12 March, 2008, Blogger enRenRum-anbudan.BALA சொல்வது...

உஷாஜி,

இந்த சாமியார்களில் முக்கால்வாசி பேர், தேறாத கேஸ் என்பது தான் யதார்த்தம். மேலும், மண்ணுலக மாந்தர் தம்மை உய்ய வைக்க வல்லவர்கள் எல்லாம் ஒரு 600-700 ஆண்டுகளுக்கு முன்னமே காலாவதி ஆயிட்டாங்க :(

இப்ப இருக்கிற (முக்கால்வாசி) சாமியார்களெல்லாம், ஆன்மீகத்தை வச்சு பிஸினஸ் பண்றவங்க! அப்பாவிகளும், ஏகமா பணத்தை வைத்துக் கொண்டு நிம்மதியைத் தேடறவங்களும்(!), உருப்படாத விஐபிகளும் அவங்களை ஏத்தி விட இருக்கவே இருக்காங்க தானே!

Point to Ponder:
இந்த பணக்காரச் சாமியார்களை பணம் கொடுக்காம பார்க்க முடியுமா, சொல்லுங்க ????

எ.அ.பாலா

 
At Wednesday, 12 March, 2008, Blogger குமரன் (Kumaran) சொல்வது...

//தினமும் புது புதுதாய் சொல்லுதல், //

இப்படி வேற நினைச்சுக்கிட்டு இருக்கீங்களா? புதுசு புதுசா தினம் தினம் சொல்ல வேண்டாம். நாப்பது வருடமா அதையே சொன்னாலும் கேப்போம் நாங்கெல்லாம். ஏதாவது கேட்டா 'உண்மை' எப்பவுமே ஒன்றே ஒன்று தான். அதனைத் தான் கூற முடியும். புதுமையை நீங்க விரும்புறதால 'உண்மை' மாறிடுமான்னு எதிர்கேள்வி வைப்போம். :-)

 
At Wednesday, 12 March, 2008, Blogger வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) சொல்வது...

நம் நம்பிக்கையும், நம்பிக்கை இன்மையும் நாம் அப்போது வைத்திருக்கும் விஷய ஞானத்தின் அடிப்படையில் வருகிறது. யானையின் வாலைத் தடவிய குருடன், யானை பாம்பு போல் இருக்கும் என்றானாம். அதன் காலை தடவிய மற்றொரு குருடன் அது தூணைப் போல் இருக்கும் என்றும் காதை தடவியவன் முறத்தைப் போல என்றும் நம்பிக் கொண்டார்களாம்.

// இரண்டு அல்லது மூன்று நாள் பணம் கட்டி கற்றுக்கொள்ளும் (ஆளுக்கு ஒரு யோக பெயர்) யோகாவால் எந்த பலனும் வருவதில்லை. //

எவ்வாறு செய்ய வேண்டும் என்ற அடிப்படையை கற்றுக் கொண்டால் பின் அதை தினமும் செய்ய வேண்டியது நம் கையில் இருக்கிறது. அதைச் செய்யாமல் பலன் இல்லை என்றால் ஒப்புக் கொள்ள மாட்டேன். ( நானும் மைலாப்பூரில் பதினைந்து நாள் யோகா கற்றுக் கொண்டேன். நன்றாக இருந்தது. ஆனால் அதற்கு அப்புறம் செய்யவில்லை. அது என் தவறு.)

// அவர்கள் செய்வது என்னவென்றால் வீட்டில் மேற்படி குருவின் படத்தை மாட்டி (சைஸை பொறுத்து விலை) வணங்குவதும், பஜனை செய்வதும் தான். இவை எல்லாம் நான் கண்டு உணர்ந்த விஷயங்கள்.//

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவர்களை வானுறையும் தெய்வத்துள் வைக்கிறார்களோ என்னமோ...வள்ளுவர் வாக்கு படி மக்கள் நடக்கிறார்கள்!என்ன தவறு? :) உண்மையில் இதை நான் கேலியாக சொல்லவில்லை.

// தங்க,வைர கீரிடங்கள் அணிந்து காட்சி அளிக்கிறார்கள். அதீத ஆடம்பரம் தேவையா? //

இதை எல்லாரும் செய்கிறார்களா என்று தெரியவில்லை. (ரவிசங்கர், ஜக்கி வாசுதேவ் கூட செய்கிறார்களா?)செய்பவர்கள் ஏன் செய்கிறோம் என்ற விளக்கம் அளித்திருந்தால் அதையும் நான் படிக்கவில்லை. ஆனால் எனக்கும் இது ஏற்புடையதாக படவில்லை.

