Wednesday, June 04, 2008

இமயம் கண்டேன், கண்டே விட்டேன்- 1

ஆயிற்று மணி நான்கு. இன்னும் மூட்டை கட்டவில்லையா என்றுக் கேட்டவரிடம், இதோ இதோ என்று சால்ஜாப் சொல்லிக் கொண்டு இருந்தேன். காரணம் டெல்லியில் இருந்து காட்மாண்டு செல்ல, பேப்பர் டிக்கெட் இன்னும் கையில் கிடைக்கவில்லை. சூரத் முகவரியில் இருந்த கூரியர் சர்வீஸ்காரர்களுக்கு போன் செய்து அலுத்துவிட்டது. ஒருமுறை கூட போன் எடுக்கப்படவில்லை. மேக் மை டிரிப் மூலமாய் அனைத்து விமான, ஹோட்டல் பதிவு செய்ததால், அவர்களிடம் விசாரித்துக் கொண்டு இருந்தோம். நாலே முக்கால், கூரியர் பையன் வாசல் மணி அடிக்கும்பொழுது! செல் பேசி எடுக்கவே மாட்டீங்களா என்றுக் கேட்டால், ஏதோ முணங்கிவிட்டு நடையைக் கட்டினான்.

காலக்காலமாய் மூட்டை கட்டி பழக்கம் என்பதால், எல்லாவற்றையும் எடுத்து வைத்துவிட்டு, அறைகுறையாய் மிச்சம் மீதியை வாயில் போட்டுக் கொண்டு. பாத்திரங்களை கழுவி கவுத்திவிட்டு, எல்லா கதவை பூட்டிவிட்டு, மூட்டைகளை வாசலில் வைக்கும்பொழுது மணி ஏழே முக்கால். எட்டுமணிக்கு ஸ்டேஷனுக்கு கிளம்ப வேண்டும். செல் அடித்தது எடுத்தால், குஜ்ஜார் போராட்டம் காரணமாய் டெல்லி செல்லும் ரயில் கேன்சல் என்ற செய்தி!

ஓடி சென்று மீண்டும் மேக் மை டிரிப்பில் மறுநாள் ஞாயிறு பரோடா - டில்லி விமானம் இருக்கிறதா என்றுப் பார்த்தால், திங்கட்கிழமை காலைக்கு இருந்தது. எங்கள் டில்லி- காத்மாண்டு விமானம், திங்கள் மதியம் என்பதால், அதற்கு புக் செய்தோம். முதலில் டில்லி ரயிலில் பயணம் என்பதால், ஞாயிறு முழுக்க ப்ரி என்பதால், அன்று நேராய் மதுரா,
ஆக்ரா போகலாம் என்ற உத்தேசத்தில் ஆக்ராவில் தங்க ஹோட்டல் அறை புக் செய்திருந்தோம். பயணம் மாறிப் போனதால், ஹோட்டல் புக்கிங்கை கேன்சல் செய்தால், காசு எள்ளு என்று பதில் வந்தது. அவர்கள் அப்படி சொன்னால் நாம் சும்மா இருக்க முடியுமா, மேக் மை டிரிப்புக்கு, உன்னிடம் எத்தனை முறை விமான, ஹோட்டல் புக்கிங் செய்திருக்கிறோம், கொஞ்சம் கருணை காட்ட கூடாதா என்ற மெயிலுக்கும், சர்வீஸ் சார்ஸ் பிடித்துக்குக் கொண்டு, மிச்சம் வந்துவிடும் என்று பதில் வந்தது.

திங்கட்கிழமை அதிகாலை, காரில் பரோடா (நான்கு மணிநேரம் )வுக்கு பயணித்து, விமானத்தில் ஏறி உட்கார்ந்தால், டில்லியில் வானிலை சரியில்லை அதனால்
அங்கு இறங்க முடியவில்லை என்றால், நேராய் அகமதாபாத்க்கு விமானத்தை கொண்டுப் போய்விடுவோம் என்ற பயமுறுத்தல். ஆஹா, என்ன சூ சகுனம், செம்ம த்ரிலிங்காய்
இருக்கப் போகிறது நம் பயணம் என்று மகனிடம் சொன்னால், ஒரு முறை முறைத்தான். சரி, அகமதாபாத்தில் இருந்து எங்கு போகலாம் என்று முன் யோசனையுடன் கேட்டால், டில்லி- காத்மாண்டு- டில்லி, காத்மாண்டு ஹோட்டல், வரும்பொழுது டில்லியில் ஒரு நைட் தங்கல், மீண்டும் டில்லி பரோடா விமான செலவு மொத்த நஷ்டம் எவ்வளவு என்றுக் கூட்டி சொல் என்றார் சோகமாய் என் கணவர். ஆனால் எந்தவித பிரச்சனையும் இன்றி விமானம் டில்லியில் இறங்கி, ஒன்றரை மணிநேர தாமத விமானத்தில் நேபாளம் புறப்பட்டோம்.

