Saturday, July 26, 2008

முதுமையும் நோயும் இறப்பும் -19 July,2008

சென்ற மாதம் இருபத்தி ஆறாம் தேதி காலையில், ஒரு சாதாரண கால் பிளாடர் ரிமூவல் ஆபரேஷனுக்காக, மியார்ட் ஆஸ்பத்திரியில் என் மாமியார் சேர்க்கப்பட்டார். சர்க்கரை,பிபி கட்டுப்பாட்டில் இருந்தது. ஆனால் அறுவை சிகிச்சையின் போது, மாரடைப்பு வந்துள்ளதாம். அதனால் ஆபரேஷனை அவசரமாய் முடித்துவிட்டு, இதயத்தை சரி செய்யும் முயற்சியில் முழுகவனம் செலுத்தியிருக்கிறார்கள்.

மூன்று நாட்கள் வரை சாதாரணமாய் இருந்தவருக்கு, கடுமையான வயிற்று வலி ஏற்பட்டு இருந்திருக்கிறது. வயிற்றில் செப்டிக் ஆகியுள்ளது. ·பங்கஸ் பரவி வருகிறது என்று
சொல்லி சிகிச்சை கொடுத்துக் கொண்டே இருந்தார்கள். இருபத்திநான்கு நாட்கள் ஐசியூவில். வெண்டி லேட்டர், பிறகு tracheostomy (தொண்டையில் துளையிட்டு செயற்கை சுவாசம் தர குழாய் சொருகுதல்) என்று நாட்கள் கடந்துக் கொண்டு இருந்தன.

என் கணவர், மூன்றாம் நாள் சென்றுவிட்டு சுமார் பத்து நாட்கள் சென்னையில் இருந்தார். மாமியார் முழு நினைவு இருந்தது. உடல் முழுக்க டியூபுகள், பசி மற்றும் தண்ணீரும் தர முடியாததால், அந்த வேதனை வேறு. ஆபரேஷன் செய்த உள் உறுப்பில் சீழ் பிடித்ததால் அது வெளிவர ஒரு குழாய். சிறு நீருக்கு ஒரு குழாய்.மருந்தும், சலைனும் உள் செல்ல ஒரு டியூப். வாய் பேச முடியாமல் வெண்டிலேட்டர்.

நானும் சென்னைக்கு வந்து இரண்டு நாட்கள் இருந்துவிட்டு சென்றேன். மேற்கொண்டு என்ன செய்வது என்றுக் கேட்ட மாமனாரிடம், நினைவு நன்றாக இருக்கிறது. இந்நிலையில், தொடர்ந்து சிகிச்சை மேற்கொள்ளலாம் வேறு வழியில்லை என்றேன்.

ஆனால் வேறு மருத்துவர்களிடம் ஓபினியன் கேட்டதற்கு, இவ்வளவு நாட்கள் ஐசியூவில் இருந்தால், வேறுவிதமான பிரச்சனைகள் வரும் அதனால் மாற்றிவிடுங்கள்
என்றார்கள். சென்னையில் இரண்டு மருத்துவமனைகளில் விசாரித்தால், கொடுக்கும் சிகிச்சை சரியானதே, ஐசியூவில் இருந்து, வெளியே வந்ததும் சேர்த்துக் கொள்கிறேன்
என்றார்கள்.

சென்னையில் பிரபல மருத்துவமனை ஒன்றில் கேட்டதற்கு ,ஆறு லட்ச ரூபாய் கட்டிவிடுங்கள். சேர்த்துக் கொள்கிறோம் என்றார்கள். என்ன செய்வது என்று தெரியாமல்
எல்லாரும் முழிக்க. வீட்டுக்கு பக்கத்தில் இருந்த மருத்துவமனை ஒன்றில் என் உறவினர் விசாரித்து உள்ளார். தனி அறை, அதே மருந்தும் சிகிச்சையும், வெண்டிலேட்டர்
வசதி எல்லாம் உண்டு என்றார்கள்.

