Tuesday, April 15, 2008

அந்த ஒரு சொல்

எத்தனை வருடங்கள் னாலும் திருவல்லிக்கேணி மட்டும் மாறவே மாறாது. சந்து சந்தாய் தெருக்கள். சாணி நாற்றம், மூத்திர வாடை, வாசலில் கோலம், பச்சை பசுமையாய் காய்கறிக்கூடைகள். சில புதிய அடுக்குமாடிக் குடியிருப்புகள் மட்டும் கண்களை உறுத்தின.

ஆட்டோ இடதுபக்க சந்தில் திரும்பியதும், கடற்காற்று ஜில் என்று முகத்தில் மோதியது. படபடத்த புடைவையை இழுத்து சொருகிக் கொண்டேன்.

மணியைப் பார்த்தால் நாலேகால். நாலுமணிக்கு கூட்டம் என்று பத்மா சொன்னதாய் நினைவு. அப்படி நம் ஊரில் சொன்ன நேரத்தில் ஆரம்பித்துவிடுவார்களா என்ன? அவள் வீட்டுக்கு வருகிறேன் என்று போன் செய்துக்கூட சொல்லவில்லை. ஆனால் நான் எப்படியும் வந்துவிடுவேன் என்பது அவளுக்கு தெரியும்.

ஏதோ விளையாட்டாய் சிரிக்கப்போக, கோபித்துக் கொண்டு இரண்டு நாளாய் என்னைப் பார்த்தாலே முகத்தைத் திருப்பிக் கொள்ளும் தோழியை சமாதானப்படுத்தவும், பார்த்தசாரதி பெருமாளையும் பார்த்துவிடலாம் என்றும் புறப்பட்டு விட்டேன்.

இரண்டு நாட்களுக்கு முன்பு, வெள்ளிக்கிழமையன்று, அலுவலக மதிய சாப்பாட்டு வேளையில், "ஒரு மேட்டர் இருக்கு. நீ இதை கதையாய் கூட எழுதலாம்" என்று பத்மா பரபரப்பாய் ஆரம்பித்ததும், என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை. அவள் முகம் மாறிப்போனது.

என்னை சமாளித்துக் கொண்டு அவளை சமாதானப்படுத்தும் தோரணையில், "இல்லே பத்மா, ஏதோ ரெண்டு கதை வெளியானதும், என்னைப் பார்த்தாலே ஆளு ஆளுக்கு
கதை சொல்ல ரம்பிச்சுடராங்க. காலைல நம்ம அலுவலக உதவியாளர் அசோக் இல்லே........." நான் முடிக்கும் முன்பு "தோ பாரூ! வர ஞாயிற்றுகிழம, சாயந்தரம் நாலுமணிக்கு எங்க குடியிருப்புச் சங்க கூட்டம் நடக்க போகுது. விஷயம் இருக்கு. உனக்கு விருப்பம் இருந்தா வா. எங்க மாமியாய் உன்கிட்ட சொல்ல சொன்னங்க" என்றுச் சொல்லிவிட்டு விருட் என்றுப் போய்விட்டாள்.

ஞாயிற்றுகிழமை மதியத் தூக்கத்தைத் துரந்துவிட்டு, அவளுக்கு என் மீது ஏற்பட்ட கோபத்தைத் தணிக்க வேறு வழியில்லாமல் கிளம்பிவிட்டேன்.

திருவல்லிக்கேணியின் வழக்கமான சந்து. பழைய கட்டிடத்தை இடித்து, இரண்டு மாடிக்கட்டிடம். கீழ்தளத்தில் முன்பக்கம் வண்டி நிறுத்த இடம் விட்டு, பின்னால் இரண்டு குடியிருப்புகள். முதல் மாடியில் நான்கு, இரண்டாம் மாடியில் நான்குமாய் மொத்தம் பத்து வீடுகள். லிப்ட் இல்லை. மாடிப்படி ஏறினேன். வளைவில் திரும்பும்பொழுது, எதிரில் வேகமாய் வந்த பெண்ணின் மீது மோத இருந்தேன். மாடியில் துணி காயப் போட்டு இருந்தாள்போல, கையில் ஏகப்பட்ட துணிகள்.

