கே ஆர் எஸ் அண்ணாச்சி மன்னிக்க
இன்று கேஆர் எஸ் அண்ணாச்சியின் இந்த பதிவு படிக்க சுவாரசியமாய் இருந்தது. அந்த காலத்திலும் புராணம், ஐதீகம் என்று கடவுள் பெயரால் எத்தனை கதை "பண்ணி" யிருக்கிறார்கள்? நம் விஜய், ரஜினிக்கு செய்வதுப் போல என்று தோன்றியது.
இதே கருத்தை சிறுகதையாய் முன்பு பதிவில் போட்டது மீண்டும்.
இதுவும் ஒரு சரித்திர கதை
மன்னர் தன் பரிவாரங்களூடன் வெளியேறியதும் முதன்மை மந்திரி மெதுவாய் புறப்பட்டார். மனம் கிடந்து தவித்தது.கிராதகன் ஐநூறு சாடி ஆனிபொன் அல்லவா கேட்கிறான், குருவி சேர்ப்பதுப் போல மூன்று தலைமுறையாய் சேகரித்த பொக்கிஷம்,கோவில் கட்ட கொடு என்று ஆணையிடுகிறான். மன்னன் அல்லவா, கேட்டதும் கொடுத்துதானே ஆகவேண்டும்! தலை தப்பிக்கவேறு வழி?
"என்ன மந்திரியாரே, பலத்த யோசனை? கோவில் என்பது நல்ல காரியம் தானே.. உமக்கு இம்மையிலும், மறுமையிலும் புண்ணியம் கிட்டுமே" சேனாநிதிபதியின் குரலில் கேலியோ என்று திரும்பிப் பார்த்தார் மந்திரி.
லேசான தலை அசைப்பு. புரிந்த மந்திரி அவனுடன் நடந்தார். அரண்மனைக்கு சுவரெல்லாம் காது அல்லவா!
"சொல்லுங்கள்... இங்க பேசுபவை வெளியே போகாது" என்று சேனாதிபதி சொன்னதும்,
மந்திரி, " உமக்குதான் எல்லா விஷயமும் தெரிந்துள்ளதே, என்ன கேள்வி இது?'" என்று சலிப்புடன் கேட்டார் மந்திரி.
"என்னிடமும் கேட்டு உள்ளான். இவனுக்கு என்ன கோவில் கட்ட இத்துணை விருப்பம்?"
"ஹொய்சாள மன்னனின் மகளை மணந்தான் அல்லவா! அங்குள்ள கலை கோவில்களைப் பார்த்ததும் இவனுக்கும் ஆசை வந்துவிட்டது.வேறு என்ன, பொழுது போகவில்லை. இவன் பெரிய மகாராஜா போல் இல்லை. பிடிவாதகாரன், சரியான மூர்க்கன்"
"மகாராணி, அரசியிடம் சொல்லி பாருங்களேன். பொக்கிஷம் காலியாகிவிடும் என்று பயமுறுத்துங்களேன்" சேனாதிபதி குரலில் ஆதங்கம்.
தலையை அசைத்துவிட்டு புறப்பட்டார் மந்திரி.
"இந்த கிழத்தால் ஒன்றும் நடக்காது. கொள்ளை அடித்த பொருள்களை தந்துதான்ஆக வேண்டும். அடுத்த படையெடுப்பு எப்பொழுதோ?" சிந்தனையில் ஆழ்ந்தான் சேனாதிபதி.
அரண்மனையில் அதே களேபரம். ராணி, யாத்திரை முடிந்து வந்த மகாராணியிடம் கண்ணை கசக்கிக் கொண்டு நின்றாள்.
நான்கு மாதமாய் வடக்கே புனித யாத்திரியை மேற்கொண்டுவிட்டு வந்த மகாராணிக்கு ஒன்றும் புரியவில்லை.
"அவர் என்னை கவனிப்பதேயில்லையம்மா! பொழுதிற்கும் தான் கட்டப் போகும் கோவிலைப் பற்றிதான் சிந்தனை"
"தெய்வமே" என்று கிழக்கு பார்த்து கும்பிட்டவள், " நல்ல காரியம் தானே! இதற்கு ஏன் இவ்வளவு கவலை?" என்றவள்,"உன் மாமனார், அதாவது என் கணவருக்கு போரிடுவதும், மங்கையர்களுடம் களிப்பதும்தான் வேலையாய் இருந்தது.நாற்பது வயதிற்குள் அத்துணை நோயும் பற்றி இறக்கும் காலத்தில் என்னை பாடாய் படுத்திவிட்டு போய் சேர்ந்தார். அவர் தந்தையும் அப்படிதான் என்று கேள்வி பட்டுள்ளேன். என் மகனுக்கு அந்த குணம் வராமல் போனதே, என் பிராத்தனை வீண் போகவில்லை"என்றவள், "யாரங்கே! மாலை சர்வேஸ்வரன் ஆலயத்தில் லட்ச தீபம் ஏற்றுங்கள்" என்று ஆணையிட்டாள்.
அப்போது அங்கு வந்த மன்னன் தாயை வணங்கிவிட்டு, யாத்திரையைப் பற்றி விசாரிக்க ஆரம்பித்தான். வழக்கப்படி அருகில்மந்திரியும், சேனாதிபதியும்!
மகனை ஆசிர்வதித்துவிட்டு, "மக்கள் நலமா? விளைச்சல் எப்படி?" என்று ஆரம்பித்ததும், " வருடம் முழுவதும் காவிரிஅன்னை கரைப்புரண்டு ஓடுகிறாள். விளைச்சலுக்கு என்ன குறைச்சல்?" என்றான்.