மியார்ட் பெரிய மருத்துவமனை என்பதால் ஏகப்பட்ட கட்டுபாடுகள். குறிப்பிட்ட நேரத்தில் காலையும் மாலையும் ஒருவர் மட்டும், அதிகமாய் போனால் ஒரு முக்கால் மணிநேரம் வரை அருகில் இருக்கலாம். இங்கு என்றால் தினமும் பெற்ற பிள்ளைகள், உடன்பிறப்புகள் மற்ற சொந்த பந்தங்கள் என்று பேச முடியாவிட்டாலும் பார்த்துக் கொண்டு இருந்தாலே மனசுக்கு தெம்பாய் இருக்கும் என்று எல்லாரும் உறுதியாய் நம்பினார்கள். என் கணவரும் 18,July சென்னைக்கு புறப்பட்டு சென்றார்.

மாலை நான்கு மணி சுமாருக்கு ஆம்புலன்ஸ் வந்தது. இங்கிருந்து டிஸ்சார்ஜ் செய்து ஆம்புலன்ஸ்ஸில் ஏற்றும்பொழுது, வார்ட் பாய் போல இரண்டு இளைஞர்கள்.
நர்ஸ் என்று பயிற்சி பெற்றவர்கள் யாரும் இல்லை. வண்டியிலேயே அவருக்கு மூச்சு திணற ஆரம்பித்துள்ளது. அட்மிட் ஆனதும் மருத்துவமனையில் ஆக்சிஜன் கொடுத்துள்ளார்கள்.
ஆனால் வெண்டிலேட்டர் கேட்டதற்கு பெரிய டாக்டர் வருவார் அவர் வந்ததும் சிகிச்சை ஆரம்பிக்கப்படும் என்றார்களாம் நர்சுகளும், உதவி டாக்டர்களும்!

அதற்குள் கடுமையான ஜூரம் ஆரம்பித்துவிட்டது. மூச்சு முட்டலும் கூட. சைகை செய்து வெண்டிலேட்டர் வைக்க சொல்லி கெஞ்சியிருக்கிறார். நாலரை மணி சுமாருக்கு அட்மிட் ஆனவரை பார்க்க பெரிய டாக்டர் வந்தது, நடு இரவு ஒன்றரை மணிக்கு. அது வரை திரும்ப திரும்ப அனைவரும் கெஞ்சியும் டாக்டர் ஆபரேஷன் முடித்து வீட்டில் இருக்கிறார். இப்பொழுது தொந்தரவு செய்ய முடியாது. வருவார் வருவார் என்று மருத்துவமனை ஆட்கள் சொல்லிவிட்டார்கள்.

இரவு ஒன்றரை மணிக்கு வந்த டாக்டரிடம் கேட்டதற்கு நான் தான் வெண்டிலேட்டர் எல்லாம் வைக்க முடியாது முன்னமே சொல்லியிருந்தேனே, உங்க ரிலேட்டிவ் சொல்லவில்லையா என்று எதிர் கேள்வி கேட்டு உள்ளார். ஜூரம் கூடிக்கொண்டு வருகிறதே என்றதற்கு , வெகு காஷ¥வலாய் வீட்டில் சாவதற்கு பதில், இங்கு மருத்துவமனையில் போகட்டும் என்ற எண்ணத்தில் தான் அட்மிட் செய்ய அனுமதித்தேன் என்பதை சொல்லாமல் சொல்லிவிட்டார்.

கழுத்தில் துளையிட்டதால் பேச முடியவில்லையே தவிர, சைகையிலும், எழுதிக்காட்டியும் மீண்டும் மீண்டும் பசி, தாகம், மூச்சு விட ஆக்சிஜன், அதீத உடல் வலி என்று தன் வேதனையைச் சொல்லிக் கொண்டே இருந்திருக்கிறார். மாமனார், காலையில் மீண்டும் மியார்ட்டுக்கே போய்விடலாம் என்று முடிவே செய்துவிட்டார்.

போகும்போது அந்த தலைமை டாக்டர், ஜூரத்துக்கு ஒரு ஆண்டிபயாட்டிக் மருந்து வாங்கிவாருங்கள் என்று பெரிய மனது செய்து எழுதிக் கொடுத்துள்ளார். காலை சூரத்தில் இருந்து நான்கு மணிக்கு கிளம்பியது, அதனால் என் கணவரை வீட்டுக்கு சென்று ஓய்வு எடுக்க, பன்னிரெண்டு மணிவாக்கில் என் மாமனார் மகனை அனுப்பிவிட்டார்.கூட இருந்தது என் சின்ன நாத்தனார்.

