Tuesday, October 14, 2008

சினிமா சினிமா- தொடர் ஓட்டம்

அழைத்த சிரிதர் நாராயணனுக்கு நன்றி

1. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்

சரியாய் நினைவில்லை என்றாலும், ஏழு வயது இருக்கலாம். ஏதோ ஒரு தெலுங்கு டப்பிங் படம். என்.டி. ராமகாரு கடைசி சீனில் விஸ்பரூபம் எடுக்க, தூக்கத்தில் இருந்த என்னை எழுப்பி எழுந்து நின்று கன்னத்தில் போட்டுக் கொள்ள பாட்டி ஆணையிட, தியேட்டர் ஜனம் முழுக்க பெருமாளே என்று கும்பிடுப் போட்டுக் கொண்டு இருந்தது நன்றாக நினைவில் இருக்கிறது. ஒரு குறிப்பு பாட்டி வீட்டில் சாமி கும்பிட்டு பார்த்ததே இல்லை. கோவில், பூஜை
என்பதும் கிடையாது. மிக கவலைக்கு உரிய தருணங்களில், என்னிடம் ஐந்து/ பத்து பைசா தந்து கற்பூரம் வாங்கி, வீட்டின் அருகில் இருந்த பிள்ளையாருக்கு ஏற்றுவார்.

2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா

தசாவதாரம்

3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்

திருமால் பெருமை. என் கணவர் சென்ற மாதம் அலுவலக வேலையாய் மலேஷியா சென்றிருந்தார். அங்கிருந்து வாங்கி வந்த சிடிகள் பெரியார், திருமால் பெருமை, குருவி. பெரியார் படத்தைப் பார்த்ததும் உன் நினைவு வந்தது என்று சொன்னதைக் கேட்டு,
சந்தோஷப்பட்டு பார்க்க ஆரம்பித்து., ஐயகோ! அதைவிட அவ்வப்பொழுது எட்டிப் பார்த்த திருமால் பெருமை நன்றாக இருந்தது.

4. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா

நல்ல சினிமா என்னவென்றே தெரியாத வயதில், தொலைக்காட்சியில் பார்த்த நாலுவேலி நிலம், ஜெயகாந்தனின் ஒரு படம், நாகேஷ் லாட்ஜ் பாயாக வருவார். கே.ஆர்.விஜயா, லாட்ஜில் தொழில் புரியும் பெண். மிக பிரபலமான காலக்கட்டத்தில் அவர் பேசிய வசனங்கள், எப்படி
அந்த படத்தில், அந்த வேடத்தில், அந்த வசனங்களை பேச ஒத்துக் கொண்டார் என்று நினைத்தால் வியக்காமல் இருக்க முடியவில்லை. படத்தின் பெயர் என்னை போல் ஒருவன்????- இல்லை இப்பொழுதுதான் விக்கிபீடியாவில் பார்த்தேன் அந்த படம் "யாருக்காக அழுதான்" நாகேஷ், கே.ஆர்.விஜயா நடித்தது.

5-அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்?

ஒன்றா இரண்டா? சமீபத்து கொடுமை. கல்கி இதழில் வரும் விஜய் பற்றி அவர் தாய் எழுதும் காவியம். போதாக்குறைக்கு பையனை காவிய தலைவனாய் சித்தரித்து அவர் அப்பா எடுத்த திரைப்படம். யப்பா தமிழ் மக்கள் அவ்வளவு முட்டாள்களா என்று எண்ண தோன்றியது

5-ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-தொழில்நுட்ப சம்பவம்

"அந்த நாள்" அருமையான ஸ்கிரிப்ட், புகழின் உச்சியில் இருந்த சிவாஜியின் ஆண்டி ஹீரோ நடிப்பு, பாட்டே இல்லாத படம் எடுக்க துணிந்த, கதை, வசனம், டைரகடர் வீணை எஸ்.பாலசந்தர்.

6. தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா

துணுக்கில் இருந்து சினிமாவை அக்குவேறு ஆணிவேறாய் அலசும் எல்லாவற்றையும் நுனிப்புல் மேய்வது மட்டுமே! அதற்கு மேல் ஆர்வமில்லை.

7. தமிழ்ச்சினிமா இசை?