தாய் மகனிடம் கோவிலைப் பற்றிக் கேட்டதும் உற்சாகமாய் ஆரம்பித்தான் மன்னன்.
"நல்ல தொண்டு. என் பங்காய் சிற்பிகளுக்கு ஆதுர சாலை அமைக்க, முப்போகம் நெல் விளையும் நிலம் எழுதி வைக்கிறேன்" என்றாள்.
மந்திரி, " தாயே நானும், என் மனைவி மங்களமும் எங்களால் ஆன சிறு பங்காற்றலாம் என்று இருக்கின்றோம்" என்றார்.
சேனாநிதிபதி அதிர்ந்துப் போய் அவரை பார்த்தான்.
"கிழட்டு பாவி! நல்ல பெயர் வாங்கப் பார்க்கிறானே" என்று மனதினுள் திட்டிக் கொண்டே, " அரசே! என் மகன் ஸ்ரீபாலன், தன் கீழ் பணியாற்றும் ஆட்களைக் கொண்டு சிற்பிகளுக்கு வீடுஅமைத்து தருகிறேன் என்று சொல்லியுள்ளான். அதற்கு வேண்டிய நிலம் நான் தருகிறேன்" என்றான்.
மகனை முன் நிறுத்தப் பார்க்கிறாயா என்று உபதளபதி சிறிது கோபத்துடன் சேனாநிதிபதியைப் பார்க்க மந்திரியின் கண் ஜாடைஅவனுக்கு தைரியம் அளித்தது.
ராணி எல்லாம் ஈஸ்வரன் கிருபை என்று கையை கூப்பினாள். "இடம் பார்த்துவிட்டாயா மகனே?" என்று வினவினாள்.
"பழைய சிறுகோவில் ஒன்று. அதை பெரியதாய் கட்டப் போகிறேன். மங்கபுதூரில் ஒரு சிறிய கோவில், சுயம்புவாய் சர்வேஸ்வரன். விஷ்ணு சிவனை பூஜித்து பிரம்மஹத்தி தோஷத்தை நிவர்த்திக் கொண்ட இடம்" என்று ஆரம்பித்ததும், மந்திரி அதிர்ச்சி அடைந்தார்.
அக் கோவிலில் பூஜை செய்பவர், பிரம்மா தன் பிரம்மஹத்தி தோஷத்தை நிவர்த்தி செய்ய பூஜித்த தலம் என்றல்லா சொன்னார். இவன் எம்பெருமான் மகாவிஷ்ணுவை சொல்லிகிறானே என்று சேனாநிதிபதியைப் பார்த்தான்.
இவனும்தானே அன்று கூட இருந்தான் என்றுப் பார்த்தால், அவன் பார்வையோ வேறு எங்கோ கணக்கு செய்துக் கொண்டு இருந்தது.
"இப்போது ஏதாவது சொல்லப் போனால், வைஷ்ணவன் அதனால் சொல்லிகிறான் என்ற கெட்டபெயர் வரும். பெருமாளே! ஸ்ரீரங்காநாதா.. எல்லாம் உன் லீலை.." என்று மனதைத் தேற்றிக் கொண்டார்.
தாய், " கீழ்மங்கபுதூரா, மேல் மங்கபுதூரா?" என்றுக் கேட்டாள்.
மன்னன், மந்திரியை நோக்க, மந்திரி சேனாதிபதியை நோக்க, அவர் உப தளபதியை நோக்க, இப்படியாக நோக்குகள் கடைசியாய்அரண்மனை வாயிலை அடைந்ததும் ,குதிரைகள் விடை அறிய பறந்தோடின.
உபசேனாதிபதிக்கு அஸ்தியில் ஜீரமே வந்துவிட்டது. ஆறுமாதத்திற்கு முன்புதான் கீழ்மங்கலபுதூரில் நிலத்தை வளைத்துப் போட்டு நெற்பயிரிட ஆரம்பித்திருந்தார். அந்நிலத்தை தன் ஆசைகிழத்தியின் பேரில் சாசனம் வேறு செய்திருந்தார். நிலத்தை கையகப் படுத்த மன்னன் கிளம்பினால் அந்நிலம் யாருடையது என்ற கேள்வி எழுமே! தன் பெயர் வெளியானால், கட்டிய மனைவியை சமாளிக்கமுடியுமா? ஈஸ்வரா இது என்ன சோதனை? என்னை காப்பாற்று... புதிய கோவிலுக்கு என் எடைக்கு எடை பொன் தருகிறேன், தினமும் முக்காலமும் உன்னை தேடி வந்து தொழுகிறேன் என்றெல்லாம் மனதில் தோன்றியதை எல்லாம் வேண்டிக் கொண்டுஇருந்தார்.
"மேல்மங்கபுதூர்" சேனாநிதிபதியின் ஓங்கியகுரல் கேட்டதும் உபதளபதிக்கு உயிர் வந்தது.
ஜாடை காட்டி, குளிர்ந்த நீர் வரவழைத்துக்குடித்து தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டார். மாலை முதல் காரியமாய் கோவிலுக்கு சென்று அர்ச்சனை செய்ய வேண்டும் என்று நினைத்துக் கொண்டவருக்கு செளகரியமாய் பழையவேண்டுதல்கள் எல்லாம் மறந்துப் போனது.