மருந்து சீட்டை எடுத்துக் கொண்டு உள்ளே இருந்து கடையில் கேட்டால் ஸ்டாக் இல்லை. பாதி ராத்திரியில் நடந்தே தன் நினைவில் இருந்த இருபத்திநாலு மணிநேர கடையை தேடிப் போனால், மருந்தின் விலை ஐந்தாயிரத்துக்கு ஆறு ரூபாய் கம்மி. கையிருப்பில் கொஞ்சம் குறைந்துள்ளது. செல் போன் என்னமோ இருக்கிறது. ஒரு போன் அடித்தால் வந்திருப்போமே என்றதற்கு, எல்லாரும் காலையில் இருந்து அலைந்துக் கொண்டு இருந்தீர்கள் கொஞ்சம் தூக்கட்டும் என்று நினைத்தேனா அல்லது போன் செய்ய வேண்டும் என்று மூளைக்கு புரிப்படவில்லையா என்று நினைவில்லை என்றார்.

இரவு முழுக்க என் நாத்தனார் பார்க்கிறவர்களிடம் எல்லாம் கெஞ்சியிருக்கிறார். சர்க்கரை ஐநூற்று ஐம்பதை எட்டியிருக்கிறது. பசி பசி என்று துடித்தவருக்கு,வயிறு வீங்கியிருக்கிறது எதுவும் சாப்பிட தராதீர்கள் என்று கட்டளையிட்டு இருக்கிறாள் நர்சம்மா.

காலை ஆறுமணிக்கு என் கணவர் மீண்டும் ஆஸ்பத்திரிக்கு வந்து, மாமனாரை வீட்டுக்கு சென்றுவிட்டு வரச் சொல்லியிருக்கிறார். அந்த ஐந்தாயிர ரூபாய் ஊசி மருந்தை தேடி என் கணவர் சென்றதும், மூச்சு மூட்டல் அதிகமாகிவிட்டது. சைகை காட்டி வெண்டிலேட்டர் என்று காற்றுக்காக அந்த ஜீவன் துடிக்க ஆரம்பித்துள்ளது.

அறுபத்தி எட்டுவயதான என் மாமியார் இன்னும் நன்கு வாழுவார் என்ற நம்பிக்கை எல்லாருக்கும் உண்டு. அவருக்கும் இந்த கண்டத்தில் இருந்து மீண்டு வந்துவிடுவோம்
என்ற வாழும் ஆசையுண்டு. என் நாத்தனர் உதவி தலைமை ஆசிரியையாக உள்ளாள். கொஞ்சம் யதார்த்தவாதி. ஆசிரியைகளுக்கே உரிதான ரப் அண்ட் ட·ப் ஆள்.

''அம்மா! ஆபரேஷன் ஆகி, இருபத்தி ஐந்து நாட்கள் ஐசியூவில் இருந்திருக்கிறாய். எங்களால் முடிந்த வைத்தியம் பார்த்தாகிவிட்டது. இனி செய்ய ஒன்றும் இல்லை.
நீ கடைசி கட்டத்தில் இருக்கிறார். மனதில் உள்ள கோபதாபங்கள், ஆசை பாசம் அனைத்தையும் விட்டு விட்டு , நீ தினமும் துளசி செடிக்கு பூஜை செய்வாயே
அதுப்போல, மனதில் கடவுளை நினைத்துக்கொண்டு மானசீகமாய் பிருந்தாவனத்தை சுற்று. வைக்குண்டத்துக்கு நீ செல்ல போகிறாய் என்று சொல்லிவிட்டாள்.