சாரி சாரி என்று வாய் முணுமுணுக்க நிமிர்ந்துப் பார்த்தால், நன்கு அறிமுகமான முகம்.என்னையறியாமல் புன்னகைக்க, எந்த உணர்வும் காட்டாமல் வேகமாய் தாண்டிப்
போனார். எதிரில் திறந்திருந்த முன்றாம் எண் கதவு வாசலில் பத்மா!

"பத்மா, இப்ப போறாங்களே அவங்க சினிமா ஸ்டார் டூமில்தேவிதானே?" என்று கொஞ்சம் வேகமாய் கேட்டேன்.

சிரித்துக் கொண்டே, " வாங்க ரைட்டர் மேடம், செய்தி அதேதான். அதுக்காகதான் இன்னைக்கு வரச் சொன்னேன். மொட்டை மாடியில, சங்கக்கூட்டம் நடக்க போகுது. மொதல்ல சூடா ஒரு காபி குடிச்சிட்டு போகலாம்" என்றாள்.

காபி குடித்துக் கொண்டே பத்மாவுடன் பேசிக் கொண்டு இருந்தாலும், மனம் டூமில் தேவி நினைவாய் இருந்தது. அறுபதுகளில் நடன காட்சிகளில் கூட்டத்தில் ஒருவராய் அறிமுகமாகி, நாயகனின் தோழி, காமடியனின் காதலி, நாயகனின் முறை பெண் என்று நாலைந்து வசனம் பேசிக் கொண்டு இருந்தவர், ஒரு கட்டத்தில் காணாமல் போய் மீண்டும் வில்லனின் காதலி, அறைகுறை டையில் கிளப் டான்ஸ் ஆடுபவர் என்று படங்களில் வர ஆரம்பித்தார், இந்த டூமில் என்ற பட்ட பெயர் அப்பொழுது ஏற்பட்டு இருக்கலாம். வயதாக ஆக, சின்ன சின்ன ரோல்களில் தலையைக் காட்டிக் கொண்டு இருந்தார். சீரியல்கள் வந்த புதியதில் ஒன்றிரண்டில் நடித்தவர், இப்பொழுது அதிலும் காணவில்லை.

மேலே படியேறிப்போனால், ஷாமீயானா போட்டு, பிளாஸ்டில் சேர்கள் போடப்பட்டு இருந்தன. வரவேற்புரை வழங்கிக் கொண்டு இருந்த பத்மாவின் மாமியார் என்னைப் பார்த்து தலையை ஆட்டி, வரவேற்றார்.

"எங்க மாமியார்தான் சங்க செயலாளர். இன்னைக்கு ஆண்டுவிழா.ஆனா மேட்டர் அந்த சினிமா ஸ்டார்தான்"

கணக்கு வழக்குகள், குடிநீர் பிரச்சனை, வாட்ச்மேன் தகராறு என்று பேசினார்கள். நடுவில் கிருஷ்ணாபவன் மைசூர்பாவும், ஒரு கை மிக்சரும் கொண்ட சின்ன பிளாஸ்டிக் டப்பா எல்லாருக்கும் வழங்கப்பட்டது. கூடவே காகித அட்டை பெட்டியில் அடைத்த ஒரு குளிர்பானமும். கசகசாவென்று பேச்சு சத்தம். சங்கத் தலைவர் போல, ஒரு ஆள் வழுக்கைதலை மின்ன எழுந்து நின்றார். கூட்டம் அமைதியானது.

"நம்பர் 1ல புதுசா வந்திருக்கிற டூ.... மீல்தேவி மேடம் அவங்கள, காலீ செய்ய சொல்லணும்னு சங்கத்துல நிறைய பேரூ புகார் செஞ்சிருக்காங்க" என்று ஆரம்பித்தார்.
அவர் அருகில் உட்கார்ந்திருந்த பத்மாவின் மாமியார், "நிறைய பேர்ன்ன, யார் யார்ன்னு சொல்ல முடியுமா மிஸ்டர் வரதராஜன்?"