"தாயே! ஏற்பாடுகள் நடந்துக் கொண்டு இருக்கின்றன. முக்கியமாய் பொன்னையும் பொருளையும் சேகரித்துக் கொண்டு இருக்கிறேன். என் மாமனார் சிற்பிகளை அனுப்ப ஆயுத்தம் செய்துக் கொண்டு இருக்கிறார். வரும் அமாவாசைக்குள் நிலத்தை கையகப் படுத்திவிட்டு பூமி பூஜையும், ஆனைமுகத்தானுக்கு பூசையும் போட்டு விடலாம் என்று தலைமை குரு சொல்லியிருக்கிறார்"
"மிகவும் சந்தோஷம் மகனே!" என்றவள் " ஸ்தல புராணம் எழுத புலவர்களுக்கு சொன்னாயா?" என்றுக் கேட்டாள்.
"ஆம் தாயே! நம் அவை புலவர்கள் அனைவரும் ஸ்தலபுராணமும் இறைவனின் அற்புத லீலைகளையும் உருவாகிக் கொண்டு இருக்கிறார்கள். சிறப்பானதற்கு ஆயிரம் வராகன் பரிசு என்று அறிவித்துள்ளேன். ஈஸ்வரனுக்கு ஒரு பெயரும், அம்மனுக்கு ஒரு பெயரும் புதுமையாய் ஒருதமிழில் தேர்ந்தெடுங்கள் தாயே!" என்று உற்சாகமாய் தன் திட்டங்களைச் சொல்லிக் கொண்டு இருந்தான்.
மகாராணி, தான் எதிர்பார்ததைவிட ஏற்பாடுகள் மிக பெரிய அளவில் உள்ளதே, மகன் சிறிது ஆர்வகோளாறில் பொக்கிஷம் அனைத்தையும் தீர்த்துவிடுவானோ என்று யோசிக்க ஆரம்பித்தாள்.
ராணியோ சிறுவயதில் உல்லாசமாய் இல்லாமல் இப்படி ஒரு ஞானபழம் நமக்கு வாய்த்ததே என்று எண்ணி மனம் நொந்தாள்.
சேனாநிதிபதிக்கும், உபதளபதிக்கும் இனி சமீபத்தில் போர் எதுவும் இல்லை என்று நன்றாக புலனானது. இருக்கும் பொருளையும் கோவில் கட்ட தாரை வார்த்துவிட்டு, இனி புதியபடையெடுப்பும் இல்லாவிட்டால் எப்படி என்று அவர்கள் எண்ணம் ஓடியது.
மந்திரியோ ஸ்தலபுராணத்தில் பிரம்மா பூஜித்த ஸ்தலம் என்று எழுத முடியுமா? அதற்கு யாரை துணைக்கு அழைப்பது, எவ்வளவுசெலவாகும், ஸ்ரீரங்கம் சென்று வைணவப் பெரியவர்களிடம் விஷயத்தைச் சொல்லி நடக்க இருக்கும் அநீதீயைத் தடுக்கலாமா என்று பல் வேறு யோசனையில் ஆழ்ந்திருந்தார்.
"யாருமே கட்டாத முறையில் கட்டப்போகிறேன். மிக பெரிய கோவில், பார்ப்பவர்கள் ஆச்சரியப் படவேண்டும். ஏராளமான சிற்பிகளைக்கொண்டு என் காலத்திற்குள் கட்டி முடிக்கப் போகிறேன். யுகம் உள்ளவரையில் என் பெருமை பேசும் மிக பெரிய கோவில்" சொல்லிக் கொண்டே போன மன்னனின் கண்களில் கனவு விரிந்தது.
Labels: சிறுகதை
19 பின்னூட்டங்கள்:
கதையெல்லாம் ஓக்கேதான்.. இன்னும் கொஞ்சம் நீட்டி இருக்கலாம் - தலபுராணம் உருவாகும் விதத்தையும் சேர்த்து..
ஆனால் லேபிளில் சிறுக்கதை என்று போட்டு இறுக்காதீர்கள் ப்ளீஸ்.. சிறுகதை போதுமே :-(
ஆமாங்க. இந்தக் கதையை ஏற்கனவே படிச்சிருக்கேன். நல்ல கதை. :-)
//மந்திரியோ ஸ்தலபுராணத்தில் பிரம்மா பூஜித்த ஸ்தலம் என்று எழுத முடியுமா? அதற்கு யாரை துணைக்கு அழைப்பது, எவ்வளவுசெலவாகும், ஸ்ரீரங்கம் சென்று வைணவப் பெரியவர்களிடம் விஷயத்தைச் சொல்லி நடக்க இருக்கும் அநீதீயைத் தடுக்கலாமா என்று பல் வேறு யோசனையில் ஆழ்ந்திருந்தார்.
"யாருமே கட்டாத முறையில் கட்டப்போகிறேன். மிக பெரிய கோவில், பார்ப்பவர்கள் ஆச்சரியப் படவேண்டும். ஏராளமான சிற்பிகளைக்கொண்டு என் காலத்திற்குள் கட்டி முடிக்கப் போகிறேன். யுகம் உள்ளவரையில் என் பெருமை பேசும் மிக பெரிய கோவில்" சொல்லிக் கொண்டே போன மன்னனின் கண்களில் கனவு விரிந்தது.//
உஷா மேடம்,
இப்படியெல்லாம் கதை எழுதினால் சாமி கண்ணைக் குத்திடும். கோவி.கண்ணனின் வியாதி தொத்திடுச்சான்னு கேட்பாங்க. பருந்துகள், ஓணாண்டி என்றெல்லாம் அன்போடு ஆசிர்வதிப்பார்கள்.
