Monday, September 08, 2008

நடிகர் சித்தப்பா

எழுபதின் கடைசியில் எங்கள் வீட்டுக்கும் தொலைக்காட்சி வந்தது. வெஸ்கான் டீவி. கருப்பு வெளுப்பில் படம் மிக துல்லியமாய் தெரியும். சனிக்கிழமை மாலை இந்தி படம், ஞாயிறு காலை அனைத்து மொழிகளில் வெளியான அவார்ட் படங்கள், ஞாயிறு மாலையில் தமிழ் படங்கள். அதற்கு முன்பு அதிக படங்கள் பார்த்ததே இல்லையாததால், எல்லாவற்றையும் பார்த்துவிடுவது. திங்கட் கிழமை என்ன புரோக்கிராம்? நினைவில்லையே? செவ்வாய்கிழமை நாடகம். கவிசக்கரவர்த்தி கம்பன், அதில் நடித்த ஜெயராமன், இன்றும் கம்பன் ஜெயராமன் என்று அழைக்கப்படுகிறார். வசனங்கள் இன்னும் நினைவில் இருக்கிறது.

புதன் கிழமை- சித்ரஹார். எதிரொலி என்று வாசக கடிதம் படிப்பார்களே புதனா வியாழனா? கடித அறுவையை தாங்கிக் கொண்டு நிகழ்ச்சியின் கடைசியில் ஞாயிறு வரப் போகும் படத்தை சொல்லுவார்கள், அதுக்காக காத்திருப்பது. வெள்ளிகிழமைகளில் ஒளியும் ஒலியும். உலாவரும் ஒளிக்கதிர், வயலும் வாழ்வும் என்று வந்த புதியதில் மாலை ஆறரையில் இருந்து ஒன்பதுமணிவரை பார்த்துவிடுவது :-)

பிறகு ஒன்பது மணிக்கு பிறகு இந்தி நிகழ்ச்சிகள் ஆரம்பிக்கும். ஹம் லோக் என்று ஒரு தொடர். அன்று எங்களுக்கு எல்லாம் தெரிந்த ஓரே ஹிந்தி சொல் நஹி ! அதையும்
புரிகிறதோ இல்லையோ அதைவும் விடாமல் பார்த்து, என்னைவிட கூட ஏழெட்டு வார்த்தைகள் தெரிந்த நட்புகள் மறு நாள் பள்ளிக்கூடத்தில் மொழி பெயர்த்து
கதை சொல்லுவார்கள்/ விடுவார்கள்.

இப்படி இருக்க, ஒரு நாள் ஏதோ திராபை பழைய படம் ஓடிக் கொண்டு இருந்தது. படத்தைப் பார்த்துக் கொண்டிருந்த அம்மா, தோ தோ என்று கூவிக் கொண்டேடீவிக்கு மிக
அருகில் சென்று கூட்டத்தில் இருந்த ஆளை சுட்டிக்காட்டினார். அவர் தனக்கு சித்தப்பா முறை என்றார். ஆனால் பிறகு படம் முழுவதையும் கண்கொட்டாமல் பார்த்தும் அந்த ஆள் திரும்ப படத்தில் தலையை காட்டவில்லை.

ஆனால் அவரை நாங்கள் சுலபமாய் அடையாளம் கண்டுக் கொண்டோம். பற்கள் தூக்கலாய், நெற்றியில் இருந்து பின் மண்டைவரை வழுக்கை, ஆனால் மண்டையின் பக்கவாட்டில் மட்டும் கொஞ்சம் தலையில் முடி இருக்கும். பல படங்களில் ஐயா பட்டணத்துல இருந்து எப்ப வந்தீங்க? என்றுக் கேட்பார். அம்மா தெய்வமாயிட்டாங்க என்று மேல் துண்டை வாயில் வைத்துக் கொண்டு தேம்புவார். நல்லா இருக்கீங்களா தம்பி என்று வினவுவார். பொண்ணு மகாலஷ்மி மாதிரி இருக்கு என்று நற்சான்றிதழ் வழங்குவார். இப்படி நாலைந்து வசனங்கள்தான். அனைத்துபடங்களிலும் காஸ்ட்யூம் ஒன்றேதான். அழுக்கு வேட்டி, சட்டை, மேல் துண்டு !