//நல்ல விஷயங்களை சொல்கிறார்கள், ஒத்துக் கொள்கிறேன் இதை தென்கச்சி சாமிநாதன் போன்றவர்களும் வருட கணக்காய் சொல்லிக் கொண்டுதானே இருக்கிறார்கள். //

தென்கச்சி கூட இவர்கள் சொல்வதில் இருந்து தான் எடுத்து சொல்கிறார். தென்கச்சிக்கு போவானேன், நம் வீட்டு பாட்டி கூட நல்லது கூறுகிறாள். (அவ்வை பாட்டி கூட மூதுரையில் என்ன சொல்கிறார் பாருங்கள் - நல்லாரைக் காண்பதுவும் நன்றே, நலமிக்க நல்லார் சொல் கேட்பதுவும் நன்றே.....) இரண்டாம் வகுப்பு அறிவியல் ஆசிரியர் animals and plants பற்றி நடத்துவார். பத்தாம் வகுப்பு ஆசிரியர் animal cell and plant cell பற்றி நடத்துவார். இருவர் நடத்துவதும் அறிவியல் என்றாலும் வித்தியாசம் இருக்கிறது அல்லவா?

//அதற்கு சிறு வயது பிள்ளைகள். படிப்பை துறந்துவிட்டு, ஆன்மீகம் என்று நினைத்து வாழ்வை நாசமாக்கிக் கொள்கிறார்கள். //

இந்த படிப்பை 'துறந்து விட்டு' என்ற விஷயம் எனக்கு சரியாக தெரியவில்லை. எனக்கு தெரிந்த வரை பாடத்துடன் ஆன்மிகம் என்று தான் இந்த சிறு பிள்ளைகள் படிக்கிறார்கள். நானே பார்த்திருக்கிறேன் ஒரு இடத்தில்.

நான் என் வலைப்பதிவில் எழுதியதை விட உங்கள் பின்னூட்டத்தில் தான் அதிகம் எழுதி இருக்கிறேன் என்று நினைக்கிறேன். :) ( சுயமாய் எனக்கு எதுவும் எழுத வரவில்லையோ என்னமோ? )

 
At Wednesday, 12 March, 2008, Blogger ramachandranusha(உஷா) சொல்வது...

துளசி, இடை தரகர் வேண்டாம்னு இங்க சொல்லிட்டு, உங்கூரூக்கு வார ஒரு ஆனந்தா வகுப்பையும் விடுவதில்லைன்னு கேள்வி ப்பட்டேன் :-)

சுல்தான் பாய், படித்தேன், சிரித்தேன். என்னத்தான் சொல்லுங்க பொம்பளைங்க விவரமானவங்க இல்லையா? அண்ணாச்சி
இதை எல்லாம் படிக்க மாட்டார் என்ற தைரியம் :-)

சர்வேசா, யோகா என்பது தனிபட்ட குருவிடம் தொடர்ந்து கற்றுக் கொள்ளும் விஷயம், மூன்று நாளில் ஜாவா கற்றுக் கொள்ளுங்கள்
என்ற மணிமேகலை பிரசுரத்தால் எந்த பயனும் இல்லை.

வந்தியதேவன், நல்ல அலசல், ஆனால் நம்பிக்கைக்கும் நம்பிக்கை இன்மைக்கு இடையே நடக்கும் இவ்வாக்குவாதத்துக்கு
முடிவே இல்லை. அடுத்த முறை ஏதாவது ஆசிரமம் போக நேர்ந்தால், ஆன்மீக மூளைசலவை செய்து அவர்களின் எதிர்காலத்தை நாசமாக்குவதைப் பார்ப்பீர்கள்.

எ.அ. பாலா, இவர்கள் அமைத்துக்கொண்ட சாம்ராஜ்ஜியத்தின் அரசர்கள். இவர்கள் சேர்த்த சொத்து, இவர்களின் காலத்துக்கு பிறகு என்னவாகும்?

குமரன், புதுசு போல காட்சியளிக்க, இட்லி மாவு - பிரைட் இட்லி, மசாலா இட்லி, தோசை, பணியாரம், ஊத்தப்ப்பம் அண்டு
சோ ஆனாய் அவதாரம் எடுப்பதில்லையா? அதுப் போலதான் :-)

 
At Friday, 14 March, 2008, Blogger ரசிகன் சொல்வது...

//வித விதமாய் செய்திகள் காதில் விழுந்துக் கொண்டு இருக்கின்றன. அருகில் தரிசிக்க ஐநூறு ரூபாய் கட்டணம். காலை தொட்டு கும்பிட/ நம்ஸ்கரிக்க ஆயிரம் ரூபாய் கட்டணம். தெய்வமே! எப்படியோ எனக்கு ஒரு கதை எழுத சூப்பர் மேட்டர் கிடைத்தது!//

சூப்பர் :)))))))

 
At Friday, 14 March, 2008, Blogger rravish சொல்வது...

the last true saint I knew is Chandrashekarendra Saraswathi! I dont think anyone else qualify to be called even anything close to a saint.