விமானத்தின் வலது பக்கம் உட்கார்ந்தால், இமாலய சிகரங்களைப் பார்க்கலாம் என்ற செய்தி, இணையம் மூலம் கண்டுப்பிடித்த மகன், விண்டோ சீட்டை பிடித்துக் கொண்டான். கூட்டம் இல்லாததால், எனக்கும் ஒன்று கிடைத்தது. அதிக மேக மூட்டம் இருந்ததால், ஓரளவே பார்க்க முடிந்தது. ஆனாலும் பனி மூடிய, வழிந்த சிகரங்கள் அருமை.

விமானம் காத்மாண்டுவில் இறங்கி, ஹோட்டலுக்குப் போகும்பொழுது மணி ஏழு ஆகிவிட்டது. சாமானை அறையில் வைத்துவிட்டு, தெருவில் சும்மா இந்த பக்கம் அந்த பக்கம் நடந்துவிட்டு, நேபாளி வெஜ் தாலி சாப்பிட்டு விட்டு படுத்துவிட்டோம். காலை ஏழு மணிக்கு ஹோட்டல் மூலம் ஏற்பாடு செய்திருந்த காரில் பசுபதிநாதரை பார்த்துவிட்டு,
போத் நாத் (அதுதான் கண்ணு படம் வரைந்து இருக்குமே, இமயம் கண்டேன் என்று குண்டு சிவாஜி, நேபாளி தொப்பி அணிந்து, இன்னும் ஒரு குண்டு ஸ்ரீவித்யாவுடன் டூயட் பாடுவாரே அந்த கோவில்) , சுயம்பு நாத் பார்த்துவிட்டு, மாலை பதான் சென்றோம். பார்க்க பார்க்க பிரமிப்பை தந்த இடம், அடுத்து காத்மாண்டுவின் தர்பார் ஸ்கொயர்.

பதான், காத்மாண்டு, பக்தாபூர் இம்மூன்று இடங்களிலும் தர்பார் ஸ்கொயர் என்ற இடம் இருக்கிறது. கண்ணுக்கு தெரிந்த இடங்களில் எல்லாம் அரண்மனை, பலவித கோவில்கள் நிறைந்த இடமே தர்பார் ஸ்கொயர் என்பது. ஆஹா, டிரிப் சூப்பர் என்று நினைத்து இரவு படுக்கையில் விழும்பொழுது விதி எங்களைப் பார்த்து சிரித்துக் கொண்டு இருந்தது. ஆனால் அப்படி எல்லாம் விதியை சிரிக்க அனுமதிப்போமா என்ன :-)

நாளை தட்சிண் காளி, நீல் கண்ட் பார்த்துவிட்டு, மதிய சாப்பாட்டுக்கு பிறகு காரில் பக்தாபூர் பார்த்துவிட்டு, நாக் கோட்டில்மாலை சூரிய அஸ்தமம் மற்றும் காலை சூரிய உதயம் பார்க்க உத்தேசித்து, நாக்கோட்டில் இரவு தங்க ஹோட்டல் புக் செய்தாகிவிட்டது. காலை ஏழு மணிக்கு, குளித்து முழுகி, காலையுணவுக்கு கீழே இறங்கினால், செவ்வாய் அன்று இரவில் இருந்து கலாட்டா, ஆட்சி மாற்றம், பேரணி, இரண்டு இடத்தில் குண்டு வெடிப்பு. எங்கும் செல்ல முடியாது என்று ரிசப்ஷனில் சொல்லிவிட்டார்கள்.

சே! இவ்வளவு செலவழித்து வந்து, ஹோட்டலில் தூங்கவா என்ற சோகத்துடன், முதல் நாள் அலச்சல், தூக்க குறைவும் சேர்ந்து பத்துமணிவரை நல்ல தூக்கம்.