நீங்கள் சொன்னக் கதை மாதிரியே ஒரு நாயனார் கனவு கண்டு மனக் கோயிலே எழுப்பி, குடமுழுக்கே செய்தாராம். பூசலார் என்று பெயர்
!?
அதுசரி .. அந்தக் காலத்து ஆளுகள் மட்டுமென்ன மேலே இருந்து குதித்தவர்களா என்ன? நம்மைப் போலத்தானே இருந்திருப்பார்கள்.
நல்ல கற்பனை. கதை கவிஜ வாசிப்பதை நிறுத்திவிட்ட என்னை நிறுத்தி வாசிக்க வைத்து விட்டது.
பினாத்தல், ஊரில்தான் இருக்கிறீர்களா?இதோ "க்" கைத் தூக்கிட்டேன்.
குமரன், நீங்க போட்ட பின்னுட்டமும் நினைவில் இருக்கு
சிபியாரே இப்படி பின்நவீனத்துவபாணியில சொன்னா எப்படி :-)
தருமி அதே அதே! படிச்சதுக்கு நன்னி.
கோவி ஐயா! 2003ல யாஹூ குழுமத்துல எழுதத் தொடங்கியப்பொழுது போட்ட ஒரு பதிவு "பெரியாரும் பெரியவரும்" எல்லாரும் ஏதாவது ஸ்பெல்லிங் மிஸ்டேக்கா என்றுக் கேட்டார்கள். எனக்கு பெரியாரின் சில கொள்கைகளும், பெரியவரின் எளிமை
உட்பட சில கருத்துக்களும் பிடிக்கும். எனக்கு தோன்றுவதை எழுதுகிறேன்,அதனால் கோவியின் வியாதி என்றெல்லாம் சொல்ல
முடியாது:-) எல்லா மதத்தின், கடவுளின் பெயரில் நடக்கும்
பல விஷயங்களை நான் விமர்சித்து இருக்கிறேன். அது ஆன்மீக அன்பர்களான குமரன், கீதா, ராகவன் உட்பட பலருக்கும் தெரியும்.
?!
//கே ஆர் எஸ் அண்ணாச்சி மன்னிக்க//
இரண்டு மாபெரும் குற்றங்கள்:
1. நான் அண்ணாச்சி இல்லை! நீங்க தான் அக்கா!
2. நான் எதுக்கு மன்னிக்கணும்?
:)))
//ஆனால் லேபிளில் சிறுக்கதை என்று போட்டு இறுக்காதீர்கள் ப்ளீஸ்.. சிறுகதை போதுமே :-(//
சிறுக்கப்பட்ட கதை (தல புருடாணம்)!
அதான் உஷாக்கா சமயோசிதமா சிறுக்கதை-ன்னு சொல்லிப் புதுச் சொல் coin பண்ணி இருக்காங்க பினாத்தலாரே! :))
//நீங்கள் சொன்னக் கதை மாதிரியே ஒரு நாயனார் கனவு கண்டு மனக் கோயிலே எழுப்பி, குடமுழுக்கே செய்தாராம். பூசலார் என்று பெயர்//
இந்த மாதிரி வெளிக்கோயில்ல பண்ணாத் தானே வம்பு தும்பு வரும்? எது புராணம், எது புருடாணம்-ன்னு உஷாக்காவும் தீர விசாரிக்கத் தெரியாம/முடியாம, எல்லாமே கதை தானோ-ன்னு பதிவு போடுவாங்க? :(
கோவி அண்ணா
பூசலார் நாயனார் நெஞ்சகமே கோயில் என்று வாழ்ந்த அற்புத மனிதர்! வேறு வம்புக்குப் போகவில்லை! ஸோ, நோ சிறுமைப் படுத்தல்ஸ் ப்ளீஸ்!
//பல விஷயங்களை நான் விமர்சித்து இருக்கிறேன். அது ஆன்மீக அன்பர்களான குமரன், கீதா, ராகவன் உட்பட பலருக்கும் தெரியும்//
ஆன்மீக அன்பரல்லாத எனக்கும் தெரியும்-க்கா! :)
விமர்சிக்கணும்! கண்டிப்பா விமர்சிக்கணும்! உங்க விமர்சனத்தையும் விமர்சிக்கணும்! அது தான் தெளிவு! கேள்வியே வேள்வி!
அதான் அடியேன் பதிவுகளில், நாத்திகக் கேள்விகளுக்கும் ஃபுல் பர்மிஷன் உண்டு! கோவிக்குத் தெரியுமே! :)
இது போன்ற கேள்விகளால், ஆன்மீகம், தேங்கி விட்ட அல்லவைகளைக் களைந்து கொண்டு, நல்ல பயிராய் மேலும் வளரும்! அந்தப் பயிருக்கு கோவி போன்றவர்களும் ஒரு வகையில் தண்ணி ஊத்தறவங்க தான்! :)
சரி பதிவுக்கு வாரேன், நல்ல கதை! நல்ல கதைக்களன்!
ஆனா இதுக்கும், என் பதிவுக்கும் என்ன தொடர்பு?
என் பதிவில் சொல்லப்பட்ட கதை, வரலாற்று மன்னன், அவன் அமைச்சனை வைத்து சொன்னதாயிற்றே!