மெலோடி பிடிக்கும். இசையறிவு மிக மிக குறைவு.இரவு நேர தனிமையில் மொட்டை மாடி சிலுசிலுப்பில் பழைய பாடல்களை கேட்க வேண்டும் என்பது இன்னும் நடக்காத கனவு :-)

8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்

முன்பே சொன்னதுப் போல, நல்ல படம் என்றால் என்னவென்ற புரிதல் யாரும் சொல்லாமலேயே பிடிப்பட்டது. பலரும் குறிப்பிட்ட படங்களை திரும்ப சொல்வதைவிட, சட்டென்று நினைவுக்கு வருவது, நாகமண்டலா என்ற கன்னட படம். விஜயலஷ்மி, பிரகாஷ் ராஜ் நடித்து பல அவார்ட்டுகளை வாங்கி குவித்த படம். கதையை ஒன்லைனரில் சொன்னால்,
நம் ராமநாராயணன் கதைதான். ஆனால், அந்த கால காட்சியமைப்பு, உடை,பேச்சு வழக்கு என்று தூள் கிளப்பியிருந்தார்கள். காமிரா லைட்டிங், சண்டைக்காட்சியில் எந்த பின்ணனி சத்தமும் இல்லாமல், இரண்டு பேர் அடித்துக் கொண்டால் எப்படி இருக்கும் அப்படியிருந்தது. கோஸ்டல் கர்நாடகாவின் புழங்கிய கீராமிய கதையை கிரிஷ் கர்னாட் கிராமிய கலையாய் நாடக வடிவம் ஆக்க, அதை சினிமா ஆக்கியிருக்கிறார்கள். பாலூணர்வு காட்சிகள் கொஞ்சம் அதிகம்
என்றாலும், ரசிக்க வைத்தது.

9. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?

நேரடி தொடர்ப்பு இல்லை. இனியும் இருக்குமா என்பது சந்தேகமே! ஆனால் சினி பிஃல்ட் என்றால் நினைவுக்கு வரும் சம்பவம், நான் பள்ளியில் படிக்கும்பொழுது என்னுடன் அக்கா, தங்கைகளாய் மூவர் வருவார்கள். கடை குட்டி பள்ளிக்கே செல்லம். படிப்பு, நடனம் என்று எல்லாவற்றிலும் பர்ஸ்ட்.எழாவது லீவில் முடிந்து பள்ளிக்கு வரவில்லை. ஒரு நாள் தினதந்தியில்
டவல் கட்டிக் கொண்டு குளிப்பதுப் போல ஒரு படம்.அவளுக்கு என்ன வயது இருக்கும் தெரியுமா? பன்னிரெண்டு! ஊரில் இருந்து வரும் சொந்தக்கார பிள்ளைகளுக்கு அவர்கள் வீட்டை சுட்டிக் காட்டுவது வழக்கம். பிறகு என்ன நடந்தது? இதோ இங்கே படியுங்கள். அந்த போன் சம்பவம் உண்மை :-( இன்று வரை நினைத்தாலே தொண்டையில் ஏதோ அடைக்கும்.


10.தமிழ் சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

புதிது புதியதாய் வெற்றி படங்களை தரும் இளைஞர் பட்டாளம் நம்பிக்கையை தருகிறது. கதைக்காக, நடிகன் என்ற மாற்றம் உண்மையில் சந்தோஷத்தைத் தருகிறது. இந்த படங்கள் எதையும் பார்க்காவிட்டாலும், இனியும் மேக்கப், விக் உதவியுடன், வயதுக்கு சம்மந்தமில்லாத இளம் பெண்களுடன் டூயட் ஆடும் கொடுமை மாறும் என்று நம்புகிறேன். காமிராவைப் பார்த்து
பஞ்ச் டயலாக் அடிக்கும் மேனியாவும் குறையும்.

11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்

மோசமான சினிமாவை பார்ப்பது வழக்கம் இல்லை. ஏன் பார்த்துவிட்டு திட்ட வேண்டும்? இன்று இணையத்தில் படங்களின் லட்சணங்கள் அழகாய் அலசப்படுவதால்,நல்ல படங்கள் மட்டும்தான் பார்ப்பேன் என்பதால் எனக்கு பிரச்ச்னை இல்லை. மற்றவர்களுக்கு ஆரம்பத்தில் அலுவலங்களிலும், டீ கடைகளிலும், பதிவு போட்டு அலறவும் ஒரு மேட்டர். கொஞ்ச நாளில் வேறு எதையாவது பிடித்துக் கொள்வார்கள். ஆனால் பாவம், சினிமா வைத்து அரசியல் செய்பவர்களுக்கும், அவர்களுக்கு பில்டப் கொடுக்கும் பத்திரிக்கைகளுக்குதான் கஷ்டம்.

இனி தொடர வேண்டியவர்கள்

பினாத்தல் சுரேஷ்- முதுகு வலி சரியாகிவிட்டதா?
காயத்ரி- இவுங்க எழுதா வேற யாரு :-))))
அம்பி- ஆரம்பிப்பா ஆரம்பி
குமரன்- ஆன்மீக செம்மல் என்ன சொல்கிறார் பார்ப்போம்
கீதா சாம்பசிவம்- மேடம், கொசுவர்த்தி சுத்துங்க

11 பின்னூட்டங்கள்:

At Tuesday, 14 October, 2008, சொல்வது...