தாராபுரத்து காரர். அம்மாவுக்கு பாட்டிவழியில் சித்தப்பா ஆகணும். அம்மாவுக்கு பெயர் நினைவில்லை. தாராபுரத்து சித்தப்பா என்றே சொல்லிக் கொண்டிருந்தார். அந்த காலத்தில்
நாடகத்தில் எல்லாம் நடிக்கப் போய் வீட்டில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டவராம். அதனால் அம்மாவுக்கு கல்யாணம் ஆனதும், தனக்கு இப்படி ஒரு சித்தப்பா இருக்கிறார் என்று கணவன் வீட்டாரிடம் சொல்லவே கூடாது என்று அம்மாவின் தாய், என் பாட்டி சொன்னாராம்.

பொதுவாய் அம்மா உட்கார்ந்து தொலைக்காட்சியில் முழு படம் பார்த்ததாய் நினைவேயில்லை. அந்த நடிகர் திரையில் வந்ததும் அம்மா உன் சித்தப்பா என்று
ஓவென்று கத்துவோம். அம்மா வருவதற்குள் அவர் திரையில் இருந்து மறைந்துவிடுவார்.

பலவருடங்கள் கழித்து, என்றோ ஒருநாள் அதே மாதிரி, ஏதோ பழைய படம் வர, அதில் அதே ஆள். நான் சும்மா இல்லாமல், என் பிள்ளைகளிடம் பாட்டியின் சித்தப்பா என்று சொல்லி வைக்க, திரையில் அந்த ஆள் கண்ணில் பட்டால் என் பிள்ளைகள், பாட்டியின் சித்தப்பா என்று அலறுவார்கள். இதில் விசேஷம் என்னவென்றால் கிட்டதட்ட, எண்பதுகளில் வந்த ஜெய்சங்கர், ஜெய சித்ரா படங்கள் உட்பட, பல படங்களில் அவர் தலை தென்படும். கணக்கு பார்த்தால் அவர் நடித்த (!) படங்கள் நூற்றுகணக்கில் இருக்கும்.

இது இப்படியிருக்க, ஒரு நாள் சென்னையில் அதே ஆள் திரையில் தெரிய வழக்கப்படி என் பிள்ளைகள் பாட்டி சித்தப்பா என்று அலற, என் அம்மாவோ என் மாமியாரின்
சொந்தமாய் என்றுக் கேட்க, நான் அதிர்ந்துப் போய் என்னமா சொல்றே, நீ தானே உன் தாராபுரத்து சித்தப்பான்னு நம்ம வீட்டுல டீவி வந்த புதுசுல சொன்னியே? அதை இதுங்க கிட்ட சொன்னேன்" என்றேன்.

அம்மா கொஞ்சம் குழப்பமாய் யோசித்துவிட்டு, ''நீ சொன்னதும் ஞாபகம் வருது. என் அம்மாவிடம், (அதாவது என் பாட்டி) கூட விசாரித்தேன். பெயர் கூட தெரியவில்லை.
கல்யாணத்துக்கு பொண்ணுக்கூட யாரும் தரவில்லை. பாவம் சீக்கிரமே காலமாயிட்டார்'' என்றார்.

சென்ற வாரம் கூட ஜெயா டீவியில் ஏதோ பழைய படம். கூட்டத்தின் முன் வரிசையில் நின்றுக் கொண்டு, ஐயா சொல்லட்டும் எல்லாரும் பேசமா இருங்க என்றார். இப்படி எவ்வளவு பேர்கள் எந்த அடையாளமும் இல்லாமல், சினிமா என்ற மாயையில் மாட்டிக் கொண்டு வாழ்வையே தொலைத்து இருப்பார்கள்? ஆனால் எவ்வளவு முயற்சித்தும்
அவர் பெயரை கண்டுப்பிடிக்க முடியவில்லை என்பதை நினைத்தால் மனதிற்கு கஷ்டமாய் இருக்கிறது.

36 பின்னூட்டங்கள்:

At Monday, 08 September, 2008, சொல்வது...

அடுத்த முறை ஒரு சின்ன விடியோ எடுத்து யூட்யூபில் போடுங்க. மக்கள் கண்டுபிடிச்சு சொல்லிடுவாங்க.