வெறுமனே தல புருடாணம் என்று அதை எழுதி வைக்கலையே!
In fact it is NOT even in thala puranam of the thirukkannangudi temple! This is just observed year after year by the local folks, after that incident took place!
இன்றும் அந்த ஊரில் இந்தத் திருநீறு அணி விழா நடக்கிறதே!
தலபுராணம் எழுதுவது ஒரு ஃபேஷன் என்று பின்னாளில் ஆகி இருக்கலாம்! லோக்கல் பாலிடிக்ஸ் பண்ணி இருக்கலாம்!
மதுரை தானே? தருமி சாரைக் கேளுங்களேன்!
பிட்டுக்கு மண் சுமந்தது, அழகர் முனிவருக்கு சாப விமோசனம் தந்தது, நக்கீரர் புலவர்களைக் குகையில் காத்து ஆற்றுப்படை எழுதியது - இதெல்லாம் தல புராணமா இல்லை புருடாணமா? :))
அப்பொருள் "மெய்ப் பொருள்" காண்பது அறிவு!
கே.ஆர்.எஸ் பதிவின் தலைப்புக்கு காரணம் அப்படியாவது சூடான இடுகையில் வருமா என்ற நப்பாசை. இப்படி பெயர் வைத்தால் வரும் என்று சொன்னவங்களைத் தேடிக்கிட்டு இருக்கேன். அண்ணாச்சி, ஐயா இவை எல்லாம் ஒரு ரைம்மா
இருக்கட்டுமே என்றுதான். மத்தப்படி மரியாதை எல்லாம் இல்லை. ரிடையர்ட் ஆசாமியையே பெயர் சொல்லிதான் அழைப்பது :-)
இப்ப மேட்டருக்கு வரேன், தல புராணங்களில் சொல்லப்படுவவை எல்லாம் ஐதீகம். இதை சொன்னது ஒரு கோவில் குருக்கள்.
உலகிலேயே நாத்திகர்கள் அதிகம் இருக்கும் இடம் எது தெரியுமா? பிரபல புண்ணிய தலங்களில் வசிப்பவர்கள். எப்படி
ஆரம்பிச்சார் தெரியுமா? "இந்த கோவில், திரேதாயுகத்துல சுமார் நாற்பதாயிரம் வருஷத்துக்கு மின்னாடி... இதெல்லாம்
ஐதீகம், கல்வெட்டுலேயே பொறிச்சி இருக்கு, நாப்பாதாயிரம் வருஷத்துக்கு முன்னாடி இந்த கோவில் இருந்திருக்காமா,
மிஞ்சி போனா நானூறு வருஷம் முன்னாடி கட்டியிருப்பா... என்று சொன்னார். அதனால் கடவுளை வைத்து சொல்லப்படும் அனைத்து கதைகளும் என்னைப் பொருத்தவரையில் ஒரு உயர்வுநவிர்ச்சியில் சொல்லப்படுபவையே.
//ramachandranusha(உஷா) said...
கே.ஆர்.எஸ் பதிவின் தலைப்புக்கு காரணம் அப்படியாவது சூடான இடுகையில் வருமா என்ற நப்பாசை//
ஹா ஹா ஹா
உஷா(ரான) ஆளு தான் யெக்கோவ்! :)
//தல புராணங்களில் சொல்லப்படுவவை எல்லாம் ஐதீகம். இதை சொன்னது ஒரு கோவில் குருக்கள்.//
எல்லாத் தல புராணங்களும் அல்ல! பின்னாளைய கோயில்களில் மனிதனின் பர்சனல் நோக்கங்கள் கலந்த போது எழுந்த தல புராணங்களில் நீங்கள் சொல்வது சரி!
ஆனால் காஞ்சி, ஆவுடையார் கோயில், தஞ்சை, திருவரங்கம் தல புராணங்களைப் பாருங்கள்! திரேதா யுகத்தில் எழுந்த கோயில்-ன்னு எல்லாம் இருக்காது! தஞ்சைப் பெருவுடையார் கோயிலுக்கும் ஒரு புராணம் இருக்கு! அதுல பொய் சொல்லி இருக்காங்களா-ன்னு பாருங்க! :)
பெருவுடையார் என்ற கான்செப்ட், அவ்ளோ பெரிய லிங்கமா எப்படி ஆனார்-ன்னு சிவ புராணத்தைச் சொல்லி இருப்பாய்ங்க! அப்புறம் அந்தக் கான்செப்ட்டுக்கு இராசராசன் எடுத்த ஆலயம் பற்றிச் சொல்லி இருப்பாங்க!
//நாப்பாதாயிரம் வருஷத்துக்கு முன்னாடி இந்த கோவில் இருந்திருக்காமா,
மிஞ்சி போனா நானூறு வருஷம் முன்னாடி கட்டியிருப்பா... என்று சொன்னார்.//
ஹா ஹா ஹா!
இங்கே இன்னொரு பார்வையும் வைக்கிறேன்!
திருப்பரங்குன்றம் பற்றி ஒரு தல புராணம், அப்பவே அங்கு முருகனை வழிபட்டான்-ன்னு சொல்லுறது-ன்னா...
உடனே அங்கே கோயில் மண்டபம் எல்லாம் அப்பவே இருந்திருக்கு-ன்னு நாமத் தான் assume பண்ணிக்கறோம்!
அப்படி அல்ல! திருப்பரங்குன்றிலே நிகழ்ந்த நிகழ்வுகளை மட்டுமே சொல்லுது!
