Wednesday, July 30, 2008

20, 21 ஜூலை 2008

முதல் முறையாய் இறுதி காரியங்களைப் பார்க்கும் வாய்ப்பு கிட்டியது. சாஸ்திர சம்பிராதயங்களில் மிகுந்த நம்பிக்கையுள்ள என் புகுந்த வீட்டார் எந்த குறையும் வைக்காமல் எல்லா சடங்குகளையும் செய்துக் கொண்டு இருக்கிறார்கள். காலமான என் மாமியார் அவர்கள் விருப்பப்படி மின்சுடுதல் வேண்டாம் என்று விறகு கட்டையால் எரிக்கப்படும் முறையையே தேர்ந்து எடுத்தார்கள்.

அப்ரண்டிஸ்ஸாக கூட வந்த ஆச்சார் ( சடங்குகளை செய்துவைப்பவரிடம் ) பேச்சுக் கொடுத்ததில் பல விஷயங்களை சொன்னார். சுமங்கலியாய் இறந்தால் பிறர் கண்ணில் (ஆண்கள்) பட கூடா உறுப்புகளை மஞ்சள் கொண்டு நன்கு மறைந்து எரியூட்டுவார்களாம். ஆனால் கணவனை இழந்த விதவை என்றால், வறட்டி வைத்து அவ்விடங்களை மூடப்படும் :-)

எரியூட்ட எடுத்துச் செல்லும்பொழுது, பெண்களும் வரலாம் என்றதும் ஆவலுடன் போக தயாரானேன். ஆனால் மகள்கள் வரலாம், மருமகள் வரக்கூடாது என்றார் அப்ரண்டிஸ். காரணம் வீட்டு வேலை, கழுவி விடுதல் போன்று இருக்கும் இல்லையா? பாவம் என் மச்சினன் மனைவி மட்டும் தனியாய் வீட்டு வேலைகள் செய்ய வேண்டுமே என்று நானும் போகாமல் இருந்துவிட்டேன். ஆனால் போகாதே என்று சொல்லிய அறிவுரைக்கு மதிப்பு தந்து தலையாட்டிய மகள், கம்பி நீட்டிவிட்டாள்.முன்பெல்லாம் சுடுகாடுகளில் பெண்களுக்கு அனுமதியில்லை, எப்பொழுது இந்த மாற்றம் வந்தது என்று தெரியவில்லை.

அவள் தந்த குறிப்புகள். சட்டியில் இருந்த நெருப்பு பெற்றவள் காலில் வைக்கப்பட்டது. எந்த மகனுக்கு வாழ்வில் தாங்கமுடியாத சோகம் இது.

ஆனால் மறுநாள் பால் தெளிப்புக்கு அவர்களுடன் சென்றுவிட்டேன். மகனும் மகளும் உடன் வந்தனர். குழந்தைகள் பயப்படுவார்கள் வேண்டாம் என்று பலரும் சொன்னாலும், 20/ 16 வயதுகளில் இருக்கும் என் பிள்ளைகளுக்கு நிலையற்ற வாழ்க்கை என்பதை இதை விட பிராக்டிகலாய் சொல்லி தர முடியாது இல்லையா?

நாங்கள் சென்றிருந்தப்பொழுது ஏறக்குறைய இருபத்தி இரண்டு மணிநேரம் ஆகியிருந்தாலும் இன்னும் புகைந்துக் கொண்டு இருந்தது. எல்லாரும் பெண்கள் உட்பட தண்ணீர் ஊற்றி அணைத்தோம். கிளறி கிளறி எலும்பு துண்டுகளை எடுத்தது ஒரு பானை நிறைந்தது. பிண்டம் வைக்கும்பொழுது அண்ணனும் தம்பியும் அழுதுவிட்டார்கள். அவர்கள் அறிந்த தாய் வயிறார அன்னம் படைப்பவள், பார்க்கும்பொழுது முதல் கேள்வி சாப்பிட்டாயா என்பதுதான். அந்த தாய்க்கு சோற்று உருண்டை வைக்கும்பொழுது மனம் என்ன பாடுபடும்?

