Friday, October 10, 2008

புத்தக வாசம்- ஒரு தொடர் ஆட்டம்

ஏதாவது சொல் இல்லை என்றால் மெளனமாய் இரு என்று சொல்லப்பட்டதை சிரமேற்று எல்லாரும் நேர்மையாய் பேசாமல் இருந்தாலும்,என்னால் பேசாமல் இருப்பது கடினம் என்று ஆரம்பித்துவிட்டேன் :-)

இணைய குழுக்களில் கிடைத்த நட்புகளை இணைத்த ஓரே விஷயம், வாசிப்பு அனுபவம். அன்றிலிருந்து இன்றுவரை, நான் பார்த்தவரையில் பெரும்பாலோர் நல்ல வாசகர்கள். தேடி தேடி படிப்பதிலும், படித்தைவைகளை பகிர்ந்துக் கொள்ளுவதிலும் ஆர்வமுள்ளவர்கள். இந்த
ஆர்வமே நாமும் எழுதிப் பார்க்கலாம் என்று இணையத்தில் எழுத ஆரம்பித்தார்கள், என்னைப் போல :-)


மது சொன்னதைத் தொடந்து இங்குப் போனால் கரும்பு தின்ன கூலியா அல்லது நம்மை நாமே
எடை போட்டுக் கொள்ள ஒரு சான்சா தெரியாமல் ஆடிவிட்டேன். அங்குப் போட்டதும் தோன்றியது, நம் பதிவர்கள், பலருடம் வாசக இன்பத்தைப் பற்றி பல முறை பேசியிருக்கிறேன். புத்தக புழுவான எனக்கு, அஞ்ஞான வாசமாய் படிக்க (தமிழ் மட்டும் இல்லாமல் ஆங்கில புத்தகங்கள் கூட கிடைக்காத வாழ்க்கையை அனுபவித்து இருக்கிறேன். இணையத்தில் தமிழ் படிக்க முடிந்ததும், மகிழ்ச்சியில் உற்சாகம் கரைப்புரண்டு ஓட தொடங்கியது. எல்லாமே ஏதோ
பூர்வ ஜென்ம நினைவாய் வாசித்தவைகள் எல்லாம் நிழலாய் நினைவுக்கு வர புளியமரத்தின்
கதை- எழுதியவர் ச. கந்தசாமி என்று நினைப்பேன். சாயாவானத்தில் புளியங்காட்டை
அழிப்பாரே :-) எல்லா குழப்பங்களும், மெல்ல மெல்ல தெளிந்து படித்தவைகளை பரஸ்பரம் நினைவுக்கூறும்பொழுதும், புக் லேண்ட் போன்ற தமிழ் புக்கங்களும் கிடைக்கும் கடைகளும் சென்னையில் உண்டு என்று அறிந்தேன். இப்படி என் பசிக்கு சோறுப் போட்ட, போடும் இணையத்துக்கு ஒரு ஜெ :-) இது என் பதில்கள், ஆனால் ரீ ரைட் செய்து இருக்கிறேன்.

நாவல்களோடு உங்கள் அனுபவம்

1. நீங்கள் படிக்க நேர்ந்த முதல் நாவல் எது?
நினைவில்லை. ஆனால் சிறுவர் நாவலாய் சில லேசாய் நினைவுவருகிறது. வாண்டுமாமா எழுதியது,

2. எந்த வயதிலிருந்து நாவல்கள் படிக்க ஆரம்பித்தீர்கள்?
பத்துவயதில் இருந்து இருக்கலாம்

3. எந்த வகையான நாவல்கள் உங்களுக்குப் பிடிக்கிறது?
சமூக நாவல்கள், மற்றும் சரித்திர நாவல்கள்

4. ஒரு நாவலை எப்படி படிக்க தேர்ந்தெடுக்கிறீர்கள்?
ஏற்கனவே அந்த நாவலைப் படிக்க நேர்ந்தவர்கள் சொல்லக் கேட்டு , பத்திரிக்கைகளில் நூல் மதிப்புரைப் படித்து ,நாவலாசிரியரின் பேரைப் பார்த்து என்று ஏதாவது ஒன்று கட்டாயம்


5. நாவல்களுக்கும், சிறுகதைகளுக்கும் உள்ள வித்தியாசம் என்ன என்று நினைக்கிறீர்கள்?

பக்க அளவு :-)

6. நாவல்களைப் படிக்கிற போக்கில் குறிப்பிட்ட கதாபாத்திரங்கள் கதையின் மையப் பாத்திரமாக எப்படி உருவெடுக்கிறது?