இதைச் சொல்லும்பொழுதே மருந்துடன் என் கணவர் வந்துவிட்டார். உ. மருத்துவர் சரி என்றதும், இட்லியை இருவரும் ஊட்டியிருக்கிறார்கள். நீரும் கொடுத்து இருக்கிறார்கள். முகத்தில் எந்த வேதனையும் இல்லாமல் ஒரு சாந்தம் வந்துவிட்டதை என் கணவர் கவனித்துள்ளார். பல்ஸ் இறங்க ஆரம்பித்துள்ளது. வீட்டுக்கு போன் செய்ததும் மாமனாரும் வந்துவிட்டார். பல்ஸை கூட்ட ஒரு ஊசி மருந்து உள்ளது, ஆனால் அதை பெரிய டாக்டர் தான் சொல்ல வேண்டும் என்று உதவிமுணுமுணுத்துள்ளார்.

அத்தைக்கு கண்கள் ஒரு மாதிரி சுழல ஆரம்பித்துள்ளன. எல்லாருக்கும் புரிந்துப் போனது. பெரிய டாக்டரை கூப்பிட்டதும் "இறந்துவிட்டார். மருந்தை திருப்பி தந்துவிடுங்கள்" என்று சொன்னாராம் பெரிய டாக்டர்.

முதுமையும், நோயும், இறப்பும் எல்லாருக்கும் உண்டு என்றாலும் சாகும்வரையில் நல்ல நினைவுடன் நரக வேதனை ஏன் அனுபவிக்க வேண்டும்? எல்லாரும் நினைப்பது,
அதே மியார்ட் ஆஸ்பத்திரியில் இன்னும் சில நாட்கள் இருந்திருக்கலாம். ஆனால் அப்படியிருந்திருந்தால் கடைசி மூச்சு விடும்பொழுது அருகில் யாராவது இருந்திருப்பார்களா என்பது சந்தேகம்!

27 பின்னூட்டங்கள்:

At Saturday, 26 July, 2008, சொல்வது...

அந்தப் பாழாய்ப் போன தனியார் ஆஸ்பத்திரியின் பெயரைத் தெரிவியுங்களேன்.எதிர்காலத்தில் எல்லோருக்கும் இந்த அனுபவம் உபயோகமாய் இருக்கும்.முடிந்தால் அந்தப் பெரிய டாக்டரின் பெயரையும் தெரிவித்தால் தேவலை.

....அனுராதாவின் கணவன்....

 
At Saturday, 26 July, 2008, சொல்வது...

முதுமைக்கு மருந்தொன்றுக் கண்டால்,.. இவ்வுலகம் தாங்குமோ!..

மனதை சுட்ட பதிவு

 
At Saturday, 26 July, 2008, சொல்வது...

ம்ம்ம் நம்ம பதட்டத்தின் காரணமாகவோ என்னமோ மருத்துவர்களும், மருத்துவமனை ஊழியர்களும் தேவையானவற்றை செய்யவதில்லை போலவே நமக்கு படும்... நீங்க சொன்ன மாதிரி குறைந்த பட்சம் அதிக அவதியில்லாமல் அமைதியாக உயிர் பிரிந்தால் பரவாயில்லை... அந்த நாடகளில் அவர்கள் மனதில் என்னவெல்லாம் நினைத்திருப்பார்களோ என்று நான் நினைப்பேன்...ம்ம்ம் ரொம்பகஷ்டம்... படிக்கும்போதே எனக்கு பதட்டம் ஒட்டிக்கிச்சு..உங்க நாத்தனாருக்கு எப்படி இருந்த்திருக்கும்..ம்ம்ம்

 
At Saturday, 26 July, 2008, சொல்வது...

படிக்கவே கஷ்டமாக இருக்கு.
ஆழ்ந்த அனுதாபங்கள்.

 
At Saturday, 26 July, 2008, சொல்வது...

அவருடைய போராட்டத்தோடு உங்கள் புறத்திலிருந்து அவருக்காக இயன்ற வரை போராடியுள்ளீர்கள். அதுதான் இருக்கும் நம்மால் செய்ய முடிந்தது. மற்றவை விதிப்படி அல்லது இறைவனது நியதிப்படி நடந்தது என விட வேண்டியதுதான்.

உங்களுக்கு எம் ஆழ்ந்த அனுதாபங்கள். குறிப்பாக தாயின் போராட்டத்தை நேரில் பார்த்துக் கொண்டே இருந்த உங்கள் நாத்தனாருக்கும் எம் ஆழ்ந்த அனுதாபங்கள்.