 
At Monday, 08 September, 2008, சொல்வது...

இலவசம், ஐடியா நல்லா இருந்தாலும் ஒரு நொடி சீன்ல வருபவரை பிடிப்பது மிக கஷ்டம்

 
At Monday, 08 September, 2008, சொல்வது...

// இப்படி எவ்வளவு பேர்கள் எந்த அடையாளமும் இல்லாமல், சினிமா என்ற மாயையில் மாட்டிக் கொண்டு வாழ்வையே தொலைத்து இருப்பார்கள்? //

இப்பவும் கூட நீங்க இது மாதிரியான கேரக்டர்களினை அதே நிலையில் சும்மா சைடுல வந்து நின்னுட்டு போகற மாதிரி கிட்டதட்ட 20 - 25 வருஷமா நடிச்சுக்கிட்ட்டும் இருக்காங்க! :(

ஆண்பாவம் படத்தில் “அய்யா பொட்டி வர்லை “ கேரக்டர பாருங்க அவுரும் இன்னும் நெல்லை தமிழ் பேசும் மனிதராய் நடிச்சுக்கிட்டிருக்காரு! (வழுக்கை தலையுடன் நெட்டை உருவமாய்!)

 
At Monday, 08 September, 2008, சொல்வது...

எனக்கென்னவோ முன்னைவிட இப்பத்தான் நல்லா எழுதற மாதிரி தோணுது...ஆனா அப்பத்தான் நிறைய எழுதினீங்க...

இப்பவும் நிறைய எழுத முயற்சிக்கலாமே....யோசிங்க ஆத்தா!

 
At Monday, 08 September, 2008, சொல்வது...

ஆயில், நீங்க சொன்ன ஆள் தெரியலையே? எத்தனை கனவுகளுடன், இளமையை வீண்டித்துக்கொண்டு, நினைத்தால் பாவமாய் இருக்கிறது.

ஐயா யட்சன் யாருங்க நீங்க, தெரிஞ்ச ஆளு போல என்று புரோஃபல் பார்த்து போனால், மதுரா என்னை எல்லாம் தேடியிருக்கீங்க? லேசா சந்தேகம் வ்ருது சதயமா என்று ;-)

 
At Monday, 08 September, 2008, சொல்வது...

ஹி..ஹி...

நான் அவனில்லை...

 
At Monday, 08 September, 2008, சொல்வது...

நல்ல பதிவு. எத்தனையோ பேரின் வாழ்க்கை இந்த சினிமாவினால் பாழாய் போயிருக்கிறது. ஆனால் இன்னும் அங்கு சென்று விழுபவர்களின் கூட்டம் குறைவதில்லை. உம்.. எத்தனை பேரின் சித்தப்பாக்களும், அண்ணன்களும், அக்காள்களும் அந்த மாய உலகில் சீரழிகிறார்களோ..

 
At Monday, 08 September, 2008, சொல்வது...

எல்லாம் கஷ்டம்தான். ஆனா பெயர் தெரியணமுன்னா கொஞ்சம் கஷ்டப்படணும் இல்ல.

அவர் நடிச்ச படம் ஒண்ணோட டிவிடி அல்லது கேசட் பிடியுங்க. அதை ஓடவிட்டு அவர் வரும் சீனை கேமராவில் பிடியுங்க.

அப்புறம் யூட்யூப்தான்! :)

(நான் இருக்கும் குஜராத்தில் அந்த படம் டிவிடிக்கு எங்க போக என்று சோக சீன் போட வேண்டாம். மனம் இருந்தால் மார்க்கமுண்டு.)

 
At Monday, 08 September, 2008, சொல்வது...

அண்ணியாரே! யட்சன் யாரு புதுசா வலையிலே??? தமிழ் சினிமா பார்த்துட்டு சிவாஜின்னா யாருன்னு கேக்குறாரு??

எனக்கும் ஒரு தாராபுரம் மாமா இருந்தார்!பின்ன சொல்றேன் அவரை பத்தி!!!

 
At Monday, 08 September, 2008, சொல்வது...