வாசகனின் அக நிலையிலிருந்து

7. ஒரு நாவலுக்கு, குறிப்பாக எத்தனை பக்கங்கள் இருக்கலாம் என்று கருதுகிறீர்கள்?

சற்றே பெரிய சிறுகதையாய் இருக்ககூடாது:-)


8. மிக அதிகமான பக்கங்கள் உள்ள நாவல்களைப் பார்த்ததும் என்ன தோன்றுகிறது?

சந்தோஷம், பெரும்பாலும் ஒல்லி புத்தகங்களை தவிர்த்துவிடுவேன்.


9. நாவலின் சில அத்தியாயங்களைப் படித்ததுமே, இறுதிப்பக்கங்களுக்குச் செல்லும் வழக்கமுண்டா?

வெகு குறைவு அல்லது இல்லவே இல்லை, ஆனால் "ரத்த உறவு" படிக்கும்பொழுது பாதியில் மனம் பதைத்துப் போய் கடைசி பக்கத்தைப் படித்து நிம்மதியடைந்தேன்.


10. எந்த சமயங்களை நாவல்கள் படிக்கத் தேர்ந்தெடுத்துக் கொள்கிறீர்கள்?

நாவலின் சுவாரசியத்தைப் பொறுத்து, சாம்பாரைக்கிண்டிக் கொண்டும் படிப்பேன் :-)


11. பாதி வரைப் படித்து,முடிக்காமல் போன நாவல்கள் எவை?

கொற்றவை, நெடுங்குறுதி. கடின மொழியும், கதை தளமும் என் புரிதலுக்கு மிக மேம்பட்டதாய்
இருந்ததால், சில பக்கங்களுக்கு மேல் என்னால் வாசிக்க இயலவில்லை

12. பெரும் எதிர்பார்ப்புடன் படித்து, பிடிக்காமல் போன நாவல்கள் எவை?

வெளியே சொல்ல முடியாது :-)ஒருவகையான எரிச்சல் அடைந்தேன் என்றும் சொல்லலாம். முதுகு சொறிதல் என்பதற்கு பொருள் புலப்பட்டது.


13. தாங்கள் படிக்க நினைத்து இதுவரை படிக்காமலே இருக்கிற நாவல்கள் எவை?

ஜெ.கேவின் பாரிசுக்கு போ. நாஞ்சில் நாடன் அவர்களின் சிறுகதைகள் மட்டுமே படித்திருக்கிறேன். அவரின் நாவல்கள் வாங்க வேண்டும்.

14. படித்ததில் பிடித்த பத்து தமிழ் நாவல்கள் எவை?

பத்துக்குள் அடக்க முடியாது

15. படித்ததில் பிடித்த பத்து பிற இந்திய மொழி நாவல்கள் எவை? லிஸ்ட் பெரியது. சில

நீலகண்ட பறவையை தேடி
யயாதி
ஆரோக்கியநிகேதனம்
ஜெய் சோம்நாத்
விடியுமா
மூக்கய அஜ்ஜி கனசு
சிக்க வீர ராஜேந்திரா
யுகந்தா
மகாபாரதம் :-)

16. படித்ததில் பிடித்த பத்து வெளிநாட்டு நாவல்கள எவை?

நிறைய இருக்கின்றன

17. திரும்பத் திரும்ப படித்த நாவல்கள் எவை?

பல உண்டு

18. படிக்கும் முன்னரோ, படித்த பின்னரோ நாவலின் தலைப்புகள் குறித்து யோசிப்பது உண்டா?

விசேஷமாய் இல்லை என்று முதலில் சொன்னேன், ஆனால் ஏழாவது உலகம் என்ற தலைப்பு என்னை யோசிக்க வைத்தது. நாவலைப் படித்ததும் தலைப்பும், கதையின் தளமும் சில நாட்களுக்கு என்னை மிகவும் பாடுபடுத்தியது


19. நாவல்களில் வந்த கதாபாத்திரங்களை தங்கள் லட்சிய மனிதர்களாக வரித்துக் கொண்டதுண்டா? அப்படி இருந்தால் குறிப்பிடுங்களேன்.

இல்லை


20. பிற மொழி நாவல்களுக்கும் தமிழ்மொழி நாவல்களுக்கும் என்ன வித்தியாசங்களை உணர்கிறீர்கள்?

விசேஷமாய் ஒன்றும் இல்லை.


21. உலகின் பிறமொழிகளுக்கு எடுத்துச் செல்லப்பட வேண்டும் என கருதிய தமிழ் நாவல்கள் எவை?