//கீதா சாம்பசிவம்- மேடம், கொசுவர்த்தி சுத்துங்க//

ada, you too brutus??? :P:P:P:P

 
At Tuesday, 14 October, 2008, சொல்வது...

""என்னை போல் ஒருவன்????" இப்படத்தைப் பார்க்க தேடிக் கொண்டிருக்கிறேன்.

 
At Tuesday, 14 October, 2008, சொல்வது...

கீதா, ஆரம்பியுங்க.

ரவியா, இல்லை இப்பொழுதுதான் விக்கிபீடியாவில் பார்த்தேன் அந்த படம் யாருக்காக அழுதாந் நாகேஷ், கே.ஆர்.விஜயா
நடித்தது.

 
At Tuesday, 14 October, 2008, சொல்வது...

///சிவாஜியின் ஆண்டி ஹீரோ நடிப்பு///

சிவாஜியோட ஆண்டியும் நடிச்சுருக்காங்களா?அதுவும் ஹீரோவா? அப்பவே தமிழ் சினிமா ரொம்பத்தான் முன்னேறி இருந்துருக்கு :)

 
At Tuesday, 14 October, 2008, சொல்வது...

//நாங்கள் வீர வைஷ்ணவ பரம்பரையினர் :-) அப்படியிருக்க சுப்ரமணி என்ற பெயர்? சான்சே இல்லை.///

இப்படி சொல்றவங்க

///என்னிடம் ஐந்து/ பத்து பைசா தந்து கற்பூரம் வாங்கி, வீட்டின் அருகில் இருந்த பிள்ளையாருக்கு ஏற்றுவார்///

இப்படியும் சொன்னா நாங்க எப்படி நம்புறது? ஒரு வேளை அது தும்பிக்கை ஆழ்வாரா இருக்குமோ ?:)

 
At Tuesday, 14 October, 2008, சொல்வது...

//மிக கவலைக்கு உரிய தருணங்களில், என்னிடம் ஐந்து/ பத்து பைசா தந்து கற்பூரம் வாங்கி, வீட்டின் அருகில் இருந்த பிள்ளையாருக்கு ஏற்றுவார்//

எங்க பாட்டி கூட அப்படித்தான்! அதுவே ஒரு கட்டத்தில் என்னை ரொம்ப வெறுப்புக்குள்ளாக்கி வள் வள் என்று விழ வைத்தது

இப்பொழுது அழவைக்கிறது :-(

 
At Tuesday, 14 October, 2008, சொல்வது...

சிரமம் பாக்காம பதிவு போட்டதற்கு நன்றி :-)

//நாகமண்டலா என்ற கன்னட படம்//

இதில ஒரு பாட்டு யூட்யூப்ல பாத்திருக்கேன்னு நினைக்கிறேன். இந்திய சினிமாவில் கிரிஷ் கர்னாட் ஒரு முக்கியமானவர். அவருடைய யவக்ரி கதையைத்தான் ஹிந்தியில் அக்னிவர்ஷாவாக எடுத்தார்கள். இன்னமும் நன்றாக எடுத்திருக்கலாம் என்று ஏங்க வைத்தப் படம்.

 
At Wednesday, 15 October, 2008, சொல்வது...

ஜெயகாந்தன் இயக்கயப் படங்கள் டி வி டி யில் கிடைப்பதில்லை

 
At Thursday, 16 October, 2008, சொல்வது...

என் பெயர் எதுக்கு உங்க நினைவுக்கு வந்ததுன்னு தான் தெரியலை. :-) அதுவும் ஆன்மிகச் செம்மல்ன்னு பில்டப்பு வேற. பேசாம எழுத்தாளினி ஏகாம்பரிக்கிட்ட எழுதி வாங்கிப் போட வேண்டியது தான். என்ன சொல்றீங்க? :-)

 
At Thursday, 16 October, 2008, சொல்வது...

ரத்ன சுருக்கமா, தெளிவா இருக்கு உங்க பதில்கள்.

ஆனாலும் உங்க சித்தப்பாவை பத்தி இங்கயும் ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாம். :p

அட, என்னை டேக்கி இருக்கீங்களா? சரி, எழுதறேன். :)

 
At Sunday, 19 October, 2008, சொல்வது...

முடிஞ்சாwww.lathananthpakkam.blogspot.com பாருங்க

 

Post a Comment

<< இல்லம்