யட்சன், நான் அவனில்லை என்றால் அப்ப "நான்" யார் :-)

இலவ்சம், உங்க முதல் கமெண்ட் பார்த்ததுமே சிரிப்பு வந்துவிட்டது. பன்னிரண்டாவது படிக்கும்
மகனின் உத்தரவுபடி, கேபிள் கனெக்ஷன் கட் செய்தது உங்க கமெண்ட் வருவதற்கு சில மணி
நேரம் முன்புதான். அதனால் படம் பிடிப்பது இப்பொழுது இல்லை.

கானகம், நடிக்க வேண்டும், டைரக்ஷன், பாட்டு எழுத என்று அலைமோதும் கும்பல்களில்
அக்காள்களின் எண்ணிக்கை மிக குறைவுதான். அப்படி வந்தாலும் நடிக்க மட்டுமே இருக்கும்
இல்லையா?

அபி அப்பா, எழுதுங்க அப்படியே யட்சன் யார் என்று தனிமடலில் சொல்லிடுங்க. சஸ்பென்ஸ்
தாங்க முடியவில்லை.

 
At Monday, 08 September, 2008, சொல்வது...

//ramachandranusha(உஷா) said...
ஆயில், நீங்க சொன்ன ஆள் தெரியலையே? எத்தனை கனவுகளுடன், இளமையை வீண்டித்துக்கொண்டு, நினைத்தால் பாவமாய் இருக்கிறது.
//
அக்கா உங்களுக்காகவே, தனி பதிவா போட்டாச்சு!
கனவு தொழிற்சாலையில்...?

 
At Monday, 08 September, 2008, சொல்வது...

திரை உலகம் !!!!!!!!!!!!!!!

 
At Tuesday, 09 September, 2008, சொல்வது...

//இன்றும் கம்பன் ஜெயராமன் என்று அழைக்கப்படுகிறார். //

சொல்லில் தான் குற்றம். அவர் கம்பர் ஜெயராமன் என்று தான் அழைக்கபடுகிறார். ர்ர்ர்ர விட்டுடீங்க.

அதனால 'தமிழரை மதிக்காத நுனிப்புல் மேடம்!'னு யாராவது எதிர்வினை பதிவிட சான்ஸ் நிறைய இருக்கு. (நான் கொஞ்சம் டீசண்டா தலைப்பு சொல்லி இருக்கேன், இது வேற மாதிரி இருக்கும்னு உங்களுக்கே தெரியும்) :)))

சரி பதிவுக்கு வருவோம்!

படம் பாக்கும் போது இந்த சைடுல வரவங்களை தான் நான் முக்யமா கவனிப்பேன்.

அதுலயும் பாட்டு சீன்ல பின்னாடி ஆடறவங்களை கவனிச்சு இருக்கீங்களா? என்னமா எக்ஸ்பிரஷன் காட்டுவாங்க தெரியுமா?

சீக்கோழி த்ரிஷா(உங்களுக்கு தெரிந்து இருக்க சான்ஸ் இல்ல, இந்த காலத்து நடிகை அவங்க) எல்லாம் பிச்சை எடுக்கனும். :p

எம்ஜிஆர் படங்களில் அவருக்கு ஜால்ரா அடிக்கவென்றே ஒருத்தர் வருவார். ஐசரி சுரேஷ்னு நினைக்கிறேன். அவரு இப்படி பிட்டு போட்டே ஒரு தொகுதிக்கு எம்.எல்.ஏ ஆயிட்டாராம். :D

 
At Tuesday, 09 September, 2008, சொல்வது...

முரளி கண்ணன் நன்றி

அம்பி,
தவறை சுட்டிக்காட்டியதற்கு நன்றி.
இந்த பாடல்காட்சிகளில் பின்னால் ஆடுபவர்களை கவனிக்கும்
கெட்ட பழக்கம் பலருக்கும் உண்டு. திரிசா, ஏதோ ஒரு ஷாம் படம் என்று நினைக்கிறேன், தோழி என்று சும்மா நின்றுக் கொண்டு இருப்பார். மேட்டர் சரியா?
நீங்க சொன்ன ஆள் பெயர் ஐசரி வேலன், காமடியன் என்று ஆபாச ஜோக்குகள், அசைவுகளில்
எக்ஸ்பர்ட். ஐயா அதிமுகவில் சேர்ந்து எம் எல் ஏ ஆனது மட்டுமில்லாமல், மகன் ஐசரி கணேஷ்
அதிமுக்வில் மாணவரணி தலைவராக இருந்து, காலேஜ், பல்கலைகழகம்ன்னு ஓ ஹோன்னு
இருக்கிறார்.