அந்த நர்சிங் ஹோம் பெயரை வெளிப்படுத்தினால் மற்றவர்கள் பாதிக்காமல் தடுக்கலாம்.

 
At Saturday, 26 July, 2008, சொல்வது...

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறையை வேண்டுகிறேன்.

என்னுடைய அனுதாபங்கள் உங்களுக்கும், உங்களின் குடும்பத்தாருக்கும்.

 
At Saturday, 26 July, 2008, சொல்வது...

அனைவருக்கும் நன்றி. இங்கு சொல்லாமல் விட்டவை இன்னும் இருக்கின்றன. என்ன செய்ய பொதுவில் சில விஷயங்களை
சொல்ல முடிவதில்லை. காரணமும் உண்டு. சென்ற சனிக்கிழமை நானும் என் மகனும் செய்தி அறிந்து, கார் பிடித்து சென்னை விமானம் பிடிக்க மும்பை விமானநிலயத்தில் நுழைந்தப்பொழுது மிக சரியாய் பதினைந்து நிமிடம் இருந்தது.
அன்றும் மறுநாள் எரியூட்டலும் காலையில் இருந்து மனதை அலைக்கழிக்க எழுதி என் மனசுமையை குறைக்க நினைத்தேன்.

பொதுவாய் நம் மருத்துவமனைகளில் வயதானவர்கள் என்றால் ஒரு அலட்சியம் என்பது நான் பார்த்தவரையில்.

 
At Saturday, 26 July, 2008, சொல்வது...

ஆழ்ந்த அனுதாபங்கள். வேறென்ன எழுத எனத் தெரியவில்லை.

 
At Saturday, 26 July, 2008, சொல்வது...

ரொம்ப மனவருத்தமா இருக்கு உஷா.

இப்படி அவஸ்தைப்படாமல் போய்ச் சேரணும் என்பதுதான் எல்லாருடைய விருப்பமாவும் இருக்கு.

போனவருடம் நிகழ்ந்ததா? இல்லை இந்த வருசமா?

2007ன்னு இருக்கேன்னு கேக்கறென்.

 
At Saturday, 26 July, 2008, சொல்வது...

தங்களுக்கும், தங்கள் கணவருக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள். தங்கள் மாமியாரின் ஆத்மா சாந்தி அடையட்டும்.

பெரிய மருத்துவரின் செயல்கள் கையாலாகாத கோபத்தை வரவழைக்கிறது.

 
At Saturday, 26 July, 2008, சொல்வது...

துளசி, மாற்றிவிட்டேன். சென்ற சனிக்கிழமை 19 ஜூலை காலை பத்துமணிவாக்கில் மரணமடைந்தார்.

சுரேஷ், ராஜ்சந்திரா! அதேதான் எதுவும் செய்ய இயலாமல் பார்த்துக்கொண்டு இருக்க வேண்டிய நிலையை கூட இருந்தவர்களால்
இன்னுமே மறக்க இயலவில்லை.

 
At Saturday, 26 July, 2008, சொல்வது...

எனது அனுதாபங்கள் உஷாக்கா!

 
At Saturday, 26 July, 2008, சொல்வது...

மருத்துவ சுற்றுலா என்ற பெயரில் வரும் வெளிநாட்டு பணத்திற்கும் பிணத்திற்கும் (ஆமாம் அவர்கள் பாஷையில் இதுதானே!?) பல்லிளிக்கும் இந்த மாதிரியான டாக்டர்கள் தங்கள் பெற்றோர்களை கூட இப்படித்தான் அனுப்பிவைத்திருப்பார்கள் போல...! :(

 
At Saturday, 26 July, 2008, சொல்வது...

//அனுராதா said...
அந்தப் பாழாய்ப் போன தனியார் ஆஸ்பத்திரியின் பெயரைத் தெரிவியுங்களேன்.எதிர்காலத்தில் எல்லோருக்கும் இந்த அனுபவம் உபயோகமாய் இருக்கும்.முடிந்தால் அந்தப் பெரிய டாக்டரின் பெயரையும் தெரிவித்தால் தேவலை.