கோயிலோ, இல்லை மண்டபமோ பின்னாளில் வந்தவை! அது அழிந்து போய், பின்னாளில் மண் மேடிட்டு, இன்னும் பின்னாளில் இன்னொரு ஆலயம் கூட எழுப்பப்பட்டிருக்கலாம்!
Chronology is different from Mythology! & we confuse both :)
//அதனால் கடவுளை வைத்து சொல்லப்படும் அனைத்து கதைகளும் என்னைப் பொருத்தவரையில் ஒரு உயர்வுநவிர்ச்சியில் சொல்லப்படுபவையே//
1. உயர்வு நவிற்சி, மனித குல உயர்வுக்குச் சொல்லப்பட்டிருந்தால் அது தவறு அல்ல!
2. "அனைத்து" கதைகளும் உயர்வு நவிற்சி என்று நீங்கள் சொல்வது தான் உயர்வு நவிற்சி! :)
இங்கும் பகுத்தறிவைப் பயன்படுத்தணும்! துவாரகை அகழ்வாராய்ச்சிகள் இன்னும் பல கதைகளைச் சொல்கின்றனவே! அவை உயர்வு நவிற்சி இல்லையே!
3. நோக்கம் சரியாக இருந்தால் கடவுள் கதையும் சரியே!
4. எது chronology, எது mythology என்று நாம் தான் பகுத்தறிந்து, பிரிச்சி எடுத்துக்கணும்! ஊர்-ல முறத்தில் புடைப்பாங்க-ல்ல அது போல! நீங்க பாஸ்ட் ஃபுட் கணக்கா எதிர்பார்க்கறீங்க போல! :)
Lateral Thinking & Logical Reasoning on divinity would help doing this better.
சங்கரர் கி.மு-ன்னு சில அதீத பக்தர்கள் சொல்லுவாய்ங்க! ஆனால் நமக்குத் தெரியாதா, சங்கரர் பின்னால் வந்த புத்த பிக்குகளோடு வாதம் பண்றார்-ன்னா, புத்தருக்கும் பிந்தயவர் என்று! கிபி என்று! அது போலத் தான்!
5. கடவுளை வைத்து சொல்லப்படும் "அனைத்து" கதைகளும் - எப்பொருள் எத்தன்மைத்தாயினும், அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு!
ஆன்மீகத்தில் ஒரு பானைச் சோறுக்கு, ஒரு சோறு பதம் அல்ல!
நுனிப்புல்-ன்னு தலைப்பு வச்சிட்டீங்க! அதுனால உங்களைச் சும்மா வுடறேன்! ஹா ஹா ஹா! :))
ரவிசங்கர், இன்று அதிகாலை மணி பார்க்கவில்லை. குளிர்காற்றுக்கு பயந்து ஜன்னலை சாற்றும்பொழுது, "தபதி" கண்ணில் பட்டது. நதியின் மேல் அழகு சந்திரன். அந்த நிறத்தை இதுவரை பார்த்ததே இல்லை. சுட்ட ஆரஞ்சு என்றும் சொல்லலாம்.
அந்த நிறம் கோடாய் நீரில் விழ, ''ஆகா இன்ப நிலாவினிலே" என்று பாடிக் கொண்டு போகணும் என்று ஆசையாய் இருந்தது.
ஆனால் மோஸ்ட் பொல்யூட்டட் வாட்டர் என்று யாரும் காலையும் வைப்பதில்லை. நதி புனிதம் என்று சொல்லிக் கொண்டே,இந்தியாவில் இருக்கும் அனைத்து நதிகளையும் சாக்கடையாய் மாற்றி விட்டோம். கோவில் நிலங்கள், சொத்துக்கள் பெரும்பாலும் கொள்ளை. இதை செய்ய வெளியில் இருந்து யாரும் வரவில்லை. இது ஒருபுறம் என்றால் இலங்கையில் அன்பு அன்பு என்று வாழ்நாள் எல்லாம் ஜபித்துக் கொண்டு இருந்தவன் பெயரில் ரத்த ஆறு ஓடுகிறது. கிறிஸ்துவர்கள், இஸ்லாமியர்களின் உட்பிரிவுகளில் ஆயிரத்திஎட்டு சண்டைகள். மதங்களின் பெயரால் ரத்த அபிஷேகம் சோ, கால்ட் சாமிகளுக்கு நடந்துக் கொண்டு இருக்கிறது.காலையில் பார்த்த சந்திரன் போல, இயற்கையில் அழகில் மனம்
நிறைந்துப் போகிறது. இயற்கையை போற்ற, மனிதத்தை நேசிக்க ஏன் மதங்கள் கற்று தரவில்லை? எல்லா மதங்களும் அன்பையும் நேசத்தையும் வலியுறுத்துகின்றன என்றால் ஆனால் அவை நடைமுறையில் ஏன் சாத்தியப்படவில்லை? மனிதன் உருவாக்கிய மதங்களும், கடவுள்களும் தோற்றுவிட்டன என்று சொல்ல வேண்டும். தன் கடவுள் சூப்பர் காட்ட பின்ன பட்ட கதைகள்
வெறும் கதைகள்தான். அதனால் எந்த கெடுதலும் இல்லை. நன்மையும் இல்லை. ஆனால் கடவுள் டாண் என்று வந்து காட்சி தந்தார் என்பதெல்லாம் அந்த படைப்புக்கே கேவலம். முன்பே சொன்னதுப் போல நீங்கள் எழுதுவது ஆன்மீகம் அல்ல,
நீங்கள் பின்பற்றும் மதத்தை பற்றியவை மட்டுமே. - ஏதோ தோன்றுயவைகளை எழுதிவிட்டேன். தவறாக நினைக்காமல்,
"நுனிப்புல்" என்பதை நினைவுப்படுத்திக்குங்க.