லிஸ்ட் பெரியது :-)


22. வாசித்ததில் தங்களது இயல்பு நிலையை வெகுவாக தொந்தரவு செய்த நாவல்கள் எவை?

ஏழாவது உலகம்

23. கதாபாத்திரங்களின் உரையாடல் எப்படி இருக்க வேண்டும்?

அ.எழுத்து மொழி

ஆ.பேச்சு வழக்கு

இ.வட்டார வழக்கு
மூன்றுமே! கதை தளத்தை பொறுத்தே அமைகின்றன

24. தாங்கள் இதுவரையில் வாசித்த நாவல்களில் பிடிபடும் பொதுத்தன்மைகள் எவை எவை?

புரியவில்லை

25. எந்த நாவல்களைப் படித்ததும், அவற்றை எழுதிய எழுத்தாளரை சந்திக்க வேண்டும் என்று தோன்றியது?

இல்லை. ஆனால் தற்செயலாய் முதன் முறையாய் ஒரு விழாவில் நான் வாசித்த பல படைப்பாளிகளைப் பார்த்து தேனில் விழுந்த ஈயாய் திக்குமுக்காடி போனேன்.அதிலும் இந்திரா பார்த்தசாரதி அவர்களைப் பார்த்துவிட்டு, சார் உங்க நாவல் எல்லாம் படிச்சிருக்கேன் என்று சொல்லிவிட்டு, அடுத்து என்ன பேசுவது என்று தெரியாமல் முழித்துவிட்டு, வெகு அபத்தமாய்
இருந்தது.இது தேவையில்லாத தர்மசங்கடம் எழுத்தாளர்களுக்கு. மேலும் எழுத்துக்கு கொடுத்த மரியாதை, பேசி பார்த்தால் நீர்த்துவிடுமோ என்றும் பயமாய் இருக்கிறது :-)

26. தாங்கள் நாவல்களை தொடர்ந்து ஒரே மூச்சில் படிப்பீர்களா? அல்லது விட்டு விட்டு பல்வேறு சமயங்களில் படிப்பீர்களா?

நாவலின் சுவாரசியத்தை பொறுத்து. பெரும்பாலும் ஓரே மூச்சுதான்

27. உள்ளடக்கத்திற்காக மட்டுமின்றி மொழிநடைக்காகவே லயித்துப் படிப்பது யார் யாருடைய நாவல்களை?

பொதுவாய் சொல்வதைவிட காடு - ஜெ.மோ, கிருஷ்ணா கிருஷ்ணா- இ.பா, கோபல்ல கிராமம்- கி.ரா. எழுத்தில் தெரிந்த எளிமை, பாட்டியிடம் கதை கேட்பதுப் போல ஒரு அந்நியோயம். இதைத் தவிர வாசிக்கும் பொழுது முகத்தில் புன்னகை அரும்ப வைக்கும் சுஜாதாவின் நகைச்சுவை

28. கதாபாத்திரங்களின் இயல்பு மீறி, நாவலாசிரியரே வலிந்து பேசுவது போல தோன்றியிருக்கிறதா. அப்படியானால், அந்த நாவல்கள் பற்றி உங்கள் அபிப்ராயம் என்னவாகிறது?

இதற்கும் பொதுவாய் சொல்ல முடியாது. ஆனால் இ.பா தன் பல நாவல்களில் தென்படுவார். எழுத்தில் அவரின் ஸ்மார்ட்நஸ் (இதற்கு தமிழில் என்ன?) எனக்கு பிடிக்கும்

29. நாயகத் தன்மையற்ற நாவல்களைப் படித்திருக்கிறீர்களா? குறிப்பிடுங்களேன்.

விஷ்ணுபுரம் ?

30. கவிதை, சிறுகதைகளைத் தாண்டி, நாவல்கள்தான் இலக்கியத்தின் உச்சம் என்று கருதுகிறீர்களா?

இல்லை , இவைகளின் தளங்கள் மாறுபட்டவைகள்

31. தாங்கள் கடைசியாக படித்த தமிழ்நாவல் எது?

யாமம்


32. நாமும் ஒரு நாவல் எழுதவேண்டும் என்று உங்களுக்குத் தோன்றுவதுண்டா?
தோன்றியது. நல்ல வாசகர்களுக்கு தோன்றும் இயல்பான எண்ணமே. கொஞ்சம் மெனக்கெட்டால், தீவிர வாசகர்களுக்கு எழுதுவது கடினமில்லை.


33. நாவல்கள் எழுதத் தோன்றினாலும் ஏன் இதுநாள் வரையிலும் எழுதவில்லை?