பத்துமணிக்கு விழிப்பு வந்தது. கீழே ஒரு டவுண்ட் அடித்துவிட்டு வரலாம் என்று சொன்னதும், கிளம்பினேன். நல்ல தூக்கத்தில் இருந்த பையனை எழுப்பினால், நீங்க
போங்க, என்று திரும்பி படுத்துக் கொண்டான். எதற்கும் இருக்கட்டும் என்று ரிசப்ஷனில் சொல்லிவிட்டு தெருவில் இறங்கினோம். தெரு முனைக்கு முனை இருந்த ராணுவம், இப்பொழுது பத்தடிக்கு ஏழட்டு கும்பலாய் பெருகி இருந்தது. மிலிட்டரி லாரி, ஜீப் என்று பறந்துக் கொண்டு இருந்தது. கடைகள் பெரும்பாலும் அடைத்திருந்தன.தெருவில் நடமாட்டமும் இல்லை. மெல்ல நடந்தோம்.

வழியில் அரட்டை அடித்துக் கொண்டிருந்த ராணுவ கும்பலில் சிறு பெண் கண்ணில் பட்டாள். ஒரு சேப்டிக்கு சிரித்து வைத்தேன். எல்லாரும் புன்னகைக்க, நாங்கள் இந்தியாவில் இருந்து வந்த டூரிஸ்ட் என்று அறிமுகப்படுத்திக் கொண்டோம். ஏதாவது பிரச்சனை இருக்கா என்றதற்கும், இல்லை என்றார்கள். இன்னும் நடந்தால், ஒரு டீ கடை. டீ குடிக்கும் சாக்கில், மாஸ்டர் வாயைக் கிண்டினால், நேபாளத்தின் அரசியல் நிலைமை சரியில்லை என்று அங்கலாயித்துக் கொண்ட அதே கவலையை அவரும் சொன்னார். பக்தா பூர், நாகோட் போகலாம், டூரிஸ்ட் என்றால் பிரச்சனை இருக்காது என்றார்.

மெல்ல மெல்ல கடைகள் திறக்க தொடங்கினர். ஆனால் தெருவுக்கு பத்து டூரிஸ்ட் அலுவலம் இருக்கும். ஆனால் இன்று ஒன்று கூட திறக்கப்படவில்லை.

திரும்பும்பொழுது, ஒன்று திறந்திருக்க, போய் விசாரித்தோம். பக்தாபூர் பார்த்துவிட்டு, நாக் கோட்டில் மாலை, சூரிய அஸ்தமனம் பார்த்துவிட்டு, இரவு எட்டுமணிக்குள் திரும்ப வண்டி கிடைக்குமா என்றுக் கேட்டோம். இருக்கு என்றதும், ஹோட்டலுக்கு சென்று யோசித்து சொல்கிறோம் என்று சொல்லிவிட்டு வெளியேறினோம்.

தொடரும்.

(கண்ட இடங்கள், புகைப்படங்கள் அடுத்த பதிவில்)

Labels:

20 பின்னூட்டங்கள்:

At Wednesday, 04 June, 2008, சொல்வது...

நான் தான் பஷ்ட்டு, இருங்க முழுசா படிச்சுட்டு வரேன். :)

 
At Wednesday, 04 June, 2008, சொல்வது...

//கண்ட இடங்கள், புகைப்படங்கள் அடுத்த பதிவில்//

ம்ம், எங்க படம்?னு கேட்க இருந்தேன். தப்பிச்சீங்க. :)

கொஞ்சம் அவசர அவசரமா போற மாதிரி இருக்கு.

 
At Wednesday, 04 June, 2008, சொல்வது...

அம்மணி இன்னைக்கு போன் பண்ணலாம்னு இருந்தேன்! இந்த அக்கப்போரெல்லாம் இல்லாத ட்ரிப்பும் ஒரு ட்ரிப்பா! அடுத்த வாரம் நம்மளுது எவ்வளவு சொதப்பப் போகுதோ! :-)

 
At Wednesday, 04 June, 2008, சொல்வது...

அம்பி, நிறைய சொந்த வேலைகள், விருந்தாளிகள். அதனால் கணிணி முன்னால் அதிகம் உட்கார முடியவில்லை

 
At Wednesday, 04 June, 2008, சொல்வது...

அமர்க்களமான ஆரம்பம்:-)

 
At Wednesday, 04 June, 2008, சொல்வது...