....அனுராதாவின் கணவன்....
//

நிச்சயம் இந்த கோரிக்கையினை நிறைவேற்றுங்கள் அக்கா!

 
At Saturday, 26 July, 2008, சொல்வது...

// மங்கை said...
ம்ம்ம் நம்ம பதட்டத்தின் காரணமாகவோ என்னமோ மருத்துவர்களும், மருத்துவமனை ஊழியர்களும் தேவையானவற்றை செய்யவதில்லை போலவே நமக்கு படும்...
//

உண்மைதான்! ஆனாலும் இது போன்ற சமயங்களில் எப்படி நடந்துக்கொள்ளவேண்டும் என்று படித்துவிட்டுத்தானே வருகிறார்கள்?
இல்லையென்றால் மற்றவர்களுக்கும் இவர்களுக்குமென்ன வித்தியாசம்????

 
At Sunday, 27 July, 2008, சொல்வது...

சென்ற மாதம்வரை நன்றாக இருந்தவர் இன்றில்லை என்பது மிக வருத்தமளிக்கிறது.உங்களுக்கும் உங்கள் கணவர் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள்.

முதுமையில் தனக்கும் பிறருக்கும் வலியின்றி செல்லவே அனைவருக்கும் விருப்பம். அதற்கு நவீன மருத்துவமும் மருத்துவ சேவைபுரிவோரும் துணை நிற்பார்களேயானால் எவ்வளவு நன்றாக இருக்கும்..ஹும்...

 
At Sunday, 27 July, 2008, சொல்வது...

மிகுந்த வேதனையளிக்கிறது. ஆழ்ந்த அனுதாபங்கள்.

 
At Sunday, 27 July, 2008, சொல்வது...

ரொம்ப வருத்தாமாயிருக்கு உஷா!
முடிவு எல்லோருக்கும் உண்டு என்றாலும், அது அமைதியாய் போவது தெரியாமல் போகவேண்டும்
என்பதே அனைவரின் விருப்பமாகயிருந்தாலும் சிலசமயம் இப்படியும் நேர்ந்துவிடுகிறது. இதனால்
மருத்துவமனை என்றாலே அலர்ஜியாயிருக்கிறது.
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் என் ஆறுதலை
தெரிவித்துக்கொள்கிறேன்.

 
At Sunday, 27 July, 2008, சொல்வது...

துக்கத்தில் பங்கெடுத்துக் கொண்ட அனைவருக்கும் நன்றி.

மணியன்! மே மாதம் இருபதாம் தேதிதான் இங்கிருந்து கிளம்பினார். ஒரு வாரக்காலம் குஜராத் முழுக்க பார்த்துவிட்டு, இரண்டு நாட்கள் மும்பையும் சுற்றிவிட்டு சென்றார். நாற்பது நாட்களில் அவர் இல்லை என்பது நினைக்க கஷ்டமாய் இருக்கிறது.

நானானி! பல பெரியவர்கள் போகும் உயிர் வீட்டிலேயே போகட்டும், ஆஸ்பத்திரி வேண்டாம் என்பது இப்பொழுது புரிகிறது.

 
At Sunday, 27 July, 2008, சொல்வது...

அன்புள்ள உஷா குடும்பத்தினருக்கு
எங்களின் ஆழ்ந்த அனுதாபங்கள்
என் தாயார் மூன்று மாதங்கள் மற்றொரு மருத்துவ மனையில் (சென்னை-இல்) இதே மாதிரி, இதே மாதிரி, இதே மாதிரி தவித்தார். பிறகு 12th மார்ச் அன்று சிவலோக ப்ராப்தி அடைந்தார்

"முதுமையும், நோயும், இறப்பும் எல்லாருக்கும் உண்டு என்றாலும் சாகும்வரையில் நல்ல நினைவுடன் நரக வேதனை ஏன் அனுபவிக்க வேண்டும்? எல்லாரும் நினைப்பது"
இது நூறு சதவிகிதம் அப்பட்டமான உண்மை
ஸ்ரீதர் லதா

 
At Monday, 28 July, 2008, சொல்வது...