மீண்டும் அப்ரண்டீஸ்ஸிடம் கேள்விகள். இன்று பெண்களும் இவ்வேலை வந்துவிட்டார்கள் என்றார். ஆனால் கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம் போன்ற நல்ல காரியங்களை மட்டும் செய்கிறார்கள், இன்னும் இறுதி காரியங்களை செய்ய ஆரம்பிக்கவில்லை என்றார். ஆண் வாரிசு இல்லாதவர்கள் வீட்டு பெண் பிள்ளைகள் யாரோ தங்கள் பெற்றவர்களுக்கு இறுதி காரியங்களை செய்வதைவிட, நாங்கள் ஏன் செய்யக்கூடாது என்று பல வீடுகளில் பெண் பிள்ளைகள் இறுதி சடங்குகளை செய்ய ஆரம்பித்துள்ளார்கள் என்றுச் சொல்லிக் கொண்டு இருக்கும்பொழுது, ஹெட் கூப்பிட ஓடி விட்டார். நடை முறை சிக்கல்கள் பெண்களால் எப்படி இவைகளை எதிர் கொள்ள முடியும் போன்ற கேள்விகள் இன்னும் என்னிடம் பாக்கியுள்ளன

எங்கள் வீட்டில் செய்தவர் மிக நல்ல முறையில் நிதானமாய் செய்து வைத்தார். அவருக்கு எவ்வளவு தர வேண்டும் என்பதற்கு, யாரிடமும் இறுதி காரியங்களை செய்ய டிமாண்ட் செய்வதில்லை. எவ்வளவு தந்தாலும் போதும் என்றார். அவர் மகன் ஐடி படித்து பெங்களூரில் வேலையில் இருக்கிறாராம். பெண்ணும் மாப்பிள்ளையும் துபாயில் பாங்கில் வேலை. சமூகத்தில் அந்தஸ்து தராத இத்தொழில் தங்கள் வாரிசுகளை விட
யாரும் தயாராய் இல்லை.சரியாய் படிக்காமல் எந்த வேலையும் கிடைக்காமல் வேறு வழியில்லாமல் இவ்வேலைகளுக்கு வருபவர்களில் பலருக்கு சமஸ்கிருதம் எல்லாம் தெரிந்திருக்காது. உருவேற்றிய நாலு மந்திரங்களை தெரிந்து வைத்துக் கொண்டு, தமிழில் எழுதி வைத்துக் கொண்டும் பிழைக்க ஒரு வழி என்று வருபவர்கள் மட்டுமே!

12 பின்னூட்டங்கள்:

At Wednesday, 30 July, 2008, சொல்வது...

:((((

 
At Wednesday, 30 July, 2008, சொல்வது...

இந்த சத்தமில்லாத மாற்றங்கள், எரீயூட்டும் இடத்திற்கு பெண்கள் போவது, பெண் பிள்ளைகள் இறுதி சடங்கு செய்வதெல்லாம்
எப்பொழுது ஆரம்பித்தது என்று தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்.

 
At Wednesday, 30 July, 2008, சொல்வது...

மனம் கனக்கும் உண்மைகள் பல இப்பதிவில்.

கடைசிப் பத்தி-முற்றிலும் உண்மை.

 
At Thursday, 31 July, 2008, சொல்வது...

மிகவும் அர்த்தமுள்ளது வாழ்கை. உயிரோடிருக்கும்போதும், இல்லாதபோதும். இப்பதிவு என் மனதை ஏதோ செய்கிறது. ஒருமுறை படித்தேன், மறுமுறை படிக்கும் மனநிலை இல்லை. பெண்கள் இறுதிச்சடங்கு செய்வது, செய்யாதது பற்றி இங்கே கருத்து சொல்ல விரும்பவில்லை. சடங்குகளில் என்ன இருந்துவிடமுடியும் என்ற எண்ணம் இருந்தாலும், யார் செய்தால் என்ன என்றும் தோன்றுகிறது?

 
At Saturday, 02 August, 2008, சொல்வது...