 
At Tuesday, 09 September, 2008, சொல்வது...

நல்ல பதிவு. தலைப்பைப் பார்த்து விட்டு நான் ஏதோ “அரசியல்” மேட்டர்னு நினைத்தேன். அப்புறம்தான் புரியுது இது நிஜமான “சித்தி- சித்தப்பா” மேட்டர்னு!

 
At Tuesday, 09 September, 2008, சொல்வது...

ராமு, நடிகர் சரத்குமார் பற்றி என்றா
:-)

 
At Tuesday, 09 September, 2008, சொல்வது...

பாடல் காட்சிகளில் பின்னால் ஆடும் அழகிய நடன மங்கயரை பற்றி ஒரு தொடர் பதிவெழுதும் அளவுக்கு கவனிச்சு வச்சிருக்கேன்.

குறிப்பிட்ட நடன மங்கை ஒவ்வொரு காலகட்டத்திலும் எந்த வரிசையிலிருந்து எந்த வரிசைக்கு மாறியிருக்கிறார் என்பதையும் கவனித்திருக்கிறீர்களா?

முதல் வரிசையில் ஹீரோவுக்க்கு பக்கத்தில் ஆடும் பெண்ணின் முகத்திலிருக்கும் பளபளப்பையும், பின் வரிசை பெண்ணின் சலிப்பையும் கவனித்திருக்கிறீர்களா?

காலை எழரை மணிவாக்கில் நடிகர் சங்க வளாக ஏரியாவில் இன்றைக்கு வேலை கிடைக்காதா என்கிற ஏக்கத்துடன் அலையும் துனை நடிகர்களை பார்த்தால் தெரியும் சினிமாவின் கோர முகம்.

சமீபத்தில் ஜானி படத்தில் ஸ்ரீதேவி பியானோ வாசித்துக் கொண்டே பாடும் போது அவரின் உதவியாளரான ஒரு பெண் படிக்கட்டில் அமர்ந்து ரசித்துக் கொண்டிருப்பாரே நினைவிருக்கிறதா...அவரை பலமுறை அந்த தெருவில் பரிதாபமாய் அலைவதை பார்த்திருக்கிறேன். காலம் அவர் இளமையை மென்று துப்பியிருக்க வெறும் சக்கையாய்...மனது வலித்த தருணங்களில் ஒன்று அது.

 
At Tuesday, 09 September, 2008, சொல்வது...

யட்சன்,
நீங்கள் குறிப்பிடும் பெண்மணி மகேந்திரன் டைரக்ஷன் படங்களில் நான் பார்த்திருக்கிறேன். இது ஒரு கானல் நீர். அது தெரியாமல் இளமையை, வாழ்க்கையை தொலைக்கும் மனிதர்கள். படிக்க மனசுக்கு வருத்தமாய் இருக்கிறது.

 
At Tuesday, 09 September, 2008, சொல்வது...

உஷா,

திரையில் ஒரு கணம் தோன்ற இவர்கள் கொடுக்கும் வீலை பயங்கரம்.

யட்ட்சன் சொன்ன பெண்ணை எல்லோருக்கும் நினைவிருக்கும்.

:(

 
At Tuesday, 09 September, 2008, சொல்வது...

//திரிசா, ஏதோ ஒரு ஷாம் படம் என்று நினைக்கிறேன், தோழி என்று சும்மா நின்றுக் கொண்டு இருப்பார். மேட்டர் சரியா?
//

வெரிகுட். அது ஷ்யாம் படம் இல்ல, பிரசாந்த், சிம்ரன் ஜோடியா நடிச்ச ஜோடி திரைப்படம். ஷ்யாம் கூட குஷி படத்துல பின்னாடி வருவார்.