எழுதி முதல் முயற்சியில் வென்றும் விட்டேன் :-)

முற்றும்
டிஸ்கி: பலரும் தீவிர வாசகர்கள் என்றாலும் சிலரை இத்தொடர் ஆட்டத்துக்கு அழைக்கிறேன்

1- பூக்கிரி என்ற பொன்ஸ்

2- சந்திரவதனா

3- லேகா

4- ரஜினி ராம்கி

5- ஆசிப் மீரான்

தொடர் விளையாட்டுகளில் பெரியதாய் விருப்பம் இருந்ததில்லை. ஆனால் இந்த முறை இப்பதில்கள் போட்ட பிறகும், வாசிப்பு அனுபவம் பற்றி மனதில் கேள்விகள் எண்ணங்களாய் சுற்றிக் கொண்டு இருப்பது மிக இனிய அனுபவம். அதை நீங்களும் பெற, வாங்க ஜோதியில் சேருங்க :-)

16 பின்னூட்டங்கள்:

At Friday, 10 October, 2008, சொல்வது...

நாவல்கள் வாசிப்பது குறித்து நாவல் அளவுக்கே பதிவு போட்ட அக்காவுக்கு ஒரு ஜே போடுங்க... :)))

 
At Friday, 10 October, 2008, சொல்வது...

எம்புட்டு பெரிய விசயம் எம்புட்டு பெரிய பதிவு சூப்பர்க்கா! :)))

 
At Friday, 10 October, 2008, சொல்வது...

present madam

 
At Saturday, 11 October, 2008, சொல்வது...

//நினைவுக்கு வர புளியமரத்தின்
கதை- எழுதியவர் ச. கந்தசாமி என்று நினைப்பேன். சாயாவானத்தில் புளியங்காட்டை
அழிப்பாரே :-) எல்லா குழப்பங்களும்//

படிக்கும்போதே இடிச்சது, என்றாலும் கமெண்ட் போடலை, ஆனால் மனசில் உறுத்தல் அதிகம் ஆகவே எழுதறேன், "ஒரு புளியமரத்தின் கதை" எழுதியது சுந்தர ராமசாமி, வாசகர் வட்டம் வெளியீடு, "சாயாவனம்" எழுதியது சா.கந்தசாமி, புளியங்காட்டை மட்டுமில்லாமல் பூம்புகாரின் அருகே இருந்த ஒரு காடு மொத்தமுமே, பல்வகை மரங்களோடு அழிந்தது பற்றிக் குறிப்பிடுவார். இதுவும் வாசகர் வட்டம் வெளியீடு தான், குழப்பமாய் எழுதிட்டீங்களா, இல்லை குழப்பமாய் நினைச்சேன்னு சொல்றீங்களா புரியலை, எழுதிட்டேன் வேண்டாம்னு நினைச்சேன், முதல்லே! :))))))) தப்பானால் மன்னிக்கவும்.

 
At Saturday, 11 October, 2008, சொல்வது...

ஆயில், வெண்பூ நீங்களும் ஆரம்பியுங்களேன். நான் யாராவது கூப்பிட வேண்டும் என்றுக் காத்திருந்தேனா :-)

கீதா, தெளிவாய் போடவில்லை போல இருக்கு! சாயாவனத்தில் கடைசியில் புளி மரங்களை வெட்டிவிட்டீர்களே, அந்த புளி
அருமையாய் இருக்கும் என்று ஒரு டயலாக் வரும்.பூர்வாசிரமத்தில் அதை நினைத்து குழம்பி போயிருந்தேன். சுந்தர ராமசாமி எழுதிய "ஒரு புளிய மரத்தின் கதை" இதைப் பற்றியே ஒரு போஸ்ட் போட்டு இருக்கிறேன்.
அது சரி, இதுக்கெல்லாம் எதுக்கு மன்னிப்பு போன்ற வார்த்தைகள். கீதா, உங்களையும் கேட்டுக் கொள்கிறேன். நீங்களும் இந்த கேள்விகளுக்கு பதில் சொல்லுங்களேன்.

 
At Saturday, 11 October, 2008, சொல்வது...

பொறுமை.

இதுதான் உங்க எழுத்தைப் படித்ததும் தோணித்து.
உஷா,
நான் விவரமாப் பதில் போடவில்லை அந்தப் பதிவில்.

நல்லதொரு வாசம். மேலும் நிறைய படிக்கக் கிடைக்கும்:)

 
At Saturday, 11 October, 2008, சொல்வது...