//முன்பெல்லாம் சுடுகாடுகளில் பெண்களுக்கு அனுமதியில்லை, எப்பொழுது இந்த மாற்றம் வந்தது என்று தெரியவில்லை.//

எப்போவும் உண்டு. முன்பும் உண்டு, இப்போவும் உண்டு. இது பற்றிக் கவிதாவின் ஒரு பதிவிலே கூட எழுதி இருந்த நினைப்பும் இருக்கு. வாரிசு இல்லாத பெண்ணின் கணவன் இறந்தால், மனைவியே கொள்ளி போடலாம், போட முடியும், போட்டிருக்கின்றனர், இப்போதுதான் என்றில்லை, 30 வருடங்கள் முன்பே! அதே போல் இறுதிச் சடங்குகளும், அந்தப் பெண்ணின் கையில் தர்ப்பைப் புல்லைக் கொடுத்து வாங்கி, வீட்டின் வழக்கமான புரோகிதரோ, அல்லது அந்தப் பெண்ணால் குறிப்பிடப் படும் நபர் யாராவதோ செய்யலாம், இதுவும் எப்போவும் நடைமுறையில் உள்ளது. பெண்கள் இறுதிச் சடங்குகளை முழுக்கச் செய்ய முடியாது என்பதற்குக் குறிப்பிட்ட காரணம் என்று எதுவும் இல்லாவிட்டாலும் வாரிசுகள் இல்லாத பெண்கள் தங்கள் கணவருக்குத் தாங்களே திதி கொடுக்கின்றார்கள். கொடுத்திருக்கின்றார்கள், கொடுத்தும் வருகின்றார்கள். ஆனால் அவர்களுடன் அது நின்றுவிடும் என்பதாலேயே ஒரு ஆணை சுவீகாரம் எடுத்துக் கொண்டோ, அல்லது பெண்வழியில் பேரன் இருந்தால் அந்தப் பேரன் மூலமோ கர்மா செய்ய ஆரம்பித்தால் தொடர்ந்து செய்யப் படும். இதற்காகத் தான் காசிக்குச் சென்று கயாவில் அக்ஷயவடத்தில் பிண்டம் போடும்போது இம்மாதிரி வாரிசில்லாமல் இறந்த சுற்றத்தார், நண்பர், விரோதிகள் என அனைவருக்குமே பெயர் சொல்லிப் பிண்டம் போடப் படும். மற்றபடி பெண்களை ஒதுக்கும் காரணம் என்று தனியாய் எதுவும் இல்லை. மகாராஷ்டிராவில் பெண் புரோகிதர்கள், ஈமச் சடங்குகளும் செய்து வருகின்றார்கள். இது அவரவர்களின் தனிப்பட்ட விருப்பு, வெறுப்பைப் பொறுத்த ஒரு விஷயம்.
//சரியாய் படிக்காமல் எந்த வேலையும் கிடைக்காமல் வேறு வழியில்லாமல் இவ்வேலைகளுக்கு வருபவர்களில் பலருக்கு சமஸ்கிருதம் எல்லாம் தெரிந்திருக்காது. உருவேற்றிய நாலு மந்திரங்களை தெரிந்து வைத்துக் கொண்டு, தமிழில் எழுதி வைத்துக் கொண்டும் பிழைக்க ஒரு வழி என்று வருபவர்கள் மட்டுமே!//

எல்லாருமே அப்படி என எண்ணக் கூடாது. ஒருமுறை இந்தக் கர்மா செய்ய வரும் புரோகிதர்கள், தங்களை ஆத்மசுத்தி செய்து கொள்ள காயத்திரி மந்திரத்தை குறிப்பிட்ட மணி நேரத்திற்குள், குறிப்பிட்ட முறைகள் ஜபிக்கவேண்டும், விடாமல் என்று எல்லாம் நியதி இருக்கின்றது. இது அப்படி ஒண்ணும் பிழைக்க வழி என்றும் சொல்ல முடியாது. ஒருமுறை வந்து சாப்பிட்டவர்கள், மீண்டும் மற்றொரு வீட்டிற்கு உடனே செல்லவும் முடியாது. குறிப்பிட்ட நாட்கள் கடந்து, அதற்குள் அவர்கள் தங்களை ஆத்மசுத்தி செய்து கொண்டுதான் போக முடியும், அநேகமாய் இது அனைவரும் சாப்பிட உட்காரும்போதே செய்ய ஆரம்பித்துவிடுவார்கள். அப்படி ஒண்ணும் சுலபமும் இல்லை, எல்லாருமே வந்துவிடவும்முடியாது என்றே நம்புகிறேன். இது எனக்குத் தெரிந்த கருத்து மட்டுமே! தவறாக இருந்தால் மன்னிக்கவும்.