நிறைந்த தகவல்களுடன் நிதானமா எழுதுங்க ஒரு அவசரமும் வேண்டாம்...:))

 
At Wednesday, 04 June, 2008, சொல்வது...

ஒரு படம் கூடவா எடுக்கவில்லை??

 
At Wednesday, 04 June, 2008, சொல்வது...

நிறுத்தி நிதானமாச் சொல்லாம இது என்ன காலில் கஞ்சியைக் கொட்டிக்கிட்ட மாதிரி?

நல்ல விவரமா ரீச்சர், கீதாம்மா ஸ்டைலில் சொல்லுங்க. படமெல்லாம் திருடியாவது போடணுமுல்ல.

அப்புறம் போன இடத்தில் சும்மா இருக்காம மன்னர் டவுசரை உருவிட்டீங்க. நல்லா இருங்கம்மா!!

 
At Wednesday, 04 June, 2008, சொல்வது...

மக்களாட்சி கண்ட நேபாளத்திற்கு சென்ற முதல் தமிழ்/இந்திய பதிவர் ? வாழ்த்துகள் !!

பத்திரிகை செய்திகளைக் கண்டால் இந்திய மக்கள்மீது கோபமாக இருப்பதாகத் தெரிகிறதே, உங்கள் அடுத்த இடுகையில் விடை கிடைக்குமா ?

ஆட்சிமாற்றம் நிகழ்கின்ற நேரத்தில் பயணத்தை திட்டமிட்டபோதே 'திரில்லிங்' அனுபவங்களுக்கு அடிக்கோலிட்டாகி விட்டதே :))

 
At Wednesday, 04 June, 2008, சொல்வது...

கிளம்பற இடமெல்லாம் கலவரத்தைக் கூட்டிக்கிட்டு போறீங்களா?

போட்டோஸ்க்காக வெயிட்டிங்.

 
At Wednesday, 04 June, 2008, சொல்வது...

/
கண்ட இடங்கள், புகைப்படங்கள் அடுத்த பதிவில்
/

கண்ட எடத்தையும் எதுக்கு போட்டோ புடிச்சிங்க நல்லா அழகா இருக்க எடத்தை புடிச்ச போட்டோ மட்டும் போடுங்க!!

:)))))))))))

 
At Wednesday, 04 June, 2008, சொல்வது...

சீக்கிரம் தொடருங்க!!

 
At Wednesday, 04 June, 2008, சொல்வது...

இலவசக் கொத்தனார் சொன்ன மாதிரி இதென்ன இப்படிப் பர பர பதிவு?

இவ்வளவு செலவு பண்ணி போனதுக்கு ஒரு பத்துப் பதிவாவது வர வேணாமா?

பதிவு பிரிக்கத் தெரியலைனா மெகா சீரியல் பார்க்க வேண்டியதுதானே :)

உதாரணத்துக்கு ட்ராவல்ஸ் பையன் டிக்கட் கொண்டுவந்து கொடுத்த வரைக்கும் ஒரு பதிவு போடணும். நீங்க டென்ஷனா நடந்தது, போன் பண்ணி நடுவுல ஒரு ராங் கால் போனது ,பத்து தடவை நீங்க டயல் பண்ணி அது எங்கேஜ்டா இருந்தது, 4 தடவை ரிங் போன போது ட்ராவல்ஸில் எடுக்காதது இப்படி எல்லா முக்கிய சமாசாரங்களையும் துல்லியமா எழுத வேண்டாமா? :)

என்னமோ போங்க..நீங்களெல்லாம் தமிழ் வலையுலகின் மூத்த பதிவரா அப்படீனு கேள்வி வருது :)

 
At Wednesday, 04 June, 2008, சொல்வது...

>>இமயம் கண்டேன் என்று குண்டு சிவாஜி, நேபாளி தொப்பி அணிந்து, இன்னும் ஒரு குண்டு ஸ்ரீவித்யாவுடன் டூயட் பாடுவாரே

- அந்தப் பாடல் சிவாஜி, ஸ்ரீவித்யா இல்லை...ஜெய் கணேஷ் மற்றும் பெயர் மறந்த ஒரு நாயகி (சிம்ரன் என்றால் நினைவிருந்திருக்கும்...ஹீ ஹீ).

அதே வயதில் நியூட்டனின் மூன்று விதிகளைப் ப்ற்றியும் படிக்க வேண்டியிருந்தது...அதெல்லாம் மறந்துப் போய்விட்டன.