ஆழ்ந்த அனுதாபங்கள் உஷா, பல நாட்கள் கழித்து இன்றுதான் வர முடிந்தது, வந்தால் இந்தச் செய்தி!! ரொம்ப ரொம்ப வருத்தமாயும், வேதனையாகவும் இருக்கின்றது. :((((((((((((

 
At Monday, 28 July, 2008, சொல்வது...

//பொதுவாய் நம் மருத்துவமனைகளில் வயதானவர்கள் என்றால் ஒரு அலட்சியம் என்பது நான் பார்த்தவரையில்.//

ம்ம்ம்ம்ம்ம்????? ஒரு சிலருக்கு ஏற்படும் அனுபவம் இப்படிச் சொல்ல வைத்தாலும், மருத்துவர்கள் அனைவருமேயோ, அல்லது அனைத்து மருத்துவமனையுமே அலட்சியம் செய்வதாய்ச் சொல்ல முடியாது உஷா!! உங்கள் நாத்தனார் சொன்னது தான் உண்மை! என்றாலும் நம் மனம் அலைக்கழிந்து தான் போகும், அதுவும் ஏற்கக் கூடியதே! உங்கள் மாமியாரின் ஆன்மா சாந்தியடையப் பிரார்த்திக்கின்றேன்.

 
At Tuesday, 29 July, 2008, சொல்வது...

என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள் உஷா. என் அம்மாவுடன் மருத்துவமனையில் ஒரு மாதம் கூட இருந்து அவர் இறந்ததைப் பார்த்த நினைவு வந்துவிட்டது.

 
At Wednesday, 30 July, 2008, சொல்வது...

அனைவருக்கும் நன்றி

 
At Saturday, 02 August, 2008, சொல்வது...

உஷா,
இப்போது தான் உங்கள் பதிவுப் பக்கம் வந்தேன். அதனால், எனது belated இரங்கல்களை ஏற்றுக் கொள்ளவும். அவர் ஆன்மா சாந்தியடைய எனது பிரார்த்தனைகள் !

பதிவை வாசிக்க மனதுக்கு ரொம்ப கஷ்டமாக இருந்தது. வலியால் ரொம்ப சிரமப்பட்டிருப்பார் என்பது புரிகிறது. இவ்வளவு பேர் பார்த்து பார்த்து செய்ததற்கு, அவர் மீண்டு வந்திருந்து இன்னும் சில காலம் வாழ்ந்திருக்கலாம் :(

பொதுவாகவே, எனக்கு 90% டாக்டர்கள் மேல் பெரிய அபிப்ராயம் கிடையாது. சந்தேகத்தோடு தான் பார்ப்பேன். It is not a noble profession anymore. An hospital is just a commercial venture. காருண்யமாவது ஒன்றாவது ????

எ.அ.பாலா

 
At Friday, 08 August, 2008, சொல்வது...

மருத்துவர்களை கடவுள் என வணங்கிய காலம் ஒன்று இருந்ததாக பெரியவ்ர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன்.



ஆனல் இந்த மருத்துவரோ?

கவனக் குறைவின் ...
--------------------

எனது கண்ணிர் அஞ்சலி.அன்னாரது
ஆதமா சாந்தி அடைய பிரார்த்தனைகள்.

 
At Friday, 15 August, 2008, சொல்வது...

எனக்குத் தெரிந்து எங்க அப்பாவைக் கஷ்டப்படுத்தி வதைத ஒரு நர்சிங் ஹோமெ இன்னும் ட்.நகரில் பெரிய காம்பவுண்டில் புனித நதியின் பெயரோடு இருக்கிறது.
ஒரு க்ரோசின் கேட்டால் கூட டாக்டர் வரணும்.
உஷா உங்க மாமியார் பட்ட அவஸ்தைக்கு வருந்துகிறேன்.

மியாட் அனுபவம் எங்களுக்குக் கொஞ்சம் நல்லதாகவே இருந்தது.

உங்கள் கணவருக்கும் குடும்பத்துக்கும் என் அனுதாபங்கள்.

 

Post a Comment

<< இல்லம்