கூட்டத்தில் இருந்து எழந்த ஒருவர், " நான் புகார் பண்ணினேன். மரியாதையான குடும்பம் இருக்கிற இடம் இது. எனக்கு ரெண்டு பொண்ணுங்க இருக்காங்க. என்ன அசிங்கம்?" அடுத்து என்ன சொல்வது என்று தடுமாறினார்.

"பொண்ணுங்க எல்லார் வீட்டிலையும்தான் இருக்காங்க" ஒரு பெண் குரல் முகம் தெரியவில்லை.

''பத்மாக்கா, அசின்னு சிரேயா இவரூ வூட்டு பக்கத்துல குடிவந்தா மூர்த்திசாரூ இன்னா சொல்வாரூ?" நக்கலாய் ஒரு பெண் குரல், பத்மாவின் இடது பக்கத்தில் இருந்து எழுந்தது. பார்க்க வீட்டு வேலை செய்பவள் போன்று இருந்தாள்.

என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை. பத்மாவும் வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு, "செல்வி, நீ சும்மா இருக்க மாட்டே?'' என்று செல்லமாய் கடிந்து கொண்டாள்.

மிஸ்டர் மூர்த்தி, நீங்க ஒருத்தர். அப்புறம் வேற யாரூ ?

சுப்ரமணி சாரும் சொல்லிக்கிட்டு இருந்தார். ஆனா இப்ப அவரூ வெளியூரூ போயிட்டார்.

"எழுத்து வடிவில் எனக்கு வேற எந்த புகாரூம் வரலையே'' பத்மா மாமியார்குரல் அதட்டலாய் கேட்டது.

ஒரு மாதிரி நடுங்கும் குரலில், "நா கொடுத்தது போதாதா? காலங்கார்த்தால வாச கதவ திறந்தா, இந்தம்மா நிக்குறாங்க..." மேலே என்ன சொல்வது என்று தடுமாறியவர்,
"தலைவர் ஐயா நீங்கதான் இதுக்கு ஒரு முடிவு சொல்லணும்"

"யக்கா, இந்தாளூ சின்ன வயசுல அந்தம்மாவ நெனச்சி கனா,கீனா கண்டுக்கீனு இருந்தாரோ? இப்ப காலங்கார்த்தால அதும் மூஞ்சில முழிச்சா, பழைய நெனப்பெல்லாம் வருதோ என்னவோ?'' செல்வியின் பேச்சைக் கேட்டு, முன் வரிசையில் இருந்த பல தலைகள் திரும்பி புன்னகை பூத்தன.

கைக்குட்டையை எடுத்து முகம், தலை என்று துடைத்துக் கொண்டு, "இது மரியாதைப்பட்டவங்க இருக்கிற இடம்" என்று அதே வசனத்தை தலைவரும் சொல்ல ரம்பிக்க, மீண்டும் கசாமுசாவென்று ஆள்ஆளுக்கு பேசஆரம்பித்தனர்.

சாதாரண, கசங்கிப்போன நூல்புடைவை, நெற்றியில் பெரிய சைஸ் பொட்டு, அதற்கு மேலும் கீழும் சாமி குங்குமம், வீபூதி, சந்தனம், கழுத்தில் துளசிமாலை என
மாடிவளைவில் பார்த்த அதே கோலத்தில் நடிகையும் எழுந்து கூட்டத்தின் முன் நின்றார். சத்தம் குறைந்தது.

"நா ஒரு தே.....டியா, இங்க இருக்கக்கூடாதுன்னு சொல்றீங்க! அப்படிதானே?" மிக நிதானமாய் கேட்டதும், வயிற்றில் கத்தி சொருகியதுப் போல இருந்தது. ஒருவித
தர்மசங்கடமான பூரண அமைதி நிலவியது.