'ராஜா! ராஜாதி ராஜன் இந்த ராஜா!' பாட்டுல கார்த்திக்கு பின்னாடி ரொம்ப உயரமா முழுக்கை வெள்ளை டி ஷர்ட் போட்டுகிட்டு ஒரு இளைஞர் ஆடுவார், அது நான் தான்!னு பிரபு தேவா ஒரு பேட்டியில சொன்னாரு.

பாருங்க, நாயகனா வந்த கார்த்திக் இப்ப பீல்டு அவுடு.

ஆனா பிரபு தேவா தன்னை தொடர்ச்சியா புதுபிச்சுகிட்டு இருக்காரு. தனி பாட்டு, நடன இயக்குனர், பின் கதா நாயகன் இப்போ வெற்றிபட இயக்குனரா உயர்ந்து இருக்கார்.

காரணம் மாற்றம் ஒன்று தான் மாற்றாமில்லாதது!னு அவருக்கு தெரிஞ்சு இருக்கு. :))

 
At Tuesday, 09 September, 2008, சொல்வது...

//குறிப்பிட்ட நடன மங்கை ஒவ்வொரு காலகட்டத்திலும் எந்த வரிசையிலிருந்து எந்த வரிசைக்கு மாறியிருக்கிறார் என்பதையும் கவனித்திருக்கிறீர்களா?
//

வாவ்! யட்சன்(இப்போதைக்கு) கலக்கிட்டீங்க. :))

நானும் கவனிச்சு இருக்கேன்.

குறிப்பா ரஜினி அறிமுக பாடல்களை கவனிச்சு இருக்கீங்களா? அவர் பின்னாடி ஆடும் நபர்களை பாத்து இருக்கீங்களா?

(பல்லேலக்கா மட்டும் விதி விலக்கு, ஷங்கர் கேரளாவில் இருந்து ஆளை கூட்டி வந்து எல்லோருக்கும் புலி வேஷம் போட்டு விட்டுடாரு) :D

 
At Tuesday, 09 September, 2008, சொல்வது...

//நீங்க சொன்ன ஆள் பெயர் ஐசரி வேலன், //

@உஷாஜி, நன்றி ஹை. :)

தேங்காய் சீனிவாசனும் இந்த மட்ட ரக காமடி(?) செய்வார். :((

 
At Tuesday, 09 September, 2008, சொல்வது...

வல்லி அந்தம்மா பெயர் நினைவுக்கு வரவில்லை.

அம்பி, ஹேமா மாலினி கூட ஹிந்தியில் கால் வைக்கும் முன்பு ஒரு படத்தில் குரூப் டான்ஸ்
ஆடியதாய் கேள்விப்பட்டிருக்கிறேன். துளசி, வல்லி போன்ற மூத்த பதிவர்களுக்கு தெரிந்திருக்கலாம் :-)
எஸ் எஸ். சந்திரனை விட்டுடுடீங்களே

 
At Wednesday, 10 September, 2008, சொல்வது...

எல்லோரும் இவ்வுலகில் ஒரு 15 நிமிடமாவது புகழடைந்து பேசப்படுவார்கள்... யாரோ சொன்னது. இவர்களுக்கும் பொருந்தும்.
கார்த்திக் பற்றி, வாழ்ந்து கெட்ட குடும்பங்களின் ஒரு எடுத்துக்காட்டாக மாறிவிடுவாரோ எனத் தோன்றும் அளவிற்கு அவரது செயல்கள் உள்ளது. அளவுக்கு மீறீனால்.... அது போல

 
At Wednesday, 10 September, 2008, சொல்வது...

அவர் தோன்றிய சில படங்களின் பெயர்களை சொல்லுங்கள் உஷா...அடுத்த முறை தொலைகாட்சியில் வரும் பொது நாங்கள் யாரென்று பார்த்து கண்டுபிடிக்க முயற்சி செய்யலாமே

 
At Wednesday, 10 September, 2008, சொல்வது...

விஜய், சினிமா உலக மாயை பதினைந்து நிமிட புகழுக்கு மட்டுமல்ல :-)

கிருஷ்ணன், பதிவு போடும்பொழுது தோன்றாத எண்ணம்- ஆள் யார் என்று கண்டுப்பிடிக்காமல்
விடுவதில்லை. பழைய படங்களை தேடிப்பிடித்து பார்த்தால் தெரிந்துவிடும் இல்லையா?