கடைசியாய் ஒன்று
"கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர்"
உஷாக்கா...
இனிய காலைப் பொழுது! குட் மார்னிங்!
//சுட்ட ஆரஞ்சு என்றும் சொல்லலாம்.
அந்த நிறம் கோடாய் நீரில் விழ, ''ஆகா இன்ப நிலாவினிலே" என்று பாடிக் கொண்டு போகணும் என்று ஆசையாய் இருந்தது//
வாவ்! நீங்கச் சொல்லச் சொல்ல நான் மனமென்னும் படகிலேயே போய் வந்துட்டேன்! :)
**********************************
//இயற்கையை போற்ற, மனிதத்தை நேசிக்க ஏன் மதங்கள் கற்று தரவில்லை? எல்லா மதங்களும் அன்பையும் நேசத்தையும் வலியுறுத்துகின்றன என்றால் ஆனால் அவை நடைமுறையில் ஏன் சாத்தியப்படவில்லை?//
மனிதனின் பேராசை தான் காரணம்! அதற்கு முன் சமயமாவது! கடவுளாவது!
காவியங்களில் சொல்லப்படுவது என்னன்னா, தனிமனிதன் எப்படி எல்லாம் ஒழுக்கத்துக்கும் பேராசைக்கும் இடையே போராடுகிறான் என்பது தான்!
ஆனால் இந்த அளவிற்காவது சமயம் இருந்திராவிட்டால், அதுவும் அறிவியல் பார்வை பலப்படாத சென்ற நூற்றாண்டுகளில், மனிதன் இன்னும் வெறிபிடித்தவனாகத் தான் இருந்திருப்பான்!
அட் லீஸ்ட் சமயம் என்னும் போர்வையில் தன் ஆதாயத்துக்காகவேனும் தர்மம் அது இது என்று நடிக்கவாவது செய்தானே!
கலை, இலக்கியம், பண்பாடு, மொழி என்று சமயத்தின் bye-products நிறைய-க்கா!
உங்கள் ஆதங்கம் எல்லாத் துறைகளுக்கும் பொருந்தும்! அரசியல், ராணுவம், மருத்துவம், பொருளாதாரம் என்று கோட்பாடுகள் நல்லா இருக்கும்! நடை முறை ரிவர்ஸுல இருக்கும்! அதற்காக அரசியல் சட்டத்தைத் தூக்கி யாரும் கடாசி விடுவதில்லை! :)
**********************************
எதை ஒன்றையும் நிறுவனப்படுத்தும் போது, கூடவே பக்க விளைவும் ஏற்படத் தான் செய்கின்றன! சமயத்தை நிறுவனப்படுத்தினார்கள்! இப்போ இறைவன் இவனைக் காப்பாற்றுவதை விடுத்து, இவன் இவனோட இறைவனைக் காப்பாற்ற சண்டை போட்டுக்கிட்டு இருக்கான்! :))
அதான் பெரியார் அரசியல் கட்சியாய் நிறுவனப்படுத்தவில்லை! ஆனால் அவருக்கு அப்புறம் நீர்த்து விட்டதே! நிறுவனப்படுத்துவதில் உள்ள சாதக/பாதகம் இது தான்! ஆனால் காட்டாற்று வெள்ளமாய் வந்து சக்கைகளை ஒரேயடியாக அடித்துக் கொண்டு போனார் அல்லவா! அவர் செய்ததும் ஒரு நல்ல குடமுழுக்கு தான்! :)
அடியேன் முன்னாள் நாத்திகன்-ன்னு உங்களுக்குத் தெரிஞ்சிருக்கும்-ன்னு நினைக்கிறேன்! :)))
**********************************
//முன்பே சொன்னதுப் போல நீங்கள் எழுதுவது ஆன்மீகம் அல்ல,
நீங்கள் பின்பற்றும் மதத்தை பற்றியவை மட்டுமே//
கடுமையாக மறுக்கிறேன்!
அடியேன் மதப் பதிவன் அல்லன்! :)
நான் பின்பற்றாத மதங்களான கிறித்துவம், இஸ்லாம் பற்றியும் எழுதுகிறேனே! தமிழிசை பற்றி எழுதுகிறேனே! அட உங்களுக்குப் புடிச்ச வவாச பதிவும் எழுதறேனே-க்கா! :)
ஆன்மீகம் வேறு! மதம் வேறு!
Therez a difference between spirituality & religion!
ஆன்மீகம் என்பது பார்வை சம்பந்தப்பட்டது! பார்வையைச் சுட்ட, மதங்கள் ஆன்மீகத்துக்கு உதவலாம்! ஆனால் மதங்களே ஆன்மீகம் அல்ல!
மதங்களில் கோட்சே உருவாகுகிறார்கள்!
சமயங்களில் அன்னை தெரேசாவும், வள்ளலாரும், வாரியாரும், அப்துல்கலாமும் உருவாகுகிறார்கள்!
http://madhavipanthal.blogspot.com/2007/06/blog-post.html
பகுவமாய்ச் சமைக்கும் சமயம் என்ற அழகிய தமிழ்ச் சொல் உள்ளதே!