 
At Wednesday, 04 June, 2008, சொல்வது...

புகைப்படங்கள் இதிலயே போட்டிருக்கலாமே?

புகைப்படம் இல்லாத பயணக் கட்டுரை கொஞ்ச ட்ரையா இருக்கு. :(

 
At Friday, 06 June, 2008, சொல்வது...

// பினாத்தல் சுரேஷ் சொல்வது...
கிளம்பற இடமெல்லாம் கலவரத்தைக் கூட்டிக்கிட்டு போறீங்களா?
///

ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய் :))

 
At Friday, 06 June, 2008, சொல்வது...

//இலவசக்கொத்தனார் said...
நிறுத்தி நிதானமாச் சொல்லாம இது என்ன காலில் கஞ்சியைக் கொட்டிக்கிட்ட மாதிரி?

நல்ல விவரமா ரீச்சர், கீதாம்மா ஸ்டைலில் சொல்லுங்க. படமெல்லாம் திருடியாவது போடணுமுல்ல.
//

அதானே! என்ன அவசரம் ?????

 
At Friday, 06 June, 2008, சொல்வது...

கண்டேன் இமயம்... என்று சீதையைக் கண்ட அனுமன் ரேஞ்வுக்கு கூவியிருந்திருக்க வேண்டும், கூவல் சற்றே குறைந்ததன் காரணம் என்னவோ!

படம் எங்கே, படம் எங்கே என்று கேட்டு, தங்களின் துரித கதியில் பதிவிடும் ஆர்வத்தை யாரும் குறைவு படுத்துகிறார்கள் என்று எடுத்துக்கொள்ள மாட்டீர்கள் என்று இந்த வலையுலகம் முதல் ஈரேழு உலகங்களும் அறியுமே!

comment posted by:
ஏஜண்ட் NJ
:-)
http://njanapidam.blogspot.com
(once upon a time!)

 
At Thursday, 12 June, 2008, சொல்வது...

வந்துட்டேன். மன்னிச்சிடுங்கபா, நேர நெருக்கடி. பதிவுகள் படிக்க மட்டுமே முடிந்தது. பின்னுட்டத்தை ஏற்றவும் முடியவில்லை, பதில் போடவும் இல்லை. அதுக்காக மூத்த பதிவர்ன்னு ஒதுக்கிடாதீங்க :-)
1- பினாத்தல், ம.சி! நான் கலவரத்தைப் பார்க்கும் ஆவலில் ஓடினால், அது என்னைப் பார்த்து பயந்து ஓடிவிட்டது.

2- ஞான்ஸ் நீங்களா? பூர்வாசிரம நண்பரே நலமா :-)

3- சர்வேசா, இது பயணக்கதையில்லை, பயணத்தைப் பற்றிய கதை :-)

4- ராஜ்சந்திரா, ஐயகோ அப்படி என்றால், போத் நாத் கோவிலை சுற்றி சிவாஜி பாடும் படம் எந்த படம்? ஹிஹி நானும் சின்ன
வயசுல பார்த்தது!!!

5- துளசி, வல்லி, கீதா நீங்கள் எல்லாம் வளவளன்னு எழுதிரிங்கன்னு இலவசம் செய்யும் நுண்ணரசிலை கவனித்தீர்களா? அதற்கு
துணைப் போகும் , ச.சங்கர்,ஆயில் க்கு என் கண்டனங்கள்.
நிதானமாய் இழுத்தால், அப்புறம் நானே படிக்க மாட்டேன் :-)

6- மணியன் உங்களுக்கு விடை அடுத்த ப்குதியில்

7- புது அப்பா அம்பி, மங்களுர் சிவா, மதுரையம்பதி, வடுவூர் குமார் வரேன் வரேன்.

8- நிம்மி பயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள்

 
At Friday, 05 September, 2008, சொல்வது...

உங்க கட்டுரைகள் மற்றும் இன்ன பிற தகவல்களை எங்களது தமிழ் நண்பர்கள் குழுமத்தில் போட அனுமதிக முடியுமா
omsrii@gmail.co, என்ன முகவரிய்க்கு பதிலிடலாம், கண்டிப்பா சுட்டதுனு போட்டு உங்க வலை அட்ரஸையும் போட்டிருவேன்,

 

Post a Comment

<< இல்லம்