The sad part is, even Chandrasekarendra took a mis-step in installing Jayendra Saraswathi and later {whatever his name is}

 
At Monday, 17 March, 2008, Blogger Unknown சொல்வது...

//அல்லது மூன்று நாள் பணம் கட்டி கற்றுக்கொள்ளும் (ஆளுக்கு ஒரு யோக பெயர்) யோகாவால் எந்த பலனும் வருவதில்லை. //

என்னை மிகவும் வருத்திக் கொண்டிருந்த, பரம்பரையாக வந்த நோய், மேலே குறிப்பிட்ட ஒருவரின் யோக வகுப்பில் மூன்றே நாட்களில் தீர்ந்தது. கடந்த 8 ஆண்டுகளாக அந்நோயிடமிருந்து முழுமையாக விடுபட்டிருக்கிறேன்...BLOG என்ற பெயரில் உங்களது அரை வேக்காட்டுத்தனத்தை தயவு செய்து பரப்பாதீர்கள்

 
At Monday, 17 March, 2008, Blogger ramachandranusha(உஷா) சொல்வது...

ரசிகன் நன்றி :-)

ரரவீஷ், பெரியவரின் எளிமையைப் பற்றி ஒருமுறை படித்தது. எங்கு சென்றாலும் நடைதான். கூடவே வரும் ரிக்ஷாவில்அவரின் சில உடமைகளும், பூஜை சாமான்களும் இருக்குமாம். மிக களைப்பாய் இருந்தால், ரிக் ஷாவைப் பிடித்துக் கொண்டு நடப்பாராம். அவரின் உணவும், ஒரு பொழுது, சில கவளங்கள் மட்டுமே. துறவி அழகு எளிமை

திரு. நந்தன், மிக்க மகிழ்ச்சி. உங்களுக்கு விருப்பம் இருந்தால், நோயை பற்றியும், அதன் சரியான விதம் பற்றியும் சொன்னால், பலருக்கும் உதவியாய் இருக்கும்.

 
At Monday, 17 March, 2008, Blogger Unknown சொல்வது...

கடுமையான ஆஸ்துமா. அடிக்கடி என் தாயருக்கும் வருவது தான். பள்ளிக்கு சென்றால் 'வீஸிங்' வந்து பாதியில் பல நாள் வீட்டிற்கு அனுப்பி விடுவார்கள். இன்று சொன்னால் கொஞ்சம் டூமச் சாகத் தான் இருக்கும். என் அம்மாவிடம் நான் சொல்வேன் “ஹில்லர் அடுத்த தலைமுறை நன்றாக இருக்க வேண்டும் என்று நோய் வாய்ப்பட்டவர்களையெல்லாம் கொன்று விடுவானாம். அது ரொம்ப சரி. நான் இன்று கஷ்டப்படுகிறேன்” என்று. அப்படியானால் என்ன ஒரு துன்பம் என்று யூகிக்கலாம். இதிலிருந்து விடுபடுவேன் என்று கற்பனையும் செய்ததில்லை. பதிமூன்று நாட்களில் என்ன மாறிவிடப்போகின்றது அன்று நம்பிக்கை இலாமல் தான் போனேன். மூன்றே நாள் தான். கடந்த 7ஆண்டுகளாக ஆஸ்துமா என் பக்கம் எட்டிப் பார்க்கவே இல்லை. இது மந்திரத்தினால் நடக்கவில்லை. சிலரிடம் சரியான கருவி இருக்கிறது. அவ்வளவு தான்.

 
At Sunday, 30 March, 2008, Blogger Vetirmagal சொல்வது...

You have made relevant points.

I too wonder, sometimes, why do these gurus let all those slums sprout around ? Why is that the poor are getting more poorer ? How come those powerful poeple who endorse these gurus do not lift a finger to develop the roads, hospitals and educational facilites for the down trodden?

Where is the middle class going?

Very confusing indeed.

Thanks for sharing your thoughts with fellow bloggers. It is refreshing to hear some sane voices .

 
At Friday, 04 April, 2008, Blogger ramachandranusha(உஷா) சொல்வது...

நந்தன், விளக்கத்திற்கு நன்றி.

வெற்றிமகள், எனக்கு தெரிந்த மருத்துவர், இத்த்கைய ஸ்தாபனம் நடத்தும் மருத்துவமனைவில்
சர்ஜனாய் இருக்கிறார். சேவை செய்தால் புண்ணியம் என்று இலவச முகாம்களில் அவரை வர
சொல்லி வற்புறுத்தினார்களாம்.

அடுத்து மிடில்கிளாஸ் மெண்டாலட்டி, எத்தை தின்றால் பித்தம் தெளியும் :-)

 

Post a Comment

<< இல்லம்