மறந்து போனீர்களோ?
எதுக்கும் இதை ஒரு எட்டுப் பாருங்க!
http://madhavipanthal.blogspot.com/2007/12/2008.html
**********************************
//"கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர்"//
அதையும் விண்டத் தான் வேண்டி இருக்கு பாத்தீங்களா? :)
கண்டு அவர் விண்டு இலர்!
விண்டு அவர் கண்டு இலர்!
அதாச்சும்
அவனைக் கண்ட பின்பு வேறு எதுவும் விண்டிலர்! - எல்லாம் அவனே!
அவனை விண்ட பின்பு வேறு எதுவும் கண்டிலர்! - எல்லாம் அவனே!
:)))
உஷா அவர்களுக்கு
வணக்கம்.
சிறுக்கதையை படித்துவிட்டு. அதற்கான பின்னூட்டங்களையும் படித்துவிட்டு முடித்த போது பிரமித்துப் போனேன். கடைசியாக நீங்க எழுதிய பின்னூட்டத்தைத்தான் சொல்கிறேன். உங்கள் வார்த்தைகளும், அதிலிருக்கும் உண்மைகளும் குளிர்காற்று, சந்திரன், நதியோடு சேர்ந்து ரீங்காரமிடுகின்றன. முக்கியமான பதிவு உங்கள் பின்னூட்டம்.
ரவி! முதலில் ஒரு நன்றி வைத்துக்கொள்கிறேன். பரஸ்பர புரிதலுடன் ஏற்படும் கருத்து மோதல்கள்
எனக்கு மிக பிடிக்கும்.
பெரியாரின் நாத்தீக வாதம் தோற்றுதான் போனது. அவர் கடவுளை நம்புகிறவன் முட்டாள் என்ற
அதிரடியுடன் நின்று விட்டார். மனிதனுக்கு எப்பொழுதும் தன் பிரச்சனையை சொல்லிக் கொள்ள,
பிடித்து தொங்க ஒரு கம்பு தேவை. அதனால் உங்களைப் போன்றவர்கள், கடவுளை திட்டி விட்டு, சில காலங்களில் பக்த கோடிகளாய் உருவாகிவிடுகிறார்கள் :-) நான் என்றும் கடவுள் நம்பிக்கையை
தூற்றியது இல்லை. எனக்கு வேண்டாம் அவ்வளவே!
//ஆனால் இந்த அளவிற்காவது சமயம் இருந்திராவிட்டால், அதுவும் அறிவியல் பார்வை பலப்படாத சென்ற நூற்றாண்டுகளில், மனிதன் இன்னும் வெறிபிடித்தவனாகத் தான் இருந்திருப்பான்//
100% சதவீதம் உண்மை என்றாலும், வாழ்க்கை மாறிக் கொண்டு இருக்கும்பொழுது, இன்னும் பல
புராண புல்லரிப்புகளை ஏன் கட்டிக் கொண்டு அழ வேண்டும்? கடவுள்கள் நிறுவனமாய் ஆக்கப்படுகிறார்கள் என்ற கேள்வி எழுகிறது.
//அடியேன் மதப் பதிவன் அல்லன்! :)//
ஆம் நீங்கள் சார்ந்த மதத்தின் புனிதத்தை மட்டும்
எழுதுவதில்லை :-)))
ரவி! இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம். முற்றிலும் வேறு கோணங்களில் நம் பார்வை
இருக்கிறது. எனக்கு நாற்பத்தி ஆறு வயதாகிறது. வாழ்க்கையில் பல பிரச்சனைகளை அனுபவித்து,
தூங்காத இரவுகள் உண்டு. அப்பொழுது எல்லாம் கடவுள் நினைவுக்கு வருவார். எந்த கடவுளை
பிராத்திப்பது, எப்படி என்ன என்ற கேள்விகளும், உலகில் மனிதர்களுக்கு மட்டும் அல்லாமல்,நாடுகளுக்கும் ஏன் கடவுளர்களிடையே (நீங்க சொன்னதும்) தீரா பிரச்சனைகள் இருக்கு. அவர்கள்
பிராத்தனைகளும், பூஜைகளும் செய்யாமலா இருப்பார்கள். ஏன் சாமிகள் அவைகளை தீர்க்கவில்லை
என்றெல்லாம் கன்னாபின்னாவென்று என்னையே நான் கேட்டுக் கொண்டு கடைசியாய் பெரியார் பிரதட்சனம் ஆவார். நானும் தூங்கிவிடுவேன் :-)
//அவனைக் கண்ட பின்பு வேறு எதுவும் விண்டிலர்! - எல்லாம் அவனே!
அவனை விண்ட பின்பு வேறு எதுவும் கண்டிலர்! - எல்லாம் அவனே!:)))//
திரும்ப திரும்ப இல்லாத ஒன்றை, கானல் நீரை கையில் அள்ள கனவு :-)
தி எண்ட் போட்டுடலாமா?
மாதவ ராஜ்! நன்றி. எப்பொழுதும் சொல்வது என் பதிவுகளை விட கமெண்ட் பாக்ஸ் சுவரசியமாய்
இருக்கும் :-) ஆக, அந்த சுவாரசியத்துக்கு உரிதான பெருமை எனக்கு மட்டும் சொந்தம் இல்லை
/
kannabiran, RAVI SHANKAR (KRS) said...
சிறுக்கப்பட்ட கதை (தல புருடாணம்)!
/
:)))))))))))
Post a Comment
<< இல்லம்