''என்ன செய்ய என் தலைவிதி. இப்ப எல்லாத்தையும் வுட்டுட்டு, பெருமாள் கோவில், ராகவேந்திரர் மடம், கிருஷ்ணன் கோவில்ன்னு கடைசி காலத்துல நிம்மிதியா இருக்கலாம்னு, காத்துவெளிச்சம் இல்லாத இந்த வீட்ட வாங்கினேன். என்னால யாரூக்கு என்ன தொந்தரவுன்னு சொல்ல முடியுமா? வீட்ட காலிபண்ண முடியாது" மிக நிதானமாய், ஆனால் அழுத்தமாய் சொல்லிவிட்டு, கூட்டத்தில் இருந்து வெளியேறினார்.

தலைவர் ஏதோ சொல்ல ஆரம்பிக்க, கூட்டத்தில் இருந்த இன்னொரு நடுவயது பெண் எழுந்து, " அவங்க தன்னோட நெலமைய சொல்லிட்டாங்க. வயசான காலத்துல
கோவில் குளம்னு இருக்கலாம்னு இங்க வீடு வாங்கியிருக்காங்க. அந்தம்மா அதிகம் யாருக்கூடவும் பேச்சு கூட வெச்சிக்கிறதில்லை. இந்த மேட்டரை இத்தோட விட்டுடலாம்" என்றதும், மீண்டும் கசகசவென்று பேச்சு சத்தம்ஆரம்பித்தது.

பத்மா மாமியார் "அமைதி" என்று மேஜையை ஓங்கி தட்டினார். கூப்பாடுகள் நின்றன. எதுவுமே நடக்காதது போல, தலைவர் மீண்டும் எழுந்து ஆண்டறிக்கை வாசிக்கஆரம்பித்தார். நாற்காலியை வேகமாய் தள்ளிவிட்டு மூர்த்தியும் வெளியேறினார். மணி பார்த்தேன். பத்மாவைப் பார்த்து ''நேரமாச்சு'' என்றேன். நாங்கள் எழுந்ததை பார்த்து பத்மா மாமியார் திரும்பி பார்க்க, போன் செய்கிறேன் என்று சைகை செய்தேன். வாசல்கேட் அருகில் வந்ததும், பத்மா செல்பேசியில் தெரிந்த ஆட்டோவை அழைத்தாள்.

"பத்மா, வீட்டுக்கே போயிடரேன். கோவிலுக்கு எல்லாம் வேண்டாம். அவங்க தன்னை சொல்லிக்கிட்ட அந்த ஒரு சொல் என்னை ரொம்ப கஷ்டபடுத்துது'' ஏனோ தொண்டையை அடைத்தது.

''அந்த ஆளு மூர்த்தி மட்டுமில்லே, இன்னும் ரெண்டு மூணு பேரூங்க இந்தம்மா இங்க இருக்கக்கூடாதுன்னு சொல்லிக்கிடு இருந்தாங்க.ஆனா கூட்டத்துல வாயையே திறக்கலை. என்ன ஆம்பள புத்தி? தேவைக்கு கசக்கி பிழிஞ்சிட்டு, இன்னைக்கு சக்கைன்னதும் தூக்கிப் போட்டு மிதிக்க வேண்டியது!''

"ஆண்களை மட்டும் குத்த சொல்லி புண்ணியமில்லை. பன்னண்டு, பதிமூணு வயசுல காசுக்காக சினிமால நடிக்க அனுப்பியது அவங்க அம்மாவாகூட இருக்கலாம் இல்லையா?''

''இருக்கலாம்.ஆனா வேணும்போது விசிலடிச்சி ரசிக்க வேண்டியது, தேவைக்கு இந்தமாதிரி பெண்களைப் பயன்படுத்திக்க வேண்டியது, இன்னைக்கு ஊருக்கு முன்னால உத்தம வேஷம் போடுவது சரியா? பக்கத்து வீட்டுல இருந்தா இந்தாளுக்கு ஏன் உறுத்துது?''