 
At Wednesday, 10 September, 2008, சொல்வது...

கைல கேமரா வச்சு டக்குனு போட்டோ புடிச்சுடனும்

 
At Wednesday, 10 September, 2008, சொல்வது...

என்னோட சித்திப் பொண்ணு இப்போ ப்ருந்தா மாஸ்டர் கிட்ட சிஷ்யை. சில தொலை நாடக ஆரம்பப் பாடல்களில் குழுவில் நடனமாடிவிட்டு போவார்


இழந்தவைகளை பின் நோக்கிப் பார்க்கும் போது காலம் வெகுதூரம் போய் விட்டு இருக்கும். தொடர்பில் இவர்கள் இல்லை என்றாலும் சற்று மனம் வலிக்கத்தான் செய்கிறது

 
At Thursday, 11 September, 2008, சொல்வது...

நல்ல பதிவு உஷா மேடம். வெள்ளித் திரையில் தோன்றினாலும் பலரின் வாழ்க்கை என்னமோ இருட்டாகத் தான் இருக்கிறது. இதற்கு காரணம் திறமை இல்லாததா இல்லை அதிர்ஷ்டம் இல்லாததா?

 
At Friday, 12 September, 2008, சொல்வது...

உஷா,நம்ம அம்மா மேடம்,சரோஜா தேவி எல்லாம் கூட கதாநாயகி ஆகிறதுக்கு முன்னால பாடல்களில் ஆடி யிருப்பாங்க. இப்ப ஞாபகம் வராது அவங்களுக்கு.:)
அதென்ன துளசியைச் சேத்துக்கிறீங்க. அது சின்னக் குழந்தை:)

 
At Friday, 12 September, 2008, சொல்வது...

ஜீவ்ஸ், வந்தியதேவன்! சினிமாவில் மட்டும் விடாமுயற்சியுடன் அதிருஷ்டமும் வேண்டும் என்று
தோன்றும். ரஜினி, வடிவேலு, விக்ரம் இவர்களை எல்லாம் பார்க்கும்பொழுது. குடும்பமே படம் தயாரித்து, டைரக்ஷன் செய்து, விநியோகமும் செய்தாலும் எத்தனை வாரிசுகளால் நிற்க முடிகிறது?

வல்லி, தவறான தகவல். அம்மா இல்லைவே இல்லை. ச.தேவி சில துணை பாத்திரங்களில்
நடித்தாலும், குருப் டான்சில் இல்லவே இல்லை. ஓவர் டூ துளசி

 
At Friday, 12 September, 2008, சொல்வது...

சும்மாவா கல்கி சிறுகதைப் போட்டியில் அங்கீகாரம் கிடைக்கிறது?

வித்தியாசமான பார்வை; அதைக் கோர்வையாக எழுதி படிப்பவர்கள் மனதைப் பிசைய வைக்கும் வித்தை.

வாழ்த்துக்கள்; பாராட்டுக்கள் மேடம். தொடர்க.

 
At Wednesday, 17 September, 2008, சொல்வது...

சித்தப்பா பெயர் சுப்பிரமணி . இல்லை என்று யாராவது ஆதாரத்துடன் நிரூபியுங்க பாப்போம் :)

 
At Wednesday, 17 September, 2008, சொல்வது...

ச.சங்கர், நாங்கள் வீர வைண்ஷவ பரம்பரையினர் :-) அப்படியிருக்க சுப்ரமணி என்ற பெயர்? சான்சே இல்லை.

 
At Thursday, 18 September, 2008, சொல்வது...

ரொம்ப வீரமா இருக்குறதுனால "வைஷ்ணவ" என்பது "வைண்ஷவ" ஆயிடுச்சு போல :).

எனக்கு கற்பனைல கூட வைஷ்ணவ பேர் வர மாட்டேங்குது.என் பெயர் அப்படி :).

 
At Monday, 13 October, 2008, சொல்வது...

//ramachandranusha(உஷா) said...
ச.சங்கர், நாங்கள் வீர வைண்ஷவ பரம்பரையினர் :-) அப்படியிருக்க சுப்ரமணி என்ற பெயர்? சான்சே இல்லை.
//

:))

 

Post a Comment

<< இல்லம்