வல்லி! கீதா ஆயில்யன், வெண் பூவுக்கு சொன்னதேதான். நீங்களாவ்து உங்க பிளாக்குல விவரமா
எழுதுங்களேன்

 
At Saturday, 11 October, 2008, சொல்வது...

நல்ல கேள்விகள். பாந்தமான பதில்கள். பல கேள்விகளுக்கான பதில்கள் ஒத்த ரசனை / கருத்துடன் இருந்தன.

மற்றவர்களும் எழுதட்டும். நல்ல தொடக்கம்.

 
At Sunday, 12 October, 2008, சொல்வது...

நன்றி உஷா
கேள்விகளே நினைவலைகளை மீட்டி விட்டுள்ளன.
சரியான முறையில் எழுத முடியாமலுள்ளது. கணினியில் பிரச்சனை.விரைவில எழுதுகிறேன்.

 
At Sunday, 12 October, 2008, சொல்வது...

செய்யறேன் உஷா.
படிக்க தேசிக தரிசனம் டயரி (வைணவ தினசரி நாட்காட்டி)மட்டுமே கையில் உள்ளது.

அப்படிக்காய்ஞ்சு போயிருக்கேன்.இணையத்தில எழுதவில்லைன்னால் தமிழே மறந்து போய்விடும் சூழ்நிலை:)
யோசித்துத்தான் சொல்லணும்.

 
At Sunday, 12 October, 2008, சொல்வது...

நல்லதொரு தொடர்விளையாட்டு. நானும் உங்களை இன்னொரு விளையாட்டுல இழுத்து விட்டுட்டேன். சிரமம் கருதாமல் அந்த சங்கிலியையும் தொடர வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன்.

இங்கே வாருங்கள்

 
At Sunday, 12 October, 2008, சொல்வது...

உபயோகமான பதிவு. வாசிப்பைப் பகிர்வதற்கும் நல்ல தெரிவுக்கும் உதவும். நிறைய வாசிக்கிறீர்கள் போலிருக்கிறது.

 
At Sunday, 12 October, 2008, சொல்வது...

ரத்னேஷ், வல்லி,சீரிதர் நாராயணன், தமிழ் நதி நீங்களும் உங்க வாசிப்பு அனுபவங்களை எழுத வேண்டுகிறேன்.
சந்திரா காத்திருக்கிறோம் :-)

தமிழ் நதி! என்னால் இந்த சில வருட இணைய அனுபவத்தில் இங்கு எழுதுபவர்களில் எழுபது சதவீதத்திற்கு அதிகமானோர்கள் சிறந்த வாசகர்கள் என்று உறுதியாய் சொல்ல முடியும். ஆனால் என்ன ஸ்பேனிஷ் (!) எல்லாம் படிக்காமல், தமிழ், ஆங்கிலம் மற்றும் தமிழ், ஆங்கிலத்தில் மொழிப்பெயர்ப்புகள் படித்தவர்களாய் இருப்பார்கள். ஆனால் ஒன்றுமே படிக்காமல் எழுத வந்துவிட்டார்கள் என்ற குற்றசாட்டு தவறானது என்று நிரூபிக்க இது ஒரு சான்ஸ். நீங்களும் இந்த கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள்.

 
At Sunday, 12 October, 2008, சொல்வது...

//சிரமம் கருதாமல் அந்த சங்கிலியையும் தொடர வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன்.//

இதுக்கு ஒண்ணுமே சொல்லலை. அப்ப எழுதிடுவீங்க சீக்கிரமா :-) ரொம்ப நன்றி.

இங்க கொஸ்டின் பேப்பர் ரொம்ப பெருசா இருக்குக்கா. ரூம் போட்டுத்தான் எழுதனும் போல. :(

அப்பாலீக்கா கண்டிப்பா எழுதறேன்க்கா.

 
At Monday, 13 October, 2008, சொல்வது...

உஷா இது நல்ல முயற்சி.படித்த நாவல்களை மீண்டும் நினைத்து பகிர்வதற்கும்,நம் வாசிப்பின் ஆழத்தை உணரவும் உதவுகின்றன இக்கேள்விகள்..மேலும் வலை உலகிற்கு புதியவளான என்னை இத்தொடர் விவாதத்தில் பங்களிக்க செய்ததிற்கு நன்றி.

கீழ் கண்ட முகவரியில் எனது பதிவு!

http://yalisai.blogspot.com/2008/10/blog-post_13.

 
At Monday, 13 October, 2008, சொல்வது...

மிக நல்ல கருத்துக்கள்.. நல்ல வழிகாட்டல்..

நர்சிம்

 

Post a Comment

<< இல்லம்