'ஆணின் இயல்பான பயம் பத்மா''

''விவரம் தெரியாத வயசில நடிக்கன்னு வந்து எவ்வளவு எல்லாம் அசிங்கப்பட்டு இருக்கணும்.ஆனா பேச்சுல என்ன தெளிவு பார்த்தீயா? நாம எல்லாம் சின்ன சின்ன
விஷயங்களுக்கு கூட மனசொடிந்து போயிடரோம்'' பத்மா மேலும் ஏதோ சொல்லிக் கொண்டு இருக்க, குழப்பமான எண்ணங்கள். டூமில் தேவியின் இன்றைய நிலைமையும்
எதிர்க்காலத்தில் அவர் கதி? மனம் பதிலில்லாத கேள்விகளால் குடைந்துக் கொண்டு இருந்தது.

ஏதோ பேசிக் கொண்டிருந்தவள் கையைப் பிடித்து, '' ஒண்ணு கவனிச்சியா பத்மா? எந்த ஆணும் அந்தம்மாளுக்கு தரவா குரல் கொடுக்கவும் இல்லே. எந்த பெண்ணும்
அந்தம்மா இருப்பதற்கு மறுப்பும் சொல்லலே, பார்த்தீயா?" கொஞ்சம் வேகமாய் கேட்டேன்.

பத்மா ஒரு நிமிடம் ஒன்றும் பேசவில்லை. பிறகு, '' இதுக்குத்தாண்டி உன்ன வரச் சொன்னேன்'' என்றாள் முகமெல்லாம் பரவசமாய்.

******************

திரு. கோவை ஞானி அவர்கள் நடத்திய பெண் எழுத்தாளர்கள் சிறுக்கதைப் போட்டி - 2007ல் பரிசுக்கு தேர்வான சிறுக்கதை

Labels:

11 பின்னூட்டங்கள்:

At Tuesday, 15 April, 2008, சொல்வது...

யெக்கோவ்.. கொஞ்சம் ஸ்பெல்லிங் பாருங்களேன். எல்லா ரு வும் ரூவா இருக்கு (உங்க கையில நிறைய ரூவா இருக்குன்னுதான் தெரியுமே)

அப்புறம் சிறுக்கதைன்னு படிச்சாலே கழுத்தை யாரோ அழுத்தற மாதிரி பீலிங் வருது :) சிறுகதை போதாது?

கதையா? ஓக்கே.. முடிச்சு போன பதிவுலயே சொல்லிட்டதால பெரிசா ஆர்வம் ஏற்படுத்தலை.

 
At Tuesday, 15 April, 2008, சொல்வது...

வாழ்த்துகள் :)

வாசித்துவிட்டு இன்னொரு அட்டென்டன்ஸ் இடுகிறேன் :D

 
At Tuesday, 15 April, 2008, சொல்வது...

சரிங்கக்கா. கதை எல்லாம் நல்லாத்தேன் இருக்கு.

ஒவ்வொரு அரசியல்வாதிக்கும் ஒவ்வொரு வோட்டு வங்கி. அதுக்கு சுவாரசியப்படற விஷயங்களைத்தான் பேசுவாங்க. அதான் அரசியல். (இதை நுண்ணரசியல் அப்படின்னு இங்க சொல்லிக்குவாங்க!) உங்க வோட்டு, சாரி, வாசக (வாசகி?) வங்கிக்குப் பிடிக்கிற மாதிரி நீங்க எழுதி இருக்கீங்க.

நீதி: எல்லா ஆம்பிளைங்களும் மோசம். எல்லாப் பொம்பிளைங்களும் நல்லவங்க.

என் புரிதல் சரிதானேக்கா!

 
At Tuesday, 15 April, 2008, சொல்வது...

கதை நல்லா இருக்கு உஷா.அவங்க இப்படி இவங்க அப்படின்னு ஒருத்தர் மேல ஒருத்தர் ஜட்ஜ்மெண்ட் பாஸ் பண்ணரது எவ்வளவு சுலபம்?? யோசிக்கணும்......

 
At Tuesday, 15 April, 2008, சொல்வது...

//நீதி: எல்லா ஆம்பிளைங்களும் மோசம். எல்லாப் பொம்பிளைங்களும் நல்லவங்க.