 
At Saturday, 02 August, 2008, சொல்வது...

//காரணம் வீட்டு வேலை, கழுவி விடுதல் போன்று இருக்கும் இல்லையா?//

பொதுவாய் இம்மாதிரிச் சமயங்களில் கழுவிடுதல் போன்றவற்றை வீட்டில் வேலை செய்யும் நபர்களோ, அல்லது அக்கம்பக்கமோ, மற்ற வந்திருக்கும் சுற்றமோ, நண்பர் வட்டாரமோ தான் செய்யும், உங்க வீட்டில் அப்படி இல்லையோ???

 
At Saturday, 02 August, 2008, சொல்வது...

//இந்த சத்தமில்லாத மாற்றங்கள், எரீயூட்டும் இடத்திற்கு பெண்கள் போவது, பெண் பிள்ளைகள் இறுதி சடங்கு செய்வதெல்லாம்
எப்பொழுது ஆரம்பித்தது என்று தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்.//

இதற்குத் தான் பதில் சொல்லி உள்ளேன், இது சத்தமில்லா மாற்றம் என்று எதுவும் இல்லை, சத்தம் இல்லாமல், ஆர்ப்பாட்டங்கள் எதுவும் இல்லாமல், விளம்பரம் இல்லாமல் எப்போவுமே நடந்து வரும் ஒன்று. இப்போவும் நடக்கிறது, முன்னாலெல்லாம் பெண்கள் அத்தனை போக விரும்ப மாட்டார்கள், இப்போது போகின்றார்கள், அவ்வளவு தான்.

 
At Sunday, 03 August, 2008, சொல்வது...

நீங்கள் மாமியாரைப் பார்க்க சென்னை வந்ததற்குப் பிறகு எந்தத் தகவலும் தெரியவில்லை. அதனால் எனக்கு இந்த விபரம் தெரியவில்லை உஷா.

மரணம் பலபாடங்களை நாம் அறியாமலேயே நமக்குக் கற்றுக்கொடுக்கறது. இந்த 8 வருடங்களுக்குள் மூன்று நெருங்கிய மரணங்களைக் கண்டதும் அதைக் கடந்து வருவதற்குள் பட்டபாடும். காலம் எதையும் கடக்கும் ஆற்றலை கொடுக்கட்டும்.

 
At Monday, 04 August, 2008, சொல்வது...

சோகமான இந்த நேரத்தில் ஏதும் சொல்ல இப்ப விரும்பலை. பின்னொரு காலத்தில்...
//எல்லாரும் பெண்கள் உட்பட தண்ணீர் ஊற்றி அணைத்தோம்//
பால்தானே? தண்ணீர் இல்லையே?

 
At Thursday, 07 August, 2008, சொல்வது...

enathu aalantha anuthapangal usha.

 
At Friday, 08 August, 2008, சொல்வது...

சம்பிரதாய வார்த்தையான நன்றி என்று சொல்ல கூச்சமாய் இருக்கிறது.

சீமாச்சு சார், உங்க ரெண்டு பின்னுட்டத்தையும் பர்சனல் மெயிலாய் எடுத்துக் கொள்கிறேன். என் மாமனாரிடம் உங்களைப்
பற்றி சொல்லிவிடுகிறேன். மெயிலும் வரும்.

கீதா, வேறு ஒரு சமயம் கிடைத்தால் இதைப் பற்றி பேசுவோம்.

 
At Friday, 15 August, 2008, சொல்வது...

அம்மா போன போது, என்ண்டா போனோம்னு ஆகிவிட்டது.
பெசண்ட் நகர் மின்சாரம்,அம்மாவை வாங்கி எலும்புப் பொடியாகத் துப்பியது.
எப்போதும் அமிதியாக ஏற்றுக்கொண்டதைப் போல் அந்த ஃபர்னஸுக்குள்ள போன் அம்மாவை எண்ணி இன்னும் துடிப்பாக இருக்கிறது.

வேற என்ன செய்ய முடியும். நாமும் அடுத்தப்பில இங்கதானே வருவோம்னு நினச்சேன் சரியாகி விட்டது.

 

Post a Comment

<< இல்லம்