என் புரிதல் சரிதானேக்கா!//

இல்ல கொத்ஸ் கதை படி அப்படி இருந்தாலும்.......பெண்கள், ஆண்கள் இந்த மாதிரி விஷயத்துல பாக்க முடியாது.....:)

 
At Tuesday, 15 April, 2008, சொல்வது...

சுரேஷ், கணிணியில் கிருமி வந்து கதை காணாமல் போய்விட்டது. அதனால் மீண்டும் தட்டச்சு செய்துப் போட்டேன். பொங்கி வரும் கற்பனையை தட்டுவது சுலபம். :-)புத்தகத்தைப் பார்த்து தட்டச்சு செய்வது, முதுகு கழண்டு விட்டது.பிழை திருத்தம் இனி
நாளை தான். ச. சங்கர், தாமதத்திற்கு காரணம் புரியுதா?

பாபா, படிச்சிட்டு கமெண்ட்டிருக்கலாம் :-)

இலவசம், நான் என்றுமே பெண்ணீயம் என்ற போர்வையில் ஆண்களை குற்றம் சுமத்தியது இல்லை. ஆனால் இப்படிப்பட்ட
பெண்களை, வயதாகிய பிறகு கேவலப்படுத்துவதை நான் பார்த்து இருக்கிறேன். வாரணசியில் தெருவோரம் அமர்ந்திருந்த
வயதான, நோயாளி பெண் மீது எச்சில் முழியும் ஆண்களைப் பார்த்தேன். காரணம் அவள் ஒரு பாலியல் தொழிலாளியாம்.

 
At Tuesday, 15 April, 2008, சொல்வது...

நன்றி ராதா. இலவசத்துக்கு விளக்கம் கொடுத்தாச்சு. என்னை போய் பெண்ணீயவாதின்னுட்டாரே :-)

 
At Wednesday, 16 April, 2008, சொல்வது...

எத்தனை வருடங்கள் ஆனாலும் மதுரை மட்டும் மாறவே மாறாது என்று நாங்கள் எல்லாம் சொல்லுவோம். நீங்கள் திருவல்லிக்கேணியைச் சொல்கிறீர்கள். :)

கதையைப் பத்தி ஏதாவது சொல்லணும்ன்னா - இந்த விதயத்துல பெண்கள் ஆண்களைப் பத்தி சொல்லிட்டீங்க. வரதட்சணை விதயத்துல இது தலைகீழா மாறிடுமோன்னு தோணுது.

 
At Friday, 18 April, 2008, சொல்வது...

பதிவு ரொம்ப சின்னதா இருக்கு. பாதி படிச்சிருக்கேன் மீதிய படிச்சிட்டு வரேன்.

 
At Friday, 02 May, 2008, சொல்வது...

வணக்கம் உஷா. நான் கல்யாண்குமார். அந்த ஒரு சொல் மிக அழுத்தமான சிறுகதை. பாராட்டுக்கள். தொடர்ந்து இதுமாதிரி கனமான விஷயங்களையே எழுதுங்கள். வலைப்பூவும் நேர்த்தியாக இருக்கிறது. எனது வலைப்பூவிற்கு விஜயம் செய்ய அழைக்கிறேன். பதிலிடுங்கள். நன்றி
kalyanje.blogspot.com
kalyangii@gmail.com

 
At Saturday, 03 May, 2008, சொல்வது...

குமரன், பெரும்பாலும் பல ஊர்கள்/ இடங்கள் மாறிவிடுகின்றன. மயிலை வட்டமும் அதிகம் மாறவில்லை.

மங்களூர்சிவா, படிச்சாச்சா?

கல்யாண்குமார், நன்றி. கனமான விஷயங்களும் உண்டு. அதைவிட, நகைச்சுவை எனக்கு மிக பிடிக்கும். நையாண்டி, அங்கத பிரிவில் நிறைய எழுதியிருக்கிறேன். உங்க வலைப்பதிவையும் பார்த்தேன். மதுமிதா நண்பரா? அப்ப எனக்கும் பிரண்டுதான் :-) ஹூம்! பெரிய ஆளுங்க எல்லாம் வலைப்பதிய ஆரம்பிச்சாச்சு :-)))

 

Post a Comment

<< இல்லம்